அலாவுதீன் கில்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுனா கான் கில்சி
சுல்தான் அலாவுதீன் கில்சி
Portrait of Sultan 'Ala-ud-Din, Padshah of Delhi.jpg
ஆட்சி1290–1316
முடிசூட்டு விழா1296, தில்லி
முன்னிருந்தவர்ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி
பின்வந்தவர்குத்புதீன் முபாரக் ஷா
மரபுகில்ஜி வம்சம்
பிறப்புகுவாலாத், ஆப்கானித்தான்
இறப்புதில்லி, இந்தியா
அடக்கம்தில்லி, இந்தியா
கில்ஜி பேரரசு

அலாவுதீன் கில்ஜி (1296 - 1316) இயற் பெயர்: சுனா கான் கில்சி (Juna Khan Khilji). இந்தியாவை ஆண்ட இரண்டாவது துருக்கி-ஆப்கானிய கலப்பினத்தை சேர்ந்தவர். கில்ஜி குல சுல்தான்களில் மிகவும் வலுவான ஆட்சியாளர். ஜலாலுதீன் கில்சிக்குப் பின் 1296 முதல் 1316 முடிய இருபது ஆண்டுகள், தில்லி சுல்தானகத்தை ஆண்டவர்.

சித்தூர் (மேவார்) நாட்டு பட்டத்து அரசி பத்மினியின் அழகை கேள்விப்பட்டு, பத்மினியை அடையும் நோக்கில் மேவார் கோட்டை மீது அலாவுதீன் கில்சி 1303ல் படை எடுத்த விவரங்கள் ”மாலிக் முகமது செய்சி ” (Malik Muhamad Jaysasi) என்பவர் ’அவதி ’ மொழியில் 1540ல் ’ பத்மாவதி ’ எனும் தலைப்பில் கவிதை நூல் இயற்றியுள்ளார்.

சகதாயி கானரசிலிருந்து வந்த சரன்-மஞ்சூர் (1297-1298), சிவிஸ்தான் (1298), கிளி (1299), தில்லி (1303) மற்றும் அம்ரோகா (1305) ஆகியவற்றின் மீதான மங்கோலியப் படையெடுப்புகளிலிருந்து அலாவுதீன் வெற்றிகரமாகத் தற்காத்துக் கொண்டார். 1306இல், இரவி ஆற்றங்கரைக்கு அருகில் மங்கோலியர்களுக்கு எதிராக ஒரு தீர்வான வெற்றியை இவரது படைகள் சாதித்தன. தற்கால ஆப்கானித்தானிலிருந்த மங்கோலிய நிலப்பகுதிகளைப் பின்னர் சூறையாடின. சாபர் கான், உலுக் கான், மற்றும் இவரது அடிமை-தளபதியான மாலிக் கபூர் ஆகியோர் மங்கோலியர்களுக்கு எதிராக வெற்றிகரமாக இவரது இராணுவத்திற்குத் தலைமை தாங்கிய இராணுவத் தளபதிகள் ஆவர்.

மங்கோலியப் படையெடுப்புகள் மற்றும் வடக்கு வெற்றிகள், 1297–1306[தொகு]

1297ஆம் ஆண்டின் குளிர்காலத்தில், சகதாயி கானரசின் ஒரு நோயனின் தலைமையிலான மங்கோலியர்கள் பஞ்சாப் மீது தாக்குதல் நடத்தினர். கசூர் வரை முன்னேறினர். 1298ஆம் ஆண்டு பெப்ரவரி 6ஆம் திகதி, உலுக் கானால் தலைமை தாங்கப்பட்ட அலாவுதீனின் படைகள் மங்கோலியர்களைத் தோற்கடித்தன. அமீர் குஸ்ராவ்வின் கூற்றுப்படி, யுத்தத்தில் 20,000 மங்கோலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் தில்லிக்குக் கைதிகளாகக் கொண்டு வரப்பட்டுக் கொல்லப்பட்டனர்.[1] 1298-99இல் மற்றொரு மங்கோலிய இராணுவமானது சிந்துப் பகுதி மீது படையெடுத்தது. இவர்கள் சகதாயி கானரசிலிருந்து தப்பிய கரவுனாக்கள் எனக் கருதப்படுகிறது. சிவிசுதான் கோட்டையை அவர்கள் ஆக்கிரமித்தனர். இந்த முறை அலாவுதீனின் தளபதி ஜாபர் கான் படையெடுப்பாளர்களைத் தோற்கடித்தார். கோட்டையை மீண்டும் கைப்பற்றினார்.[2][3]

