உள்ளடக்கத்துக்குச் செல்

கிளி யுத்தம்

ஆள்கூறுகள்: 28°39′16″N 77°13′51″E / 28.65456°N 77.23090°E / 28.65456; 77.23090
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளி யுத்தம்
மங்கோலியர்களின் இந்திய படையெடுப்புகள் பகுதி
நாள் 1299
இடம் தில்லிக்கு அருகில் உள்ள கிளி எனும் இடம்
28°39′16″N 77°13′51″E / 28.65456°N 77.23090°E / 28.65456; 77.23090
தில்லி சுல்தானகத்தின் வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
மங்கோலியப் படைகள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டன
பிரிவினர்
சகதை கானேடு தில்லி சுல்தானகம்
தளபதிகள், தலைவர்கள்
  • குத்லுக் கவாஜா (கா.ம.)
  • கில்சக்
  • தமர் புகா
  • தர்கி
  • அலாவுதீன் கல்ஜி
  • ஜாபர் கான் 
  • உலுக் கான்
  • நுஸ்ரத் கான்
  • அகத் கான்
பலம்
100,000-200,000 குதிரைப்படை (ஜியாவுதீன் பரணியின் கூற்றுப்படி; எனினும் இது மிகைப்படுத்தப்பட்டதாகவே இருக்கக்கூடும்) 300,000 குதிரைப்படை மற்றும் 2,700 யானைகள் (ஃபிரிஷ்டாவின் கூற்றுப்படி; எனினும் இது மிகைப்படுத்தப்பட்டதாகவே இருக்கக்கூடும்)
இழப்புகள்
அதிகம் அதிகம்
Lua error in Module:Location_map at line 391: The value "{{{longitude}}}" provided for longitude is not valid.

கிளி யுத்தமானது 1299 இல் சகதை கானேட்டின் மங்கோலியர்களுக்கும் தில்லி சுல்தானகத்துக்கும் இடையில் நடந்த போராகும். தில்லியை கைப்பற்றும் எண்ணத்துடன் இந்தியா மீது குத்லுக் கவாஜா தலைமையிலான மங்கோலியர்கள் படையெடுத்தனர். அவர்கள் தில்லிக்கு அருகில் கிளி என்ற இடத்தில் முகாம் அமைத்து தங்கியிருந்த போது தில்லி சுல்தான் அலாவுதீன் கல்ஜி அவர்களது முன்னேற்றத்தை தடுக்க தனது ராணுவத்துடன் சென்றார்.

அலாவுதீனின் தளபதியான ஜாபர் கான் கிச்லக் தலைமையிலான ஒரு மங்கோலிய பிரிவை அலாவுதீனின் அனுமதியின்றி தாக்கினார். அலாவுதீனின் முகாமிலிருந்து ஜாபர் கானின் பிரிவை ஏமாற்றி தங்களை பின்தொடர வைத்த மங்கோலியர்கள் பின்னர் அதனை பதுங்கியிருந்து தாக்கினர். தான் இறப்பதற்கு முன்னர் ஜாபர் கான் மங்கோலிய ராணுவத்திற்கு பெரிய அளவிலான இழப்பை ஏற்படுத்திவிட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு பின்வாங்கும் முடிவை மங்கோலியர்கள் எடுத்தனர்.

பின்புலம்

[தொகு]

