உள்ளடக்கத்துக்குச் செல்

சாலிமர் தோட்டம், சிறீநகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாலிமார் தோட்டம் ஜம்மு காஷ்மீரின் சிறீநகரில் உள்ள ஒரு முகலாயத் தோட்டமாகும். இது தால் ஏரியின் வடகிழக்கில் ஒரு கால்வாய் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. இது சாலிமார் பாக், பரா பக்ச், மற்றும் பையஸ் பக்ச் என்ற மற்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. அருகிலுள்ள மற்ற பிரபலமான தோட்டம் நிசாத் தோட்டம் என்பதாகும். 1619 ஆம் ஆண்டில் முகலாய பேரரசர் ஜஹாங்கிர் தனது மனைவி நூர் ஜஹானுக்காக இந்த தோட்டத்தைக் கட்டினார். இத்தோட்டம் முகலாய தோட்டக்கலையின் மையமாக கருதப்படுகிறது. இது இப்போது ஒரு பொது பூங்காவாக உள்ளது. இது "சிறீநகரின் கிரீடம்" என்றும் அழைக்கப்படுகிறது. [1]

வரலாறு

[தொகு]
தால் ஏரியின் பின்னணியில் தோட்டம்

முகலாய வகை தோட்டங்களின் சமீபத்திய வரலாறு மற்றும் வளர்ச்சி பேரரசர் ஜஹாங்கிருக்கு வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், தோட்டத்தின் பண்டைய வரலாற்றை 2 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் பிரவர்சேனாவின் காலத்தில் கட்டப்பட்டதை காணலாம். இரண்டாம் பிரவர்சேனா சிறீநகர் நகரத்தை நிறுவி கி.பி 79 முதல் கி.பி 139 வரை காஷ்மீரில் ஆட்சி செய்தார். தால் ஏரியின் வடகிழக்கு மூலையில் தங்குவதற்காக ஒரு கட்டிடம் கட்டிய அவர் அதற்கு சாலிமார் என்று பெயரிட்டிருந்தார்.   [ மேற்கோள் தேவை ] சமசுகிருதத்தில் சாலிமார் என்ற சொல்லுக்கு 'அன்பின் தங்குமிடம்' என்று பொருள். மன்னர், கர்வான் என்ற இடத்தில் சுகர்மா சுவாமி என்ற ஒரு உள்ளூர் துறவிக்காக, இந்த கட்டிடத்தைக் கட்டினார். பல ஆண்டுகளான இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்தது. பின்னர் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், அந்த இடத்தின் பெயர் சாலிமார் என்ற நிலைத்து விட்டது.

இங்குதான் பேரரசர் ஜஹாங்கீர் தனது புகழ்பெற்ற சாலிமார் தோட்டம் என்ற தனது கனவுத் திட்டத்தை உருவாக்கி ராணியைப் பிரியப்படுத்தினார்.[2]அவர் 1619 இல் பண்டைய தோட்டத்தை ஒரு அரச தோட்டமாக விரிவுபடுத்தி அதை 'பரா பக்ச்' ('மகிழ்ச்சிகரமான') என்று அழைத்தார். அவர் தனது மனைவி நூர் ஜஹானுக்காக ('உலகின் ஒளி') இதை கட்டினார். 1630 ஆம் ஆண்டில், பேரரசர் ஷாஜகானின் உத்தரவின் பேரில், காஷ்மீர் ஆளுநர் ஜாபர் கான் இதை விரிவு படுத்தினார். அதற்கு அவர் ‘பையஸ் பக்ச்’ ('அபரிமிதமான') என்று பெயரிட்டார். பின்னர் அது மாகாணத்தின் சீக்கிய ஆளுநர்களுக்கு மகிழ்ச்சிக்கான இடமாக மாறியது.

மகாராஜா ரஞ்சித் சிங்கின் ஆட்சியின் போது, இங்குள்ள பளிங்கு அரண்மனை ஐரோப்பிய பார்வையாளர்களுக்கு விருந்தினர் மாளிகையாக இருந்தது. மகாராஜா ஹரி சிங்கின் ஆட்சியில் இந்த வளாகத்தின் மின்மயமாக்கம் செய்யப்பட்டது. இவ்வாறு, பல ஆண்டுகளாக, தோட்டம் பல ஆட்சியாளர்களால் விரிவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் 'சாலிமார் தோட்டம்' என்ற மிகவும் பிரபலமான பெயர் இன்றுவரை தொடர்கிறது. [1] [3]

முகலாய காலத்தில், குறிப்பாக, பேரரசர் ஜஹாங்கிர் மற்றும் அவரது மனைவி நூர் ஜஹான் ஆகியோரை காஷ்மீர் மிகவும் கவர்ந்தது. கோடையில் அவர்கள் தில்லியிலிருந்து குறைந்தது 13 முறை முழு அரச பரிவாரங்களுடன் சிறீநகருக்கு சென்றுள்ளனர். சலிமார் தோட்டம் அவர்களின் ஏகாதிபத்திய கோடைகால இல்லமாகவும் அரசவையாகவும் இருந்தது. அவர்கள் யானைகள் மீது பிர் பஞ்சால் மலைத்தொடரின் கடினமான பனி வழிகளைக் கடந்து சிறீநகரை அடைந்துள்ளனர். [4]

தால் ஏரியிலிருந்து சாலிமார் தோட்டம், 1864 பார்வை

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Shalimar Gardens in Srinagar". Archnet.org. Archived from the original on 2012-05-09. Retrieved 2009-12-25.
  2. Stuart, C.M. Villiers (2008). Gardens of the Great Mughals (1913). Read Books. pp. 162–166. ISBN 1-4097-1962-6. Retrieved 2009-12-30.
  3. "Shalimar Bagh Mughal Garden, Srinagar". Retrieved 2009-12-30.
  4. "The Royal Gardners of Mughal India". Retrieved 2009-12-30.

வெளி இணைப்புகள்

[தொகு]