வங்கித்தாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகின் உயர் பெறுமானம் கொண்ட வங்கித்தாள்கள்

வங்கித்தாள் அல்லது வைப்பகத்தாள் என்பது ஒருவகையான செலாவணி முறி ஆகும். இதை வைத்திருப்பவருக்குக் கேட்கும்போது மீளச்செலுத்தும் வகையில் வங்கிகளால் வெளியிடப்படும் கடனுறுதிச் சீட்டு என இதனைக் கொள்ளலாம். பல ஆட்சியமைப்புக்களில் இது சட்டமுறைச் செலாவணிப் பணம் ஆகும். தற்காலத்தில் உலோக நாணயங்களுடன் சேர்த்து, வங்கித் தாள்கள் கொண்டு செல்லத்தக்க பண வடிவமாக விளங்குகின்றன. உயர் பெறுமதி கொண்ட உலோகங்களினால் செய்யப்படும் நினைவு உலோக நாணயங்கள் நீங்கலான ஏனைய நாணயங்களிலும் பார்க்க வங்கித்தாள்கள் பெறுமதி கூடியவையாக இருக்கும்.

முற்காலத்தில், பணம் உயர் மதிப்புக்கொண்ட உலோகங்களால் ஆன நாணயங்களாக இருந்தன. இவ்வாறான நாணயங்களே வணிக நடவடிக்கைகளில் பயன்பட்டு வந்தன. வங்கித்தாள்கள் இவ்வாறான நாணயங்களுக்கு ஒரு பதிலீடான காவிச் செல்லக்கூடிய பண வடிவமாக விளங்கிவருகின்றன.

கொண்டு செல்லத்தக்க பணம் தொடர்பிலான செலவுகள் வருமாறு:

  1. உற்பத்தி செய்து வெளியிடுவதற்கான செலவு: உலோகநாணயங்கள், பெருந் தொழில் முறைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன. பயன்படும் உலோகங்களின் கடினத்தன்மையைக் கூட்டுவதற்காகவும், தேய்மானத்தைத் தாங்கும் தன்மையைக் கொடுப்பதற்கும் பிற சேர்மானங்களையும் சேர்க்கவேண்டியிருக்கிறது. இக்காரணங்களால் நாணயங்களை உற்பத்தி செய்வதற்கான செலவு அதிகம். வங்கித்தாள்கள் காகிதத்திலேயே அச்சிடப்படுவதால் அவற்றை உற்பத்தி செய்வதற்கான செலவு குறைவு. குறிப்பாக உயர் பெறுமானம் கொண்ட வங்கித்தாள்களுக்கான செலவு அதே பெறுமானம் கொண்ட உலோக நாணயங்களுக்கான செலவுகளிலும் மிகவும் குறைவு.
  2. தேய்மானம்: மிகவும் மோசமான நிலையில் இருந்தாலும், தேய்வினால் வங்கித்தாள்களின் பெறுமானம் குறைவது இல்லை. அப்போதும் அவற்றை வெளியிட்ட வங்கிகளில் அவற்ரை மாற்றிக் கொள்ளலாம். ஆனாலும் இப் பழுதான தாள்களைப் பதிலீடு செய்வதற்கான செலவை வெளியிடும் வங்கி ஏற்கவேண்டியிருக்கும். அத்துடன் வங்கித்தாள்கள், உலோக நாணயங்களிலும் விரைவாகத் தேய்மானம் அடைகின்றன.
  3. முதலீட்டுக்கான பிறவாய்ப்புச் செலவுகள்: உலோகநாணயங்களுக்கு இயல்பாகவே பொருளியல் பெறுமதி உண்டு. அவை நிதிசாரா முதல் ஆக உள்ளன. எனினும் அவற்றிலிருந்து வட்டி கிடைப்பதில்லை. வங்கித்தாள்களுக்கு இயல்பாகப் பெறுமானம் இல்லை. ஆனால் அவை ஒரு நிதிசார் முதல் ஆக இருக்கின்றன. இது வெளியிடும் வங்கிக்குக் கொடுத்த ஒரு கடன் போன்றது. வங்கித்தாள்களை வெளியிடுவதனால் உருவாகும் சொத்துக்களை வங்கி வருமானம் பெறக்கூடியவகையில் முதலீடு செய்கின்றன. இதனால் வங்கித்தாள்களினால் மறைமுகமாக வட்டி கிடைக்கின்றது. ஆனால் உலோக நாணயங்களினால் எவருக்கும் வட்டி கிடைப்பதில்லை. இவ்வட்டியே வங்கித் தாள்களில் உள்ள மிகப்பெரிய சாதக நிலை ஆகும்.
  4. போக்குவரத்துச் செலவுகள்: கூடிய பெறுமானங் கொண்ட பணத்தை உலோக நாணயங்களாக ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு எடுத்துச் செல்வது கூடிய செலவு பிடிக்கக்கூடிய ஒன்று. வங்கித்தாள்கள் கூடிய பெறுமானம் கொண்டவையாக இருப்பதாலும், எடை குறைந்தவையாக இருப்பதாலும் இவற்றை எடுத்துச் செல்வதற்கான செலவும் குறைவே.
  5. ஏற்றுக்கொள்வதற்கான செலவு: உலோக நாணயங்களின் தரம், நிறை ஆகியவற்றைச் சோதித்து ஏற்றுக்கொள்வதற்கும் குறிப்பிடத்தக்க அளவில் செலவு பிடிக்கக்கூடும். தரமான நாணய வடிவமைப்பும் உற்பத்தி குறைகளும் இச் செலவுகளைக் குறைக்க உதவும். வங்கித்தாள்களுக்கும் இவ்வாறான ஏற்றுக்கொள்ளும் செலவு உண்டு.
  6. பாதுகாப்பு: வங்கித்தாள்களைப் போலியாக அச்சடித்து வெளிவிடுவது நாணயங்களை போலியாக உருவாக்குவதிலும் இலகுவானது. அதுவும், தரமான வண்ண ஒளிப்படி வசதிகள், போன்றவை தாரளமாகத் தற்காலத்தில் இருப்பதனால் வங்கித்தாள்களை வெளியிடுவதில் பாதுகாப்பு அம்சங்களைக் கவனத்துக்கு எடுக்கவேண்டி உள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்கித்தாள்&oldid=2743697" இலிருந்து மீள்விக்கப்பட்டது