சுபுதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுபுதை
Subudei.jpg
இடைக்கால சீன வரைபடம்
தாய்மொழியில் பெயர்சுபுகதை
பிறப்புஅநேகமாக 1175
புர்கான் கல்துன், மங்கோலியா
இறப்பு1248 (அகவை 72–73)
தூல் நதி, மங்கோலியா
தேசியம்உரியங்கை
மற்ற பெயர்கள்இலத்தீன் மொழியில்: சுபேதே, சுபேதை, சுபோதை
இலக்கிய நய மங்கோலியம்: சுபுகடை, சுபுஅடை
நவீன மங்கோலியம்: சுபீதே (மொங்கோலியம்: Сүбээдэй), இடைக்கால மங்கோலியம்: "சுபேதே", Сүбэдэй (துவ மொழி:Сүбэдэй)
பணிபடைப்பெருந்தலைவர்
பட்டம்ஒர்லாக் பகதூர், மிங்கனின் நோயன் (ஓர் ஆயிரம் வீரர்களின் தளபதி)
உறவினர்கள்செல்மே, சுர்கான், கபன், நெர்பி

சுபுதை (ஆங்கிலம்:Subutai, இலக்கிய நய மங்கோலியம்: சுபுகடை அல்லது சுபுஅடை; துவ மொழி:Сүбэдэй; மங்கோலியம்: Сүбээдэй, சுபேடெய்; சீன மொழி:速不台 1175–1248) ஓர் உரியங்கை இனத்தைச் சேர்ந்த தளபதி ஆவார். இவர் செங்கிஸ் கான் மற்றும் ஒகோடி கானின் முதன்மை இராணுவ போர்த்தலைவரும் ஆவார். இருபதுக்கும் மேற்பட்ட இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் முப்பத்தி இரண்டு நாடுகள் மற்றும் அறுபத்தைந்து போர்களை வெற்றுள்ளார். வரலாற்றில் வேறு எந்த தளபதியையும் விட அதிக இடங்களில் வெற்றிகள் பெற்றுள்ளார்.[1] கற்பனை மற்றும் அதிநவீன உத்திகள் மூலம் ஒன்றுக்கொன்று சுமார் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த சேனைகளை ஒருங்கிணைத்து இயக்கி வெற்றிகளைப் பெற்றுள்ளார். மேலும் ஒன்றுக்கொன்று ஐந்நூறு கிலோ மீட்டர் தொலைவிலிருந்த ஹங்கேரி மற்றும் போலந்து படைகளை இரண்டு நாட்களுக்குள் அழித்ததற்காக நினைவு கூரப்படுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

வரலாற்றாளர்கள் கி.பி. 1175 ஆம் ஆண்டில் சுபுதை பிறந்திருக்கலாம் என நம்புகின்றனர்.[2] தற்போதைய மங்கோலியாவின் ஆனன் ஆற்றின் வடபகுதியில் சற்றே மேற்கில் இவர் பிறந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. இவர் உரியாங்கை எனும் இனத்தை சேர்ந்தவர் ஆவார். இவர்கள் ரெயின்டீர் மக்கள் என அறியப்பட்டனர். இவர்கள் ஒரு குழுவாக வாழ்ந்த சைபீரிய காட்டு மக்களாவர். இவர்கள் தெற்கே வாழ்ந்த மங்கோலியர்கள் போல சமவெளியில் வாழவில்லை. சுபுதை வளர்ந்த இத்தகைய சூழ்நிலையின் காரணமாக அவரால் மற்ற மங்கோலியர்கள் போல குதிரை சவாரி செய்யும் திறமையை இயற்கையாகவே கொண்டிருக்க முடியவில்லை. இதனால் மங்கோலியர்கள் மத்தியில் சுபுதை ஒரு வெளியாளாக இருந்தார்.[3] சுபுதையின் குடும்பமும் தெமுசினின் (எதிர்கால செங்கிஸ்கான்) குடும்பமும் பல தலைமுறைகளாக தொடர்பில் இருந்தன. சுபுதையின் நான்காம் தலைமுறை முன்னோரான நெர்பி என்பவர் மங்கோலிய கான் தும்பினா செச்செனின் கூட்டாளி எனக் கூறப்படுகிறது. தெமுசின் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் பல்ஜுனா ஏரியின் அருகே மோசமான நிலையில் இருந்தபோது சுபுதையின் தந்தை சர்ச்சிகுடை அவர்களுக்கு உணவு வழங்கியதாக கூறப்படுகிறது. சுபுதையின் அண்ணனான செல்மே மங்கோலிய ராணுவத்தில் ஒரு தளபதியாக பணியாற்றினார். அவர் தெமுசினின் நெருங்கிய கூட்டாளியும் ஆவார். ஒரு போரில் எதிரியின் அம்பு தாக்கி பலத்த காயம் அடைந்த தெமுசினை செல்மே காப்பாற்றினார். மங்கோலியர்களின் ரகசிய வரலாற்றில் சுபுதைக்கு சவுர்கான் என்ற மற்றொரு சகோதரர் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.[4]

யுவான் அரசமரபின் வரலாற்றில் சுபுதையின் சரிதையானது விசித்திரமான குறிப்புடன் இந்த தளபதியின் ஆரம்ப வரலாற்றை பற்றி தொடங்குகிறது. ஒருசமயம் சுபுதையின் தந்தை ஒரு செம்மறி ஆட்டுக் கூட்டத்தை ஓட்டிக்கொண்டு தனது பிரபு தைசுவிடம் (செங்கிஸ்கான்) அளிப்பதற்காக சென்ற அந்த நேரத்தில் எதிரே வந்த திருடர்கள் அவரை பிடித்து கொண்டனர். குலுகுன் (சுபுதையின் சகோதரர்) மற்றும் சுபுதை சரியான நேரத்திற்கு வந்து தங்களது வாள்களின் மூலம் அந்த திருடர்களை வெட்டினர். குதிரைகளும் திருடர்களும் வீழ்ந்தனர். திருடர்கள் பின்வாங்கி தப்பினார். அதே நேரத்தில் சுபுதையும் அவரது சகோதரர்களும் தங்களது தந்தைக்கு நேரவிருந்த துயரத்தை போக்கினர். செம்மறி ஆடுகளும் பேரரசர் செங்கிஸ்கான் இருந்த இடத்தை அடைந்தன.[5]

சுபுதையின் குடும்பம் செங்கிஸ்கானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த போதும் சிலர் சுபுதையின் வாழ்வு மங்கோலிய பேரரசானது தகுதியை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு உதாரணம் என்று கருதுகின்றனர். பிறப்பால் சாதாரண நபர் சுபுதை. ஒரு இரும்பு கொல்லர் என்று கருதப்படும் சர்ச்சிகுடையின் மகன்தான் இந்த சுபுதை. 14 வயதை அடைந்த பொழுது சுபுதை தனது இனத்தை விட்டுப்பிரிந்து தெமுசினின் ராணுவத்தில் இணைவதற்காக சென்றார். சுபுதையின் அண்ணனான செல்மே அவரது 17-வது வயதில் தெமுசினின் ராணுவத்தில் இணைந்தார். அவரைப் பின்பற்றி சுபுதையும் இராணுவத்தில் இணைய சென்றார். செல்மே செங்கிஸ்கானின் ரத்த சம்பந்த உறவுகள் தவிர ஏனையவர்கள் அடையக்கூடிய மிக உயர்ந்த பதவியை அடைந்தார்.[6] ஒரு தசாப்தத்திற்குள்ளாகவே சுபுதை ஒரு தளபதியானார். முன் வரிசையில் செல்லும் நான்கு தியுமன்களில் ஒரு தியுமனுக்கு தலைமை தாங்கினார். 1211 இல் வடக்கு சீன படையெடுப்பின்போது சுபுதை வயதில் மூத்த மங்கோலிய தளபதியான செபேயுடன் இணைந்து செயல்பட்டார். அவர்களின் இந்த கூட்டணியானது 1223 செபே இறக்கும் வரை தொடர்ந்தது. 1212 இல் சுபுதை குவான் என்ற நகரத்தை புயல் வேகத்தில் சென்று கைப்பற்றினார். வரலாற்றுப் பதிவுகளின் படி சுபுதை தனியாளாக பெற்ற முதல் பெரிய வெற்றி இதுதான். சுபுதையை செங்கிஸ்கான் தனது நான்கு போர் நாய்களில் ஒருவர் என்று அழைத்துள்ளார். செங்கிஸ்கானின் 8 முக்கியமான தளபதிகளில் இந்த நால்வரும் அடங்குவர் என மங்கோலியர்களின் ரகசிய வரலாறு குறிப்பிடுகிறது: [7]

அவர்கள்தான் தெமுசினின் 4 நாய்கள். அவர்களது நெற்றி பித்தளையாலானது, அவர்களது தாடைகள் கத்தரிக்கோல் போன்றவை, அவர்களது நாக்குகள் குத்தூசி போன்றவை, அவர்களது தலைகள் இரும்பாலானவை, அவர்களது சாட்டை வால்கள் வாள்களை போன்றது...யுத்தம் நடக்கும் நாளில், அவர்கள் எதிரிகளின் சதையை விழுங்கக் கூடியவர்கள். இதோ பார், அவர்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றனர், மகிழ்ச்சியுடன் தங்களது வாயில் உமிழ்நீர் வழிய அவர்கள் வருகின்றனர். அந்த நான்கு நாய்கள் செபே மற்றும் குப்லாய் (குப்லாய் கானிலிருந்து வேறுபட்டவர்) செல்மே மற்றும் சுபோதை.

