சம்மு காசுமீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜம்மு காஷ்மீர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜம்மு காஷ்மீர்
جموں اور کشمیر
جموں و کشمیر
—  இந்தியாவின் ஆட்சியின் கீழ் உள்ள மாநிலம்  —

Flag

முத்திரை
* சம்மு (குளிர்காலம்)
ஜம்மு காஷ்மீர்
அமைவிடம் 33°27′N 76°14′E / 33.45°N 76.24°E / 33.45; 76.24ஆள்கூற்று : 33°27′N 76°14′E / 33.45°N 76.24°E / 33.45; 76.24
நாடு  இந்தியா
மாநிலம் சம்மு காசுமீர்
மாவட்டங்கள் 22
நிறுவப்பட்டது 1947-10-26
தலைநகரம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் மெகபூபா முப்தி[2]
சட்டமன்றம் (தொகுதிகள்) ஈரவை (89 + 36) ()
மக்களவைத் தொகுதி ஜம்மு காஷ்மீர்
جموں اور کشمیر
جموں و کشمیر
மக்களவை உறுப்பினர்

வார்ப்புரு:இந்திய மக்களவை/சம்மு காசுமீர்/உறுப்பினர் (வார்ப்புரு:இந்திய மக்களவை/சம்மு காசுமீர்/உறுப்பினர்/கட்சி) வார்ப்புரு:இந்திய மக்களவை/சம்மு காசுமீர்/உறுப்பினர்/குறிப்புகள்

மக்கள் தொகை 1,25,48,926 (18வது) (2011)
ம. வ. சு (2005) Green Arrow Up Darker.svg0.601 (medium
கல்வியறிவு 66.7% (21வது)
மொழிகள் உருது, காசுமிரி, தோகிரி
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு
இணையதளம் [http://jammukashmir.nic.in jammukashmir.nic.in]

சம்மு காசுமீர் (ஜம்மு காஷ்மீர், டோக்ரி: جموں او کشمیر, உருது: ) இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு மாநிலம். இது இமயமலை தொடர்ச்சியில் அமைந்துள்ளது. சம்மு காசுமீர் மாநிலம், வடக்கிலும் கிழக்கிலும் சீனாவை எல்லையாகவும், தெற்கில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களை எல்லையாகவும், வடக்கிலும், மேற்கிலும் பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் காஷ்மீர் மற்றும் வடக்கு நிலங்கள் பகுதியை எல்லையாகவும் கொண்டுள்ளது. ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவை இதன் மூன்று பெரும் பிரிவுகள். ஜம்மு பகுதியில் இந்து மதத்தினரும், காஷ்மீர் பகுதியில் இஸ்லாமியரும், பெருபான்மையினராக உள்ளனர். லடாக்கில் பௌத்தர்களும் இஸ்லாமியரும் ஏறத்தாழ சம எண்ணிக்கையில் உள்ளனர். இயற்கை அழகு நிறைந்த மலைகள் இம்மாநிலத்தில் உள்ளது. முன்பு ஒரே நிலப்பகுதியாக ஆளப்பட்டு வந்த இந்தியா காசுமீர் மாநிலத்தின் சில பகுதிகள் குறித்து பாகிஸ்தானுடன் காஷ்மீர் பிரச்சினை, சியாச்சின் பிணக்கு மற்றும் சீனாவுடன் அக்சாய் சின் பிணக்குகள் கொண்டுள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காசுமீர் பகுதி சம்மு காசுமீர் என்ற பெயரில் மாநிலமாக ஆளப்படுகிறது. இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தைப் பாக்கிஸ்தான் நாட்டவரும், சீன நாட்டவரும் ” இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட காசுமீர்” என்றே குறிப்பிடுகின்றனர்.[3] ஐக்கிய நாடுகள் போன்ற பன்னாட்டு அமைப்புகள் இதனை “இந்தியாவால் நிருவகிக்கப்படும் காசுமீர்” என்று அழைக்கின்றன.[4]

