மங்கோலியத் தாயகத்தில் பல்வேறு நாடோடிப் பழங்குடியினங்கள் செங்கிஸ் கானின்தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டதிலிருந்து மங்கோலியப் பேரரசு தோன்றியது. 1206ஆம் ஆண்டு ஒரு அவையானது இவரை அனைத்து மங்கோலியர்களின் மன்னனாகப் பொது அறிவிப்புச் செய்தது. இவரது ஆட்சி மற்றும் இவரது வழித்தோன்றல்களின் ஆட்சியின்போது பேரரசானது வேகமாக விரிவடைந்தது. இவரது வழித்தோன்றல்கள் அனைத்துத் திசைகளிலும் படையெடுக்கும் இராணுவங்களை அனுப்பினர்.[7][8] வலிந்து செயற்படுத்தப்பட்ட மங்கோலிய அமைதியில், கண்டங்களில் பரவியிருந்த இப்பேரரசானது கிழக்குயும், மேற்கையும் இணைத்தது. அமைதிப் பெருங்கடலையும், நடுநிலக் கடலையும் இணைத்தது. இது வணிகம், தொழில்நுட்பங்கள், பண்டங்கள், மற்றும் சித்தாந்தங்கள் ஐரோவாசியா முழுவதும் விரைவாகப் பரவ மற்றும் பரிமாற்றப்பட அனுமதித்தது.[9][10]
அடுத்த ககான் யார் என்ற போரில் பேரரசானது பிரிய ஆரம்பித்தது. அரசகுலமானது ஒக்தாயியின் வழித்தோன்றல்களாக இருக்க வேண்டுமா அல்லது செங்கிஸ் கானின் மற்ற மகன்களான டொலுய், சகதாயி அல்லது சூச்சியின் வழித்தோன்றல்களாக இருக்க வேண்டுமா என செங்கிஸ் கானின் பேரன்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டது. ஒக்தாயி மற்றும் சகதாயி பிரிவுகளை ஒரு குருதி தோய்ந்த ஒழித்துக்கட்டலுக்குப் பிறகு டொலுய் வழித்தோன்றல்கள் வெற்றி கண்டனர். ஆனால் பிணக்கானது டொலுயின் வழித்தோன்றல்களுக்கு இடையிலும் தொடர்ந்தது. இந்தப் பிரிவுக்கு ஒரு முக்கியக் காரணமானது, மங்கோலியப் பேரரசானது நிலைகொண்டதும், பிறநாட்டுப் பண்பாட்டுத் தாக்கம் கொண்டதுமான பேரரசாக இருக்க வேண்டுமா அல்லது நாடோடி மற்றும் புல்வெளியை அடிப்படையாகக் கொண்ட மங்கோலிய வாழ்க்கை முறைக்கு உண்மையாக இருக்க வேண்டுமா என ஏற்பட்ட சண்டையேயாகும். 1259ஆம் ஆண்டு மோங்கே கான் இறந்த பிறகு, இரண்டு எதிரெதிர்க் குறுல்த்தாய் அவைகள் ஒரே நேரத்தில் வெவ்வேறு புதிய ககான்களைத் தேர்ந்தெடுத்தன. அவர்கள் அண்ணன் தம்பிகளான குப்லாய் கான் மற்றும் அரிக் போகே ஆவர். இவர்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் டொலுய் உள்நாட்டுப் போரில் சண்டையிட்டுக் கொண்டனர். அதே நேரத்தில் செங்கிஸ் கானின் மற்ற மகன்களின் வழித்தோன்றல்களிடமிருந்து ஏற்பட்ட சவால்களையும் எதிர்கொண்டனர்.[11][12] குப்லாய் வெற்றிகரமாக ஆட்சியைக் கைப்பற்றினார். சகதாயி மற்றும் ஒக்தாயி குடும்பங்களைக் கட்டுப்படுத்தக் குப்லாய் செய்த முயற்சி காரணமாக உள்நாட்டுப் போரானது மீண்டும் ஏற்பட்டது. குப்லாயின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
செங்கிஸ் கான் மற்றும் ஒக்தாயி கானின் ஆட்சியின் போது, திறமை குறைந்த ஒரு தளபதி படைக்குத் தலைமையேற்ற போது மங்கோலியர்கள் சில நேரங்களில் தோல்வியடைந்தனர். சைபீரியத் துமேதுகள் 1215-1217ல் போரோகுலா தலைமையிலான மங்கோலியப் படைகளைத் தோற்கடித்தனர். 1221ஆம் ஆண்டு ஜலாலத்தீன்பர்வான் யுத்தத்தில்சிகி குதுகுவைத் தோற்கடித்தார். 1230ஆம் ஆண்டு தோல்கோல்குவைச் சின் தளபதிகளான கெதாவும், புவாவும் தோற்கடித்தனர். ஒவ்வொரு முறையும், தங்களது சிறந்த தளபதிகளில் ஒருவரால் தலைமை தாங்கப்பட்ட ஒரு பெரிய இராணுவத்துடன் மங்கோலியர்கள் சீக்கிரமே திரும்பி வந்தனர். ஒவ்வொரு முறையும் நிலையான வெற்றியைப் பெற்றனர். 1260ஆம் ஆண்டு கலிலேயாவில் நடந்த ஐன் ஜலுட் யுத்தமானது முதல் முறையாக மங்கோலியர்கள் சீக்கிரமே தங்களது தோல்வியைப் பழிதீர்க்கத் திரும்பி வராத நிகழ்வைக் குறித்தது. இதற்குச் சில நிகழ்வுகள் காரணங்களாக அமைந்தன. அவை, 1259ஆம் ஆண்டு மோங்கே கான் இறந்தது, அரிக் போகே மற்றும் குப்லாய் கானுக்கு இடையிலான டொலுய் உள்நாட்டுப் போர், மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின்பெர்கே கான் பாரசீகத்தில் குலாகு கானைத் தாக்கியது ஆகியவையாகும். மங்கோலியர்கள் மேலும் பல படையெடுப்புகளை லெவண்ட் மீது நடத்தினர். குறுகிய காலத்திற்கு அதை ஆக்கிரமித்திருந்தனர். 1299ஆம் ஆண்டு வடி அல்-கசுனதர் யுத்தத்தில் பெற்ற ஒரு தீர்க்கமான வெற்றிக்குப் பிறகு காசா வரை முன்னேறினர். எனினும் பல புவிசார் அரசியல் கூறுகள் காரணமாக அங்கிருந்து விலகிச் சென்றனர்.
1368ஆம் ஆண்டு ஆன் சீனர்களால் ஆளப்பட்ட மிங் அரசமரபானது யுவான் தலைநகரான தடுவைக் கைப்பற்றியது. இந்நிகழ்வு உள் சீனாவில் யுவான் அரசமரபின் வீழ்ச்சியைக் குறித்தது. யுவானை ஆண்ட செங்கிஸ் கானின் வழிவந்த ஆட்சியாளர்கள் வடக்கு நோக்கிப் பின்வாங்கினர். மங்கோலியப் பீடபூமியைத் தொடர்ந்து ஆண்டு வந்தனர். இந்த அரசானது வரலாற்றில் வடக்கு யுவான் அரசமரபு என்று அறியப்படுகிறது. 1335–1353 காலகட்டத்தில் ஈல்கானரசானது பல துண்டுகளாக உடைந்தது. 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் தங்க நாடோடிக் கூட்டமானது ஒன்றோடொன்று போட்டியிட்ட கானரசுகளாக உடைந்து போனது. மாஸ்கோவின் மாட்சி மிக்க வேள் பகுதியால் 1480ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டு, உருசியாவில் இருந்து தூக்கியெறியப்பட்டது. அதே நேரத்தில் சகதாயி கானரசானது ஒரு வடிவம் அல்லது மற்றொரு வடிவத்தில் 1687ஆம் ஆண்டுவரை நீடித்திருந்தது.
மங்கோலியப் பேரரசு தன்னைத் தானே ᠶᠡᠬᠡ ᠮᠣᠩᠭᠣᠯ ᠤᠯᠤᠰஎகே மங்கோல் உளூசு ('மகா மங்கோலியர்களின் தேசம்' அல்லது 'மகா மங்கோலிய தேசம்') என மங்கோலிய மொழியிலும் அல்லது குர் உளுய் உளூசு ('முழு மகா தேசம்') துருக்கிய மொழியிலும் அழைத்துக் கொண்டது.[20]
1260 முதல் 1264 வரையிலான, குப்லாய் கான் மற்றும் அவரது தம்பி அரிக் போகே இடையிலான வாரிசுரிமைப் போருக்குப் பிறகு, குப்லாயின் சக்தியானது பேரரசின் கிழக்கில் சீனாவை மையமாகக் கொண்டிருந்த பகுதியில் மட்டுமே நீடித்தது. 18 திசம்பர் 1271ஆம் ஆண்டு குப்லாய் அலுவல் ரீதியாக ஒரு ஏகாதிபத்திய அரசாணை ஒன்றை வெளியிட்டார். அதில் தன் நாட்டிற்குப் பெரிய யுவான் என்று பெயரிட்டார். யுவான் அரசமரபை நிறுவினார்.[21]
10ஆம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியா, மஞ்சூரியா மற்றும் வட சீனாவின் பகுதிகளைச் சுற்றியிருந்த நிலப்பரப்பானது இலியாவோ அரசமரபின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1125ல் சுரசன்களால் நிறுவப்பட்ட சின் அரசமரபானது இலியாவோ அரசமரபைத் தூக்கியெறிந்தது. மங்கோலியாவில் இருந்த முந்தைய இலியாவோ நிலப்பரப்பின் மீது கட்டுப்பாட்டைப் பெற முயற்சித்தது. 1130களில் தங்க மன்னர்கள் என்று அழைக்கப்பட்டசின் அரசமரபின் ஆட்சியாளர்கள் வெற்றிகரமாக கமக் மங்கோல் கூட்டமைப்பை எதிர்த்துத் தாக்குப் பிடித்தனர். அந்நேரத்தில் கமக் மங்கோல் கூட்டமைப்பைச் செங்கிஸ் கானின் பூட்டனான காபூல் கான் ஆட்சி செய்தார்.[22]
மங்கோலியப் பீடபூமியானது முக்கியமாக ஐந்து சக்தி வாய்ந்த பழங்குடியினக் கூட்டமைப்புகளின் ஆளுமையில் இருந்தது. இந்தக் கூட்டமைப்புகள் கான்லிக்குகள் என்று அழைக்கப்பட்டன. இந்த ஐந்து பழங்குடியினங்கள் கெரயிடுகள், கமக் மங்கோல், நைமர்கள், மெர்கிடுகள் மற்றும் தாதர்கள் ஆகியோராவர். சின் பேரரசர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டனர். பழங்குடியினங்களுக்கு இடையே பிணக்குகளை ஊக்குவித்தனர். குறிப்பாகத் தாதர்கள் மற்றும் மங்கோலியர்களிடையே அவர்கள் இதை ஊக்குவித்தனர். இதன் மூலமாக நாடோடிப் பழங்குடியினங்களின் கவனமானது அவர்களது சொந்த யுத்தங்களால் சிதறி இருக்கும். இவ்வாறாகச் சின் நாட்டிலிருந்து அவர்கள் விலகி இருப்பர். காபூலுக்குப் பிறகு அம்பகை கான் ஆட்சிக்கு வந்தார். அவருக்குத் தாதர்கள் நம்பிக்கை துரோகம் செய்தனர். சுரசன்களிடம் அவரைப் பிடித்துக் கொடுத்தனர். அங்கு அவர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். இதற்குப் பதிலடியாக மங்கோலியர்கள் சின் எல்லைப் பகுதிகள் மீது திடீர்ச் சூறையாடல் செய்தனர். 1143ஆம் ஆண்டு எதிர்த்தாக்குதல் நடத்த சுரசன்கள் செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது.[22]
1147ஆம் ஆண்டு சின்கள் தங்களது கொள்கையை மாற்றிக் கொண்டனர். மங்கோலியர்களுடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டனர். பல கோட்டைகளில் இருந்து தங்களது படைகளை விலக்கிக் கொண்டனர். தங்களது முந்தைய கானின் இறப்பிற்குப் பழிவாங்குவதற்காக, தாதர்கள் மீதான தாக்குதல்களை மங்கோலியர்கள் பிறகு தொடர்ந்தனர். நீண்ட காலத்திற்குத் தொடர்ந்த சண்டைக்கு இது தொடக்கமாக அமைந்தது. 1161ஆம் ஆண்டு சின் மற்றும் தாதர் இராணுவங்கள் மங்கோலியர்களைத் தோற்கடித்தன.[22]
13ஆம் நூற்றாண்டில் மங்கோலியப் பேரரசின் வளர்ச்சியின் போது நடு ஆசியாவின் பொதுவாகக் குளிர்ந்த மற்றும் வறண்ட புல்வெளிகளானவைத் தமது மிதமான மற்றும் ஈரமான சூழ்நிலைகளை 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் ஒரே ஒரு முறையாக அந்நேரத்தில் பெற்றன. இதன் காரணமாக போர்க் குதிரைகள் மற்றும் பிற கால்நடைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது எனக் கருதப்படுகிறது. இவ்வாறாக எண்ணிக்கை அதிகரித்ததால் மங்கோலிய இராணுவத்தின் பலமானது பெருமளவுக்கு மேம்பட்டது.[23]
கிதான்களின் இலியாவோ அரசமரபின் (907-1125) கீழ் மங்கோலியப் பழங்குடியினங்கள்.மங்கோலியப் படையெடுப்புகளுக்குச் சற்று முன் பழைய உலகம். அண். கி. பி. 1200.
தனது குழந்தைப் பருவத்தில் தெமுஜின் என்று அழைக்கப்பட்ட செங்கிஸ் கான் ஒரு மங்கோலியப் பழங்குடியினத் தலைவரின் மகன் ஆவார். இவரது மிகுந்த சக்திவாய்ந்த கூட்டாளிகளாக இவரது தந்தையின் நண்பரும், கெரயிடு பழங்குடியினத் தலைவருமான தொகுருலும், தெமுஜினின் குழந்தைப்பருவ ஆண்டாவான (இரத்த சகோதரன்) சதரன் பழங்குடியினப் பிரிவின் சமுக்காவும் இருந்தனர். இவர்களது துணையுடன் தெமுஜின் மெர்கிடுப் பழங்குடியினரைத் தோற்கடித்தார். தனது மனைவி போர்ட்டேயை மீட்டார். கெரயிடு பழங்குடியினத்தின் தலைவரான தொகுருல் கானுடன் பணியாற்றியதன் காரணமாக ஒரு இளைஞனாகச் செங்கிஸ் கான் மிக வேகமாக வளர்ச்சியடைந்தார். அக்காலத்தில் மிகுந்த சக்தி வாய்ந்த மங்கோலியத் தலைவர் தொகுருல் கான் ஆவார். இவர் குர்தைத்து என்றும் அழைக்கப்பட்டார். இவருக்குச் சீனப் பட்டமான "வாங்" என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. இதன் பொருள் மன்னன் என்பதாகும்.[24] தெமுஜின் குர்தைத்துக்கு எதிராகப் போர் புரிந்தார். குர்தைத்துத் தற்போது வாங் கான் என்று அழைக்கப்படுகிறார். வாங் கானைத் தோற்கடித்தார்; நைமர்கள் மற்றும் தாதர்களைத் தோற்கடித்தார்;[25] தெமுஜின் செங்கிஸ் கான் என்ற பட்டம் பெற்றார்; பிறகு தான் மற்றும் தன் வழித் தோன்றல்களின் கீழ் தனது மங்கோலிய அரசை விரிவுபடுத்தினார். செங்கிஸ் கானின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த அனைத்து மங்கோலிய மொழி பேசிய பழங்குடியினங்களும் மங்கோலியர் என்ற சொல்லால் அழைக்கப்பட்டனர்.
தன்னுடைய அனுமதியின்றித் தன் எதிரிகளைச் சூறையாடுவதைத் தெமுஜின் தடை செய்தார். போரில் கிடைத்த பொருட்களை முழுவதும் மேற்குடி மக்களுக்குக் கொடுப்பதைத் தவிர்த்து தன்னுடைய வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுடன் பகிர்ந்து கொள்ளும் கொள்கையைத் தெமுஜின் செயல்படுத்தினார்.[26] இவரது இந்தக் கொள்கைகள் காரணமாக இவரது உறவினர்களுடன் இவருக்குச் சண்டை ஏற்பட்டது. அரியணைக்கு வரும் உரிமையானது இவரது உறவினர்களுக்கும் இருந்தது. அவர்கள் தெமுஜினைத் தலைவனாகக் கருதாமல் அரியணையைக் கைப்பற்றிய ஒரு அகந்தை கொண்ட மனிதனாகக் கருதினர். இந்த அதிருப்தியானது இவரது தளபதிகள் மற்றும் பிற உதவியாளர்களிடையே பரவியது. முன்னர் இவருடன் கூட்டணி வைத்திருந்த சில மங்கோலியர்கள் தங்களது கூட்டணியை முறித்துக் கொண்டனர்.[25] இறுதியாகப் போர் நடைபெற்றபோது, தெமுஜின் மற்றும் அவருக்கு இன்னும் விசுவாசமாக இருந்த படைகள் போரில் வெற்றி வாகை சூடினர். 1203 மற்றும் 1205ஆம் ஆண்டுக்கு இடையில் எஞ்சிய எதிரிப் பழங்குடியினங்களைத் தோற்கடித்தனர். அவர்களை தெமுஜினின் தாக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர். 1206ஆம் ஆண்டு நடந்த ஒரு குறுல்த்தாயில் (பொது அரசவை) எகே மங்கோல் உளூஸின் (மகா மங்கோலிய தேசம்) ககானாகத் (பேரரசன்) தெமுஜினுக்கு முடி சூட்டப்பட்டது. இங்கு தான் இவர் பழைய பழங்குடியினப் பட்டங்களான குர்கான் அல்லது தயங் கான் ஆகிய பட்டங்களுக்குப் பதிலாகச் செங்கிஸ் கான் என்ற பட்டம் பெற்றார். இதுவே மங்கோலியப் பேரரசின் தொடக்கத்தின் அறிகுறியாகும்.[25]
தனது இராணுவத்தை அமைப்பதில் பல தனித்துவமான வழிகளைச் செங்கிஸ் கான் அறிமுகப்படுத்தினர். உதாரணமாக, தனது இராணுவத்தைப் பத்தின் அடிப்படையிலான பிரிவுகளாகப் பிரித்தார். அப்பிரிவுகள் அருபன்கள் (10 வீரர்கள்), சூன்கள் (100 வீரர்கள்), மிங்கன்கள் (1,000 வீரர்கள்) மற்றும் தியூமன்கள் (10,000 வீரர்கள்) ஆகியவை ஆகும். கேசிக் என்றழைக்கப்பட்ட ஏகாதிபத்திய பாதுகாவலர்களின் அமைப்பானது உருவாக்கப்பட்டது. அவர்கள் மேலும் பகல் (கோர்ச்சின் தோர்குதுகள்) மற்றும் இரவு (கேசிக்) பாதுகாவலர்கள் என்று பிரிக்கப்பட்டனர்.[27] தனக்கு விசுவாசமாக இருந்தவர்களுக்குச் செங்கிஸ் கான் வெகுமதி வழங்கினார். அவர்களை உயர்ந்த பதவிகளில் அமர வைத்தார். அவர்களை இராணுவப் பிரிவுகள் மற்றும் வீட்டுத் தொகுதிகளுக்குத் தலைமை தாங்க வைத்தார். இவ்வாறாக உயர் பதவி பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் தாழ்த்தப்பட்ட இனங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.[28]
தனது விசுவாசமான தோழர்களுக்கு இவர் ஒதுக்கிய பிரிவுகளுடன் ஒப்பிடும்போது தனது சொந்த குடும்ப குடும்ப உறுப்பினர்களுக்கு இவர் ஒதுக்கிய பிரிவுகளின் எண்ணிக்கையானது மிகக் குறைவாகவே இருந்தது. இக் ஜசக் அல்லது யசா என்றழைக்கப்பட்ட ஒரு புதிய சட்ட முறையைத் தனது பேரரசுக்காக இவர் அறிவித்தார். பின்னர் நாடோடிகளின் பெரும்பாலான தினசரி வாழ்க்கை மற்றும் அரசியல் விவகாரங்களை உள்ளடக்கியவாறு இச்சட்டங்களை விரிவுபடுத்தினார். பெண்களை விற்பது, கொள்ளை, மங்கோலியர்களிடையே சண்டையிடுவது மற்றும் இனப்பெருக்கக் காலத்தில் விலங்குகளைக் கொல்வது ஆகியவற்றைத் தடை செய்தார்.[28]
இவர் தனது தத்துத் தம்பி சிகி குதுகுவை ஜருகச்சியாக (உச்ச நீதிபதி) நியமித்தார். பேரரசின் பதிவுகளை வைத்துக்கொள்ளுமாறு அவருக்கு ஆணையிட்டார். குடும்பம், உணவு மற்றும் இராணுவம் குறித்த சட்டங்களுடன், மத சுதந்திரம் வழங்குவது மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகத்திற்கும் செங்கிஸ் கான் ஆணையிட்டார். ஏழைகள் மற்றும் மத குருமார்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்தார்.[29] கல்வியறிவை ஊக்குவித்தார். பேரரசின் மங்கோலிய எழுத்துமுறையாகப் பிற்காலத்தில் உருவான உய்குர் எழுத்துமுறையை ஏற்றுப் பயன்படுத்தச் செய்தார். நைமர்களின் கானிடம் முன்னர் பணியாற்றிய உய்குர் டட்டா டோங்கா என்பவரைத் தன் மகன்களுக்குப் பயிற்றுவிக்க ஆணையிட்டார்.[30]
சீக்கிரமே செங்கிஸ் கானுக்கு வட சீனாவில் சுரசன்களின் சின் அரசமரபு மற்றும் தாங்குடுகளின்மேற்கு சியா ஆகிய நாடுகளுடன் சண்டை ஏற்பட்டது. திபெத்து மற்றும் காரா கிதை ஆகிய மற்ற இரு அரசியல் சக்திகளையும் இவர் எதிர்கொள்ள வேண்டி வந்தது.[31]
தன் இறப்பிற்கு முன்னர் செங்கிஸ் கான் தன் பேரரசைத் தன் மகன்கள் மற்றும் குடும்பத்தினரிடையே பிரித்துக் கொடுத்தார். மங்கோலியப் பேரரசைத் தன் ஒட்டுமொத்த ஏகாதிபத்தியக் குடும்பத்தின் கூட்டுடைமையாக ஆக்கினார். இவ்வாறாக இவரது குடும்பம் மற்றும் மங்கோலிய மேற்குடியினர் மங்கோலியப் பேரரசின் ஆட்சி செய்யும் வகுப்பினராக இருந்தனர்.[32]
மூன்று மேற்குக் கானரசுகள் இஸ்லாமை ஏற்றுப் பின்பற்றுவதற்கு முன்னர், தாங்கள் வேற்றுப் பழக்க வழக்கங்கள் என்று கருதிய சமயப் பழக்கவழக்கங்கள் மீது செங்கிஸ் கான் மற்றும் அவரது பின் வந்த யுவான் வழித்தோன்றல்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் கட்டுப்பாடுகளை விதித்தனர். குயி உள்ளிட்ட முஸ்லிம்கள் மற்றும் யூதர்கள் ஒட்டுமொத்தமாகக் குயிகுயி என்று அழைக்கப்பட்டனர். அலால் அல்லது சபிகா முறையில் மிருகங்களைக் கொலை செய்வதற்கு முஸ்லிம்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. கஷ்ருட் அல்லது ஷெச்சிட்டா பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதற்கும் இதேபோல யூதர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.[33] வெல்லப்பட்ட குடிமக்களை "எமது அடிமைகள்" என்று குறிப்பிட்ட செங்கிஸ் கான், உணவு மற்றும் பானங்களை உண்ணவோ அல்லது குடிக்கவோ மறுக்கக்கூடாது எனக் கோரினார். இறைச்சிக்காகக் கொல்லப்படுவதன் மீது கட்டுப்பாடுகள் விதித்தார். இதன் காரணமாக முஸ்லிம்கள் செம்மறியாடுகளை இரகசியமாகக் கொல்ல வேண்டி வந்தது.[34]
அனைத்து வேற்றுக் குடிமக்களில் குயி-குயி மட்டும் "நாங்கள் மங்கோலிய உணவுகளை உண்ண மாட்டோம்" என்கின்றனர். [சிங்கிஸ் கான் பதிலளித்தார்:] "தெய்வலோகத்தின் உதவியுடன் நாங்கள் உங்களை அமைதிப்படுத்தியுள்ளோம்: நீங்கள் எங்களது அடிமைகள். இருந்தபோதிலும் நீங்கள் எங்களது உணவுகளை உண்ணவோ அல்லது பானங்களைக் குடிக்கவோ மறுக்கிறீர்கள். இது எவ்வாறு சரியாக இருக்க முடியும்?" பிறகு அவர் அவர்களை உண்ணுமாறு செய்தார். "செம்மறியாடுகளை நீங்கள் இறைச்சிக்காகக் கொன்றால், குற்றம் செய்தவர்களாக நீங்கள் கருதப்படுவீர்கள்." அவர் இதற்காக ஒரு ஒழுங்கு முறையை வெளியிட்டார் … [1279/1280ல் குப்லாயின் கீழ்] அனைத்து முஸ்லிம்களும் கூறுகின்றனர்: "மற்றவர்கள் [விலங்குகளைக்] கொன்றால் நாங்கள் உண்ண மாட்டோம்." ஏழை மக்கள் வருத்தப்படுவதன் காரணமாக, இன்று முதல் முசுலுமான் (முஸ்லிம்) குயிகுயி மற்றும் சுகு (யூதர்) குயிகுயி ஆகியோர், யார் [மிருகங்களைக்] கொல்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் [அவற்றை] உண்ண வேண்டும். தாங்களே செம்மறியாடுகளைக் கொல்வதை நிறுத்த வேண்டும்.[35]
சீனத் தாவோயியத் துறவி சியு சுஜி தன்னைக் காண ஆப்கானித்தானுக்கு வர ஏற்பாடுகளைச் செங்கிஸ் கான் செய்தார். தான் ஷாமன் மத நம்பிக்கைகளைக் கொண்டிருந்தவராக இருந்தபோதிலும், தனது குடிமக்களுக்கு சமய சுதந்திர உரிமையை வழங்கினார்.