வட இந்திய படையெடுப்புகள்[தொகு]

குசராத்து மீதான படையெடுப்பு[தொகு]

அலாவுதீன் கில்சி, குசராத்து மீது படையெடுத்து செல்ல தனது இரண்டு படைத்தலைவர்களான, உலுக்கான் மற்றும் நுசுரத் கான் என்பவர்கள் தலைமையில் இரண்டு படையணிகள் இரண்டு பக்கமாக அனுப்பினார். நுசுரத் கான் 24. 02. 1299ல் தனது படைகளை தில்லியிலிருந்து குசராத்திற்கு நேர்வழியில் நடத்திச் சென்றார். உலுக்கான் தனது படைகளை, தில்லியிலிருந்து சிந்து நாட்டின் வழியாக குசராத்து நோக்கிச் சென்றான்.

இறுதியாக இரு படைத்தலைவர்களும் சித்தூர் எனும் இடத்தில் ஒன்று சேர்ந்தனர். இவர்களது படை, ’வனசா’ (Vanasa) ஆற்றைக் கடந்து ‘இராவோசா’ (Ravosa Fort) எனும் கோட்டையை இராசபுத்திரர்களிடமிருந்து கைப்பற்றினர். பின்னர் குசராத்து மன்னர் வகேலா குலத்தின் (Vaghela Dynasty) இரண்டாம் கர்ணதேவ வகேலாவுடன் நடந்த போரில், கர்ணதேவன் தோற்று தனது மகள் தேவலா தேவியுடன் தேவகிரியை நோக்கி தப்பி ஓடிவிட்டார். அலாவுதீன் கில்சியின் படைகள் குசராத்தைக் கைப்பற்றி, அங்கிருந்த சோமநாதபுரம் (குசராத்து) சிவன் கோயிலை உடைத்தெறிந்தனர். மேலும் துவாரகையில் இருந்த கிருட்டிணன் கோயிலையும் இடித்து தரைமட்டம் ஆக்கினர். அரண்மனை மற்றும் கோயில்களின் கருவூலங்களில் இருந்த பெருஞ்செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

அத்துடன் நில்லாது, குசராத்து மன்னன் இரண்டாம் கர்ணதேவ வகேலாவின் பட்டத்தரசி கமலாதேவியை, கில்சியின் படைத்தலைவர்கள் சிறை பிடித்து அலாவுதீன் கில்சியின் முன் நிறுத்தினர். கில்சி, கமலாதேவியின் அழகில் மயங்கி, அவளை இசுலாமிய சமயத்திற்கு வலுக்கட்டாயமாக மதம் மாற்றி அவளது ஒப்புதல் இன்றி கில்சி அவளை திருமணம் செய்துகொண்டு, பட்டத்தரசியாக்கிக் கொண்டார்.

ரந்தம்பூர் கோட்டை, இராஜஸ்தான்[தொகு]

அலாவுதீன் கில்சியின் பல மனைவிகளில் ஒருத்தியான ’சிம்னா’ என்பவர், முகமது சா என்ற படைத் தலைவருடன் (அலாவுதீன் கில்சியின் அண்ணன் மகனும், தில்லியின் முதல் சுல்தானுமான சலாலுதீன் கில்சி என்பவரை கொன்று, அலாவுதீன் கில்சியை தில்லி சுல்தானாக கொண்டுவருவதற்கு சதி திட்டம் தீட்டியவர்தான் இந்த முகமது சா) கூட்டு சேர்ந்து அலாவுதீன் கில்சியை கொன்று நாட்டை கைப்பற்ற வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டினர். இந்த சதி திட்டத்தை தனது உளவாளிகள் மூலம் அலாவுதீன் கில்சி அறிந்து கொண்ட செய்தியை அறிந்த முகமது சா உடனடியாக தில்லியை விட்டு தப்பி ஓடி, இராசபுதன அரசர்களில் உறுதியான கோட்டைகள் மற்றும் அதிக படைபலம் மிக்க இராசபுத்திர அரசன், ரந்தம்பூர் கோட்டையின் (பிருதிவிராசு) சௌகான் குல அரசன், அமிர் தேவனிடம் (Hamir Dev) அடைக்கலம் புகுந்தார். (1290ல் தில்லியின் முதல் சுல்தான் என்ற பெயர் படைத்த ’சுல்தான் சலாலுதீன் கில்சி (’Sultan Jalaluddin Khilji) என்பவர், இராசபுதனத்தின் இரந்தம்பூர் கோட்டையை பல ஆண்டுகள் முற்றுகையிட்டும் கைப்பற்ற முடியாது தில்லிக்கு திரும்பிச் சென்றவர் என்பது குறிப்பிடதக்கது)