சம்மு காசுமீர் மாநிலத்தைப் புவியியல் ரீதியாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்: ஜம்மு, காசுமீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக். கோடைகாலத்தில் ஸ்ரீநகர் தலைநகராகவும், குளிர்காலத்தில் சம்மு நகர் தலைநகராகவும் செயல்படுகிறது. மிக அழகான மலைப்பாங்கான நில அமைப்பையும், ஏரிகளையும் கொண்ட காசுமீர் பள்ளத்தாக்கு, புவியின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. ஜம்மு பகுதியில் உள்ள எண்ணற்ற கோவில்களும், மசூதிகளும் ஆயிரக்கணக்கான இந்து மற்றும் இசுலாமிய சமய புனிதப் பயணிகளை ஈர்க்கின்றன. லடாக் பகுதி தொலைதூர மலை அழகையும், நீண்ட பெளத்த கலாச்சாரத்தையும் கொண்டு இருப்பதால் "குட்டி திபெத்" என்று அழைக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

சம்மு மற்றும் காசுமீர் பகுதியை முதன்முறையாக மொகலாய பேரரசர் அக்பர் 1586 ஆம் ஆண்டில், தமது படைத்தலைவர்களான பகவன் தாஸ், முதலாம் இராமசந்திரா ஆகியோரை கொண்டு வென்றார். மொகலாய படை காசுமீர் பகுதியை ஆண்டு வந்த துருக்கிய ஆட்சியாளரான யூசூப் கான் படையை வென்றது. இப்போருக்கு பின், அக்பர் முதலாம் இராமசந்திராவை ஆளுநராக நியமித்தார். முதலாம் இராமசந்திரா, அப்பகுதியில் கோயில் கொண்ட இந்து தேவதையான ஜம்வா மாதாவின் பெயரில் ஜம்மு நகரை நிறுவினார். 1780 ஆம் ஆண்டு, முதலாம் ராமச்சந்திராவின் வழித்தோன்றலான ரஞ்சித் தியோவின் மறைவுக்கு பின், சம்மு காசுமீர் பகுதி சீக்கியரால், ரஞ்சித் சிங் என்பவரால் பிடிக்கப்பட்டது. அதன்பின் 1846 வரை சீக்கிய ஆதிக்கத்திலிருந்து வந்தது.[5] ரஞ்சித் தியோவின் கிளையில் தோன்றிய குலாப் சிங் சீக்கிய அரசரான ரஞ்சித் சிங்கின் அவையில் முக்கிய பங்காற்றி, பல போர்களில் வெற்றி பெற்றமையை அடுத்து ரஞ்சித் சிங், 1820 இல் குலாப் சிங்கை ஜம்மு பகுதியின் ஆட்சியாளராக அறிவித்தார். மிகத் திறமையான பல படைத்தலைவர்களைக் கொண்ட குலாப் சிங் மிக விரைவாகத் தனது செல்வாக்கை உயர்த்தினார். படைத்தலைவர் சொரோவார் சிங் மூலம் காசுமீருக்கு கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் உள்ள லடாக் பகுதியையும், பால்டிசான் பகுதியையும் கைப்பற்றினார். (இது தற்போது பாக்கித்தானின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு நிலமாகும்) [5]

Jammu and Kashmir in India (de-facto) (disputed hatched).svg
1909 ஆம் ஆண்டின் ஜம்மு காசுமீர் மாகாணத்தின் வரைபடம்

1845 ஆம் ஆண்டில் முதலாவது ஆங்கிலேய- சீக்கிய போர் வெடித்த போது, போரில் எவ்வித பங்கும் கொள்ளாமல் இருந்த குலாப் சிங், 1846 ஆம் ஆண்டு நடைபெற்ற சொப்ரோன் போருக்குப் பின் இருதரப்புக்கும் அமைதியை கொண்டு வரும் நடுநிலையாளராகவும், ஆங்கிலேய ஆலோசராகவும் மாறினார். இதன் விளைவாக இரண்டு உடன்பாடுகள் ஒப்பு கொள்ளப்பட்டன. முதலாவது ஒப்பந்தத்தின் படி, ஆங்கிலேயர் போரால் தமக்கு ஏற்பட்ட இழப்புக்கு (1.5 கோடி ரூபாய் ) ஈடாக மேற்கு பஞ்சாப் பகுதியைத் தம்வசம் கொண்டனர். இதன் மூலம் பஞ்சாப் பேரரசு தனது பெருமளவு நிலப்பகுதியை இழந்தது. இரண்டாவது ஒப்பந்தத்தின் படி குலாப் சிங் முன்பு பஞ்சாப் பேரரசைச் சார்ந்த நிலப்பகுதியில் உள்ளடக்கிய காசுமீர் பகுதிக்கு அரசராகச் சுமார் 75 லட்சம் ரூபாய்க்கு ஆக்கப்பட்டார். புதிய காசுமீர் அரசு நிறுவப்பட்டது.[5] 1857 குலாப் சிங்கின் மறைவுக்கு பின் அவரது மைந்தன் ரன்பீர் சிங் மேலும் பல பகுதிகளை வென்று காசுமீர் அரசுடன் இணைத்தார்.