தில்லி சுல்தானகமானது அலாவுதீன் கல்ஜியால் ஆளப்பட்டது. 1296 இல் தனது மாமாவை கொலை செய்த பிறகு தில்லி அரியணையை அலாவுதீன் எடுத்துக்கொண்டார். சகதை கானேடானது நடு ஆசியாவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. 1280கள் முதல் அதன் தலைவராக துவா கான் என்பவர் இருந்தார். அதிகாரத்தை பொறுத்தவரை அவர் கய்டுவுக்கு அடுத்த இடத்தில் இருந்தார். ஆப்கானிஸ்தானத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த துவா இந்தியாவுக்கும் மங்கோலிய ஆட்சியை நீட்டிக்க முயற்சி செய்தார். சகதை கானின் நான்காவது தலைமுறை வழித்தோன்றலான நெகுதாரி இனத்தை சேர்ந்த ஆளுநரான அப்துல்லா என்பவர் தனது படையுடன் 1292 இல் பஞ்சாப் மீது படையெடுத்தார். ஆனால் உல்கு தலைமையிலான அவர்களது முன்வரிசை படையானது தோற்கடிக்கப்பட்டு அலாவுதீனுக்கு முன்னர் ஆட்சி செய்த ஜலாலுதீன் கல்ஜியால் கைதியாக பிடிக்கப்பட்டனர். சுமார் 4000 மங்கோலிய வீரர்கள் (தில்லியில் முகலாயர்கள் என்று அழைக்கப்பட்டனர்) சரண் அடைந்தனர். அவர்கள் இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டனர். தில்லியில் அவர்கள் வாழ்ந்த நகர்ப்புற பகுதி சரியாக முகலாய புரம் என்று பெயரிடப்பட்டது. 1296-1297 இல் சகதை தியுமன்கள் தில்லி சுல்தானகத்தால் பலமுறை தோற்கடிக்கப்பட்டன. இதன்பிறகு மங்கோலியர்கள் அடிக்கடி வட இந்தியா மீது படையெடுத்தனர். குறைந்தது இரு முறையாவது அவர்கள் நல்ல படை பலத்துடன் தாக்க வந்தனர்.

அலாவுதீனின் ஆட்சியின்போது மங்கோலிய நோயனான காதர் பஞ்சாபின் மீது 1297-98 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் படையெடுத்தார். அலாவுதீனின் தளபதியான உலுக் கானால் தோற்கடிக்கப்பட்ட அவர் பின்வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். சல்டி தலைமையிலான இரண்டாவது மங்கோலிய படையெடுப்பானது அலாவுதீனின் தளபதியான ஜாபர்கானால் முறியடிக்கப்பட்டது. இந்த அவமானகரமான தோல்விக்கு பிறகு மங்கோலியர்கள் முழு தயார் நிலையில் இந்தியாவை வெல்லும் எண்ணத்துடன் மூன்றாவது படையெடுப்பை நடத்தினர்.[1]

மங்கோலிய அணிவகுப்பு

[தொகு]

1299 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மங்கோலிய சகதை கானேட்டின் ஆட்சியாளரான துவா தில்லியை வெல்வதற்காக தனது மகன் குத்லுக் கவாஜாவை அனுப்பினார். தில்லி சுல்தானகத்தை வென்று அதனை ஆளும் எண்ணத்துடன் மங்கோலியர்கள் வந்தனர். வெறும் சூறையாடலுக்காக மட்டும் அவர்கள் வரவில்லை. எனவே 6 மாத கால இந்தியாவை நோக்கிய அணிவகுப்பின் போது அவர்கள் நகரங்களை சூறையாடவோ, கோட்டைகளை அழிக்கவோ இல்லை.[2] இரவு நேரங்களில் முல்தான் மற்றும் சமனா ஆகிய எல்லைப்புற பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த தில்லி தளபதிகளால் அவர்கள் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். தில்லியை வெல்வதற்கான யுத்தத்திற்கு தங்களது முழு சக்தியையும் வைத்திருக்க நினைத்த மங்கோலியர்கள் அந்த தளபதிகளுடன் சண்டைகளை தவிர்த்தனர்.[3] குரம் என்ற இடத்திலிருந்த அலாவுதீனின் தளபதி ஜாபர்கான் குத்லுக் கவாஜாவிற்கு ஒரு தூதனை அனுப்பி யுத்தத்திற்கு வருமாறு அழைத்தார். ஆனால் குத்லுக் கவாஜாவோ "மன்னர்கள் மன்னர்களுடன் தான் போரிடுவார்கள்" என்று கூறி அதற்கு மறுத்துவிட்டார். தனது தலைவன் அலாவுதீனின் கீழ் தில்லியில் மங்கோலியர்களை எதிர்த்துப் போரிடுமாறு ஜாபர் கானுக்கு குத்லுக் கவாஜா அறிவுறுத்தினார்.[2]

தில்லியின் புறநகர் பகுதிகளில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த கிளி என்ற இடத்தில் மங்கோலியர்கள் முகாமிட்டனர்.[2] மங்கோலியர்களின் வருகை பற்றிய செய்தி சுற்றிலும் இருந்த பகுதிகளுக்கு பரவத் தொடங்கிய உடனேயே அங்கிருந்த மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள மதில் சுவர்கள் கொண்ட தில்லிக்கு இடம் பெயர ஆரம்பித்தனர். நகரத்தின் வீதிகள், சந்தைகள் மற்றும் மசூதிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தில்லியை நோக்கி வந்த வணிக வண்டிகள் மங்கோலியர்களால் தடுக்கப்பட்டன. இதன் விளைவாக தில்லியில் பொருட்களின் விலை மிக அதிகமாகியது. இதனால் பொதுமக்கள் துயரப்பட்டனர்.[3]

