உள்ளடக்கத்துக்குச் செல்

ஒக்தாயி கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒகோடி கான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒக்தாயி ககான்
யுவான் அரசமரபின் காலத்தில் வரையப்பட்ட ஒக்தாயி கானின் உருவப்படம். இப்படத்தின் அகலம் 47 செ. மீ. மற்றும் உயரம் 59.4 செ. மீ., பட்டின் மீது வண்ணச் சாயம் மற்றும் மையால் வரையப்பட்டது. இப்போது தேசிய அரண்மனை அருங்காட்சியகம், தாய்பெய், தாய்வானில் அமைந்துள்ளது.
மங்கோலியப் பேரரசின் 2வது ககான்-பேரரசர்[note 1]
ஆட்சிக்காலம்13 செப்டம்பர் 1229 – 11 திசம்பர் 1241
முடிசூட்டுதல்13 செப்டம்பர் 1229 அன்று மங்கோலியாவின் கெர்லென் ஆற்றின் கோதூ அராலில் நடந்த குறுல்த்தாய்
முன்னையவர்
பின்னையவர்
பிறப்புஅண். 1186[note 2]
கமக் மங்கோல்
இறப்பு11 திசம்பர் 1241 (அகவை 55)
மங்கோலியப் பேரரசு
மனைவி
  • போரக்சின் கதுன் (ஒக்தாயியின் மனைவி)
  • தோரேசின் கதுன்
  • மோகே கதுன்
  • அல்குயி கதுன்
  • கிர்கிசுதானி கதுன்
  • குஜுல்தர் கதுன்
  • ஜுஜை கதுன்
  • ஜச்சின் கதுன்
  • எர்கின் கதுன்
குழந்தைகளின்
பெயர்கள்
மறைவுக்குப் பிந்தைய பெயர்
பேரரசர் இங்வான் (英文皇帝, மறைவுக்குப் பின் 1266ல் கொடுக்கப்பட்டது)
கோயில் பெயர்
தைசோங் (太宗, மறைவுக்குப் பின் 1266ல் கொடுக்கப்பட்டது)
அரசமரபுபோர்சிசின்
தந்தைசெங்கிஸ் கான்
தாய்போர்ட்டே உஜின்
மதம்தெங்கிரி மதம்

ஒக்தாயி கான்[2][note 3] என்பவர் செங்கிஸ் கானின் மூன்றாவது மகன் ஆவார். இவர் மங்கோலியப் பேரரசின் இரண்டாவது ககான்[note 1] ஆவார். இவர் தனது தந்தைக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார். தனது தந்தை தொடங்கி வைத்த பேரரசின் விரிவாக்கத்தை இவர் தொடர்ந்தார். மங்கோலியப் பேரரசு அதன் அதிக பட்ச பரப்பளவை அடைந்தபோது உலகின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மேற்கு மற்றும் தெற்கில் ஐரோப்பா மற்றும் சீனா மீது படையெடுத்தார்.[7] செங்கிஸ் கானின் அனைத்து முதன்மை மகன்களைப் போலவே இவரும் சீனா, ஈரான் மற்றும் நடு ஆசியா மீதான படையெடுப்புகளின்போது முக்கியப் பங்காற்றினார்.

பின்னணி

[தொகு]

ஒக்தாயி செங்கிஸ் கான் மற்றும் போர்ட்டே உஜினின் மூன்றாவது மகன் ஆவார். தனது தந்தையின் வளர்ச்சியின் வன்முறை நிறைந்த நிகழ்வுகளில் இவரும் பங்கெடுத்தார். இவருக்கு 17 வயதாக இருந்தபோது, சமுக்காவின் இராணுவத்திற்கு எதிராகத் தெமுஜின் கலகல்சித் மணல்பரப்பு யுத்தத்தில் முழுமையான தோல்வியைச் சந்தித்தார். படுகாயமடைந்த ஒக்தாயி யுத்தகளத்தில் தொலைந்துவிட்டார்.[8] இவரது தந்தையின் தத்துத் தம்பியும், தோழனுமான போரோகுலா இவரை மீட்டுக் கொண்டு வந்தார். இவருக்கு ஏற்கனவே மணமாகி இருந்த பொழுதும் 1204ஆம் ஆண்டு இவரது தந்தை தோற்கடிக்கப்பட்ட ஒரு மெர்கிடு தலைவனின் மனைவியாகிய தோரேசின் கதுனை இவருக்குக் கொடுத்தார். புல்வெளிப் பண்பாட்டில் ஒரு மனைவியைச் சேர்த்துக் கொள்வது என்பது வழக்கத்திற்கு மாறான ஒன்று கிடையாது.

1206ஆம் ஆண்டு செங்கிஸ் கான், ககான் பட்டம் பெற்ற பிறகு சலயிர், பேசுத், தாய்சியுடு மற்றும் கோங்கதன் இனங்களின் மிங்கன்கள் ஒக்தாயியிக்கு ஒட்டு நிலங்களாகக் கொடுக்கப்பட்டனர். எமில் மற்றும் கோபோக்கு ஆறுகளை ஒக்தாயியின் நிலப்பரப்பானது ஆக்கிரமித்திருந்தது. இவரது தந்தையின் விருப்பப்படி சலயிர் தளபதியான இலுகேயி ஒக்தாயியின் ஆசான் ஆனார்.

ஒக்தாயி அவரது சகோதரர்களுடன் 1211ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சின் அரசமரபுக்கு எதிராக முதல்முறையாகச் சுதந்திரமாகப் போர்ப் பயணங்களை மேற்கொண்டார். முதலில் தெற்கில் இருந்த நிலப்பகுதியான ஏபெய் மாகாணம் மற்றும் பிறகு வடக்கே சான்சி மாகாணத்தில் இருந்த பகுதிகளை அழிக்க 1213ஆம் ஆண்டு அனுப்பப்பட்டார். ஓர்டோஸ் நகரத்தில் இருந்த சின் கோட்டைப் படையினரை ஒக்தாயியின் படைகள் துரத்திவிட்டன. பிறகு மேற்கு சியா, சின் மற்றும் சாங் பகுதிகளின் இணைப்பு நிலப்பரப்புக்கு இவர் பயணம் மேற்கொண்டார்.[9]

மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பின்போது 1219-20ஆம் ஆண்டில் ஐந்து மாத முற்றுகைக்குப் பிறகு ஒற்றார் நகரத்தின் குடிமக்களை ஒக்தாயி மற்றும் சகதாயி படுகொலை செய்தனர். பிறகு ஊர்கெஞ்ச் மதில் சுவர்களுக்கு வெளியே இருந்த சூச்சியுடன் இணைந்து கொண்டனர்[10]. சூச்சி மற்றும் சகதாயிக்கு இடையிலான, இராணுவ உத்தி தொடர்பான சச்சரவின் காரணமாக ஊர்கெஞ்ச் முற்றுகையை மேற்பார்வையிடும் பொறுப்பிற்கு ஒக்தாயி செங்கிஸ் கானால் நியமிக்கப்பட்டார்.[11] 1221ஆம் ஆண்டு அவர்கள் நகரத்தைக் கைப்பற்றினர். தென்கிழக்குப் பாரசீகம் மற்றும் ஆப்கானித்தானில் கிளர்ச்சி தொடங்கியபோது, ஒக்தாயி காசுனியை அமைதிப்படுத்தினார்.[12]

ககான்

[தொகு]
1229இல் ஒக்தாயியின் முடிசூட்டு விழா, ஓவியம் ரசீத்தல்தீன், 14ஆம் நூற்றாண்டு ஆரம்பம்

1219ஆம் ஆண்டில் குவாரசமியப் பேரரசு மீதான படையெடுப்புக்கு முன்னர் செங்கிஸ் கானிடம் அவரது வாரிசைத் தேர்ந்தெடுக்குமாறு பேரரசி இசுயி அறிவுறுத்தினார். சூச்சி மற்றும் சகதாயி ஆகிய இரண்டு மூத்த மகன்களுக்கு இடையிலான சச்சரவுக்குப் பிறகு அவர்கள் ஒக்தாயியை வாரிசாகத் தேர்ந்தெடுக்க ஒப்புக் கொண்டனர். செங்கிஸ் கான் இந்த முடிவை உறுதி செய்தார்.