சம்மு காசுமீர் பகுதியை இந்தியாவுடன் இணைக்கும் உடன்பாடு 1947 அக்டோபர் 26 இல் கையெழுத்திடப்பட்டு அடுத்த நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ரன்பீர் சிங்கின் பேரன் ஹரி சிங் 1925 ஆம் ஆண்டு அரியணை ஏற்றபோது, இந்திய விடுதலை போராட்டம் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருந்தது. 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்தியப் பிரிவினையின் போது இரு நாடுகளும் அப்போதைய இந்தியாவில் இருந்த அனைத்து சிற்றரசர்களும் தம் விருப்பப்பட்டு தாம் விரும்பும் படி இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணையவோ, அல்லது சில குறிப்பிட்ட பகுதிகளில் தனி நாடாகச் செயல்படவோ ஒப்புக் கொண்டன. 1947 ஆம் ஆண்டு காசுமீர் அரசின் மக்கள்தொகையில் சுமார் 77% இசுலாமியர் வாழ்ந்து வந்தனர். ஒப்பந்தத்தை மீறி அக்டோபர் 20, 1947 அன்று பாக்கிஸ்தான் ஆதரவில் செயல்பட்ட பழங்குடிகள் காசுமீரைத் தாக்கிக் கைப்பற்ற முயன்றனர்.[6] ஆரம்பத்தில் பாக்கிஸ்தானை எதிர்த்துப் போராடிய காசுமீர் அரசர் ஹரி சிங், அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி இந்தியாவின் தலைமை ஆளுனர் மவுண்ட்பேட்டன் பிரபுவின் உதவியை நாடினார். காசுமீரை இந்தியாவுடன் இணைக்க முன்வந்தால் உதவ இயலும் என்ற மவுண்ட்பேட்டன் பிரபுவின் நிபந்தனையின் பேரில், இந்தியாவுடன் இணையும் உடன்பாட்டு ஆவணம் கையெழுத்து ஆனது.[7] ஒப்பந்தம் கையெழுத்து ஆனதும் இந்திய போர்வீரர்கள் மேற்படி பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தும் ஆணையுடன் காசுமீருக்குள் நுழைந்தனர். ஆனால், அவ்வாணைப்படி புதிய ஆக்கிரமிப்பை மட்டுமே தடுக்க வேண்டும். ஏற்கனவே பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியைத் திரும்பப் பெறும் முயற்சி செய்யப்பட மாட்டாது. இம்முயற்சியின் போது இந்தியா இவ்விவகாரத்தை ஐக்கிய நாடுகள் அவைக்கு கொண்டு சென்றது. ஐநா தீர்மானத்தில், பாக்கிஸ்தான் தாம் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேறவும், இந்தியா, மக்கள் எந்த நாட்டுடன் வாழ விரும்புகிறார்கள் என்பதை அறியும் வகையில் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் வழி கூறப்பட்டது. பாக்கிஸ்தான் தான் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேற மறுத்து விடவே, இந்தியாவும் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்த விழையவில்லை.

இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளின் அரசாங்க உறவுகள் பாதிப்படைந்த நிலையில், பல்வேறு காரணங்களால் இரு நாடுகளுக்கும் இடையே மூன்று போர்கள் காசுமீர் பகுதியில் நடந்துள்ளன. அவையாவன, இந்திய-பாகிஸ்தான் போர், 1965, வங்காளதேச விடுதலைப் போர் மற்றும் கார்கில் போர். முந்தைய காசுமீர் நிலப்பகுதியில் 60 விழுக்காடு பகுதியை இந்தியாவும், ஆசாத் காசுமீர் மற்றும் வடக்கு நிலங்கள் என்று அழைக்கப்படும் 30 விழுக்காடு பகுதியைப் பாக்கிஸ்தானும், 1962 ஆம் ஆண்டுக்குப் பின் 10 விழுக்காடு பகுதியைச் சீனாவும் நிர்வகிக்கின்றன.

