ஜம்மு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜம்முஇந்தியா
முக்கிய மொழிகள் டோக்ரி, உருது, இந்தி
பரப்பளவு 32,059 கிமீ2 [1]
மக்கள் தொகை (2001) 369,959[2]
இணையத்தளம் jammu.nic.in

துக்கர் என்றும் அழைக்கப்படும் ஜம்மு (Jammu, (டோக்ரி: जम्मू, உருது: جموں) இந்தியாவின் வடப்பகுதியில் இருக்கும் மாநிலமாகிய ஜம்மு மற்றும் காஷ்மீரின் மூன்று ஆட்சிப்பிரிவுகளில் ஒன்றாகும். இந்த ஜம்மு நகரை ஜம்மு மாநகராட்சி அமைப்பு நிருவாகம் செய்கிறது.

ஜம்முவின் மிகப்பெரிய நகரமான ஜம்மு நகரம் ஜம்மு மற்றும் காஷ்மீரின் குளிர்கால தலைநகரமாகும். ஜம்மு நகரில் ஏராளமான கோவில்களும் ஆன்மீக சுற்றுலாத் தலங்களும் இருப்பதால் அதனை கோவில்களின் நகரம் என்று மக்கள் அழைப்பர், இங்கு இருக்கும் கோவில்களின் கோபுரங்கள் வானளாவி இருக்கின்றன, ஆதலால், இந்து புனித நகரமாக இருக்கும் இந்நகரம் மிகவும் அமைதியாக காட்சியளிக்கிறது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆன்மீக சுற்றுலாத்தலங்களுள்ள சில இடங்களில், இந்து ஆன்மீக சுற்றுலாத்தலமான வைஷ்ணவ தேவி ஆலயம் உள்ள ஜம்முவும் ஒன்றாகும். ஜம்முவில் பெரும்பாலானோர் அதாவது ஏறத்தாழ 2.7 மில்லியன் மக்கள் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர்,[3] ஏனைய மக்கள் இஸ்லாம் மற்றும் சீக்கிய மதத்தை சார்ந்தவர்களும் பரம்பரை பரம்பரையாக இப்பகுதியின் கலாச்சாரத்தைப் பின்பற்றி மகிழ்கின்றனர் இங்கு இருக்கும் வசதிகளின் காரணத்தால், மாநிலத்தின் முதன்மை பொருளாதார மையமாக ஜம்மு விளங்குகிறது.[4]

புவியியல்[தொகு]

பிர் பஞ்சால் மலைத்தொடர் காஷ்மீரிடம் இருந்து ஜம்முவை பிரிக்கிறது.

ஜம்முவின் எல்லைகளாக வடக்கில் காஷ்மீர், கிழக்கில் லடாக், தெற்கில் இமாசலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளன. மேற்கு பகுதியில், இருக்கும் எல்லைகோடு ஜம்மு மற்றும் பாகிஸ்தானை பிரித்திடும் இப்பகுதியின் பெயர் ஆசாத் ஜம்மு & காஷ்மீர். ஜம்முவின் முக்கால் வாசி இடபரப்பு காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் டாமன் கோ சமவெளிகளுக்கும் நடுவே உள்ள சிவாலிக்க மலைத்தொடர்களில் இருக்கிறது. மேலும், இந்த பகுதியில் உள்ள பிர் பஞ்சால் மலைத்தொடர்கள், திரிகுடா குன்றுகள், இந்த மலைகளுக்கு கீழ் தவழ்ந்து வரும் தாவி நதிப்படுக்கை மேலும் அழகூட்டுகின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்குகளிலிருந்து ஜம்முவை பிர் பஞ்சால் மலைத்தொடர்கள் பிரிக்கின்றன.

ஜம்முவில் இருக்கும் மக்களை டோக்ரா என்று நாம் அழைக்கிறோம், மேலும் அவர்கள் டோக்ரி மொழியை பேசுகின்றனர்.

ஜம்முவின் வரலாறு[தொகு]

காஷ்மீர் பள்ளதாக்கு அருகே ஜம்மு பகுதி இருக்கிறது.(மண்ணிறத்தில் காட்டப்பட்டுள்ளது).

ஜம்மு இராஜ்ஜியத்தை ராஜா ஜம்பு லோச்சன் கி.மு.14 ஆம் நூற்றாண்டில் நிறுவியதாக வரலாற்று வல்லுனர்களும் உள்ளூர் வாசிகளும் நம்புகின்றனர், அவர் ஒரு முறை வேட்டையாடி சென்ற பொது, தாவி நதிக்கரையோரம் ஒரு ஆடும் ஒரு சிங்கமும் ஒரே இடத்தில் தண்ணீர் பருகுவதைக் கண்டார். தாகத்தை தீர்த்துக்கொண்ட பிறகு, இரு விலங்குகளும் தமது பாதையில் சென்றன. ராஜா வியப்படைந்தார், வேட்டையாடுவதை விட்டு விட்டு, அவரது நண்பர்களிடம் திரும்பிச் சென்றார். அவர் பார்த்ததை அப்படியே ஒப்புவித்தார், மேலும் அருகாமையில் இருந்துகொண்டே ஒரு ஆடும் சிங்கமும் தண்ணீர் பருக வேண்டும் என்றால், அந்த இடம் அமைதியின் உறைவிடமாகவே இருக்க வேண்டும் என்று கூறினார். இந்த இடத்தில் ஒரு அரண்மனையை அமைத்து அதனை சுற்றி ஒரு நகரத்தையும் எழுப்ப வேண்டும் என்று ராஜா கட்டளையிட்டார். ஜம்பு-நகர் என்று பெயருடைய அந்த நகரம் இப்பொழுது ஜம்மு என்று அழைக்கப்படுகிறது. ஜம்பு லோச்சன் ராஜா பஹு லோச்சனின் சகோதரர் ஆவார், அவரே தாவி நதிக்கரையில் ஒரு அரணை கட்டியவர். பஹு கோட்டை ஜம்முவில் காணப்படும் வரலாற்றுப் புகழ் வாய்ந்த ஒரு இடமாகும்.