செங்கிஸ் கானின் இறப்பும் ஒக்தாயியின் கீழ் விரிவாக்கமும் (1227–1241)
செங்கிஸ் கான் 18 ஆகத்து 1227ஆம் ஆண்டு இறந்தார். அவரது இறப்பின்போது மங்கோலியப் பேரரசானது அமைதிப் பெருங்கடல் முதல் காசுப்பியன் கடல் வரை இருந்த நிலப் பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. உளங்கவர் திறன் கொண்ட தனது மூன்றாவது மகன் ஒக்தாயியைச் செங்கிஸ் கான் தனது வாரிசாகப் பெயரிட்டார். இறப்பிற்குப் பிறகு, மங்கோலியப் பாரம்பரியப்படி, ஒரு இரகசிய இடத்தில் செங்கிஸ் கான் புதைக்கப்பட்டார். 1229ஆம் ஆண்டு நடந்த குறுல்த்தாயில் ஒக்தாயி அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவரது தம்பி டொலுய் மங்கோலியப் பேரரசின் பிரதிநிதியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பதவி வகித்தார்.[36]
ஒக்தாயி தனது முதல் நடவடிக்கையாகக் கிப்சாக்குகளின் கட்டுப்பாட்டிலிருந்த புல்வெளிப் பகுதிகளின் பசுகிர்கள், பல்கர்கள் மற்றும் பிற நாடுகளை அடிபணிய வைக்கத் துருப்புக்களை அனுப்பினார்.[37] கிழக்கில் ஒக்தாயியின் இராணுவங்கள் மஞ்சூரியாவில் மங்கோலிய அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டின. கிழக்கு சியா அரசு மற்றும் நீர்த் தாதர்களை நொறுக்கின. 1230ஆம் ஆண்டு சீனாவின் சின் அரசமரபுக்கு எதிரான படையெடுப்பில் பெரிய கான் தானே தன் இராணுவத்திற்குத் தலைமை தாங்கினார். 1232ஆம் ஆண்டு கைபேங் முற்றுகையின்போது ஒக்தாயியின் தளபதி சுபுதை பேரரசர் வன்யன் சோவுக்சுவின் தலைநகரத்தைக் கைப்பற்றினார்.[38] கைசோவு நகரத்திற்கு வன்யன் சோவுக்சு தப்பித்து ஓடினார். 1234ஆம் ஆண்டு கைசோவு நகரத்தையும் மங்கோலியர்கள் கைப்பற்றினர். சின் அரசமரபு வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. 1234ஆம் ஆண்டு ஒக்தாயியின் மகன்கள் கோச்சு மற்றும் கோதன் மற்றும் தாங்குடு தளபதி சகன் ஆகியோரின் தலைமையிலான மூன்று இராணுவங்கள் தெற்கு சீனா மீது படையெடுத்தன. சாங் அரசமரபின் ஒத்துழைப்புடன் மங்கோலியர்கள் 1234ஆம் ஆண்டு சின்களின் கதையை முடித்தனர்.[39]
பல ஆன் சீனர்கள் மற்றும் கிதான்கள் சின்களுக்கு எதிரான போரில் மங்கோலியர்கள் பக்கம் கட்சி தாவினர். இரண்டு ஆன் சீனத் தலைவர்கள் சி தியான்சே, லியூ கெயிமா[40] மற்றும் கிதான் இனத்தின் சியாவோ சாலா ஆகியோர் மங்கோலியர்கள் பக்கம் கட்சி தாவினர். மங்கோலிய இராணுவத்தில் மூன்று தியூமன்களுக்கு இவர்கள் தலைமை தாங்கினர்.[41] ஒக்தாயி கானிடம் பணியாற்றிய லியூ கெயிமா மற்றும் சி தியான்சே ஆகியோர்[42] மங்கோலியர்களுக்காக மேற்கு சியாவிற்கு எதிராக இராணுவங்களுக்குத் தலைமை தாங்கினர்.[43] ஒவ்வொரு தியூமனும் 10,000 துருப்புக்களை உள்ளடக்கியதாக இருந்த, நான்கு ஆன் தியூமன்கள் மற்றும் மூன்று கிதான் தியூமன்கள் இருந்தன. யுவான் அரசமரபானது கட்சி தாவியவர்களைக் கொண்டு ஒரு ஆன் இராணுவத்தையும், புதிதாக அடிபணிந்த இராணுவம் என்ற பெயரில் முன்னாள் சாங் துருப்புகளைக் கொண்ட ஒரு இராணுவத்தையும் உருவாக்கியது.[44]
மேற்குப் பகுதியில் குவாரசமியப் பேரரசின் கடைசி ஷாவானஜலாலத்தீன் மிங்புர்னுவை ஒக்தாயியின் தளபதி சோர்மகன் அழித்தார். தெற்குப் பாரசீகத்திலிருந்த சிறு இராச்சியங்கள் மங்கோலிய முதன்மை நிலையைத் தாமாக முன்வந்து ஒப்புக்கொண்டன.[45][46] கிழக்காசியாவில் கொர்யியோ கொரியாவுக்குள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மங்கோலியப் படையெடுப்புகள் நடத்தப்பட்டன. எனினும் கொரியாவை இணைக்கும் ஒக்தாயி செய்த முயற்சியானது சிறிதளவே வெற்றியைக் கொடுத்தது. கொர்யியோவின் மன்னனான கோசோங் சரண் அடைந்தார். ஆனால் பிறகு கலகத்தில் ஈடுபட்டு மங்கோலியத் தருகச்சியைக் கொலை செய்தார். பிறகு தன்னுடைய ஏகாதிபத்திய அவையைக் கேசாங்கில் இருந்து கங்குவா தீவுக்கு மாற்றினார்.[47]
1238ல் படு கானின் சுஸ்டால் சூறையாடல், 16ஆம் நூற்றாண்டு நூல் ஓவியம்.
அதே நேரத்தில் சாங் அரசமரபுக்கு எதிரான தாக்குதல் செயலில் மங்கோலிய இராணுவங்கள் சியாங்-யாங், யாங்சி மற்றும் சிச்சுவான் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினர். எனினும் தங்களால் வெல்லப்பட்ட பகுதிகளின் மீதான கட்டுப்பாட்டை உறுதிபடுத்த அவர்களால் முடியவில்லை. 1239ஆம் ஆண்டு மங்கோலியர்களிடமிருந்து சியாங்-யாங்கைச் சாங் தளபதிகள் மீண்டும் கைப்பற்றினர். சீன நிலப்பகுதியில் ஒக்தாயியின் மகன் கோச்சுவின் திடீர் மரணத்திற்குப் பிறகு மங்கோலியர்கள் தெற்கு சீனாவிலிருந்து பின்வாங்கினர். எனினும் அவர்கள் பின்வாங்கிச் சிறிது காலத்திலேயே கோச்சுவின் சகோதரன் இளவரசன் கோதன் திபெத்து மீது படையெடுத்தார்.[25]
தெற்கு உருசியப் புல்வெளிகளில் இருந்த பல்கர்கள், ஆலன்கள், கிப்சாக்குகள், பஷ்கிர்கள், மொர்டுவின்கள், சுவாசு மற்றும் பிற நாடுகளின் நிலப்பரப்புகள் மீது செங்கிஸ் கானின் மற்றொரு பேரனாகிய படு கான் ஓட்டம் நடத்தினார். 1237ஆம் ஆண்டு வாக்கில் தாங்கள் தாக்கப் போகும் முதல் கீவ உருசிய வேள் பகுதியான ரியாசானுக்கு அருகில் இருந்த பகுதிகளுக்குள் மங்கோலியர்கள் அத்துமீறி நுழைய ஆரம்பித்தனர். கடும் சண்டையை உள்ளடக்கிய மூன்று நாள் முற்றுகைக்குப் பிறகு மங்கோலியர்கள் நகரைக் கைப்பற்றினர். குடிமக்களைப் படுகொலை செய்தனர். பிறகு சித் ஆற்று யுத்தத்தில் விளாதிமிரின் மாட்சி மிக்க வேள் பகுதியின் இராணுவத்தை அழிக்க முன்னேறினர்.[48]
1238ஆம் ஆண்டில் ஆலனியாவின் தலைநகரமான மகாசுவை மங்கோலியர்கள் கைப்பற்றினர். 1240ஆம் ஆண்டு வாக்கில் ஒரு சில வடக்கு நகரங்களைத் தவிர அனைத்து கீவ உருஸ் நகரங்களும் ஆசிய படையெடுப்பாளர்களிடம் வீழ்ந்தன. பாரசீகத்தில் இருந்த சோர்மகன் தலைமையிலான மங்கோலியத் துருப்புக்கள் தமது தெற்கு காக்கேசியப் படையெடுப்பைப் படு மற்றும் சுபுதையின் படையெடுப்புடன் இணைத்தனர். சியார்சியா மற்றும் ஆர்மீனியா மேற்குடியினரைச் சரணடையக் கட்டாயப்படுத்தினர்.[48]
திருத்தந்தையின் மங்கோலியக் ககானுக்கான தூதரான சியோவனி டி பிலானோ கர்பினி கீவ் வழியாகப் பெப்ரவரி 1246ல் பயணித்தார். அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்:
“
அவர்கள் (மங்கோலியர்கள்) உருசியாவைத் தாக்கினர். பெரும் அழிவை ஏற்படுத்தினர். நகரங்கள் மற்றும் கோட்டைகளை அழித்து, ஆண்களைப் படுகொலை செய்தனர்; உருசியாவின் தலைநகரமான கீவை முற்றுகையிட்டனர். நீண்ட காலத்திற்கு நகரை முற்றுகையிட்ட பிறகு, அதனை வென்றனர். நகரமக்கள் கொல்லப்பட்டனர். நாங்கள் அந்த நிலப்பகுதியின் வழியே பயணித்தபோது இறந்த மனிதர்களின் எண்ணற்ற மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் தரையில் கிடந்தன. கீவானது மிகப்பெரிய மற்றும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பட்டணமாக இருந்தது. ஆனால் இப்போது அது ஒன்றும் இல்லாமல் போய்விட்டது, தற்போது அங்கு இருநூறுக்கும் குறைவான வீடுகளே உள்ளன. குடியிருப்போர் முற்றிலும் அடிமைத் தளையில் உள்ளனர்.[49]
”
உருசியர்களிடம் வரி வசூலிக்கும் ஒரு மங்கோலியத் தருகச்சி.
இராணுவ வெற்றிகள் கிடைத்தபோதிலும் மங்கோலிய ஆளுமைகளிடம் சச்சரவானது தொடர்ந்து. ஒக்தாயியின் மூத்த மகன் குயுக் கான் மற்றும் சகதாயி கானின் விருப்பத்திற்குரிய பேரனான புரி ஆகியோருடன் படுவின் உறவுமுறையானது தொடர்ந்து இறுக்கமானதாக இருந்தது. தெற்கு கீவ உருஸில் நடந்த படுவின் வெற்றி விருந்தில் இந்த உறவுமுறை மோசமடைந்தது. எனினும் படுவின் சிற்றப்பா ஒக்தாயி உயிருடன் இருக்கும் வரை படுவின் பதவிக்குக் குயுக் கான் மற்றும் புரியால் எவ்விதத் தீங்கையும் ஏற்படுத்த முடியவில்லை. இந்தியத் துணைக்கண்டத்திற்குள் தாக்குதல்களை ஒக்தாயி தொடர்ந்தார். உச், இலாகூர் மற்றும் தில்லி சுல்தானகத்தின்முல்தான் ஆகிய நகரங்களைத் தற்காலிகமாகக் கைப்பற்றினார். ஒரு மங்கோலிய தருகச்சியைக் காஷ்மீரில் நிலை நிறுத்தினார்.[50] எனினும் இறுதியில் இந்தியா மீதான படையெடுப்புகள் தோல்வியில் முடிந்தன. அவர்கள் பின்வாங்கும் நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டனர். வடகிழக்கு ஆசியாவில் கொரியாவுடனான சண்டையை முடித்துக்கொள்ள ஒக்தாயி ஒப்புக்கொண்டார். கொர்யியோவைத் தங்களிடம் அடைக்கலம் அடைந்த ஒரு அரசாக மங்கோலியர்கள் நடத்தினர். மங்கோலிய இளவரசிகள் கொர்யியோ இளவரசர்களை மணந்து கொள்ள அனுப்பி வைக்கப்பட்டனர். தன்னுடைய கெசிக்கில் தூதரக நடவடிக்கைகள் மற்றும் இராணுவ பலம் மூலமாகக் கொரியர்களை சேர்த்து ஒக்தாயி வலுவாக்கினர்.[51][52][53]
ஐரோப்பாவுக்குள்ளான முன்னேற்றமானது போலந்து மற்றும் அங்கேரி மீதான மங்கோலியப் படையெடுப்புகளின் மூலம் தொடர்ந்தது. மங்கோலியர்களின் மேற்குப் பிரிவானது போலந்து நகரங்களைச் சூறையாடிய போது, போலந்துக்காரர்கள், மொராவியர்கள், மற்றும் ஆசுபிடலர்களின் கிறித்தவ இராணுவ வரிசைகள், தியூத்தோனிக் நைட் வீரர்கள் மற்றும் தேவாலயப் புனித வீரர்கள் ஆகியோர் நடுவில் ஒரு ஐரோப்பியக் கூட்டணியானது ஒன்றிணைக்கப்பட்டது. போதிய அளவு எண்ணிக்கையிலான இந்தப் படைகள் மங்கோலிய முன்னேற்றத்தைத் தடுக்க முயற்சித்தன. எனினும் குறுகிய காலத்திற்கு லெக்னிகா யுத்தத்தில் மங்கோலிய முன்னேற்றத்தைத் தடுத்தன. 11 ஏப்ரல் 1241ஆம் ஆண்டு சாஜோ ஆற்றங்கரையில் அங்கேரிய இராணுவம், அவர்களது குரோவாசியக் கூட்டாளிகள், மற்றும் நைட் தேவாலயப்ப் புனித வீரர்கள் ஆகியோர் மங்கோலியர்களால் தோற்கடிக்கப்பட்டனர். படுவின் படைகள் தொடர்ந்து வியன்னா மற்றும் வடக்கு அல்பேனியா நோக்கி முன்னேறும் முன் ஒக்தாயியின் மரணம் பற்றிய செய்தியானது அவர்களை வந்தடைந்தது. படையெடுப்பு நிறுத்தப்பட்டது.[54][55] மங்கோலிய இராணுவப் பாரம்பரியத்தின் பழக்க வழக்கங்களின் படி, செங்கிஸ் கானின் வழி வந்த அனைத்து இளவரசர்களும் அடுத்த மன்னனைத் தேர்ந்தெடுப்பதற்காக குறுல்த்தாய்க்குச் செல்ல வேண்டும். அடுத்த ஆண்டு படு மற்றும் அவரது மேற்கு மங்கோலிய இராணுவமானது நடு ஐரோப்பாவிலிருந்து பின்வாங்கியது.[56] தற்போதைய ஆய்வாளர்கள் ஒக்தாயியின் மரணம் மட்டுமே மங்கோலியப் பின்வாங்கலுக்கு ஒற்றைக் காரணமாக இருந்திருக்குமா எனச் சந்தேகிக்கின்றனர். படு மங்கோலியாவுக்குத் திரும்பவில்லை. எனவே புதிய கான் 1246ஆம் ஆண்டு வரை தேர்ந்தெடுக்கப்படவில்லை. காலநிலை மற்றும் சூழ்நிலைக் காரணிகள், மற்றும் ஐரோப்பாவின் வலுவான பாதுகாப்பு அரண்கள் மற்றும் கோட்டைகள் மங்கோலியர்களின் பின் வாங்கும் முடிவில் ஒரு முக்கியமான பங்கை ஆற்றின.[57][58]
ஒக்தாயியிக்குப் பிந்தைய அதிகாரப் போராட்டங்கள் (1241–1251)
1241ஆம் ஆண்டில் பெரிய கான் ஒக்தாயியின் இறப்பிற்குப் பிறகு, அடுத்த குறுல்த்தாய்க்கு முன் ஒக்தாயியின் விதவையான தோரேசின் கதுன் பேரரசைக் கவனித்துக்கொண்டார். இவர் தனது கணவரின் கிதான் மற்றும் முஸ்லிம் அதிகாரிகளைக் கொடுமைப்படுத்தினார். தன்னுடைய சொந்தக் கூட்டாளிகளுக்கு உயர்ந்த பதவிகளைக் கொடுத்தார். ஏகாதிபத்திய அளவில் அரண்மனைகள், மாவட்டத் தலைமைத் தேவாலயங்கள் மற்றும் சமூகக் கட்டடங்களைக் கட்டினார். சமயம் மற்றும் கல்விக்கு ஆதரவளித்தார்.[59] ஒக்தாயியின் மகன் குயுக்கிற்கு ஆதரவாகப் பெரும்பாலான மங்கோலிய மேற்குடியினரின் ஆதரவை வெற்றிகரமாகப் பெற்றார். ஆனால் தங்க நாடோடிக் கூட்டத்தின் மன்னனாகிய படு குறுல்த்தாய்க்கு வர மறுத்தார். தான் உடல் நலமின்றி இருப்பதாகவும் அங்குள்ள காலநிலை தனக்கு மிகுந்த இடர்பாடுகளை ஏற்படுத்தும் என்றும் கூறினார். இந்த இக்கட்டான நிலையானது நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. பேரரசின் ஒற்றுமையை மேலும் குலைத்தது.[59]
செங்கிஸ் கானின் கடைசித் தம்பியான தெமுகே அரியணையைக் கைப்பற்ற முயற்சித்து அச்சுறுத்தலாக விளங்கிய போது, குயுக் தனது பதவியைப் பாதுகாக்கும் முயற்சியாகக் கரகோரத்திற்கு வந்தார்.[60] இறுதியாகத் தனது சகோதரர்கள் மற்றும் தளபதிகளை 1246ஆம் ஆண்டு தோரேசின் நடத்திய குறுல்த்தாய்க்கு அனுப்பப் படு ஒப்புக்கொண்டார். இந்நேரத்தில் குயுக் உடல் நலம் குன்றியும், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகியும் இருந்தார். ஆனால் மஞ்சூரியா மற்றும் ஐரோப்பாவில் இவரது படையெடுப்புகள் ஒரு பெரிய கானுக்குத் தேவையான தகுதியை அவருக்கு ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது. எதிர்பார்த்ததைப் போலவே, பேரரசைச் சேர்ந்த மற்றும் பேரரசுக்கு வெளியேயிருந்த, மங்கோலியர்கள் மற்றும் அயல்நாட்டு முக்கிய நபர்கள் கலந்து கொண்ட ஒரு விழாவில் பெரிய கானாகக் குயுக் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த விழாவில் திறை செலுத்திய நாடுகளின் தலைவர்கள், உரோமின் தூதுவர்கள் மற்றும் பிற நாடுகளின் முக்கிய நபர்கள் குறுல்த்தாய்க்கு வந்து தங்களது மரியாதை மற்றும் தூதுவ உறவை வெளிப்படுத்தினர்.[61][62]
கி. பி. 1246ல் திருத்தந்தை நான்காம் இன்னசன்டை அடிபணியக் கோரி குயுக் கான் அனுப்பியப் பாரசீக மொழியில் எழுதப்பட்ட மடல்.