செல்வாக்கு மிகுந்த காசுமீர தலைவர் ஷேக் அப்துல்லா ஸ்ரீநகரில் ஓர் பேரணியில் பேசும் காட்சி . திரு அப்துல்லா காசுமீரத்தில் இந்தியாவின் ஆட்சியை விரும்பினாலும், காசுமீர் மாநிலத்தில் இந்திய அரசியலமைப்புக்கு உள்ளான மாநில சுயாட்சியை நிர்பந்தித்தார்.[8]

இது போன்று கிழக்கு பகுதியும் எல்லைப் பிரச்சனையில் சிக்குண்டுள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் கடைசியிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இங்கிலாந்து, திபெத், ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையே காசுமீர் எல்லைபற்றிய பல உடன்படிக்கைகள் ஏற்பட்டாலும், அவைகளில் எதிலும் சீனா உடன்படாமல் விலகி இருந்தது. பின் 1949 இல் சீன பொதுவுடைமை கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய பின்னரும் சீனா தம் காசுமீர் எல்லை கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை. 1950 களில் துவக்கத்தில் சீனப் படை லடாக் நிலப்பரப்பின் வட கிழக்கு பகுதியில் தமது ஆக்கிரமிப்பைத் துவக்கியது.[9] 1956–57 ஆண்டுகளுக்குள் அக்சாய் சின் பகுதியில் சிஞ்சியாங்-மேற்கு திபெத் ஆகியவற்றை இணைக்கும் முழுமையான இராணுவ சாலையை அமைத்து விட்டது. இச்சாலை அமைப்பதை பற்றி எவ்வித தகவலையும் அறியாத இந்தியா, பின்னர், அதுபற்றி அறிந்த போது, அப்பகுதி தமது பகுதியாகக் கோரியது. இதுவே இரு நாடுகளுக்கும் இடையே அக்டோபர் 1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற சீன- இந்திய போருக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 1962 ஆம் ஆண்டுக்குப் பின் அக்சாய் சின் பகுதி முழுமையான சீனக் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், அதனைத் தொடர்ந்த சில காசுமீர் பகுதிகளை (காரகோரம் ஒப்பந்தம்) பாக்கிஸ்தான் சீனாவுக்கு இலவசமாக 1963 ஆண்டு கொடுத்தது.

1957 இல் மாநிலத்தின் அரசியல் சாசனம் இயற்றப்பட்டது முதல் புகழ்பெற்ற காசுமீரத் தலைவர் சேக் அப்துல்லா மறைந்த 1982 வரை இடையிடையே அமைதியும், அதிருப்தியும் மாறி வந்த சம்மு காசுமீர் மாநிலத்தில்[10] 1982 ஆம் ஆண்டுக்குப் பின் அமைதியின்மை தலைதூக்கியது.[11] 1987 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நடந்த குளறுபடிகளும், பாக்கிஸ்தான் உளவு துறையின் மறைமுக ஆதரவும் மேலும் அமைதியின்மையை உருவாக்கியது.[12] அதன் பின் தொடர்ச்சியாகத் தீவிரவாதிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையே மோதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இருதரப்புமே அதிக அளவில் மனித உரிமை மீறல் குற்றங்களை தொடர்ந்து புரிவதாகக் கூறப்படுகிறது. இக்குற்றங்களில் படுகொலைகள், தடுத்து வைத்தல், கற்பழிப்பு, கொள்ளையிடுதல் ஆகியவையும் அடங்கும்.[13][14][15][16][17]. இருப்பினும், தீவிரவாதிகளின் ஆதிக்கம் 1996 ஆண்டு முதல் படிப்படியாகக் குறைந்து வருகிறது.[18]

புவியியல் மற்றும் காலநிலை[தொகு]

சம்மு காசுமீர் மாநிலத்தின் நில உருவப்படம். காசுமீர் பள்ளத்தாக்கு, ஜம்மு பகுதி லடாக் நிலப்பரப்பு ஆகியவற்றை காணலாம்.
நாகீர்ன் ஏரி
லடாக் நிலப்பரப்பில் அமைந்துள்ள திசோ மொரிரி ஏரி(Tso Moriri).
திசோ மொரிரி ஏரி(Tso Moriri) வடக்குக் கரை