செங்கிஸ் கான் 1227ஆம் ஆண்டு இறந்தார். அதற்கு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சூச்சி இறந்தார். 1229ஆம் ஆண்டு வரை ஒக்தாயியின் தம்பி டொலுய் பிரதிநிதியாக ஆட்சியைக் கவனித்துக் கொண்டார். 1229ஆம் ஆண்டு ஒக்தாயி ககானாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செங்கிஸ் கானின் இறப்பிற்குப் பிறகு, கெர்லென் ஆற்றின் கரையில் கோதோ அரால் என்ற இடத்தில் நடந்த குறுல்த்தாயில் இவர் இவ்வாறாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒக்தாயி தான் பதவிக்கு வர வேண்டும் என்று தனது விருப்பத்தைச் செங்கிஸ் கான் தெளிவாக வெளிப்படுத்தியதன் காரணமாக, இவர் பதவிக்கு வருவதில் எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை. முடிசூட்டு விழா சடங்கின்படி மூன்று முறை மறுத்த பிறகு, 13 செப்டம்பர் 1229ஆம் ஆண்டு மங்கோலியர்களின் ககானாக ஒக்தாயி அறிவிக்கப்பட்டார்.[13] சகதாயி தன் தம்பிக்குத் தொடர்ந்து ஆதரவளித்தார்.

செங்கிஸ் கான் ஒக்தாயியை இன்முகமும் ஈகைக் குணமும் உடையவராகக் கருதினார்.[14] தன் தந்தை அமைத்துக் கொடுத்த வழியில் பேரரசை வழிநடத்துவதில் ஒக்தாயி வெற்றி அடைந்ததற்கு அவருடைய உளங்கவர் திறனும் ஒரு காரணம் எனக் கருதப்படுகிறது. செங்கிஸ் கான் விட்டுச் சென்ற நிர்வாக அமைப்பு, ஒக்தாயியின் குணம் காரணமாக மங்கோலியப் பேரரசின் விவகாரங்கள் ஒக்தாயியின் ஆட்சிக் காலத்தின்போது பெரும்பாலும் நிலைத்தன்மையுடன் இருந்தன. இவரது ஆட்சியின்போது இவர் சில தவறுகளைச் செய்தபோதிலும் ஒக்தாயி நடைமுறைகளைப் பின்பற்றுகிற ஒரு மனிதன் ஆவார். செங்கிஸ் கானுக்கு இணையான ஒரு இராணுவத் தலைவர் அல்லது நிர்வாகி என்ற போலியான நம்பிக்கைகளை ஒக்தாயி கொண்டிருக்கவில்லை. தன்னால் என்ன இயலுமோ அச்செயல்களை மட்டுமே ஒக்தாயி செய்தார்.

உலகப் படையெடுப்புகள்

[தொகு]

மத்திய கிழக்கு விரிவாக்கம்

[தொகு]

குவாரசமியப் பேரரசை அழித்த பிறகு, வேறு எந்தப்பணியுமின்றி செங்கிஸ் கான் மேற்கு சியாவை நோக்கி முன்னேறினார். எனினும் 1226ஆம் ஆண்டு குவாரசமியாவின் கடைசி மன்னனாகிய சலாலத்தீன் மிங்புர்னு தனது தந்தை இரண்டாம் அலாவுதீன் முகம்மது இழந்த பேரரசுக்குப் புத்துயிர் கொடுக்க ஈரானுக்குத் திரும்பினான். மிங்புர்னுவுக்கு எதிராக 1227ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட மங்கோலியப் படைகள் தமேகான் என்ற இடத்தில் தோற்கடிக்கப்பட்டன. சலாலத்தீனுக்கு எதிராக அணிவகுத்த மற்றொரு இராணுவமானது இசுபகானுக்கு அருகில் பெரும் இழப்பைச் சந்தித்த பிறகு ஒரு வெற்றியைப் பெற்றது. எனினும் அந்த வெற்றியை அவர்களால் தொடர முடியவில்லை.

படையெடுப்பைத் தொடங்க ஒக்தாயியின் விருப்பப்படி சோர்மகன் கோர்ச்சி புகாராவில் இருந்து 30,000 முதல் 50,000 மங்கோலிய வீரர்களுடன் புறப்பட்டார். குவாரசமியர்களுக்கு ஆதரவான இரண்டு நீண்டகால தளங்களான பாரசீகம் மற்றும் குராசானை ஆக்கிரமித்தார். 1230ஆம் ஆண்டு ஆமூ தாரியாவைக் கடந்தார். எவ்வித எதிர்ப்புமின்றி குராசானுக்குள் நுழைந்தார். இவ்வாறாக வேகமாக சோர்மகன் அதைக் கடந்தார். தாயிர் பகதூர் தலைமையில் குறிப்பிடத்தக்க அளவிலான எண்ணிக்கை கொண்ட ஒரு படையினை விட்டுச் சென்றார். தாயிர் பகதூருக்கு மேற்கு ஆப்கானித்தான் மீது படையெடுக்க மேற்கொண்டு அறிவுறுத்தல்களும் கொடுக்கப்பட்டிருந்தன. சோர்மகன் மற்றும் அவரது பெரும்பாலான இராணுவமானது தபரிசுத்தானுக்குள் நுழைந்தன. இந்த இடம் தற்போதைய மசந்திரன் ஆகும். இது காசுப்பியன் கடல் மற்றும் அல்போர்சு மலைத்தொடருக்கு இடையில் அமைந்த ஒரு பகுதியாகும். 1230ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் இந்த இராணுவமானது தபரிசுத்தானுக்குள் நுழைந்தது. நிசாரி இசுமாயிலிகளின் (அசாசின்கள்) கட்டுப்பாட்டில் இருந்த தெற்கு மலை சார்ந்த பகுதிகளைத் தவிர்த்து இவை முன்னேறின.

இரே நகரை அடைந்தபோது அங்கு தனது குளிர்கால முகாமை சோர்மகன் அமைத்தார். எஞ்சிய வடக்குப் பாரசீகப் பகுதிகளை அமைதிப்படுத்தத் தனது இராணுவங்களை அனுப்பினார். 1231ஆம் ஆண்டு தனது இராணுவத்தைத் தெற்கு நோக்கிக் கூட்டிச் சென்றார். சீக்கிரமே கும் மற்றும் அமாதான் ஆகிய நகரங்களைக் கைப்பற்றினார். அங்கிருந்து பாருசு மற்றும் கெர்மான் மாகாணங்களுக்குத் தனது இராணுவங்களை அனுப்பினார். அதன் ஆட்சியாளர்கள் சீக்கிரமே அடிபணிந்தனர். தங்களது அரசுகள் அழிக்கப்படுவதற்குப் பதிலாக மங்கோலியப் பிரபுக்களிடம் திறை செலுத்தும் முடிவை எடுத்தனர். அதே நேரத்தில், கிழக்கில் தாயிர் பகதூர் காபுல், காசுனி மற்றும் சபுலிசுத்தான் ஆகியவற்றை வெல்லும் தனது இலக்கை நோக்கி நிலையாக முன்னேறிக் கொண்டிருந்தார். பாரசீகத்தின் கட்டுப்பாட்டை மங்கோலியர்கள் ஏற்கனவே பெற்றுவிட, சலாலத்தீன் திரான்சு காக்கேசியாவில் தனிமைப்படுத்தப்பட்டார். அங்கு நாடு கடந்த வாழ்க்கை வாழ்ந்தார். இவ்வாறாகப் பாரசீகத்தின் அனைத்துப் பகுதிகளும் மங்கோலியப் பேரரசுடன் இணைக்கப்பட்டன.