ஊழலைக் குறைக்க குயுக் நடவடிக்கைகளை எடுத்தார். தோரேசினின் கொள்கைகளைப் பின்பற்றாமல் தன் தந்தை ஒக்தாயியின் கொள்கைகளைத் தொடர்வேன் என அறிவித்தார். ஆளுநர் மூத்த அர்குனைத் தவிர மற்ற அனைத்து தோரேசினின் ஆதரவாளர்களையும் தண்டித்தார். இவர் தான் புதிதாகப் பெற்ற அதிகாரங்களை உறுதிப்படுத்த சகதாயி கானரசின் கானாகிய இளம் காரா குலாகுவைப் பதவியிலிருந்து நீக்கித் தன்னுடைய விருப்பத்திற்குரியவரான எசு மோங்கேயை அப்பதவியில் அமர்த்தினார்.[63] தன்னுடைய தந்தையின் அதிகாரிகளை அவர்களது முந்தைய பதவிகளில் மீண்டும் அமர்த்தினார். இவரைச் சுற்றி உய்குர், நைமன் மற்றும் நடு ஆசிய அலுவலர்கள் இருந்தனர். தன்னுடைய தந்தைக்கு வட சீனாவை வெல்வதற்கு உதவி செய்த ஆன் சீனத் தளபதிகளுக்கு இவர் ஆதரவளித்தார். தன்னுடைய இராணுவ நடவடிக்கைகளைக் கொரியாவில் தொடர்ந்தார். தெற்கில் சாங் சீனாவுக்கு முன்னேறினார். மேற்கில் ஈராக் வரை முன்னேறினார். பேரரசு முழுவதும் ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு ஆணையிட்டார். கய்கவுசு உடன்படாவிட்டாலும், உரூம் சுல்தானகத்தை இசத்தீன் கய்கவுசு மற்றும் ருக்னத்தீன் கில்ஜி அர்ஸ்லான் ஆகியோர் இடையே பிரித்தார்.[63]
பேரரசின் அனைத்துப் பகுதிகளும் குயுக்கின் தேர்விற்கு மதிப்புக் கொடுத்துவிடவில்லை. 1221ஆம் ஆண்டு முன்னாள் மங்கோலியக் கூட்டாளிகளான அசாசின்களின் மாட்சி மிக்க எசமானனாகிய அசன் ஜலாலுதீன் தனது அடிபணிவைச் செங்கிஸ் கானிடம் தெரிவித்தார். ஆனால் குயுக்கிடம் அடிபணிய மறுத்து அவரைக் கோபப்படுத்தினர். பதிலாகப் பாரசீகத்தில் இருந்த மங்கோலியத் தளபதிகளை அவர் கொலை செய்தார். குயுக் தனது உற்ற தோழனின் தந்தையான எல்சிகிடையைப் பாரசீகத்தில் இருந்த துருப்புக்களுக்குத் தலைமைத் தளபதியாக நியமித்தார். அவரிடம் நிசாரி இஸ்மாயிலிகளின் வலுப் பகுதிகளைக் குறைப்பது, மற்றும் இஸ்லாமிய உலகம், ஈரான் மற்றும் ஈராக்கின் மையமாக இருந்த அப்பாசியக் கலீபகத்தை வெல்வது ஆகிய பொறுப்புகளைக் கொடுத்தார்.[63][64]
1248ஆம் ஆண்டு குயுக் ஏராளமான துருப்புக்களை ஒன்றிணைத்தார். திடீரென மங்கோலியத் தலைநகரான கரகோரத்தில் இருந்து மேற்கு நோக்கி அணிவகுக்க ஆரம்பித்தார். அவர் ஏன் இவ்வாறு செய்தார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. எமைலில் இருந்த தன்னுடைய சொந்தப் பண்ணைக்கு உடல் நலம் பெறுவதற்காக அவர் சென்றார் என சில ஆதாரங்கள் குறிப்பிட்டுள்ளன. மற்ற ஆதாரங்களின்படி, மத்திய கிழக்கு மீது ஒரு முழு அளவிலான படையெடுப்பை நடத்த எல்சிகிடையுடன் இணைந்து கொள்வதற்காக அவர் சென்றிருக்கலாம் அல்லது உருசியாவில் இருந்த தனது எதிரியும் பெரியப்பா மகனுமாகிய படு கான் மீது திடீர்த் தாக்குதல் நடத்த அவர் சென்றிருக்கலாம் எனக் குறிப்பிடப்படுகிறது.[65]
குயுக்கின் உள்நோக்கம் மீது சந்தேகம் கொண்ட செங்கிஸ் கானின் மகன் டொலுயின் விதவையான சோர்காக்டனி பெகி, படுவிற்கு இரகசியமாகக் குயுக் வருவதைப் பற்றி எச்சரித்தார். அந்நேரத்தில் படுவே கிழக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். அவர் மரியாதை செலுத்துவதற்காக அல்லது அவர் நினைத்த மற்ற திட்டங்களின் படி வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. படு மற்றும் குயுக்கின் படைகள் சந்திக்கும் முன்னரே குயுக்கிற்கு உடல் நலம் குன்றியது. பயணத்தால் களைப்படைந்த அவர் சிஞ்சியாங்கில் உள்ள கும் செங்கிர் என்ற இடத்திற்கு வரும் வழியில் இறந்தார். குயுக்கிற்கு விடம் வைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[65]
மங்கோலியத் தலைநகர் கரகோரம் இருந்த இடத்திலுள்ள ஒரு கல் ஆமை.
குயுக்கின் விதவையான ஒகுல் கைமிஸ் பேரரசின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ள முன்வந்தார். ஆனால் தன் அத்தை தோரேசினின் திறமைகள் அவரிடம் இல்லை. அவரது இளம் மகன்களான கோசா மற்றும் நகு, மற்றும் பிற இளவரசர்கள் ஒகுல் கைமிசின் அதிகாரத்திற்குச் சவால் விடுத்தனர். ஒரு புதிய பெரிய கானைப் பற்றிய முடிவுகள் எடுப்பதற்காக 1250ஆம் ஆண்டு தன்னுடைய சொந்த நிலப்பரப்பில் ஒரு குறுல்த்தாய்க்குப் படு அழைப்பு விடுத்தார். ஆனால் படுவின் நாடானது மங்கோலிய இதயப் பகுதியிலிருந்து தொலைவில் இருந்ததால் ஒக்தாயி மற்றும் சகதாயி குடும்ப உறுப்பினர்கள் அதில் கலந்து கொள்ள மறுத்தனர். இந்தக் குறுல்த்தாயில் படுவிற்கு அரியணை அளிக்கப்பட்டது. ஆனால் படு மறுத்தார். பெரிய கான் பதவியில் தனக்கு ஆர்வமில்லை என்று கூறினார்.[66] பதிலாகப் படு, செங்கிஸ் கானின் பேரனும் டொலுயின் மகனுமாகிய மோங்கேயின் பெயரை முன்மொழிந்தார். உருசியா, வடக்கு காக்கேசியா மற்றும் அங்கேரியில் இருந்த ஒரு மங்கோலிய இராணுவத்திற்கு மோங்கே தலைமை தாங்கியிருந்தார். டொலுய் பிரிவுக்கு ஆதரவாக இருந்தவர்கள் படுவின் தேர்வுக்கு ஆதரவு அளித்தனர். மோங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் இந்தக் குறுல்த்தாயில் கலந்து கொண்ட நபர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலும், குறுல்த்தாய் நடந்த இடத்தின் காரணமாகவும் இந்தத் தேர்வானது கேள்விக்குரிய வகையில் இருந்தது.[66]
மங்கோலிய இதயப் பகுதியிலிருந்த கோதோவே அரால் என்ற பகுதியில் ஒரு அதிகாரப்பூர்வம் நிறைந்த குறுல்த்தாய்க்கு ஏற்பாடு செய்ய, மோங்கேயைத் தனது தம்பிகள் பெர்கே மற்றும் துக் தெமூர், மற்றும் தனது மகன் சர்தக்கின் பாதுகாப்பில் படு அனுப்பி வைத்தார். குறுல்த்தாயில் கலந்து கொள்ளுமாறு, ஒகுல் கைமிஸ், ஒக்தாயி மற்றும் சகதாயி இளவரசர்களுக்கு மோங்கேயின் ஆதரவாளர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர்கள் ஒவ்வொரு முறையும் மறுத்தனர். செங்கிஸ் கானின் மகன் டொலுயின் வழித்தோன்றலைத் தலைவனாக ஏற்றுக்கொள்ள ஒக்தாயி மற்றும் சகதாயி இளவரசர்கள் மறுத்தனர். செங்கிஸ் கானின் மகன் ஒக்தாயியின் வழித்தோன்றல்கள் மட்டுமே பெரிய கானாக வரவேண்டும் எனக் கோரினர்.[66]
மோங்கேயின் தாய் சோர்காக்டனி மற்றும் மோங்கேயின் பெரியப்பா மகன் பெர்கே ஆகியோர் ஓர் இரண்டாவது குறுல்த்தாயை 1 சூலை 1251ஆம் ஆண்டு கூட்டினர். அங்கு கூடியிருந்த பெரும் கூட்டமானது மோங்கேயை மங்கோலியப் பேரரசின் பெரிய கானாகப் பொது அறிவிப்புச் செய்தது. இந்நிகழ்வானது பேரரசின் தலைமைத்துவத்தில் ஒரு முக்கிய மாறுதலைக் குறித்தது. அதிகாரமானது செங்கிஸ் கானின் மகன் ஒக்தாயியின் வழித்தோன்றல்களிடமிருந்து, செங்கிஸ் கானின் மகன் டொலுயின் வழித்தோன்றல்களின் கைக்கு வந்தது. இந்த முடிவானது ஒக்தாயியின் மகன் கதான் மற்றும் பதவியிலிருந்து இறக்கப்பட்ட கானாகிய காரா குலாகு உள்ளிட்ட சில ஒக்தாயி மற்றும் சகதாயி இளவரசர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்ற வாரிசுகளில் ஒருவரான ஒக்தாயியின் பேரன் சிரேமுன், மோங்கேயைப் பதவியில் இருந்து இறக்க விரும்பினார்.[67]
சிரேமுன் தனது சொந்தப் படைகளுடன் பேரரசரின் நாடோடி அரண்மனையை நோக்கி ஆயுதத் தாக்குதலுக்கான ஒரு திட்டத்துடன் முன்னேறினார். ஆனால் இந்தத் திட்டத்தை மோங்கேயின் பாறு வளர்ப்பாளர் மோங்கேயிடம் கூறி எச்சரித்தார். இந்தத் திட்டத்தைப் பற்றி விசாரணைக்கு மோங்கே ஆணையிட்டார். பேரரசு முழுவதும் பெருமளவிலான தொடர்ச்சியான விசாரணைகளுக்கு இது இட்டுச் சென்றது. பெரும்பாலான முக்கிய மங்கோலிய உறுப்பினர்கள் குற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இவ்வாறாகக் கொல்லப்பட்டவர்களின் மதிப்பீடானது 77 முதல் 300 எனக் குறிப்பிடப்படுகிறது. எனினும் செங்கிஸ் கானின் வழித்தோன்றலில் வந்த இளவரசர்கள் பெரும்பாலும் நாடு கடத்தப்பட்டனரே தவிர கொல்லப்படவில்லை.[67]
ஒக்தாயி மற்றும் சகதாயி குடும்பங்களுக்குத் தண்டனையாக அவர்களின் பண்ணைகளை மோங்கே பறிமுதல் செய்தார். பேரரசின் மேற்குப் பகுதியைத் தனது பெரியப்பா மகனும் கூட்டாளியுமான படு கானுடன் பகிர்ந்து கொண்டார். குருதி தோய்ந்த ஒழித்துக்கட்டலுக்குப் பிறகு கைதிகள் மற்றும் பிடிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பொது மன்னிப்பு வழங்க மோங்கே ஆணையிட்டார். ஆனால் இதற்குப் பிறகு பெரிய கானின் அரியணையின் அதிகாரமானது டொலுய் வழித்தோன்றல்களின் கையில் உறுதியாக இருந்தது.[67]
மோங்கே ஒரு அறிவார்ந்த மனிதன் ஆவார். அவர் தனது முன்னோர்களின் சட்டங்களைப் பின்பற்றினார். மதுவைத் தவிர்த்தார். வேற்று மக்களின் சமயங்களிடம் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொண்டார். அவர்களது கலை வடிவங்களை மதித்தார். அயல் நாட்டு வணிகர்களுக்குக் குடியிருப்புப் பகுதிகள், புத்த விகாரங்கள், பள்ளி வாசல்கள் மற்றும் கிறித்தவத் திருச்சபைகளை மங்கோலியத் தலைநகரத்தில் கட்டிக்கொடுத்தார். கட்டடக் கட்டுமானங்கள் தொடர, கரகோரமானது சீன, ஐரோப்பிய மற்றும் பாரசீகக் கட்டடக்கலைகளால் அழகு பெற்றது. இதற்கு ஒரு பிரபலமான உதாரணமானது ஒரு பெரிய வெள்ளி மரம் ஆகும். அந்த மரத்தில் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்ட வெவ்வேறு குழாய்கள் இருந்தன. ஒவ்வொரு குழாயிலும் ஒவ்வொரு வித பானங்கள் வந்தன. அந்த மரத்தின் உச்சியில் வெற்றிக் களிப்புடைய ஒரு தேவதையின் சிலை வைக்கப்பட்டிருந்தது. இம்மரத்தைப் பாரிசைச் சேர்ந்த பொற்கொல்லரான குயிலவுமே பவுச்சர் செய்துகொடுத்தார்.[68]
குலாகு கான், செங்கிஸ் கானின் பேரன், ஈல்கானரசின் தோற்றுவிப்பாளர். ஒரு நடுக்காலப் பாரசீகக் கையெழுத்துப்படியில் இவரது ஓவியம்.
இவரிடம் ஒரு வலிமையான சீனக் குழு இருந்தபோதிலும் மோங்கே அதிகமாக முஸ்லிம் மற்றும் மங்கோலிய நிர்வாகிகளைச் சார்ந்திருந்தார். அரசாங்கச் செலவினங்களை எளிதாகக் கணிக்கக்கூடியதாக மாற்றுவதற்காக ஒரு தொடர்ச்சியான பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடங்கி வைத்தார். அரசாங்கச் செலவினங்களை இவரது அரசவையானது கட்டுப்பாட்டில் வைத்தது. மேற்குடியினர் மற்றும் துருப்புக்கள் குடிமக்களை மோசமாக நடத்தவோ அல்லது அதிகாரப்பூர்வமில்லாமல் ஆணைகள் அல்லது அறிக்கைகள் வெளியிடவோ கூடாது என தடை செய்யப்பட்டனர். இவர் பங்களிப்பு அமைப்பை ஒரு நிலையான வரியுடன் தொடர்புபடுத்தினார். இந்த வரியானது ஏகாதிபத்திய வணிக முகவர்களால் பெறப்பட்டது. அவர்கள் தேவையில் இருந்த படைப் பிரிவுகளுக்கு இந்த நிதியை அனுப்பினர்.[69] வரி வீதங்களைக் குறைத்து இவரது அரசவையானது பொதுமக்களின் மீதிருந்த வரிச்சுமையைக் எளிதாக்க முயற்சித்தது. நிதி விவகாரங்களின் கட்டுப்பாட்டை இவர் மையப்படுத்தினார். தபால் அமைப்புகளில் இருந்த பாதுகாப்பாளர்களை மேலும் அதிகப்படுத்தி வலுவூட்டினார். 1252ஆம் ஆண்டு பேரரசு முழுவதுமான மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு மோங்கே ஆணையிட்டார். இந்தக் கணக்கெடுப்பை முடிக்கப் பல ஆண்டுகள் ஆனது. 1258ஆம் ஆண்டு பேரரசின் வடமேற்கு மூலையில் இருந்த நோவ்கோரோட் நகரத்தின் கணக்கெடுப்பு முடியும் வரை இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முடியவில்லை.[69]
தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தும் மற்றொரு நகர்வாக, பாரசீக மற்றும் மங்கோலியர்களிடமிருந்த சீனாவை ஆளுவதற்காகத் தனது தம்பிகள் முறையே குலாகு கான் மற்றும் குப்லாய் கானைப் பணி வழங்கி அனுப்பி வைத்தார். பேரரசின் தெற்குப்பகுதியில் சாங் அரசமரபுக்கு எதிரான, தனக்கு முன் வந்த ஆட்சியாளர்களின் தாக்குதல்களை இவர் தொடர்ந்தார். சாங் அரசமரபை மூன்று திசைகளிலும் சுற்றிவளைப்பதற்காக, யுன்னானுக்குத் தனது தம்பி குப்லாயையும், கொரியாவை அடிபணிய வைப்பதற்காகத் தனது உறவினர் இயேகுவையும் மங்கோலிய இராணுவங்களுக்குத் தலைமை தாங்க வைத்து அனுப்பினார். அந்த திசையிலிருந்தும் சாங் அரச மரபை அழுத்தத்திற்கு உள்ளாக்கினார்.[63]
தலி மன்னன் துவான் சிங்சி மங்கோலியர்கள் பக்கம் கட்சி தாவி, யுன்னானின் எஞ்சிய பகுதிகளை வெல்வதற்கு மங்கோலியர்களுக்கு உதவிய பிறகு, 1252ஆம் ஆண்டு தலி இராச்சியத்தை குப்லாய் வென்றார். முன்னணி மடாலயங்களை மங்கோலிய ஆட்சிக்கு வணங்க வைத்ததன் மூலம் மோங்கேயின் தளபதி கோரிதை திபெத்து மீதான மோங்கேயின் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தினார். அருகிலிருந்த யுன்னான் மக்களை சுபுதையின் மகன் உரியாங்கடை அடி பணிய வைத்தார். 1258ஆம் ஆண்டு வடக்கு வியட்நாமில் இருந்த திரான் அரச மரபின் கீழான தாய் வியட் இராச்சியத்துடன் உரியாங்கடை போருக்குச் சென்றார். ஆனால் பின்வாங்கும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டார்.[63] 1285 மற்றும் 1287 ஆகிய ஆண்டுகளில் தாய் வியட் மீது மீண்டும் படையெடுக்க மங்கோலியப் பேரரசு முயற்சித்தது. ஆனால் இரண்டு முறையும் தோற்கடிக்கப்பட்டது.
