மங்கோலியர்களின் இரகசிய வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்கோலியர்களின் இரகசிய வரலாறு
நூலாசிரியர்தெரியவில்லை
நாடுமங்கோலியா
மொழிநடு மங்கோலியம்
வகைவரலாறு/சுயசரிதை
மங்கோலியர்களின் இரகசிய வரலாறின் 1908ம் ஆண்டு சீன மறு பதிப்பின் வடிவமைப்பு.

மங்கோலியர்களின் இரகசிய வரலாறு [1] என்பது ஒரு மங்கோலிய இலக்கியம் ஆகும். மங்கோலிய மொழியில் மிகப் பழமையான இலக்கியம் இது தான். செங்கிஸ் கானின் இறப்பிற்குச் சில காலம் கழித்து மங்கோலிய அரச குடும்பத்திற்காக எழுதப்பட்டது. எழுதியவர் யார் என்று தெரியவில்லை. உண்மையில் மொங்கோலிய எழுத்துமுறையில் எழுதப்பட்டது. ஆனால் இப்போதுள்ள இலக்கியமானது சீன எழுத்துகளில் எழுதப்பட்டதன் மறு பதிப்பு ஆகும்.

செங்கிஸ் கானைப் பற்றி எழுதப்பட்ட மிக முக்கியமான ஒற்றை இலக்கியமாகக் கருதப்படுகிறது. பாரம்பரியத்திற்கு முந்தைய மற்றும் இடைக்கால மங்கோலிய மொழியைப் பற்றி ஏராளமான தகவல்களைத் தருகிறது.[2] ஒரு செம்மையான இலக்கியமாக மங்கோலியா மற்றும் உலகெங்கிலும் கருதப்படுகிறது. 

உள்ளடக்கம்[தொகு]

மங்கோலியர்களின் இரகசிய வரலாறு தமிழ் நூல்

பல்லாடியசு என்ற இந்த உருசியத் துறவி தான் "இரகசிய வரலாறு"ஐப் பதிப்பித்த முதல் நபர் ஆவார்.

இந்த இலக்கியமானது தெமுசினின் மூதாதையர்களின் ஒரு மாய பூர்வீகத்தைப் பற்றி எழுதுவதன் மூலம் ஆரம்பம் ஆகிறது. தெமுசினின் வாழ்க்கையைப் பற்றிய பகுதியானது அவரது தாய் ஓவலுன் அவரது தந்தை எசுகெயால் கடத்தப்படுவதில் இருந்து ஆரம்பம் ஆகிறது. பிறகு தெமுசினின் இளவயது வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. அவரது தந்தை கொல்லப்பட்டபின் அவர் பட்ட கஷ்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அவருக்கு எதிரான மோதல்கள், போர்கள் மற்றும் சதித் திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறது. பிறகு கி.பி. 1206ல் அவர் செங்கிஸ் கானாக முடிசூட்டிக் கொள்வதைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இந்த இலக்கியத்தின் கடைசிப் பகுதி செங்கிஸ் கான் மற்றும் அவரது மூன்றாவது மகன் ஒக்தாயியின் ஐரோவாசியா முழுவதுமான படையெடுப்புகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. ஒக்தாயி கடைசியில் தான் எதைச் சரியாகச் செய்தார், எதைத் தவறாகச் செய்தார் என்று கூறுவதுடன் இலக்கியம் முற்றுப் பெறுகிறது. எவ்வாறு மங்கோலியப் பேரரசு உருவானது என்பதைப் பற்றிக் கூறுகிறது.

இதில் மொத்தம் 12 அத்தியாயங்கள் உள்ளன.

 1. தெமுசினின் தோற்றம் மற்றும் குழந்தைப்பருவம்.
 2. தெமுசினின் இளம் வயது.
 3. தெமுசின் மெர்கிடுகளை வெல்லுதல்.
 4. சமுக்காவிற்கு எதிரான பகை. 
 5. தாதர்களை வெல்லுதல் மற்றும் ஓங் கானுடன் ஏற்படும் சிக்கல்கள். 
 6. கெரயிடுகளை அழித்தல். 
 7. ஓங் கானின் விதி. 
 8. குசலுகு தப்பித்தல் மற்றும் சமுக்காவின் தோல்வி.
 9. பேரரசின் தோற்றுவிப்பு மற்றும் ஏகாதிபத்தியக் காவலாளிகள். 
 10. உய்குர் மற்றும் காட்டு மக்களை வெல்லுதல்.
 11. சீனா, தாங்குடுகள், குவாரசமியா மற்றும் உருசியா ஆகியவற்றை வெல்லுதல். 
 12. தெமுசினின் இறப்பு மற்றும் ஒக்தாயியின் ஆட்சி. 

அத்தியாயம் ஒன்று[தொகு]

ஆனன் ஆற்றின் கரையில் எசுகை பகதூர் தன் கையில் பாறுடன் நின்று கொண்டிருந்தார். அங்கே அவர் மெர்கிடு இனத்தைச் சேர்ந்த எகே சிலேடு செல்வதைக் கண்டார். தான் மணம் புரிந்த ஒரு ஒலகோனுடு இனப் பெண்ணுடன் தன் வீட்டிற்கு எகே சிலேடு சென்று கொண்டிருந்தான். வேகமாகத் தன் வீட்டிற்குச் சென்ற எசுகை தன் அண்ணன் நெகுன் தைசி மற்றும் தன் தம்பி தரிதை ஒச்சிகனைக் கூட்டி வந்தார்.

அவர்களைக் கண்ட சிலேடு பயமடைந்தான். தன் குதிரையை வேகமாக ஓட்டிய அவன் ஒரு மலையைத் தாண்டி தன் வண்டிக்குச் சென்றான். மூவரும் அவனைத் துரத்தினர். வண்டியில் காத்திருந்த ஓவலூன், கூறினாள்: 'அவர்கள் மூவரது முகத்தையும் கண்டாயா? அவர்கள் உன்னைக் கொல்ல நினைக்கின்றனர். நீ உயிரோடு இருக்கும் வரை, உனக்குப் பெண்கள் கிடைப்பார்கள். அப்பெண்ணுக்கு வேறு பெயர் இருந்தால், அவளை நீ ஓவலூன் என்று அழைக்கலாம். உன்னைக் காப்பாற்றிக் கொள். நீ உயிரோடு இருக்கும் வரை என் மணம் உன்னுடன் இருக்கும்.' இவ்வாறு கூறிய ஓவலூன், தான் அணிந்திருந்த உடையில் ஒன்றைக் கொடுத்தாள். தன் குதிரையில் இருந்தவாரே அவன் அந்த உடையை வாங்கிக் கொண்டான். அவன் வாங்கும்போது, அம்மூவரும் மலையைத் தாண்டி சிலேடுவை நோக்கி வந்தனர். தன் குதிரையை வேகமாக ஓட்டிய சிலேடு ஆனன் ஆற்றின் நீர் ஓடிய திசைக்கு எதிர் திசையில் சென்றான்.