—மங்கோலியர்களின் ரகசிய வரலாறு

ஆரம்ப காலத்திலிருந்து தெமுசின் சுபுதையை ஒரு தனித்துவம் வாய்ந்த நபராக அடையாளம் கண்டார். சுபுதையின் வளர்ச்சிக்காக அரிதான வாய்ப்புகளை வழங்கினார். செங்கிஸ்கானின் கூடாரத்தின் வாயில் காப்பானாக சுபுதையின் இளம் வயதிலேயே மதிப்பு வாய்ந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டது. மங்கோலிய வரலாறுகள் செங்கிஸ்கானிடம் சுபுதை "ஒருவரை காற்றில் இருந்து காக்கும் தோல் துணிகளைப் போல நான் உங்களை உங்களது எதிரிகளிடமிருந்து காப்பேன்" என்று கூறியதாக பதிவிடுகின்றன.[8] இத்தகைய முக்கியமான இடத்தில் இருந்த காரணத்தினால் சுபுதையால் மங்கோலிய போர்த் தந்திர சந்திப்புகளை கேட்பதற்கும், பிற்காலத்தில் சந்திப்புகளில் இணைந்து கொள்வதற்கும், ஒரு வாய்ப்பாக அமைந்தது. தனது 15 வயது முதல் 25 வயதிற்குள் இந்த சந்திப்புகளில் சுபுதை இணைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[9] செங்கிஸ்கானின் பெரும்பாலான வாழ்நாட்களில் அவரது முக்கியமான தளபதிகளான செபே (1211-12, 1213-14, 1219-23) மற்றும் முகலி (1213-14) ஆகியோருக்கு துணையாக மற்றும் பணிபயில்பவராக சுபுதை செயல்பட்டார். மேலும் அவர் செங்கிஸ்கானிடமும் (1219) பணியாற்றினார். இத்தகைய புத்திசாலித்தனமான மங்கோலிய தலைவர்களிடம் தனித்துவமான அணுகும் வாய்ப்பை பெற்றிருந்தது சுபுதையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சுபுதை தனியாக ஒரு தளபதியாக செயல்பட ஆரம்பித்த வாய்ப்பானது 1197 ஆம் ஆண்டு அவரது 22 ஆம் வயதில் கிடைத்தது. இந்த வரமனது அவருக்கு செங்கிஸ்கானின் மிகவும் வெறுக்கப்பட்ட எதிரிகளான மெர்கிட்டுகளுக்கு எதிரான போரில் கிடைத்தது. அப்போரில் சுபுதையின் பாத்திரமானது முன்வரிசை படையாக செயல்பட்டு மெர்கிட்டு முகாம்களில் திசென் ஆற்றின் கரையில் இருந்த ஒரு முகாமை தோற்கடிப்பது ஆகும். செங்கிஸ்கான் தனக்கு வழங்கிய கூடுதல் உயரடுக்கு துருப்புகளை மறுத்த சுபுதை மங்கோலியர்களிடமிருந்து விலகிய ஒரு வீரனாக மெர்கிட்டு முகாமிற்கு தானே பயணித்தார். மெர்கிட்டு முகாமிற்கு சென்ற சுபுதை மெர்கிட்டுகளிடம் முக்கிய மங்கோலிய இராணுவமானது தொலைதூரத்தில் இருப்பதாகவும் அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் நம்பச் செய்தார். இதன் விளைவாக மெர்கிட்டுகள் தங்களது பாதுகாப்பு மற்றும் ரோந்தை குறைத்தனர். இதன்மூலம் மங்கோலியர்கள் எளிதாக மெர்கிட்டுகளை சுற்றிவளைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இரண்டு மெர்கிட்டு தளபதிகளை பிடித்தனர்.[10] தான் போர் நுணுக்கங்களை கற்கும் காலங்களில் கூட சுபுதை ஒரு வழக்கத்திற்கு மாறான தளபதி என்பதை இதன் மூலம் நாம் அறியலாம். புதுமையான அணுகு முறைகள் மூலம் குறைந்த உயிரிழப்பு ஏற்படும் வண்ணம் பிரச்சனைகளை தீர்க்கக் கூடியவர் என்பதனையும் நாம் அறியலாம். மேலும் சுபுதை நைமர்களுக்கு எதிரான 1204 ஆம் ஆம் ஆண்டு யுத்தத்தின் போது முன்வரிசை படையின் தளபதியாக பணியாற்றினார். இந்த யுத்தத்தில் அடைந்த வெற்றி காரணமாக மங்கோலியர்கள் மங்கோலியா முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

தளபதியாக[தொகு]

போர்க்கலையில் புதுமைகளை புகுத்தியதில் சுபுதை ஒரு முக்கியமான நபர் ஆவார். இவர் பிற்காலத்தில் தலைமை தாங்கிய படையெடுப்புகள் பல்வேறு வகையான சிக்கலான தந்திரங்கள் மற்றும் மூலோபாயங்களை கொண்டிருந்தன. அத்தகைய முயற்சிகள் இரண்டாம் உலகப்போர் வரை மீண்டும் எவராலும் செய்யப்படவில்லை. சீனா, உருசியா மற்றும் ஐரோப்பா ஆகியவற்றின் மீதான படையெடுப்புகளுக்கு சுபுதை தலைமை தாங்கிய பொழுது சுமார் ஒரு லட்சம் வீரர்களை 500 முதல் 1000 கிலோமீட்டர் தொலைவில் மூன்று மற்றும் ஐந்து வெவ்வேறு ராணுவ குழுக்களாக பயன்படுத்தினார். இந்தக் குழுக்கள் நெடுந்தொலைவில் பிரிக்கப்பட்டு இருந்த பொழுதும் அதிகப்படியான ஒத்திசைவுடன் போர் தந்திரங்கள் செயல்படுத்தப்பட்டன. போலந்து மற்றும் ஹங்கேரியின் முதன்மை இராணுவங்களை வெவ்வேறு இடங்களில் இரண்டு நாட்கள் இடைவெளியில் மங்கோலியர்கள் தோற்கடித்தனர். இவரது எதிரிகளை தவறாக வழிநடத்தி அவர்கள் எதிர்பாராத திசையிலிருந்து திடீர் தாக்குதல் நடத்துவதே சுபுதையின் போர் தந்திரங்களின் வடிவமைப்பு ஆகும். 1232 ஆம் ஆண்டில் சின் பேரரசின் மீதான மங்கோலிய படையெடுப்பின்போது அதுவரை வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருந்த சின் படைகள் அவர்களுக்கென மிக சாதகமான நிலப்பரப்பில் இயங்கிக் கொண்டிருந்த போதிலும் அவர்களால் தொடர்ந்து திறம்பட செயல்பட முடியவில்லை. ஏனெனில் சின் படைகளால் எந்த மங்கோலிய ராணுவம் தப்பித்து ஓடுவது போல் நடிக்கிறது என்றும் எந்த மங்கோலிய ராணுவம் உண்மையிலேயே தாக்க வருகிறது என்றும் அவர்கள் கண்டறிவதற்கு முன்னரே முதன்மை இராணுவமானது தனிமைப்படுத்தப்பட்டு பசியால் சோர்வடைந்தது. கடுமையான காவலுக்கு உட்படுத்தப்பட்ட கோட்டைகள் பொதுவாக கடந்து செல்லப்படும் மற்றும் புறக்கணிக்கப்படும். கோட்டைக்கு வெளியில் ஒருங்கிணைக்கப்பட்டு போரிடும் படைகள் அழிக்கப்படும் வரை இந்தப் புறக்கணிப்பு தொடரும். முற்றுகைகளும் முக்கியமான அல்லது எளிதான கோட்டைகளின் மீது நடத்தப்படும். மற்ற சூழ்நிலைகளில் மங்கோலியர்கள் ஒரு முற்றுகை படையை விட்டு விட்டு அப்படியே சென்று விடுவர் அல்லது மதில் சுவர் கொண்ட கோட்டைகளை புறக்கணிப்பர். அதே நேரத்தில் கோட்டையை சுற்றியுள்ள விவசாய பகுதிகள் தீ வைத்து எரிக்கப்படும். எனவே கோட்டைக்குள் இருக்கும் எஞ்சியுள்ள மக்கள் பசியால் வாடுவர்.[11]