மத்திய கிழக்கு மற்றும் தெற்கு சீனா மீதான புதிய படையெடுப்புகள்
பேரரசின் நிதிநிலைமையைச் சீராக்கிய பிறகு, அதன் எல்லைகளை மீண்டும் ஒருமுறை விரிவுபடுத்த மோங்கே நினைத்தார். 1253 மற்றும் 1258 ஆகிய ஆண்டுகளில் கரகோரத்தில் நடந்த குறுல்த்தாய்களில் மத்திய கிழக்கு மற்றும் தெற்கு சீனா ஆகியவற்றின் மீதான புதிய படையெடுப்புகளுக்கு இவர் அனுமதி வழங்கினார். பாரசீகத்தில் ஒட்டுமொத்த இராணுவ மற்றும் பொது விவகாரங்களுக்கான பொறுப்பைக் குலாகுவிடம் மோங்கே வழங்கினார். சகதாயிகள் மற்றும் சூச்சிகளை குலாகுவின் இராணுவத்தில் இணைய நியமித்தார்.[70]
கசுவினில் இருந்த முஸ்லிம்கள் ஒரு பிரபலமான சியா இஸ்லாம் பிரிவான நிசாரி இஸ்மாயிலிகளின் அச்சுறுத்தலைப் பகிரங்கமாகக் கண்டித்தனர். 1256ஆம் ஆண்டு குலாகு முன்னேறுவதற்கு முன், மங்கோலிய நைமன் தளபதியான கித்புகா பல இஸ்மாயிலி கோட்டைகள் மீது தாக்குதலை 1253ஆம் ஆண்டு தொடங்கினார். இஸ்மாயிலிகளின் மாட்சிமிக்க எசமானரான ருக்குனல்தீன் குர்சா 1257ஆம் ஆண்டு சரணடைந்தார். மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். 1257ஆம் ஆண்டு குலாகுவின் இராணுவமானது பாரசீகத்தில் இருந்த அனைத்து இஸ்மாயிலி வலுப்பகுதிகளையும் அழித்தது. அதில் எஞ்சியது கிர்துக் பகுதி மட்டும் தான். அப்பகுதி 1271ஆம் ஆண்டு வரை தாக்குப்பிடித்தது.[70]
இஸ்லாமியப் பேரரசின் நடுப் பகுதியாக அக்காலத்தில் திகழ்ந்தது பகுதாது நகரம் தான். அந்த நகரமானது 500 ஆண்டுகளாக அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருந்தது. ஆனால் உட்பூசல்களுக்கு உள்ளாகி இருந்தது. அதன் கலீபாவான அல்-முஸ்டசீம் மங்கோலியர்களுக்கு அடிபணிய மறுத்த போது, மங்கோலியர்களால் 1258ஆம் ஆண்டு பகுதாதுவானது முற்றுகையிடப்பட்டுக் கைப்பற்றப்பட்டது. இரக்கமற்ற சூறையாடலுக்கு உள்ளாக்கப்பட்டது. இந்த நிகழ்வானது இஸ்லாமின் வரலாற்றில் மிகுந்த பேரழிவை ஏற்படுத்திய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்வு கி. பி. 683ஆம் ஆண்டு மெக்கா முற்றுகையின் போது நடந்த காபா சேதமாக்கப்பட்ட நிகழ்வுடன் சில நேரங்களில் ஒப்பிடப்படுகிறது. அப்பாசியக் கலீபகம் அழிக்கப்பட்ட பிறகு சிரியாவுக்குச் செல்லும் வழியானது குலாகுவுக்குத் திறந்துவிடப்பட்டது. அப்பகுதியில் இருந்த மற்ற முஸ்லிம் சக்திகளுக்கு எதிராகக் குலாகு நகர்ந்தார்.[71]
இவரது இராணுவம் அய்யூப்பிய வம்சத்தால் ஆளப்பட்ட சிரியாவை நோக்கி முன்னேறியது. வழியில் இருந்த சிறிய உள்ளூர் அரசுகளைக் கைப்பற்றியது. அய்யூப்பியர்களின் சுல்தானான அல்-நசீர் யூசுப், குலாகுவுக்கு முன் வந்து நிற்க மறுத்தார். எனினும் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் மங்கோலிய முதன்மை நிலையை அவர் ஒப்புக் கொண்டிருந்தார். மேலும் மேற்கு நோக்கி குலாகு முன்னேறியபோது, சிலிசியாவிலிருந்து ஆர்மீனியர்கள், உரூமிலிருந்தசெல்யூக் அரசமரபு, மற்றும் அண்டியோச் மற்றும் திரிப்பொலியில் இருந்த கிறித்தவ அரசுகள் மங்கோலிய ஆளுமைக்கு முன் அடிபணிந்தனர். முஸ்லிம்களுக்கு எதிரான மங்கோலியத் தாக்குதலில் இணைந்தனர். சில நகரங்கள் எதிர்ப்பு காட்டாமல் சரணடைந்த போதிலும், மயாபரிக்கின் போன்ற மற்ற நகரங்கள் பதில் தாக்குதல் நடத்தின. அந்நகரங்களின் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். நகரங்கள் சூறையாடப்பட்டன.[71]
மோங்கே கானின் (ஆட்சி 1251–1259) இறப்பிற்குப் பிறகு மங்கோலியப் பேரரசின் விரிவு.
அதே நேரத்தில் பேரரசின் வடமேற்குப் பகுதியில் படுவிற்குப் பின் வந்த அவரது தம்பி பெர்கே தண்டனைப் போர்ப் பயணங்களை உக்ரைன், பெலருஸ், லித்துவேனியா மற்றும் போலந்து மீது மேற்கொண்டார். குலாகுவின் மேற்கு ஆசியப் படையெடுப்பானது அப்பகுதியில் இருந்த படுவின் சொந்த ஆதிக்கத்தை நீக்கும் எனப் படு சந்தேகப்பட்டார். இதன் காரணமாக மங்கோலியப் பேரரசின் வடமேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்தன.[72]
பேரரசின் தெற்குப் பகுதியில் மோங்கே கான் தன் இராணுவத்தைத் தானே வழி நடத்தினார். எனினும் சீனாவை வெல்லும் நிகழ்வை அவர் முடிக்கவில்லை. இராணுவ நடவடிக்கைகள் பொதுவாக வெற்றிகரமானவையாக இருந்தன. ஆனால் நீண்ட காலம் பிடித்தன. இதன் காரணமாகப் பாரம்பரியப்படி காலநிலை வெப்பமாகும்போது படைகள் வடக்கு நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் நிகழ்வு நடைபெறவில்லை. மங்கோலியப் படைகளை குருதி தோய்ந்த கொள்ளை நோய்கள் அழிவுக்கு உட்படுத்தின. 11 ஆகத்து 1259ஆம் ஆண்டு மோங்கே அப்பகுதியில் இருந்தார். இந்நிகழ்வானது மங்கோலியர்களின் வரலாற்றில் ஒரு புதிய பகுதியைத் தொடங்கி வைத்தது. ஒரு புதிய பெரிய கானைத் தேர்ந்தெடுக்க மீண்டும் முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய தேவை இருந்தது. பேரரசு முழுவதும் இருந்த மங்கோலிய இராணுவங்கள் தங்களது படையெடுப்புகளிலிருந்து பின்வாங்கின. புதிய குறுல்த்தாயில் கலந்து கொள்ளச் சென்றன.[73]
சிரியா மீது தான் நடத்திய வெற்றிகரமான இராணுவ முன்னேற்றத்தைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு மோங்கேயின் தம்பி குலாகு திரும்பினார். முகான் சமவெளிப் பகுதிக்கு தன்னுடைய படைகளில் பெரும்பாலானவற்றைக் கூட்டிச் சென்றார். தனது தளபதி கித்புகாவின் தலைமையின் கீழ் ஒரு சிறிய பிரிவை மட்டும் விட்டுச் சென்றார். அப்பகுதியிலிருந்த எதிரிப் படைகளான கிறித்தவ சிலுவைப்போர் வீரர்கள் மற்றும் முஸ்லிம் மம்லுக்குகள் மங்கோலியர்களைப் பெரிய அச்சுறுத்தலாகக் கருதினர். மங்கோலிய இராணுவத்தின் பலவீனமான நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். கிறித்தவர்களும் முஸ்லிம்களும் வழக்கத்திற்கு மாறாக உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டனர்.[74]
1260ஆம் ஆண்டு எகிப்தில் இருந்து அடிமை வம்சத்தவர்கள் முன்னேறினர். கிறித்தவ வலுப்பகுதியான அகருக்கு அருகில் முகாமிடவும் பொருட்களை நிரப்பிக் கொள்ளவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கலிலேயாவுக்கு சற்றே வடக்கில், ஐன் ஜலுட் யுத்தத்தில் கித்புகாவின் படைகளுடன் சண்டையிட்டனர். மங்கோலியர்கள் தோற்கடிக்கப்பட்டனர். கித்புகா பிடிக்கப்பட்டு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். மத்திய கிழக்கில் மங்கோலிய விரிவாக்கத்தின் மேற்கு எல்லையைக் குறிப்பதாக இந்த முக்கியமான யுத்தம் அமைந்தது. சிரியாவைத் தாண்டி முக்கியமான இராணுவ முன்னேற்றங்களை மீண்டும் மங்கோலியர்களால் நடத்த முடியவில்லை.[74]
பேரரசின் மற்றொரு பக்கத்தில் மோங்கேயின் தம்பியும் குலாகுவின் அண்ணனுமான குப்லாய் கான் சீனாவின் குவாய் ஆற்றில் பெரிய கானின் இறப்பைப் பற்றிய செய்தியை அறிந்தார். தலைநகருக்குத் திரும்பாமல் யாங்சி ஆற்றுக்கு அருகில் சீனாவின் ஊச்சாங் பகுதிக்குள் தனது முன்னேற்றத்தைத் தொடர்ந்தார். குலாகு மற்றும் குப்லாய் இல்லாத சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அவர்களின் தம்பியான அரிக் போகே தலை நகரில் தன்னுடைய நிலையைப் பயன்படுத்திப் பெரிய கான் பட்டத்தைத் தனக்கே எடுத்துக்கொண்டார். கரகோரத்தில் நடந்த குறுல்த்தாயில் அனைத்துக் குடும்பக் கிளைகளின் உறுப்பினர்களும் அரிக் போகேயைத் தலைவனாகப் பொது அறிவிப்பு செய்தனர். குப்லாய் இதை அறிந்தபோது கைபிங் நகரத்தில் தன்னுடைய சொந்த குறுல்த்தாய்க்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். வடக்கு சீனா மற்றும் மஞ்சூரியாவில் இருந்த அனைத்து முதிய இளவரசர்கள் மற்றும் பெரிய நோயன்கள் அரிக் போகேயைத் தவிர்த்து குப்லாயின் தேர்வுக்கு ஆதரவளித்தனர்.[56]
குப்லாய் மற்றும் அவரது தம்பி அரிக் போகேயின் இராணுவங்களுக்கு இடையில் யுத்தமானது நடைபெற்றது. மோங்கேவுக்கு முந்தைய நிர்வாகத்திற்கு இன்னும் விசுவாசமாக இருந்த படைகளும் இந்தப் போரில் கலந்து கொண்டன. குப்லாயின் இராணுவமானது எளிதாக அரிக் போகேயின் ஆதரவாளர்களை ஒழித்துக்கட்டியது. தெற்கு மங்கோலியாவில் பொது நிர்வாகத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. மேலும் சவால்கள் குப்லாயின் பெரியப்பா சகதாயியின் வழித்தோன்றல்களிடமிருந்து வந்தது.[75][76][77] குப்லாய் தனக்கு விசுவாசமான ஒரு சகதாயி இளவரசனான அபிஸ்காவைச் சகதாயி கானரசின் கட்டுப்பாட்டைப் பெற அனுப்பி வைத்தார். ஆனால் அரிக் போகே அவரைப் பிடித்து மரண தண்டனைக்கு உட்படுத்தினார். பதிலாகத் தனது நபரான அல்குவுக்கு மகுடம் சூட்டினார். குப்லாயின் புதிய நிர்வாகமானது மங்கோலியாவில் இருந்த அரிக் போகேயை தடை வளைப்புச் செய்தது. அரிக் போகேவுக்கு உணவுப் பொருட்கள் கிடைக்காமல் வழிகளை மூடியது. இதன் காரணமாகப் பஞ்சம் ஏற்பட்டது. கரகோரமானது குப்லாயிடம் சீக்கிரமே வீழ்ந்தது. எனினும் அரிக் போகே 1261ஆம் ஆண்டு மீண்டும் படைகளைத் திரட்டித் தலைநகரத்தை மீண்டும் கைப்பற்றினார்.[75][76][77]
தென் மேற்கிலிருந்த ஈல்கானரசில் குலாகு தனது அண்ணன் குப்லாய்க்கு விசுவாசமாக இருந்தார். ஆனால் தங்க நாடோடிக் கூட்டத்தின் ஆட்சியாளரும், தன் பெரியப்பா மகனும், ஒரு முஸ்லிமுமான பெர்கேயுடன் குலாகுவின் சண்டைகள் 1262ஆம் ஆண்டு ஆரம்பமாயின. குலாகுவிடம் பணியாற்றிய சூச்சி வழித்தோன்றல் இளவரசர்களின் சந்தேகத்துக்கிடமான இறப்புகள், போரில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் சமமாகப் பங்கிடப்படாதது மற்றும் முஸ்லிம்களைக் குலாகு படுகொலைகள் செய்தது ஆகியவை பெர்கேயின் கோபத்தை அதிகப்படுத்தின. 1259-1260ஆம் ஆண்டு குலாகுவின் ஆட்சிக்கு எதிராகச் சியார்சியா இராச்சியத்தின் கலகத்திற்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று பெர்கே கருதினார்.[78] பெர்கே மேலும் எகிப்திய அடிமை வம்சத்தவர்களுடன் குலாகுவுக்கு எதிராக ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார். குப்லாயுடன் அரியணைக்குச் சண்டையிட்ட அரிக் போகேவிற்கு ஆதரவளித்தார்.[79]
8 பெப்ரவரி 1264ஆம் ஆண்டு குலாகு இறந்தார். இந்தச் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த பெர்கே எண்ணினார். குலாகுவின் நாட்டின் மீது படையெடுத்தார். ஆனால் படையெடுப்புக்குச் செல்லும் வழியிலேயே இறந்தார். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு சகதாயி கானரசின் கானாகிய அல்கு கானும் இறந்தார். புதிய ஈல்கானாகக் குலாகுவின் மகன் அபகாவைக் குப்லாய் பெயரிட்டார். தங்க நாடோடிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கப் படுவின் பேரனாகியம் மோங்கே தெமூரை முன்மொழிந்தார். எகிப்திய அடிமை வம்சத்தவர்களுக்கு எதிராக ஒரு பிராங்கோ-மங்கோலியக் கூட்டணி உள்ளிட்ட அயல்நாட்டுக் கூட்டணிகளை ஏற்படுத்த அபகா முயற்சித்தார்.[80] 21 ஆகத்து 1264ஆம் ஆண்டு சங்குடுவில் குப்லாயிடம் அரிக் போகே சரணடைந்தார்.[81]
தெற்கில் 1273ஆம் ஆண்டு சியாங்யாங்கின் வீழ்ச்சிக்குப் பிறகு, தெற்கு சீனாவில் இருந்த சாங் அரசமரபை வெல்லும் தங்களது கடைசி முயற்சியை மங்கோலியர்கள் மேற்கொண்டனர். 1271ஆம் ஆண்டு சீனாவில் இருந்த புதிய மங்கோலிய அரசை யுவான் அரசமரபு எனக் குப்லாய் பெயர் மாற்றினார். தன்னை மக்கள் சீனராக்கப்பட்டவர் என அறிந்து கொள்வதற்காகவும், சீனாவின் பேரரசராக சீன மக்களின் கட்டுப்பாட்டை வெல்வதற்காகவும் இவ்வாறாகப் பெயர் மாற்றினார். குப்லாய் தன்னுடைய தலைநகரத்தைக் கான்பலிக்கிற்கு இடம் மாற்றினார். இந்தக் கான்பலிக் தான் தற்போதைய நவீன சீனத் தலைநகரான பெய்ஜிங்கின் தொடக்கம் ஆகும். சீனாவில் தலைநகரத்தை நிறுவிய இவரது இந்த நகர்வானது சர்ச்சைக்குரியதாகப் பல மங்கோலியர்களால் பார்க்கப்பட்டது. சீனப் பண்பாட்டுடன் மிகுந்த நெருக்கம் காட்டுவதாகக் குப்லாய் மீது அவர்கள் குற்றம்சாட்டினார்.[82][83]
சாங் அரசமரபுக்கு எதிரான தங்களது படையெடுப்புகளில் மங்கோலியர்கள் இறுதியாக வெற்றி பெற்றனர். 1276ஆம் ஆண்டு யுவானிடம் சீன சாங் ஏகாதிபத்தியக் குடும்பமானது சரணடைந்தது. சீனா முழுவதையும் வென்ற முதல் சீனரல்லாத மக்களாக மங்கோலியர்களை இவ்வெற்றி உருவாக்கியது. தன்னுடைய தலைமையகத்தைப் பயன்படுத்தி ஒரு சக்திவாய்ந்த பேரரசைக் குப்லாய் உருவாக்கினார். கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், வணிகத் துறைமுகங்கள் மற்றும் கால்வாய்களை உருவாக்கினார். கலை மற்றும் அறிவியலுக்குப் புரவலராக விளங்கினார். குப்லாயின் ஆட்சியின் போது 20,166 பொதுப் பள்ளிகள் உருவாக்கப்பட்டதாக மங்கோலியப் பதிவுகள் பட்டியலிடுகின்றன.[84]
குதிரை மீது ஒரு மங்கோலிய வீரன் அம்பெய்யத் தயாராகுதல்.
பெரும்பாலான ஐரோவாசிய மீது உண்மையிலோ அல்லது பெயரளவிலோ தனது கட்டுப்பாட்டைப் பெற்றது மற்றும் வெற்றிகரமாகச் சீனாவை வென்றது ஆகியவற்றுக்குப் பிறகு பேரரசை மேற்கொண்டு விரிவாக்கக் குப்லாய் நடவடிக்கைகளை மேற்கொண்டார். பர்மா மற்றும் சக்கலின் மீதான இவரது படையெடுப்புகள் இவருக்குச் சேதத்தை ஏற்படுத்தின. தாய் வியட் (வடக்கு வியட்நாம்) மற்றும் சம்பா இராச்சியம் (தெற்கு வியட்நாம்) ஆகியவற்றின் மீதான இவரது படையெடுப்பு முயற்சிகள் கடுமையான தோல்வியில் முடிந்தன. எனினும் குப்லாய் அந்நாடுகளைத் திறை செலுத்த வைத்தார். மங்கோலிய இராணுவங்கள் தாய் வியட்டில் தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டன. 1288ஆம் ஆண்டு பச் தங் யுத்தத்தில் நொறுக்கப்பட்டன.
நோகை மற்றும் வெள்ளை நாடோடிக் கூட்டத்தின் கானாகிய கோஞ்சி ஆகியோர் யுவான் அரசமரபு மற்றும் ஈல்கானரசுடன் நட்பான உறவு முறைகளை ஏற்படுத்தினர். பெரிய கானின் அலுவலகம் மீதான ஒன்றோடொன்று போட்டியிட்ட குடும்பக் கிளைகளுக்கு இடையிலான அரசியல் வேறுபாடானது தொடர்ந்தது. இந்தச் சச்சரவுகள் இருந்தபோதிலும் மங்கோலியப் பேரரசின் பொருளாதாரம் மற்றும் வணிக ரீதியிலான வெற்றியானது தொடர்ந்து.[85][86][87]
மங்கோலியப் பேரரசின் விரிவாக்கம்.
1274 மற்றும் மீண்டும் 1281ல் இரண்டு வெவ்வேறு தறுவாய்களில் குப்லாய் கான் சப்பான் மீது படையெடுத்தார். எனினும் அவரால் சப்பானை வெல்ல முடியவில்லை.