ஏழு குன்றுகள் வழியே சிலேடுவைத் துரத்திய மூவரும் திரும்பி வந்தனர். ஓவலூனின் வண்டி குதிரையின் கயிற்றை எசுகை பிடித்தார். எசுகையின் அண்ணன் நெகுன் தைசி முன்னே செல்ல, தம்பி தரிதை ஒச்சிகன் வண்டிக்குப் பக்கவாட்டில் சென்றான். 'எனக்கு என்ன நடக்கிறது?' ஓவலூன் அழுதாள். அவளது அழுகையின் சத்தம் காடு முழுவதும் எதிரொலித்தது. தரிதை ஒச்சிகன் கூறினான்,

'நீ நம்பி வந்தவன் பல மேடுகளைத் தாண்டிவிட்டான். நீ எவனுக்காக அழுகிறாயோ அவன் பெரும்பகுதி நீரைக் கடந்துவிட்டான். எவ்வளவு நீ அழுதாலும், தொலைவில் இருந்து, அவனால் உன்னைப் பார்க்க முடியாது. நீ அவனை எவ்வளவு தேடினாலும், அவன் சென்ற பாதையை உன்னால் கண்டுபிடிக்க முடியாது.

அமைதியாக இரு.' பிறகு எசுகை தன் வீட்டிற்கு ஓவலூனைக் கூட்டி வந்தார். இவ்வாறு எசுகை ஓவலுனைக் கொண்டு வந்தார்.

கதான் மற்றும் கோதுலாவை அம்பகை கான் அழைத்தார். அனைத்து மங்கோலியர்கள் மற்றும் தாய்சியுடுகள் ஆனன் ஆற்றின் கரையில் இருந்த கோர்கோனக் காட்டில் ஒன்றாகக் கூடினர். நடனமாடி விருந்துண்டு மங்கோலியர்கள் கொண்டாடினர். கோதுலாவை ககானாக தூக்கி இறக்கி வைத்தனர். பாத்தியில் தங்கள் வயிற்றளவுக்கு உள்ளிறங்கும் வகையிலும் தங்கள் முலங்கால்கள் காயமடையும் வரையிலும் பல இலைகளைக் கொண்ட கோர்கோனக் மரத்தைச் சுற்றி நடனமாடினர்.

ககான் ஆகிய பின் கோதுலா, கதான் தைசியுடன் இணைந்து தாதர்களுக்கு எதிராகப் போரிட்டார். கோதோன் பராகா மற்றும் சாலி புகா ஆகிய தாதர்களுக்கு எதிராக அவர்கள் 13 முறை போரிட்டனர். ஆனால் அம்பகை கானின் இறப்பிற்கு அவர்களால் பழிவாங்க முடியவில்லை.

பிறகு தெமுசின் ஊகே, கோரிபுகா, மற்றும் பிற தாதர்களின் இடங்களை எசுகை சூறையாடினார். அவர் திரும்பி வந்தபோது ஓவலூன் கர்ப்பமாகி இருந்தாள். அவர்கள் ஆனன் ஆற்றின் கரையில் தெலுன் போல்தக்கில் இருந்தபோது சிங்கிஸ் கான் பிறந்தார். அவர் பிறந்தபோது, தன் வலதுகையில் ஒரு தாயம் அளவிற்கு பெரியதாக இருந்த ஒரு இரத்தக்கட்டியை பிடித்தபடி பிறந்தார். தாதரான தெமுசின் ஊகேயை பிடித்தபோது பிறந்ததால் அவனுக்குத் தெமுசின் எனப் பெயரிடலாம் என அவர்களுக்குத் தோன்றியது.

எசுகை பகதூருக்கு ஓவலூன் மூலமாக நான்கு மகன்கள் பிறந்தனர்: தெமுசின், கசர், கச்சியுன் மற்றும் தெமுகே. தெமுலுன் என்ற ஒரு மகளும் பிறந்தாள். தெமுசினுக்கு ஒன்பது வயதான போது சூச்சி கசருக்கு வயது ஏழு, கச்சியுன் எல்ச்சிக்கு வயது ஐந்து, தெமுகே ஒச்சிகனுக்கு வயது மூன்று, தெமுலுன் கைக்குழந்தையாக இருந்தாள்.

தெமுசினுக்கு ஒன்பது வயதான போது எசுகை பகதூர் அவனுக்குத் தாய் ஓவலூனின் சகோதரர்களின் குழந்தைகளில் இருந்து ஒரு ஒலகோனுடு இன மனைவியைப் பெற வேண்டும் என்று விரும்பினார். அவர்கள் இருவரும் புறப்பட்டனர். பயணிக்கும் வழியில் ஒங்கிராடு பழங்குடியினத்தைச் சேர்ந்த தாய் செச்சனைச் செக்செர் மற்றும் சிகுர்கு ஆகிய இடங்களுக்கு இடையில் சந்தித்தனர்.

தாய் செச்சென் பேசினார், 'எசுகை குதா, யாரைக் காணச் செல்கிறாய்?'. எசுகை பகதூர் கூறினார், 'நான் ஒலகோனுடு மக்களைச் சந்திக்க என் மகனுடன் செல்கிறேன். இவனது தாயின் சகோதரர்களிடம் இவனுக்காக ஒரு மனைவியைக் கேட்பதற்காகச் செல்கிறேன்.' தாய் செச்சென் கூறினார், 'உன் மகனின் கண்களில் நெருப்பு இருக்கிறது, முகத்தில் ஒளி இருக்கிறது.'

எசுகை குதா, நேற்றிரவு நான் ஒரு கனவு கண்டேன். ஒரு வெள்ளை வல்லூறு, சூரியன் மற்றும் சந்திரன் இரண்டையும் ஏந்தியவாறு, பறந்து வந்து என் கைகளில் உட்கார்ந்தது. நான் யாரிடமும் என் கனவைப் பற்றிப் பேசவில்லை. முன்னர் சூரியன் மற்றும் சந்திரனை நாங்கள் பார்த்தபோது அவை சாதரணமாகத் தான் தெரிந்தன. இப்போது இந்த வல்லூறு என் கைகளில் அவற்றுடன் ஒளியேற்றுகிறது. இந்த வெண் பறவை என் கைகளில் இறங்குகிறது. இது எந்த நல்ல நிகழ்வு நடக்கப் போவதைக் கூறுகிறது? எசுகை குதா, நீ உன் மகனுடன் வருவதை இக்கனவு கூறியுள்ளது. கியாத் மக்களில் இருந்து நீங்கள் வரப்போவதை நான் கண்ட இந்த நல்ல கனவு கூறியுள்ளது. முற்காலத்தில் இருந்தே, ஒங்கிராடு மக்களான நாங்கள் நிலம் மற்றும் மக்களுக்காக மற்ற நாடுகளுடன் சண்டையிட்டதில்லை.

எங்கள் மகன்கள் அவர்கள் முகாமிடும் இடங்களுக்காக அறியப்படுகின்றனர். எங்கள் மகள்கள் அவர்களது வெளிர் நிறத்திற்காக அறியப்படுகின்றனர். எசுகை குதா வா, என் வீட்டிற்குச் செல்வோம். என் மகளுக்கும் இளம் வயது தான், அவளையும் பார் குதா. அவரைக் குதிரையில் இருந்து இறக்கிய தாய் செச்சென் தன் வீட்டிற்குக் கூட்டிச் சென்றார்.