நீண்ட காலம் போர்களில் கலந்துகொண்ட அனுபவம் காரணமாக மேற்கிலிருந்து கிழக்கு வரை இருந்த அனைத்து வகையான உயரடுக்கு ராணுவங்களுடன் போர் புரியும் வாய்ப்பு சுபுதைக்கு கிடைத்தது. மேலும் அவர் அந்த அனைத்து போர்களிலும் வெற்றி வாகை சூடினார். மற்ற மாபெரும் புல்வெளி அரசுகளின் குதிரை வில்லாளர்கள், 1230 களில் இருந்த சீனாவின் சின் அரசமரபின் உயரடுக்கு குதிரைப்படை, தங்களது பேரரசை சில காலத்திற்கு முன்னரே கைப்பற்றியிருந்த குவாரசமிய கங்லி துருக்கிய குதிரைப்படை, கனரக கவசங்களை உடைய ஜார்ஜியா, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளின் நைட் மாவீரர்கள் ஆகிய அனைவருமே சுபுதையின் ராணுவத்திற்கு எதிராக வலுவற்று போயினர். புல்வெளி குதிரை வில்லாளர் ராணுவங்கள் தங்களது எதிரிகளை மெதுவாக வலுவிழக்கச் செய்ய பல மணி நேரங்கள் அல்லது பல நாட்களுக்கு கூட கரே யுத்தம் அல்லது மன்சிகெர்ட் யுத்தம் போல் அம்புகளை எய்வர் என்ற பொதுவான பார்வைக்கு மாறாக சுபுதை மிக தீர்க்கமான மற்றும் திரவம் போன்ற முறையில் போரிடுவார். சுபுதையின் ராணுவம் பல வரிசைகளாக நிற்க எதிரி ராணுவத்தை துளைத்து உள்ளே செல்வதற்கு ஒரு வழியை ஏற்படுத்துவதற்காக கடுமையான அம்புத் தாக்குதல் அல்லது பெரிய கவன் வில்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும். 1223 ஆம் ஆண்டின் கல்கா ஆற்று யுத்தத்தின்போது 20,000 வீரர்களைக் கொண்ட மங்கோலிய இராணுவமானது 80,000 வீரர்களைக் கொண்ட உருசிய ராணுவத்தை 9 நாட்களுக்கு தோற்று ஓடுவதுபோல் தவறாக வழிநடத்தி திடீரென்று திரும்பி தாக்குதல் நடத்தியது. உருசிய ராணுவத்தின் இரண்டாவது பிரிவு யுத்த களத்தை அடைந்து போருக்கு ஆயத்தமாவதற்கு முன்பே அவர்களின் முன்வரிசை படையானது தோற்று ஓடியது.[12]

மங்கோலிய தளபதிகளிலேயே செங்கிஸ்கான் மற்றும் சுபுதை தான் முதன்முதலில் முற்றுகைப் போரில் பொறியாளர்களின் பங்களிப்பை உணர்ந்தனர். போர்க்களங்களில் கூட முற்றுகை எந்திரங்களை சுபுதை பயன்படுத்தினார். ஹங்கேரியில் நடந்த யுத்தத்தின் போது ஹங்கேரிய குறுக்கு வில்லாளர்கள் ஒரு இரவில் பாலத்தை கடக்க முயன்ற மங்கோலியர்களை தாக்கினர். அடுத்த நாள் ஆற்றை கடக்க முயன்ற மங்கோலியர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு சேதத்தை விளைவித்தனர். ஹங்கேரிய குறுக்கு வில்லாளர்கள் இருந்த ஆற்றங்கரை மீது கற்களை எறியும் எந்திரங்களைக் கொண்டு சுபுதை தாக்கினார். இதன் மூலமாக மேலும் சேதம் ஏற்படாமல் மங்கோலிய இலகுரக குதிரை படையானது ஆற்றை கடந்தது. எதிரிகளின் தற்காப்பை தடுக்கவும் அதேநேரத்தில் அவர்களை தாக்கவும் முற்றுகை ஆயுதங்கள் போன்ற கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தும் முறையானது முதன்முதலில் நூல்களில் பதியப்பட்டது அப்பொழுதுதான். இத்தகைய போர் முறையானது முதலாம் உலகப்போரின் ஊர்ந்து செல்லும் (creeping barrage) போர் முறையை ஒத்துள்ளது. ஊர்ந்து செல்லும் போர் முறையானது எதிரிகளின் ராணுவ வரிசைகளை அவர்களை தாக்கும் முன்னர் கலைப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.[13] முக்கியமான பாலத்தை கடப்பதற்காக கல்லெறியும் எந்திரங்கள் பாதையை உருவாக்கிக் கொடுத்த போது ஆற்றின் மற்றொருபுறம் ஹங்கேரியர்களை சுற்றிவளைப்பதற்காக ஒரு தற்காலிக பாலத்தை உருவாக்குவதை சுபுதை மேற்பார்வையிட்டார். பாலத்தின் மீதான தாக்குதலில் கவனம் செலுத்திய ஹங்கேரியர்கள் சஜோ ஆறானது அதிக ஆழம் உடையதையும் அதைக் கடப்பது அவ்வளவு எளிதல்ல என்பதனையும் கணித்திருந்தனர். அதே நேரத்தில் மங்கோலியர்கள் ஒரு தற்காலிக பாலத்தை அதுவும் இரவில் உருவாக்குவதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. சுபுதையின் பொறியியல் புத்தி கூர்மையானது யுத்தகளத்தின் முக்கிய பகுதிகளை புகை திரைகளைக் கொண்டு முழுவதுமாக மூடும் முற்றிலும் தனித்துவமான செயல் வரையிலும் நீண்டிருந்தது. கல்கா யுத்தம் மற்றும் லியேக்னிட்சு யுத்தம் ஆகியவற்றின்போது மங்கோலிய ராணுவங்கள், தங்களது எதிரிகளின் ஒரு பகுதியினரை முதன்மை ராணுவத்தில் இருந்து பிரித்து, புகை திரைகளைக் கொண்டு, முதன்மை ராணுவம் பிரிந்துசென்ற ராணுவ பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டு, சுற்றிவளைக்கப்பட்டு, அழிக்கப்படுவதை காண முடியாத வண்ணம் செயல்பட்டன.

தோற்கடிக்கப்பட்ட மக்களில் சிறந்த திறமைசாலிகளை தனது படைகளில், முக்கியமாக பொறியாளர்களை சேர்த்துக்கொள்ளும் சுபுதையின் குணம் பொதுவாக அறியப்பட்டதாகும். ஒற்றர்கள் மூலம் தகவல்களை திரட்டுவது மற்றும் நீண்ட காலத்திற்கு முன்பு படையெடுப்புகளை திட்டமிடுவது ஆகிய திறமைகளில் சுபுதை மேம்பட்டு இருந்தார். உதாரணமாக உருசிய சமஸ்தானங்கள், போலந்துகாரர்கள் மற்றும் ஹங்கேரி நாட்டவர் ஆகியவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்னரே ஒற்றர்களை கொண்டு அந்த நாடுகளைப் பற்றிய விரிவான தகவல்களை சுபுதை திரட்டினார். இவரது ஐரோப்பிய எதிரிகள் மங்கோலிய உளவு வலையமைப்பின் சிக்கலான தகவல் திரட்டும் திறமையை கண்டு திகைத்துப் போனார்கள்.[14] எதிரிகளுக்கு ஏற்றவாறு மூலோபாயங்களை உருவாக்குதல், எதிரிகளின் நிலப்பரப்பு மற்றும் காலநிலை ஆகியவற்றின் தேவையைப் பொறுத்து தனது தந்திரோபாயங்களை சரி செய்து கொள்ளுதல் ஆகியவற்றில் சுபுதை சிறந்தவராக இருந்தார். சுபுதை தனது ராணுவத்தில் இலகுரக குதிரைப் படையின் பயன்பாட்டை வலியுறுத்தினார். எதிரிகளிடம் தப்பித்து ஓடுமாறு ஓடி அவர்களை முதன்மை இராணுவத்திலிருந்து தனியாகப் பிரித்து பின்னர் திடீர் தாக்குதல் நடத்தி அழிக்கும் முறையை பின்பற்றினார். மேலும் முதன்மை ராணுவத்தை தோற்கடிக்கும் போது அதிலிருந்து பிரிந்து ஓடும் பிரிவுகளையும் அழிப்பதன் மூலம் எதிர்காலத்தில் எந்தவித எதிர்ப்பும் வராமல் இருப்பதை உறுதி செய்தார். மங்கோலிய பாரம்பரியப்படி இராணுவம் செல்லும் போது அதனுடன் ராணுவ பொருட்களையும் கொண்டு செல்லும் முறையை சுபுதை தனது படை வீரர்களுக்காக பயன்படுத்தினார். இதன் மூலம் அவர்கள் செல்லும் வழியில் உள்ள நிலங்களில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர். அதே நேரத்தில் நீண்ட தூர பயணம் தேவைப்படும் படையெடுப்புகளின் போது அதிக தொலைவுகளை எளிதாக கடந்தனர். யுத்தத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் எதிரிகளை பலவீனமான நிலைக்கு கொண்டு செல்வது சுபுதை விரும்பிய ஒன்றாகும். மங்கோலிய உயிர்களை இழக்காமல் பார்த்துக்கொள்வதில் சுபுதை மிக அதிக கவனம் செலுத்துவார். அதற்காக விரிவான மூலோபாய தந்திரங்களை செயல்படுத்துவார் அல்லது பொதுமக்களை பயமுறுத்தி அடிபணிய வைப்பதற்காக அடிக்கடி மொத்தமாக மக்களை கொல்ல உத்தரவிடுவார். இவை அனைத்தும் எதிர்காலத்தில் மங்கோலியர்கள் குறைவாக கொல்லப்படுவதற்கு உதவிகரமாக இருக்கும்.