இந்த நகரம் புகழ்வாய்ந்த " மகாபாரதத்தில்" இடம்பிடித்து உள்ளது. ஜம்மு நகரிலுருந்து 20 மைல் தொலைவில் உள்ள அக்னூர் என்ற இடத்தில், தொல்பொருள் ஆய்வாளர்கள் செய்த அகழ்வாராய்ச்சி ஜம்மு, ஹரப்பா நாகரீகத்தை சேர்ந்து இருந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது.

மௌரியர்கள், குசானர்கள் மற்றும் குப்தர்கள் காலத்திலிருந்த பொருட்களும் ஜம்முவில் காணப்படுகின்றது. 480 கி.பி.க்கு பிறகு, கபிசா முதல் காபுல் வரை ஹெப்தலைட்டுகள் இந்த பகுதியை ஆண்டுவந்தனர். அவர்களுக்குப் பிறகு கி.பி.565 முதல் 670 ஆண்டுகள் வரை, குசானர்கள் ஆண்டனர், அதற்குப் பின் சாகி வம்சத்தினர் கி.பி. 670 முதல் முந்தைய 1000 ஆண்டுகள் வரை ஆண்டு வந்தனர், பிறகு சாகி வம்சத்தினரை கஜினிகல் அழித்தனர்.

தைமூர் முற்றுகையிட்ட இடங்களில் ஜம்முவும் ஒன்று. முகலாயர்கள், பின் சீக்கியர்கள், அதனையடுத்து ஆங்கிலேயர்கள் என்று கண்ட ஜம்மு, நிறைய மாற்றங்களை சந்தித்தத்து. இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் போருக்குப் பின் இந்தியாவின் அங்கமாயிற்று

19 ஆம் நூற்றாண்டில் டோக்ரா ராஜ்புத் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக, ஜம்மு மகாராஜா ரஞ்சித் சிங்கின் கட்டுப்பாட்டில் வந்தது. மேலும் பின்னாளில் சீக்கிய சாம்ராஜ்ஜியமாக மாறியது.

அதன் பின்னர், வெகு விரைவிலேயே மகாராஜா ரஞ்சித் சிங், குலாப் சிங் ஜியை அரசராக நியமித்தார். மகாராஜா ரஞ்சித் சிங்கின் இறப்புக்கு பிறகு, சீக்கிய சாம்ராஜ்ஜியமான பஞ்சாபை கிழக்கிந்திய கம்பெனியினர் கைப்பற்றினர், அதன் பின்னர், கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆணையின்படி, மகாராஜா துலீப் சிங் இங்கிலாந்து அழைத்து செல்லப்பட்டார். பஞ்சாபின் ஏனைய பகுதிகளை போரிட்டு கைப்பற்றிய பிறகு உடனடியாக மலைப்பகுதிகளையும் கைப்பற்ற வழிதெரியாமல், ஆங்கிலேயர்கள் சத்லெஜ் நதிக்கு வடக்கே உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளை நன்கு ஆட்சி செய்யக்க்கூடியவர், மகாராஜா குலாப் சிங், என்பதை அறிந்து கொண்டனர். ஆனால் இதற்கு பதிலாக அவர் ரொக்கமாக ரூபாய் 75 லட்சங்கள் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது, ஏன் என்றால் சீக்கிய சாம்ராஜ்ஜியத்திற்கு ஒப்பந்தப் படி கப்பம் செலுத்த வேண்டியதாக இருந்தது. மகாராஜா குலாப் சிங், ஜம்மு மற்றும் காஷ்மீர் சாம்ராஜ்ஜியத்தை இவ்வாறு நிறுவியராக கருதப்படுகிறார்.

1947 ஆம் ஆண்டில், இந்தியப் பிரிவினையின் பொழுது, ஜம்மு மற்றும் காஷ்மீரின் மகாராஜா ஹரி சிங் ஆவார், அவரும் ஏனைய இளவரசர்கள் தமது விருப்பபடி நடந்துகொள்ள அனுமதி வழங்கப் பெற்றிருந்தார்கள், அல்லது விருப்ப பட்டால் தனியான செயல் படவும் வழி இருந்தது, ஆனால் புவியஈயல் மற்றும் இனப்பிரிவு சார்ந்த காரணங்களுக்காக இந்தியாவுடன் இணைவதே மேலாக இருக்கும் என்றும் அறிவுரை வழங்கப் பெற்றிருந்தார்கள்.

மக்கள் தொகை[தொகு]

ஜம்முவின் மக்கள் தொகையில், மிக உயர்ந்த எண்ணிக்கையை டோக்ரா இன மக்கள், 67 சதவீதம் கொண்டிருக்கிறார்கள். இங்கு மேலும், பஞ்சாபி வழிவந்தவர்களில் இந்து மதத்தினர்கள் மற்றும் சீக்கியர்கள் அதிகம் காணப்படுகின்றனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்து மக்கள் தொகையில் அதிகளவு இந்துக்களை கொண்டிருப்பது ஜம்மு - ஜம்முவின் மக்கள் தொகையில் 65% இந்து மதத்தையும், 30% இஸ்லாமும் பின்பற்றப்படுகிறது மற்றும் ஏனையவர்களில் பெரும்பாலோர் சீக்கியர்கள்.[மேற்கோள் தேவை] ஜம்முவின் பெரும்பாலான இந்துக்கள், கோட்லி, மிர்பூர் மற்றும் பஞ்சாபி இந்துக்களிருந்து இடம்பெயர்ந்த டோக்ரா, காஷ்மிரி பண்டிதர்கள் ஆவர்.[மேற்கோள் தேவை] பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கிற காஷ்மீரிலிருந்து (1947 களிலிருந்து பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள முசாஃபராபாத், பூஞ்ச் போன்ற பகுதிகளிலிருந்து வந்துள்ளனர்) பெரும்பாலான சீக்கியர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.[மேற்கோள் தேவை]