சின் அரசமரபின் வீழ்ச்சி

[தொகு]

1230ஆம் ஆண்டின் இறுதியில் மங்கோலியத் தளபதி தோகோல்கு செர்பி, சின் அரசமரபினரிடம் அடைந்த எதிர்பாராத தோல்விக்குப் பதிலடி கொடுக்கக் ககான் தெற்கே சான்சி மாகாணத்திற்குத் தன் தம்பி டொலுயுடன் சென்றார். பெங்சியாங் நகரத்தைக் கைப்பற்றியதன் மூலம், அப்பகுதியை சின் படைகளை அற்ற இடமாக்கினார். வடக்கே கோடை காலத்தைக் கழித்த பிறகு, அவர்கள் மீண்டும் சின்னுக்கு எதிராக ஹெனன் பகுதியில் படையெடுப்பு மேற்கொண்டனர். தெற்கு சீனாவின் நிலப்பரப்பு வழியே சென்று சின் அரசமரபின் பின்பகுதி மீது தாக்குதல் நடத்தினர். 1232ஆம் ஆண்டு தன் தலை நகரம் கைஃபெங்கில் தங்கியிருந்தபோது சின் பேரரசர் முற்றுகையிடப்பட்டார். இறுதிக்கட்டப் படையெடுப்பைத் தனது தளபதிகளிடம் கொடுத்துவிட்டு ஒக்தாயி திரும்பிச் சென்றார். பல நகரங்களைக் கைப்பற்றிய பிறகு, சாங் அரசமரபிடமிருந்து வந்த தாமதமான உதவிக்குப் பிறகு 1234ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் கைசோவின் வீழ்ச்சிக்குப் பிறகு சின் அரசமரபை மங்கோலியர்கள் அழித்தனர். எனினும் சாங் அரசமரபின் ஓர் அரசநிர்வாகி ஒரு மங்கோலியத் தூதுவனைக் கொலை செய்தார். சாங் இராணுவங்கள் தங்களது முந்தைய ஏகாதிபத்தியத் தலைநகரங்களான கைஃபேங்கு, இலுவோயங் மற்றும் சங்கான் ஆகியவற்றை மீண்டும் கைப்பற்றின. உண்மையில் இப்பகுதிகள் மங்கோலியர்களால் ஆட்சி செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.

சின் அரசமரபுடனான போருடன் சேர்த்து, 1233ஆம் ஆண்டு ஒக்தாயி புக்சியான் வன்னுவால் நிறுவப்பட்ட கிழக்கு சியாவையும் நொறுக்கினார். தெற்கு மஞ்சூரியாவை அமைதிப்படுத்தினார். அப்பகுதியின் வடக்கே இருந்த நீர் தாதர்களையும் ஒக்தாயி அடிபணிய வைத்தார். 1237ஆம் ஆண்டு அவர்கள் செய்த கலகத்தையும் ஒடுக்கினார்.

சார்சிய, ஆர்மீனியப் படையெடுப்பு

[தொகு]
1184-1230இல் சார்சியா இராச்சியம்

சோர்மகன் தலைமையிலான மங்கோலியர்கள் 1232ஆம் ஆண்டு காக்கேசியாவிற்குத் திரும்பினர். அசர்பைஜானின் கஞ்சா நகரத்தின் மதில் சுவர்களை விசைவிற்பொறி மற்றும் பூணிட்ட பெருந்தூலங்களைக் கொண்டு 1235ஆம் ஆண்டு உடைக்கப்பட்டது. அர்பில் குடிமக்கள் ககானின் அவைக்கு ஆண்டுதோறும் காணிக்கை அனுப்ப ஒப்புக்கொண்டதற்குப் பிறகு இறுதியாக மங்கோலியர்கள் பின்வாங்கினர். 1238ஆம் ஆண்டு வரை சோர்மகன் காத்திருந்தார். அந்த நேரத்தில் வடக்கு காக்கேசியாவில் மோங்கே கானின் படையும் செயல்பாட்டுக் கொண்டிருந்தது.[15] ஆர்மீனியாவை அடிபணிய வைத்த பிறகு சோர்மகன் திபிலீசியைக் கைப்பற்றினார். 1238ஆம் ஆண்டு மங்கோலியர்கள் லோரேவைக் கைப்பற்றினர். அதன் ஆட்சியாளரான ஷா தனது குடும்பத்துடன் மங்கோலியர்கள் வருவதற்கு முன்னரே தப்பித்து ஓடினார். செல்வச்செழிப்பு மிகுந்த நகரத்தை அதன் விதிக்கே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். கோகனபெர்து யுத்தத்தில் உத்வேகம் உடைய ஒரு தற்காப்பைக் காட்டிய பிறகு நகரத்தின் ஆட்சியாளரான அசன் சலால் மங்கோலியர்களிடம் அடிபணிந்தார். இளவரசன் அவாக்கால் ஆட்சி செய்யப்பட்ட கலானை நோக்கி மற்றொரு பிரிவானது முன்னேறியது. மங்கோலியத் தளபதி தோக்தா நேரடியான தாக்குதலைத் தவிர்த்தார். நகரத்தைச் சுற்றி தனது வீரர்களைக்கொண்டு ஒரு சுவரைக் கட்டினார். அவாக் சீக்கிரமே சரணடைந்தார். 1240ஆம் ஆண்டு திரான்சு காக்கேசியாவின் மீதான தனது படையெடுப்பைச் சோர்மகன் முடித்தார். சியார்சிய உயர்குடியினர் சரணடையும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஐரோப்பா

[தொகு]
ஒரு உருஸ்' நகரத்தைக் கைப்பற்றும் மங்கோலிய இராணுவம்.

மங்கோலியப் பேரரசு படு கானின் தலைமையில் மேற்கு நோக்கி விரிவடைந்தது. அவர்கள் மேற்குப் புல்வெளிகளை அடிபணிய வைத்து ஐரோப்பாவுக்குள் நுழைந்தனர். வோல்கா பல்கேரியா, கிட்டத்தட்ட அனைத்து ஆலனியா, குமனியா, மற்றும் உருஸ்' ஆகிய பகுதிகள் மீது படையெடுத்தனர். குறுகிய காலத்திற்கு அங்கேரியையும் ஆக்கிரமித்திருந்தனர். மேலும் அவர்கள் போலந்து, குரோவாசியா, பல்கேரியா, இலத்தீன் பேரரசு மற்றும் ஆத்திரியா ஆகிய நாடுகள் மீது படையெடுத்தனர். கோலோம்னா முற்றுகையின்போது ககானின் ஒன்றுவிட்ட சகோதரர் குளிகன்[note 4] ஓர் அம்பு தாக்கி இறந்தார்.