அலாவுதீனின் ஏற்பாடுகள்

[தொகு]

மங்கோலியர்கள் சிந்து நதியை கடந்த பின்னரே அவர்கள் வரும் செய்தியை அலாவுதீன் அறிந்ததாக கருதப்படுகிறது. 14ஆம் நூற்றாண்டு காலவரிசையாளர் இசாமியின் கூற்றுப்படி அலாவுதீனுக்கு ஒன்று அல்லது இரண்டு வாரங்களே யுத்தத்திற்கு தயாராவதற்காக கிடைத்தது.[4] அலாவுதீன் உடனேயே பல்வேறு மாகாண ஆளுநர்களுக்கு செய்திகளை அனுப்பினார். தில்லிக்கு உடனேயே படைவீரர்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.[3]

யமுனை ஆற்றின் கரையில் இருந்த சிரி கோட்டையில் ராணுவ முகாமை ஏற்படுத்திய அலாவுதீன் தனது அதிகாரிகள் அனைவரையும் அழைத்தார். அலாவுதீனின் மாமாவும் மற்றும் தில்லியின் கொத்தவாலும் ஆகிய அலவுல் முல்க் ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். ராஜ்ஜியத்தை பணயம் வைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.[2] ஆனால் அந்த அறிவுரையை அலாவுதீன் நிராகரித்தார். அவ்வாறு செய்தால் அது தனது பலவீனமாகிவிடும் என்று வாதிட்டார். மேலும் பொதுமக்கள் மற்றும் வீரர்களின் மத்தியில் தனக்கிருக்கும் மதிப்பு இல்லாமல் போய்விடும் என்றார். கிளியை நோக்கி அணிவகுத்து மங்கோலியர்களுடன் போர்புரியும் தனது எண்ணத்தை வெளிப்படையாக அறிவித்தார்.[4]

தில்லியை அலவுல் மாலிக்கின் கட்டுப்பாட்டில் கொடுத்துவிட்டு அலாவுதீன் புறப்பட்டார். அரண்மனையின் கதவுகளின் சாவியை யுத்தத்தில் வெற்றி பெறுபவருக்கு கொடுக்குமாறு ஆணையிட்டு சென்றார். சிரியை நோக்கி அலாவுதீன் புறப்பட்டதற்குப் பின்னர் அலவுல் முல்க் படவுன் கதவை தவிர மற்ற அனைத்து கதவுகளையும் மூடினார். படவுன் கதவானது அலாவுதீன் தோற்கும் பட்சத்தில் மற்றவர்கள் தோப் என்ற இடத்திற்கு தப்பித்து ஓடுவதற்காக திறந்து வைக்கப்பட்டிருந்தது.[4]

ராணுவங்கள்

[தொகு]

மங்கோலிய ராணுவம்

[தொகு]

14ஆம் நூற்றாண்டு எழுத்தாளரான ஜியாவுதீன் பரணி மங்கோலிய ராணுவத்தின் பலத்தை ஒரு இடத்தில் ஒரு லட்சம் என்றும் மற்றொரு இடத்தில் இரண்டு லட்சம் என்றும் தனது காலவரிசை நூலில் குறிப்பிடுகிறார்.[1] வரலாற்றாளர் பனார்சி பிரசாத் சக்சேனா இந்த எண்ணிக்கைகளை நம்பத் தகுந்தவை இல்லை என்று குறிப்பிடுகிறார். ஏனெனில் இந்தியாவை நோக்கிய தனது பயணத்தின் போது இவ்வளவு பெரிய ராணுவத்தை சேர்ப்பது என்பது குத்லுக் கவாஜாவிற்கு மிகவும் கடினமான செயல் என்று வாதிடுகிறார்.[2]

மங்கோலிய இராணுவமானது நான்கு முக்கிய பிரிவுகளாக அமைக்கப்பட்டிருந்தது:[5]