ஜம்மு மக்கள் பெரும்பாலும் டோக்ரி, பூஞ்சி, கோஜ்ரி, கோட்லி, மிர்புரி, ஹிந்தி, பஞ்சாபி, மற்றும் உருது மொழிகளை பேசுகின்றனர்.[மேற்கோள் தேவை]

ஜம்மு மாகாணம் பல்வேறு இன மக்களைக் கொண்டிருகிறது இவற்றில் பெரும்பான்மையானவர்கள் பிராமணர் மற்றும் ராஜபுத்ர இனத்தவர் . 1941 - ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஜம்முவில் 30% பிராமணர்கள் ,27% ராஜபுத்ரர்கள் , 15% தக்கர் , 4% சாட் , மற்றும் 8% கட்ரி இன மக்கள் வாழ்கின்றனர்

மாவட்டங்கள்[தொகு]

தாவி நதிக்கரையோரம் இருக்கும் ஜம்மு நகரம், பால் லா போர்த் ஆகும்

ஜம்மு பிரிவில் பத்து மாவட்டங்கள் உள்ளன:

காணத் தூண்டும் இடங்கள்[தொகு]

ஜம்மு தனது அழகிய சமவெளிகளுக்கும், பழமை வாய்ந்த கோவில்களுக்கும், இந்து புண்ணிய சேத்திரங்களுக்கும், அரண்மனைகளுக்கும், பூங்காக்களுக்கும், கோட்டைகளுக்கும் பெயர்பெற்றது. இந்து புனித ஸ்தலங்களான அமர்நாத் மற்றும் வைஷ்னோ தேவி கோவில் ஆகியவற்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரம் இந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். ஜம்முவில் அழகிய இயற்கை வளங்கள் உள்ளதால், தெற்காசியாவின் எதிர்பாராத அழகை கொண்டுள்ள மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[5][5] ஜம்முவின் வரலாற்று நினைவுச் சின்னங்கள், இஸ்லாமிய மற்றும் இந்து கட்டிட கலைப்பாடுகளின் கலவையாகும்.

புர்மண்டல்[தொகு]

சின்ன காசி (சோட்டா காசி) என்று அழைக்கப்படும், புர்மண்டல், ஜம்மு நகரிலிருந்து 35 கி.மி. தொலைவில் உள்ளது. பழமை வாய்ந்த புண்ணிய தலமான இங்கு, சிவன் மற்றும் மற்ற கடவுள்களின் கோவில்கள் ஏராளமாக உள்ளன. சிவராத்திரி அன்று, இந்த ஊரே பண்டிகை கோலத்தை பூண்டு மூன்று நாட்களுக்கு மக்கள், கடவுள் சிவன் மற்றும் அன்னை பார்வதி யின் திருமண விழாவாக கொண்டாடுகிறார்கள்.

வைஷ்ணவ தேவி ஆலயம்[தொகு]

ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான அளவில் இந்து பக்தர்கள் வைஷ்ணவ தேவி ஆலயத்திற்கு வருகின்றனர்.

ஜம்முவின் அருகே உள்ள, கட்ராவில், பிரபலமான வைஷ்ணவ தேவி ஆலையம் உள்ளது. 1700 மீ. உயரமுள்ள திரிகுட மலையின் உச்சியில் இருக்கும் இந்த புனித குகை ஆலையம் வைஷ்ணவ தேவி, அன்னையின் உறைவிடமாகும். ஜம்முவிலிருந்து 48 கி.மி. தொலைவில் இருக்கும் இந்த குகை, 30 மி. நீளத்தையும், 1.5 மீ. உயரத்தையும் கொண்டுள்ளது. இந்த குகையின் முடிவில் அன்னையின் மூன்று வடிவங்களுக்கும் கோவில் எழுப்பப்பட்டுள்ளன — மகாகாளி, மகாலட்சுமி, மற்றும் மகாசரஸ்வதி. கட்ராவில் இருந்து 13 கி.மி. தொலைவில் இருக்கும், இந்த குகைக்கு பக்தர்கள் கால் நடையாகவே வந்து சேருகின்றனர், சிறு சிறு குழுக்களாக செல்லும் இவர்கள், ஒரு சிறு நுழை வாயிலில் நுழைந்து, சிலீரென்று இருக்கும் நீரில் நடந்து ஆலயத்தை அடைகின்றனர். ஒரு அரக்கனிடம் இருந்து தப்பித்துக்கொள்ள அன்னை இந்த குகையில் ஒளிந்து கொண்டதாகவும் பின்னர் அந்த அரக்கனை அவர் கொன்றதாகவும் கதைகள் சொல்கின்றனர்.

நந்தினி விலங்குகள் சரணாலயம்[தொகு]

அடர்ந்த காடுகளும், அரிய விலங்குகளுடனும், வேட்டையாடவும் மற்றும் உணவு வகை விலங்குகளும் கொண்டு நந்தினி விலங்குகள் சரணாலயம் பரந்து விரிந்து இருக்கிறது. வான் கோழிகள் இங்கு இயற்கையாகவே செழிப்பாக வாழ்கின்றன. மற்ற பறவைகளின் வகையில் மேலும் இந்திய மைனா, நீல பாறை புறா, பெண் மயில், சிகப்பு காட்டுக்கோழி, உற்சாக வான்கோழி, மற்றும் சகோர் ஆகியவை இங்கு காணலாம்.