இந்தப் படையெடுப்பின் போது ஒக்தாயியின் மகனாகிய குயுக், சகதாயியின் பேரனாகிய புரி ஆகியோர் படுவை ஏளனம் செய்தனர். இதன் காரணமாக மங்கோலிய முகாமில் சச்சரவு ஏற்பட்டது. ககான் ஒக்தாயி தனது மகன் குயுக்கைக் கடுமையாகக் கண்டித்தார்: "உன் இராணுவத்தில் உள்ள ஒவ்வொரு வீரனின் உத்வேகத்தையும் நீ உடைத்து விட்டாய்... நீ உன் சொந்த வீரர்களிடம் எவ்வாறு பெருந்தன்மையற்று நடந்து கொண்டாய் என்ற காரணத்தினால் தான் உருசியர்கள் சரணடைந்தார்கள் என நினைக்கிறாயா?" என்றார். பிறகு ஐரோப்பியப் படையெடுப்பைத் தொடரக் குயுக்கை அவர் அனுப்பி வைத்தார். குயுக் மற்றும் ஒக்தாயியின் மற்றொரு மகனான கதான் முறையே திரான்சில்வேனியா மற்றும் போலந்தைத் தாக்கினர்.

"மகா கடல்" (அத்திலாந்திக் பெருங்கடல்) வரையிலான எஞ்சிய ஐரோப்பா முழுவதன் மீதும் படையெடுக்க ஒக்தாயி அனுமதித்திருந்த போதிலும், ஒக்தாயி இறந்து ஒரு ஆண்டுக்குப் பிறகு 1242ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பாவில் மங்கோலிய முன்னேற்றமானது நிறுத்தப்பட்டது. ஒக்தாயியின் இறப்பிற்குப் பிறகு அடுத்த ககானைத் தேர்ந்தெடுப்பதற்காகப் படு பின்வாங்கினார் என மங்கோலிய ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. எனினும் அத்தகைய தேர்விற்காகப் படு என்றுமே மங்கோலியாவை அடையவில்லை. 1246ஆம் ஆண்டு வரை அடுத்த கான் யார் எனப் பெயரிடப்படவில்லை. ஐரோப்பியக் கோட்டைக் கட்டுமானங்கள் வலிமையாக இருந்ததாகவும், அதன் காரணமாகவே மங்கோலியத் தளபதிகள் படையெடுப்பை நிறுத்தினர் என்றும், அவர்கள் மீண்டும் தொடரவே இல்லை என்றும், ஐரோப்பியர்கள் கூறுகின்றனர்.[16][நம்பகத்தகுந்த மேற்கோள்?] எனினும் இது நம்பத்தகுந்ததாக இல்லை.

சாங் அரசமரபுடன் சண்டை

[தொகு]

1235 முதல் 1245 வரை ஒக்தாயியின் மகன்களால் தலைமை தாங்கப்பட்ட மங்கோலியர்களால் சாங் அரசமரபு மீது தொடர்ச்சியான திடீர்த் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவர்கள் சாங் அரசமரபின் நிலப்பகுதிக்குள் நீண்டதூரம் சென்று செங்டூ, சியாங்யாங் மற்றும் யாங்சி ஆறு ஆகிய பகுதிகளை அடைந்தனர். ஆனால் அவர்களால் தங்களது படையெடுப்பை வெற்றிகரமாக முடிக்க இயலவில்லை. இதற்குக் காரணம் காலச் சூழ்நிலை, சாங் துருப்புக்களின் எண்ணிக்கை மற்றும் ஒக்தாயியின் மகன் கோச்சு இறந்தது ஆகியவையாகும். 1240ஆம் ஆண்டு ஒக்தாயியின் மற்றொரு மகன் குதேன் திபெத்துக்கு ஒரு போர்ப் பயணக் குழுவை அனுப்பினார். சாங் அதிகாரிகள் செல்முசு தலைமையிலான ஒக்தாயியின் தூதுவர்களைக் கொன்றபோது இரண்டு தேசங்களுக்கு இடையிலான சூழ்நிலையானது மோசமானது.[17]

ஆசியக் கண்டம் முழுவதுமான ஒக்தாயியின் தலைமையிலான மங்கோலிய விரிவாக்கமானது, கிழக்கு மற்றும் மேற்குக்கிடையிலான முதன்மையான வணிக வழியான பட்டுப் பாதையை மீண்டும் நிறுவவும், அரசியல் நிலைத்தன்மையைக் கொண்டு வரவும் உதவியது.

கொரியா

[தொகு]

1224ஆம் ஆண்டு தெளிவற்ற சூழ்நிலைகளின் கீழ் ஒரு மங்கோலியத் தூதுவன் கொல்லப்பட்டான். திறை செலுத்துவதைக் கொரியா நிறுத்தியது.[18] 1231ஆம் ஆண்டு கொரியாவை அடிபணிய வைக்கவும், தூதுவனின் மரணத்திற்குப் பழி தீர்க்கவும் சரிதை கோர்ச்சியை ஒக்தாயி அனுப்பினார். இராச்சியத்தை அடிபணிய வைப்பதற்காக இவ்வாறாக மங்கோலிய இராணுவங்கள் கொரியா மீது படையெடுத்தன. கொர்யியோ மன்னர் தற்காலிகமாக அடிபணிந்தார். மங்கோலிய மேற்பார்வையாளர்களை ஏற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டார். கோடை காலத்தில் மங்கோலியர்கள் பின்வாங்கிய போது, சோயேவு தனது தலைநகரத்தைக் கேசாங்கில் இருந்து கங்குவா தீவுக்கு மாற்றினார். கொர்யியோவுக்கு எதிராகப் போர்ப் பயணத்தில் ஈடுபட்டிருந்த சரிதை மீது தொலைவிலிருந்து வந்த ஓர் அம்பு பாய்ந்தது. அவர் இறந்தார்.

மங்கோலியத் தூதுவர்களைக் கொன்ற கொரியர்கள், சாங் அரசமரபு, கிப்சாக்குகள் மற்றும் அவர்களது ஐரோப்பிய கூட்டாளிகள் மீது படையெடுப்பைத் தொடங்குவதற்கான திட்டங்களை ஒக்தாயி 1234ஆம் ஆண்டு மங்கோலியாவில் நடைபெற்ற குறுல்த்தாயில் அறிவித்தார். தன் குடிமக்களுடன் 40 நகரங்களின் ஆளுநராக இருந்து மங்கோலியர்கள் பக்கம் கட்சி தாவிய கொரியத் தளபதியான போக் ஓங் மற்றும் மங்கோலியத் தளபதி தங்கு ஆகியோரை மங்கோலிய இராணுவத்திற்குத் தளபதிகளாக ஒக்தாயி நியமித்தார். 1238ஆம் ஆண்டு கொர்யியோ அவையானது அமைதிக்குத் தூது விட்டபோது, கொர்யியோ மன்னன் தனக்கு முன்னர் நபராக வந்து நிற்க வேண்டும் என ஒக்தாயி கோரினார். கொர்யியோ மன்னன் கடைசியாகத் தனது உறவினரான இயோங் நோங்குன் சுங்கையும் அவருடன் 10 உயர் குடியினப் பையன்களையும் மங்கோலியாவிற்குப் பிணையக் கைதிகளாக அனுப்பினார். இவ்வாறாக 1241ஆம் ஆண்டு போரானது தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.[19]

இந்தியா

[தொகு]