செங்கிஸ்கான் போலவே சுபுதையும் எதிரிகளுக்குள் பிரிவை ஏற்படுத்தி அவர்களை ஆச்சரியப்பட வைப்பதில் வல்லவர் ஆவார். அதிக திறமைவாய்ந்த மங்கோலிய ஒற்றர் அமைப்புகள் கருத்து வேறுபாடுகளை உருவாக்குதல், முக்கியமான உள்ளூர் தலைவர்களுக்கு லஞ்சம் கொடுத்தல் மற்றும் மற்ற எதிரிகள் ஒன்றிணைந்து தங்களது முழு பலத்துடன் போரிடுதலை தடுத்தல் ஆகியவற்றை செயல்படுத்தும். இதனுடன் மங்கோலியர்கள் பற்றிய பயம் பொதுவாகவே இருக்கும். பல நேரங்களில் மங்கோலியர்கள் போர்க்களத்தை நெருங்கும்போது எதிரிகள் பயத்தில் ஓடினர் அல்லது செய்வதறியாது திகைக்கும் அவர்கள் எந்தவித தாக்குதலிலும் இறங்க மாட்டார்கள். மெர்கிட்டுகளை தாக்கும்போது சுபுதை முதன்மை மங்கோலிய ராணுவம் தொலை தூரத்தில் இருப்பதாக அவர்களை நம்ப வைத்தார். அதே நேரத்தில் திடீரென அவர்களை சுற்றி வளைத்து மங்கோலியர்கள் தாக்குதல் நடத்தினர். குவாரசமிய ஆட்சியாளர் ஷாவுக்கும் அவரது தாயின் ராணுவத்திற்கும் இடையில் மங்கோலியர்கள் பிரச்சனையை உருவாக்கினர். அதே நேரத்தில் சூழ்நிலையை சரி செய்யமுடியாத வண்ணம் பார்த்துக்கொண்டனர். ஜார்ஜியாவில் மக்களை கொன்றதன் மூலம் அரசர் நான்காம் ஜார்ஜின் ராணுவம் வெட்ட வெளிக்கு கொண்டு வரப்பட்டது. அதே நேரத்தில் காக்கேசிய மலைகளுக்கு வடக்கிலிருந்த நாடோடி குமன்கள், உள்ளூர் ஆலன்கள் மற்றும் சிர்காசியர்கள் ஆகியோர் அரசுடன் சேர்ந்து விடாதபடி ராஜதந்திர நடவடிக்கைகளை மங்கோலியர்கள் மேற்கொண்டனர்.

நடு ஆசிய படையெடுப்புகள் (1217-1220)[தொகு]

1217 இல் செங்கிஸ்கான் சுபுதையை வெறுக்கப்பட்ட மெர்கிட்டுகள் மற்றும் தற்கால நடு கஜகஸ்தானில் இருந்த குமன் கிப்சாக் கூட்டமைப்பினர் போன்ற அவர்களது கூட்டாளிகளை வேட்டையாடுவதற்காக அனுப்பினார். சுபுதை அவர்களை 1217 இல் சு ஆற்றின் கரையில் தோற்கடித்த பின்னர் மீண்டும் 1219 இல் காட்டு கிப்சாக் பகுதியில் தோற்கடித்தார். 1219 ஆம் ஆண்டின் செம் ஆற்று யுத்தத்திற்கு முன்னர் தனது முன்வரிசை படையினரை குழந்தைகள் வைத்திருக்கும் விளையாட்டு பொம்மைகளை கொண்டு செல்லுமாறும் பின்னர் அவற்றை வழிநெடுக விட்டுவிட்டு செல்லுமாறும் சுபுதை அறிவுறுத்தினார். இச்செயலுக்கான காரணமானது எதிரிகளிடமிருந்து தப்பித்து ஓடும் குடும்பங்களின் ஒரு குழு செல்வது போன்ற தோற்றத்தை அவர் ஏற்படுத்த விரும்பினார். இவ்வாறு எதிரிகளை தவறாக கணிக்க வைத்த சுபுதை தனது ராணுவம் மூலம் அனைத்து மெர்கிட்டு அல்லது கிப்சாக் தலைவர்களை அவர்கள் யூகிக்க முடியாத வண்ணம் சுற்றிவளைத்து கைது செய்தார். [15]

இந்த நிகழ்வு நடந்து சிறிது நாட்களில் இர்கிசு ஆற்றங்கரையில் குவாரசமியாவின் இரண்டாம் முகமது சுபுதையை தாக்கினார். இந்த தாக்குதலில் முகமது சுபுதையின் படை வீரர்களின் எண்ணிக்கையை போல் மூன்று மடங்கு படைவீரர்களை கொண்டிருந்தார். சுல்தானின் உயரடுக்கு படைகள் அப்போதைய நடு ஆசியாவின் பெரும் பகுதியை கைப்பற்றி இருந்தனர். எனினும் ஆக்ரோசமாக சண்டையிட்ட சுபுதை பின்னர் இரவுநேரத்தில் பின்வாங்கினார். பாரசீக வரலாற்று நூல்களின் படி, இந்த யுத்தத்திற்கு பிறகு, மங்கோலியர்களை அறிவிக்கப்படாத தாக்குதல்களில் தோற்கடிக்கும் முகமதுவின் திறமை மீது அவருக்கு இருந்த தன்னம்பிக்கை குறைய ஆரம்பித்தது. ஏனெனில் அந்நேரத்தில் சுபுதை வெறும் 20,000 வீரர்களைக் கொண்ட ஒரு படைக்கு மட்டுமே தலைமை தாங்கினார். மேலும் அவர் சுல்தானுடன் போரிட விரும்பவில்லை. உண்மையில் மங்கோலிய ராணுவமானது சுல்தானின் ராணுவத்தின் இடது பக்கத்தை அழித்து, நடுவரிசை படைகளின் வரிசையை குலைத்து அவரை கைது செய்யும் நிலைக்கு வந்தது. ஆனால் சுல்தானின் மகனிடம் இருந்து வந்த வலுவூட்டல் படைகளால் யுத்தமானது சுல்தானுக்கு ஆதரவாக திரும்பியது.[16] இந்த யுத்தத்தின் காரணமாக காரா கிதை பேரரசில் ஏற்பட்ட கிளர்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் முகமதுவின் முயற்சி பலனளிக்கவில்லை. இதற்கு முந்தைய போர்களில் அவர் இத்தகைய முயற்சிகளை பின்பற்றி இருந்தார். காரா கிதையானது அதேநேரத்தில் மற்றொரு மங்கோலிய தளபதியான செபேயால் கைப்பற்றப்பட்டது.

மங்கோலிய தூதுவர்களை கொன்றதற்கு தண்டனை கொடுக்க 1219 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் செங்கிஸ்கான் மங்கோலிய ராணுவத்திற்கு தலைமைதாங்கி மேற்கு நோக்கி குவாரசாமியா மீது படையெடுத்துச் சென்றார். 1,00,000 வீரர்களை கொண்ட மங்கோலிய இராணுவமானது எண்ணிக்கை அளவில் குவாரசமிய ராணுவத்தை விட மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால் எதிரிகளை தவறாக வழிநடத்துதல் மற்றும் திடீர் தாக்குதல்கள் ஆகியவற்றின் மூலம் தனித்தனியாக வெவ்வேறு நகரங்களில் நிறுத்தப்பட்டிருந்த குவாரசமிய இராணுவங்களை அவை பதில் கொடுக்கும் முன்னரே தோற்கடிக்கப்பட்டன. சுபுதை அப்போரில் மங்கோலிய ராணுவத்தில் தற்போதைய முப்படை தளபதி என்ற பட்டத்துக்கு இணையான சேவையை ஆற்றினார். புகாரா நகரத்திற்கு பின் பகுதியில் இருந்த உயிர்பலி வாங்கக்கூடிய கைசில்கம் பாலைவனத்தின் வழியாக கானின் இராணுவத்துடன் பயணித்தது எதிரி தடுப்பு வலையமைப்புக்கு பின்பகுதியில் தோன்றினார்.[17] குவாரசமியாவின் ராணுவ தலைநகரமாக இருந்த சமர்கந்தை சீக்கிரமாக கைப்பற்றிய செங்கிஸ்கான் சுபுதை மற்றும் செபே தலைமையில் 30,000 வீரர்களை கொண்ட படையை ஷாவை வேட்டையாடுவதற்காக அனுப்பினார். பிற குவாரசமிய ராணுவங்களை ஒன்றிணைக்க அவருக்கு வாய்ப்பு வழங்காமல் இருக்க முயற்சித்தார். ஷா முகமது தன்னை காப்பாற்றிக்கொள்ள நடு பாரசீகத்திற்கு தப்பி ஓடினார். மங்கோலியர்களின் கைதில் இருந்து அவர் தப்பித்த போதும் அவரால் தனக்கு ஆதரவாக படைகளை திரட்ட முடியவில்லை. இதன் காரணமாக குவாரசமிய படையில் இருந்த பல்லாயிரக்கணக்கான வீரர்கள் பிரிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக எளிதாக செங்கிஸ்கானின் முதன்மை ராணுவத்தால் அழிக்கப்பட்டனர்.[18] நீண்ட தூரம் தப்பித்து ஓடியதன் காரணமாக சோர்வடைந்த முகமது உடல்நலம் பாதிக்கப்பட்டார். 1221 ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் காசுபியன் கடலில் உள்ள ஒரு மீனவ கிராமத்தில் இறந்தார். தன்னைத் தானே 'இரண்டாவது அலெக்சாந்தர்' என்று அழைத்துக் கொண்ட ஒரு மனிதனுக்கு இழிவான இறுதிக்கட்டம் நடைபெற்றது.