  1. கிச்லக் (அல்லது கச்லக்) தலைமை தாங்கிய இடதுபுறம்
  2. குத்லுக் கவாஜா தலைமை தாங்கிய நடுப்புறம்
  3. தமர் புகா தலைமை தாங்கிய வலதுபுறம்
  4. தர்கி தலைமையில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்த தயாராக இருந்த 10,000 வீரர்கள்

இசகில்பா, கிஜ்யா மற்றும் உட்னா ஆகிய மங்கோலிய ராணுவத்தில் இருந்த மற்ற அதிகாரிகள்.[6]

தில்லி ராணுவம்

[தொகு]

பதினாறாம் நூற்றாண்டு வரலாற்றாளரான ஃபிரிஷ்டாவின் கூற்றுப்படி தில்லி இராணுவமானது 3 லட்சம் குதிரைகள் மற்றும் 2700 யானைகளை கொண்டிருந்தது. ஆனால் வரலாற்றாளர் கிஷோரி சரண் லால் இந்த எண்ணிக்கையை மிகைப்படுத்தப்பட்டது என்று கூறுகிறார்.[6]

தில்லி இராணுவமானது ஐந்து பெரிய பிரிவுகளாக அமைக்கப்பட்டிருந்தது:[4]

  1. நுஸ்ரத் கான் தலைமை தாங்கிய இடப்புறம்
  2. ஹிசாப்ருதின் ஜாபர்கானால் தலைமை தாங்கப்பட்டு இந்து வீரர்களால் ஆதரிக்கப்பட்ட வலப்புறம்
  3. அலாவுதீன் கல்ஜி தலைமை தாங்கிய நடுப்புறம்
  4. அலாவுதீனின் பிரிவுக்கு முன்வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த அகத் கான் தலைமை தாங்கிய ஒரு பிரிவு
  5. நுஸ்ரத் கானின் பிரிவிற்கு பின்புறத்தில் வலுவூட்ட நிறுத்தப்பட்டிருந்த உலுக் கான் தலைமை தாங்கிய ஒரு பிரிவு

மங்கோலிய தாக்குதலை தாங்குவதற்காக ஒவ்வொரு பிரிவின் முன்னரும் நிறுத்தப்பட்டிருந்த மொத்தம் 22 யானைகள்.[6]

தில்லி இராணுவமானது பல மைல் தூரத்திற்கு விரிந்து நின்றது. இதன் காரணமாக நடு புறத்தில் இருந்த அலாவுதீனால் அதனை திறம்பட கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது.[4] எனவே தமது இடத்தில் நிற்கும் அதிகாரிகள் அலாவுதீனின் அறிவுறுத்தலின்றி இடம் நகரக் கூடாது என்ற கடினமான கட்டளை இடப்பட்டிருந்தது: இந்த கட்டளையை மீறுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.[5]

14ஆம் நூற்றாண்டு காலவரிசையாளர் இசாமியின் கூற்றுப்படி யுத்தத்திற்கு முன்னர் குத்லுக் கவாஜா நான்கு தூதர்களை அலாவுதீனிடம் அனுப்பினார். இந்துஸ்தானில் இது போன்றதொரு பெரிய ராணுவம் நிறுத்தப்பட்டது இல்லை என்று கூறினார். தனது தூதர்கள் தில்லி ராணுவத்தின் முகாமை சுற்றி சென்று அலாவுதீனின் ராணுவத்தின் தலைமை அதிகாரிகளின் பெயர்களை அறிந்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று குத்லுக் கவாஜா அலாவுதீனிடம் கேட்டுக்கொண்டார். இதற்கு அலாவுதீன் அனுமதி வழங்கினார். தூதர்கள் தலைமை அதிகாரிகளின் பெயர்களை குத்லுக் கவாஜாவிடம் சென்று வழங்கினர்.[5]

யுத்தம்

[தொகு]

இந்த யுத்தம் நடந்த இடமான கிளி ஒரு பக்கம் யமுனை ஆற்றாலும் மற்றொரு பக்கம் புதர் நிலத்தாலும் சூழப்பட்டிருந்தது.[4]

ஜாபர் கானின் இறப்பு

[தொகு]

போருக்கு தயாராக அலாவுதீனுக்கு சிறிது காலமே கிடைத்தது. எனவே அவர் போரை தாமதப்படுத்த நினைத்தார். கிழக்கில் இருந்து அதிகப்படியான படைவீரர்களின் பிரிவுகளின் வரவை அவர் எண்ணி காத்திருந்தார். ஏற்கனவே சோர்வடைந்திருந்த மங்கோலியர்கள் போரை தாமதப்படுவதால் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் பின் வாங்குவர் என்று நம்பினார். எனினும் அலாவுதீனின் தளபதியான ஜாபர் கான் கிச்லக்கின் பிரிவை அலாவுதீனின் அனுமதியின்றி தாக்கினார்.[5]