ஒக்தாயி காசுனியில் தாயிர் பகதூரையும், குந்தூசில் மெங்கேத்து நோயனையும் நியமித்தார். 1241ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் மங்கோலியப் படையானது சிந்து சமவெளி மீது படையெடுத்தது. தில்லி சுல்தானகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இலாகூரை முற்றுகையிட்டது. தில்லி சுல்தானகத்தில் இருந்து பின்வாங்குவதற்கு முன்னர் பட்டணத்தில் பலரை மங்கோலியர்கள் கொலை செய்தனர்.[20]

1235ஆம் ஆண்டுக்குச் சில காலம் கழித்து, மற்றொரு மங்கோலியப் படையானது காஷ்மீர் மீது படையெடுத்தது. ஒரு தருகாச்சியை அங்கு பல ஆண்டுகளுக்கு நிறுத்தியது. சீக்கிரமே காஷ்மீர் மங்கோலியச் சார்புப் பகுதியானது.[21] அதேநேரத்தில் ஒரு காஷ்மீரிய பௌத்தத் ஆசிரியரான ஒட்டோச்சி, தனது சகோதரன் நமோவுடன் ஒக்தாயியின் அவைக்கு வருகை புரிந்தார்.

நிர்வாகம்

[தொகு]

ஒக்தாயி மங்கோலிய நிர்வாகத்தை அதிகாரப்படுத்தும் செயல்களைத் தொடங்கினார். இவரது நிர்வாகத்தின் கீழ் மூன்று பிரிவுகள் உருவாக்கப்பட்டன:

வரி வசூலிக்கும் பணியை வரி விவசாயிகள் என்று அழைக்கப்பட்டவர்களிடம் அரசாங்கம் கொடுத்த ஒரு அமைப்பை மகமுது எலாவச்சு ஊக்குவித்தார். அவர்கள் வரியை வெள்ளியாகப் பெற்றனர். பாரம்பரியச் சீன முறையிலான அரசாங்கத்தை உருவாக்க ஒக்தாயியை எலு சுகை ஊக்குவித்தார். இம்முறையில் வரி வசூலிப்பு அரசாங்க முகவர்களின் கையிலும், வரி செலுத்தலானது அரசாங்கம் வெளியிட்ட பணத்திலும் நடைபெற்றது. மங்கோலிய உயர் குடியினரால் மூலதனம் கொடுக்கப்பட்ட இஸ்லாமிய வணிகர்கள் வரி செலுத்துவதற்குத் தேவையான வெள்ளிக்கு மேலான வட்டிவீதத்தில் கடன்களை வழங்கினர்.[22] குறிப்பாக இந்த ஓர்ட்டோக் தொழில் முறைகளில் ஒக்தாயி ஈடுபாட்டுடன் முதலீடு செய்தார்.[22] அதே நேரத்தில் வெள்ளி இருப்புகளைப் பின்புலமாகக் கொண்ட வங்கித் தாள்களை மங்கோலியர்கள் புழக்கத்தில் விட ஆரம்பித்தனர்.

பாரம்பரியமொங்கோலிய எழுத்துமுறையில் ஒக்தாயி கான்

அரசு விவகாரங்களின் துறைப் பிரிவுகளை ஒக்தாயி ஒழித்தார். மங்கோலியச் சீனாவின் பகுதிகளை எலு சுகையின் அறிவுறுத்தலின்படி, 10 வழிகளாகப் பிரித்தார். மேலும் தனது பேரரசை பெசுபலிக்கு மற்றும் எஞ்சிங் நிர்வாகம் எனப் பிரித்தார். கரகோரத்திலிருந்த பேரரசின் மையமானது மஞ்சூரியா, மங்கோலியா மற்றும் சைபீரியா ஆகிய பகுதிகளை நேரடியாகக் கவனித்துக் கொண்டது. இவரது ஆட்சியின் பிற்பகுதியில் ஆமூ தாரியா நிர்வாகமானது நிறுவப்பட்டது. மகமுது எலாவச்சு துருக்கிசுத்தானை நிர்வகித்தார். 1229 முதல் 1240 வரை வட சீனாவை எலு சுகை நிர்வகித்தார். சீனாவில் தலைமை நீதிபதியாகச் சிகி குதுகுவை ஒக்தாயி நியமித்தார். ஈரானுக்கு நிர்வாகிகளாக காரா கிதையைச் சேர்ந்த சின் தெமூரை முதலிலும், பிறகு உயிர் இனத்தைச் சேர்ந்த கோர்குசை இரண்டாவதாகவும் ஒக்தாயி நியமித்தார். கோர்குஸ் ஒரு நேர்மையான நிர்வாகியாகத் தன்னை நிரூபித்தார். பிறகு எலு சுகையின் சில பணிகள் மகமுது எலாவச்சுக்கு மாற்றப்பட்டன. வரிகள் அப்துர் ரகுமானிடம் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் வசூலிக்கப்படும் வெள்ளியின் அளவை இருமடங்காக்குவதாக அப்துர் ரகுமான் உறுதியளித்தார்.[23] வழக்கத்திற்கு மாறான அதிகப்படி வட்டி வீதங்கள் எனக் கருதப்படுபவற்றை ஒக்தாயி தடை செய்த போதிலும், ஓர்டோக் அல்லது கூட்டாளி வணிகர்கள் ஒக்தாயியின் பணத்தை விவசாயிகளுக்கு அதிகப்படியான வட்டி வீதத்தில் கடனாகக் கொடுத்தனர். இது வருவாயை அதிகப்படுத்திய போதும், பல மக்கள் வரி வசூலிப்பாளர்களையும், அவர்களது ஆயுதமேந்திய கும்பல்களையும் தவிர்ப்பதற்காகத் தங்களது வீடுகளை விட்டு ஓடினர்.

கிறித்தவ எழுத்தரான கதக் மற்றும் தாவோயியத் துறவியான லீ சிச்சாங் ஆகியோர் ஏகாதிபத்திய இளவரசர்களுக்குப் பயிற்றுவிக்க ஒக்தாயி ஏற்பாடு செய்தார். பள்ளிகளையும், ஒரு கல்வி நிலையத்தையும் கட்டினார். பட்டு இருப்புகளைப் பின்புலமாகக் கொண்ட காகிதப் பணத்தை புழக்கத்தில் விட ஆணையிட்டார். பழைய பணங்களை அழிக்கும் பொறுப்பைக் கொண்ட ஒரு துறையை உருவாக்கினார். ஈரான், மேற்கு மற்றும் வட சீனா, மற்றும் குவாரசமியா ஆகியவற்றில் பெருமளவிலான ஒட்டு நிலங்களைப் பிரித்தளிக்கும் ஒக்தாயியின் செயலானது பேரரசின் சிதறலுக்கு இட்டுச் செல்லும் என எலு சுகை எதிர்ப்புத் தெரிவித்தார்.[24] இதன் காரணமாக, ஒட்டு நிலங்களில் மேற்பார்வையாளர்களை மங்கோலிய மேற்குடியினர் நியமிக்கலாம் எனவும், ஆனால் மற்ற அதிகாரிகள் மற்றும் வரி வசூலிக்கும் பணியை அரசவையே செய்யும் எனவும் ஒக்தாயி ஆணையிட்டார்.