இதனை அறிந்த சுல்தான் அலாவுதீன் கில்சி கடுஞ்சினமடைந்து, ரந்தம்பூர் கோட்டை நோக்கி படையெடுத்தார். பனசு (Banas) எனும் ஆற்றாங்கரையில், இரு நாட்டுப் படைகளுக்கிடையே கடும் போர் நடந்தது. துவக்கத்தில் கில்சியின் படைகள், இராசபுத்திர படைகளிடம் தோல்வி அடைந்தது.

மன்னர் அமிர் தேவனின் முதன்மை அமைச்சருக்கும், தலைமைப்படைத்தலைவர் குர்தன் சைனி (Gurdan Saini) என்பவருக்கும் இடையே ஏற்கனவே இருந்த மனக்கசப்பு இப்போரில் வெளிப்பட்டதால், கில்சிக்கும், அமிர் தேவனுக்கும் இடையே நடந்த போரின் போக்கு வெகுவாக மாறிவிட்டது. இராசபுத்திர மன்னர் அமிர் தேவனின் தலைமைப்படைத்தலைவர் குர்தன் சைனியை, முதல்அமைச்சர் நயவஞ்சமாக கொன்று விட்டார். இதனால் அமிர் தேவ் சௌகானின் படைகள், படைத்தலைவர் இன்றி கட்டுக் குலைந்தன.

இதனிடையில், அமிர் தேவ சௌகானிடம் பணியாற்றும் அதிருப்தி உயர் அதிகாரிகள் பலர், போச தேவன் (Bhoj Dev) என்பவர் தலைமையில், சுல்தான் அலாவுதீன் கில்சியுடன் கைகோர்த்துக் கொண்டு, இரந்தம்பூர் கோட்டையின் இரகசியங்களையும், கோட்டைக்குச் செல்லும் இரகசிய வழிகளும், கோட்டையை எவ்வாறு தகர்ப்பது என்றும் கில்சிக்கு ஆலோசனைகள் கூறினர்.

மீண்டும் கில்சிக்கும் அமிர் தேவுக்கும் இடையே கடுமையான போர் மூண்டது. போரில் இருபடைகளிலும் அதிக வீரர்கள் மாண்டனர். கில்சி இரந்தம்பூர் கோட்டையை பிடிக்க முடியாது தினறினார். இதனால் மன உறுதி குலைந்த கில்சி, அமிர்தேவனிடம் அடைக்கலம் அடைந்த முகமது சா வை மட்டும் தன்னிடம் ஒப்படைத்து விட்டால், கோட்டையைத் தாக்காமல், அவனை அழைத்துக் கொண்டு தில்லிக்கு திரும்பி விடுவதாக இராசபுத்திர மன்னர் அமிர்தேவுக்கு தூது அனுப்பினார். தன்னிடம் அடைக்கலம் அடைந்தவர்களை உயிர் கொடுத்தாவது காப்பதே ஒரு இராசபுத்திர குலத்தில் பிறந்தவனுக்கு கடமை என்று கூறி, முகமது சாவை கில்சியிடம் ஒப்படைக்க முடியாது என்று கில்சியின் தூதுவனிடம் கூறி அனுப்பினார். போரின் வெற்றி தோல்வியை கணக்கிட முடியாததை அறிந்து கொண்ட அமிர் தேவனிடம் அடைகலம் அடைந்த முகமது சா, இராசபுதன மன்னரிடம் தன்னை அலாவுதீன் கில்சி கேட்டுக் கொண்டபடி, அவனிடமே ஒப்படைத்து விடும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் அதனை மறுத்து விட்டார் மன்னர் அமிர் தேவன். கில்சி, உறுதி மிக்க இரந்தம்பூர் கோட்டையை முற்றுகையிட தனது படைத்தலைவர்களைப் பணித்தார்.

