கன்பூசியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மக்கள் சீனக் குடியரசில் உள்ள வூவெய் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் கன்பியூசியக் கோயில் ஒன்று.

கன்பூசியம் அல்லது கன்பூசியஸ்நெறி என்பது சீனத்து ஒழுக்கநெறி மற்றும் தத்துவ அமைப்பாகும், இஃது கன்பூசியஸ் ('குங்-பூ-ட்சு’ அதாவது ”ஆசிரியர் காங்”, கி.மு 551 - 479) என்ற சீன தத்துவஞானியின் போதனைகளில் இருந்து உருவாக்கப்பட்டதாகும். கன்பூசியஸ்நெறி இளவேனில் மற்றும் இலையுதிர் காலத்தின்[1] (கி.மு. 771 - 476) ”ஒழுக்க-சமூகவரசியல் போதனை”களாக தோன்றி, பின்னர் ஆன் அரசமரபின் காலத்தில் (கி.மு 206 - கி.பி 220) இயக்கமறுப்புசார் (Metaphysical) கூறுகளையும் அண்டவமைப்புசார் (Cosmological) கூறுகளையும் ஏற்படுத்திக்கொண்டது. சின் அரசமரபிற்குப் பிறகு சட்டவியல் (இதுவும் ஒரு சீன மெய்யியல்) கைவிடப்பட்டதைத் தொடர்ந்து கன்பூசியஸ்நெறி சீனாவின் அதிகாரபூர்வ நாட்டுக் கொள்கை ஆயிற்று. பின்னர், சீனக் குடியரசு அமைந்ததைத் தொடர்ந்து ‘மக்களின் மூன்று கொள்கைகள்’ என்ற அரசியல்சார் கொள்கை கன்பூசியஸ்நெறியின் இடத்தைப் பிடித்துக்கொண்டது.


கன்பூசியம்
Dacheng Hall.JPG
டாசெங் கூடம், குஃபூவில் உள்ள கன்பூசியஸின் கோயிலின் முக்கிய கூடம்
சீனம்

கன்பூசியஸ்நெறியின் மையக்கரு மாந்தநேயமே, தனிநபர் மற்றும் சமூக செயல்பாடுகள் மூலம், குறிப்பாய் தற்பண்படுத்தல் மற்றும் தன்னாக்கம் கொண்ட செயல்பாடுகள் மூலம், மனிதர்கள் கற்றுக்கொடுக்கப்படக் கூடியவர்கள், மேம்படுத்தப்படக் கூடியவர்கள் மற்றும் முழுமைபடுத்தப்படக் கூடியவர்கள் என்ற நம்பிக்கையே அடிப்படை. கன்பூசியஸ்நெறி பண்புநலன்களை வளர்த்துக்கொளல் மற்றும் ஒழுக்கநெறிகளைக் கடைபிடித்தல் ஆகியவற்றிலேயே கவனம் செலுத்துகிறது. இவற்றுள் மிக அடிப்படையானவை ’ரென்’, ’இயி’ மற்றும் ’இலி’ என்பவை. ’ரென்’ என்பது ஒரு சமூகத்தில் உள்ள பிற நபர்கள் மீதான மாந்தநேயமும் பொதுநலம் மீதான கடமையுணர்வும் ஆகும். ’இயி’ என்பது நியாயத்தை நிலைநிறுத்த முனைதலும் நன்மை செய்ய விழையும் ஒழுக்க மனப்பான்மையும் ஆகும். ’இலி’ என்பது ஒரு சமூகத்தினுள் ஒரு மனிதன் எவ்வாறு முறையாக செயல்பட வேண்டும் என நிர்னயிக்கும் விதிகளும் நியாயங்களும் ஆகும். ’ரென்’ மற்றும் ‘இயி’ ஆகியவற்றின் உயிரான அறப்பண்புகளைக் காக்க வேண்டி ஒருவன் தன் உயிரையும் கூட தர வேண்டும் என்று கன்பூசியஸ்நெறி வலியுறுத்துகிறது. கன்பூசியஸ் என்ற மனிதர் சீனத்து பழைய மதங்களின் மீது நம்பிக்கைகொண்டவர் என்றபொழுதிலும், கன்பூசியஸ்நெறி என்ற கொள்கை மாந்தநேயம் சார்ந்ததாயும், இறைசாரா நெறியாகவுமே இருக்கிறது, இது மீஇயற்கையிலோ அல்லது உருவஞ்சார் இறைவனிலோ நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.


கன்பூசியஸ்நெறியினால் வலுவாக தாக்கமடைந்த கலாச்சாரங்கள் மற்றும் நாடுகளின் பட்டியல் பெருநிலச் சீனா, தாய்வான், கொரியா, ஜப்பான் மற்றும் வியட்நாம், மற்றும் சிங்கப்பூர் போன்ற சீன மக்கள் பெருவாரியாக சென்று குடியமர்ந்த பலப்பல நிலப்பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்தப் பகுதிகளில் கன்பூசிய கருத்துக்கள் நிலவினாலும், இச்சமூகத்தைச் சேராத சிலரும் தங்களை கன்பூசியர்கள் (கன்பூசியஸ் நெறியைப் பின்பற்றுபவர்) என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர், கன்பூசியஸ் நெறியை ஒரு மதமாய் காணுவதற்குப் பதில் பிற நெறிகள் அல்லது நம்பிக்கைகளுக்கு ஒரு துணை வழிகாட்டி நெறியாய் காண்கின்றனர், அப்பிற நெறிகள் மக்களாட்சி, மார்க்சியம், முதலாளித்துவம், கிறித்தவம், இசுலாம் மற்றும் பௌத்தம் போன்றவை. ஐக்கிய நாடுகள் சபை கன்பூசியத்தை ஒரு சமயமாகவும் அடையாளப்படுத்தியுள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. இளவேனில் மற்றும் இலையுதிர் காலம் என்பது சீன வரலாற்றில் ஏறத்தாழ கி.மு. 771 முதல் 476 வரை, மஞ்சள் நதியின் வண்டல் சமவெளி, ஷாங்டாங் தீபகற்பம் மற்றும் உஹாய் மற்றும் ஆன்-இன் நதி வெளிகளில் நிகழ்ந்த காலம் ஆகும். இஃது தோராயமாக கீழச் சவு அரசமரபின் முதல் பாதியைக் குறிக்கிறது. இந்தப் பெயர் ‘இளவேனில் மற்றும் இலையுதிர் கால வரலாற்றுப் பதிவேடு’ என்ற நூலின் பெயரால் வந்தது ஆகும், இந்நூல் ’லூ’ என்ற மாநிலத்தின் கி.மு. 722-479-இனி காலவரிசை வரலாறாகும், இந்நூல் கன்பூசியஸால் எழுதப்பட்டது என்பது மரபு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்பூசியம்&oldid=2401367" இருந்து மீள்விக்கப்பட்டது