மகா குதிரைப்படை தாக்குதல் (1220-1223)[தொகு]

சுபுதை மற்றும் செபே ஆகியோர் 1219 ஆம் ஆண்டில் குளிர்காலத்தின் ஒரு பகுதியை அசர்பைஜான் மற்றும் ஈரானில் கழித்தனர். அங்கு அவர்கள் சிறு தாக்குதல்கள் நடத்துதல் மற்றும் சூறையாடுதல் ஆகியவற்றுடன் சேர்த்து மேற்கு பகுதியில் இருந்த குவாரசமிய படைகள் கிழக்குப் பகுதியில் இருந்த எஞ்சிய பேரரசுக்கு உதவி புரியாமல் பார்த்துக் கொண்டனர். இங்குதான் சுபுதைக்கு வரலாற்றிலேயே மிகத் துணிச்சலான வேவுபார்க்கும் யோசனை தோன்றியது. புகழ்பெற்ற வரலாற்றாளர் எட்வர்ட் கிப்பனின் கூற்றுப்படி இத்தகைய வேவுபார்க்கும் நடவடிக்கையானது "எப்பொழுதும் நடைபெறவில்லை மற்றும் மீண்டும் யாரும் அதை முயற்சித்தும் பார்க்கவில்லை". 20,000 மங்கோலிய படைவீரர்கள் காக்கேசிய மலைகள் வழியாக காசுபியன் கடலை சுற்றி காட்டு கிப்சாக்குகள் மற்றும் குமன்களின் பகுதியின் பிற்பகுதியில் போய் சேர்ந்தனர். வெளிப்படையாக சுபுதை ஒரு வாரத்தில் 1,900 கிலோ மீட்டர் தூரத்தை இந்த வேவுபார்க்கும் நடவடிக்கையின்போது தனது படைகளுடன் கடந்தார்.[19] தனது குதிரைகள் ஓட குதிரை சேனத்திலேயே படுத்து உறங்கிக் கொண்டு அவரும் மற்றும் மங்கோலிய வீரர்களும் இதனை செய்து முடித்தனர்.[20]

பாரசீகத்தில் இருந்த எதிர்ப்பை முறியடித்து, அசர்பைஜானை அடிபணிய வைத்த மங்கோலியர்கள் கிறித்தவ ராஜ்ஜியமான ஜார்ஜியா மீது படையெடுத்தனர். ஜார்ஜியாவின் அரசர் யுத்தம் புரிய மனமின்றி இருந்தபோதும், கிராமப்புறங்களை சூறையாடுதல் மற்றும் மக்களைக் கொல்லுதல் ஆகிய செயல்களின் மூலம் சுபுதை மற்றும் செபே அரசரை போர் புரியும் நிலைக்கு தள்ளினர். சுபுதை மற்றும் செபே பிறகு பல்லாயிரக்கணக்கான நைட் வீரர்களைக் கொண்ட சக்திவாய்ந்த ஜார்ஜிய ராணுவத்தை காக்கேசிய மலைகளின் யுத்தத்தின்போது தோற்கடித்தனர். இந்த யுத்தத்தில் நைட் வீரர்களை அவர்களது காலாட்படையினரிடமிருந்து தோற்று ஓடுவதுபோல் ஓடி மங்கோலியர்கள் பிரித்தனர். பிறகு நைட் வீரர்களை சுற்றிவளைத்தனர். நைட் வீரர்களை அழித்த பிறகு ஜார்ஜியா இராணுவத்தை மங்கோலியர்கள் சுற்றிவளைத்து அழித்தனர். ஜார்ஜியர்களின் கூற்றுப்படி சுபுதை தான் மங்கோலிய ராணுவத்திற்கு தலைமை தாங்கினார். மங்கோலியர்கள் ஜார்ஜிய கொடிகளை ஏந்தி ஜார்ஜியா ராணுவத்திற்கு உதவ வந்தவர்கள் போல் நடித்தனர். மேலும் ஒற்றர்கள் மூலம் உண்மையில் மங்கோலியர்கள் கிறித்தவ மதத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஜார்ஜியர்களுக்கு உதவ வந்திருப்பதாகவும் தவறான தகவல்களை பரப்பினர். இதன்மூலம் ஜார்ஜியர்கள் ஏமாற்றப்பட்டனர்.[21] உண்மையில் இந்த மங்கோலிய வேவுபார்க்கும் படையானது எதிர்பாராதவிதமாக சிலுவைப் போர்களின் வரலாற்றையும் மாற்றியது. ஏனெனில் ஐந்தாவது சிலுவைப் போருக்கு ராணுவத்தை அனுப்ப ஜார்ஜியா முடிவு செய்திருந்தது. ஆனால் மங்கோலியர்கள் அந்த ராணுவத்தை அழித்துவிட்டனர். பதிலாக ஜார்ஜ் மன்னரின் சகோதரி ருசுதான் போப் ஆண்டவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் தங்களது முழு ராணுவமும் ஒருங்கிணைப்பின்றி இருப்பதனால் தங்களால் சிலுவைப் போருக்கு இராணுவத்தை அனுப்ப முடியாது என்று விளக்கம் அளித்திருந்தார்.[22] ஜார்ஜியா இத்தகைய அழிவுகரமான தோல்விகளுக்கு பிறகு பிறகு பாதுகாப்பற்று இருந்தபோதும் மங்கோலிய நோக்கமானது வேவு பார்ப்பது தானே தவிர ஜார்ஜியாவில் கைப்பற்றுவது அல்ல.

ஜார்ஜியாவை சூறையாடிய பிறகு மங்கோலியர்கள் குளிர்காலத்தில் தெர்பென் கணவாயை சுற்றிச் செல்ல காக்கேசிய மலைகள் வழியாக சென்றனர். இந்த முறை மங்கோலியர்களின் வழிகாட்டிகளாக இருந்தவர்கள் அவர்களை கடினமான பாதையில் செலுத்தி ஏமாற்றினர். மலைகளை கடந்து சோர்வடைந்த மங்கோலியர்கள் ஒரு பெரிய புல்வெளி கூட்டணி ராணுவத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் மூலம் சுபுதை ஆலன்கள், சிர்காசியர்கள் மற்றும் டான் கிப்சாக்குகள்/குமன்கள் ஆகியோரை தனிமைப்படுத்தி தோற்கடித்தார். மங்கோலியர்கள் தெற்கு உருசிய புல்வெளிகளை சூறையாடிய பிறகு, உருசிய இளவரசர்கள் பின்வாங்கி ஓடிய குமன் கூட்டமைப்பினருடன் இணைந்து ஒரு 80,000 படை வீரர்களைக் கொண்ட ராணுவத்தை மங்கோலியர்களின் தோற்கடிப்பதற்காக அமைத்தனர். மிகச்சிறிய படையையே கொண்டிருந்த சுபுதை இந்த முறை மீண்டும் தோற்று ஓடுவதுபோல் நடித்தார். இதன் காரணமாக சுபுதையின் கடைசி வரிசையில் இருந்த 1,000 பேர் உயிரிழக்க வேண்டியிருந்தது. 80,000 வீரர்களில் ஒரு பிரிவினர் இவர்களை துரத்திக்கொண்டு வந்ததன் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டனர். 9 நாட்களுக்குப் பிறகு செபே மற்றும் சுபுதை திடீரென திரும்பி ருஸ் மற்றும் குமன் ஆகியவர்களின் இணைந்த ராணுவத்தை கால்கா ஆற்று யுத்தத்தின்போது 31 மே 1223 ஆம் ஆண்டு தோற்கடித்தனர். தங்களது பாதையில் இருந்த அனைத்து ராணுவங்களையும் தோற்கடித்து தங்களது சொந்த ஒற்றர் கூட்டமைப்பை ஏற்படுத்திய மங்கோலியர்கள் மூலோபாய கூட்டமைப்பாக அங்கிருந்த வெனிஸ் நகர வணிகர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டனர். இதற்கான பலனை மங்கோலியர்கள் ஒரு தசாப்தத்திற்கு பிறகு பெற்றுக்கொண்டனர். அந்த வணிகர்களுக்கு தனித்துவமான வணிக உரிமையை கொடுத்ததன் மூலம் வெனிஸ் நகர வணிகர்கள் ஐரோப்பாவில் மங்கோலியர்களுக்கு வேவு பார்ப்பவர்களாக செயல்படுவர். வோல்கா பல்கேரியர்கள் சுபுதையின் ராணுவத்தை தோற்கடித்ததாக கூறிக்கொண்டனர். ஆனால் வரலாற்றாளர்கள் இக்கூற்றை மறுக்கின்றனர். சிறிது காலத்திற்குப் பிறகு தெற்கு ஆசியாவில் இருந்த கங்லி துருக்கியர்களை மங்கோலியர்கள் தோற்கடித்தனர்.[23]

சுபுதை 1229 ஆம் ஆண்டு நடு ஆசியாவிற்கு அனுப்பப்பட்டார். தான் சீனாவிற்கு மீண்டும் அழைக்கப்படும் முன்னர் குமன்கள்/கிப்சாக்குகள் கூட்டமைப்பினரை மீண்டும் தோற்கடித்தார்.

