தீபல்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தீபல்பூர் (Dipalpur) ( உருது: دِيپالپُور), தெபல்பூர் என்றும் உச்சரிக்கப்படும் இது பஞ்சாபின் ஒகாரா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது தீபல்பூர் வட்டத்தின் தலைமையகமாக செயல்படுகிறது. இது மாவட்ட தலைநகர் ஒக்காராவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் பாரி தோவாபில் உள்ள பியாஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. [1] [2] பதிமூன்றாம் மற்றும் பதினான்காம் நூற்றாண்டுகளில் பல போர்களின் தளமாக இந்தப் பகுதி குறிப்பிடத்தக்கது. பட்டி ராஜ்புத் மற்றும் ஜாட் குலத்தின் வரலாற்றுடன் தொடர்புடையது. இப்பகுதியில் அதிகம் பேசப்படும் மொழி பஞ்சாபியாகும். காமியானா, பெகூகா, சையத், சையத், காசி, ஷேக், கோகர், வாட்டூ, பட்டி, பஷ்தூண் (கான்), ஜோஹியா, ஜாட், கரல், அரெய்ன் ஆகியோர் முக்கிய சாதிகள். வாட்டூ, பட்டி ராஜ்புத், ஜோஹியா, காரல், கோகர் ஆகியோர் இங்கு பூர்வீகமாக உள்ளனர். மீதமுள்ளவர்கள் குடியேறியவர்கள் மற்றும் இந்தியா பிரிக்கப்பட்ட பின்னர் குடியேறினர்.

வரலாற்று கட்டிடக்கலை[தொகு]

கடந்த காலத்தில், தீபல்பூர் ஒரு வலுவான சுவரால் சூழப்பட்டு, 25 அடி உயரத்திற்கு உயர்ந்து, ஆழமான அகழியால் பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்த சுவர் எப்போது, யாரால் கட்டப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் அது பிரோசு சா துக்ளக்கின் ஆட்சியின் போது புதுப்பிக்கப்பட்டு, சரிசெய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் அக்பரின் காலத்தில் ஆளுநராக இருந்த அப்துர் ரகீம் கான்-இ-கானன் என்பரால் புதுப்பிக்கப்பட்ட்டுள்ளது. பிரோசு சா துக்ளக் ஒரு பெரிய மசூதி மற்றும் அரண்மனைகளை கட்டினார். நகரத்தைச் சுற்றியுள்ள தோட்டங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்காக சத்லெஜ் ஆற்றில் இருந்து ஒரு கால்வாயை அவர் தோண்டினார்.

பரந்த மற்றும் காற்றோட்டமான சுரங்கங்கள் கோட்டையின் உள்ளே இருக்கும் அரச குடியிருப்புகளை வெளியே உள்ள தோட்டங்களுடன் இணைகின்றன. கோட்டையின் சுவரில் 24 பீரங்கித் துளைகள், 24 மசூதிகள், 24 குளங்கள் மற்றும் 24 கிணறுகள் ஆகியவை இந்த நகரம் உச்சம் பெற்றிருந்த காலத்தில் இருந்துள்ளன. அகழி, குளங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் போன்றவை நீரால் நிரப்பப்பட்டிருந்தன. ஆனால் சில இடங்களில் அகழியின் இருப்பிடத்தை இன்னும் வரையறுக்க முடியவில்லை. தற்போது சுவரின் பெரும்பகுதி இடிக்கப்பட்டுள்ளது. கூர்மையான வளைவுகள் கொண்ட நான்கு பிரமாண்டமான நுழைவாயில்களில் இரண்டு மோசமாக சேதமடைந்துள்ளன. மேலும், அவற்றின் மர கதவுகள் காணாமால் போய்விட்டன. பிற்காலத்தில் சீமைக்காரை பூச்சுகள் நுழைவாயில்களின் அசல் கட்டமைப்பை சிதைத்துவிட்டன.

இந்து மடாலயம்[தொகு]

அலங்கரிக்கப்பட்ட தாழ்ப்பாள்கள், மாடங்கள், சன்னல்கள் மற்றும் வெட்டப்பட்ட செங்கல் வேலைகள் கொண்ட கதவுகளைத் தவிர, பழைய இபல்பூருக்குள் மிகவும் கவனிக்கத்தக்க அம்சம் உள்ளூர் மக்களால் மிகவும் மதிக்கப்படும் குருவான இலால் ஜாஸ் ராஜ் என்பரின் மடாலயம் ஆகும்.

