மங்கோலியர்களின் சிந்து படையெடுப்பு
சிவிஸ்தான் யுத்தம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
மங்கோலியர்களின் இந்திய படையெடுப்புகளின் ஒரு பகுதி | |||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
மங்கோலியர்கள், அநேகமாக நெகுதாரி இனத்தில் இருந்து தப்பித்தவர்கள் | தில்லி சுல்தானகம் | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
சல்டி | ஜாபர் கான் | ||||||||
இழப்புகள் | |||||||||
அதிகம் | |||||||||
1298-99 இல் ஒரு மங்கோலிய ராணுவம் (அநேகமாக நெகுதாரி இனத்தில் இருந்து தப்பித்தவர்கள்) தில்லி சுல்தானகத்தின் சிந்து பகுதியை தாக்கியது. அங்கிருந்த சிவிஸ்தான் கோட்டையைக் கைப்பற்றியது. சிவிஸ்தான் என்னும் இடம் தற்போது பாகிஸ்தானில் உள்ளது. மங்கோலியர்களை வெளியேற்ற தில்லி சுல்தான் அலாவுதீன் கல்ஜி தனது தளபதி ஜாபர்கானை அனுப்பினார். கோட்டையை கைப்பற்றிய ஜாபர்கான் மங்கோலிய தலைவர் சல்டி மற்றும் அவரது ஆட்களை சிறை பிடித்தார்.
மங்கோலிய படையெடுப்பு
[தொகு]மங்கோலிய சகதை கானேடு தில்லி சுல்தானகத்தின் மீது பலமுறை படையெடுத்தது. பிப்ரவரி 1298 இல் அலாவுதீன் கல்ஜியின் தளபதியான உலுக் கான் தலைமை தாங்கிய தில்லியின் ராணுவம் மங்கோலியர்களுக்கு கடும் தோல்வியைக் கொடுத்தது.[1]
சில காலத்திற்குப் பிறகு தில்லி சுல்தானகத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள சிந்து பகுதியின் மீது ஒரு மங்கோலியப் படை தாக்குதல் நடத்தியது. படையெடுப்பாளர்கள் சிவிஸ்தான் (சிபி என்றும் அழைக்கப்படுகிறது) கோட்டையை ஆக்கிரமித்தனர்.[2] இந்த இடமானது சிந்து பகுதியின் வட மேற்கில் உள்ள இடத்துடன் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த இடம் தற்போது உள்ள செவான் என்ற இடத்தை சுற்றி அமைந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.[3]
இந்தப் படையெடுப்பானது 1298-99 இல் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. 17 ஆம் நூற்றாண்டு காலவரிசை நூலான ஜஃபர்-அல்-வலிஹ் இன் படி மங்கோலியர்கள் சிவிஸ்தான் கோட்டையை ஹிஜ்ரி வருடம் 697 இல் ஆக்கிரமித்தனர். தில்லிப் படைகள் ஹிஜ்ரி வருடம் 698 இல் அக்கோட்டையை மீட்டெடுத்தன.[4]
14ஆம் நூற்றாண்டு காலவரிசையாளர் ஜியாவுதீன் பரணியின் கூற்றுப்படி இந்த படையெடுப்பானது சல்டி (அல்லது சோல்டி) மற்றும் அவரது சகோதரரால் தலைமை தாங்கப்பட்டது.[1] வரலாற்றாளர் பீட்டர் ஜாக்சன் மங்கோலியப் பெயரான சொகடை தான் இந்திய மொழியில் மருவி சல்டி என்றானது என்று நம்புகிறார். 14ஆம் நூற்றாண்டு காலவரிசையாளர் இசாமியின் விளக்கத்தின்படி சல்டி என்பவர் ஒரு துருக்கியர் மற்றும் அவரது துணையாள் ஒரு "பலூச்" இனத்தை சேர்ந்தவர். இதனை அடிப்படையாக கொண்டு பீட்டர் ஜாக்சன் சொகடையின் படைகள் தற்கால ஆப்கானிஸ்தானில் இருந்த நெகுதாரி பகுதியிலிருந்து தப்பித்தவர்கள் என்று கூறுகிறார்.[4]
16 ஆம் நூற்றாண்டு வரலாற்றாளர் ஃபிரிஷ்டா இந்த படையெடுப்பானது சகதை கானேட்டின் ஆட்சியாளரான துவா மற்றும் அவரது சகோதரர் சல்டியால் தலைமை தாங்கப்பட்டது என்று கூறுகிறார்.[1] எனினும் இது பொதுவாக தவறாக இருக்கவே வாய்ப்புள்ளது. ஃபிரிஷ்டா மேலும் தோல்வி அடைந்த பிறகு சல்டி மற்றும் அவரது சகோதரர் சிறைபிடிக்கப்பட்டு தில்லிக்கு கொண்டுவரப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில் துவா ஒரு வலிமையான ஆட்சியாளராக 1306-07 ஆம் ஆண்டு வரை ஆட்சி நடத்தினார்.[5]
