உள்ளடக்கத்துக்குச் செல்

அம்ரோகா யுத்தம்

ஆள்கூறுகள்: 28°54′16″N 78°28′02″E / 28.9043537°N 78.4673426°E / 28.9043537; 78.4673426
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்ரோகா யுத்தம்
மங்கோலியர்களின் இந்திய படையெடுப்புகள் பகுதி
நாள் 20 திசம்பர் 1305
இடம் அம்ரோகா மாவட்டம்
28°54′16″N 78°28′02″E / 28.9043537°N 78.4673426°E / 28.9043537; 78.4673426
தில்லி சுல்தானகத்தின் வெற்றி
பிரிவினர்
சகதை கானேடு தில்லி சுல்தானகம்
தளபதிகள், தலைவர்கள்
அலி பெக்
தர்தக்
  • அலாவுதீன் கல்ஜி
  • மாலிக் நாயக்
  • மாலிக் துக்ளக்
  • பரம் அய்பா
  • மஹ்மூத் சர்டியா
  • கர்ம்சி
  • கட்டா
  • தக்லி
  • துளக்
பலம்
30,000 - 50,000 30,000
இழப்புகள்
20,000 பேர் இறந்தனர்
9,000 (பின்னர் கொல்லப்பட்டனர்)
தெரியவில்லை

அம்ரோகா யுத்தம் 20 திசம்பர் 1305 ஆம் ஆண்டு இந்தியாவின் தில்லி சுல்தானாகம் மற்றும் நடு ஆசியாவின் மங்கோலிய சகதை கானேடு ஆகியவற்றின் இராணுவங்களுக்கு இடையில் நடைபெற்றது. மாலிக் நாயக்கால் தலைமை தாங்கப்பட்ட தில்லி படையானது அலி பெக் மற்றும் தர்தக் ஆகியவர்களால் தலைமை தாங்கப்பட்ட மங்கோலிய ராணுவத்தை தற்கால உத்திரபிரதேசத்தின் அருகிலுள்ள அம்ரோகா என்ற இடத்தில் தோற்கடித்தது.

பின்புலம்

[தொகு]

மங்கோலிய சகதை கானேடானது பதிமூன்றாம் நூற்றாண்டில் தில்லி சுல்தானகத்தின் மீது பல முறை படையெடுத்தது. அலாவுதீன் கல்ஜி தில்லி அரியணைக்கு வந்த பிறகு நான்கு முறை அத்தகைய படையெடுப்புகளை முறியடித்தமுறியடித்தார். அந்த படையெடுப்புகள் 1297-98, 1298-99, 1299 மற்றும் 1303 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றன. 1303 ஆம் ஆண்டு படையெடுப்பின்போது மங்கோலியர்கள் அலாவுதீனின் தலைநகரான தில்லிக்குள் நுழைந்தனர். இந்நிகழ்வு மங்கோலிய படையெடுப்புகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுக்க அலாவுதீனை தூண்டியது. புதிதாக கட்டப்பட்ட சிரி கோட்டையில் அலாவுதீன் தங்க ஆரம்பித்தார். எல்லைப்புற பகுதிகளில் பல கோட்டைகளை புணரமைத்து புதிய கோட்டைகளை கட்டி அங்கு சக்தி வாய்ந்த தளபதிகளை பணியமர்த்தினார்.[1]

இந்தியாவை நோக்கிய மங்கோலிய அணிவகுப்பு

[தொகு]

அலாவுதீனின் தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி 1305 ஆம் ஆண்டு அலி பெக் தலைமையிலான ஒரு மங்கோலியப் படை தில்லி சுல்தானகத்தின் மீது படையெடுத்தது.[2] தில்லியைச் சேர்ந்த வரலாற்றாளர் ஜியாவுதீன் பரணி அலி பெக்கை ஒரு செங்கிஸ்கானின் வழித்தோன்றல் என்று குறிப்பிடுகிறார். உண்மையில் அலி பெக் கொங்கிராடு என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஆனால் செங்கிஸ்கானின் மகன் ஒகோடி கானின் வழிவந்த ஒரு இளவரசியை அலி பெக் மணந்திருந்தார்.[3]