34 கி.மீ.2 பரப்பளவுடன் இருக்கும், இந்த சரணாலயம், பாலூட்டிகளின் சிறந்த உறைவிடமாகவும் திகழ்கிறது. இங்கு சிறுத்தை, காட்டுப்பன்றி, சீசாஸ் குரங்கு, பாரல் மற்றும் சாம்பல் நிற குரங்குகள் அதிக அளவில் காணலாம்.

மானஸ்பல் ஏரி[தொகு]

மான்சர் ஏரி

ஜம்முவிலிருந்து 62 கி.மீ. தொலைவில் இருக்கும், மான்சர் ஏரி ஒரு அழகான ஏரி யாகும், இதனை சுற்றி காடுகள் நிறைந்த மலைகள் உள்ளன, இவை ஒரு மைல் நீளத்துடனும் அரை மைல் அகலத்துடனும் காட்சியளிக்கின்றன. 34°14′54.35″N 74°40′3.43″E / 34.2484306°N 74.6676194°E / 34.2484306; 74.6676194 ஜம்முவின் மிகப் பிரபலமான சுற்றுலா தலமாக இருக்கும் இது, மான்சரோவர் ஏரி யைப்போன்று, ஒரு புனிதமான ஏரியாகும்.

மான்சர் ஏரியின் கிழக்குக் கரையில் சேஷ்நாக் என்னும் ஆறு தலைக்கொண்ட புராண பாம்பின் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் காணப்படும் ஒரு பெரிய பாறாங்கல்லில் பல இரும்பு சங்கிலிகள் வைத்திருப்பதை காணலாம், அவை இறைவனின் அருளைப் பெற காத்திருக்கும் சிறிய பாம்புகள் போல தோற்றமளிக்கின்றன. (பரிக்கிரமா) புதிதாக மணமுடித்தவர்கள் இந்த ஏரியை சுற்றி மூன்று முறை வலம் வந்தால், (பரிக்கிரமா) அம்மன் அருளைப் பெறுவார்கள் என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

மான்சர் ஏரி அருகே இருக்கும், இரண்டு பழைமை வாய்ந்த உமாபதி மகாதேவ் கோவில், நரசிம்மர் கோவில் மற்றும் துர்க்கை கோவில் ஆகியவற்றை காண ஆயிரக்கணக்கான பகதர்கள் வருகின்றனர். பண்டிகை நாட்களில் இந்த ஏரியின் நீரில் மக்கள் புனித நீராடுகின்றனர். சில இந்து குடும்பத்தினர், தங்கள் ஆண் குழந்தைகளுக்கு மொட்டை யடிக்கும் விழா (முதல் தலைமுடி வெட்டுதல்) இங்கு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மான்சர் ஏரியில், சுற்றுலா ஆணையம் படகு சவாரி வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சுற்றுலா ஆணையம், இந்த வசதியினை சரியாக பராமரிக்காததால் பார்வையாளர்கள் யாரும் வருவதில்லை.

அனைத்து மதத்தினரின் நம்பிக்கை மற்றும் அழகும் நிறைந்த மான்சர் ஏரியை சுற்றியுள்ள தாவர வளம் மற்றும் அப்பகுதி விலங்கு கள் சுற்றுலா பயணிகளை கவர்கிறது. இந்த ஏரியை சுற்றி சிமென்ட் பாதையும், தேவையான வெளிச்சமும், பருவகால பறவைகளை பார்வையிட வசதியான இடங்களும் செய்து தரப்பட்டுள்ளன. இங்கு பல்வேறு இன ஆமை களும் மீன் களும் உள்ளன. இங்கு காட்டு வாழ் சாதுவான விலங்குகளான புள்ளி மான்கள், நீள்கை, நீர் பறவைகளான கொக்குகள் மற்றும் வாத்துகள் கொண்டுள்ள ஒரு சரணாலயமும் உள்ளது. மரபை பின்பற்றி வாழும் குஜ்ஜர் மற்றும் பக்கர்வால் இனத்தவர் தங்கள் மரபு சார்ந்த துணிகளை அணிந்து, திறந்த வெளி குல்லாவில் மானசர் ஏரியை சுற்றி இருக்கும் மலைகளில் வாழ்ந்து வருவதை நேரில் காண முடிகிறது.

மானசர் ஏரியில் இருந்து செல்லும் சாலை, பதான்கோட் டிலிருந்து உதம்பூருக்கு செல்லும் முக்கிய சாலையுடன் நேரிடையாக இணைகிறது. தேசிய நெடுஞ்சாலை எண். 1A. வில் இருக்கும் உதம்பூர் ஓர் முக்கிய நகரமாகும். மானசர் அல்லது சம்பாவிலிருந்து உதம்பூர் செல்லும் இந்த குறுக்கு சாலை, ஜம்மு நகரை இணைக்கும் புறவழி சாலையாகும். சூரின்சர் ஏரி, மான்சர் ஏரியுடன் இணைந்து இருக்கும் ஒரு சிறிய ஏரியாகும். இது ஜம்முவில் இருந்து 24 கி.மீ. தொலைவில் புறவழி சாலையில் உள்ளது.