நிகழ்வுகளுக்கான முன்னுதாரணங்களின் ஒரு பகுதியாக மகா யசாவை ககான் அறிவித்தார். தனது தந்தையின் ஆணைகள் மற்றும் சட்டங்களின் நீடித்த தன்மையை உறுதிப்படுத்தினார். அதே நேரத்தில் தன் ஆணைகள் மற்றும் சட்டங்களையும் அதில் இணைத்தார். குறுல்த்தாய்களின்போது அணியும் ஆடைகள் மற்றும் நடத்தைகள் குறித்த விதிகளை ஒக்தாயி உருவாக்கினார். பேரரசு முழுவதும் 1234ஆம் ஆண்டு இவர் யாம் நிலையங்களை உருவாக்கினார். அந்த நிலையங்களுக்கு வரும் குதிரை வீரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிலையான ஒரு பணியாளரையும் ஒவ்வொரு நிலையத்திற்கும் நியமித்தார்[25]. ஒவ்வொரு 40 கிலோமீட்டர் தூரத்திற்கும் யாம் நிலையங்கள் நிறுவப்பட்டன. அங்கு வருபவர்களுக்குப் புதுக் குதிரைகள் மற்றும் அவர்களுக்குத் தேவையான குறிப்பிடப்பட்ட பொருட்களை யாம் பணியாளர்கள் வழங்கினர். யாம் நிலையங்களுடன் இணைக்கப்பட்ட குடியிருப்புகள் மற்ற வரிகளிலிருந்து விலக்குப் பெற்றன. ஆனால் அவர்கள் கொடுக்கும் பொருட்களுக்குக் குப்சூரி வரியைச் செலுத்த வேண்டியிருந்தது. சகதாயி மற்றும் படு ஆகியோர் தங்களது யாம் நிலையங்களை தனித்தனியாகக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஒக்தாயி ஆணையிட்டார். உயர்குடியினர் கெரஜ்கள் மற்றும் ஜர்லிக்குகளைக் கொடுப்பதற்குக் ககான் தடை செய்தார். கெரஜ் என்பவை பட்டிகைகளாகும். இப்பட்டிகையைக் கொண்டவருக்கு குடிமக்களிடமிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளைக் கோருவதற்கு அதிகாரம் இருந்தது. தசமத்தின் அடிப்படையிலான ஒவ்வொரு 100 செம்மறியாடுகளில் ஓர் ஆடானது அப்பிரிவில் உள்ள ஏழைக்காக ஒதுக்கப்பட வேண்டுமென ஒக்தாயி ஆணையிட்டார். ஒவ்வொரு மந்தையிலும் உள்ள ஒரு செம்மறியாடு மற்றும் ஒரு பெண் குதிரை ஆகியவை பெறப்பட்டு ஏகாதிபத்திய மேசையின் மந்தை உருவாக்கப்பட வேண்டுமென ஒக்தாயி ஆணையிட்டார்.[26]

கரகோரம்

[தொகு]
கரகோரத்தின் கல் ஆமை

1235 முதல் 1238 வரை நடு மங்கோலியா வழியாகத் தான் ஆண்டுதோறும் நாடோடிப் பயணம் மேற்கொள்ளும் வழியின் நிறுத்தங்களில் தொடர்ச்சியான அரண்மனைகள் மற்றும் ஓய்வுக் கூடங்களை ஒக்தாயி கட்டினார். இதில் முதல் அரண்மனையான வனங்கோங் அரண்மனையானது வட சீன கைவினைஞர்களால் கட்டப்பட்டது. இந்த இடத்திற்கு அருகில் வீடுகளைக் கட்டுமாறு தனது உறவினர்களுக்குப் பேரரசர் அறிவுறுத்தினார். இந்தத் தளத்திற்கு அருகில் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கைவினைஞர்களைக் குடியமர்த்தினார். கரகோர நகரத்தின் கட்டுமானமானது 1235ஆம் ஆண்டு முடிவு பெற்றது. இந்த நகரத்தில் வெவ்வேறு குடியிருப்புப் பகுதிகளை இஸ்லாமிய மற்றும் வட சீனக் கைவினைஞர்களுக்கு ஒக்தாயி ஒதுக்கினார். அவர்கள் ஒவ்வொருவரும் ஒக்தாயியின் விருப்பத்திற்குப் பாத்திரமாகுவதற்காகப் போட்டியிட்டனர். நகரத்தைச் சுற்றிலும் நான்கு பக்க வாயிற்கதவுகளைக் கொண்ட மதில் சுவர்கள் எழுப்பப்பட்டன. இதனுடன் தனிநபர் குடியிருப்புகளும் இணைக்கப்பட்டிருந்தன. இந்நகரத்திற்கு முன்னர் கிழக்காசியாவில் பொதுவாக பயன்படுத்தப்படுவதைப் போல ஒரு இராட்சதக் கல் ஆமையும், அதன்மேல் கல்வெட்டுத் தூணும் அமைக்கப்பட்டது. தோட்டத்தின் வாயிற்கதவுகளைப் போன்ற கதவுகளைக் கொண்ட ஒரு கோட்டையும் இங்கிருந்தது. தொடர்ச்சியான ஏரிகள் உருவாக்கப்பட்டன. அவை ஏராளமான நீர்ப்பறவைகள் கூடும் இடங்களாகத் திகழ்ந்தன. தன்னுடைய பேரரசின் பௌத்த, இஸ்லாமிய, தாவோயியம் மற்றும் கிறித்தவ மதத்தினருக்காகப் பல வழிபாட்டு இடங்களை ஒக்தாயி உருவாக்கினார். சீனர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் ஒரு கன்பூசியக் கோயில் இருந்தது. அங்கு சீன நாட்காட்டியை மாதிரியாகக் கொண்டு எலு சுகை ஒரு புதிய நாட்காட்டியை உருவாக்கும் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

இயற்பண்பு

[தொகு]
ஒக்தாயி கானின் சிலை, மங்கோலியா.

தன் குழந்தைப் பருவத்தில் இருந்தே ஒக்தாயி தனது தந்தையின் விருப்பத்திற்குரிய மகனாக இருந்தாரெனக் கருதப்படுகிறது. ஒரு வாலிபனாகத் தனது இயற்பண்பைக் கொண்டே தான் கலந்து கொள்ளும் எந்த விவாதத்திலும் சந்தேகம் கொள்பவர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தக்கூடிய திறமை இவருக்கு இருந்ததாக அறியப்படுகிறது. இவர் உடலளவில் பெரியவராகவும், இனிமையானவராகவும், உளங்கவர் திறன் கொண்ட மனிதனாகவும் இருந்தார். நல்ல நேரங்களை அனுபவிப்பதிலேயே இவருக்குப் பெரும்பாலும் ஆர்வம் இருந்ததாகக் கருதப்படுகிறது. இவர் தனது குணத்தில் புத்திசாலியாகவும், நிலைத் தன்மை உடையவராகவும் இருந்தார். தனது தந்தை அமைத்துக் கொடுத்த பாதையில் மங்கோலியப் பேரரசை வழிநடத்தியதில் இவர் கண்ட வெற்றிக்கு ஒரு பகுதிக் காரணமாக இவரது உளங்கவர் திறனும் கூறப்படுகிறது.[சான்று தேவை]

1232ஆம் ஆண்டு தன் தம்பி டொலுயின் திடீர் மரணமானது ஒக்தாயியை ஆழமாகப் பாதித்தது. சில ஆதாரங்கள், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஒக்தாயியைக் காப்பாற்றுவதற்காக ஷாமன் மதச் சடங்கில் ஒரு விடம் கலக்கப்பட்ட பானத்தை ஏற்றுக்கொண்டு குடித்ததன் மூலம் தனது சொந்த உயிரைத் தன் அண்ணனுக்காக டொலுய் தியாகம் செய்தார் எனக் குறிப்பிடுகின்றன.[27] மற்ற ஆதாரங்கள், மதுப் பழக்கமுடைய டொலுயை ஷாமன்களின் உதவியுடன் மருந்து கொடுத்து ஒக்தாயி திட்டமிட்டு இறக்க வைத்ததார் எனக் குறிப்பிடுகின்றன.[28]

