பாரமுல்லா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரமுல்லா மாவட்டம்
மாவட்டம்
குல்மார்க்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாரமுல்லா மாவட்டத்தின் அமைவிடம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாரமுல்லா மாவட்டத்தின் அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்பாரமுல்லா
பரப்பளவு
 • மொத்தம்3,353 km2 (1,295 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,008,039
 • அடர்த்தி305/km2 (790/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஉருது
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்193122
வாகனப் பதிவுJK05
இணையதளம்http://baramulla.nic.in/


பாரமுல்லா மாவட்டம் (Baramulla district), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். மேலும் இம்மாவட்டம் காஷ்மீர் பகுதியில் உள்ள பதினொன்று மாவட்டங்களில் ஒன்றாகும். ஜீலம் ஆற்றாங்கரையில் அமைந்துள்ள பாரமுல்லா நகரம், 3,353 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் தலைமையிடமாகும். சிறந்த சுற்றுலா மற்றும் மலைவாழிடமான குல்மார்க் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.

நிர்வாகம்[தொகு]

வருவாய் வட்டங்கள்[தொகு]

பாரமுல்லா மாவட்டம் பத்தான், ஊரி, கிரீரி, போனியர், தங்மார்க், சோப்பூர், ரபையாபாத் மற்றும் பாரமுல்லா என எட்டு வருவாய் வட்டங்களை உடையது.

ஊராட்சி ஒன்றியங்கள்[தொகு]

இம்மாவட்டம் ஊரி, ரொஹமா, ரபியாபாத், சென்ஜீர், சோப்பூர், போனியர், பாரமுல்லா, தங்மார்க், சிங்போரா, பத்தான், வாகூரா மற்றும் குன்செர் என பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களை கொண்டுள்ளது. [1].

அரசியல்[தொகு]

பாரமுல்லா மாவட்டம் ஊரி, ரபியாபாத், சோப்பூர், சங்கிரமா, பாரமுல்லா, குல்மார்க் மற்றும் பத்தான் என ஏழு சட்ட மன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.[2]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,008,039 ஆக உள்ளது. அதில் 534,733 ஆண்களும், 473,306 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 885 என்ற விகித்த்தில் உள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில், 640 இந்திய மாவட்டங்களில், இம்மாவட்டம் 443வது இடத்தில் உள்ளது. சராசரி படிப்பறிவு விகிதம் 64.63% ஆகவும், அதில் ஆண்கள் படிப்பறிவு விகிதம் 75.53% ஆகவும், பெண்கள் படிப்பறிவு 52.38 ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 6.33% ஆக உள்ளனர்.[3]

புவியியல்[தொகு]

இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகே அமைந்த பாரமுல்லா மாவட்டம், கிழக்கில் ஸ்ரீநகர் மற்றும் கந்தர்பால் மாவட்டங்களுக்கு இடையே பரந்துள்ளது. வடக்கில் குப்வாரா மாவட்டம், வடமேற்கில் பந்திபோரா மாவட்டம், தெற்கில் பூஞ்ச் மாவட்டம் மற்றும் தென்மேற்கில் பட்காம் மாவட்டம் எல்லைகளாக கொண்டது.

பொருளாதாரம்[தொகு]

காய், கனி மற்றும் மலர்கள் உற்பத்தி செய்ய உதவும் தோட்டக்கலைத் துறை இம்மாவட்டத்தில் வளர்ந்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த ஆப்பிள் கனிகள் இங்கு பயிரிடப்படுகிறது.

சுற்றுலா[தொகு]

பாரமுல்லா நகரத்தின் தெற்கிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவிலும், ஸ்ரீநகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள புகழ் பெற்ற சுற்றுலா மலைவாழிடமான குல்மார்க் அமைந்துள்ளது. குல்மார்க் (பூக்களின் சமவெளி) கடல் மட்டத்திலிருந்து 2730 மீட்டர் உயரம் கொண்ட மலைவாழிடமாக உள்ளது. குல்மார்க் பனிச்சறுக்கு விளையாட்டுக்கு புகழ் பெற்றது.

போக்குவரத்து வசதிகள்[தொகு]

தேசிய நெடுஞ்சாலை எண் 1எ 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாநில கோடைகால தலைநகரான ஸ்ரீநகரையும் மாநிலத்தின் பிற பகுதிகளையும் இணைக்கிறது. ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் ஸ்ரீநகரில் உள்ளது. அருகில் உள்ள ஜம்மு தாவி தொடருந்து நிலையம் 360 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜம்முவில் அமைந்துள்ளது.

வான் போக்குவரத்து[தொகு]

பாரமுல்லாவிலிருந்து தென்கிழக்கில் 50 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீநகர் விமான நிலையம் அமைந்துள்ளது.

சாலைப் போக்குவரத்து[தொகு]

ஸ்ரீநகர், பத்தான், ஊரி, சோப்பூர் மற்றும் குல்மார்க், தங்மார்க் மற்றும் இதர இடங்களுக்கு செல்வதற்கு பாரமுல்லாவிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.

ஆசாத் காஷ்மீரின் தலைநகரான முசாஃபராபாத் நகரை இணைக்கும் 123 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை உண்டு.

தொடருந்து போக்குவரத்து[தொகு]

காஷ்மீர் இரயில்வேயின் இறுதி தொடருந்து நிலையமான பாரமுல்லா தொடருந்து நிலையம், ஸ்ரீநகரையும் குவாசிகுண்டு நகரையும் இணைக்கிறது. மேலும் பீர்பாஞ்சால் மலைத்தொடரில் 11 கிலோ மீட்டர் வரை குடைந்தெடுத்த சுரங்கப் பாதை அமைத்து பனிஹால் நகரத்தை இணைக்கும் இருப்புப் பாதை திட்டம் அக்டோபர் 2009 முதல் செயல்படுகிறது.

மொழிகள்[தொகு]

பாரமுல்லா மாவட்டத்தில் காஷ்மீரி மொழி, உருது மொழி, குஜ்ஜாரி மொழி, இந்தி மற்றும் பஞ்சாபி மொழிகள் பேசப்படுகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரமுல்லா_மாவட்டம்&oldid=3350219" இருந்து மீள்விக்கப்பட்டது