பஹு கோட்டை[தொகு]

வழிபாட்டுத் தலமாக விளங்கும் பஹு கோட்டை, ஜம்மு நகரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் பாறை முகமாக உள்ளது, இது தாவி நதியின் இடது கரையோரம் இருக்கிறது. ஜம்மு நகரில் உள்ள மிக பழமையான மற்றும் பெரிய கோட்டை இது. 300 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜா பஹுலோச்சன் கட்டிய இந்த கோட்டையை, டோக்ரா அரசர்கள் மேலும் அழகூட்டினர்கள். கோட்டையின் உள்ளே, காளி கோவில் ஒன்று உள்ளது, இதனை ஜம்முவின் தலையாய கடவுளாக வணங்கி பாவே வாலி மாதா, என்று போற்றுகின்றனர். ஒவ்வொரு செவ்வாய்க் கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் கோவிலில் ஒன்று கூடி கோவிலையும் "தாவி நதியையும் வணங்குகின்றனர்". இன்று அக்கோட்டையின் மொட்டை மாடி சுற்றிலும் அழகிய பூங்கா அமைக்கபட்டு, அந்நகர மக்களுக்கு விருப்பமான சுற்றுலா தலமாக இருக்கிறது.

தாவி நதிக்கரையோரம் இருக்கும் பாக்-இ-பஹு ஒரு முகலாய காலத்து பிரபலமான பூங்காவாகும். இங்கிருந்து பழைய நகரையும் தாவி நதியையும் அருமையாக ரசிக்கலாம். பார்க்க மிகவம் அழகானது. பூங்காவின் ஒரு புறத்தில் சிறிய உணவு விடுதி உள்ளது.

பஹு கோட்டை யின் பின்னால் இருக்கும் புறவழி சாலையில், நகரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காட்டு பகுதியை சுற்றி பழைமையான மகாமாயா கோவில் தாவி நதியை நோக்கி இருக்கிறது. ஏக்கர் கணக்கில் மரங்களால் சூழ்ந்த இந்த பூங்காவிலிருந்து நகரின் அழகை மேலும் ரசிக்கலாம்.

வெளிநாடுகளில் இருந்து வந்த எதிரிகளிடமிருந்து, தங்களை காத்துக்கொள்ள பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் உயிரை துறந்த, டோக்ரா வழி மகாமாயாவின் நினைவில் கட்டிய காளி கோவில் பஹு கோட்டைக்கு எதிரேயும் தாவி நதியை நோக்கியும் உள்ளது. 1822 ஆம் ஆண்டு, மகாராஜா குலாப் சிங் முடி சூடிய உடன் தற்பொழுது இருக்கும் பாவே வாலி நாதாவின் கோவில் கட்டப்பட்டது. இது மகாகாளியின் கோவிலாகும், இவரை மாதா வைஷ்னோ தேவியை அடுத்த சக்தி வாய்ந்த தெய்வமாக மக்கள் நினைத்து வணங்குகின்றனர்.

ரகுநாத் கோவில்[தொகு]

ஜம்முவில் உள்ள ஏராளமான கோவில்களில், பெருமை வாய்ந்த இடமான ரகுநாத் மந்திர் நகரின் இருதய பகுதியில் அமைந்துள்ளது. நகரின் மத்தியிலுள்ள இந்த கோவிலை 1857 ஆம் ஆண்டு கட்டினார்கள்.

இந்த கோவிலை, ஜம்மு மற்றும் காஷ்மீர் ராஜ்ஜியத்தை நிறுவிய மகாராஜா குலாப் சிங், அவர்கள், 1835 கி.பி. கட்ட துவங்கி, அவரது மகன் மகாராஜா ரன்பீர் சிங் 1860 கி.பி. கட்டி முடித்தார். இந்த கோவிலின் உள்ளே இருக்கும் மூன்று பக்க சுவர்கள் தங்கக் தகடுகளால் ஆனது. இங்கு நிறைய காட்சியகங்களும் லட்சக்கணக்கான சாலிகிராமங்கள் உள்ளன. இந்த கோவிலை சுற்றியுள்ள பிற தெய்வங்கள் மற்றும் தேவியர்களின் கோவில்களும், இராமாயண காவியத்துடன் தொடர்புள்ளது. இந்த கோவில் ஏழு புனித ஸ்தலங்களை கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் தனியே கோபுரத்துடன் உள்ளது. இது வட இந்தியாவின் மிகப்பெரிய கோவில் வளாகமாகவுள்ளது. இந்த வளாகம், 130 ஆண்டுகள் பழமையானதாக இருந்தாலும், இங்கு இருக்கும் பழமையான எழுத்து ஏடுகளும், காவியங்களும் புனிதமானவையாக நூலகத்தில் பராமரித்து வருகின்றனர். இதன் கட்டிட முகப்பு, தரை மற்றும் மாடங்களின் அமைப்பு சந்தேகத்துக்கு இடமில்லாமல் முகலாய கட்டிடக்கலை யை பின்பற்றி உள்ளது, இந்த கோவிலின் உட்புறம் தங்கத்தகடால் உருவாக்கியது. இதன் மூல கர்பகிரகம் விஷ்ணு வின் எட்டாவது அவதாரத்திற்கு சரணடையும் விதத்தில் அமைக்கப்பெற்றது. மற்றும் டோக்ரா மக்கள் மிகப்பிரியமுடன் வணங்கும் இந்த கடவுள் ராமர் ஆவார். மேலும், அரிய சமசுக்கிருத நூல்களை கொண்டுள்ள சமஸ்க்கிருத நூலகமும் இங்கு இருக்கிறது.