தாய் செச்சனின் மகளை எசுகை கண்ட போது அவளது முகத்தில் ஒளி இருந்தது, கண்களில் நெருப்பு இருந்தது. அவளைக் கண்ட பிறகு எசுகை அவளைத் தன் நினைவில் வைத்துக் கொண்டார். அவளுக்குப் பத்து வயது. தெமுசினை விட ஒரு வயது அதிகம். அவள் பெயர் போர்ட்டே. அன்றிரவு எசுகை அங்கு தங்கினார். அடுத்த நாள் அப்பெண்ணைக் கேட்டார். தாய் செச்சன் பதிலளித்தார், 'அதிகமுறை கேட்ட பிறகு, நான் அவளைக் கொடுத்தால், நான் மதிக்கப்படுவேன். சில முறை கேட்ட பிறகு, நான் அவளைக் கொடுத்தால், நான் மலிவானவனாகப் பார்க்கப்படுவேன். தான் பிறந்த வீட்டின் கதவிற்குப் பின்னால் வயது முதிர வேண்டும் என்பது பெண்ணிற்கு விதிக்கப்பட்ட விதியல்ல. நான் என் மகளை உங்களுக்குக் கொடுப்பேன். நீ செல்லும் போது உன் மகனை என் மருமகனாக இங்கு விட்டுச் செல்.' அவர்கள் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டனர். எசுகை பகதூர் கூறினார்: 'நான் என் மகனை மருமகனாக விட்டுச் செல்கிறேன். ஆனால் அவனுக்கு நாய்களைக் கண்டால் பயம். குதா, என் பையன் நாய்களால் பயப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வார்த்தைகளைக் கூறிய பிறகு, தன் உபரிக் குதிரையை பரிசாகக் கொடுத்தார். தெமுசினை மருமகனாக விட்டு விட்டுப் புறப்பட்டார்.

செல்லும் வழியில், மஞ்சள் புல்வெளியில் இருந்த செக்செர் எனும் இடத்தில், எசுகை பகதூர் சில விருந்து உண்டு கொண்டிருந்த தாதர்களைக் கண்டார். தாகமாக இருந்ததால், குதிரையில் இருந்து இறங்கி அவர்களுடன் உணவு உண்ணச் சென்றார். தாதர்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டனர். 'எசுகை கியான் வந்துள்ளான்' அவர்கள் கூறினர். தங்களைக் கொள்ளையடித்தன் மூலம் அவமானப்படுத்தியது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. இரகசியமாக அவருக்குக் கெடுதல் செய்ய முடிவு செய்தனர். உணவில் விடத்தைக் கலந்து அவருக்குக் கொடுத்தனர். பயணிக்கும் வழியில் அவருக்கு உடல் நலக்குறைவு எற்பட்டது. மூன்று நாள் பயணத்திற்குப் பிறகு தன் வீட்டிற்கு வந்த அவரது உடல்நிலை மிக மோசமானது.

எசுகை பகதூர் கூறினார் 'உள்ளே நலம் குன்றியதாக உணர்கிறேன். யார் அருகில் இருப்பது?' 'நான் இருக்கிறேன்,' மோங்லிக் பேசினான். கோங்கோதத் முதியவர் சரகாவின் மகன். மோங்லிக்கை உள்ளே வருமாறு எசுகை பகதூர் அழைத்தார். 'மோங்லிக், என் பிள்ளை, எனக்குச் சிறிய குழந்தைகள் உள்ளனர். நான் என் தெமுசினை மருமகனாக விட்டு வந்துள்ளேன். நான் திரும்பி வரும் போது, சில தாதர்கள் இரகசியமாக எனக்கு தீங்கு செய்துவிட்டனர். உடலினுள் நான் நலம் குன்றியதாக உணர்கிறேன். என் சிறிய மகன்களைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை நான் உனக்கு வழங்குகிறேன், அவர்கள் உனக்குத் தம்பிகள், மற்றும் உன் விதவையாக்கப்பட்ட மைத்துனி. என் மகன் தெமுசினை உடனே கூட்டி வா, மோங்லிக் என் பிள்ளை.' பேசிய பிறகு, அவர் இறந்தார்.

அத்தியாயம் இரண்டு[தொகு]

எசுகை பகதூரின் வார்த்தைகளை மறுக்காத மோங்லிக், தாய் செச்சனிடம் சென்றார், 'என் எஜமான் எசுகை தெமுசினின் நினைவாக இருக்கிறார். மனவலியுடன் இருக்கிறார். தெமுசினைக் கூட்டிச் செல்வதற்காக வந்துள்ளேன்.' தாய் செச்சன் பேசினார், 'குதாவுக்குத் தன் மகன் நினைவாக இருந்தால், அவனைக் கூட்டிச் செல்லுங்கள். அவர் கண்ட பிறகு, மகனை உடனே கூடி வந்துவிடுங்கள்.' தந்தை மோங்லிக் தெமுசினைக் கூட்டி வந்தார்.

அந்த வசந்த காலத்தில், அம்பகை ககானின் இரண்டு மனைவியர், ஓர்பே மற்றும் சோகதை, முன்னோர்களின் நிலத்தின் எல்லைக்குச் சென்றனர். ஓர்பே மற்றும் சோகதையிடம் ஓவலூன் பேசினாள், ' எசுகை பகதூர் இறந்துவிட்டார் மற்றும் என் பிள்ளைகள் இன்னும் வளரவில்லை என்பதற்காக முன்னோர்களுக்குப் படையலிட்டதன் பங்கை எனக்குக் கொடுக்க வேண்டாம் என்று நினைத்தீர்களா? என் கண் முன்னாலேயே என்னை அழைக்காமல் உண்கிறீர்கள்; என்னை எழுப்பாமலேயே செல்ல முடிவெடுத்து விட்டீர்கள்.'

இவ்வார்த்தைகளைக் கேட்ட, ஓர்பே மற்றும் சோகதை இருவரும் கூறினர்,

'நாங்கள் அழைத்து வந்து உணவு உண்ண வைக்க உனக்கு என்ன சிறப்பு இருக்கிறது? உன் முறை வரும்போது உணவு உண். நாங்கள் உன்னை அழைக்க வேண்டுமா? நேரத்திற்கு வந்தால் உனக்கு உணவு கிடைக்கும்.

அம்பகை ககான் இறந்துவிட்டார் என்ற காரணத்திற்காக, நீயெல்லாம் கூட எங்களிடம் இவ்வாறு பேசுகிறாயா?'

அவர்கள் கூறினர், 'நாம் இடம்பெயரும்போது இந்தத் தாய்களையும், அவர்களது குழந்தைகளையும் கூடாரத்திலேயே விட்டுச் செல்ல நாம் ஒரு வழியைக் கண்டுபிடித்தாக வேண்டும்.' 'நீங்கள் செல்லும்போது அவர்களைக் கூட்டிச் செல்லாதீர்கள்!' அடுத்த நாள், தாய்சியுடு இனத்தின் தர்குதை-கிரில்துக், தோதோயேன் கிர்தே மற்றும் பிற தாய்சியுடுகள், ஆனன் ஆற்றின் வழியே புறப்பட ஆரம்பித்தனர். ஓவலூனை விட்டுவிட்டு, தாய்கள் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டுச் சென்றனர். கோங்கோதத் முதியவரான சரகா அவர்களிடம் நியாயம் கேட்டார். தோதோயேன் கிர்தே பதிலளித்தான்,

'ஊற்று வறண்டுவிட்டது, பளபளப்பான கல் தேய்ந்துவிட்டது.'