கிச்லக்கின் பிரிவானது போர்க்களத்திலிருந்து தோற்று ஓடுவது போல் ஓடியது. இது ஒரு பொதுவான மங்கோலிய போர்த்தந்திரம் ஆகும். ஜாபர் கான் எதிரி வீரர்களை வேகமாக பின்தொடர்ந்தார். ஜாபர்கானின் காலாட்படையினர் அங்கேயே நிற்க குதிரைப் படையினர் மங்கோலியர்களை துரத்தினர். ஜாபர் கானின் குதிரைப் படையினர் கூட அவரது வேகத்திற்கு ஈடு கொடுத்து அவர் பின்னால் செல்ல முடியவில்லை. கிச்லக்கின் ராணுவத்தை 18 கரோக்களுக்கு (சுமார் 55 கிலோமீட்டர்) தொடர்ந்த பின்னர்தான் தன்னுடன் வெறும் 1,000 குதிரைப்படை வீரர்களே இருக்கின்றனர் என்ற என்ற உண்மை ஜாபர் கானுக்கு தெரியவந்தது. அதேநேரத்தில் தர்கி தலைமையிலான மங்கோலிய பிரிவானது அவர்களுக்கு பின்புறமாக மூன்று கிலோமீட்டர் பரப்பளவை நிரப்பி இருந்தது. இதன் காரணமாக அலாவுதீனின் முகாமிற்கு ஜாபர்கான் திரும்புவதற்கான வழி அடைக்கப்பட்டது.[5] ஜாபர் கானுக்கு ஆதரவளிக்க எந்த ஒரு பிரிவையும் அலாவுதீன் அனுப்பவில்லை. 17ஆம் நூற்றாண்டு வரலாற்றாளர் ஹஜியுதாபிரின் ஜாஃபருல்-வலி நூலின்படி ஜாபர்கான் மேல் இருந்த கெட்ட எண்ணம் காரணமாக தனது பிரிவை அவர்களுக்கு ஆதரவாக உலுக் கான் கூட்டிச் செல்லவில்லை.[7]

ஜாபர் கான் தனது அதிகாரிகளான உஸ்மான் அகுர்-பெக், உஸ்மான் யகான், அலி ஷா ரானா-இ-பில் மற்றும் பிறருடன் கலந்து ஆலோசித்தார். அவர்களால் திரும்பி செல்ல முடியாது என்ற உண்மை புரிந்தது. மேலும் திரும்பி சென்றாலும் அலாவுதீனின் ஆணையை பின்பற்றாததற்காக அலாவுதீன் அவர்களை தண்டிப்பார் என்று எண்ணினர். எனவே போரிட்டு மடிவதென முடிவெடுத்தனர்.[8][7] ஜியாவுதீன் பரணியின் நூலான தரிக்-இ-ஃபிருஸ் ஷாஹியின்படி குத்லுக் கவாஜா சரணடைவதற்கு அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கினார். சகதை கானேட்டிற்கு அழைத்துச் சென்று தில்லி அவையை விட மரியாதையுடன் நடத்துவதாக கூறினார். எனினும் ஜாபர்கான் அந்த வாய்ப்பை நிராகரித்தார்.[9]

வரலாற்றாளர் இசாமியின் கூற்றுப்படி ஜாபர் கானும் அவரது கூட்டாளிகளும் 5000 மங்கோலியர்களை கொன்றனர். ஜாபர்கானின் படைவீரர்கள் வெறும் 800 பேர் மட்டுமே இறந்தனர். கடைசியில் ஜாபர்கான் தன்னுடன் தப்பிப் பிழைத்த 200 வீரர்களுடன் போரிட்டார். ஜாபர்கான் குதிரை கொல்லப்பட்ட போது தரையில் நின்று போரிட்டார்.[10] மேலும் அவர் கிச்லக்குடன் வாள் சண்டையிட்டார்.[6] ஜாபர் கானின் கவசத்தை துளைத்த ஒரு அம்பு அவரது இதயத்தை தைத்தது.[8]