பீர் கோ குகை[தொகு]

அதே தாவி நதிக்கரையோரம் பீர் கோ குகை கோவில், பஞ்சபக்தர் கோவில் மற்றும் ரன்பிரேஷ்வர் கோவில் ஆகிய முக்கிய தினங்களில் வழிபடும் சிவன் கோவில்கள் உள்ளன. தாவி நதிக்கரையோரம் அமைந்திருக்கிற பீர் கோ குகை, இராமயாணத்தில் வரும் ஜாம்வந்த் (கரடி கடவுள்) என்னும் கதாபாத்திரம் தியானம் செய்ததாக கூறப்படுகிறது. ரன்பிரேஷ்வர் ஆலயத்தில் படிகங்கலான பன்னிரண்டு சிவ லிங்கங்கள் 12" இலிருந்து 18" வரையிலான அளவில் உள்ளன, இவற்றின் மேல் ஆயிரக்கணக்கான சாலிகிராம்கள் கல்லடுக்குகளில் வைக்கப்பட்டுள்ளன. புதிய சட்டசபைக்கு அருகே ஷாலிமர் சாலையில் அமைந்திருக்கும் இது, மகாராஜா ரன்பீர் சிங் 1883 ஆம் ஆண்டு கட்டினார். இங்கு ஏழரை அடி உயரமுள்ள ஒரு மைய லிங்கமும் 2.3 m), மேலும் படிகத்தால் ஆன பன்னிரண்டு சிவலிங்கங்கள் 15 cm இலிருந்து 38 cm வரையிலான அளவிலும் மற்றும் காட்சியகத்தில் ஆயிரக்கணக்கான சிவலிங்கங்கள் கல் பலகைகள் மீதும் வைக்கப்பட்டுள்ளன.

ஷிவ்கோரி[தொகு]

ஜம்மு மற்றும் காஷ்மீரில், ரியாசி மாவட்டத்தில் அமைந்திருக்கும், புகழ்பெற்ற சிவகோரி என்னும் குகை கோவில், இயற்கையாக உருவான சிவலிங்கத்தை கொண்டுள்ளது. இந்த பகுதியிலேயே மிக சக்திவாய்ந்த சிவன் கோவிலாக இது உள்ளது. இந்த புனித குகை, 150 மீட்டருக்கும் மேலான நீளத்துடனும் & 4 அடி உயரமுள்ள இந்த சுயம்பு லிங்கத்தின் மேல், கூரையில் இருந்து வடிந்து வரும் ஒருவித பால் போன்ற பொருள் தொடர்ச்சியாக சொட்டிக்கொண்டே இருக்கிறது. இந்த குகை முழுவதும் ஹிந்து தெய்வங்களின் அழகிய உருவங்கள் இயற்கையாகவே தோன்றியுள்ள செதுக்கோவியங்களாக இருப்பதால், உள்ளே தெய்வீகமாக இருப்பதை போன்று பக்தர்கள் உணர்கின்றனர். இதனால் ஷிவ்கோரியை "கடவுள்களின் உறைவிடம்" என்றும் அழைக்கின்றனர். ஜம்முவில் இருந்து சிவகோரி செல்லும் வழியில் அழகிய மற்றும் ஏராளமான மலைகளும், நீர்வீழ்ச்சிகளும் மற்றும் ஏரிகளும் உள்ளன.

நகரில் உள்ள பொழுதுபோக்கிடங்கள்[தொகு]

ஹோட்டல் KC ரெசிடென்சியின் மேல்தளத்தில் இருக்கின்ற பாலக் என்ற சுழலுகின்ற உணவகம் ஜம்முவின் பிரபலமான ஒரு பொழுதுபோக்கு இடமாகும். நகரின் முக்கிய சுற்றுலா மற்றும் கடைவீதியாக ரகுநாத் பசார் உள்ளது. காந்தி நகரில், அப்சரா சாலையில், சந்தை பகுதியாக கோல் மார்கெட் உள்ளது. சாலையின் இருப்புறமும் அழகிய பங்களாக்கள் உள்ள பகுதியான கிரீன் பெல்ட் சாலையில், அமைந்திருக்கும் கிரீன் பெல்ட் பூங்காவில், இனிமையான மாலை நேரங்களில் உலா வரலாம். புதிதாக கெனால் சாலையில் ராஜேந்திர பூங்கா, கட்டப்பட்டிருக்கிறது. இரண்டு கால்வாய்களுக்கு நடுவே உள்ள இந்த பூங்கா, இரவு நேரம் வரை இங்கு இருக்கும் நீரூற்று, மின்சார விளக்குகளுடன் மேலும் அழகு சேர்க்கின்றது. இந்த பூங்காவையடுத்து குழந்தைகளுக்கான இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

"சிட்டி ஸ்குயர்" என்னும் பன்பொருள் விற்பனை கட்டிடம், நகர மக்களுக்காக கட்டப்பட்டுள்ளது. இங்கு அனைத்து சமீபத்திய நிறுவங்களின் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களும் ஒரே கூரையின் கீழ, கிடைக்கும் விதத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது மற்றும் சுவையான உணவகமும் உள்ளது. மேலும் ஒரு அழகான வளாகம் மற்றும் குழந்தைகளுக்கான வணிக வளாகமும், திரிகுட நகரில் பஹு-பிளாசா என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது, இங்கு இளைஞர்கள் மற்றும் இளைய தொழில்நெறியாலர்களும் அதிக அளவில் வருகின்றனர். பெரும்பாலான கூட்டு நிறுவனங்கள் & அனைத்து கைபேசி நிறுவனங்களான ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன், ஏர்செல், ரிலையன்ஸ் மற்றும் டாடா இன்டிகாம் போன்றவை பஹு-பிளாசாவிலிருந்து செயலாற்றுகின்றன. நகரின் முதல் பன்மடங்கு அரங்கமான K.C. சினிப்லக்ஸ்சின் துவக்கத்திற்கு பிறகு, மேலும் மற்றுமொரு பன்மடங்கு அரங்கம், இந்திரா திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு K.C. சென்ட்ரல் என்னும் சினிப்லேக்ஸ் வடிவம் எடுத்தது.

சாக்லேட் பர்பி, சுண்ட பஞ்சீறி, படிசா மற்றும் பாரம்பரிய உணவு ராஜ்மா (சாதத்துடன்) ஆகியவை ஜம்முவின் சிறந்த உணவுகளில் சில.