ஒக்தாயியின் குடிப் பழக்கமானது அனைவராலும் பரவலாக அறியப்பட்ட ஒன்றாகும். அவரது இப்பழக்கத்தைக் கவனித்துக்கொள்வதற்காக ஓர் அதிகாரியைச் சகதாயி நியமித்தார். இருந்தபோதிலும் ஒக்தாயி எவ்வாறாவது குடித்தார். ஒரு நாளைக்குத் தான் குடிக்கும் கோப்பைகளின் எண்ணிக்கையைக் குறைப்பேன் என்று ஒக்தாயி சபதம் எடுத்ததாகவும், பிறகு தான் பயன்படுத்திய கோப்பையின் அளவை இருமடங்காக அதிகமாக்கிக் குடித்ததாகவும் பொதுவாகக் கூறப்படுவதுண்டு. 11 திசம்பர் 1241ஆம் ஆண்டின் அதிகாலையில் அப்துர் ரகுமானுடன் ஒரு பிந்தைய இரவுக் குடியின் போது ஒக்தாயி இறந்தபோது, டொலுயின் விதவையின் சகோதரி மற்றும் அப்துர் ரகுமான் மீது மக்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால் ககானின் சொந்த சுய கட்டுப்பாடு இல்லாத தன்மையே அவரைக் கொன்றது என மங்கோலிய உயர்குடியினர் பிறகு அறிந்தனர்.

ஒக்தாயி ஒரு அடக்கமான மனிதர் என்பது அறியப்பட்ட ஒன்றாகும். தன்னை ஒரு மேதையாக அவர் நினைக்கவில்லை. தனது தந்தை தனக்கு விட்டுச் சென்ற சிறந்த தளபதிகள் மற்றும் தன்னைச் சுற்றியிருந்த தகுதி வாய்ந்த நபர்களின் அறிவுரைகளைக் கேட்டு, அவர்களைப் பயன்படுத்திக் கொண்டார். இவர் ஒரு பேரரசராக இருந்தார், ஆனால் சர்வாதிகாரி கிடையாது.[29] அந்நேரத்தில் இருந்த அனைத்து மங்கோலியர்களைப் போலவே, குழந்தைப் பருவத்திலிருந்தே ஒரு போர் வீரனாகுவதற்காக இவர் வளர்க்கப்பட்டுப் பயிற்றுவிக்கப்பட்டார். செங்கிஸ் கானின் மகனாக ஒரே உலகப் பேரரசை நிறுவுவதற்கான தனது தந்தையின் திட்டத்தில் இவர் பங்கெடுத்துக் கொண்டார். இவர் தன் தந்தையைப் போலவே நடைமுறையை அறிந்த ஒரு மனிதன் ஆவார். ஒரு செயலைச் செய்யும் வழிகளைத் தவிர்த்து அதன் முடிவு எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றியே இவர் கவனித்தார். இவரது நிலையான இயற்பண்பு மற்றும் மற்றவர்கள் இவர் மீது நம்பிக்கை வைக்கக்கூடிய தன்மை ஆகிய குணங்களை இவரது தந்தை மிகவும் மதித்தார். இப்பண்புகள் காரணமாகவே தனக்கு இரு அண்ணன்கள் இருந்தபோதிலும் தனது தந்தைக்கு அடுத்த ஆட்சியாளராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெதர்போர்டின் கூற்றுப்படி, செங்கிஸ் கான் உருவாக்கிய பெண்கள் பற்றிய ஒவ்வொரு சட்டத்தையும் ஒக்தாயி மீறினார்.[30]

இறப்பு மற்றும் அதற்குப் பிறகு

[தொகு]

தரிக்-இ ஜஹான்குஷாய் நூலானது, ஒக்தாயியின் சிங்கம் போன்ற வேட்டை நாய்கள், ஒக்தாயி காப்பாற்றி விடுவித்த ஓர் ஓநாயைத் துரத்தித் துண்டங்களாகக் கடித்துக் குதறின. அதற்குப் பிறகு ஒக்தாயி இறந்தார். ஓர் உயிருள்ள உயிரினத்தை விடுவித்தால் தனக்குண்டான வயிற்று உபாதையிலிருந்து கடவுள் விடுவிப்பார் என்று ஒக்தாயி நம்பினார். இந்தத் துணுக்கு 47வது துணுக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. இது அப்துர் ரகுமானுடன் நள்ளிரவுக்குப் பிந்தைய குடி விருந்தில் ஒக்தாயி இறந்ததிலிருந்து மாறுபடுகிறது.

1230களின் ஆரம்ப காலத்தில் தனது மகன் கூச்சுவைத் தன் வாரிசாக ஒக்தாயி நியமித்தார். 1236ஆம் ஆண்டு கூச்சுவின் இறப்பிற்குப் பிறகு தனது பேரன் சிரேமுனைத் தனது வாரிசாக நியமித்தார். இவரது தேர்வானது மங்கோலியர்களிடையே ஒத்துப் போகவில்லை.[31] ஒக்தாயியின் இறப்பிற்குப் பிறகு அவரது விதவை தோரேசின் கதுன் ஐந்து ஆண்டுகளுக்குப் பிரதிநிதியாகப் பேரரசைக் கவனித்துக் கொண்டார். அதற்குப் பிறகு இறுதியாகக் குயுக் ஆட்சிக்கு வந்தார். எனினும் தங்க நாடோடிக் கூட்டத்தின் கானாகிய படு குயுக்கைப் பெயரளவிலேயே ஏற்றுக்கொண்டார். படுவை எதிர்கொள்வதற்காகப் பயணித்தபோது செல்லும் வழியிலேயே குயுக் உயிரிழந்தார். 1255ஆம் ஆண்டு வரை, மோங்கே கான் ஆட்சிக்கு வந்த பிறகு, ஐரோப்பா மீது படையெடுக்க ஆயத்தமாகப் பாதுகாப்பான சூழ்நிலையைப் படு உணர்ந்தார். ஆனால் அத்திட்டம் செயல்படுத்தப்படும் முன்னரே படு இறந்தார்.

1271ஆம் ஆண்டு குப்லாய் கான் யுவான் அரசமரபை நிறுவிய போது, அலுவல் பதிவுகளில் ஒக்தாயி கானைத் தைசோங் என்ற பெயருடன் குறிப்பிட்டார்.

மனைவிகளும், குழந்தைகளும்

[தொகு]

இவரது தந்தை செங்கிஸ் கானைப் போலவே, ஒக்தாயியிக்கும் பல மனைவிகளும், 60 துணைவிகளும் இருந்தனர்.[32] ஒக்தாயி முதலில் போரக்சினை மணந்தார். பிறகு தோரேசினை மணந்தார். மற்ற மனைவிகள் மோகே கதுன் மற்றும் சச்சின் கதுன் ஆகியோர் ஆவர். இதில் மோகே கதுன் செங்கிஸ் கானின் முன்னாள் துணைவி ஆவார்.