இவ்வார்த்தைகளைக் கூறிய பிறகு அவர்கள் செல்ல ஆரம்பித்தனர். முதியவர் சரகாவிடம் அவர்கள் கூறினர், 'நாங்கள் செய்வதை ஏன் தவறு என்கிறாய்?' பின்னால் இருந்து, அவரது முதுகில் ஒரு ஈட்டியைக் குத்தினர்.

காயமடைந்த முதியவர் சரகா தன் கூடாரத்திற்குத் திரும்பினார். வலியுடன் தரையில் படுத்திருந்த அவரைத் தெமுசின் காண வந்தான். கோங்கோதத் முதியவர் சரகா தெமுசினிடம் பேசினார், 'உன் நற்தந்தையால் ஒன்றுபடுத்தப்பட்ட நம் மக்கள் அனைவரும் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். அவர்களிடம் நான் நியாயம் கேட்ட போது அவர்கள் இவ்வாறு எனக்குச் செய்துவிட்டனர்.' தெமுசின் அழுதுவிட்டு வெளியே சென்றான். அவர்கள் பயணிக்க ஆரம்பித்தபோது, விட்டுச் செல்லப்பட்ட ஓவலூன் கொடியை எடுத்தாள், குதிரையில் ஏறி அவர்களைப் பின் தொடர்ந்தாள். பாதி பேரைக் கூட்டி வந்தாள். திரும்பி வந்தவர்கள் தங்கவில்லை. தாய்சியுடுகளுக்குப் பிறகு புறப்பட ஆரம்பித்தனர்.

தாய்சியுடு உறவினர்கள் விதவையான ஓவலூனையும் சிறு குழந்தைகளையும் விட்டுவிட்டு புறப்பட ஆரம்பித்தனர்.

மதியுள்ள பெண்ணாகப் பிறந்த ஓவலூன் தன் சிறு குழந்தைகளை வளர்த்தாள்.தொப்பியை மற்றும் அங்கியை இறுக்கமாக அணிந்து கொண்டு, ஆனன் ஆற்றங்கரையில் நீர் வரும் திசையில் ஓடி, இரவு பகலாக உணவுக் குழல்களை நிரப்பினாள். தன் அதிர்ஷ்டசாலிக் குழந்தைகளை வளர்த்தாள். காட்டு வெங்காயங்கள் மற்றும் பூண்டுகளால் உயர்குணமுடைய தாயின் மகன்கள் தாங்கள் மன்னன்களாகும் வரை பசியாறினர். விவேகமுள்ள மனிதர்களாகவும் விதிகளை உருவாக்குபவர்களாகவும் உருவாயினர். உயர் அதிகாரிகளாகவும், நல்ல மனிதர்களாகவும் வளர்ந்தனர். சக்தி வாய்ந்தவர்களாகவும் துணிச்சலானவர்களாகவும் உருவாயினர். அவர்கள் தங்களுக்குள்ளாகவே பேசினர், 'நம் தாய்க்கு உதவுவோம்.' தாய் ஆனனின் கரையில் உட்கார்ந்த அவர்கள், நரம்புகளையும் தூண்டில் முட்களையும் உருவாக்கினர். அவற்றை வைத்து மீன்களைப் பிடித்தனர். வலைகளைக் கட்டி சிறு மீன்களை எடுத்தனர். இவ்வாறாக நன்றியுணர்வோடு தங்கள் தாய்க்கு உதவினர்.

ஒரு நாள், நான்கு சகோதரர்கள், தெமுசின், கசர், கச்சியுன், பெக்தர், மற்றும் பெலகுதை, ஒருவர் அருகில் ஒருவர் அமர்ந்து தூண்டில் நரம்புகளை இழுத்துக் கொண்டிருந்தனர். ஒரு மீனைப் பிடித்தனர். பெக்தர் மற்றும் பெலகுதை, அச்சிறு மீனை தெமுசின் மற்றும் கசரிடம் இருந்து திடீரென பிடிங்கினர். தெமுசின் மற்றும் கசர் வீட்டிற்குச் சென்றனர். உயர்குணமுடைய தங்கள் தாயிடம் கூறினர், 'ஒரு வெண்ணிற சிறு மீன் தூண்டில் முள்ளைக் கடித்தது, அதை இரு சகோதரர்கள் பெக்தர் மற்றும் பெலகுதை எங்களிடம் இருந்து திடீரெனப் பிடிங்கிச் சென்றுவிட்டனர்.' உயர்குண தாய் பேசினாள், 'நிறுத்துங்கள். ஏன் அண்ணன் தம்பிகள் ஒருவரிடம் ஒருவர் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள்?

நம் நிழல்களைத் தவிர நமக்கு வேறு நண்பர்கள் கிடையாது

தாய்சியுடு உறவினர்களுக்கு முன் நாம் எவ்வாறு வாழ்ந்து காட்டுவது என எண்ணிக் கொண்டிருக்கும் போது, தாய் அலானின் ஐந்து மகன்கள் ஒருமுறை நடந்து கொண்டதைப் போல் நீங்கள் நடந்து கொள்கிறீர்கள். நீங்கள் ஏன் சேர்ந்து இருக்கக்கூடாது? இவ்வாறு நடந்து கொள்வதை நீங்கள் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.'

தங்களது தாயின் வார்த்தைகளில் தெமுசினுக்கும் கசருக்கும் மகிழ்ச்சியில்லை. அவர்கள் கூறினர், 'நேற்று கூட கொம்பு நுனியைக் கொண்ட அம்பால் நாங்கள் வீழ்த்திய ஒரு வானம்பாடியை எங்களிடம் இருந்து பிடுங்கிக் கொண்டனர். இன்று மீண்டும் அதேபோல் நடந்து கொள்கின்றனர். நாம் எவ்வாறு ஒன்றாக இருக்க முடியும்?' கதவை மூடியவாறு இருந்த தோல் திரையை வேகமாக விலக்கிவிட்டு, அவர்கள் வெளியே சென்றனர். ஒரு சிறு குன்றின் உச்சி மீது பெக்தர் உட்கார்ந்திருந்தான். வெளிறிய நிறம் கொண்ட குதிரைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். தெமுசின் பின் புறமாக பதுங்கிச் சென்றான். கசர் முன் புறமாகப் பதுங்கிச் சென்றான். தங்களது அம்புகளைக் குறிவைத்து அவர்கள் நெருங்கிய போது, பெக்தர் அவர்களைக் கண்டான். 'தாய்சியுடு உறவினர்கள் செய்த துரோகத்தையே நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, நம்மைத்தானே கேட்டுக் கொள்கிறோம், "நம்மில் யார் அவர்களுக்கு பதில் கொடுப்பது?". ஏன் என்னை உங்கள் கண்ணில் தூசியாக, உங்கள் வாயில் மீன் முள்ளாக எண்ணுகிறீர்கள்?

நம் நிழல்களைத் தவிர நமக்கு வேறு நண்பர்கள் கிடையாது

என்று இருக்கும் நேரத்தில், இச்செயலை எனக்குச் செய்ய உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? என் மன நெருப்பை அணைக்காதீர்கள், பெலகுதையைத் தனியாக விட்டுவிடாதீர்கள்!' இவ்வார்த்தைகளைக் கூறிய பிறகு, அவன் சம்மணமிட்டு உட்கார்ந்து காத்திருந்தான். முன் புறம் மற்றும் பின் புறம் இருந்து தெமுசினும் கசரும் அவன் மீது எய்தனர். அங்கிருந்து சென்றனர்.