உருசியாவை குளிர் காலத்தில் கைப்பற்றுதல் (1236–1240)[தொகு]

ஓகோடி தனது ராணுவத்தின் பெரும் பகுதிகளை மேற்குப் பகுதிகளுக்கு அனுப்பி கடைசியாக காட்டு கிப்சாக்குகள் மற்றும் பல்கர்களை ஒடுக்க முடிவெடுத்தார். இந்த நடவடிக்கைகளை நெறிமுறை படுத்த இளவரசர் படுவின் ஒட்டுமொத்த தலைமையில் சுபுதை நியமிக்கப்பட்டார். இந்தப் படையெடுப்பானது எப்பொழுது நடைபெறும் சாதாரண படையெடுப்புகளில் இருந்து வேறுபட்டு இருந்தது. ஒகோடி நான்கு குடும்பங்களின் வாரிசுகள் உட்பட பெரும்பாலான அடுத்த தலைமுறை மங்கோலிய இளவரசர்களை இந்த படையெடுப்பிற்கு அனுப்பினார். சுபுதை இறக்கும் முன்னர் அவரால் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பதும் இதற்கு முக்கியமான காரணமாக இருந்திருக்கலாம்.[24] 1232 ஆம் ஆண்டு வோல்கா பல்கர்கள் படுவை தோற்கடித்து இருந்தனர். அவர்களை ஒடுக்குவதற்காக சுபுதை மற்றொரு ராட்சத சுற்றிவளைக்கும் படையெடுப்பை தொடங்கினார். வோல்கா ஆற்றை அதன் மேற்குப் பகுதியிலிருந்து வில் போன்ற வடிவில் மங்கோலியர்கள் சுற்றிவளைத்தனர். எனினும் இந்த படையானது பல்கர்களை திசைதிருப்ப அனுப்பப்பட்டதாகும். உரல் மலைகளைத் தாண்டி பல்கர்களை கிழக்கு திசையில் இருந்து அதிரடியாக தாக்க இரண்டாவது ராணுவத்தை சுபுதை அனுப்பினார்.[25] பல்கர் ராணுவங்களை நொறுக்கிய சுபுதை, காஸ்பியன் கடலின் வடக்குப்பகுதியில் கொரில்லா தலைவனான பாக்மனை தோற்கடித்தார். ஒரு தீவில் வாழ்ந்து வந்த பாக்மன் மங்கோலியர்களை அடிக்கடி இகழ்ந்து வந்தார். எனினும் மங்கோலியர்கள் இருநூறு படகுகளை கொண்ட ஒரு சிறிய கப்பல் படையை உருவாக்கினார். ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் பாக்மனை கொண்டுவந்தனர். கடைசியாக 'வலையை' மூடினர்.[26]

1222-23 ஆம் ஆண்டுகளில் பெரும்பான்மையான ருஸ் மாநிலங்கள் சுபுதை மற்றும் செபேக்கு எதிராக அணி திரண்டன. ஆனால் இந்த முறை மங்கோலியர்கள் மிக வேகமான தாக்குதலை தொடுத்தனர். உருசியர்களால் எந்த ஒரு தாக்குதலை தொடுக்கவோ, அல்லது அவர்களுக்குள் இருந்த வேற்றுமை அல்லது கவனம் சிதறி இருந்த காரணத்தால் ஒன்றிணையவோ முடியவில்லை. மேலும் உருசியர்களுக்குள் எந்த ஒரு கூட்டணியும் ஏற்படாத வண்ணம் தடுக்க மங்கோலியர்கள் வெவ்வேறு சமஸ்தானங்களுடன் போலி உடன்படிக்கைகளை செய்துகொண்டனர். எனவே குளிர்காலத்தில் மேற்கு உருசியாவின் பரந்த நிலப்பரப்பை ஊக்கமுடன் ஆக்கிரமித்த மங்கோலியர்கள், தங்களது படைகளுடன் தனித்தனியாக இருந்த சமஸ்தானங்களின் மீது கவனம் செலுத்தி சுதந்திரத்துடன் செயல்பட்டனர். 1237 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுபுதை ரியாசான் மற்றும் விளாடிமிர்-சுஸ்டால் ஆகிய சமஸ்தானங்களை தாக்கினர். குளிர்காலத்தில் ஆறுகள் உறைந்து இருக்கும்போது நடைபெறும் பொதுவான மங்கோலிய தாக்குதல் போலவே இந்த முறையும் மூன்று குழுக்களாகப் பிரிந்து செயல்பட்டனர். ருஸ் படைகள் மூன்று வெவ்வேறு இடங்களில் தோற்கடிக்கப்பட்டன. அவர்களது நகரங்கள் குறைந்த காலத்திலேயே கைப்பற்றப்பட்டன. மங்கோலியர்கள் 1238 ஆம் ஆண்டின் கோடை காலத்தை டான் ஆற்றின் பகுதிகளில் ஓய்வெடுத்துக் கழித்தனர். கருங்கடலை சுற்றியிருந்த சமவெளிகளில் வாழ்ந்து வந்த பல்வேறு பழங்குடி இனங்களை அடிபணிய வைக்க படைகள் அனுப்பப்பட்டன. 1239 ஆம் ஆண்டு ருஸ் மாநிலமான செர்னிகோவ் தோற்கடிக்கப்பட்டு அவர்களது நகரங்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் மங்கோலியர்களுக்கு நோவ்கோரோட் சமஸ்தானத்தை கைப்பற்ற வேண்டிய தேவை இல்லாமல் போனது. ஏனெனில் அவர்கள் புத்திசாலித்தனமாக மங்கோலியர்களிடம் சரணடைந்து எதிர்காலத்தில் கப்பம் கட்ட ஒப்புக்கொண்டனர். தற்சமயத்துக்கு ஒரு பெரும் லஞ்சத்தை கொடுத்து காத்துக் கொண்டனர்.[27]

இந்த படையெடுப்பில் முக்கியமான யுத்தமானது 1238 ஆம் ஆண்டில் நடைபெற்ற சித் ஆற்று யுத்தமாகும். ருஸ் தலைவர்களில் மிக முக்கியமானவரான விளாடிமிரின் பெரிய டியூக் யூரி விளாடிமிரை விட்டு வெளியேறி ஒரு ராணுவத்தை திரட்டி மங்கோலியர்கள் நகரத்தை அடையும் முன்னர் அவர்களை தோற்கடிக்க கிளம்பினார். எனினும் அவரது ராணுவத்தை தவிர்த்த மங்கோலியர்கள் என்ன நடந்தது என்று கூட யூரி அறிவதற்கு முன்னரே விளாடிமிரை கைப்பற்றினர். மங்கோலிய ஒற்றர்களை தாண்டி என்ன நடப்பது என்று அறிவதற்காக யூரி ஒரு படையை அனுப்பிய போது அவரது தளபதி தன் ராணுவம் சுற்றிவளைக்கப்பட்டதைப் பற்றிய செய்தியை பேரச்சத்துடன் தெரிவித்தார். எதிர்பார்த்தபடியே யூரி மற்றும் அவரது ராணுவமும் எளிதாக தோற்கடிக்கப்பட்டது.[28] மங்கோலியர்கள் கலிச்-விளாடிமிர் சமஸ்தானத்துடன் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டனர். ஆனால் 1240 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மங்கோலியர்கள் திடீரென அச்சமஸ்தானத்தை தாக்கிய போது அதன் இளவரசர் அதிர்ச்சி அடைந்தார். மற்ற பிற நகரங்களும் சீக்கிரமே கைப்பற்றப்பட்டன.[சான்று தேவை]

நடு ஐரோப்பிய படையெடுப்பு (1241-1242)[தொகு]

ஐரோப்பா மீது நடைபெற்ற தாக்குதலானது சுபுதையால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இங்கு பெற்ற வெற்றிகள் காரணமாக சுபுதை காலத்தால் அழியாத புகழ் பெற்றார். பல்வேறு உருசிய சமஸ்தானங்களை அழித்த சுபுதை ஐரோப்பாவின் இதய பகுதியை தாக்குவதற்காக திட்டமிட்டார். தனது ஒற்றர்களை போலந்து, ஹங்கேரி மற்றும் ஆஸ்திரிய வரைகூட அனுப்பினார். ஐரோப்பிய ராஜ்யங்களை பற்றி தெளிவான ஒரு புரிதலுக்கு வந்த சுபுதை அவற்றின் மீது தாக்குதல் நடத்த சிறந்த முறையில் தயாரானார். இந்தப் படையெடுப்பானது படு கான், மற்றும் செங்கிஸ்கானின் வழித்தோன்றல்களான இரண்டு பிற இளவரசர்களால் பெயரளவில் தலைமை தாங்கப்பட்டது. சூச்சியின் மகனான படு கான் ஒட்டுமொத்த படையெடுப்புக்கு தலைமை தாங்கினார். யுத்த களத்தில் தலைமை தாங்கி சுபுதை செயல்பட்டார். கீவ உருசியா மீது எடுக்கப்பட்ட வடக்கு மற்றும் தெற்கு படையெடுப்புகளில் இதே முறை பின்பற்றப்பட்டது. ஹங்கேரி ராஜ்ஜியத்திற்கு எதிராக அணிவகுத்த படையில் நடு பிரிவை சுபுதையே தலைமை ஏற்று அணி வகுத்தார். தனது உதவித் தளபதிகளுக்கும் இவர் விரிவான வழிமுறைகளை கொடுத்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

