ஈல்கானகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஈல்கானரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஈல்கானகம்
ایلخانان
நிலை
தலைநகரம்
  • மரகா (1256–1265)
  • தப்ரீசு (1265–1306)
  • சுல்தானியே (1306–1335)
சமயம்
அரசாங்கம் முடியாட்சி
சட்டமன்றம் குறுல்த்தாய்

ஈல்கானகம் அல்லது ஈல்-கானகம் (பாரசீகம்: ایلخانان, இல்சனான்; மொங்கோலியம்: Хүлэгийн улс, ஹுலாகுவின் உளூஸ்) என்பது மொங்கோலியப் பேரரசின் தென்மேற்கு பகுதியாக நிறுவப்பட்ட ஒரு கானகம் ஆகும். இது மொங்கோலிய ஹுலாகுவின் குடும்பத்தால் ஆட்சி செய்யப்பட்டது. இது 13 ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. அடிப்படையில் ஈரானை ஆட்சி புரிந்து கொண்டிருந்த போதிலும் தற்கால அசர்பைஜான் பகுதி, தற்கால துருக்கியின் நடு மற்றும் கிழக்கு பகுதிகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியிருந்தது. உண்மையில் ஈல்கானகமானது 1219–1224 ஆம் ஆண்டுகளில் செங்கிஸ்கான் குவாரசமியப் பேரரசின் மீது படையெடுத்ததை அடிப்படையாகக் கொண்டதாகும். செங்கிஸ்கானின் பேரனும் டொலுயின் மகனும் ஆகிய ஹுலாகு கானால் இது தோற்றுவிக்கப்பட்டது. மங்கோலியப் பேரரசின் பிரிதலுக்கு பின்னர் 1259 இல் இது தனியாக இயங்க ஆரம்பித்தது. அதன் அதிகபட்ச பரப்பளவில் பெரும்பாலான ஈரான், ஈராக், ஆர்மீனியா, அசர்பைஜான், ஜார்ஜியா, துர்க்மெனிஸ்தான், துருக்கி, மேற்கு ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய துணைக்கண்டத்தின் வட மேற்கு நுனி ஆகியவற்றையும் உள்ளடக்கியிருந்தது. பிந்தைய ஈல்கானக ஆட்சியாளர்கள் 1295 இல் காசனில் தொடங்கி இஸ்லாம் மதத்திற்கு மாற ஆரம்பித்தனர்.

விளக்கம்[தொகு]

வரலாற்றாளர் ரஷித்-அல்-தின் ஹமாதனியின் கூற்றுப்படி, குப்லாய் கான் அரிக் போகேயை தோற்கடித்த பிறகு ஈல்கான் என்ற பட்டத்தை ஹுலாகுவுக்கு (அல்லது ஹுலேகு) வழங்கினார். ஈல்கான் என்ற சொல்லுக்கு "பழங்குடி இனத்தின் கான், 'உளூஸின்' (நாட்டின்) கான்" என்று பொருள். மங்கோலியப் பேரரசின் மோங்கே கான் மற்றும் அவரது வழிவந்த பெரிய கான்களில் இருந்து வேறுபடுத்தி அறிவதற்காக இந்த தாழ்வான கான் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. "ஈல்கான்" என்ற பட்டம் ஹுலாகுவின் வழித்தோன்றல்கள் மற்றும் பிற்கால பிற போர்சிசின் இளவரசர்களால் பாரசீகத்தில் பின்பற்றப்பட்டது. ஆனால் 1260 பிந்தைய நூல்களில் இந்த பெயர் பொருள்வயமாக்கப்படவில்லை.[1]

பாரசீகத்தில் ஆரம்பகால மங்கோலிய ஆட்சி[தொகு]

குவாரசமியாவின் இரண்டாவது முகமது மங்கோலியர்களால் அனுப்பப்பட்ட வணிகக் குழுவை கொன்றபோது 1219 இல் செங்கிஸ்கான் குவாரசம்-ஷா அரசமரபின் மீது போரை அறிவித்தார். 1219 மற்றும் 1221 க்கு இடையில் மங்கோலியர்கள் எளிதாக பேரரசை வென்றனர். முக்கிய நகரங்கள் மற்றும் மக்கள்தொகை மிகுந்த மையங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். செபே மற்றும் சுபுதை தலைமையில் மங்கோலியப் படையானது பாரசீக ஈரானை சூறையாடியது. அப்பகுதிகளை நாசமாக்கி சென்றது. இந்த படையெடுப்புக்குப் பிறகு திரான்சோக்சியானா மங்கோலிய கட்டுப்பாட்டுக்குள் வந்தது. திரான்சோக்சியானாவின் மேற்கே இருந்த பிரிக்கப்படாத பகுதி செங்கிஸ்கானின் போர்சிசின் குடும்பத்தின் பரம்பரை பகுதியானது.[2] இவ்வாறாக செங்கிஸ்கானின் நான்கு மகன்களின் குடும்பமானது பெரிய கானின் ஆளுநர்களின் கீழ் தங்களது அதிகாரிகளை நியமித்தனர். அப்பகுதியில் நியமிக்கப்பட்ட அந்த அதிகாரிகள் சின்-தெமுர், நுசல் மற்றும் கோர்குஸ் ஆகியோராவர்.

முகமதுவின் மகன் ஜலால் அத்-தின் மிங்புர்னு இந்தியாவிலிருந்து ஈரானுக்கு அண். 1224 இல் திரும்பினார். அவரது தந்தையின் பேரரசில் எஞ்சிய எதிரி துருக்கிய அரசுகள் சீக்கிரமே ஜலாலுடன் தங்களது கூட்டணியை அறிவித்தன. நடு பாரசீகத்தை வெல்வதற்காக நடந்த முதல் மங்கோலிய முயற்சியை அவர் முறியடித்தார். எனினும் 1231 இல் பெரிய கான் ஒகோடி அனுப்பிய சோர்மகனின் ராணுவம் ஜலால் அத்-தினை தோற்கடித்தது. இந்த மங்கோலிய படையெடுப்பின்போது அசர்பைஜான், மற்றும் பார்ஸ் மற்றும் கெர்மன் மாகாணங்களில் இருந்த தெற்கு பாரசீக அரசமரபுகள் தாங்களாக முன்வந்து மங்கோலியர்களிடம் அடிபணிந்து அவர்களுக்கு திறை செலுத்த ஒப்புக்கொண்டன.[3] மேற்கில் ஹமாதான் மற்றும் எஞ்சிய பாரசீக பகுதிகள் சோர்மகனின் பாதுகாப்புக்குள் வந்தன. மங்கோலியர்கள் ஆர்மீனியா மற்றும் ஜார்ஜியா மீது 1234 அல்லது 1236 இல் படையெடுத்தனர். 1238 இல் ஜார்ஜியா ராஜ்யத்தை வென்றனர். அடுத்த வருடமே செல்ஜுக்குகள் கட்டுப்பாட்டில் இருந்த பெரிய ஆர்மீனியாவின் மேற்கு பகுதிகளை அவர்கள் தாக்கினர்.

உசாத்துணை[தொகு]

  1. Peter Jackson The Mongols and the West, p.127
  2. Jeremiah Curtin The Mongols: A history, p.184
  3. Timothy May Chormaqan, p.47
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈல்கானகம்&oldid=3325512" இருந்து மீள்விக்கப்பட்டது