வீட்டிற்கு வந்தனர். அவர்கள் உள்ளே வந்தபோது, உயர்குண தாய், அவர்களது முகத்தை வைத்து கண்டறிந்து உரக்கக் கத்தினாள், 'அழிப்பாளர்களே!

என் கருப்பையில் இருந்து விபத்தாக, இவன் தன் கையில் ஒரு கருப்பு இரத்தக் கட்டியைப் பிடித்துக் கொண்டு பிறந்தான். தன் குட்டியையே கடிக்கும் சீற்றங்கொண்ட நாயைப்போல, பாறை நிறைந்த மலையில் தாக்கும் சிறுத்தையைப் போல, தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத அரிமா போல, தன் இரையை உயிரோடிருக்கும் போதே விழுங்கும் இராட்சசனைப் போல, தன் நிழலையே தாக்கும் வல்லூறு போல, சத்தமின்றி தன் இரையை விழுங்கும் கொன்றுண்ணி மீனைப் போல, தன் குட்டியின் பாதத்தைக் கடிக்கும் ஆண் ஒட்டகத்தைப் போல, பனிப்புயலைப் போர்வையாகப் பயன்படுத்தி பதுங்கும் ஓநாயைப் போல, தன்னால் விரட்ட முடியாத தன் இளம் குஞ்சுகளை உண்ணும் மஞ்சள் வல்லூறைப் போல, தான் தொடப்பட்டால் தன் குகையைக் காக்கும் நரியைப் போல, தன் இரையை எடுக்க எவ்விதத் தயக்கமும் காட்டாத புலியைப் போல, தன் இரையை நோக்கிக் கண்மூடித்தனமாக முன்னேறும் நீள முடி நாயைப் போல நீங்கள் அழித்துவிட்டீர்கள்! நம் நிழல்களைத் தவிர நமக்கு வேறு நண்பர்கள் கிடையாது.

தாய்சியுடு உறவினர்களுக்கு எதிரான நம் பகை அளவில்லாமல் இருக்கும் நேரத்தில், நம்மில் யார் அவர்களுக்குப் பதில் அளிப்பார்கள் என்று நாம் கேட்டுக் கொண்டிருக்கும் போது, ஒருவர் மத்தியில் ஒருவர் எவ்வாறு வாழ்வதென நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், ஒருவருக்கொருவர் இவ்வாறான செயல்களைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்.'

பழமொழிகளைக் கூறி, முன்னோர்களின் வார்த்தைகளைக் கூறி, அவள் தன் மகன்களை வன்மையாகக் கண்டித்தாள்.

இது நடந்து நீண்ட நாட்களுக்குள்ளாகவே, தாய்சியுடுகளின் தர்குதை கிரில்துக் தன் ஆட்களுடன் வந்தான். அவன் கூறினான்,

குட்டி ஆடுகள் கம்பளியை உதிர்க்க ஆரம்பித்துவிட்டன, செம்மறி ஆடுகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.

தாய்கள், மகன்கள், அண்ணன்கள், தம்பிகள் அச்சமடைந்தனர். அடர்ந்த காட்டில் வழியை அடைத்தனர். மரங்களை வெட்டி, அவற்றை ஒன்றாக இழுத்து, பெலகுதை ஒரு அரண் அமைத்தான். எதிரிகளின் அம்பெய்தலுக்கு கசர் பதிலடி கொடுத்தான். மற்ற மூவர் - கச்சியுன், தெமுகே மற்றும் தெமுலுன் - ஒரு குறுகிய இடத்தில் பதுங்கி சண்டையிட்டனர். தாய்சியுடுகள் கத்தினர், 'உங்கள் அண்ணன் தெமுசினை அனுப்புங்கள். நீங்கள் யாரும் எங்களுக்குத் தேவையில்லை.' தெமுசினை அழைப்பதைத் தெரிந்த அவர்கள், அவனை ஒரு குதிரையில் ஏற்றி காட்டின் வழியே அவனைத் தப்பிக்க வைத்தனர். அவனைக் கண்ட தாய்சியுடுகள் துரத்த ஆரம்பித்தனர். தெர்குன் உயர்நிலப் பகுதியில் அடர் மரங்களுக்கிடையே தெமுசின் சென்றான். தாய்சியுடுகளால் உள்ளே நுழைய முடியவில்லை. எனவே அவர்கள் அவ்விடத்தைச் சுற்றி நின்றனர். அவ்விடத்தைக் கவனித்துக் கொண்டனர்.

மூன்று இரவுகளை அங்கு கழித்த தெமுசின், வெளியே செல்ல முடிவெடுத்தான். குதிரையை முன்னே செலுத்தியபோது, சேணம் பிடிப்பற்றுக் கீழே விழுந்தது. திரும்பி பார்த்தபோது சேணம் மற்றும் மார்பு வார்கள் இன்னும் இணைக்கப்பட்டே இருந்தன. எனினும் சேணம் பிடிப்பற்று கீழே விழுந்தது. அவன் கூறினான், 'சேணத்தின் வார் எவ்வாறோ இருந்துவிட்டுப் போகிறது, ஆனால் மார்பு வார் எவ்வாறு பிடிப்பற்றுப் போனது? இது தெய்வத்திடம் இருந்து வந்த எச்சரிக்கையாக இருக்குமோ?' திரும்பி வந்த அவன் மேலும் மூன்று இரவுகளை அங்கேயே கழித்தான். மீண்டும் அந்த அடர் பகுதியில் இருந்து வாயிற்பகுதிக்கு வந்தபோது, ஒரு வெள்ளைப் பாறை, கூடாரத்தின் அளவுடையது, விழுந்து வழியை அடைத்தது. 'இது தெய்வத்திடம் இருந்து வந்த எச்சரிக்கையாக இருக்குமோ?' தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். திரும்பி வந்த அவன் மேலும் மூன்று இரவுகளை அங்கேயே கழித்தான். இறுதியாக, ஒன்பது இரவுகள் உணவின்றி அங்கேயே இருந்த அவன், தனக்குத் தானே கூறிக் கொண்டான், 'எனக்கு என்று ஒரு பெயரை உருவாக்காமல் நான் எவ்வாறு இறப்பது! நான் வெளியே செல்வேன்!' கூடாரத்தின் அளவுடைய வெள்ளைப் பாறையால் வழி அடைக்கப்பட்டிருந்ததால், அங்கிருந்து வெளியே செல்ல முடியவில்லை. எனவே சுற்றியிருந்த மரங்களை அம்பு செய்யப் பயன்படும் தன் கத்தியை வைத்து வெட்டித் தன் குதிரையை பிடித்துச் சென்றான். அங்கிருந்து அவன் வெளியே வந்தவுடனேயே காவலுக்கு நின்ற தாய்சியுடுகள் அவனைப் பிடித்தனர். கொண்டு சென்றனர்.