ஜம்முவின் பண்டிகைகள்[தொகு]

லோரி (13 ஜனவரி)[தொகு]

இந்தப் பண்டிகை வசந்த காலத்தின் வருகையை தெரிவிப்பதாகும், மேலும் மகர சங்கராந்தி என்றும் வழங்குகிறது. இந்நாளில் எல்லா இடங்களும் கோலாகாலமாக காட்சியளிக்கும்.

ஹவன் யக்னாஸ், என்ற புனித ஆற்றில் ஆயிரகணக்கான மக்கள் புனித நீராடி, மேலும் ஒவ்வொரு வீடு மற்றும் கோவில்களிலும் மெழுகுவர்த்திகள் ஏற்றிவைத்து இறைவனை வழிபடுவார்கள். கிராமப்புறங்களில், சிறுவர்கள் புதிதாக மணம் புரிந்தவர்கள் மற்றும் புதிதாக குழந்தை பெற்ற பெற்றோர்களிடம் இருந்தும் பரிசுப்பொருட்களை கேட்டு பெற்றுக் கொள்கின்றனர்.

சிறப்பான "சஜ்ஜா" என்ற நடன நிகழ்ச்சி லோரி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் பிரபலமானது. சிறுவர்கள் வண்ண காகிதங்களாலும் பூக்களாலும் அலங்கரித்த தங்களது 'சஜ்ஜாக்களை' (மயில்) கொண்டு தெருக்களில் ஊர்வலமாய் வந்து ஆடுகின்றனர். மேள தாளத்துடன் ஜம்முவே விழிப்புடன் காணப்படும்.

பைசாகி (ஏப்ரல் 13 அல்லது 14)[தொகு]

விக்ரம நாட்காட்டி யின் முதல் மாதமான பைசாக (வைசாகம்) மாதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பெயர் அமைந்தது. ஒவ்வொரு ஆண்டும், பைசாக மாதத்தின் முதல் நாளன்று, இந்த பைசாகி பண்டிகையைக் ஜம்மு மக்கள் கொண்டாடுவார்கள். இந்தப் பண்டிகையை "அறுவடைப் பண்டிகை" அல்லது "அறுவடைத் திருநாள்" என்றும் கூறுவார்கள், மேலும் திருமணங்கள் போன்ற நிகழ்வுகளை நடத்த இது ஒரு மங்களகரமான நாளாகும். ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் ஆறுகள், குளங்கள் அல்லது நீரோடைகளில் புனித ஸ்நானம் மேற்கொண்டு, தண்ணீருக்குள் மூழ்கி எழுவதை வழக்கமாக காணலாம்.

இந்த நன்னாளைக் கொண்டாட சந்தைகளில் பல இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் காட்சிப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப் பெறும் மேலும் அவற்றில் பங்கேற்று கண்டு களிக்க மக்கள் திரள் திரளாக உற்சாகத்துடன் வருகை புரிவார்கள், குறிப்பாக பஞ்சாப் நாட்டின் பாங்க்ரா நடனத்தைக் கண்டு களிக்க மக்கள் மிகவும் ஆர்வமாக காணப்படுவார்கள். சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோபிந்த் சிங் பைசாகி நாளன்று கால்சா பிரிவை, 1699 ஆம் ஆண்டு உருவாக்கியதாக நம்புகின்றனர். பஜனைகளை கேட்கவும், மந்திரங்களை ஜபிக்கவும், பொது சமையல் அறையில் இருந்து ("லங்கார்") பிரசாதத்தை பெறவும், மக்கள் குருத்வாரங்களில் / குருத்வாராக்களில் கூடுகின்றனர்.

பஹு மேலா (மார்ச்-ஏப்ரல் மற்றும் செப்டம்பர்-அக்டோபர்)[தொகு]

பஹு கோட்டை யில் உள்ள காளி கோவிலில் ஆண்டுக்கு இருமுறை இந்த பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

சைத்ரே செளதாஷ் (மார்ச்-ஏப்ரல்)[தொகு]

உத்தர் பேணி (ஜம்முவில் இருந்து 25 கி.மீ.) மற்றும் புர்மண்டல் (ஜம்முவில் இருந்து 28 கி.மீ) ஆகிய இடங்களில் சைத்ரே செளதாஷ் என்ற பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இங்கு வடக்கு திசையை நோக்கி தேவக் நதி ஓடுவதால் இந்த இடம் உத்தர் பேணி என்ற பெயரைப்பெற்றது. (இங்கு இருப்பவர்கள் இந்த நதியை குப்த கங்கா என்று அழைக்கின்றனர்)

புர்மண்டல் மேலா (பிப்ரவரி -மார்ச்)[தொகு]

ஜம்மு நகரில் இருந்து 39 கி.மீ. தொலைவில் புர்மண்டல் உள்ளது. சிவராத்திரி அன்று சிவன் மற்றும் பார்வதி யின் திருமணத்தை கொண்டாட மக்கள் மூன்று நாளைக்கு ஒன்று கூடுகின்றனர். மேலும் சிவராத்திரி அன்று, கோ குகை ஆலயம், ரன்பிறேஷ்வர் ஆலயம் மற்றும் பஞ்சபக்தர் ஆலயத்திலும் மக்கள் ஒன்று சேருகின்றனர். சிவராத்திரி தினம் ஜம்முவிற்கு சென்றால் எல்லா இடங்களிலும் நாம் கொண்டாட்டங்களைக் காணலாம்.