மன்னர் அமிர் தேவனின் அரச துரோகிகள் கில்சிக்கு, அமிர்தேவனின் இரந்தம்பூர் கோட்டைக்குள் இருக்கும் உணவு, குடிநீர், படைக்கலன்கள் இருப்பு பற்றிய இரகசியங்களை அவ்வப்போது கில்சிக்கு கூறிக்கொண்டே இருந்தனர். ஒரு கால கட்டத்தில் கோட்டையில் குடிநீர் இருப்பு தீர்ந்து விட்ட நிலையில், அலாவுதீன் கில்சி இரந்தம்பூர் கோட்டையை தகர்த்துக் கொண்டு உள்ளே சென்று பார்க்கும் போது, அங்கு இராசபுத்திர குலப்பெண்கள் அனைவரும், சத்திரிய குல மரபுப்படி, தீக்குளித்து (Jauhar) (புனித தற்கொலை) மாண்டனர். அவர்களது சாம்பலையும் எலும்புகளையும் மட்டுமே கில்சியால் பார்க்க முடிந்தது. மற்ற இராசபுத்திர வீரர்கள் சாகும் வரை (Shaka) கில்சியின் படைவீரர்களுடன் போரிட்டனர்.

சொந்த நாட்டை அயலானிடம் காட்டிக் கொடுத்த இராச துரோகிகளான போச தேவன் போன்ற உயர்அலுவலர்கள், தங்களின் சதி ஆலோசனைகளின்படி செயல்பட்டு கில்சி இந்த போரில் வெற்றி பெற்றதால், தங்களுக்கு அளப்பரிய வெகுமதிகள் கில்சி தருவார் என்று காத்திருக்கையில், மன்னர் அமிர்தேவனுக்கு துரோகம் செய்த போச தேவன் போன்ற உயர் அதிகாரிகளின் தலைகளை வெட்ட கட்டளையிட்டார் கில்சி. கில்சி, தனக்கு துரோகம் இழைத்த முகமது சா என்பரை தன் கையாலேயே விசம் குடிக்க வைத்து கொன்றார்.

மேவார்[தொகு]

வடமேற்கு இந்தியாவில் மேவார் நாடு, மற்ற இராசபுத்திரர்களின் நாடுகளைவிட அதிக வலிமை மிக்கது. மேவார் நாட்டு மன்னர் பெயர் இரத்தன் சிங். அவரது பட்டத்து அரசியின் பெயர் பத்மாவதி என்ற பத்மினி ஆவார். சுல்தான் அலாவுதீன் கில்சி 28. 01. 1303ல் மேவார் நாட்டின் மீது படையெடுத்தார். மேவார் கோட்டையை பல மாதங்களாக முற்றுகையிட்டு, வெளியில் இருந்து கோட்டைக்குள் செல்லும் குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களை தடுத்து நிறுத்தினார் கில்சி. எனவே வேறு வழியின்றி மேவாரின் படைகள் கோட்டையை திறந்து கொண்டு வெளியே வந்து கில்சி படைகளுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டு போரிட்டனர். மிகக் கடுமையான போரில் மேவார் நாட்டு அரசர் இரத்தன் சிங் மற்றும் தலைமைப் படைத்தலைவர்கள் போரில் மாண்டனர். இதை அறிந்த பட்டத்தரசி பத்மினி உட்பட அனைத்து இராசபுத்திரகுலப் பெண்கள் சத்திரிய குல மரபுப்படி, கூட்டாகத் தீக்குளித்து (Jauhar) மாண்டனர். எஞ்சிய மேவார் நாட்டுப் படைவீரர்கள் இறக்கும் வரை (Shaka) போரிட்டு மாண்டனர். போரில் தோற்ற மேவார் நாட்டை தன் தில்லி சுல்தானகத்துடன் (Delhi Sultanate) இணைத்துக் கொண்டார் கில்சி.