தெமுசினைக் கூட்டிச் சென்ற பிறகு, தர்குதை கிரில்துக் ஒவ்வொருவரும் ஓர் இரவிற்குத் தெமுசினைத் தங்கள் கூடாரத்தில் வைத்திருக்க வேண்டும் எனத் தன் மக்களுக்கு ஆணையிட்டான். இவ்வாறு சென்று கொண்டிருக்கையில், கோடை காலத்தின் முதல் மாதத்தின் 16வது நாளில், 'சிவப்பு வட்ட நாளில்', ஆனன் ஆற்றங்கரையில் தாய்சியுடுகள் விருந்துண்டனர். அந்தியில் கலைந்து சென்றனர். தெமுசினை விருந்துக்கு பலவீனமான ஓர் இளைஞன் கூட்டிச் சென்றான். விருந்தில் இருந்து மக்கள் கலைந்து சென்றபோது, தன் தலையையும் கைகளையும் சேர்த்து பிணைக்கப்பட்ட பலகையின் கயிறைத் தெமுசின் பலவீனமான அப்பையனின் கையில் இருந்து இழுத்தான். அவன் தலையில் அடித்தான். ஓடினான். 'ஆனன் காட்டில் நான் பதுங்கினேன் என்றால், என்னைப் பார்த்துவிடுவார்கள்,' அவன் நினைத்தான். எனவே நீரோட்டத்தில் தலையைப் பின் இழுத்தவாறு பலகை நீரில் மிதக்குமாறு படுத்தான். தன் முகம் மட்டும் நீருக்கு மேல் இருக்குமாறு படுத்திருந்தான்.

அவனைத் தப்பவிட்டவன் உரக்கக் கத்தினான், 'நான் பிணையக் கைதியைத் தப்பவிட்டுவிட்டேன்!' கலைந்து சென்ற தாய்சியுடுகள், ஒன்று கூடினர். பகல் போல் நிலவு ஒளிவீசியபோது, அவர்கள் ஆனன் காட்டில் தேடினர். சுல்டூசு இன சோர்கன் சீரா, அங்கு செல்லும்போது, நீரோட்டத்தில் தெமுசின் படுத்திருப்பதைக் காண்கிறான். அவன் கூறினான், 'நீ விவேகமுள்ளவனாக இருப்பதால் தான் மக்கள்

அவன் கண்ணில் நெருப்பு உள்ளது, முகத்தில் ஒளியுள்ளது

என்கின்றனர். நீ விவேகமுள்ளவனாக இருப்பதனால் தான் உன் தாய்சியுடு உறவினர்களைப் பொறாமைப் பட வைத்துள்ளாய். அங்கேயே படுத்திரு, நான் கூறமாட்டேன்.' பேசி விட்டு அவன் அங்கிருந்து சென்றான். 'திரும்பி வந்து மீண்டும் தேடுவோம்,' தாய்சியுடுகள் ஒருவருக்கொருவர் கூறிக் கொண்டனர். 'வந்த வழியில் செல்வோம், தேடாத இடத்தில் தேடுவோம், பிறகு இங்கு வருவோம்' சோர்கன் சீரா கூறினான். இந்த யோசனைக்கு அவர்கள் ஒப்புக் கொண்டனர். வந்த வழியே தேடி கொண்டே திரும்பிச் சென்றனர். மீண்டும் தெமுசினைக் கடந்து சோர்கன் சீரா சென்றான். 'உன் உறவினர்கள் வருகின்றனர்' அவன் கூறினான். 'தம் வாயையும் பல்லையும் கூராக்குகின்றனர். படுத்திரு, நிலையாக இரு!' கூறிக் கடந்து சென்றான்.

மீண்டும் அவர்கள் ஒருவருக்கொருவர் கூறிக் கொண்டனர், 'திரும்பி வந்து மீண்டும் தேடுவோம்.' சோர்கன் சீரா கூறினான், 'தாய்சியுடு உயர்குணத்தவர் ஒருவனை நண்பகலிலேயே தப்ப விட்டுள்ளீர்கள். எவ்வாறு இருட்டில் அவனைப் பிடிப்பீர்கள்? வந்த வழியே திரும்பிச் சென்று தேடாத இடத்தில் தேடுவோம். பிறகு இங்கு வந்து தேடுவோம். தேடிய பிறகு நாம் கலைந்து செல்வோம். நாளை மீண்டும் ஒன்று கூடி தேடுவோம். தன் கழுத்தில் பலகையுடன் ஒரு மனிதனால் எங்கு செல்ல முடியும்?' ஒப்புக் கொண்டு அவர்கள் தேட ஆரம்பித்தனர். மீண்டும் சோர்கன் சீரா தெமுசினைக் கடந்து சென்றான், 'திரும்பி வருவதென முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு தேடிய பிறகு நாளையும் உன்னைத் தேடுவோம். நாங்கள் கலையும் வரை காத்திரு. பிறகு இங்கிருந்து சென்று உன் தாய் மற்றும் தம்பிகளைத் தேடு! யாராவது உன்னைக் கண்டால், என்னைக் கண்டதாகக் கூறாதே அல்லது உன்னைப் பார்த்ததையும் கூறாதே.' கூறிவிட்டு அவன் கிளம்பினான்.

தாய்சியுடுகள் கலைந்த போது, தெமுசின் நினைத்தான், 'ஒவ்வொரு இரவும் ஒருவர் கூடாரத்தில் இருக்க வைக்கப்பட்டேன். நேற்று, நான் சோர்கன் சீராவின் கூடாரத்தில் தங்க வைக்கப்பட்டபோது, அவரது இரு மகன்கள், சிம்பை மற்றும் சிலவுன், மனம் வருந்தினர். இரவில் என்னைக் கண்டபோது ஓய்வெடுக்க என் பலகையை தளர்த்தினர். மீண்டும், சோர்கன் சீரா என்னைக் கண்டபோது, யாரிடமும் என்னைப் பற்றிக் கூறாமல் கடந்து சென்றார். ஒரு வேளை அவர் என்னைக் காப்பாற்றலாம்.' இந்த யோசனையுடன் தெமுசின் ஆனன் ஆற்றின் நீர் ஓடிய திசையில் சோர்கன் சீராவின் கூடாரத்தைத் தேடிச் சென்றான்.

கூடாரத்தின் அடையாளம் யாதெனில், குதிரையின் பாலை ஊற்றிய பிறகு, நொதிக்க வைப்பதற்காக இரவு முழுவதும் காலை வேளை வரை அவர்கள் கடைந்ததாகும். 'நான் செல்லும்போது, அச்சத்தத்தைக் கேட்க வேண்டும்,' தெமுசின் நினைத்தான். வந்தான் கடைந்த சத்தத்தைக் கேட்டான். அவன் கூடாரத்திற்குள் நுழைந்தபோது சோர்கன் சீரா கூறினான், 'உன் தாயையும் தம்பிகளையும் தேடு எனக் கூறினேனல்லவா? இங்கு ஏன் வந்தாய்?' ஆனால் அவரது இரண்டு மகன்கள், சிம்பை மற்றும் சிலவுன் கூறினர், 'சிட்டுப் பாறிடம் இருந்து புதரில் மேக்பை மறையும் போது அப்புதர் அதைக் காக்கிறது. இவன் நம்மிடம் வந்துள்ளான், அவனிடம் இவ்வாறு பேசலாமா?' தம் தந்தையின் வார்த்தைகளால் மனம் வருந்திய அவர்கள் பலகையைத் தெமுசினின் கழுத்தில் இருந்து அவிழ்த்து எரித்தனர். கூடாரத்தின் பின் புறம் கம்பளி நிரப்பப்பட்ட வண்டியில் அவனை உட்கார வைத்தனர். தம் தங்கை கதானை அவனைக் கவனித்துக் கொள்ளுமாறு கூறினர். அவளிடம் உயிரோடிருக்கும் யாரிடமும் கூறக்கூடாது என்றனர்.