1200களின் கடைசிக் காலங்களில் மங்கோலியப் பேரரசில் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டன. சீனா முழுவதையும் வென்று யுவான் அரசமரபைத் தாபகப் படுத்திய பிறகு குப்லாய் கான் 1294ஆம் ஆண்டு இறந்தார். குப்லாய்க்குப் பிறகு அவரது பேரன் தெமூர் கான் ஆட்சிக்கு வந்தார். அவர் குப்லாயின் கொள்கைகளைத் தொடர்ந்தார். அதே நேரத்தில் டொலுய் உள்நாட்டுப் போர், பெர்கே-குலாகு போர் மற்றும் இறுதியாகக் கய்டு-குப்லாய் போர் ஆகிய போர்கள் ஒட்டுமொத்த மங்கோலியப் பேரரசு மீதிருந்த பெரிய கானின் அதிகாரத்தைப் பெருமளவுக்கு பலவீனப்படுத்தின. பேரரசானது யுவான் அரசமரபு, மற்றும் தங்க நாடோடிக் கூட்டம், சகதாயி கானரசு மற்றும் ஈல் கானரசு ஆகிய மூன்று மேற்குக் கானரசுகள் என தன்னாட்சியுடைய கானரசுகளாகச் சிதறுண்டது. இக்கானரசுகளில் ஈல்கானரசு மட்டுமே யுவான் அரசவைக்கு விசுவாசமாக இருந்தது. எனினும் அதுவும் தனது அதிகாரப் போட்டியைக் கொண்டிருந்தது. இதற்கு ஒரு பங்குக் காரணம் பேரரசின் தென்மேற்குப் பகுதிக்குள் இருந்த, வளர்ந்து வந்த இஸ்லாமியப் பிரிவுகளுடனான சண்டைகள் ஆகும்.[88]
கய்டுவின் இறப்பிற்குப் பிறகு சகதாயி ஆட்சியாளரான துவா ஒரு அமைதி ஒப்பந்தத்தை ஆரம்பித்து வைத்தார். தெமூர் கானிடம் பணிந்து செல்லுமாறு ஒக்தாயி வழித்தோன்றல்களை ஏற்க வைத்தார்.[89][90] 1304ஆம் ஆண்டு அனைத்துக் கானரசுகளும் ஒரு அமைதி உடன்படிக்கையை அங்கீகரித்தன. யுவான் பேரரசர் தெமூரின் முதன்மை நிலையை ஒப்புக் கொண்டன.[91][92][93][94] இது மேற்குக் கானரசுகள் மீது யுவான் அரசமரபின் பெயரளவிலான முதன்மை நிலையை ஏற்படுத்தியது. இந்நிலை பல தசாப்தங்களுக்குத் தொடர்ந்தது. ஆனால் இந்த முதன்மை நிலையானது ஆரம்பக் கான்களை விட வலிமையற்ற அடிப்படைத் தன்மையைக் கொண்டிருந்தது. நான்கு கானரசுகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகத் தங்கள் வழியில் முன்னேறின. சுதந்திர அரசுகளாகச் செயல்பட்டன.
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுப் படையெடுப்புகள் மற்றும் உள்நாட்டுப் போர்களுக்குப் பிறகு ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையில் ஒப்பீட்டளவிலான நிலைத்தன்மை, மங்கோலிய அமைதி, மற்றும் சர்வதேச வணிக மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்கள் செழிப்படைந்தன. சீனாவில் இருந்த யுவான் அரசமரபு மற்றும் பாரசீகத்திலிருந்த ஈல்கானரசுக்கு இடையிலான தகவல்தொடர்புகள் கிழக்கு மற்றும் மேற்குக்கு இடையில் வணிகத்தை மேலும் ஊக்கப்படுத்தின. யுவானின் அரச மதிப்புடைய துணிகளின் வடிவங்கள் பேரரசின் எதிர்ப்பக்கத்தில் ஆர்மீனிய வேலைப்பாடுகளை அலங்கரிப்பதைக் காண முடிந்தது. பேரரசு முழுவதும் ஒரு மூலையில் இருந்த மரங்கள் மற்றும் காய்கறிகள் மற்றொரு மூலையில் விதைக்கப்பட்டன. மங்கோலியப் பகுதிகளில் இருந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மேற்கு நோக்கிப் பரவின.[95] கிழக்குத் திருச்சபையில் இருந்து மங்கோலிய அமைதி பற்றி விளக்கிய ஒரு குறிப்பை திருத்தந்தை இருபத்து இரண்டாம் யோவான் பின்வருமாறு குறிப்பிட்டார்: "... பெரிய ஆட்சியாளர்கள் மற்றும் அரசின் அனைத்து பிரபுக்களில் தலைசிறந்த ஒருவராகக் ககான் திகழ்கிறார், எ.கா., அல்மலிக்கின் மன்னன் (சகதாயி கானரசு), பேரரசன் அபு சயித் மற்றும் உஸ்பெக் கான் ஆகியோர் அவரது குடிமக்கள் ஆவர், அவர்கள் தங்களது மரியாதையைச் செலுத்துவதற்காகக் ககானின் புனிதத் தன்மையை வணங்குகின்றனர்."[96] அதே நேரத்தில் நான்கு கானரசுகளும் ஒன்றோடொன்றான தொடர்புகளைப் பதினான்காம் நூற்றாண்டு வரை தொடர்ந்த போதிலும் அவை இறைமையுள்ள நாடுகளாகவே இதைச் செய்தன. மீண்டும் தங்களது ஆதாரங்களை ஒரு ஒத்துழைப்பான இராணுவ அருமுயற்சியாக அவை மீண்டும் ஒருங்கிணைக்கவே இல்லை.[97]
மங்கோலியச் சவாரியாளர், யுவான் அரசமரபுகிழக்குக் கதைகளின் மலர் என்ற பிரெஞ்சு நூலில் தெமூர் (யுவான்), சபர் (ஒக்தாயி குடும்பம்), தோக்தா (தங்க நாடோடிக் கூட்டம்), மற்றும் ஒல்ஜைடு (ஈல்கானரசு) ஆகியோர் பற்றிய ஒரு ஐரோப்பியச் சித்தரிப்பு.[98]
கய்டு மற்றும் துவா ஆகியோருடன் சண்டைகளில் ஈடுபட்டிருந்த போதிலும் யுவான் பேரரசர் தெமூர் 1297 – 1303ஆம் ஆண்டு வரை தாய்லாந்துக்கு எதிரான தன்னுடைய தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு போர்க்குணம் கொண்ட சான் மக்களைத் திறை செலுத்தும் நிலைக்குக் கொண்டுவந்தார். மங்கோலியப் பேரரசின் தெற்கு நோக்கிய விரிவாக்கத்தின் முடிவை இது குறித்தது.
1295ஆம் ஆண்டு ஈல்கானரசின் அரியணையைக் கசன் பெற்றார். அவர் அதிகாரப்பூர்வமாகத் தன்னுடைய சொந்த மதமாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். இது மங்கோலிய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இதற்குப் பிறகு மங்கோலியப் பாரசீகமானது மேலும் மேலும் இஸ்லாமியமயமாக்கப்பட்டது. இவ்வாறாக இருந்தபோதிலும் கிழக்கில் இருந்த யுவான் அரசமரபு மற்றும் தெமூர் கானுடனான தன்னுடைய தொடர்புகளைக் கசன் தொடர்ந்து பலப்படுத்தினார். பெரிய கானின் அதிகாரத்தை ஈல்கானரசில் விளம்பரப்படுத்துவது என்பது அரசியல் ரீதியாகப் பயனுள்ளதாக இருந்தது. ஏனெனில் உருசியாவில் இருந்த தங்க நாடோடிக் கூட்டமானது நீண்ட காலமாக அருகில் இருந்த சியார்சியாவைச் சொந்தம் கொண்டாடியது.[88] நான்கு ஆண்டுகளுக்குள்ளாகவே யுவான் அரசவைக்குக் காணிக்கை செலுத்துவதைக் கசன் தொடங்கினார். தெமூர் கானைத் தங்களது உயர்ந்த பிரபுவாக ஏற்றுக்கொள்ளமாறு மற்ற கான்களுக்கும் கசன் கோரிக்கை வைத்தார். பின் வந்த தசாப்தங்களில் ஈல்கானரசு மற்றும் யுவான் அரசமரபுக்கு இடையில் ஒரு விரிவான நிகழ்வாகக் கலாச்சார மற்றும் அறிவியல் தொடர்புகள் வளர்ச்சியடையுமாறு இவர் கவனித்துக் கொண்டார்.[99]
கசனின் நம்பிக்கை வேண்டுமானால் இஸ்லாமாக இருந்திருக்கலாம், ஆனால் எகிப்திய அடிமை வம்சத்தவர்களுக்கு எதிரான தனது முன்னோர்களின் போரை இவர் தொடர்ந்தார். தன் முதிய மங்கோலிய ஆலோசகர்களிடம் தன் சொந்த மொழியில் விவாதித்தார். 1299ஆம் ஆண்டு வடி அல்-கசுனதர் யுத்தத்தில் இவர் அடிமை வம்ச இராணுவத்தைத் தோற்கடித்தார். ஆனால் குறுகிய காலத்திற்கு மட்டுமே இவரால் சிரியாவை ஆக்கிரமிப்பு செய்ய முடிந்தது. இதற்குக் காரணம் சகதாயி கானரசு அதன் உண்மையான ஆட்சியாளரான கய்டுவின் தலைமையில் இவரது கவனத்தைச் சிதற வைக்கும் ஊடுருவல்களை நடத்தியதேயாகும். கய்டு ஈல்கான்கள் மற்றும் யுவான் அரசமரபு ஆகிய இரண்டு நாடுகளுடனும் போரில் ஈடுபட்டார்.
தங்க நாடோடிக் கூட்டத்திற்குள் தனது செல்வாக்கை நிலைநிறுத்த போராடிய கய்டு வெள்ளை நாடோடிக் கூட்டத்தின் கானாகப் பயனுக்கு எதிராகத் தன்னுடைய சொந்த தேர்வான கோபலக்குக்கு ஆதரவளித்தார். உருசியாவில் இருந்த மங்கோலியர்களிடமிருந்து இராணுவ உதவியைப் பெற்ற பிறகு பயன் தெமூர் கான் மற்றும் ஈல்கானரசு ஆகிய இருவரிடமிருந்தும் கய்டுவின் படைகளுக்கு எதிராக ஒன்றிணைந்த தாக்குதலை நடத்துவதற்காக உதவியைக் கோரினார். தெமூர் இதற்கு இசைந்தார். ஒரு ஆண்டுக்குப் பிறகு கய்டுவைத் தாக்கினார். 1301ஆம் ஆண்டு சவ்கான் ஆற்றுக்கு அருகில் தெமூரின் இராணுவங்களுடன் ஒரு குருதி தோய்ந்த யுத்தத்திற்குப் பிறகு கய்டு இறந்தார். அவருக்குப் பிறகு துவா ஆட்சிக்கு வந்தார்.[100][101]
கய்டுவின் மகன் சபரால் துவா சவாலுக்கு உள்ளாக்கப்பட்டார். ஆனால் தெமூரின் உதவியுடன் ஒக்தாயி வழித்தோன்றல்களைத் துவா தோற்கடித்தார். ஒரு பொது அமைதியை வேண்டிய தங்க நாடோடிக் கூட்டத்தின் தோக்தாவும் யுவான் எல்லைக்கு 20,000 வீரர்களை அனுப்பினார்.[102] 1312ஆம் ஆண்டு தோக்தா இறந்தார். அவருக்குப் பிறகு உஸ்பெக் கான் தங்க நாடோடி கூட்டத்தின் அரியணையை கைப்பற்றி ஆட்சிக்கு வந்தார். முஸ்லிம் அல்லாத மங்கோலியர்களைக் கொடுமைப்படுத்தினார். நாடோடிக் கூட்டம் மீதான யுவானின் செல்வாக்கானது தலைகீழானது. மங்கோலிய நாடுகளுக்கு இடையிலான எல்லைச் சண்டைகள் மீண்டும் தொடங்கின. புயந்து கானின் தூதுவர்கள் உஸ்பெக்கிற்கு எதிராக தோக்தாவின் மகனுக்கு ஆதரவு அளித்தனர்.
சகதாயி கானரசில் ஒக்தாயி வழித்தோன்றல்களின் ஒரு திடீர்க் கலகத்தை ஒடுக்கிய பிறகு முதலாம் எசன் புகா கானாக அரியணைக்கு வந்தார். அவர் சபரை நாடுகடத்தினர். இறுதியாக யுவன் மற்றும் ஈல்கானரசு இராணுவங்கள் சகதாயி கானரசைத் தாக்கின. பொருளாதார அனுகூலங்களுக்கான வாய்ப்பு மற்றும் செங்கிஸ் கான் வழித்தோன்றல்களின் மரபு ஆகியவற்றை அங்கீகரித்த உஸ்பெக் 1326ஆம் ஆண்டு யுவானுடன் நட்பு ரீதியிலான உறவு முறைகளை மீண்டும் தொடங்கினார். முஸ்லிம் உலகுடனான தொடர்புகளையும் இவர் வலுப்படுத்தினார். பள்ளி வாசல்கள் மற்றும் சிக்கலான வேலைப்பாடுகளுடைய குளியல் இடங்கள் போன்ற கட்டடங்களையும் இவர் உருவாக்கினார். 14ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தின் போது மங்கோலியப் படையெடுப்புகள் மேலும் குறைந்தன. 1323ஆம் ஆண்டு ஈல்கானரசின் அபு சயித் கான் எகிப்துடன் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். அவரது வேண்டுகோளின் கீழ் யுவான் அரசவையானது அபு சயித்தின் காப்பாளரான சுபனுக்கு அனைத்து மங்கோலியக் கானரசுகளின் தலைமைத் தளபதி என்ற பட்டத்தைக் கொடுத்தது. ஆனால் 1327ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுபன் இறந்தார்.[103]
1328-29ஆம் ஆண்டு யுவான் அரச மரபில் உள்நாட்டுப் போரானது வெடித்தது. 1328ஆம் ஆண்டு எசுன் தெமூரின் இறப்பிற்குப் பிறகு கான்பலிக்கில் புதிய தலைவராக ஜயாது கான் ஆட்சிக்கு வந்தார். அதே நேரத்தில் சங்குடுவில் எசுன் தெமூரின் மகன் ரகிபக் அரியணைக்கு வந்தார். இது உள்நாட்டுப் போருக்கு இட்டுச் சென்றது. இந்த உள்நாட்டுப் போர் இரண்டு தலைநகரங்களின் போர் என்று அழைக்கப்படுகிறது. ரகிபக்கைத் துக் தெமூர் தோற்கடித்தார். ஆனால் சகதாயி கானான எல்ஜிகிடை, துக் தெமூரின் அண்ணனான குசாலாவிற்குப் பெரிய கானாகுவதற்காக ஆதரவளித்தார். ஒரு பெரும் படையுடன் அவர் தாக்குதல் நடத்தினார். துக் தெமூர் பதவியைத் துறந்தார். 30 ஆகத்து 1329ஆம் ஆண்டு குசாலா கானாகத் தேர்வு செய்யப்பட்டார். தெமூருக்குக் கீழ் பணியாற்றிய ஒரு கிப்சாக்குத் தளபதியால் குசாலாவுக்கு விடம் கொடுக்கப்பட்டது. துக் தெமூர் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.
துக் தெமூர் சீன மொழி மற்றும் வரலாற்றைப் பற்றி அறிந்திருந்தார். மேலும் அவர் குறிப்பிடத்தக்க கவிஞராகவும், அழகியல் எழுத்தாளராகவும் மற்றும் ஓவியராகவும் திகழ்ந்தார். மங்கோலிய உலகத்தின் இறையாண்மையுள்ள தலைவராக மற்ற கானரசுகளால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்காகச் செங்கிஸ் கான் வழிவந்த இளவரசர்கள் மற்றும் குறிப்பிடத்தகுந்த மங்கோலியத் தளபதிகளைச் சகதாயி கானரசு, ஈல்கான் அபு சயித் மற்றும் உஸ்பெக் ஆகியோரிடம் இவர் அனுப்பினார். இந்தத் தூதுக்குழுவுக்குப் பலனாக, அனைவரும் ஆண்டுதோறும் காணிக்கை செலுத்த ஒப்புக் கொண்டனர்.[104] மேலும் எல்ஜிகிடையின் கோபத்தைத் தணிப்பதற்காக அவருக்கு துக் தெமூர் ஏராளமான பரிசுப் பொருட்களையும் ஏகாதிபத்திய முத்திரை ஒன்றையும் கொடுத்தார்.
1335ஆம் ஆண்டு ஈல்கான் அபு சயித் பகதூரின் இறப்பிற்குப் பிறகு மங்கோலிய ஆட்சியானது பலவீனமடைந்தது. பாரசீகமானது அரசியல் குழப்பத்தில் மூழ்கியது. ஒரு ஆண்டுக்குப் பிறகு அபு சயித்துக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் ஒரு ஒயிரட்டு ஆளுநரால் கொல்லப்பட்டார். ஈல்கானரசானது சுல்டுகள், சலயிர்கள், கசர் வழிவந்த தோகா தெமூர் மற்றும் பாரசீகப் போர்ப்பிரபுக்கள் இடையே பிரித்துக் கொள்ளப்பட்டது. இந்தக் குழப்பத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சியார்சியர்கள் மங்கோலியர்களைத் தங்கள் நிலப்பகுதியிலிருந்து வெளியேற்றினர். 1336ஆம் ஆண்டு அனத்தோலியாவில் உய்குர் தளபதி எரட்னா என்பவர் எரட்னிடு அரசு என்கிற ஒரு சுதந்திரமான அரசை நிறுவினார். தம் மங்கோலிய எசமானர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு விசுவாசத்திற்குரிய, திறை செலுத்திய நாடான சிலிசியாவின் ஆர்மீனிய இராச்சியம் எகிப்திய அடிமை வம்சத்தவர்களிடம் இருந்து அச்சுறுத்தல்களைப் பெற்றது. 1375ஆம் ஆண்டு இறுதியாக அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.[105]
பாரசீகத்தில் ஈல்கானரசின் வீழ்ச்சிக்குப் பிறகு சீனா மற்றும் சகதாயி கானரசில் இருந்த மங்கோலிய ஆட்சியாளர்கள் நடுவிலும் அமளி ஏற்பட்டது. கறுப்புச் சாவு என்று அழைக்கப்பட்ட பிளேக் நோயானது மங்கோலிய நிலப் பகுதிகளில் தொடங்கியது. ஐரோப்பாவிற்குப் பரவியது. இது மேலும் குழப்பத்தை அதிகப்படுத்தியது. அனைத்து கானரசுகளையும் நோயானது அழிவுக்குட்படுத்தியது. வணிகத் தொடர்புகளைத் துண்டித்தது. கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.[106] 14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் மட்டும் பிளேக் நோயானது 5 கோடி மக்களின் உயிரை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[107]
மங்கோலியர்களின் சக்தி குறை ஆரம்பித்தபோது பேரரசு முழுவதும் குழப்பமானது வெடித்தது. மங்கோலியரல்லாத தலைவர்கள் தங்களது சொந்த செல்வாக்கை விரிவாக்கினர். 1342 மற்றும் 1369ஆம் ஆண்டுக்கு இடையில் தங்க நாடோடிக் கூட்டமானது தற்கால பெலருஸ் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் உள்ளிட்ட தனது அனைத்து மேற்கு நிலப்பகுதிகளையும் போலந்து மற்றும் லித்துவேனியாவிடம் இழந்தது. 1331 முதல் 1343ஆம் ஆண்டு வரை சகதாயி கானரசில் இருந்த முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத இளவரசர்கள் ஒருவருடன் ஒருவர் போரிட்டனர். திரான்சாக்சியானா மற்றும் மொகுலிசுதானில் செங்கிஸ் கானின் வழித்தோன்றல்கள் அல்லாத போர்ப்பிரபுக்கள் தங்களது சொந்த கைப்பாவைக் கான்களைப் பதவியில் அமர்த்திய போது சகதாயி கானரசானது சிதறுண்டது. சகதாயி வழித்தோன்றல்கள் மீது சூச்சி வழித்தோன்றல்களின் ஆதிக்கத்தைக் குறுகிய காலத்திற்கு ஜானி பெக் கான் உறுதிப்படுத்தினார். அசர்பைஜானில் இருந்த ஈல்கானரசின் ஒரு பிரிவையும் அடிபணியக் கோரினார். "இன்று மூன்று உளூஸ்களும் என் கட்டுப்பாட்டில் உள்ளன" எனத் தம்பட்டம் அடித்துக்கொண்டார்.[108]
எனினும் 1359ஆம் ஆண்டு அவருக்குப் பின் வந்த பெர்டிபெக் கானின் அரசியல் படுகொலைக்குப் பிறகு தங்க நாடோடிக் கூட்டத்தின் அரியணைக்காகச் சூச்சியின் வழிவந்த எதிரெதிர்க் குடும்பங்கள் சண்டையிட ஆரம்பித்தன. இந்தப் பிரச்சனைகளை ஒழுங்குபடுத்தக் கடைசி யுவான் ஆட்சியாளரான உகான்டு கான் சக்தியற்றிருந்தார். பேரரசானது அதன் முடிவைக் கிட்டத்தட்ட எட்டியது என்பதற்கான அறிகுறி இதுவாகும். அவரது அரசவையின் வலிமையான அடிப்படையற்ற பணமானது அதிகப்படியான பணவீக்கச் சூழலில் மாட்டியது. யுவானின் கடுமையான திணிப்பு காரணமாக ஆன் சீன மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1350களில் கொர்யியோவின் கோங்மின் மங்கோலியக் கோட்டைக் காவல் படையினரை வெற்றிகரமாக வெளியேற்றினர். தோகன் தெமூர் கானின் பேரரசியின் குடும்பத்தைப் பூண்டோடு அழித்தார். அதே நேரத்தில் திபெத்தில் இருந்த மங்கோலியச் செல்வாக்கை தை சிது சாங்சுப் கியால்ட்சன் நீக்கினார்.[108]
தங்களது குடிமக்களிடம் இருந்து அதிகப்படியாக விலக்கப்பட்ட மங்கோலியர்கள் சீக்கிரமே பெரும்பாலான சீனாவை, எதிர்ப்பில் ஈடுபட்ட மிங் படைகளிடம் இழந்தனர். 1368ஆம் ஆண்டு மங்கோலியாவில் இருந்த தங்களது இதயப்பகுதிக்குத் தப்பி ஓடினர். யுவான் அரசமரபு தூக்கியெறியப்பட்ட பிறகு தங்க நாடோடிக் கூட்டமானது மங்கோலியா மற்றும் சீனாவுடன் தொடர்பை இழந்தது. அதே நேரத்தில் சகதாயி கானரசின் இரண்டு முக்கியப் பகுதிகள் தைமூரியப் பேரரசைத் தோற்றுவித்த தைமூரால் தோற்கடிக்கப்பட்டன. எனினும் சகதாயி கானரசின் எஞ்சிய பகுதிகள் தப்பிப் பிழைத்தன. கடைசியில் எஞ்சியிருந்த சகதாயி கானரசானது எர்கந்து கானரசு என்பதாகும். அது 1680ஆம் ஆண்டு அல்திசார் மீதான சுங்கர் படையெடுப்பின் போது சுங்கர் கானரசால் தோற்கடிக்கப்பட்டது. தங்க நாடோடிக் கூட்டமானது சக்தியைப் படிப்படியாக நான்கு நூற்றாண்டுகளுக்கு இழந்து கொண்டிருந்த சிறிய துருக்கிய நாடோடிக் கூட்டங்களாகச் சிதறியது. இவற்றில் கானரசின் நிழல் போன்ற பெரிய நாடோடிக் கூட்டமானது, 1502ஆம் ஆண்டு வரை, அதற்குப் பின் அதன் வழிவந்த கிரிமியக் கானரசானது சராய் நகரைச் சூறையாடியது வரை எஞ்சியிருந்தது.[109] கிரிமியக் கானரசு 1783ஆம் ஆண்டுவரை நீடித்தது. அதே நேரத்தில் புகாரா மற்றும் கசக் ஆகிய கானரசுகள் இன்னும் மேலும் அதிகமான காலத்திற்கு நீடித்திருந்தன.