ஜிரி மேலா (அக்டோபர்-நவம்பர்)[தொகு]

உள்ளூர் ஜமீன்தாரின் நியாயமற்ற ஆணைகளுக்குப் பணியாமல், தனது உழைப்பால் விளைந்த பயிரை ஜமீந்தாருக்கு வழங்க மறுத்து, மேலும் அதற்காக தன் உயிரை மாய்த்துக்கொண்ட, பாபா ஜித்து என்ற எளிய, நேர்மையான விவசாயியின் நினைவில் ஒரு பண்டிகையை ஆண்டு தோறும் இவ்விடத்து மக்கள் கொண்டாடுகின்றனர். ஜம்முவில் இருந்து 14 கி.மீ. தொலைவில் இருக்கும் ஜிரி என்ற கிராமத்தில் ஜித்து தன்னை மாய்த்துக்கொண்டார். பாபாவை மக்கள் கடவுளின் அம்சமாக நினைப்பதால், வட இந்தியா சார்ந்த மக்கள் ஆண்டுதோறும் குறித்த நாளன்று ஜிரி கிராமத்துக்கு வந்து இந்த பண்டிகையை பாபாவின் நினைவில் அவரது நேர்மையையும், தைரியத்தையும் பாராட்டி கொண்டாடுகிறார்கள்.

நவராத்திரி பண்டிகை (செப்டம்பர்-அக்டோபர்)[தொகு]

வருடம் முழுவதும் வைஷ்ணவ தேவி ஆலயத்திற்கு புனித யாத்திரை யை மேற்கொண்டாலும், நவராத்திரி என்னும் ஒன்பது இரவுகளில் யாத்திரையை மேற்கொள்வது மிகவும் மங்களகரமானதாக நினைக்கிறார்கள். இந்த சமயத்தில் இப்பகுதியின் கலாசாரம், மரபு மற்றும் பாரம்பரிய வழிமுறைகளை மற்றவர்களுக்கு பகர்ந்திட மாநில சுற்றுலா அமைச்சரவை நவராத்திரி பண்டிகையை ஆண்டுதோறும் ஒன்பது நாட்களுக்கு விமரிசையாகக் கொண்டாட செப்டம்பர்/அக்டோபர் மாதங்களில் ஏற்பாடு செய்துள்ளது. இங்கு வரும் பலரும் இந்த சமயத்தில் தங்கள் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். இந்த பண்டிகை மூலம் மத சார்பான மரபுகளும், வழி வழியாக வரும் கலாச்சாரமும் எல்லா பக்தர்களுக்கும் புலப்படுகிறது. பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வைஷ்ணவ தேவி ஆலயத்திற்கு, நவராத்திரி சமயத்தில் புனித யாத்திரை புரிந்து அன்னையின் அருளாசி பெறுகின்றனர்.

உர்ஸ் (வருடம் முழுவதும்)[தொகு]

உர்ஸ் (அல்லது சியாரட்ஸ்) ஒரு காஷ்மீரி பண்டிகை ஆகும். இஸ்லாமிய துறவியர்களின் புண்ணியத்தலங்களில் ஆண்டு தோறும் அவர்கள் இறந்த நாளை ஒரு நினைவு நாளாகக் கொண்டாடுகிறார்கள். "மீஸா சாஹிப் அவர்களின் உர்ஸ் கொண்டாடும் பொழுது, பனி மழை பொழியும், பதமோல் சாஹிப் அவர்களின் உர்ஸ் கொண்டாடும் பொழுது காற்றடிக்கும், பஹாவுத்தின் அவர்களின் உர்ஸ் கொண்டாடும் பொழுது மழை பெய்யும்" என்று பொதுவாக பழமொழி கூறுவதுண்டு. வானிலை மோசமாக இருந்தாலும், உர்ஸ் பண்டிகை கொண்டாடுவதை மக்கள் தவிர்க்க மாட்டார்கள்.

கல்வி[தொகு]

 • ஜம்மு பல்கலைக்கழகம்
 • அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, ஜம்மு
 • மகாராஜா ஹரிசிங் வேளாண்மை கல்லூரிப்படிப்பு பள்ளி
 • ஜி ஜி எம் அறிவியல் கல்லூரி , ஜம்மு
 • அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஜம்மு.
 • மாடல் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (M.I.E.T), கோட் பலவால், ஜம்மு
 • மஹந்த் பசிட்டார் சிங் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி (MBSCET) பலியானா, ஜம்மு
 • I.C.E.S. காலேஜ் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி
 • ஆச்சார்யா ஸ்ரீ சந்தர் காலேஜ் ஆப் மெடிகல் சயின்சஸ் & ஹாஸ்பிடல்
 • ஸ்ரீ பிரதாப் மெமோரியல் ராஜ்புட் காலேஜ் ஆப் காமெர்ஸ், B.B.A, B.C.A.
 • சேர்-இ-காஷ்மீர் யுனிவெர்சிடி ஆப் அக்ரிகல்சுரல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி - ஜம்மு
 • பாகல்டி ஆப் வெட்டினரி சயின்சஸ் அண்ட் அனிமல் ஹஸ்பன்ரி, R.S.புரா
 • சைனிக் பள்ளி நக்ரோடா

குறிப்புதவிகள்[தொகு]

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2008-12-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-03-29 அன்று பார்க்கப்பட்டது.
 2. Jammu & Kashmīr - City Population - Cities, Towns & Provinces - Statistics & Ma
 3. பிபிசி செய்திகள்
 4. [எச்டிடிபிஎஸ்://டபுள்யுடபுள்யுடபுள்யு.வேதம்ஸ்புக்ஸ்.காம்/no38810.எச்டிஎம்[தொடர்பிழந்த இணைப்பு] ஜம்மு மற்றும் காஷ்மீர் பொருளாதாரம்/ஜஸ்பிர் சிங்]
 5. 5.0 5.1 [1]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜம்மு&oldid=3599791" இருந்து மீள்விக்கப்பட்டது