மூன்றாம் நாள், ஒரு வேளை நம்மில் ஒருவரே தெமுசினை மறைத்து வைத்திருக்கலாம் எனத் தாய்சியுடுகள் ஒருவருக்கொருவர் கூறிக் கொண்டனர். 'நமக்குள்ளேயே தேடலாம்,' அவர்கள் முடிவெடுத்தனர். அவர்களுக்குள்ளேயே தேடியபோது சோர்கன் சீராவின் கூடாரத்திற்கு வந்தனர். அவனது வண்டி, படுக்கைக்குக் கீழே தேடினர். கம்பளியை எடுக்க ஆரம்பித்தனர். தெமுசினின் பாதத்தை அவர்கள் தொடவிருந்தபோது சோர்கன் சீரா கூறினான், 'இவ்வளவு வெக்கையில், இக்கம்பளிக்குள் யாரால் இருக்க முடியும்?' தேடியவர்கள் இறங்கிச் சென்றனர்.

அவர்கள் சென்றபிறகு சோர்கன் சீரா கூறினான், 'என்னைக் கிட்டத்தட்ட காற்றில் சாம்பலாய்ப் பறக்கும் நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டாய்! இப்போது செல், உன் தாய் மற்றும் தம்பிகளைத் தேடு.' வெண் வாய், வெளிர் பழுப்பு நிறப் பெண் குதிரையில் தெமுசினை அமர்த்தினான். கொழுப்பு நிறைந்த ஒரு ஆட்டுக் குட்டியை அவனுக்காகச் சமைத்தான். ஒரு சிறு தோல் பையையும், நொதிக்கப்பட குதிரைப் பால் நிரப்பிய ஒரு பெரிய தோல் பையையும் கொடுத்தான். சேணத்தையோ அல்லது எரிபொருளையோ கொடுக்கவில்லை. ஆனால் ஒரு வில்லையும் இரு அம்புகளையும் கொடுத்தான். பிறகு வழியனுப்பி வைத்தான்.

புறப்பட்ட பிறகு தன் தாய் மற்றும் சகோதரர்கள் தடுப்பு அமைத்த இடத்தைத் தெமுசின் அடைந்தான். ஆனன் ஆற்றின் கரை வழியே நீர் வரும் திசையில் புற்களில் இருந்த தடங்களை வைத்துச் சென்றான். மேற்கில் இருந்து கிமுர்கா நீரோடை ஆற்றுடன் இணையும் இடத்தை அடைந்தான். பெதர் மேட்டின் கோர்சுகுயி குன்றில் கிமுர்கா நீரோடைக்கு மேல் தன் தாய் மற்றும் சகோதரர்களைச் சந்தித்தான்.

அவர்கள் ஒன்றிணைந்த பிறகு, புர்கான் கல்துன் மலைக்குத் தெற்கே கூடாரம் அமைத்துத் தங்கினர். அங்கிருந்தபோது, மர்மோட்டுகள் மற்றும் மேய்ச்சல் நில எலிகளைக் கொன்று உண்டனர்.

ஒரு நாள், கூடாரத்திற்கு அருகில் எட்டு வெளிர் நிறக் குதிரைகள் நின்று கொண்டிருந்தபோது, திருடர்கள் வந்தனர். தெமுசினும் அவனது சகோதரர்களும் என்ன நடக்கிறது என அறிந்து கொள்ளும் முன்னரே குதிரைகளைத் திருடிக் கொண்டு தப்பித்தனர். கால் நடையாகச் சென்றதால் தெமுசினாலும் அவன் சகோதரர்களாலும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. பார்க்கத் தான் முடிந்தது. மொட்டையான வால் கொண்ட ஒரு குதிரையில் மர்மோட்டுகளை வேட்டையாடப் பெலகுதை சென்றிருந்தான். மாலையில், சூரியன் மறைந்த பிறகு, அக்குதிரை மேல் மர்மோட்டுகளை ஏற்றிக் கொண்டு முன்னும் பின்னும் அசைந்தாடுமாறு ஓட்டிக் கொண்டு பெலகுதை நடந்து வந்து கொண்டிருந்தான். தெமுசினும் அவனது சகோதரர்களும் திருடர்கள் குதிரைகளைத் திருடியதை அவனிடம் கூறினர். 'நான் அவர்களைத் துரத்துகிறேன்!' பெலகுதை கூறினான். 'உன்னால் முடியாது. நான் அவர்களைத் துரத்துகிறேன்!' கசர் கூறினான். 'உங்கள் யாராலும் முடியாது. நான் அவர்களைத் துரத்துகிறேன்!' தெமுசின் கூறினான். புல் தடங்களை வைத்துத் தெமுசின் அவர்களைப் பின் தொடர்ந்தான். மூன்று இரவுகள் தொடர்ந்த பிறகு, அடுத்த நாள் காலை, ஒரு பெரிய குதிரைக் கூட்டத்தில் பால் கறந்து கொண்டிருந்த ஒரு பலமான அழகான பையனைத் தெமுசின் கண்டான். தன் குதைரைகளைப் பற்றி அவனிடம் தெமுசின் விசாரித்தான். அவன் பதிலளித்தான், 'இன்று காலை, சூரியன் உதிப்பதற்கு முன்னர், சிலர் எட்டுக் குதிரைகளை இவ்வழியாக ஓட்டிச் சென்றனர். அவர்கள் சென்ற வழியை நான் உனக்குக் காட்டுகிறேன்.' தெமுசினின் குதிரைக்குப் பதில் ஒரு கருப்பு முதுகு கொண்ட சாம்பல் குதிரையைக் கொடுத்தான். தான் ஒரு வேகமான மங்கிய சாம்பல் பழுப்பு நிறக் குதிரையை ஓட்டினான். தன் கூடாரத்திற்குக் கூடச் செல்லாமல், தன் தோல் பை மற்றும் வாலியை வெட்ட வெளியில் அப்படியே விட்டுவிட்டான். 'நண்பா, இங்கு வரும்போது சோர்வடைந்துள்ளாய். இது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது தான். நான் உன்னுடன் வருகிறேன். என் தந்தை நகு பயன். நான் அவரது ஒரே மகன். என்னைப் பூர்ச்சு என்று அழைப்பார்கள். அவர்கள் மூன்று இரவுகள் மற்றும் பகல்களைக் குதிரைகள் சென்ற வழித்தடங்களைத் தேடுவதில் கழித்தார்கள். நான்காம் நாள் காலை, குன்றுகளின் மேல் சூரியன் ஒளிவீசிக் கொண்டிருந்த போது, ஒரு மக்களின் கூடாரத்திற்கு வந்தனர். ஒரு பெரிய கூடாரத்தின் ஓரத்தில் எட்டுக் குதிரைகள் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டனர். 'நண்பா, இங்கேயே இரு,' தெமுசின் கூறினான். 'நான் இக்குதிரைகளை ஓட்ட வேண்டும்.' ஆனால் பூர்ச்சு கூறினான், ' நான் நண்பனாக வந்தேன். நான் எப்படி ஒதுங்கி நிற்பது?' வேகமாகச் சென்ற அவர்கள் குதிரைகளை ஓட்டிச் சென்றனர்.