முதன்மை மனைவிகள்:

  1. போரக்சின்
  2. தோரேசின்
    1. குயுக் - மங்கோலியர்களின் 3வது பெரிய கான்
    2. கோதென் - முதல் பௌத்த மங்கோலிய இளவரசன்
    3. கோச்சு (இறப்பு 1237) - சாங் சீனப் படையெடுப்பின்போது
      1. சிரேமுன் - ஒக்தாயியால் வாரிசாக நியமிக்கப்பட்டவர்.
      2. போலத்சி
      3. சோசே
    4. கரச்சர்
      1. தோதக்
    5. காசி - ஒக்தாயியின் ஆட்சியின் போது இறந்தார்.
      1. கய்டு (1235–1301)
  3. மோகே கதுன்
  4. கோருகேன்

துணைவியர்:

  1. எர்கேன்
    1. கதான்
  2. தெரியாத துணைவி
    1. மெலிக் - தனிசுமந்து அஜிப்பால் வளர்க்கப்பட்டவர்.

வம்சம்

[தொகு]
ஓவலுன்எசுகெய் பகதூர்
போர்ட்டேதெமுஜின் (செங்கிஸ் கான்)கசர்கச்சியுன்தெமுகேபெலகுதைபெக்தர்
சூச்சிசகதாயிஒக்தாயிடொலுய்

நினைவுச் சின்னம்

[தொகு]

மங்கோலிய விமானப் போக்குவரத்து நிறுவனம் தன் போயிங் 737-800 இ. ஐ.-சி. எஸ். ஜி. விமானத்துக்கு ஒக்தாயி கான் என்று பெயரிட்டுள்ளது.

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 Decades before குப்லாய் கான் announced the dynastic name "Great Yuan" in 1271, ககான்s (Great Khans) of the "Great Mongol State" (Yeke Mongγol Ulus) already started to use the Chinese title of Emperor (சீனம்: 皇帝பின்யின்: Huángdì) practically in the சீன மொழி since Spring 1206 in the First Year of the reign of செங்கிஸ் கான் (as சீனம்: 成吉思皇帝; நேர்பொருளாக "Genghis Emperor"[6]).
  2. Ogedei died at the age of 56 by Chinese historical standards (55 by modern western standards) in 1241, meaning he was born in 1186.[1]
  3. மொங்கோலியம்: Өгэдэй, Mongolian: ᠥᠭᠡᠳᠡᠢ Ögedei,[3][4] ᠥᠭᠦᠳᠡᠢ Ögüdei;[5] மரபுவழிச் சீனம்: 窩闊台பின்யின்: Wōkuòtái
  4. Khulgen was the son of Genghis Khan by குலான் கதுன் of the மெர்கிடு clan.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Broadbridge, Anne F. Women and the Making of the Mongol Empire.
  2. "மங்கோலிய அரசர் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா? வரலாறு சொல்வதென்ன?". பிபிசி. 21 ஆகத்து 2018. Archived from the original on 9 அக்டோபர் 2021. பார்க்கப்பட்ட நாள் 13 சூலை 2022. {{cite web}}: Invalid |url-status=No (help)
  3. "Güyük entry, the official Mongolian glossary of history". mongoltoli.mn (in மங்கோலியன்). பார்க்கப்பட்ட நாள் 17 March 2017.
  4. "Instances of 'ᠥᠭᠡᠳᠡᠢ ᠬᠠᠭᠠᠨ' in The Abbreviated Golden History, and The Story of the Asragch". tmsdl.media.ritsumei.ac.jp. பார்க்கப்பட்ட நாள் 17 March 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Instances of 'ᠥᠭᠦᠳᠡᠢ ᠬᠠᠭᠠᠨ' in The Story of the Asragch". tmsdl.media.ritsumei.ac.jp. பார்க்கப்பட்ட நாள் 3 March 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "太祖本纪 [Chronicle of Taizu]". 《元史》 [History of Yuan] (in Literary Chinese). 元年丙寅,大会诸王群臣,建九斿白旗,即皇帝位于斡难河之源,诸王群臣共上尊号曰成吉思皇帝["Genghis Huangdi"]。
  7. John Joseph Saunders The History of the Mongol Conquests, p. 74.
  8. Secret history of the Mongols, $3, II
  9. Marvin C Whiting Imperial Chinese Military History, p. 355.
  10. John Joseph Saunders The History of the Mongol Conquests, p. 57.
  11. John Powell Magill's Guide to Military History: Jap-Pel, p. 1148.
  12. Richard Ernest Dupuy, Trevor Nevitt Dupuy The encyclopedia of military history, p. 336.
  13. Michael Prawdin, Gerard (INT) Chaliand, The Mongol Empire, p. 237.
  14. The Secret history of the Mongols
  15. Timothy May-Mongol Empire: Chormaquan and the Mongol Conquest of the Middle East
  16. Deep ditches and well-built walls: a reappraisal of the Mongol withdrawal from Europe in 1242 by Lindsey Stephen Pow, 2012, University of Calgary, Calgary, AB. doi:10.11575/PRISM/25533.
  17. Herbert Franke, Denis Twitchett, John King Fairbank The Cambridge History of China: Volume 6, Alien Regimes and Border States, p. 263.
  18. Michel Hoàng, Ingrid Cranfield Genghis Khan, p. 159.
  19. J.Bor Mongol hiigeed Eurasiin diplomat shashtir, vol.II, p. 197.
  20. Islamic Culture Board Islamic culture, p. 256.
  21. Thomas T. Allsen Culture and Conquest in Mongol Eurasia, p. 84.
  22. 22.0 22.1 Enkhbold, Enerelt (2019). "The role of the ortoq in the Mongol Empire in forming business partnerships". Central Asian Survey 38 (4): 531–547. doi:10.1080/02634937.2019.1652799. 
  23. David Morgan The Mongols, p. 102.
  24. Chunjiang Fu, Asiapac Editorial, Liping Yang Chinese History, p. 148.
  25. Josef W. Meri, Jere L. Bacharach Medieval Islamic Civilization, p. 632.
  26. Mongolia Society – Occasional Papers – p. 17.
  27. Denis Sinor, John R. Krueger, Rudi Paul Lindner, Valentin Aleksandrovich The Uralic and Altaic Series, p. 176.
  28. Weatherford, Jack. (2011). The secret history of the mongol queens : how the daughters of Genghis Khan rescued his empire. p. 92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780307407160. இணையக் கணினி நூலக மைய எண் 915759962.
  29. David Morgan The Mongols, p. 104.
  30. Weatherford, Jack (2011). The Secret History of the Mongol Queens: How the Daughters of Genghis Khan Rescued His Empire (in ஆங்கிலம்). Broadway Paperbacks. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-307-40716-0. Everyone knew that this barbarous act violated in spirit and in detail the long list of laws Genghis Khan had made regarding women. Girls could marry at a young age but could not engage in sex until sixteen, and then they initiated the encounter with their husbands. They could not be seized, raped, kidnapped, bartered or sold. Ogodei violated every single one of those laws.
  31. Craughwell, Thomas J. (1 February 2010). The Rise and Fall of the Second Largest Empire in History: How Genghis Khan's Mongols Almost Conquered the World (in ஆங்கிலம்). Fair Winds Press. p. 208. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61673-851-8.
  32. Rashīd al-Dīn Ṭabīb, 1247-1318. (1971). The successors of Genghis Khan. New York: Columbia University Press. p. 620. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-231-03351-6. இணையக் கணினி நூலக மைய எண் 160563.{{cite book}}: CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒக்தாயி_கான்&oldid=3781035" இலிருந்து மீள்விக்கப்பட்டது