இங்கு புகழ்பெற்ற ஒரு புராணத்தின் படி, இலால் ஜாஸ் ராஜ், தீபல்பூரின் நிறுவனர் இராஜா தீப சந்தின் இளைய மகனாவார். அவர் தனது மாற்றாந்தாய் ராணி தோல்ரனின் சாபத்தால் பூமியில் மூழ்கினார். [தெளிவுபடுத்துக] இராஜா தீப சந்த் தனது மகனின் நினைவாக இந்த மடத்தை கட்டினார். இன்று, இதன் அறை பாழடைந்து காணப்படுகிறது. கதவுகள் மோசமான நிலையில் உள்ளது. படிக்கட்டுகள் சேமிப்புக் கிடங்காக பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக இதன் கட்டமைப்பே நொறுங்கிக் காணப்படுகிறது. உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, இங்கு ஒரு பெரிய வருடாந்திர " மேளா " நடைபெற்று வந்துள்ளது. இந்தியப் பிரிப்பு வரை தலையை மொட்டையடிக்கும் சடங்குகளை செய்ய இந்துக்களால் இது பயன்படுத்தப்பட்டது, ஆனால் தற்போது இங்கு யாரும் வருவதில்லை.

பிரயாணகள்[தொகு]

இலால் ஜாஸ் ராஜ் மடத்திற்கு அருகில் தீபல்பூரின் சத்திரம் ஒன்று உள்ளது. இது நான்கு பக்கங்களிலும் காற்றோட்டமான அறைகள், மையத்தில் ஒரு பெரிய முற்றமும் நான்கு வளைவு நுழைவாயில்களும் கொண்ட ஒரு விசாலமான கட்டிடம் ஆகியவற்றுடன் காணப்படுகிறது. சத்திரம், நகரத்தின் பெரும்பாலான பழைய கட்டுமானங்களைப் போலவே, இதுவும் இப்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. அசல் வடிவங்கள் தெளிவற்ற அளவிற்கு அடுத்தடுத்த குடியிருப்பாளர்களால் இது பல முறை பிரிக்கப்பட்டுள்ளது. தாழ்வாரப் பகுதிகள் கூட அறைகளாக உருவாக்க மாற்றப்பட்டுள்ளன.

புனிதர்கள்[தொகு]

ஹூஜ்ரா ஷா முகீமிலுள்ள ஒரு மசூதி

இந்த பகுதியில் பிரசங்கிக்க பல முஸ்லிம் புனிதர்கள் வந்துள்ளனர். பகவால் செர் கலந்தர் என்று பொதுவாக அழைக்கப்படும் பகவால் கக் பாக்தாத்தில் இருந்து வந்து தீபல்பூருக்கு அருகிலுள்ள பதர்வால் கிராமத்தில் குடியேறினார். துறவி கிராமத்திற்கு வெளியே ஒரு சிறிய அறை மற்றும் ஒரு மசூதியைக் கட்டினார். அவரது பேரன் ஷா முகீம் அவரது பணியைத் தொடர்ந்தார். இந்த கிராமம் ஹுஜ்ரா ஷா முகீம் என்று அறியப்பட்டது. புகழ்பெற்ற பஞ்சாபி காதல் கதையான மிர்சா சாகிபானில் இந்த இடம் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகலாய பேரரசர் அக்பர், அவரது மகன் சலீம் மற்றும் அரச பரிவாரங்களுடன் 1578 இல் பரித்துதின் கஞ்ச்சகருக்கு மரியாதை செலுத்த வந்தபோது தீபல்பூரில் தங்கியுள்ளார். அக்பர் தாழ்வாரத்திற்கு பாரி தோவாப் என்று பெயரிட்டுள்ளார். இரு நதிகளின் பெயர்களான பியாஸ் மற்றும் ராவி ஆகியவற்றை இணைத்து அந்த பகுதியை எல்லைக்குட்படுத்தியுள்ளார். பாபா குரு நானக்கும் திபல்பூரில் சிறிது காலம் தங்கியிருந்தார். ஒரு குருத்வாராவின் இடிபாடுகள் அந்த இடத்தில் காணப்படுகின்றன.

சாயி அப்துல் ரசாக் என்று பெயரிடப்பட்ட முஸ்லீம் துறவி தீபல்பூரில் தங்கியிருந்துள்ளார். பின்னர் அவர் உள்ளூர் மக்களுக்காக தன்னார்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளார். அவரது மரணத்திற்குப் பிறகு நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்போது, அவரது மரண இடம் இரஸாகிய தர்பார் என்று அழைக்கப்படுகிறது. [3]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபல்பூர்&oldid=2887431" இருந்து மீள்விக்கப்பட்டது