மங்கோலிய போர் முறைகள் மேற்கு உலகத்தில் ஒரு மர்மமாகவே இருந்தபோதிலும் ஹங்கேரியின் அரசரான நான்காம் பெலா உருசியா மீதான மங்கோலிய தாக்குதல்களை பற்றி நன்கு அறிந்திருந்தார். அதற்கு ஏற்றவாறு தயாராக இருந்தார். அந்த நேரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் உறவுகள் நல்ல முறையில் இல்லாதபோதிலும் அவர் இவ்வாறு தயாராக இருந்தார்.[29] புனித உரோமைப் பேரரசர் அல்லது போப் ஆண்டவரிடமிருந்து எந்தவித உதவியும் பெற முடியாத போதும் போலந்தில் இருந்த தனது உறவினர்களிடமிருந்து ஆதரவைப் பெற்றிருந்தார். ஹங்கேரி நாட்டவர் குறைந்த கவனத்துடன் இருக்கும் குளிர்காலத்தில் அவர்கள் எதிர்பாராத வண்ணம் மற்ற முறைகளைப் போலவே இந்தமுறையும் சுபுதை படையெடுத்தார். மங்கோலியர்கள் ஐந்துமுனை தாக்குதலை ஐரோப்பா மீது தொடுத்தனர். கய்டு மற்றும் ஓர்டா கான் வடக்கு போலந்தை தாக்கினர். பைலட் தெற்கு போலந்தை தாக்கினார். அதே நேரத்தில் சிபன் வடகிழக்கு ஹங்கேரியில் கடினமான நிலப்பரப்பின் வழியே தாக்குதல் தொடுத்தார். சுபுதை மற்றும் படு நடு ஹங்கேரியை தாக்கினர். குயுக் திரான்சில்வேனியா வழியாக தெற்கு நோக்கி அணி வகுத்தார். இதன் மூலமாக மங்கோலியர்கள் தாக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியினரும் தாங்கள்தான் மங்கோலியர்களின் குறி என்று நம்பவைக்கப்பட்டனர். உண்மையில் ஐரோப்பியர்கள் ஒன்றிணைந்து போரிடுவதை தவிர்ப்பதற்காக இவ்வாறான தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதன்மூலம் தனித்தனியாக ஐரோப்பிய படைகளை மங்கோலியர்கள் தோற்கடித்தனர். சில வெற்றிகளுக்குப் பிறகு பைதர் மற்றும் கதன் தங்களது வடக்கு படையை ஒன்றிணைத்து போலந்தின் முதன்மை ராணுவத்தை லெக்னிகா யுத்தத்தில் தோற்கடித்தனர். போலந்து இராணுவமானது பொகேமிய ராணுவத்துடன் இணைவதற்காக அணிவகுத்து சென்று கொண்டிருந்தது. போலந்து ராணுவம் பொகேமிய ராணுவத்துடன் இணைவதற்கு சில நாட்கள் தொலைவே இருந்தது. அதேநேரத்தில் குயுக்கின் ராணுவம் திரான்சில்வேனியாவில் வெற்றி பெற்றது. லெக்னிகா யுத்தத்திற்கு ஒரு நாள் கழித்து சுபுதை ஹங்கேரிய சமவெளியில் ஹங்கேரிய ராணுவத்திற்காக காத்திருந்தார். ஹங்கேரி அரசர் நான்காம் பெலா கர்பாத்தியன் மலைகளின் வழியான கணவாய்களை மரங்களை வெட்டி பாதையின் குறுக்கே போட்டிருந்தார். குழிகள், பொறிகள் மற்றும் பிற இயற்கை தடைகள் ஆகியவை வழிநெடுக இருந்தன. மேலும் கிழக்கு ஹங்கேரியின் பல இடங்களில் சாலைகள் சரி செய்யப்படாமல் அல்லது சாலைகளே இல்லாமலும் இருந்தன. நிலப்பரப்பு முழுவதும் பல அடிக்கு பனி பொழிந்து இருந்தது. இவ்வளவு தடைகள் இருந்தபோதிலும் சுபுதையின் படைகள் அதிசயிக்கத்தக்க வகையில் ஒரு நாளைக்கு 96 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தன. மங்கோலியர்கள் பாதைகளை சரிசெய்வதற்காக தங்களிடம் ஒரு குழுவை வைத்திருந்தனர். அவர்கள் காடுகளை அழித்து படைகள் செல்ல வழி அமைத்தனர். பெலா ஏற்படுத்திய தடைகளை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.[30]

சுபுதையின் படையெடுப்பின் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பானது அவர் தங்களது கூட்டாளிகளால் ஆதரிக்கப்படாத அத்தனை ஐரோப்பிய படைகளையும் விளக்கமாக தோற்கடித்தார் என்பது ஆகும். தனது ராணுவத்தை பல்வேறு குழுக்களாகப் பிரித்து எதிரி மீது பலமுனை தாக்குதல் நடத்தினார். இம்முறை போலந்துகாரர்கள் மற்றும் ஹங்கேரியர்கள் ஒன்றிணைந்து தங்களது நகரங்கள் மற்றும் கோட்டைகளை பாதுகாத்துக் கொள்ளவோ மற்றும் ஒரு பெரிய ராணுவம் மூலம் மங்கோலியர்களை எதிர்க்கவோ முடியாதவாறு தடுத்தது. இந்தப் படையெடுப்பில் போலந்தின் லியக்னிட்ஸ் மற்றும் ஹங்கேரியின் மொகி ஆகிய இடங்களில் நடைபெற்ற பெரிய யுத்தங்களை மங்கோலியர்கள் வென்று இருந்தபோதிலும் அவர்கள் ஏராளமான வெற்றிகளை சிறிய தனித்துவிடப்பட்ட ராணுவ பிரிவுகளுக்கு எதிராகவும் பெற்றனர். ஐரோப்பிய போர் முறை அந்த நேரத்தில் இருந்ததை போல் இல்லாமல் மங்கோலியர்கள் தங்கள் யுத்தத்தை வெல்லும் பொழுது இரக்கமின்றி எதிரியை துரத்தி ஒரு பொறிக்குள் வரவழைத்து ஒரு வீரன் கூட தப்பாத வண்ணம் எதிரி ராணுவங்களை அழித்தனர்.

மங்கோலியர்கள் சன்டோமியர்சு, துர்சுகோ, சிமியல்னிக் (18 மார்ச் 1241), தர்செக், குரோன்சுடாட் (31 மார்ச் 1241), மற்றும் ஒபோல் ஆகிய இடங்களில் போலந்து ராணுவங்களை தோற்கடித்தனர். மிக முக்கியமாக போலந்தில் இருந்த மங்கோலிய ராணுவங்கள் ஒன்றிணைந்து 9 ஏப்ரல் 1241 ஆம் ஆண்டு டியூக் இரண்டாம் ஹென்றியின் ராணுவத்தை லியக்னிட்ஸ் என்ற இடத்தில் தோற்கடித்தன. போலந்து ராணுவத்திற்கு ஆதரவாக வந்து கொண்டிருந்த அவரது உறவினர் பொகேமியாவின் அரசர் முதலாம் வென்செலஸ் 50,000 படைவீரர்களுடன் ஒரு நாள் பயண தொலைவிலேயே இருந்தார். வென்செலஸ் மற்றும் ஹென்றி ஆகியோர்களின் ராணுவங்கள் இணைந்து ஒரு பெரிய ராணுவமானது உருவாக்கப்படும் முன்னரே ஹென்றியின் இராணுவம் அழிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த வென்செலஸ் பயத்தில் பின்வாங்கி ஒரு கோட்டைக்கு சென்று பதுங்கினார். அதற்குப் பிறகு மங்கோலியர்களுக்கு எதிரான இந்த முயற்சியில் அவர் எந்தவித பங்களிப்பையும் அளிக்கவில்லை.[31] ஹங்கேரியில் மங்கோலியர்கள் 12 மார்ச் 1241 ஆம் ஆண்டு திசா பள்ளத்தாக்கில் கவுன்ட் பலடினை தோற்கடித்தனர். அவர்கள் ரோட்னா என்ற இடத்தில் திரான்சில்வேனியர்களையும், மேலும் இரண்டு ராணுவங்களையும் ஒராடியா என்ற இடத்திலிருந்த ஒரு கோட்டையையும் வீழ்த்தினர். மோல்டாவியா மற்றும் வாலச்சியா வரை இருந்த பகுதிகளை சேதப்படுத்தினர். கலோக்சா என்ற இடத்தில் உக்ரின் சாக் என்ற ஆர்ச் பிஷப்பின் ராணுவத்தை அவரது சொந்த நிலப் பரப்பிலேயே ஒரு சதுப்பு நிலத்திற்கு வரவழைத்து அழித்தனர்.[32]

கிழக்கு ஹங்கேரியானது மங்கோலியர்களால் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில் அவர்களது ஒருகால கூட்டாளிகளான குமன்கள் மேற்கு ஹங்கேரியை சூறையாடினர். எஸ்டெர்கோம் என்ற இடத்தில் ஹங்கேரியின் அரசர் நான்காம் பெலா ஒரு போர் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த இடம் புடா மற்றும் பெஸ்ட் ஆகிய இடங்களுக்கு அருகில் அமைந்திருந்த ஒரு பெரிய மற்றும் முக்கியமான குடியிருப்பு ஆகும். படு ஹங்கேரியை நோக்கி வடகிழக்கு திசையில் இருந்து முன்னேறி வந்த நிலையில் ஹங்கேரிய தலைமையானது தங்களது வலிமையை நகரத்தில் ஒருங்கிணைக்க முடிவு செய்திருந்தது. பின்னர் வடக்கு நோக்கி அணிவகுத்து மங்கோலிய இராணுவத்தை எதிர்கொள்ள முடிவு செய்திருந்தது. ஹங்கேரிய போர் திட்டம் மங்கோலிய தலைவர்களை அடைந்த போது அவர்கள் சஜு ஆற்றை நோக்கி மெதுவாக பின்வாங்கினர். இதன் மூலம் தங்களது எதிரிகளை அவர்களது இருப்பிடத்திலிருந்து தூரத்திற்கு அழைத்துச் சென்றனர். இது பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் மங்கோலிய உத்தியாகும். இதை சுபுதை பரிபூரணமாக செயல்படுத்தினார். தனது எதிரிகளுக்கு ஒத்த வகையில் யுத்த களத்தை தயார் செய்தார். தனது எதிரிகள் வரும்வரை காத்திருந்தார். இவ்வாறாக மங்கோலியர்கள் நல்ல வலிமையான ஒரு நிலையில் இருந்தனர். ஏனெனில் மரங்கள் மங்கோலியர்களை மற்றவர்கள் கவனிக்க முடியாத வண்ணம் இருந்தன. அதே நேரத்தில் சமவெளியை நோக்கி ஆற்றின் அருகே இருந்த ஹங்கேரிய ராணுவம் வெட்டவெளியாக மங்கோலியர்களுக்கு தெரிந்தது. எனினும் அரசர் பெலா இந்தப் பொறிக்குள் சிக்கவில்லை.

