அல்-முஸ்டசீம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபு அகமத் அப்தல்லா இப்னு அல்-முஸ்டன்சீர் பில்லா என்பவர் அப்பாசிய அரசமரபின் 37வது மற்றும் கடைசி கலீபா ஆவார். இவர் அரேபியப் பெயரான அல்-முஸ்டசீம் பில்லா என்ற பெயராலும் அறியப்படுகிறார். இவர் 1213ஆம் ஆண்டு பிறந்தார். பெப்ரவரி 20, 1258 அன்று இறந்தார். இவரது ஆட்சிக்காலம் 1242 முதல் 1258 வரை ஆகும்.

632ஆம் ஆண்டு கலீபகம் நிறுவப்பட்ட பிறகு அதற்கு ஏற்பட்ட மகா ஆபத்தை அல்-முஸ்டசீம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. திரான்சோக்சியானா மற்றும் குராசானில் தங்களுக்கு ஏற்பட்ட எந்த எதிர்ப்பையும் ஹுலாகு கான் தலைமையிலான மங்கோலியப் படையெடுப்பாளர்கள் துடைத்தெறிந்திருந்தனர். 1255/1256இல் அலமுத்திற்கு எதிரான தங்களது படையெடுப்பிற்கு படைகளை அனுப்ப அப்பாசியக் கலீபகத்தை ஹுலாகு கட்டாயப்படுத்தியிருந்தார்.[1]

1258இல் ஹுலாகு அப்பாசியக் கலீபகத்தின் பகுதிகள் மீது படையெடுத்தார். கலீபகமானது பகுதாது, அதன் அருகில் இருந்த சுற்று வட்டாரம், மற்றும் தெற்கு ஈராக்கைக் கொண்டிருந்தது. பகுதாதுவை வெல்லும் தன் படையெடுப்பின் போது ஹுலாகு ஒரே நேரத்தில் பல படைகளை நகரத்தை நோக்கி முன்னேறச் செய்தார். முற்றுகை இட்டார். அப்பாசியக் கலீபகத்தின் மக்களை அவர்களது தலைநகரத்திலேயே மங்கோலியர்கள் வைத்திருந்தனர். தப்ப முயன்றவர்களை கொன்றனர்.

பெப்ரவரி 10 அன்று பகுதாது சூறையாடப்பட்டது. பிறகு கலீபை ஹுலாகு கான் கொன்றார். அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இரத்தத்தைச் சிந்தக்கூடாது என மங்கோலியர்கள் எண்ணியதாகக் கருதப்படுகிறது. எனவே அவர்கள் கலீபை ஒரு கம்பளத்தில் வைத்துச் சுருட்டி தங்களது குதிரைகளை வைத்து மிதிக்கவிட்டுக் கொன்றனர். கலீபின் மகன்கள் சிலரும் கொல்லப்பட்டனர். உயிரோடு இருந்த மீதி மகன்களில் ஒருவர் கைதியாக மங்கோலியாவுக்கு அனுப்பப்பட்டார். மங்கோலிய வரலாற்றாளர்களின் கூற்றுப்படி அம்மகன் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டார். ஆனால் இஸ்லாமில் அதற்குப் பிறகு அவர் எந்தப் பங்கையும் ஆற்றவில்லை.

மர்க்கோபோலோவின் பயணங்கள் புத்தகத்தில் உள்ள வரைபடம். ஹுலாகு (இடது) கலீபை அவரது செல்வங்களுடன் சிறையில் அடைத்தல். எனினும் இது உண்மையில் நடந்ததாக கருதப்படவில்லை.[2][3]
அல்-முஸ்டசீமின் கல்லறை

உசாத்துணை[தொகு]

  1. Al-Maqrizi, p.464/vol1
  2. Yule-Cordier Edition
  3. Ibn al-Furat; translated by le Strange, 1900, pp. 293–300
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்-முஸ்டசீம்&oldid=3866181" இலிருந்து மீள்விக்கப்பட்டது