அலி பெக்கிற்கு உறுதுணையாக தர்தக் மற்றும் தரகை (சில சமயங்களில் தவறாக "தர்கி"[4] என்றும் அழைக்கப்படுகிறார்) ஆகிய தளபதிகள் இருந்தனர். இந்தியாவிற்கு தரகை வருவது இது மூன்றாவது முறையாகும். தரகை முதல்முறையாக 1299 ஆம் ஆண்டில் இந்தியா மீதான மங்கோலிய படையெடுப்பில் ஒரு தளபதியாக குத்லுக் கவாஜாவின் ராணுவத்தில் பணிபுரிந்தார். 1303 ஆம் ஆண்டின் படையெடுப்பின்போது தரகை அப்படையெடுப்பிற்கு தலைமை தாங்கினார். எனினும் இந்த முறை மங்கோலிய ராணுவம் ஜீலம் ஆற்றை கடக்கும் பொழுது தரகை ராணுவத்தில் இருந்து பிரிந்து தனது நாட்டிற்கு திரும்பி விட்டார். அமீர் குஸ்ரா என்கிற தில்லி சுல்தானகத்தின் வரலாற்றாளரின் தவல் ராணி என்ற நூல் தரகையை பிற்காலத்தில் மங்கோலியர்கள் கொன்றதாக கூறுகிறது.[2]

தரகை இராணுவத்திலிருந்து பிரிந்தபிறகு அலி பெக் மற்றும் தர்தக் இந்தியாவின் தற்கால பஞ்சாப் பகுதியை நோக்கிய தங்களது அணிவகுப்பை தொடர்ந்தனர். அமீர் குஸ்ராவின் கூற்றுப்படி மங்கோலிய இராணுவமானது 50,000 வீரர்களை கொண்டிருந்தது. எனினும் மற்ற வரலாற்றாளர்கள் குறைந்த எண்ணிக்கையையே குறிப்பிடுகின்றனர். அவர்கள் 30,000 வீரர்கள் வரை எண்ணிக்கையை குறைத்து கூறுகின்றனர்.[5][6] பஞ்சாப் பகுதியானது அலாவுதீனின் அதிகாரியான மாலிக் நாயக்கின் கட்டுப்பாட்டில் இருந்தது.[7] மாலிக் நாயக் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியவராவார்.[8] மேலும் அவர் நாயக், மனிக் அல்லது மானக் என்றும் சில கையெழுத்துப் பிரதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளார். இசமி என்ற வரலாற்றாளர் தவறாக இவரை "நானக்"[9] என்று அழைக்கிறார். அமீர் குஸ்ராவின் கைசன்-உல்-ஃபுது என்கிற நூலின் ஒரு கையெழுத்துப் பிரதி அவரின் பெயரை மாலிக் நய்ப் என்று தவறாக குறிப்பிடுகிறது. சில பிற்கால வரலாற்றாளர்கள் இப்பெயரை மாலிக் நைப் (இது மாலிக் கபூருக்கு பிற்காலத்தில் கொடுக்கப்பட்ட ஒரு பட்டமாகும்) என்று படித்தனர். இதனை அடிப்படையாகக் கொண்டு அப்த் அல்-காதிர் படவுனி என்கிற வரலாற்றாளர் மாலிக் நாயக் பெயரை மாலிக் கபூர் என்று தவறாக குறிப்பிடுகிறார்.[3] உண்மையில் மாலிக் நாயக் என்பவர் மற்றொரு அதிகாரியாவார். அவருக்கு அகுர்பெக்-இ-மைஸ்ரா என்ற பட்டம் கொடுக்கப்பட்டிருந்தது. அப்பட்டத்திற்கு குதிரையின் தலைவன் என்று பொருள்.[9] மேலும் அவர் சமனா மற்றும் சுனம் ஆகிய பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையை பெற்றிருந்தார்.[7]