மாளவம்[தொகு]

சுல்தான் அலாவுதீன் கில்சி, குசராத்து, இரந்தம்பூர், மேவார் நாடுகளைக் கைப்பற்றியதன் மூலம், மீதமுள்ள வட இந்திய மன்னர்களின் மனதில் தில்லி சுல்தானகத்தின் மீது பயத்தை ஏற்படுத்தினார். கில்சிக்கு அடிபணியாத மாளவ நாட்டின் மீது படையெடுக்க அயின்–உல்-முல்க் முல்தானி எனும் படைத்தலைவர் தலைமையில், 1,60,000 படைவீரர்களை அனுப்பினார். மாளவ நாட்டு அரசர் 20,000 குதிரைப்படை வீரர்களும், 90,000 தரைப்படை வீரர்கள் கொண்ட படைகளுக்கு, அரனந்த கோகா (Harnanda Koka) என்பவரை தலைமைப் படைத்தலைவராக நியமித்து, கில்சியின் படைகளை எதிர் கொள்ள காத்திருந்தார். கில்சியின் படைகளுக்கும், மாளவ நாட்டுப் படைகளுக்கும் நடந்த கொடும் போரில், மாளவ படைத்தலைவர் அரனந்த கோகா கொல்லப்பட்டவுடன், அவரது படைவீரர்கள் சிதறி ஓடினார்கள். போரில் தோற்ற மாளவ நாட்டுடன், மந்து (Mandu) , தாரா (Dhara) மற்றும் சந்தோரி (Chanderi) போன்ற நாடுகள் கில்சியின் காலடியில் தானாக வீழ்ந்தது. கில்சியின் படைகள், கைப்பற்றிய நாடுகளின் அரசு கருவூலத்தில் இருந்த பெருஞ்செல்வங்களை கைப்பற்றிக்கொண்டார். மாளவ நாட்டு ஆளுனராக அயின் – உல்-முல்க் முல்தானியை, சுல்தான் அலாவுதீன் கில்சி நியமித்தார்.

மார்வார்[தொகு]

அலாவுதீன் கில்சி 1308ல் இராசபுத்திர நாடுகளில் ஒன்றான மார்வார் நாட்டின் மீது படையெடுத்து வெல்ல, தலைமைப்படைத்தலைவராக மாலிக் கமலுதீன் என்பவரை நியமித்து தனது படைகளை அனுப்பினார். சிவானா கோட்டைக்குள் (Siwana Fort) இருந்த மார்வார் மன்னன் சத்தல் தேவன் (Satal Dev) கில்சியின் படைகளை எதிர்கொண்டு தாக்கினார். இறுதிப்போரில் மார்வார் நாட்டுப்படைகள் தோற்றது. மார்வார் மன்னர் உயிருடன் பிடிக்கப்பட்டார். மார்வார் நாட்டு அரண்மனை கருவூலத்தில் இருந்த பெருஞ்செல்வங்கள் கில்சி படைகள் கவர்ந்தனர். மார்வார் நாடு தில்லி சுல்தானகத்துடன் இணைக்கப்பட்டது.

சலோர் (Jalore)[தொகு]

இராசபுத்திர நாடுகளில் ஒன்றான சலோர் நாட்டின் மீது அலாவுதீன் கில்சி படையெடுத்தார். சலோர் நாட்டு மன்னர் கன்னாத்து தேவன் சோன்கரன் (Kanhad Dev Songara) என்பவர், கில்சியின் படைகளை தோற்கடித்தார். பின்னர் இரண்டாம் முறையாக மாலிக் கமலுதீன் என்ற படைத்தலைவரின் தலைமையில் மிகப்பெரிய படையை, சலோர் நாட்டை தாக்க அனுப்பி வைத்தார் கில்சி. கில்சியின் பெரும்படைகள் சலோர் நாட்டுப் படைகளுடன் போரிட்டு வென்று சலோர் நாட்டை கைப்பற்றி தில்லி சுல்தானகத்துடன் இணைக்கப்பட்டது.