கூடாரத்தில் வாழ்ந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக அவர்களைத் துரத்த ஆரம்பித்தனர். ஒருவன், ஒரு வெண் குதிரையில் தனியாக, நீண்ட குச்சியின் முனையில் சுருக்குக் கண்ணியுடன் அருகில் வர ஆரம்பித்தான். 'நண்பா', அழைத்தான் பூர்ச்சு, 'வில் அம்பை என்னிடம் கொடு! அவன் மேல் எய்கிறேன்.' ஆனால் தெமுசின் கூறினான், 'எனக்காக நீ காயமடைவதை நான் விரும்பவில்லை. நான் எய்கிறேன்!' அவ்வார்த்தைகளைக் கூறிய பிறகு, குதிரையை ஓட்டியவாறே எழுந்து பின்னோக்கித் திரும்பி தொடர்ந்து வந்தவன் மீது அம்பெய்தான். வெண் குதிரையில் வந்தவன் நின்றான். கண்ணியை தெமுசின் மீது வீசினான். அவனது கூட்டாளிகள் அவனை அடைந்தனர். ஆனால் அவர்கள் வந்தபோது சூரியன் மறைந்தது. எஞ்சியவர்கள் இருளில் மறைந்தனர். அங்கேயே நின்றுவிட்டனர்.

அந்த இரவு, அடுத்த மூன்று பகல் மற்றும் இரவுகள் பயணித்த பிறகு, தெமுசின் மற்றும் பூர்ச்சு திரும்பினர். தெமுசின் கூறினான், 'நண்பா, நீயின்றி என்னால் இக்குதிரைகளை மீட்டிருக்க முடியாது. இவற்றை நாம் பங்கிட்டுக் கொள்ளலாம். உனக்கு எத்தனை வேண்டும்.' ஆனால் பூர்ச்சு கூறினான், 'நீ சோர்வடைந்து வந்தபோது நான் உன்னை ஒரு நல்ல நண்பனாக நினைத்தேன். நல்ல நண்பனாக உனக்கு உதவ நினைத்தேன். உன் தோழனாக உன்னுடன் வந்தேன். இதிலிருந்து ஆதாயம் பெற நான் நினைக்கலாமா? என் தந்தை நகு பயனை எல்லோருக்கும் தெரியும். நான் அவரின் ஒரே மகன். என் தந்தை வைத்துள்ளவையே என் தேவைக்கு மேல் உள்ளன. நான் எதையும் எடுத்துக் கொள்ள மாட்டேன். அவ்வாறு செய்தால், நான் செய்தது உதவியா? நான் எதையும் எடுத்துக் கொள்ள மாட்டேன்.'

நகு பயனின் கூடாரத்திற்கு அவர்கள் வந்தனர். தன் மகனை இழந்துவிட்டதாக நினைத்து அவர் அழுது கொண்டிருந்தார். தன் மகன் வந்ததைக் கண்ட அவர் அழுது கொண்டே திட்டினார். பூர்ச்சு கூறினான், 'என்ன நடந்தது? என் நண்பன் சோர்வடைந்து வந்தபோது, தோழனாக நான் சென்றேன். தற்போது திரும்பி வந்துள்ளேன்.' வெட்ட வெளிக்குச் சென்ற அவன் தன் தோல் பை மற்றும் வாலியை எடுத்து வந்தான். அவர்கள் ஒரு கொழுப்பு நிறைந்த ஆட்டுக் குட்டியை தெமுசினுக்காகச் சமைத்தனர். செல்லும் வழியில் உண்ண அவனிடம் கொடுத்தனர். சேணத்திற்கு முன் பகுதியில் நொதித்த குதிரைப் பால் நிரப்பிய ஒரு தோல் பையை கட்டினர். இவ்வாறு செய்யும்போது நகு பயன் கூறினார், 'நீங்கள் சிறியவர்கள். ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து கொள்ளுங்கள். ஒருவரை ஒருவர் பிரிந்துவிடாதீர்கள்!' மூன்று பகல் மற்றும் இரவுகள் பயணித்த பிறகு செங்குர் நீரோடைக்கு அருகில் இருந்த தன் கூடாரத்திற்குத் தெமுசின் வந்தான். கவலையில் இருந்த அவன் தாய் ஓவலூன், கசர், மற்றும் தம்பிகள் அவனைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தனர்.

அரசுக் கட்டடத்தில்
 மங்கோலியர்களின்
 இரகசிய வரலாறு

நூற்பட்டியல்[தொகு]

 • B. Sumiyabaatar (mong.), "Монголын Нууц Товчоо. Үсгийн галиг", "The Transliteration of the Mongolian Secret History" (MSH=SHM), 965 pp., 1990
 • B. Sumiyabaatar (mong.), "Монголын Нууц Товчооны хэлбэрсудлал", "The Morphology of the Mongolian Secret History ", 3144 pp., 1997
 • B. Sumiyabaatar (mong.), "Чингисийн алтан ургийн Угийн бичиг ба Гэрийн уеийн бичмэл", "The Genealogy of the Genghis's Mongols", 720 pp., 2002, ISBN 99929-5-552-X
 • B. Sumiyabaatar (mong.), Choi Gi Ho, "Монголын Нууц Товчоон. Монгол үсгийн анхны галиг", "The first Mongolian transliteration of the Mongolian Secret History", 382 pp., 2005, ISBN 89-5726-275-X
 • B. Sumiyabaatar (mong.), "А. Позднеев. Транскрипция палеографического текста "Юань-чао-ми-ши"", " A. Posdneew. Transkription of the paleografical text "Yuan-chao-mi-shi", 17-112 pp., 2005.
 • B. Sumiyabaatar (mong.), "Монголын Нууц Товчооны толь: Монгол • Нангиад, Нангиад • Монгол толь. Үсэг: А, Б", " The Dictionary of the Mongolian Secret History: Mongolian-Chinese, Chinese-Mongolian dictionary, " A- B", 290 p., 2010, ISBN 978-99962-842-1-2
 • B. Sumiyabaatar (mong.), "Монголын Нууц Товчоон, Хэлбэрсудлал I", "The Mongolian Secret History. Morphology I", 499 p., 2012, ISBN 978-99962-842-6-7

உசாத்துணை[தொகு]

குறிப்பிடுதல்கள்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. re-transcribed from மரபுவழிச் சீனம்: 豁侖 紐察 脫[卜]察安பின்யின்: mánghuōlúnniǔchá tuō[bo]chá'ān. The 卜 is not included in the Chinese-transcribed titles of the copies known today, but that may be the result of a corruption. William Hung, 'The Transmission of the Book Known as "The Secret History of the Mongols"', Harvard Journal of Asiatic Studies, Vol. 14, No. 3/4 (Dec 1951), p.440
 2. Igor de Rachewiltz, The Secret History of the Mongols: A Mongolian Epic Chronicle of the Thirteenth Century (Brill: Leiden, The Netherlands) at xxvi.

வெளி இணைப்புகள்[தொகு]