மாலிக் நாயக்கால் நிர்வாகம் செய்யப்பட்ட பகுதியில் இருந்த எந்த எல்லைப்புற கோட்டைகளையும் மங்கோலியர்கள் தாக்கவில்லை. அவர்கள் தில்லியை நேரடியாக தாக்குவார்கள் என்று கருதிய மாலிக் நாயக் தனது ராணுவத்தை தில்லியை நோக்கி தலைமை தாங்கி சென்றதாக தெரிகிறது. எனினும் முந்தைய படையெடுப்புகளை போல் இந்த முறை மங்கோலியர்கள் தில்லியை தாக்கவில்லை.[7] தில்லி நகரம் கடுமையான பாதுகாப்பில் இருந்தது என்பதை மங்கோலியர்கள் உணர்ந்திருந்தனர். மேலும் முற்காலத்தில் மங்கோலிய ராணுவங்களால் அதனைக் கைப்பற்ற முடியவில்லை என்பதனையும் அவர்கள் உணர்ந்திருந்தனர்.[9] எனவே சிவாலிக் குன்றுகளில் அடிவாரங்களில் இருந்த பகுதிகளை சூறையாடிய மங்கோலியர்கள் இமயமலை அடிவாரத்தின் வழியே தென்கிழக்காக கங்கைச் சமவெளிகளுக்கு சென்றனர்.[7]

அலாவுதீனின் பதில்

[தொகு]

அலாவுதீன் 30,000 பேர் கொண்ட வலிமையான குதிரைப் படையை மாலிக் நாயக்கின் தலைமையில் மங்கோலியர்களை தோற்கடிக்க அனுப்பினார். மாலிக் நாயக்கிற்கு உறுதுணையாக அலாவுதீனின் தளபதிகளான பரம் அய்பா, துக்ளக், மஹ்மூத் சர்டியா, கர்ம்சி, கட்டா, தக்லி, மற்றும் துளக் ஆகியோர் சென்றனர். இந்த ராணுவம் மங்கோலியர்களை தற்கால அம்ரோகா மாவட்டத்தின் ஏதோ ஒரு பகுதியில் 20 டிசம்பர் 1305 ஆம் ஆண்டு சந்தித்தது.[7]

மங்கோலியர்கள் ஒன்று அல்லது இரண்டு வலிமையற்ற தாக்குதல்களைத் தில்லி இராணுவத்தின் மீது தொடுத்தனர். அலாவுதீனின் அரசவை வரலாற்றாளரான அமீர் குஸ்ராவின் கூற்றுப்படி மங்கோலியர்கள் "புயல் அடிக்கும் போது புயலுக்கு எதிராக பறக்கும் கொசுக்களைப் போல்" செயல்பட்டனர். தில்லி இராணுவமானது மங்கோலியர்களை தோற்கடித்தது. மற்றொரு தில்லி வரலாற்றாளரான ஜியாவுதீன் பரணியின் கூற்றுப்படி யுத்தத்தில் வென்ற பிறகு இறந்துபோன மங்கோலியர்களுக்கு சொந்தமான 20,000 குதிரைகளை அலாவுதீன் பிடித்தார்.[7]

பின்விளைவுகள்

[தொகு]

மாலிக் நாயக் மற்றும் அவரது வெற்றிகரமான ராணுவத்தை வரவேற்பதற்காக அலாவுதீன் தில்லியில் ஒரு விழாக்கோலம் பூண்ட அவையை கூட்டினார். சவுத்ரா-இ சுபானியில் அலாவுதீன் ஒரு அரியணையில் வீற்றிருந்தார். தில்லி இராணுவமானது இரட்டை வரிசையில் நீண்ட தூரத்திற்கு நின்றது. பரணியின் கூற்றுப்படி இந்த விழாவை காண பெரும் கூட்டம் கூடியது. இதன்காரணமாக ஒரு கோப்பை தண்ணீர் மிக அதிகமான விலைக்கு விற்கப்பட்டது.[7]