அலாவுதீன் கில்சியின் தென்னிந்திய படையெடுப்புகள்[தொகு]

தேவகிரி[தொகு]

1306 மற்றும் 1307 ஆகிய இரண்டு ஆண்டுகளில், கில்சி தென்னிந்திய படையெடுப்புகள் நடத்தினார். முதல் படையெடுப்பு, குசாராத்து நாட்டை விட்டு வெளியேறி “பாக்லானா’ (Baglana) பகுதியை ஆண்டுவந்த இராய்கரண் எனும் மன்னரை போரில் வென்று, மன்னர் இராய்கரணின் இளையமகள் தேவலா தேவியை தில்லிக்கு கொண்டு சென்று, மதம் மாற்றி தனது மகன் கிசிர் கானுக்கு (Khijir Khan) திருமணம் செய்து வைத்தார்.

இரண்டாவது படையெடுப்பு கில்சியின் பாசத்திற்கும் நட்பிற்கும் உரிய அடிமைப் (Slave) படைத்தலைவர் மாலிக் கபூர் தலைமையில் யாதவர்கள் ஆளும் தேவகிரியை கைப்பற்ற அனுப்பினார்.

யாதவ அரசர் இராமச்சந்திரன், இராய்கரணின் கூட்டாளி ஆவார். தேவகிரி நாட்டுடன் நடந்த போரில் மாலிக் கபூர் வென்றார். ஒப்பந்தப்படி, தேவகிரி அரசின் கருவூலங்கள் மாலிக்கபூருக்கு திறந்து விடப்பட்டது. மேலும் ஆண்டு தோறும் தில்லி சுல்தானகத்திற்கு ஒரு பெருந்தொகை செலுத்த வேண்டும் என்ற உடன்பாடு ஏற்பட்டது. போரின் இறுதியில் தேவகிரி அரசர் பெயர், இராய் என்று மாற்றப்பட்டு , தில்லி சுல்தானுக்கு அடங்கி நடக்கும் அரசாக (Vassal State) மாறியது. மேலும் தேவகிரியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த குசராத்து மீண்டும் தில்லி சுல்தானகத்துடன் இணைக்கப்பட்டது.. இத்துடன் தேவகிரி அரசரின் மகன்களில் ஒருத்தியான சாட்டியபாலியை (Jatyapali), சுல்தான் அலாவுதீன் கில்சிக்கு மணமுடிக்க தில்லி கொண்டு செல்லப்பட்டார்.

தேவகிரி மன்னர் இராய் இராமச்சந்திரன் 1315ல் இறந்த பின்பு அவரது மகன்கள் தில்லி சுல்தானுக்கு எதிராக கலகங்கள் செய்தனர். மாலிக்கபூர் பெரும்படையுடன் தில்லிருந்து தேவகிரிக்கு வந்து கிளர்ச்சியாளர்களை நசுக்கி தேவகிரியை தில்லி சுல்தானகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

வாரங்கல்[தொகு]

தேவகிரியை கைப்பற்றிய மாலிக் கபூர், அடுத்து 1309ல் வாரங்கல் நாட்டு “காகாதீய குல” மன்னர் பிரதாப ருத்திர தேவன் மீது படையெடுத்தார். கடுமையான போரில் வாரங்கல் நாடு தோற்றது. போரில் தோற்ற வாரங்கல் நாட்டு மன்னருக்கும் மாலிக்கபூருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒப்பந்தப்படி, வாரங்கல் அரசின் கருவூலத்தில் இருந்த அனைத்து செல்வங்கள் மாலிக்கபூர் கைப்பற்றிக் கொண்டார். வாரங்கல் நாட்டு அரசர் தில்லி சுல்தானுக்கு அடிபணிந்து ஆண்டு தோறும் ஒரு பெரும்தொகை கப்பம் கட்ட வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, வாரங்கல் நாடு, தில்லி சுல்தானகத்திற்கு ஆண்டு தோறும் கப்பம் கட்டும் நாடாக (Vassal State) விளங்கியது.

மேலும் வாரங்கல் நாட்டு மன்னர் பிரதாப ருத்திர தேவனிடமிருந்த விலை மதிக்க முடியாததும், உலகப்புகழ் பெற்றதும், மிகப்பெரியதும் ஆன “ கோஹினூர் வைரத்தை” மாலிக் கபூர் கைப்பற்றி சுல்தான் அலாவுதீன் கில்சியின் காலடியில் காணிக்கையாக சேர்த்தார். ( பின்னர் இந்த பெரும்புகழ் கொண்ட கோஹினூர் வைரத்தை, இந்தியாவை ஆண்ட ஆங்கில கிழக்கிந்திய கும்பினியர்களால் ( East India Company of England) கைப்பற்றப்பட்டு, இங்கிலாந்து நாட்டு விக்டோரியா மகாராணியின் மணிமகுடத்தில் 1877ல் பதிக்கப்பட்டது).

