சூரியன் கோயில், குஜராத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சூரியன் கோயில், மோதேரா
சூரியன் கோயில், மோதேரா is located in Gujarat
சூரியன் கோயில், மோதேரா
சூரியன் கோயில், மோதேரா
Location in Gujarat
ஆள்கூறுகள்: 23°25′N 72°22′E / 23.42°N 72.37°E / 23.42; 72.37ஆள்கூற்று : 23°25′N 72°22′E / 23.42°N 72.37°E / 23.42; 72.37
பெயர்
பெயர்: சூரியன் கோயில், மோதேரா, குஜராத்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்: குஜராத்
மாவட்டம்: மேகசானா மாவட்டம்
அமைவு: மோதேரா
கோயில் தகவல்கள்
மூலவர்: சூரியன்
சிறப்பு திருவிழாக்கள்: சனவரி மாதம்: நாட்டியாஞ்சலி திருவிழா
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு: சாளுக்கிய கட்டிடக் கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்: கி. பி., 1026
சூரியன் கோயில் முகப்பு மண்டபம்

சூரியன் கோயில், குஜராத் அல்லது சூரியன் கோயில், மோதேரா (ஆங்கிலம்: Sun Temple, Modhera) சௌராட்டிர தேசத்தை ஆண்ட சோலாங்கி வமிச மன்னர் முதலாம் பீமதேவனின் மனைவியால், கி. பி., 1026-இல் கட்டி சூரிய பகவனுக்கு அர்பணிக்கப்பட்டது. அழகிய சிற்பங்களும் கலை நுணுக்கங்களுடன் கூடிய இப்பெரிய சூரியன் கோயில் தற்போது இந்தியத் தொல்லியல் துறை வசம் உள்ளது. [1]

அமைவிடம்[தொகு]

மோதேரா சூரியன் கோயில், குஜராத் மாநிலத்தில் மகிசனா மாவட்டத்தில் (Mehsana district), புஷ்பாவதி ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. அகமதாபாத்திலிருந்து 102 கி. மீ., தொலைவிலும், மேகசானா நகரத்திலிருந்து 25 கி. மீ., தொலைவிலும் உள்ளது. [2]

புராணம்[தொகு]

ஸ்கந்த புராணம் மற்றும் பிரம்ம புராணத்தின்படி மோதேராவும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பண்டைய காலத்தில் தரும ஆரண்யம் (மறைக் காடு) என்ற பெயரால் அறியப்படுகிறது., பிறப்பால் வேதியனாகிய இராவணனை போரில் வென்று கொன்றதால் தன்னை பீடித்த பிரம்மஹத்தி தோஷம் (வேதியனை கொல்வதால் பீடிக்கும் பாவம்) நீங்க வழியினை கூறுமாறு இராமர் தன் குலகுரு வசிட்டரிடம் கேட்டார். அதற்கு வசிட்டர் தற்போதைய மோதேராவிற்கு அருகே உள்ள தரும ஆரண்யத்திற்கு (மறைக் காட்டிற்கு) சென்று மகாதேவனை வழிப்பட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் எனக் கூறினார். அதன்படியே இராமர், தரும ஆரண்யத்தில் உள்ள மோதராக் எனும் கிராமத்தில் குடில் அமைத்து யாகம் செய்து மகாதேவரை வழிபட்டு பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றார். பிற்காலத்தில் இக்கிராமத்திற்கு மோதேரா எனும் பெயராயிற்று.

வரலாறு[தொகு]

சௌராஷ்டிர தேசத்தை ஆண்ட சோலங்கி குல மன்னர் முதலாம் பீமதேவனின் மனைவி மோதேராவில் சூரியன் கோயிலை கி. பி., 1026-இல் கட்டி முடித்தார். அப்போது ஆப்கானிய மன்னர் கசினி முகமது சௌராட்டிர தேசத்தில் உள்ள சோமநாதபுரம் சிவன் கோயிலை இடித்து அங்குள்ள செல்வங்களை கவர்ந்து செல்லும் நோக்கத்தில் படையெடுத்து வரும் வழியில் மோதேராவில் உள்ள சூரியன் கோயிலின் சில பகுதிகளை இடித்து விட்டுச் சென்றார்.