சரணடைந்த மங்கோலிய தளபதிகளான அலி பெக் மற்றும் தர்தக் ஆகியோர் மற்ற மங்கோலிய கைதிகளுடன் அலாவுதீனின் முன்பு நிறுத்தப்பட்டனர். அமீர் குஸ்ராவின் கூற்றுப்படி கைது செய்யப்பட்டவர்களில் சிலரை கொல்லவும் மற்றவர்களை சிறையில் அடைக்கவும் அலாவுதீன் ஆணையிட்டார். எனினும் பரணியின் கூற்றுப்படி அனைத்து கைதிகளும் யானைகளால் மிதிக்கப்பட்டு கொல்லப்பட வேண்டுமென அலாவுதீன் ஆணையிட்டார்.[7] இவ்வாறாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,000 ஆகும்.[10] பதினாறாம் நூற்றாண்டு வரலாற்றாளர் ஃபிரிஷ்டா 8,000 மங்கோலியர்களின் தலைகள் சிரி கோட்டையை கட்ட அலாவுதீனால் பயன்படுத்தப்பட்டதாக கூறுகிறார்.[7]

அமீர் குஸ்ரா மற்றும் இசாமி ஆகிய வரலாற்றாளர்கள் அலி பெக் மற்றும் தர்தக் ஆகியோர் அலாவுதீனால் மன்னிக்கப்பட்டு மரண தண்டனையில் இருந்து விலக்கு பெற்றனர் (அவர்களது உயர்பதவி காரணமாக இவ்வாறு அவர்கள் நடத்தப்பட்டிருக்கலாம்) என்று கூறுகின்றார். அமீர் குஸ்ராவின் கூற்றுப்படி தளபதிகளில் ஒருவர் அவருக்கு "எந்தத் தீங்கும் செய்யப்படாத போதும்" இறந்துவிட்டதாகவும், மற்றொருவர் "தனித்து விடப்பட்டதாகவும்" கூறுகிறார். மேலும் அவர் "அவர்களை விளையாட்டுகளில் ஈடுபடுத்தி ஒவ்வொருவரையும் அலாவுதீன் மரணமடைய செய்ததாக" கூறுகிறார்.[11] இசாமி என்ற வரலாற்றாளரின் கூற்றுப்படி அலாவுதீன் அந்த இரண்டு தளபதிகளுக்கும் அமீர் (உயர்நிலை உடைய அதிகாரிகள்) பதவி கொடுத்து ஒவ்வொருவருக்கும் இந்தியாவில் பிறந்த அடிமைப் பெண்ணை கொடுத்ததாக கூறுகிறார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு குடிபோதையில் இருந்த தர்தக் தனது இராணுவத்திற்கு மற்றும் தனது உடமைகளுக்கு ஏற்பட்ட கதி குறித்து கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை கொல்ல அலாவுதீன் உத்தரவிட்டார். சில காலங்களுக்குப் பிறகு "தனது மனதில் இருந்த தீய எண்ணங்கள்" காரணமாக அலி பெக் கொல்லப்பட்டதாக இசாமி கூறுகிறார்.[7]

வரலாற்றாளர் பீட்டர் ஜாக்சன் அலி பெக் மற்றும் தர்தக் ஆகியோர் ஏராளமான எண்ணிக்கையிலான மங்கோலியர்களோடு கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார். ஏனெனில் அலாவுதீனுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததற்காக 1311 ஆம் ஆண்டு தில்லி சுல்தானகத்தில் ஏராளமான மங்கோலியர்கள் மொத்தமாக கொல்லப்பட்டனர். அவர்களோடு இந்த இருவரும் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அவர் கருதுகிறார்.[12]

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ரோகா_யுத்தம்&oldid=3594330" இலிருந்து மீள்விக்கப்பட்டது