சம்மு காசுமீர் இயற்கை வனப்புமிக்க பல பள்ளத்தாக்குகளைக் கொண்டுள்ளது. அவற்றில் சிறப்புமிக்கவை காசுமீர் பள்ளத்தாக்கு, தாவி பள்ளத்தாக்கு(Tawi), செனாப் பள்ளத்தாக்கு, பூன்ஞ் பள்ளத்தாக்கு, சிந்து பள்ளத்தாக்கு மற்றும் லிடர் பள்ளத்தாக்கு (Lidder ) ஆகியவை. காசுமீர் பள்ளத்தாக்கு சுமார் 100 கிமீ அகலத்துடன் 15520 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இமயமலை காசுமீர் பள்ளத்தாக்கை லடாக் நிலப்பகுதியிலிருந்து பிரிக்கிறது. பீர் பஞ்சால்(Pir Panjal ) மலைத்தொடர் இப்பள்ளத்தாக்குப் பகுதியை மேற்கிலும் தெற்கிலும் சூழ்ந்து வட இந்திய சமவெளியையும் காசுமீர் பள்ளத்தாக்கையும் பிரிக்கிறது. வட கிழக்குப் பகுதியில் இப்பள்ளத்தாக்கு இமயமலை வரை தொடர்கிறது. மக்கள்தொகை அடர்த்தி அதிகமான அழகிய காசுமீர் பள்ளத்தாக்கு கடல் மட்டத்திலிருந்து சுமார் 1850 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்க அதன் அருகில் உள்ள பீர் பஞ்சால் மலைத்தொடர் ஏறத்தாழ 5000 மீட்டர் உயரத்தில் உள்ளது.

இமயமலை ஆறுகளில் ஒன்றான ஜீலம் ஆறு மட்டுமே காசுமீர் பள்ளத்தாக்கு வழியே பாயும் பெரிய ஆறாகும். சிந்து ஆறு, தாவி ஆறு, ராவி ஆறு மற்றும் செனாப் ஆறு ஆகிய ஆறுகள் இம்மாநிலத்தில் பாயும் மற்றைய இமயமலை ஆறுகள். சம்மு காசுமீர் பல இமயமலை பனியாறுகளை (Himalayan glaciers) தன்னகத்தே கொண்டுள்ளது. சராசரியாகக் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5753 மீட்டர் உயரத்திலிருக்கும் உலகின் நீளமான இமயமலை பனியாறான சியாச்சென் பனியாறு சுமார் 70 கிலோமீட்டர் நீளம் உடையது.

கார்கில் மாவட்டத்தில் உள்ள சான்ஸ்கர் வட்டத்தில் உள்ள ஒரு ஆற்றில் உல்லாசப் படகுப் பயணம்.

சம்மு காசுமீர் மாநிலத்தின் காலநிலை அதன் மாறுபட்ட நிலவமைப்புக்கு தகுந்தவாறு இடத்துக்கிடம் மாறுபடுகிறது. உதாரணமாகத் தெற்கில் ஜம்மு பகுதியில் பருவக்காற்றுக் காலநிலை நிலவுகிறது. ஜனவரி முதல் மார்ச் வரை மாதம் சராசரியாக 40 முதல்50 மில்லி மீட்டர் வரை மழை பெறுகிறது.வேனிற் காலத்தில் ஜம்மு நகரின் வெப்பம் 40 °C (104 °F) வரையும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் சில ஆண்டுகளில் பெருமழையும் பெறுகிறது (650 மில்லி மீட்டர்). செப்டம்பர் மாதத்தில் மழை குறைந்து அக்டோபர் மாதம் கடும் வெப்பத்துடன் வறண்ட வானிலை காணப்படுகிறது. இம்மாதத்தில் வெப்பம் சுமார் 29 °C ஆக இருக்கிறது.