பின்னர் கி. பி., 1299-இல் அலாவுதீன் கில்சியின் படைகள் மோதேராவில் உள்ள சூரியன் கோயிலின் சில பகுதிகளை சேதப்படுத்திவிட்டு, சோமநாதபுரம் சிவன் கோயிலையும் இடித்து தரைமட்டமாக்கி விட்டுச் சென்றனர்.

பின்னர் வந்த சௌராட்டிர தேச இந்து மன்னர்களும் வணிகர்களும் சேர்ந்து சூரியன் கோயிலை மீண்டும் கலைநயத்துடன் புதுப்பித்தனர்.

கட்டிடக் கலை[தொகு]

மோதேரா சூரியன் கோயில் சாளுக்கிய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக தனிச்சிறப்புகளுடன் கலைநயத்துடன் கட்டப்பட்ட கோயிலாகும். மோதேரா சூரியன் கோயில் சூரிய குண்டம், சபா மண்டபம் மற்றும் குடா மண்டபம் என்று மூன்று பிரிவாகப் பிரித்துக் கட்டப்பட்டுள்ளது. [3]

சூரிய குண்டம்[தொகு]

சூரிய குண்டம் எனும் இராமகுண்ட குளம், பெரிய செவ்வக வடிவில் அமைந்த ஆழமான குளம். இச்சூரிய குண்டம் 53.6 x 36.6 மீட்டர் நீள அகலம் கொண்டது. சூரிய குண்ட குளத்து நீரில் குளித்த பின்னரே மக்கள் சூரியன் கோயிலுக்குச் சென்று சூரிய தேவனை வழிபட்டனர்.

சூரிய குண்ட குளம் நிலக் கணக்கியல் (Geometry) கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஆழமான குளத்தில் மக்கள் இறங்கி நீராட வசதியாக நூற்றுக்கணக்கான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அழகிய வேலைப்பாடுகள் கொண்ட இந்துக் கடவுளர்களின் 108 சிறு சிற்பங்கள் படிக்கட்டுகளுக்கு இடையே செதுக்கப்பட்டுள்ளன.

சூரிய குளத்தின் அகலப்பரப்பு காட்சி

சூரிய குண்ட நீர்நிலை தெய்வச்சிற்பங்கள்[தொகு]

சூரிய குண்ட குளத்தில் நான்கு முகப்பு மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. முகப்பு மேடைகளில் சிறு பிரமிடு வடிவத்தில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. முகப்பு மேடைகளில் விஷ்ணு, கணபதி மற்றும் நடராசர் மற்றும் பார்வதி ஆகிய தெய்வங்களின் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இரண்டு மிகப்பெரிய அழகிய நகை மாலைகள் வடிவிலான தோரண வளைவுகள் சபா மண்டபத்தை நோக்கிச் செல்லும் வழியில் கட்டப்பட்டுள்ளன.

சபா மண்டபம்[தொகு]

அலங்காரமாக செதுக்கப்பட்ட தூண்களும் கூறைகளும் கொண்ட சபா மண்டபம்

வியக்கத்தக்க அளவில் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய 52 தூண்களை கொண்டது சபா மண்டபம். இந்த 52 தூண்கள், ஒரு ஆண்டின் 52 வாரங்களை குறிப்பதாகும். மேலும் இத்தூண்களில் இராமாயணம், மகாபாரதம் மற்றும் கிருஷ்ண லீலைகள் நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டும் விதமாக பல சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது.

சபா மண்டபத்திற்கும் கோயில் கருவருறைக்கும் இடையே அழகான தூண்களும் வளைவுகளும் கொண்ட பெரிய அறை உள்ளது.

