ரியாசி
ரியாசி (Reasi) என்பது இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் உள்ள நகரம் மற்றும் தெஹ்ஸில் ஆகும். செனாப் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நகரம் ரியாசி மாவட்டத்தின் தலைமையகமாகும். இது எட்டாம் நூற்றாண்டில் பீம் தேவ் நிறுவிய பீம்கர் மாநிலத்தின் ஒரு பகுதியாகும். ரியாசி என்ற பெயர் நகரத்தின் பழைய பெயரான "ரசியால்" என்பதிலிருந்து உருவானது.
நிலவியல்
[தொகு]ரியாசி 33.08 ° வடக்கு 74.83 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[1] மேலும் இது சராசரியாக 466 மீற்றர் (1,529 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது.
ரியாசி என்பது ஜம்முவிலிருந்து 64 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இங்கு பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள் ஆவார்கள். இப்பகுதி மக்கள் சிறு வணிக நிறுவனங்கள், அரசு வேலைகள் மற்றும் விவசாயம் ஆகியவற்றினால் வாழ்வாதாரத்தை பெறுகிறார்கள். இப்பகுதியில் உள்ள 12293 ஹெக்டேயர் விவசாய நிலங்களில் 1011 ஹெக்டேயர் நிலங்களில் பாசனம் செய்யப்படுகிறது. மக்காச்சோளம், கோதுமை, நெல் மற்றும் கம்பு ஆகியவை முக்கியமான பயிர்களாகும். காய்கறிகளும் வளர்க்கப்படுகின்றன. காலநிலை அடிப்படையில் இப்பகுதியின் பெரும்பாலான பகுதிகள் துணை வெப்பமண்டல மண்டலத்திலும் , மீதமுள்ளவை மிதமான மண்டலத்திலும் வகைப்படுத்தப்படுகின்றன. கோடை காலம் பொதுவாக சூடாகவும், குளிர்காலத்தில் பனிப்பொழிவு அதிகமாகவும் இருக்கும்.
வரலாறு
[தொகு]முந்தைய பீம்கர் மாநிலம் தற்போது ரியாசி என்று அழைக்கப்படுகிறது. பீம் தேவ்வினால் எட்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. 1810 ஆம் ஆண்டில் திவான் சிங்கின் ஆட்சியின் போது சம்மு கொந்தளிப்பில் இருந்தது. அரண்மனை சூழ்ச்சிகளும் கலகங்களும் நிர்வாகத்தை உலுக்கின. இந்த நேரத்தில்தான் மகாராஜா ரஞ்சித் சிங் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர குலாப் சிங்கை அனுப்பினார். குலாப் சிங் கிளர்ச்சியாளர்கள் மீது கடுமையாக இறங்கி சட்டத்தின் ஆட்சியை நிறுவினார். ரியாசி பகுதியில் கிளர்ச்சியாளர்களை தோற்கடித்த பின்னர் அவர் தனது நம்பகமான தளபதி ஜெனரல் சோராவர் சிங்கிடம் நிர்வாகத்தை ஒப்படைத்தார்.
2005 ஆம் ஆண்டில் முதல் நகராட்சித் தேர்தல் நடைபெற்றது. மேலும் திரு. குல்தீப் மெங்கி ரியாசி மாநகராட்சியின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2014 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தின் போது ரியாசி மாவட்டத்தின் சதால் கிராமம் கணிசமான பேரழிவை எதிர்கொண்டது. நிலச்சரிவு காரணமாக நகரத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூழ்கின.
புள்ளிவிபரங்கள்
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி ரியாசியின் மக்கட் தொகை 36,355 ஆகும்.[2] மொத்த சனத்தொகையில் ஆண்கள் 54% வீதமும், பெண்கள் 46% வீதமும் உள்ளனர். ரியாசியின் சராசரி கல்வியறிவு விகிதம் 75% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண் கல்வியறிவு 78% வீதமும், பெண் கல்வியறிவு 70% வீதமும் ஆகும். ரியாசியில் 13% வீதமானோர் 6 வயதிற்குட்பட்டவர்கள். இப்பகுதியில் டோக்ரி , உருது , கோஜ்ரி மற்றும் காஷ்மீர் ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.[2]
இந்துக்கள் 48 % வீதமும், சீக்கியர்கள் 0.99% வீதமும், முஸ்லிம்கள் 49.66% வீதமும் உள்ளனர்.[3]
போக்குவரத்து
[தொகு]ரியாசி ஜம்முவிலிருந்து 64 கி.மீ தூரத்தில் உள்ளது. சாலை, தொடருந்து அல்லது விமானம் வழியாக செல்லலாம். அருகிலுள்ள விமான நிலையம் 80 கி.மீ தூரத்திலும், தொடருந்து நிலையம் 26 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளன.
சான்றுகள்
[தொகு]- ↑ "Maps, Weather, and Airports for Riasi, India". www.fallingrain.com. Retrieved 2019-11-20.
- ↑ 2.0 2.1 "2011 census". Archived from the original on 2004-06-16.
- ↑ "Census 2011 India". www.census2011.co.in. Retrieved 2019-11-20.