அரபிக் கடலின் அண்மையால் ஆண்டுக்குச் சுமார் 635 மில்லி மீட்டர் மழை பெறும் ஸ்ரீநகர் பகுதி மார்ச் முதல் மே மாதங்களில் மட்டும் சுமார் 85 மில்லிமீட்டர் மழை பொழிவை பெறுகிறது . இமயமலை தொடரால் மழை மேகங்கள் தடுக்கப் படுவதால் லடாக் நிலப்பரப்பில் கடும் குளிரும், வறட்சியும் நிலவுகிறது. வருட மழைப்பொழிவு சொற்பமான 100 மில்லிமீட்டர்க்கும் குறைவாகவும், மிகக் குறைந்த ஈரப்பதமும் காணப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 3 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் இப்பகுதியில் குளிர்காலம் மிகக் கடுமையானது. இப்பகுதியில் இருக்கும் சான்ஸ்கர் ( Zanskar) வட்டத்தின் சராசரி ஜனவரி வெப்பநிலை சுமார் -20 °C (-4 °F) ஆகும். அதுவே, சில கடும் குளிர் ஆண்டுகளில் -40 °C (-40 °F) வரை குறையக்கூடும். கோடைக் காலத்தில் லடாக் மற்றும் சான்ஸ்கர் பகுதியில் சுமார் 20 °C (68 °F) வெப்பம் நிலவுகிறது. இருப்பினும் இரவு நேரம் குளிர் அதிகமாகவே உணரப் படுகிறது.

பிரிவுகள்[தொகு]

சம்மு காசுமீர் ஜம்மு, காசுமீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. மேலும் இம்மூன்று பகுதிகள் 22 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[19]. சியாச்சின் பனியாறு, இந்திய இராணுவ கட்டுப்பாட்டில் இருப்பினும் அப்பகுதி சம்மு காசுமீர் மாநில ஆட்சிக்குள் கொண்டு வரப்படவில்லை.[19]

ஜம்மு பகுதி
 1. கதுவா மாவட்டம்
 2. ஜம்மு மாவட்டம்
 3. சம்பா மாவட்டம்
 4. உதம்பூர் மாவட்டம்
 5. ரியாசி மாவட்டம்
 6. ரஜௌரி மாவட்டம்
 7. பூஞ்ச் மாவட்டம்
 8. தோடா மாவட்டம்
 9. இராம்பன் மாவட்டம்
 10. கிஷ்துவார் மாவட்டம்
 1. காசுமீர் பள்ளத்தாக்கு பகுதி
 2. அனந்தநாக் மாவட்டம்
 3. குல்காம் மாவட்டம்
 4. புல்வாமா மாவட்டம்
 5. சோபியான் மாவட்டம்
 6. பட்காம் மாவட்டம்
 7. ஸ்ரீநகர் மாவட்டம்
 8. காந்தர்பல் மாவட்டம்
 9. பந்திபோரா மாவட்டம்
 10. பாரமுல்லா மாவட்டம்
 11. குப்வாரா மாவட்டம்
 1. லடாக் பகுதி
 2. கார்கில் மாவட்டம்
 3. லே மாவட்டம்

மக்கள் வாழ்க்கைக் கணக்கியல்[தொகு]

ஸ்ரீநகர் - ஓர் மசூதி
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டு ம.தொ.  %±
1951 32,54,000 —    
1961 35,61,000 +9.4%
1971 46,17,000 +29.7%
1981 59,87,000 +29.7%
1991 78,37,000 +30.9%
2001 1,01,43,700 +29.4%
2011 1,25,41,302 +23.6%
மூலம்:இந்திய மக்கள்தொகை கணக்கீடு [20][21]
1991 ஆண்டு மக்கள் தொகை கணக்கீடு ஜம்மு காசுமீர் மாநிலத்தில் நடத்தப் படவில்லை.
1991 மொத்த மக்கள்தொகை இடைக்கணிப்பு முறையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலத்தில் மட்டுமே இசுலாமியர் பெரும்பான்மையினராக உள்ளனர். மாநிலத்தில் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுவோர் சுமார் 67% சதவிகிதமானோர். லடாக் நிலப்பகுதியில் பௌத்த சமயத்தைச் சார்ந்தோர் 46%. இப்பகுதி மக்கள் இந்தோ-திபெத்திய இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் ஜம்முவின் தெற்கு பகுதியில் உள்ளோர் பெரும்பாலும் இந்தியாவின் மற்றைய அண்டைய மாநிலங்களான ஹரியானா பஞ்சாப், டெல்லி ஆகிய பகுதிகளிலிருந்து குடியேறியவர்கள்.