லெக்னிகா யுத்தத்தில் சிறிய மங்கோலிய ராணுவம் போலந்தில் பெற்ற வெற்றிக்கு ஒரு நாள் கழித்து சுபுதை தனது தாக்குதலை தொடங்கினார். இவ்வாறாக யுத்தமானது இரவில் 10 ஏப்ரல் 1241 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யுத்தத்தில் மங்கோலியர்கள் ஹங்கேரிய கவனத்தை திசை திருப்ப ஒரு பாலத்தின் மீது தாக்குதல் நடத்தினர். அதே நேரத்தில் வடக்கு திசையில் பாலத்தை சுற்றி ஆற்றை கடக்க முயன்றனர். மங்கோலிய ராணுவத்தின் முக்கிய பகுதி மொகியில் இருந்த சஜோ ஆற்றை கடக்க ஆரம்பித்தது. அடுத்த நாளும் தொடர்ந்து தாக்குதலை நடத்தியது. எனினும் இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதலும் கடுமையான முறையில் கொடுக்கப்பட்டது. ஹங்கேரிய குறுக்கு வில்லாளர்களை அப்புறப்படுத்த பெரிய கவண் பொறிகள் முன்னரே குறிப்பிட்டவாறு பயன்படுத்தப்பட்டன. அதேநேரத்தில் சுபுதை ரகசியமாக தெற்குப்பகுதியில் ஒரு தற்காலிக பாலத்தை அமைக்கச் செய்தார். ஆழம் அதிகமாக இருந்த அந்த ஆற்றின் வழியே ரகசியமாக ஒரு பெரும் படை முன்னேறியது. பின்னர் இரண்டாவது ராணுவப் பிரிவு தெற்கிலிருந்து பகுதியை தாக்கியது. மூன்றாவது பிரிவு வடக்கிலிருந்து தாக்கியது. இவ்வாறாக ஒருங்கிணைந்த மங்கோலிய படை ஹங்கேரியர்களை சுற்றிவளைத்த நிகழ்வானது ஹங்கேரியர்களை பின்வாங்க வைத்தது. அவர்கள் ஒரு முகாமுக்கு பின்வாங்கினர். பாரம்பரியமாக நாடோடி ராணுவங்களை எதிர்கொள்ள இந்த முறை ஹங்கேரியர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. எனினும் மங்கோலியர்கள் கடுமையான காவலுக்கு உட்பட்ட ஹங்கேரிய முகாமை சுற்றிவளைத்தனர். அதனை முற்றுகை எந்திரங்கள், வெடிமருந்து ஆயுதங்கள் மற்றும் தீ வைக்கப்பட்ட அம்புகளைக் கொண்டு தாக்கினர்.[33] ஹங்கேரிய குதிரைப் படையினர் அவர்களது முகாமிலிருந்து தூரத்திற்கு மங்கோலியர்களை துரத்த வைக்கப்பட்டனர். பின்னர் சுற்றிவளைக்கப்பட்டனர்.

இத்தகைய தாக்குதல் காரணமாக எதிரிகளுக்கு கிலி ஏற்படுத்தப்பட்டது. ஹங்கேரியர்கள் கடைசி வீரன் வரை போரிட்டு மடியாமலிருக்க மங்கோலியர்கள் தங்களது சுற்றிவளைப்பில் ஒரு பகுதியை திறந்து வைத்திருந்தனர். நைட் வீரர்களின் உதவியுடன் குறுக்கு வில்லாளர்கள் ஏராளமானவர்கள் தாங்கள் இறக்கும்வரை மங்கோலியர்களுக்கு எதிராகப் போரிடுவதைத் சுபுதை விரும்பவில்லை. மாறாக அவர்களை தப்பிக்க வைத்து பிறகு ஒவ்வொருவராக கொல்ல சுபுதை விரும்பினார். மங்கோலிய சுற்றிவளைப்பில் இத்தகைய திறப்பானது ஹங்கேரியர்களை பின்வாங்க வைத்தது. இவ்வாறாக நைட் வீரர்களும் குறுக்கு வில்லாளர்களும் நிலப்பரப்பு முழுவதும் பரவ ஆரம்பித்தனர். பின்னர் அவர்களை ஒவ்வொருவராக மங்கோலியர்கள் கொல்ல ஆரம்பித்தனர். சுபுதை திட்டமிட்டவாறு ஹங்கேரிய வீரர்கள் அந்த திறப்பு வழியாக தப்பித்து செல்ல ஆரம்பித்தனர். அந்த திறப்பு ஒரு சதுப்பு நிலத்திற்கு இட்டுச்சென்றது. சதுப்பு நிலங்களில் குதிரைகளால் வேகமாக செல்ல இயலவில்லை. காலாட்படையினர் அந்நிலத்தை கடக்க முடியாமல் தவித்தனர். ஹங்கேரிய வீரர்கள் பிரிந்து சென்றபோது மங்கோலியர்கள் அவர்களை ஒவ்வொருவராக கொல்ல ஆரம்பித்தனர். யுத்தம் நடத்த இடத்திலிருந்து இரண்டு நாள் பயண தூரம் வரை உள்ள பகுதிகளில் பிணங்கள் கிடந்ததாக பின்னர் இந்தப் போரைப் பற்றி குறிப்பிடப்பட்டது. இரண்டு ஆர்ச்பிஷப்புகள் மற்றும் மூன்று பிஷப்புகள் யுத்தத்தின் போது கொல்லப்பட்டனர். மேலும் 10,000 படை வீரர்களும் கொல்லப்பட்டனர்.[34] ஒரே நேரத்தில் பெரும்பாலான ஹங்கேரிய படைவீரர்கள் மொத்தமாக கொல்லப்பட்டனர். ஆனால் நடுப்பகுதியில் மங்கோலிய வீரர்களின் உயிரிழப்பானது சாதாரணமான அளவைவிட அதிகமாக இருந்தது. சாதாரணமாகவே உயிரிழந்த பல நூறு முதல் பல்லாயிரக்கணக்கான படைவீரர்கள் தவிர நடுவரின் 4000 பகதூர்களில் 30 பேர் கொல்லப்பட்டனர். படுவின் லெப்டினன்ட் ஒருவரும் கொல்லப்பட்டார். இதன்காரணமாக மங்கோலிய முகாமில் இறுக்கமான சூழ்நிலை நிலவியது.[35]

மேற்கோள்கள்[தொகு]

 1. ஹார்ட், லிட்டெல் (1977). பெரிய கேப்டன்களின் வெளியீடு (பகுதி 1, பதிப்பு 1). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-306806-86-5. https://www.goodreads.com/book/show/825232.Great_Captains_Unveiled. 
 2. Gabriel, Richard. "Genghis Khan's Greatest General Subotai the Valiant". University of Oklahoma Press, 2004, p. 6.
 3. Gabriel, 6-8.
 4. Tsendiin Damdinsüren (1970). "120 (III)" (in Mongolian). Монголын нууц товчоо (1st ). 
 5. Yuanshi, 121, 1a-5a
 6. Gabriel 2004, pp. 1, 3.
 7. Cummins, Joseph. History's Great Untold Stories: Larger Than Life Characters & Dramatic Events That Changed the World. 2006. Washington D.C.: National Geographic Society, 2006. Print.
 8. Saunders, J. J. (1971). The History of the Mongol Conquests, Routledge & Kegan Paul Ltd. ISBN 0-8122-1766-7
 9. Gabriel, 10
 10. Gabriel, 12-13.
 11. Gabriel, Chapter 8; Carl Svedrup, Sube`etei Ba`atur, Anonymous Strategist.
 12. Chris Peers, the Mongol War Machine (2015), 157-159.
 13. Timothy May, the Mongol Art of War.
 14. Matthew Paris, Chronica Majora, 341-45.
 15. Yuan Shih, Biography of Subedei, 121.2975-76.
 16. Juvaini, History of the World Conqueror, 370–371.
 17. Juvaini, History of the World Conqueror, 373–385.
 18. Juvaini, History of the World Conqueror, 375–410.
 19. In the Service of the Khans, 19.
 20. Frank McLynn, Genghis Khan, 319.
 21. Kirakos Gandzaketsi, History of the Armenians, 166–167.
 22. Oliver of Paderborn, "The Capture of Damietta", trans. Joseph J. Gavigan, Christian Society and the Crusades, 1198–1229, ed. Edward Peters (Philadelphia: University of Pennsylvania Press, 1971), 90, 123–124.
 23. Frank McLynn, Genghis Khan (2015), 607–613.
 24. McLynn, 435.
 25. Svedrup, 43–44.
 26. McLynn, 436–437.
 27. Frank McLynn, 434–441.
 28. The Chronicle of Novgorod (1914), 83.
 29. Paul Lendvai, The Hungarians: A Thousand Years of Victory in Defeat.
 30. McLynn, 465–466.
 31. Jan Dlugoscz, Annals, 180–181.
 32. Mclynn, 464–468.
 33. Yuan Shih, Biography of Subedei, 121.2978.
 34. Denis Sinor, The Mongols in the West (1999).
 35. Yuan Shi, 121, 1a–5a
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபுதை&oldid=2932526" இருந்து மீள்விக்கப்பட்டது