மங்கோலியா பின்வாங்கல்

[தொகு]

ஜாபர் கானின் மகனான திலேர் கானும் மங்கோலியர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினார். இதன் காரணமாக தமர் புகா பின்வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். பின்வாங்கிச் சென்ற மங்கோலிய ராணுவத்தை திலேர் கான் பின்தொடர்ந்தார். பின்வாங்கிச் சென்ற மங்கோலியர்கள் அம்பு மழை பொழிந்தனர். தில்லி ராணுவத்தின் நடு புறத்தையும் மங்கோலியர்கள் தாக்கினர். ஆனால் அத்தாக்குதல் அலாவுதீனின் பிரிவால் முறியடிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏராளமான மங்கோலிய வீரர்கள் இறந்தனர்.[7]

ஜாபர் கானின் இறப்பானது தில்லி அதிகாரிகளின் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியது. அடுத்த நாள் காலையில் அலாவுதீனின் அதிகாரிகள் தில்லிக்கு பின் வாங்குமாறு அவருக்கு அறிவுறுத்தினர். கோட்டையில் இருந்து பாதுகாப்புடன் போரிடுமாறு கூறினர். ஆனால் அந்த அறிவுரையை அலாவுதீன் நிராகரித்தார். ஜாபர் கானின் பிரிவானது கீழ்ப்படியாமை காரணமாக அந்நிலைக்கு தள்ளப்பட்டதாக வாதிட்டார். மேலும் தான் நகர்வதாக இருந்தால் தனது நகர்வு முன்னோக்கித் தான் இருக்குமே தவிர பின்னோக்கி இருக்காது என்று அலாவுதீன் கல்ஜி கூறினார். அதே நேரத்தில் தாக்குதலை ஆரம்பிக்க குத்லுக் கவாஜா விருப்பமின்றி இருந்தார். இரண்டாம் நாளானது எவ்வித ராணுவ நடவடிக்கைகளும் நடைபெறாமல் முடிந்தது.[8]

மூன்றாவது நாளும் எந்தவித சண்டையும் இல்லாமல் முடிந்தது. அன்று இரவு மங்கோலியர்கள் தங்களது தாயகத்தை நோக்கி பின்வாங்கினர். அலாவுதீனும் அவர்கள் பாதுகாப்பாக பின்வாங்க அனுமதித்தார். பின்னர் தில்லிக்கு திரும்பினார்.[8]

பரணியின் கூற்றுப்படி ஜாபர்கானின் தாக்குதலானது மங்கோலியர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் காரணமாகவே அவர்கள் பின்வாங்கினர்.[9] எனினும் மங்கோலியப் பின்வாங்கலுக்கான உண்மையான காரணமாக அறியப்படுவது யாதெனில், குத்லுக் கவாஜாவிற்கு ஏற்பட்ட காயம் ஆகும். பின்வாங்கி தங்களது நாட்டிற்கு திரும்பும் வழியில் குத்லுக் கவாஜா இறந்தார்.[11]

பின்விளைவுகள்

[தொகு]

ஜாபர்கான் யுத்தத்தில் போரிட்டு மடிந்த போதும் அவர் அரச கட்டளையை மீறியதை எண்ணி அலாவுதீன் கோபத்தில் இருந்தார்.[12] அரசவையில் இருந்த யாருமே அவரது வீரத்தை பாராட்டவில்லை. அதே நேரத்தில் அலாவுதீன் ஜாபர்கானின் பொறுப்பற்ற தன்மையும் கீழ்ப்படியாமையையும் கண்டித்தார்.[13] அலாவுதீனின் ஆட்சியின்போது அடுத்தடுத்து எழுதப்பட்ட அரசாங்க காலவரிசை நூல்களில் ஜாபர்கானின் பெயர் தவிர்க்கப்பட்டது. உதாரணமாக அமீர் குஸ்ராவின் நூலான கசைனுல் ஃபுது ஜாபர்கானை பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.[12]

மங்கோலியர்கள் இந்தியா மீது மீண்டும் 1303, 1305 மற்றும் 1306 ஆகிய ஆண்டுகளில் படையெடுத்தனர். ஆனால் தில்லி சுல்தானாக ராணுவத்தை தோற்கடிப்பதில் தோல்வியடைந்தனர்.[14]

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளி_யுத்தம்&oldid=3447229" இலிருந்து மீள்விக்கப்பட்டது