புகழ்பெற்ற அரசியல் நிபுணர் அலெக்சாண்டர் எவன்ஸ் கணிப்பின் படி, 1990களில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களால் தோராயமாக 95% சதவிகித (160,000-170,000 ) காசுமீர் பண்டிட்டுகள் (காசுமீர் பிராமண சமுதாயத்தினர்) காசுமீர் பள்ளத்தாக்கு பகுதியை விட்டு வெளியேறி விட்டனர்.[22] அமெரிக்க உளவு அமைப்பான சென்டிரல் இன்டலிஜன்ஸ் ஏஜென்சி (சிஐஏ) அறிக்கையின் படி, சுமார் 300,000 காசுமீர் பிராமணர் இசுலாமியர்களின் குறிவைத்த தாக்குதல்களால் சம்மு காசுமீர் மாநிலத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.[23]

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 12,541,302 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 6,640,662 மற்றும் பெண்கள் 5,900,640 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 889 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 56 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி 67.16 % படிப்பறிவு ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 76.75 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 56.43 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2,018,905 ஆக உள்ளது. மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 23.64% ஆக உள்ளது. நகர்புறங்களில் 72.62% மக்களும், கிராமபுறங்களில் 27.38% மக்களும் வாழ்கின்றனர். [24]

சமயம்[தொகு]

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 3,566,674 (28.44 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 8,567,485 (68.31 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 35,631 (0.28 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 234,848 (1.87 %) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 2,490 (0.02 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 112,584 (0.90 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 1,508 (0.01 %) ஆகவும் உள்ளது.

ஸ்ரீநகர் மற்றும் தால் ஏரி அழகிய காட்சி

மொழிகள்[தொகு]

சம்மு காசுமீர் மாநிலத்தின் முதன்மை மொழிகள் : காஷ்மீரி மொழி உருது மொழி, தோக்ரி மொழி, பகாரி மொழி, பால்டி மொழி, லடாக் மொழி, பஞ்சாபி, கோஜ்ரி மொழி மற்றும் தாத்ரி மொழி ஆகியன ஆகும். பாரசீக-அரபி எழுத்துக்களால் எழுதப்படும் உருது மொழி மாநிலத்தின் அலுவல் மொழியாகும். இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டாவது மொழிகளாக உள்ளன.[25]

அரசியலும் அரசும்[தொகு]

சம்மு காசுமீர் மாநில கொடி

இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலம் மட்டுமே இந்திய அரசியலமைப்பின் 370 வது குறிப்பின்படி பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது. இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளைத் தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்தச் சட்டமும் காசுமீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி சம்மு காசுமீர் மாநிலத்தில் செல்லாது. சம்மு காசுமீர் மாநிலத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ஆளுகையும் உள்ளது.[26] மேலும் இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு. இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் சம்மு காசுமீர் மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.[27] சம்மு காசுமீர் மாநில பெண்கள் மற்ற மாநில ஆண்களைத் திருமணம் செய்து கொண்டால் அப்பெண்கள் நிலம் வாங்கும் உரிமையை இழந்துவிடுவார்கள், ஆண்கள் மற்ற மாநில பெண்களை மணந்தாலும் அவர்கள் நிலம் வாங்க முடியும்[28][29] சம்மு காசுமீர் மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும், மற்ற எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும் [30]

இராணுவம்[தொகு]

இந்திய இராணுவத்தின் தரைப்படை மற்றும் விமானப்படையின் வடக்கு மண்டலத்தின் தலைமையகம் உதம்பூரில் உள்ளது.

சுற்றுலா[தொகு]

தால் ஏரி மற்றும் குல்மார்க் பன்னாட்டு சுற்றுலாத் தலமாகவும், வைஷ்ணவ தேவி கோயில், அமர்நாத் குகைக் கோயில் மற்றும் சிவகோரி இந்துக்களின் வழிப்பாட்டுத் தலமாக உள்ளது.