மங்கோலியர்களால் திரட்டப்பட்ட துருப்புக்களின் எண்ணிக்கை என்பது அறிஞர்களிடையே விவாதத்திற்குரிய பொருளாக உள்ளது.[110] ஆனால் 1206ஆம் ஆண்டு குறைந்தது 1,05,000 பேர் இருந்தனர்.[111] மங்கோலிய இராணுவ அமைப்பானது எளிமையாக, ஆனால் வெற்றிகரமாக, பதின்ம அமைப்பின் அடிப்படையில் இருந்தது. இராணுவமானது 10 மனிதர்களைக் கொண்டிருந்த குழுக்களிலிருந்து உருவாக்கப்பட்டிருந்தது. அவை அர்பன்கள் (10 மனிதர்கள்), சூன்கள் (100), மிங்கன் (1,000) மற்றும் தியூமன்கள் (10,000).[112]
மங்கோலியர்கள் அவர்களது குதிரை வில்லாளர்களுக்காக மிகப் பிரபலமானவர்களாக இருந்தனர். எனினும் ஈட்டிகளைக் கொண்டிருந்த துருப்புக்களும் சமமான அளவுக்குத் திறமையானவர்களாக இருந்தனர். மேலும் மங்கோலியர்கள் தங்களால் வெல்லப்பட்ட நிலப் பகுதிகளில் இருந்து மற்ற இராணுவ சிறப்பு பிரிவினரையும் தங்களது இராணுவத்தில் இணைத்துக் கொண்டனர். அனுபவம் வாய்ந்த சீனப் பொறியாளர்களின் உதவியுடன் அவர்கள் பெரிய கவண் வில்கள் போன்ற பல்வேறு முற்றுகை எந்திரங்களை உருவாக்கினர். இவற்றைக்கொண்டு மதில் சுவர்களைக்கொண்ட கோட்டைகள் மீது முற்றுகை யுத்தம் நடத்தினர். சில நேரங்களில் அந்த நிலப்பகுதியில் அந்நேரத்தில் கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு எந்திரங்களை உருவாக்கினர்.[112]
மங்கோலியப் பேரரசின் கட்டுப்பாட்டிலிருந்த படைகள் நகர்வு மற்றும் வேகத்திற்காகப் பயிற்சி கொடுக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு, ஆயுதம் அளிக்கப்பட்டன. தாங்கள் எதிர்கொண்ட பல இராணுவங்களை விட மங்கோலிய வீரர்கள் மிகவும் இலகுவான கவசங்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டிருந்தனர். ஆனால் தங்களது வேகமான நகர்வுகளின் மூலம் அதை ஈடு செய்தனர். ஒவ்வொரு மங்கோலிய வீரனும் பொதுவாகப் பல குதிரைகளுடன் பயணம் செய்வான். தேவை ஏற்படும்போது உடனடியாக ஒரு புதிய குதிரையை மாற்றிப் பயணம் செய்வான். இது தவிர உணவுப் பொருட்களைத் தவிர்த்து சுதந்திரமாக மங்கோலிய இராணுவத்தின் போர் வீரர்கள் இயங்கினர். இது அவர்களின் இராணுவ நகர்வின் வேகத்தை வெகுவாக அதிகரித்தது.[113] தபால்களை திறமைமிக்க வகையில் பரிமாற்றியதன் காரணமாக இந்த இராணுவங்களின் தலைவர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர்.
ஒழுக்கமானது நெர்ஜ் என்று அழைக்கப்பட்ட பாரம்பரிய வேட்டைப் பயிற்சியின் மூலம் பயிற்றுவிக்கப்பட்டது. இதை சுவய்னி என்ற வரலாற்றாளர் குறிப்பிட்டுள்ளார். மற்ற கலாச்சாரங்களில் கடைபிடிக்கப்படும் வேட்டைகளில் இருந்து இவ்வகை வேட்டைப் பயிற்சிகள் தனித்துவமாக இருந்தன. மற்ற கலாச்சாரங்களில் சிறு குழுவாகப் பிரிந்து வேட்டையாடுவர். மங்கோலியர்கள் ஒரே கோட்டில் இருக்குமாறு பரவுவர். ஒரு முழுப் பகுதியையும் சுற்றிவளைப்பர். அப்பகுதிக்குள் உள்ள அனைத்து விலங்குகளையும் ஒன்றாக ஓட்டுவர். இலக்கானது ஒரு விலங்கைக் கூட தப்பவிடாமல் அனைத்தையும் கொல்வதாகும்.[113]
மங்கோலியர்களின் மற்றொரு சாதகமான தன்மையானது தொலை தூரப் பயணங்களைக் கடக்கும் அவர்களது திறமையாகும். வழக்கத்திற்கு மாறான கடுமையான குளிர்காலங்களில் கூட அவர்கள் இதைச் செய்தனர். உதாரணமாக, உறைந்த ஆறுகள் அவற்றின் கரைகளில் இருந்த பெரிய நகர்ப்புற மையங்களுக்கு நெடுஞ்சாலைகளைப் போல மங்கோலியர்களை கூட்டிச் சென்றன. ஆற்று வேலைகளுக்கு மங்கோலியர்கள் செயல்திறன் மிக்கவர்களாக இருந்தனர். ஏப்ரல் 1241ஆம் ஆண்டு மொகி யுத்தத்தின்போது ஒரே இரவில் 30,000 குதிரைப்படை வீரர்கள் சஜோ ஆற்றை அதன் வசந்தகால வெள்ள நிலையின்போது கடந்து அங்கேரிய மன்னன் நான்காம் பெலாவைத் தோற்கடித்தனர். இதைப்போலவே முஸ்லிம் குவாரசமிய ஷாவுக்கு எதிரான தாக்குதலின்போது ஆற்றில் தொலைந்து விடாமல் இருப்பதற்காக ஒரு படகுகளின் குழுவைப் பயன்படுத்தினர்.
பாரம்பரியமாக அவர்களது தரைப் படைகளின் வலிமைக்காக அறியப்படும் மங்கோலியர்கள் கடற்படையை அரிதாகத்தான் பயன்படுத்தினர். 1260கள் மற்றும் 1270களில் சீனாவின் சாங் அரசமரபை வெல்லும்போது இவர்கள் கப்பல் படையைப் பயன்படுத்தினர். எனினும் சப்பானுக்கு எதிரான கப்பல் படையெடுப்புகளுக்கான இவர்களது முயற்சியானது தோல்வியில் முடிந்தது. கிழக்கு நடுநிலக் கடலைச் சுற்றி இவர்களது படையெடுப்புகள் கிட்டத்தட்ட முழுவதுமாகவே தரைப்படையைச் சார்ந்தே இருந்தன. அந்நேரத்தில் கடல்கள் சிலுவைப்போர் வீரர்கள் மற்றும் எகிப்திய அடிமை வம்சப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தன.[114]
அனைத்து இராணுவப் படையெடுப்புகளுக்கு முன்னரும் கவனமான திட்டமிடல், நில ஆய்வு, எதிரிகளின் நிலப்பரப்புகள் மற்றும் படைகள் பற்றிய மென்மையான தகவல்களின் சேகரிப்பு ஆகியவை நடத்தப்பட்டன. வெற்றி, அமைப்பு மற்றும் வேகமாக நகரும் திறன் ஆகிய மங்கோலிய இராணுவத்தின் தன்மைகள் காரணமாக அவர்களால் ஒரே நேரத்தில் பல முனைப் பகுதிகளில் சண்டையிட முடிந்தது. 60 வயதுடைய அனைத்து வயது வந்த ஆண்களும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளத் தகுதியுடையவர்களாக இருந்தனர். இது இவர்களின் பழங்குடியினப் போர் வீரப் பாரம்பரியத்தில் மரியாதையின் ஒரு ஆதாரமாக இருந்தது.[115]
மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவர். நீளமான மற்றும் பெரிய தாடியானது இவர் ஒரு மங்கோலியர் அல்ல என்பதை உணர்த்துகிறது. இவர் ஒரு பாறைச் சரிவில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார்.
செங்கிஸ் கானால் உருவாக்கப்பட்ட யசா சட்டங்களின் அடிப்படையில் மங்கோலியப் பேரரசானது நிர்வகிக்கப்பட்டது. யசா என்ற சொல்லுக்கு "ஒழுங்கு" அல்லது "ஆணை" என்று பொருள். இம்முறையின் ஒரு முக்கியமான நியதியானது உயர் பதவியில் இருப்பவர்கள் சாதாரண குடிமகன் என்ன கடினமான சூழ்நிலைகளில் வாழ்கிறானோ அதே சூழ்நிலையில் வாழ வேண்டும் என்பதாகும். இச்சட்டம் கடுமையான தண்டனைகளையும் வழங்கியது. உதாரணமாக, குதிரையில் முன் செல்லும் ஒரு போர் வீரன் தவறவிட்ட எதையும் பின் செல்லும் போர் வீரன் எடுத்து கொடுக்காவிட்டால் மரண தண்டனை கொடுக்கப்பட்டது. இவரது இராணுவத்தில் பொய் சொல்பவர்களுக்குத் தண்டணை கொடுக்கப்பட்டது. கற்பழிப்புக்கும் கொலைக்கும் தண்டனைகள் கொடுக்கப்பட்டன. மங்கோலிய ஆட்சிக்கு தெரிவிக்கப்படும் எந்த எதிர்ப்பும் பெருமளவிலான தண்டனைக்கு இட்டுச் சென்றது. மங்கோலிய ஆணைகளுக்கு எதிர்ப்புக் காட்டினால் நகரங்கள் அழிக்கப்பட்டன. அதன் குடிமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். எசாவின் கீழ் தலைவர்கள் மற்றும் தளபதிகள் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பேரரசானது குறுல்த்தாய் என்று அழைக்கப்பட்ட ஒரு ஜனநாயகமற்ற நாடாளுமன்ற பாணியிலான மைய அவையால் நிர்வகிக்கப்பட்டது. இங்கு மங்கோலியத் தலைவர்கள் பெரிய கானுடன் சந்தித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை விவாதித்தனர். ஒவ்வொரு முறையும் புதிய கான் தேர்ந்தெடுக்கப்படும் பொழுதும் குறுல்த்தாய்கள் கூட்டப்பட்டன.[116]
செங்கிஸ் கான் ஒரு தேசிய முத்திரையையும் உருவாக்கினார். மங்கோலியாவில் மங்கோலிய மொழிக்கான ஒரு புதிய எழுத்து முறையைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தார். மதகுருமார்கள் மற்றும் கலைஞர்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்தார்.
மங்கோலியர்கள் நடு ஆசிய முஸ்லிம்களைச் சீனாவில் நிர்வாகிகளாகச் சேவையாற்றுவதற்காகக் கொண்டு வந்தனர். சீனாவில் இருந்த ஆன் சீனர்கள் மற்றும் கிதான்களை நடு ஆசியாவின் புகாரவில் இருந்த முஸ்லிம் மக்களிடம் நிர்வாகிகளாகச் சேவையாற்றுவதற்காகக் கொண்டு வந்தனர். இவ்வாறாக இரு நிலப்பகுதிகளின் உள்ளூர் நபர்களின் அதிகாரத்தைக் குறைப்பதற்காக அயல்நாட்டவரைப் பயன்படுத்தினர்.[117] மங்கோலியர்கள் மற்ற சமயங்களின் மீது சகிப்புத்தன்மையுடன் நடந்து கொண்டனர். சமயத்தை அடிப்படையாகக் கொண்டு அரிதாகவே மக்களைக் கொடுமைப்படுத்தினர். இது அவர்களது கலாச்சாரம் மற்றும் முற்போக்குச் சிந்தனையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. 20வது நூற்றாண்டின் சில வரலாற்றாளர்கள் இது ஒரு சிறந்த இராணுவ உத்தி எனக் கருதுகின்றனர். செங்கிஸ் கான் குவாரசமியாவின் சுல்தான் முகமதுவுடன் போருக்குச் சென்றபோது மற்ற இஸ்லாமியத் தலைவர்கள் இந்தப் போரில் முகமதுவுக்கு உதவவில்லை. ஏனெனில், இப்போரானது புனிதப் போராகக் கருதப்படாமல் இரண்டு தனித்தனி அரசுகளுக்கு இடையிலான போராகக் கருதப்பட்டது.
செங்கிஸ் கானின் காலத்தின்போது கிட்டத்தட்ட அனைத்து சமயங்களிலும் மங்கோலிய மதம் மாறியவர்கள் இருந்தனர். அவர்கள் பௌத்தம் முதல் கிறித்தவம் வரையிலும், மானி சமயம் முதல் இஸ்லாம் வரையிலும் மதம் மாறியிருந்தனர். பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக, தான் ஷாமன் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், செங்கிஸ் கான் முழுமையான சமய சுதந்திரத்தை உறுதி செய்த ஒரு நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார். இவரது ஆட்சியின் கீழ் அனைத்து சமயத் தலைவர்களுக்கும் வரி விலக்கும், அரசுப் பணிகளில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டிருந்தது.[118]
நாடோடி வாழ்க்கை முறை காரணமாக, ஆரம்பத்தில் வழிபாட்டுக்கென அதிகாரப் பூர்வமாக சில இடங்களே இருந்தன. எனினும் ஒக்தாயியின் கீழ் மங்கோலியத் தலைநகர்த்தில் பல கட்டமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அரண்மனைகளுடன் பௌத்த, முஸ்லிம், கிறித்தவ மற்றும் தாவோயியச் சமயங்களை பின்பற்றுவோர்களுக்காக ஒக்தாயி வழிபாட்டிடங்களைக் கட்டிக்கொடுத்தார். ஒக்தாயியின் மனைவி நெசுத்தோரியக் கிறித்தவராக இருந்த போதிலும் அந்நேரத்தில் பெரும்பான்மை மதங்களாக ஷாமன் மதம், தெங்கிரி மதம் மற்றும் பௌத்தம் ஆகிய மதங்கள் இருந்தன.[119]
இறுதியாக மங்கோலியப் பேரரசில் இருந்து பிரிந்த ஒவ்வொரு அரசும் அந்தந்த நாட்டின் உள்ளூர் மக்கள் பின்பற்றிய பெரும்பான்மை மதத்தைப் பின்பற்ற ஆரம்பித்தன. கிழக்கில் மங்கோலியர்களால் ஆளப்பட்ட சீன யுவான் அரசமரபானது பௌத்தம் மற்றும் ஷாமன் மதத்தைப் பின்பற்றியது. அதே நேரத்தில் மேற்கில் இருந்து மூன்று கானரசுகளும் இஸ்லாம் மதத்தைப் பின்பற்ற ஆரம்பித்தன.[120][121][122]
மங்கோலிய மொழியில் தற்போது வரை எஞ்சியிருக்கிற மிகப் பழமையான இலக்கிய வேலைப்பாடானது மங்கோலியர்களின் இரகசிய வரலாறு ஆகும். 1227ஆம் ஆண்டு செங்கிஸ் கானின் இறப்பிற்குச் சில காலம் கழித்து மங்கோலிய அரச குடும்பத்திற்காக இது எழுதப்பட்டது. செங்கிஸ் கானின் வாழ்க்கை மற்றும் மூதாதையர்கள் பற்றி எழுதப்பட்ட மிக முக்கியமான மங்கோலிய நூலாக இது கருதப்படுகிறது. இந்நூலில் செங்கிஸ் கானின் பூர்வீகம், அவரது குழந்தைப்பருவம் முதல் மங்கோலியப் பேரரசின் தோற்றுவிப்பு மற்றும் அவரது மகன் ஒக்தாயியின் ஆட்சி வரை கூறப்பட்டுள்ளது.
பேரரசில் இருந்து கிடைக்கப்பெறும் மற்றொரு உயர்தர நூலானது ஜமி அல்-தவரிக் அல்லது "பிரபஞ்ச வரலாறு" ஆகும். இந்த நூலுக்கான ஆயத்தங்கள் 14ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஈல்கான் அபகாவினால் தொடங்கப்பட்டன. மங்கோலியர்களின் சொந்தக் கலாச்சார மரபைத் தோற்றுவிப்பதற்கு உதவுவதற்காக முழு உலக வரலாற்றையும் பதியும் முயற்சியாக இந்நூல் தொடங்கப்பட்டது.
14 ஆம் நூற்றாண்டின் மங்கோலிய எழுத்தர்கள் மரப்பிசின் மற்றும் காய்கறிச் சாயங்களின் ஒரு கலவையை எழுத்துக்களை மறைப்பதற்காகப் பயன்படுத்தினர். விவாதத்திற்குரியதாக இருந்தபோதிலும், இவ்வாறான முதல் பயன்பாடு இதுதான் எனக் கருதப்படுகிறது.[123]
1363ஆம் ஆண்டு சஞ்சுபினி சிஜ் என்ற வானியல் நூல், நடு மங்கோலிய விளக்கங்களுடன்.பாரசீக வானியலாளர்கள் பணியாற்றுவதை மங்கோலியர்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். 14ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட ஜமி அல்-தவரிக் நூலிலுள்ள ஒரு ஓவியம்.
கான்களின் புரவுத்தன்மை காரணமாக மங்கோலியப் பேரரசானது அறிவியலில் சில முக்கியமான முன்னேற்றங்களைக் கண்டது. ரோஜர் பேகன் என்கிற வரலாற்றாளரின் கூற்றுப்படி, மங்கோலியர்கள் உலகத் துரந்தரர்களாக வெற்றி பெற்றதற்கான காரணமானது அவர்கள் கணிதத்திற்கு அளித்த முதன்மையான அர்ப்பணிப்பு ஆகும்.[124] கான்கள் தனியாக ஆர்வம் கொண்ட மற்றொரு அறிவியல் பிரிவானது வானியல் ஆகும். யுவான் சி வரலாற்று நூலின்படி, சொங்குடுவின் நட்சத்திர அமைவிடங்களைக் கொண்ட கோளத்தை 1233 மற்றும் 1236 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை சரிசெய்ய ஒக்தாயி கான் ஆணையிட்டார். மேலும், 1234ஆம் ஆண்டு தமிங்கிலி நாட்காட்டியைச் சீரமைவு செய்து பின்பற்ற ஆணையிட்டார்.[125] 1236ஆம் ஆண்டு வாக்கில் ஒக்தாயி கரகோரத்தில் ஒரு கன்பூசியக் கோயிலை எலு சுகைக்காகக் கட்டினார். இங்கு எலு சுகை சீன மாதிரியை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாட்காட்டியை உருவாக்கிச் சீரமைப்பு செய்தார். மோங்கே கான் யூக்ளிடிய வடிவியல் கணிதத்தின் சில கடினமான வினாக்களுக்குத் தானே தீர்வு கண்டதாக ரசீத்தல்தீன் குறிப்பிட்டுள்ளார். தனது தம்பி குலாகு கானிடம் வானியலாளர் தூசீயைத் தன்னிடம் அனுப்பி வைக்கமாறும் கேட்டுக்கொண்டார்.[126] கரகோரத்தில் ஒரு வானிலை ஆய்வு மையத்தை மோங்கே கானுக்காகத் தூசீ கட்டிக்கொடுக்கும் எண்ணமானது ஈடேறவில்லை. ஏனெனில் தெற்கு சீனாவில் நடந்த படையெடுப்பின்போது கான் இறந்துவிட்டார். மாறாகக் குலாகு கான் 1259ஆம் ஆண்டு பாரசீகத்தில் மரகா வானிலை ஆய்வு மையத்தைக் கட்டுவதற்காக நிதியுதவி அளித்தார். தூசீ 30 ஆண்டுகள் கேட்டபோதிலும் 12 ஆண்டுகளில் தனக்காக வானிலை அட்டவணைகளைத் தயாரிக்குமாறு குலாகு தூசீக்கு ஆணையிட்டார். தூசீ வெற்றிகரமாக 12 ஆண்டுகளில் ஈல்கான் அட்டவணைகளை உருவாக்கினார். யூக்ளிடு கூறுகளின் ஒரு மறுசீரமைப்புச் செய்த வடிவத்தை உருவாக்கினார். தூசீ இணை என்று அழைக்கப்பட்ட ஒரு தனித்துவமான கணினிக் கருவியைப் பயிற்றுவித்தார். பகுதாது மற்றும் மற்ற நகரங்கள் மீதான முற்றுகையின்போது காப்பாற்றப்பட்ட 4 இலட்சம் நூல்களைத் தூசீ மரகா வானிலை ஆய்வு மையத்தில் வைத்தார். குலாகு கானால் வரவழைக்கப்பட்டிருந்த சீன வானியலாளர்களும் இந்த வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றினர்.
சீனாவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பெரிய ஆய்வு மையங்களைக் குப்லாய் கான் கட்டினார். இவரது நூலகங்களில் முஸ்லிம் கணிதவியலாளர்கள் கொண்டு வந்திருந்த உ-கு-லியே-டி (யூக்லிட்) நூல்களும் இருந்தன.[127] யுவான் சீனாவில் சு சிஜியே மற்றும் குவோ சோவுஜிங் ஆகியோர் குறிப்பிடத்தக்க கணிதவியலாளர்களாகத் திகழ்ந்தனர். 1330ஆம் ஆண்டின் ஒரு மருத்துவக் குறிப்பில் மங்கோலிய இயற்பியலாளர் கூ சிகுயி ஓர் ஆரோக்கியமான உணவு முறையின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கிக் கூறியுள்ளார்.
இலத்தீன் உள்ளிட்ட நான்கு மொழிகளைக் கசனால் புரிந்து கொள்ள முடிந்தது. இவர் 1295ஆம் ஆண்டு தப்ரீசு ஆய்வு மையத்தைக் கட்டினார். மரகாவில் தூசீக்குக் கீழ் பணியாற்றிய அஜால் சம்சல்தீன் ஒமரின் கீழ் பைசாந்தியக் கிரேக்க வானியலாளரான கிரிகோரி சியோனியாதேசு பயின்றார். சியோனியாதேசு இஸ்லாமிய உலகில் இருந்து ஐரோப்பாவிற்குப் பல புதுமைகளைப் பரப்புவதில் ஒரு முக்கியமான பங்கை ஆற்றினார். அட்சரேகையற்ற பிரபஞ்ச வானியல் அட்டவணையை ஐரோப்பாவுக்கு அறிமுகப்படுத்தியது மற்றும் தூசீ இணையின் ஒரு கிரேக்க விளக்கத்தை அறிமுகப்படுத்தியது ஆகியவை இவர் செய்த பணிகள் ஆகும். தூசீ இணையானது பிற்காலத்தில் கோபர்னிக்கசின், சூரியக் குடும்பத்தில் சூரியனை மையமாகக் கொண்டு பூமியும் மற்ற கிரகங்களும் சுற்றுகின்றன என்ற கொள்கையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. சியோனியாதேசு பல மங்கோலியக் குறிப்புகளையும் கிரேக்க மொழிக்கு மொழிபெயர்த்தார். அவற்றில் சில பாரசீக சிஜ்-இ ஈல்கானி என்ற அல்-தூசீ மற்றும் மரகா ஆய்வு மையத்தால் எழுதப்பட்டது உள்ளிட்டவையாகும். பைசாந்திய-மங்கோலியக் கூட்டணி மற்றும் திரெபிசோந்துப் பேரரசானது ஈல்கானரசுக்குத் திறை செலுத்திய அரசு ஆகிய நிலைகள் காரணமாக சியோனியாதேசு கான்ஸ்டான்டினோபிள், திரெபிசோந்து மற்றும் தப்ரீசு ஆகிய நகரங்களுக்கு இடையில் எளிதாகப் பயணங்களை மேற்கொண்டார். கன்சு மாகாணத்தை அடிப்படையாகக்கொண்ட, திபெத்தின் மங்கோலியப் பிரதிநிதியான, குப்லாய் கானின் வழித்தோன்றலான இளவரசி ரத்னா சமர்கந்து வானியலாளரான சஞ்சுபினிக்குப் புரவலராக விளங்கினார். இளவரசி ரத்னாவுக்கு அல்-சஞ்சுபினி கொடுத்த அரேபிய வானியல் நூலானது 1363ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. இந்நூலானது அதன் பக்க ஓரங்களில் உள்ள நடு மங்கோலிய விளக்கங்களுக்காக அறியப்படுகிறது.[128]
மங்கோலிய ஈல்கான் ஒல்ஜைடு, பிரான்சின் மன்னன் நான்காம் பிலிப்புக்கு அனுப்பிய 1305ஆம் ஆண்டு மடல்.
மங்கோலியப் பேரரசானது ஒரு அறிவார்ந்த மற்றும் திறமை வாய்ந்த அஞ்சல் அமைப்பை அக்காலத்தில் கொண்டிருந்தது. இது அறிஞர்களால் அடிக்கடி யாம் என்று அழைக்கப்படுகிறது. இது ஏராளமான பொருட்களைக் கொண்ட, நன்றாக பாதுகாக்கப்பட்ட ஓர்டூ என்றழைக்கப்பட்ட அஞ்சல் நிலையங்களைப் பேரரசு முழுவதும் கொண்டிருந்தது.[129] ஒரு தூதுவன் பொதுவாக ஒரு நிலையத்திலிருந்து மற்றொரு நிலையத்திற்கு 40 கிலோ மீட்டர்கள் தூரம் பயணம் செய்வான். ஒரு புதிய ஓய்வு பெற்ற குதிரையைப் பெறுவதன் மூலமாகவோ அல்லது மற்றொரு நிலையத்தில் காத்திருக்கும் தூதுவனிடம் ஒப்படைப்பதன் மூலமாகவோ எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகத்தில் செய்தியைக் கொண்டு செல்வான். மங்கோலியத் தூதர்கள் பொதுவாக ஒரு நாளைக்கு 200 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்தனர். இந்த நிலையங்களுக்கருகே அவற்றிற்குச் சேவை செய்வதற்காக வீடுகளும் இணைக்கப்பட்டிருந்தன. கெரஜ் உடையவர்கள் யாம் நிலையங்களில் நிற்பதற்கும், புதிய குதிரைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், குறிப்பிட்ட பொருட்களைப் பெறுவதற்கும் அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் இராணுவ அடையாளங்களைக் கொண்டிருந்தவர்கள் இந்த யாம் அமைப்பை பைசா இல்லாமலும் பயன்படுத்தினர். சீனா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த பல வணிகர்கள், தூதுவர்கள் மற்றும் பயணிகள் இந்த அமைப்பைப் பயன்படுத்தினர். கரகோரத்தில் பெரிய கான் இறந்தபோது நடு ஐரோப்பாவிலிருந்த படு கான் தலைமையிலான மங்கோலியப் படைகளுக்கு அத்தகவலானது 4 முதல் 6 வாரங்களுக்குள்ளாகவே சென்றடைந்தது. இதற்கு இந்த யாம் அமைப்புதான் காரணம்.[54]
செங்கிஸ் கான் மற்றும் அவருக்குப் பின் வந்த ஒக்தாயி ஆகியோர் சாலைகளைக் கொண்ட ஒரு அகலமான அமைப்பை அமைத்தனர். அவற்றில் ஒன்று அல்த்தாய் மலைகள் வழியாகச் சென்றது. தான் அரியணைக்கு வந்த பிறகு இந்தச் சாலை அமைப்பை ஒக்தாயி மேலும் விரிவாக்கினார். மங்கோலியப் பேரரசின் மேற்கு பகுதிகளில் இருந்த சாலைகளை இணைக்குமாறு சகதாயி கானரசு மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்திற்கு ஆணையிட்டார்.[130]
வரலாறு முழுவதும் மங்கோலியர்கள் வணிகர்கள் மற்றும் வணிகத்திற்கு ஆதரவளித்தனர். மங்கோலியப் பழங்குடியினங்களை இணைப்பதற்கு முன்னர் கூட தனது ஆரம்ப நாட்களில் செங்கிஸ் கான் அயல் நாட்டு வணிகர்களை ஊக்குவித்தார். வணிகர்கள் அண்டைக் கலாச்சாரங்களைப் பற்றிய தகவல்களை அளித்தனர். மங்கோலியர்களுக்காகத் தூதர்களாகவும், அரசாங்க வணிகர்களாகவும் சேவையாற்றினர். அவர்கள் பல பண்டங்களுக்குத் தேவையானவர்களாக இருந்தனர். ஏனெனில் மங்கோலியர்கள் சிறிதளவே பண்டங்களை உற்பத்தி செய்தனர்.
மங்கோலிய அரசாங்கம் மற்றும் உயர்குடியினர் வணிகர்களுக்கு மூலதனம் அளித்தனர். அவர்களை ஓர்டோக் எனப்படும் வணிகக் கூட்டாளி ஏற்பாட்டின் கீழ் தொலை தூரங்களுக்கு அனுப்பினர். மங்கோலியக் காலங்களில், ஒரு மங்கோலிய-ஓர்டோக் கூட்டணியானது கிராத் மற்றும் கமெண்டா ஏற்பாட்டில் காணப்படும் ஒப்பந்தச் சிறப்புகளை வெகுவாக ஒத்திருந்தது. எனினும் மங்கோலிய முதலீட்டார்கள் நாணயம் இல்லாத விலை உயர்ந்த உலகங்களை மற்றும் கூட்டணி மூலதனத்திற்காக வணிகப் பண்டங்களைப் பயன்படுத்தும் வரம்பால் கட்டுப்படுத்தப்படவில்லை. மங்கோலிய முதலீட்டாளர்கள் முதன்மையாகக் கடனுதவி மற்றும் வணிக செயல்முறைகளுக்கான மூலதனத்தை அளித்தனர்.[131]மார்க்கோ போலோ குடும்பம் உள்ளிட்ட இத்தாலிய நகரங்களில் இருந்து வந்த வணிகர்களுடன் மங்கோலிய உயர்குடியினர் வணிகக் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டனர்.[132] பேரரசு வளர ஆரம்பித்தபோது, எந்த ஒரு வணிகர் அல்லது தூதுவர் சரியான பதிவுகள் மற்றும் ஆணைகளை வைத்திருக்கும் பட்சத்தில் பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் அவர்களுக்கு மங்கோலிய நாடுகளுக்கிடையே பயணம் செய்யும் போது வழங்கப்பட்டது. நடுநிலக் கடல் பகுதி முதல் சீனா வரை இருந்த நிலப்பரப்புகளை நன்றாக பயணம் செய்யக்கூடிய மற்றும் ஒப்பீட்டளவில் நன்றாக செப்பனிடப்பட்டிருந்த சாலைகள் இணைத்தன. இது நிலப்பகுதி வழியிலான வணிகத்தைப் பெருமளவுக்கு அதிகரித்தது. இப்பாதைகளின் வழியே பயணித்தவர்கள் சில வியப்பூட்டும் கதைகளைக் கூறும் நிலைக்கு இது இட்டுச் சென்றது. இப்பதையே பிற்காலத்தில் பட்டுப் பாதை என்று அழைக்கப்பட்டது.
மேற்குலக நாடுகாண் பயணியான மார்க்கோ போலோ கிழக்கிற்குப் பட்டுப் பாதை வழியாகப் பயணம் செய்தார். சீன மங்கோலியத் துறவியான ரப்பன் பார் சவுமா, மார்க்கோ போலோவின் காவியப் பயணத்துடன் ஒப்பிடக்கூடிய அளவிற்கு இதே வழியாகப் பயணம் செய்தார். தன் இருப்பிடமான கான்பலிக்கில் (பெய்ஜிங்) இருந்து ஐரோப்பா வரைப் பயணம் செய்தார். ருப்ரக்கின் வில்லியம் போன்ற ஐரோப்பியச் சமய போதகர்களும் மங்கோலிய அரசவைக்கு தம் சமயத்திற்கு மதம் மாற்றுவதற்காக அல்லது திருத்தந்தையின் தூதர்களாகப் பயணித்தனர்.
செங்கிஸ் கானின் தங்க தினார். இது கசினியில் 1221/22ஆம் ஆண்டில் வார்க்கப்பட்டது.
செங்கிஸ் கானுக்குப் பிறகு, அவரது வழிவந்த ஒக்தாயி மற்றும் குயுக்கின் கீழ் வணிகக் கூட்டணித் தொழிலானது தொடர்ந்து செழிப்படைந்தது. துணிகள், உணவுகள், தகவல்கள் மற்றும் பிற பண்டங்களை வணிகர்கள் ஏகாதிபத்திய அரண்மனைகளுக்குக் கொண்டு வந்தனர். இதற்குப் பதிலாக பெரிய கான்கள், வணிகர்களுக்கு வரி விலக்குகளையும், மங்கோலியப் பேரரசின் அதிகாரப்பூர்வ அஞ்சல் நிலையங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதியையும் அளித்தனர்.
14ஆம் நூற்றாண்டில் மங்கோலியப் பேரரசின் வீழ்ச்சியானது பட்டுப் பாதையின் வழியே இருந்த அரசியல், கலாச்சார மற்றும் பொருளாதார ஒற்றுமையின் வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது. பைசாந்தியப் பேரரசிடமிருந்து துருக்கியப் பழங்குடியினங்கள் மேற்குக் கோடிப் பாதையைக் கைப்பற்றின. துருக்கியக் கலாச்சார விதைகளை விதைத்தன. இதுவே பிற்காலத்தில் சன்னி இஸ்லாம் நம்பிக்கையைக் கொண்ட உதுமானியப் பேரரசாக உருவானது. கிழக்கில் 1368ஆம் ஆண்டு ஆண்டு ஆன் சீனர்கள் யுவான் அரச மரபைப் பதவியிலிருந்து தூக்கி எறிந்தனர். தங்களது சொந்த மிங் அரச மரபைத் தோற்றுவித்தனர். பொருளாதாரத் தனிமைப்படுத்துதல் கொள்கையைப் பின்பற்ற ஆரம்பித்தனர்.[133]
மங்கோலியா, உருசியா, நடு ஆசியா மற்றும் சீனாவில் தற்போதுள்ள மங்கோலியர்களுடன் 13ஆம் நூற்றாண்டு மங்கோலியப் பேரரசின் எல்லைகளை இந்த வரைபடமானது ஒப்பிடுகிறது.
மங்கோலியப் பேரரசு அதன் உச்சநிலையின்போது வரலாற்றின் மிகப்பெரிய ஒன்றிணைந்த நிலப் பேரரசுராகத் திகழ்ந்தது. நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பெரும் பகுதிகளை ஒன்றிணைத்தது. கிழக்கு மற்றும் மேற்கு உருசியா, மற்றும் சீனாவின் மேற்குப் பகுதிகள் ஆகிய மங்கோலியர்களால் இணைக்கப்பட்ட சில பகுதிகள் இன்று கூட இணைந்தே உள்ளன.[134] பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மங்கோலியர்கள் உள்ளூர் மக்களுடன் இணைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவர்களது சில வழித்தோன்றல்கள் உள்ளூர்ச் சமயங்களைப் பின்பற்ற ஆரம்பித்தனர். உதாரணமாக, கிழக்குக் கானரசானது பெரும்பாலும் புத்த மதத்தைப் பின்பற்றியது. மூன்று மேற்குக் கானரசுகளும் பெரும்பாலும் சூபித்துவத் தாக்கத்தின் கீழாக இஸ்லாமைப் பின்பற்ற ஆரம்பித்தன.[120]
சில[specify] விளக்க உரைகளின் படி, செங்கிஸ் கானின் படையெடுப்புகள் சில புவியியல் பகுதிகளில் அதற்கு முன்னர் நடந்திராத வகையில் ஒட்டுமொத்த அழிவிற்குக் காரணமாய் இருந்தன. இது ஆசியாவின் மக்கள்தொகையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு இட்டுச் சென்றது.
மங்கோலியப் பேரரசின் இராணுவம் சார்ந்திராத சாதனைகளாக ஒரு எழுத்துமுறை அமைப்பின் அறிமுகம் குறிப்பிடப்படுகிறது. இது பழைய உய்குர் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு மங்கோலிய எழுத்து முறையாகும். இந்த எழுத்துமுறை மங்கோலியாவில் இன்றும் கூடப் பயன்படுத்தப்படுகிறது.[135]
மங்கோலியப் பேரரசின் மற்ற சில நீண்டகாலத் தாக்கங்கள் பின்வருமாறு:
மங்கோலிய-தாதரிய நுகத்தடி ஆட்சியின் கீழ் இருந்தபோது மாஸ்கோவானது முக்கியத்துவமான நிலைக்கு உயர்ந்தது. சில காலத்திற்குப் பிறகு உருசிய ஆட்சியாளர்களுக்கு மங்கோலியர்களுக்கான வரி வசூலிப்பாளர் நிலை கொடுக்கப்பட்டது. மங்கோலியர்களுக்காக உருசியர்கள் காணிக்கை மற்றும் வரியை வசூலித்த நிகழ்வின் பொருளானது, தாங்கள் சொந்தமாக வைத்திருந்த நிலப்பகுதிகளுக்குக் கூட மங்கோலியர்கள் அரிதாகத்தான் சென்றனர் என்பதாகும். இறுதியாக உருசியர்கள் இராணுவ சக்தியைப் பெற்றனர். அவர்களது ஆட்சியாளரான மூன்றாம் இவான் மங்கோலியர்களை முழுவதுமாக ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தார். உருசிய ஜார் ஆட்சி முறையைத் தோற்றுவித்தார். உக்ரா ஆற்றில் பெரிய நிலைப்பாடானது மங்கோலியர்கள் வலிமை குறைந்தவர்கள் என்பதை உணர்த்திய பிறகு, மாஸ்கோவின் மாட்சிமிக்க வேள் பகுதியானது சுதந்திரத்தைப் பெற்றது.
1340களில் ஐரோப்பாவை அழிவுக்கு உட்படுத்திய கறுப்புச்சாவானது சீனாவில் இருந்து ஐரோப்பாவிற்கு மங்கோலியப் பேரரசின் வணிகப் பாதைகள் மூலமாகப் பயணித்து இருக்கலாம் என சில ஆய்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. 1347ஆம் ஆண்டு கிரிமியா மூவலந்தீவில் இருந்த செனோவா கட்டுப்பாட்டிலிருந்த காபா எனும் ஒரு பெரிய வணிக மையமானது, ஜானி பெக்கின் தலைமையின் கீழான மங்கோலிய வீரர்களின் இராணுவத்தால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டது. முற்றுகையானது நீண்ட காலம் பிடித்தது. மங்கோலிய இராணுவமானது நோயால் நலிவுற்றது. அவர்கள் நோய் தாக்கிய பிணங்களை உயிரி ஆயுதங்களாகப் பயன்படுத்த முடிவு செய்தனர். பெரிய கவண் வில்களைக் கொண்டு மதில் சுவர்களைத் தாண்டி நகரத்திற்குள் இந்தப் பிணங்கள் தூக்கி வீசப்பட்டன. அங்கு வாழ்ந்த மக்கள் நோய்க்கு ஆளாயினர்.[136][137] செனோவாவில் இருந்த வணிகர்கள் தப்பித்து ஓட ஆரம்பித்தனர். தங்களது கப்பல்கள் மூலமாகத் தெற்கு ஐரோப்பாவிற்கு இந்தப் பிளேக் நோயைப் பரப்பினர். அங்கிருந்து இந்நோயானது வெகுவேகமாகப் பரவ ஆரம்பித்தது. உலகம் முழுவதும் இந்தக் கொள்ளை நோயால் இறந்த மொத்த மக்களின் எண்ணிக்கையானது 7.50 முதல் 20 கோடி என மதிப்பிடப்படுகிறது. ஐரோப்பாவில் மட்டும் 5 கோடிப் பேர் வரை இந்நோயால் இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[138]டோமினிகக் கொள்கையாளர்கள் 1260ஆம் ஆண்டு மங்கோலியர்களின் போலந்துப் படையெடுப்பின் போது மங்கோலியர்களால் கொல்லப்படுகின்றனர்.