கோயில் கருவறை[தொகு]

குடா மண்டபம்

குடா மண்டபத்தில் சூரிய தேவனின் கருவறை அமைந்துள்ளது. கருவறையில் சூரிய தேவன் தனது தேர்த் தட்டில் அமர்ந்து, அருணன் தேரில் கட்டப்பட்டுள்ள குதிரைகளை ஓட்டும் நிலையில் தங்கத்தால் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சூரிய தேவன், தேர், குதிரைகள், தேரை ஓட்டும் சாரதியான அருணன் அனைத்துமே தங்கத்தால் செய்யப்பட்டது. பிற்காலத்தில் கசினி முகமது இந்த தங்கச் சிலையை உடைத்து தன்னுடன் எடுத்துச் சென்றான். கவிழ்ந்த தாமரை வடிவத்தில் கருவறையின் மேல் விதானம் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு மாதம் 20-ஆம் தேதியும் மற்றும் செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதியும், மேல் விதானத்தின் சிறு துவாரத்தின் வழியாகச் சூரியனின் ஒளிக் கதிர்கள் கருவறையில் உள்ள சூரிய தேவன் மீது விழும்படியாகக் கோயில் கர்ப்பக்கிருகம் அமைக்கப்பட்டுள்ளது. [4] [5]

கருவறையின் வெளிப்புறம்[தொகு]

கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் சூரியனின் 12 நிலைகளை எடுத்துக் காட்டும் விதமான சிற்பங்களுடன், திசை நாயகர்களின் (திக் பாலகர்கள்) சிற்பங்கள், விஸ்வகர்மா (தேவர்களின் சிற்பி), வருண தேவன், அக்னி தேவன், கணபதி மற்றும் சரசுவதி ஆகிய தெய்வங்களின் அழகிய சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது.

நாட்டியாஞ்சலி திருவிழா[தொகு]

பண்டைய இந்தியாவின் பண்பாட்டையும் நாகரீகத்தையும் மற்றும் வரலாற்றையும் விளக்கும் விதமாக மோதேரா சூரியன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டின் சனவரி மாதம் மூன்றாம் வாரத்தில், புகழ் பெற்ற நாட்டியக் கலைஞர்களால் நாட்டியாஞ்சலி திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

படக்காட்சியகம்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.gujarattourism.com/showpage.aspx?contentid=152&webpartid=1146 Modhera sun temple at Gujarat government tourism site
 2. http://www.ahmedabadcity.com/tourism/html/modhera.html Ahmedabad city website
 3. an inside look at the glorious sun temple at modhera, published by TCGL, Gandhinagar, 2001.
 4. http://www.ahmedabadcity.com/tourism/html/modhera.html Ahmedabad city website
 5. http://www.flickr.com/photos/wildshutterbug/4335589326/ Glow of the setting sun on the temple

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

 • Surya: The God and His Abode, Parijat, 2010, ISBN 81-903561-7-8
 • Lobo, Wibke, The Sun-temple at Modhera: A monograph on architecture and iconography (Forschungen zur allgemeinen und vergleichenden Archäologie)
 • Burgess, Jas & Cousens, Henry, The Architectural Antiquities of Northern Gujrat, Bharatiya Publishing House, Varanasi, 1975
 • Brown Percy, Indian Architecture (Buddhist and Hindu Periods), D.B. Taraporewala Sons & Co. Ltd. Bombay, 1975
 • Sankalia, Hasmukh. D., The Archaeology of Gujarat (Including Katiawar), Natwarlal & Co. Publishers, Bombay, 1941
 • Majumdar, Ashok Kumar, Chaulukyas of Gujarat, Bharatiya Vidya Bhawan, 1956.
 • an inside look at the glorious sun temple at modhera, published by TCGL, Gandhinagar, 2001.

இதனையும் காண்க[தொகு]