போக்குவரத்து வசதிகள்[தொகு]

வானூர்தி நிலையங்கள்[தொகு]

ஜம்மு[31]மற்றும் ஸ்ரீநகர்[32]விமான நிலையங்கள் வான் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகள்[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 1எ காஷ்மீரின் ஊரி நகரத்தையும் ஜலந்தர் நிலையத்தையும் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 1டி காஷ்மீர் நகரத்துடன் லடாக்கின் லே நகரத்தை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 1பி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளை இணைக்கிறது.

தொடருந்து[தொகு]

ஜம்மு தாவி தொடருந்து நிலையம் நாட்டின் அனைத்து நகரங்களுடன் இணைக்கும் இருப்புப் பாதை போட்டப்பட்டுள்ளது. [33]

மேற்கோள்கள்[தொகு]

 1. http://india.gov.in/govt/governor.php
 2. http://india.gov.in/govt/chiefminister.php
 3. "Kashmir Dispute: Background". Official website of the Ministry of foreign affairs, Pakistan. மூல முகவரியிலிருந்து 2006-11-06 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-01-13.
 4. "OHCHR calls for restraint in Indian-administered Kashmir". United Nations (27 August 2008). பார்த்த நாள் 19 July 2011.
 5. 5.0 5.1 5.2 Imperial Gazetteer of India, volume 15. 1908. "Kashmir: History." page 94-95.
 6. "Quick guide: Kashmir dispute". BBC News (2006-06-29). பார்த்த நாள் 2009-06-14.
 7. Stein, Burton. 1998. A History of India.Oxford University Press. 432 pages. ISBN 0-19-565446-3. Page 368.
 8. http://www.jstor.org/sici?sici=0004-4687(196905)9:5<382:SAATPO>2.0.CO;2-7
 9. Kashmir.(2007). In Encyclopædia Britannica. Retrieved March 27, 2007, from Encyclopædia Britannica Online.
 10. Schofield 2003, ப. 94
 11. Schofield 2003, ப. 137
 12. Schofield 2003, ப. 210
 13. "India: "Everyone Lives in Fear": Patterns of Impunity in Jammu and Kashmir: I. Summary". பார்த்த நாள் 2008-06-02.
 14. "India and Human Rights in Kashmir - The Myth - India Together". பார்த்த நாள் 2008-06-02.
 15. Schofield 2003, பக். 148,158
 16. "India: "Everyone Lives in Fear": Patterns of Impunity in Jammu and Kashmir: VI. Militant Abuses". பார்த்த நாள் 2008-06-02.
 17. "Kashmir troops held after rape". பார்த்த நாள் 2008-06-02.
 18. "Towards Peace and Normalcy". Official webpage of the Government of Jammu and Kashmir. பார்த்த நாள் 2009-03-29.
 19. 19.0 19.1 "::Ministry of Home Affairs:: Department of Jammu & Kashmir Affairs". பார்த்த நாள் 2008-08-28.
 20. "Reference Tables, A-series : Population". Census of India 2001. பார்த்த நாள் 2009-04-17.
 21. "Census Population" (PDF). Census of India. Ministry of Finance India. பார்த்த நாள் 2008-12-18.
 22. Evans, Alexander.2002. "A departure from history: Kashmiri Pandits, 1990-2001" Contemporary South Asia, 11(1):19-37.
 23. CIA - The World Factbook
 24. http://www.census2011.co.in/census/state/jammu+and+kashmir.html
 25. "Kashmiri: A language of India". Ethnologue. பார்த்த நாள் 2007-09-16.
 26. States: Jammu & Kashmir: Repeating History:By Harinder Baweja (July 03, 2000)India Today
 27. [1]
 28. பெண்களுக்கு எதிராக உள்ள காசுமீர் நிலச்சட்டம்
 29. http://history.thiscenturysreview.com/article.html?&no_cache=1&tx_ttnews[tt_news]=31&tx_ttnews[backPid]=17&cHash=bf3ff60f10
 30. Rasheeda Bhagat. "It is introspection time for Congress in J&K". Online edition of The Hindu Businessline, dated 27 October 2005. பார்த்த நாள் 01 அக்டோபர் 2012.
 31. https://www.makemytrip.com/flights/jammu-flight-tickets.html
 32. https://www.makemytrip.com/flights/srinagar-flight-tickets.html
 33. http://indiarailinfo.com/departures/jammu-tawi-jat/81

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்மு_காசுமீர்&oldid=2030798" இருந்து மீள்விக்கப்பட்டது