மேற்கத்திய ஆய்வாளர் ஆர். ஜே. ரம்மலின் மதிப்பீட்டின்படி 3 கோடி மக்கள் மங்கோலியப் பேரரசால் கொல்லப்பட்டனர். மற்ற ஆய்வாளர்களின் மதிப்பீட்டின்படி, 8 கோடி மக்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் சாராசரியாக 5 கோடி பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர். மங்கோலிய ஆட்சியின் 50 ஆண்டுகளின் போது சீனாவின் மக்கள் தொகையானது பாதியாகக் குறைந்தது. மங்கோலியப் படையெடுப்புக்கு முன்னர் சீன அரச மரபுகளின் நிலப்பரப்பில் 12 கோடி மக்கள் வாழ்ந்ததாகத் தோராயமாகக் குறிப்பிடப்பட்டது. 1279ஆம் ஆண்டு படையெடுப்பானது முடிக்கப்பட்ட பிறகு, 1300ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சீனாவின் மொத்த மக்கள் தொகையானது சுமார் 6 கோடியாகும். சீனாவின் மக்கள் தொகையில் ஏற்பட்ட இந்தப் பெரிய வீழ்ச்சிக்கு மங்கோலிய ஆக்ரோஷத்தை மட்டுமே காரணமாகக் கூற நமக்கு ஆர்வமாக இருக்கும் போதிலும், தற்கால அறிஞர்கள் இதைப் பற்றி கலவையான எண்ணங்களைக் கொண்டுள்ளனர். பிரெடரிக் வி. மோட் போன்ற அறிஞர்கள் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகப்படியான வீழ்ச்சியானது, பதிவுகளைச் சரியாக வைத்திராத நிர்வாகத் தோல்வியைக் காட்டுவதாகவும், உண்மையிலேயே மக்கள் தொகையில் குறைவு ஏற்பட்டதைக் காட்டவில்லை என்றும் வாதிடுகிறார். அதே நேரத்தில், திமோதி புரூக் போன்ற பிறர் தெற்கு சீன மக்கள் தொகையை மங்கோலியர்கள் பெரும்பாலும் குறைத்தனர் என்றும், ஆன் சீன மக்கள் தொகையையும் விவாதத்திற்குரிய வகையில் இருந்தாலும், அவர்கள் பெருமளவு குறைத்தனர் என்றும் வாதிடுகிறார். ஆன் சீனர்கள் கடவுச்சீட்டுக்களை வைத்திருக்கும் உரிமையும், நேரடியாக நிலத்தை வைத்திருக்கும் உரிமையும் மறுக்கப்பட்டதன் மூலம் அவர்கள் இருந்தும் இல்லாத நிலைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதன் பொருளானது மங்கோலியர்கள் மற்றும் தாதர்களைச் சீனர்கள் சார்ந்திருக்க வேண்டும் மற்றும் அவர்களாலேயே கவனித்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதாகும். மங்கோலிய இராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் பணிகளிலும் இத்தகைய முறையே பின்பற்றப்பட்டது.
மங்கோலியப் படையெடுப்புகளின் விளைவாக இஸ்லாமிய உலகமானது பெரும் மாற்றங்களுக்கு உள்ளானது. ஈரானியப் பீடபூமியின் மக்கள் தொகையானது பரவலான நோய் மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. இங்கு வாழ்ந்த முக்கால் பங்கு மக்கள் வரை இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1 முதல் 1.50 கோடி மக்கள் என மதிப்பிடப்படுகிறது. ஸ்டீபன் வார்ட் என்ற வரலாற்றாளரின் மதிப்பீட்டின்படி, ஈரானின் மக்கள் தொகையானது மங்கோலியப் படையெடுப்புக்கு முந்தைய அதன் நிலையை 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை மீண்டும் அடையவில்லை.[139]
மெசப்படோமியாவானது 1000 ஆண்டுகளாக பல வருகையாளர்களை ஈர்க்கும் ஒரு அழகான பகுதியாகவும் மனித நாகரிகம் மற்றும் சாதனையின் உச்சமாகவும் திகழ்ந்தது. இப்பகுதி மக்கள்தொகை நீக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டு, நாடோடிகளின் மந்தைங்களுக்கான மேய்ச்சல் பகுதியாக மாற்றப்பட்டது. இப்பகுதி அதன் முந்தைய உச்ச நிலையை மீண்டும் அடையவே இல்லை. தனது வரலாற்றின் வெளித்தோற்றம் என்கிற நூலில் எச். ஜி. வெல்ஸ் என்கிற வரலாற்றாளர் இதற்கான காரணமாக நகர்ப்புற வாழ்க்கைக்கு எதிரான ஒரு மங்கோலிய நம்பாமையைக் கூறுகிறார்:
இந்த மெசபடோமியப் பகுதியில் நாடோடி வாழ்க்கை முறையானது உண்மையிலேயே முயற்சிக்கு உள்ளாக்கப்பட்டது. அதில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றியும் பெற்றது. ஒரு நிலையான நாகரிக அமைப்பை முத்திரையிட்டு அகற்றியது. சீனாவைச் செங்கிஸ் கான் முதலில் படையெடுப்புக்கு உள்ளாக்கியபோது மங்கோலியத் தலைவர்கள் மத்தியில் அனைத்து கட்டடங்கள் மற்றும் குடியமர்ந்திருந்த மக்களை அழிக்க வேண்டாமா என ஒரு கடுமையான விவாதம் நடைபெற்றதாக நமக்குக் கூறப்படுகிறது. வெளிப்புறக் காற்று வாழ்க்கை வாழ்ந்த இந்த எளிமையானவர்களுக்கு நிலையான இடத்தில் வாழ்ந்த மக்கள் மாசு, நெரிசல், தீங்கு, தேவையற்ற மென்மையான, ஆபத்து மற்றும் புரிந்து கொள்ள முடியாதவர்கள். ஒரு வெறுக்கத்தக்க மனிதத் தூசுகள், அவர்கள் ஆக்கிரமிக்கவில்லை எனில் அந்த இடமானது ஒரு நல்ல மேய்ச்சல் நிலமாக இருந்திருக்கும். இவர்களுக்குப் பட்டணங்கள் எந்த விதத்திலும் பயனுள்ளதாக இல்லை. **** ஆனால் மெசபடோமியாவில் குலாகுவின் கீழ்தான் இந்த யோசனைகள் ஒரு அப்பட்டமான கொள்கைக்கு உள்ளாக்கப்பட்டன. இங்கிருந்த மங்கோலியர்கள் எரித்துப் படுகொலைகளை மட்டும் செய்யவில்லை. குறைந்தது 8,000 ஆண்டுகளாக இப்பகுதிக்கு நீர் வழங்கிய நீர்ப்பாசன அமைப்பை இவர்கள் அழித்தனர். இதன் மூலம் அனைத்து மேற்குலகத்தின் தாய் நாகரிகமானது முடிவுக்கு வந்தது.[140]
டேவிட் நிகோல் என்கிற வரலாற்றாளரின் மங்கோலியப் போர்ப் பிரபுக்கள் என்ற நூலில் ஒரு நன்றாக சோதனை செய்யப்பட்ட மங்கோலிய உத்தியானது தங்களை எதிர்க்கும் யாரையும் பயங்கரவாதம் மற்றும் மொத்தமான அழிவிற்கு உட்படுத்துவதாகும்.[141] படையெடுப்பில் உருசியாவின் மக்கள் தொகையில் பாதிப்பேர் இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[142] எனினும் தன் உலக மக்கள் தொகை வரலாற்றின் நிலப்பட ஏடு என்ற நூலில் காலின் மெக்கவ்டி, 1978ஆம் ஆண்டில் ஐரோப்பிய உருசியாவின் மக்கள் தொகையானது 75 இலட்சத்தில் இருந்து படையெடுப்புக்குப் பின்னர் 70 இலட்சமாகக் குறைந்தது என்கிறார்.[141] அங்கேரியின் மொத்த மக்கள் தொகையான 20 இலட்சத்தில் பாதி அளவு மக்கள் மங்கோலியப் படையெடுப்புக்குப் பலியாகினர் என வரலாற்றாளர்கள் மதிப்பிடுகின்றனர்.[143] ஆன்ட்ரியா பெட்டோ என்கிற வரலாற்றாளரின் கூற்றுப்படி மங்கோலியத் தாக்குதலை நேரில் கண்ட ரோஜரியசு என்பவர் "மங்கோலியர்கள் ஒவ்வொருவரையும் பாலினம் அல்லது வயதைக் கருதாமல் கொன்றனர்" மற்றும் "பெண்களை அவமானப்படுத்துவதில் மங்கோலியர்களுக்குத் 'தனித்துவமான மகிழ்ச்சி' இருந்தது எனக் குறிப்பிடுகிறார்.[144]
கல்மிக்குகளின் பயணம்.மங்கோலியர்களால் பின்பற்றப்பட்ட ஒரு வெற்றிகரமான உத்தியானது சரணடைய மறுக்கும் நகர மக்களை மொத்தமாகக் கொல்வதாகும். மங்கோலியர்களின் உருஸ் மீதான படையெடுப்பின் போது கிட்டத்தட்ட அனைத்து முக்கியமான நகரங்களும் அழிக்கப்பட்டன. சரணடைய ஒப்புக் கொண்டால் மக்கள் பொதுவாகப் பிழைக்க விடப்பட்டனர். எனினும் இதுவும் உறுதியான ஒன்று கிடையாது. உதாரணமாக, தற்போதைய ஈரானின் அமாதான் நகரமானது அழிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண், பெண் மற்றும் குழந்தைகள் மங்கோலியத் தளபதி சுபுதையால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் சுபுதையிடம் சரணடைந்து இருந்தனர். ஆனால் மங்கோலிய வேவுப் படைக்குத் தேவையான போதிய பொருட்களை அவர்களால் கொண்டிருக்க முடியவில்லை. நகரமானது ஆரம்பத்தில் அழிவுக்கு உட்படுத்தப்பட்டு பல நாட்களுக்குப் பிறகு, சிதிலமடைந்த பகுதிகள் மற்றும் நகரத்திற்கு ஆரம்ப படுகொலையின்போது நகரத்தில் இல்லாமல் இருந்து, மங்கோலியர்கள் திரும்பிச் சென்ற பிறகு வந்த எந்த ஒரு குடிமக்களையும் கொல்வதற்காக ஒரு படையைச் சுபுதை அனுப்பி வைத்தார். மங்கோலிய இராணுவங்கள் உள்ளூர் மக்கள் மற்றும் அவர்களது போர் வீரர்களைத் தங்களது இராணுவத்தில் இணைத்துக் கொள்வதன் மூலம் பயன்படுத்தி கொண்டன. இறப்பு அல்லது எதிர்கால படையெடுப்புகளில் மங்கோலிய இராணுவத்தில் ஒரு பங்காக இருப்பது ஆகிய இரண்டு வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு சில நேரங்களில் போர்க் கைதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தங்களது குடிமக்களை அடிபணிய வைப்பதற்காக மங்கோலியர்கள் பயன்படுத்திய இரக்கமற்ற வழிமுறைகளின் காரணமாக அவர்களால் வெல்லப்பட்ட மக்களிடையே மங்கோலியர்களுக்கு எதிரான நீண்டகால வெறுப்பானது தொடர்ந்தது. பேரரசின் திடீர்ச் சிதைவிற்கு மங்கோலிய ஆட்சிக்கு எதிரான இந்த வெறுப்புதான் ஒரு காரணம் எனக் குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது.[145] இந்த அச்சுறுத்தும் உத்திகள் தவிர இராணுவக் கட்டுரம் (குறிப்பாகக் கடும் குளிர்காலங்களுக்கு இடையில்), இராணுவத் திறமை, தகுதி அடிப்படை மற்றும் ஒழுக்கம் ஆகியவை பேரரசின் வேகமான விரிவாக்கத்தை ஏற்படுத்தின.
17ஆம் நூற்றாண்டின்போது நடு ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு இடம்பெயர்ந்த கல்மிக்குகள் தான் ஐரோப்பிய நிலப்பகுதிக்குள் ஊடுருவிய கடைசி மங்கோலிய நாடோடிகள் ஆவர். 1770-1771ஆம் ஆண்டின் குளிர்காலத்தின்போது சுமார் 2 இலட்சம் கல்மிக்குகள் வோல்கா ஆற்றின் கரையில் இருந்த தங்களது மேய்ச்சல் நிலங்களில் இருந்து சுங்கரியாவிற்குத் தங்களது பயணத்தைத் தொடங்கியிருந்தனர். இவர்கள் தங்களது கசக் மற்றும் கிர்கிசு எதிரிகளின் நிலப் பகுதிகள் வழியே பயணத்தை மேற்கொண்டனர். பல மாதப் பயணத்திற்குப் பிறகு வடமேற்கு சீனாவில் இருந்த சுங்கரியாவை உண்மையான குழுவின் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே அடைந்தனர்.[146]
↑குறிப்பாகத் தங்க நாடோடிக் கூட்டத்தில் கிப்சாக் கிளைமொழிகள்,[1] சகதாயி கானரசில் சகதாயி[2] மற்றும் யுவான் அரசமரபில் பழைய உய்குர்.
↑Decades before குப்லாய் பேரரசர் announced the dynastic name "மகா யுவான்" in 1271, ககான்s (Great Khans) of the "Great Mongol State" (Yeke Mongγol Ulus) already started to use the Chinese title of Emperor (சீனம்: 皇帝; பின்யின்: Huángdì) practically in the சீன மொழி since the enthronement of Genghis Emperor (சீனம்: 成吉思皇帝; நேர்பொருளாக "Chéngjísī Huángdì") in Spring 1206.[3]
↑ 3.03.1As per modern historiographical norm, the "யுவான் அரசமரபு" in this article refers exclusively to the realm based in Dadu (present-day பெய்ஜிங்). However, the Han-style dynastic name "Great Yuan" (大元) as proclaimed by Kublai, as well as the claim to Chinese political orthodoxy were meant to be applied to the entire Mongol Empire.[13][14][15][16] In spite of this, "Yuan dynasty" is rarely used in the broad sense of the definition by modern scholars due to the de factodisintegrated nature of the Mongol Empire.
↑Henthorn, William E. (1963). Korea: the Mongol invasions. E.J. Brill. pp. 160, 183. Archived from the original on 15 March 2016. Retrieved 13 March 2017.
↑Stephen Pow (2019), "Climatic and Environmental Limiting Factors in the Mongol Empire's Westward Expansion: Exploring Causes for the Mongol Withdrawal from Hungary in 1242", in Yang L.; Bork HR.; Fang X.; Mischke S. (eds.), Socio-Environmental Dynamics along the Historical Silk Road, Cham: Springer Open, pp. 301–321, ISBN978-3-030-00727-0
↑G., Ghazarian, Jacob (2000). The Armenian kingdom in Cilicia during the Crusades : the integration of Cilician Armenians with the Latins, 1080–1393. Richmond: Curzon. pp. 159–61. ISBN978-0-7007-1418-6. கணினி நூலகம்45337730.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
↑Baumann, Brian (2008). Divine Knowledge: Buddhist Mathematics according to the anonymous Manual of Mongolian astrology and divination. Leiden, Netherlands: Koninklijke Brill NV. p. 304. ISBN978-90-04-15575-6.
↑Baumann, Brian (2008). Divine Knowledge: Buddhist Mathematics according to the anonymous Manual of Mongolian astrology and divination. Leiden, Netherlands: Koninklijke Brill NV. p. 296. ISBN978-90-04-15575-6.
↑Enkhbold, Enerelt (2019). "The role of the ortoq in the Mongol Empire in forming business partnerships". Central Asian Survey38 (4): 531–547. doi:10.1080/02634937.2019.1652799.
↑The Story of the Mongols Whom We Call the Tartars= Historia Mongalorum Quo s Nos Tartaros Appellamus: Friar Giovanni Di Plano Carpini's Account of His Embassy to the Court of the Mongol Khan by Da Pian Del Carpine Giovanni and Erik Hildinger (Branden BooksApril 1996 பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-8283-2017-7)
Allsen, Thomas T. (1987). Mongol Imperialism: The Policies of the Grand Qan Möngke in China, Russia, and the Islamic Lands, 1251–1259. University of California Press. ISBN978-0-520-05527-8.
Franke, Herbert (1994). Twitchett, Denis; Fairbank, John King (eds.). Alien Regimes and Border States, 907–1368. The Cambridge History of China. Vol. 6. Cambridge, England; New York, NY: Cambridge University Press. ISBN978-0-521-24331-5.
Howorth, Henry H. (1965) [London edition, 1876]. History of the Mongols from the 9th to the 19th Century: Part I: The Mongols Proper and the Kalmuks. New York, NY: Burt Frankin.
Jackson, Peter (1978). "The dissolution of the Mongol Empire". Central Asiatic JournalXXXII: 208–351.
Jackson, Peter (2003). The Delhi Sultanate: A Political and Military History. Cambridge, England; New York, NY: Cambridge University Press. ISBN978-0-521-54329-3.
Rossabi, Morris (1983). China Among Equals: The Middle Kingdom and Its Neighbors, 10th–14th Centuries. Berkeley, CA: University of California Press. ISBN978-0-520-04383-1.
Sanders, Alan J.K. (2010). Historical Dictionary of Mongolia. Lanham, Maryland: Scarecrow Press. ISBN978-0-8108-6191-6.
Saunders, John Joseph (2001). The history of the Mongol conquests. Philadelphia: University of Pennsylvania Press. ISBN978-0-8122-1766-7.
Rybatzki, Volker (2009). The Early Mongols: Language, Culture and History. Indiana University. ISBN978-0-933070-57-8.
Allsen, Thomas T. (1987). Mongol Imperialism: The Policies of the Grand Qan Möngke in China, Russia, and the Islamic Lands, 1251–1259. University of California Press. ISBN978-0-520-05527-8.
Kolbas, Judith (2006). The Mongols in Iran: Chingiz Khan to Uljaytu, 1220–1309. Routledge. ISBN978-0-7007-0667-9.
Lambton, Ann, K.S. (1988). Continuity and Change in Medieval Persia: Aspects of the Administrative Econmic and Social History, 11th-14th Century. SUNY Press. ISBN978-0-88706-133-2.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
Ostrowsk, David (2010). Muscovy and the Mongols: Cross-Cultural Influences on the Steppe Frontier, 1304–1589. Cambridge University Press. ISBN978-0-521-89410-4.
Prajakti, Kalra (2018). The Silk Road and the Political Economy of the Mongol Empire. Routledge. ISBN978-0-415-78699-7.
Vogel, Hans-Ulrich (2012). Marco Polo Was in China: New Evidence from Currencies, Salts and Revenues. Brill. ISBN9789004231931..
Schurmann, Herbert (1956). Economic Structure of the Yüan Dynasty. Translation of Chapters 93 and 94 of the Yüan shih. Harvard University Press. ISBN978-0-674-43292-5.
“Islamic and Chinese Astronomy under the Mongols: a Little-Known Case of Transmission”, in : Yvonne Dold-Samplonius, Joseph W. Dauben, Menso Folkerts & Benno van Dalen, éds., From China to Paris. 2000 Years Transmission of Mathematical Ideas. Series: Boethius 46, Stuttgart (Steiner), 2002, pp. 327–356.
Allsen, Thomas T. (1986). Guard and Government in the Reign of The Grand Qan Möngke, 1251–59. Harvard Journal of Asiatic Studies, 46(2), 495-521. doi:10.2307/2719141
Allsen, Thomas T. (2011). "Imperial Posts, West, East and North: A Review Article: Adam J. Silverstein, Postal Systems in the Pre-Modern Islamic Morld," Archivum Eurasiae Medii Aevi, 17:1, 237–76
Munkuyev, N.Ts. (1977). A NEW MONGOLIAN P'AI-TZŬ FROM SIMFEROPOL. Acta Orientalia Academiae Scientiarum Hungaricae, 31(2), 185–215. Retrieved November 9, 2020, from http://www.jstor.org/stable/23682673
Ostrowski, Donald. The tamma and the Dual-Administrative Structure of the Mongol Empire Bulletin of the School of Oriental and African Studies, University of London, vol. 61, no 2, 1998, p. 262–277 doi: 10.1017/S0041977X0001380X
Vasary, Istvan. (1976). THE GOLDEN HORDE TERM DARUĠA AND ITS SURVIVAL IN RUSSIA. Acta Orientalia Academiae Scientiarum Hungaricae, 30(2), 187–197. Retrieved November 9, 2020, from http://www.jstor.org/stable/23657271
Biran, Michal, ed. (2017). In the Service of the Khans: Elites in Transition in Mongol Eurasia. Asiatische Studien 71(4). ISBN978-1-108-34799-0.
Biran, Michal, Jonathan Brack & Francesca Fiaschetti (ed.). Along the Silk Roads in Mongol Eurasia: Generals, Merchants, and Intellectuals. Univ of California Press, 2020
Broadbridge, Anne (2018). Women and the Making of the Mongol Empire. Cambridge University Press. ISBN978-1-108-34799-0.
Lane, George (2009). Daily Life in the Mongol Empire. Hackett Publishing Company. ISBN978-0-87220-968-8.
In the service of the Khan. Eminent personalities of the early Mongol-Yüan period (1200–1300). (ed.) Igor de Rachewiltz, Hok-Lam Chan, Ch'i-Ch'ing Hsiao and Peter W. Geier (Wiesbaden, Harrassowitz Verlag, 1993)
Weatherford, Jack (2011). The Secret History of the Mongol Queens: How the Daughters of Genghis Khan Rescued His Empire. Broadway Books. ISBN978-0-307-40716-0.
Amitai-Preiss, Reuven (1995). Mongols and Mamluks: The Mamluk-Ilkhanid War, 1260–1281 (Cambridge Studies in Islamic Civilization). Cambridge: Cambridge University Press. https://doi.org/10.1017/CBO9780511563485