பாரசீகச் சிற்றோவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரசீகக் கலைகள்
காட்சிக் கலைகள்
ஓவியம்
சிற்றோவியம்
அழகூட்டற் கலைகள்
நகை
பூத்தையல் அலங்காரக்கூறு
ஓட்டுவேலை கைப்பணி
மட்பாண்டம்
இலக்கியம்
இலக்கியம் தொன்மங்கள்
நாட்டாரியல்
பிற
கட்டிடக்கலை உணவுகள்
கம்பளம் தோட்டங்கள்
நிகழ்த்து கலைகள்
நடனம் இசை
திரைப்படம்

பாரசீகச் சிற்றோவியம் என்பது பாரசீக மரபு முறையில் வரையப்பட்ட சிறிய ஓவிய வகையைக் குறிக்கும். சிற்றோவியங்கள் பொதுவாக நூல்களில் சேர்ப்பதற்காகவோ, இதுபோன்ற பலவற்றைச் சேர்த்து ஒரு தொகுப்புச் சேகரிப்பில் வைப்பதற்கோ பயன்படுகின்றன. இவற்றை வரைவதற்குப் பயன்படும் நுட்பம் மேற்கத்திய பைசன்டிய மரபுவழிச் சிற்றோவியங்களை வரைவதற்குப் பயன்படுத்திய நுட்பங்களை ஒத்ததே. இந்த மேற்கத்திய முறையே பாரசீகச் சிற்றோவியத் தோற்றத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. இதே அளவுக்கு நிலைபெற்றிருந்த சுவரோவிய மரபும் பாரசீகத்தில் இருந்திருந்தாலும், சிற்றோவியங்கள் எஞ்சியிருக்கும் வீதம் அதிகமானது ஆகும். அத்துடன் பாரசீகத்தின் சிற்றோவியங்களே வெளிநாடுகளில் கூடுதலாக அறியப்பட்டதும் ஆகும். சிற்றோவியம் பாரசீகத்தின் குறிப்பிடத்தக்க ஓவிய வடிவமாக 13 ஆம் நூற்றாண்டில் உருப்பெற்றது. 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் பாரசீகச் சிற்றோவிய வடிவம் அதன் உயர் நிலையை எட்டியது. பாரசீகச் சிற்றோவியங்களின் செல்வாக்கு துருக்கியின் ஓட்டோமான் சிற்றோவிய மரபு, இந்தியாவின் முகலாயச் சிற்றோவிய மரபு போன்ற பிற இசுலாமியச் சிற்றோவிய மரபுகளிலும் செல்வாக்குச் செலுத்தியது.

பாரசீகச் சிற்றோவியங்களின் கருப்பொருட்களின் மூலங்களாக பாரசீகத் தொன்மங்களும் கவிதைகளும் விளங்கின. மேற்கத்திய ஓவியர்கள் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பாரசீகச் சிற்றோவியங்கள் பற்றி அறிந்தனர்.

பாரசீகச் சிற்றோவிய மரபின் வரலாறு[தொகு]

மிராஜ் என்று அறியப்படும், முகமது நபி சுவர்க்கத்தூகுச் செல்லும் காட்சி. கிபி 1550 ஆம் ஆண்டைச் சேர்ந்த பாரசீகச் சிற்றோவியம்.

பாரசீகச் சிற்றோவிய மரபு எப்போது தோன்றியது என்று அறிவதற்குப் போதிய சான்றுகள் இல்லை. இவ்வோவிய வடிவம் மங்கோலியர்களினதும், தைமூரியர்களின் காலத்தில் அதன் அதி உயர் நிலையை அடைந்தது. பாரசீகத்தை ஆண்ட மங்கோலிய ஆட்சியாளர்கள் சீனாவில் இருந்து பல ஓவியர்களை அரசவைக்கு அழைத்து வந்தனர். இல்க்கானிய மற்றும் தைமூரிய மங்கோலிய பாரசீகத் தொன்மங்களை அடிப்படையாகக் கொண்ட சிற்றோவியங்களில் காணப்படும் புராக், டிராகன் போன்ற விலங்குகள் சீன வடிவங்களை ஒத்துக் காணப்படுவது அவற்றை வரைந்தவர்களது சீனப் பின்னணியைக் காட்டுகின்றது.


இச் சீன ஓவியர்கள் நீர்வண்ண ஓவிய முறைகளைப் பாரசீகத்துக்கு அறிமுகப்படுத்திப் பல்வேறு பாரசீக ஓவிய மரபுகளைத் தொடக்கி வைத்தனர். உண்மையில், முகமது நபியின் மிராஜ் பயணத்தைக்காட்டும் சிற்றோவியம் உட்பட்ட பல மதம் சார்ந்த சிற்றோவியங்களில் காணப்படும் பல கூறுகள் சீன மூலத்தைக் காட்டுவனவாக உள்ளன. இத்தகைய சிற்றோவியங்கள் நிலத்தோற்றக் காட்சிகளுக்கான நுட்பங்களை, சோங் மற்றும் யுவான் வம்சக் காலங்களில் வளர்ச்சி பெற்ற, சமகாலச் சீன ஓவிய நுட்பங்களிலிருந்து பெற்றன.

பாரசீகச் சிற்றோவியங்கள்[தொகு]