துவார சமுத்திரம் (Halebeedu) மற்றும் மதுரை[தொகு]

தேவகிரி மற்றும் வாரங்கல் நாடுகளைக் கைப்பற்றிய மாலிக் கபூர், சுல்தான் அலாவுதீன் கில்சியின் ஆணையின்படி 1311ல் போசள நாட்டை ஆண்டு வந்த மூன்றாம் வீர வல்லாளன் மீது படையெடுத்தான். தலைநகரான துவார சமுத்திரத்தை (அலபீடு)முற்றுகையிட்டான்.ஆனால் வீரவல்லாளன் மாலிக் கபூரின் பெரும்படைகளுக்கு அஞ்சி போரிடாது, மாலிக் கபூருடன் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி துவார சமுத்திர அரசின் கருவூலத்தில் (Treasury) இருந்த அனைத்து செல்வங்களும் மாலிக் கபூர் கைப்பற்றினார். மேலும் போசளநாடு, தில்லி சுல்தானகத்திற்கு அடங்கி, ஆண்டு தோறும் பெருந்தொகை கப்பம் செலுத்த வேண்டும் என்று உடன்படிக்கை ஏற்பட்டது. மாலிக் கபூர் அத்துடன் நில்லாது அந்நாட்டில் உள்ள அனைத்து இந்து, சமண மற்றும் பௌத்த கோயில்களை இடித்துத் தள்ள தனது படையினர்களுக்கு கட்டளையிட்டார்.

மதுரை அரசு எவ்வித உடன்படிக்கை இன்றி மாலிக் கபூரின் காலடியில் வீழ்ந்தது. வழக்கம் போல், அந்நாட்டின் அரசு கருவூலத்தில் (Treasury) இருந்த அனைத்து செல்வங்களை கவர்ந்து சென்றார்.

பின்னர் தமிழ்நாட்டில் மாலிக்கபூரை எதிர்ப்பார் யாரும் இல்லாதபடியால், தனது பெரும் படைவீரர்களை மட்டும் அனுப்பி, சிதம்பரம் நடராசர் கோயில், திருவரங்கம் அரங்கநாதர் கோயில், மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களில் உள்ள கடவுள் சிலைகளை இடித்துத் தள்ளி, கோயில்களின் கருவூலங்களில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், காசுகள் கொள்ளை அடிக்கப்பட்டது.

தேவகிரி, வாரங்கல், துவார சமுத்திரம் (அலபீடு), காஞ்சிபுரம், சிதம்பரம், திருவரங்கம் மற்றும் மதுரையில் கொள்ளையடித்த கணக்கில் அடங்காத செல்வங்களை நூற்றுக்கணக்கான யானைகள், குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் மீது ஏற்றி, தான் வென்ற நாடுகளின் குதிரைகள் மற்றும் யானைகளையும் கவர்ந்து, தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் காலடியில் சேர்த்தார்.

மாலிக்கபூரின் வெற்றிகளையும், போரில் கொள்ளையடித்த பெருஞ்செல்வங்களையும், கோஹினூர் வைரத்தையும் கண்டு பாராட்டி, சுல்தான் அலாவுதீன் கில்சி மாலிக் கபூரை தில்லி சுல்தானகத்தின் தலைமைப் படைத்தலைவர் (Malik Naib) என்ற பதவி வழங்கி பாராட்டினார்.

அலாவுதீன் கில்சியின் இறப்புக்குப்பின்[தொகு]

தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி 1316ல் காலமானார். அவரது இறப்புக்குப்பின், தில்லி சுல்தானகத்திற்கு அடங்கியிருந்த நாடுகள், குறிப்பாக தென்னிந்திய நாடுகள், தங்களை தாங்களே விடுதலை அடைந்த நாடுகளாக அறிவித்துக் கொண்டது. இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஹரி ஹரரின் விஜயநகரப் பேரரசு மற்றும் பாமினி சுல்தான்கள் ஆவர்.