அலாவுதீனின் பதில்
[தொகு]1298-99 இல் அலாவுதீனின் ராணுவத்தின் ஒரு பெரும் பகுதி உலுக் கான் மற்றும் நுஸ்ரத் கான் தலைமையில் குஜராத்தை நோக்கி அணி வகுத்து.[6] நற்பெயர் பெற்ற இந்தத் தளபதிகள் இல்லாத நேரத்தில் மங்கோலியர்களை சிவிஸ்தான் கோட்டையில் இருந்து வெளியேற்ற சமனாவின் ஆளுநரான ஜாபர் கானை அலாவுதீன் கல்ஜி அனுப்பினார்.[2] மங்கோலியர்களிடம் இருந்து வந்த அம்புகளை மீறி மற்றும் அதே நேரத்தில் எந்த முற்றுகை எந்திரத்தையும் பயன்படுத்தாமல் இருந்த போதிலும் ஜாபர்கானின் இராணுவம் கோட்டைக்குள் நுழைந்தது.[3]
அலாவுதீனின் அவை வரலாற்றாளரான அமிர் குஸ்ராவின் கூற்றுப்படி ஜாபர்கான் கோடாரிகள், வாள்கள் மற்றும் ஈட்டிகளை கொண்டு நடந்த கடுமையான யுத்தத்தில் அந்தக் கோட்டையை மீட்டெடுத்தார். முற்றுகைக்கு பயன்படும் பொதுவான எந்திரங்கள் இல்லாத போதிலும் ஜாபர்கான் அந்தக் கோட்டையை மீட்டெடுத்தார். ஜாபர்கான் கண்ணிவெடிகள் மற்றும் முற்றுகை கோபுரங்கள் ஆகியவற்றை பயன்படுத்தாமல் இந்த கோட்டையை மீட்டெடுத்தார்.[7]
பின் விளைவுகள்
[தொகு]சல்டி, அவரது சகோதரர் மற்றும் பிற மங்கோலியர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) கைது செய்யப்பட்டு சங்கிலியால் பிணைக்கப்பட்டு தில்லிக்கு கொண்டு வரப்பட்டனர்.[2] எந்த வரலாற்றாளரும் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதனை பற்றி எழுதவில்லை. ஆனால் அலாவுதீன் அவர்களை கொல்ல ஆணையிட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[3]
இந்த வெற்றி ஜாபர் கான் பெற்றிருந்த புத்திசாலித்தனமான தளபதி என்ற நற்பெயரை நிலைநிறுத்தியது. ஜியாவுதீன் பரணி என்ற காலவரிசையாளரின் கூற்றுப்படி ஜாபர் கானின் வெற்றியானது அலாவுதீன் மற்றும் அவரது சகோதரர் உலுக் கான் ஆகியோரை பொறாமை அடையச் செய்தது. பரணி மேலும் அவர்கள் ஜாபர்கானை குருடாக்க அல்லது விஷம் வைத்துக் கொள்ள திட்டமிட்டனர் என்று கூறுகிறார்.[8] வரலாற்றாளர் பனார்சி பிரசாத் சக்சேனா, பரணியின் குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மையை சந்தேகிக்கிறார்.[2]
அலாவுதீனின் அவை வரலாற்றாளரான அமீர் குஸ்ரா இந்த யுத்தத்தைப் பற்றி தனது நூல்களில் குறிப்பிடவில்லை.[1] இந்த யுத்தத்திற்கு அடுத்து நடந்த கிளி யுத்தத்தில் (1299) ஜாபர் கானின் செயல்கள் பொறுப்பற்ற தன்மையுடையதாகவும் மற்றும் கீழ்படியாமையின் அறிகுறிகளாகவும் அலாவுதீனுக்கு தென்பட்டதால் அரசவை வரலாறுகளில் ஜாபர் கானின் பெயர் தவிர்க்கப்பட்டது.[2] எனினும் பிந்தைய காலவரிசையாளர்களான ஜியாவுதீன் பரணி, இசாமி மற்றும் ஃபிரிஷ்டா ஆகியோர் இந்த யுத்தத்தைப் பற்றி நன்கு விளக்கியுள்ளனர்.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Kishori Saran Lal 1950, ப. 153.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Banarsi Prasad Saksena 1992, ப. 336.
- ↑ 3.0 3.1 3.2 Kishori Saran Lal 1950, ப. 154.
- ↑ 4.0 4.1 Peter Jackson 2003, ப. 219-220.
- ↑ Kishori Saran Lal 1950, ப. 153-154.
- ↑ Kishori Saran Lal 1950, ப. 89.
- ↑ Mohammad Habib 1981, ப. 266.
- ↑ Kishori Saran Lal 1950, ப. 155.