பிரபுக்கள் மற்றும் மதகுருமார்கள் மீதான நடவடிக்கைகள்[தொகு]

தில்லி சுல்தானகத்தின் அரசவை பிரபுக்களும், தனது நெருங்கிய உறவினர்களும், தனக்கும் தனது அரசுக்கு எதிராக செய்த கலகங்களையும், சதித் திட்டங்களையும் முறியடித்தார். இவர்களை தொடந்து கண்காணிக்க கில்சி மிகச் சிறந்த உளவுப்படையை வைத்திருந்தார். எனவே தனக்கு எதிரான கலகங்களையும், சதித் திட்டங்களையும் முளையிலேயே கிள்ளி எறிந்தார். தனக்கு எதிராக செயல்படும் கலகக்காரர்களின் சொத்துகளையும், மதகுருமார்களின் சொத்துகளையும் கைப்பற்றப்பட்டது. அரச துரோகிகளுக்கு கடும் தண்டனை வழங்கினார். எனவே பிரபுக்களும், நெருங்கிய உறவினர்களும், மதகுருமார்கள் எவரும் கில்சிக்கு எதிராக சதித்திட்டம் அல்லது கிளர்ச்சி செய்ய முன் வரவில்லை. தனது நாட்டில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் கையூட்டு பெறுவதை தடுத்து நிறுத்தினார். வேளாண்குடி மக்களிடமிருந்து கூடுதல் நிலவரி வசூலிப்பதை தடுத்தார்.

பொருளாதார சீர்திருத்தங்களும், விலைக்கட்டுப்பாடும்[தொகு]

சுல்தான் அலாவுதீன் கில்சி ஒரு குறிக்கோளுடன் கூடிய உறுதி மிக்க ஆட்சியாளர். தனது வெற்றியின் அடித்தளத்திற்கு வலுவான, நிலையான படையணிகளை நாடெங்கும் நிலை நிறுத்தினார். சந்தைப் பொருள்களுக்குச் சரியாகக் கணக்கிட்டு விலை விதித்து, அதற்கான விதிகள் இயற்றினார். அதனைக் கண்காணிக்க அரசு அலுவலர்களை நியமித்தார். பெருஞ் சந்தைகளில் விளைபொருள்களுக்கு சரியான விலையில் விற்கப்படுவதை கண்காணிக்க அரசு மேற்பார்வையாளர்களை நியமித்தார். கூடுதல் விலையில் விளைபொருள்களை விற்கும் வணிகர்கள் மீது கடும் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் சரியான விலை கொடுத்து மக்கள் பொருள்கள் வாங்கினர். தேவைக்கு அதிகமான விளைபொருள்கள் அரசு கிட்டங்கிகளில் (Ware House) சேமிக்கப்பட்டது. இதனால் வறட்சிக் காலத்தில் விளைபொருள்கள் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டது.

சுல்தான் அலாவுதீன் கில்சியின் இறப்பு[தொகு]

அலாவுதீன் கில்சியின் சமாதி, குதுப்மினார் கட்டிட வளாகம், தில்லி

அலாவுதீன் கில்சி 1316ல் இறந்தார். கில்சியின் மரணத்தை பேரிழப்பாக கருதிய கில்சியின் நம்பிக்கைக்குரிய தலைமைப் படைத்தலைவர் மாலிக் கபூர், தில்லி குதுப் மினார் வாளகத்தின் பின்புறத்தில், சுல்தான் அலாவுதீன் கில்சி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், மாலிக் கபூர் ஒரு நினைவு மண்டம் எழப்பினார். மேலும் அவர் நினைவாக ஒரு இசுலாமிய மதக் கல்விக்கல்வி கற்றுத்தரும் கல்வி நிறுவனத்தை (மதராசா) நிறுவினார்.

பிரபல கலாசாரத்தில்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

  1. Peter Jackson 2003, பக். 221.
  2. Peter Jackson 2003, பக். 219–220.
  3. Mohammad Habib 1981, பக். 266.
  4. Who exactly was Rani Padmavati, warrior queen or fictional beauty?
  5. Padmavati, the real story that Malik Muhammad Jayasi told 224 years after Alauddin Khilji's death
  6. The epic poem Padmavat is fiction. To claim it as history would be the real tampering of history
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலாவுதீன்_கில்சி&oldid=3597656" இருந்து மீள்விக்கப்பட்டது