மங்கோலியப் பேரரசின் அரசியல் பிரிவுகளும் திறை செலுத்திய நாடுகளும்
இங்கு மங்கோலியப் பேரரசின் அரசியல் பிரிவுகளைப் பற்றியும் திறை செலுத்திய அரசுகளைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. படையெடுப்புகள் மற்றும் வெற்றிகள் மூலமாக மங்கோலியர்கள் ஒரு பரந்த பேரரசை உருவாக்கினர். அவர்களது பேரரசில் பல அரசியல் பிரிவுகளும், அடிபணிந்த நாடுகளும், திறை செலுத்திய அரசுகளும் இருந்தன. வரலாற்றின் மிகப்பெரிய ஒன்றிணைந்த நிலப் பேரரசு இதுவாகும். எனினும் மோங்கே கானின் இறப்பிற்குப் பிறகு டொலுய் உள்நாட்டுப் போர் மற்றும் அதன் பின்வந்த போர்கள், மங்கோலியப் பேரரசின் சிதைவுக்கு இட்டுச் சென்றன. 1294ஆம் ஆண்டு பேரரசானது நான்கு தன்னாட்சியுடைய கானரசுகளாகச் சிதறுண்டது. அக்கானரசுகள் வடமேற்கில் தங்க நாடோடிக் கூட்டம், நடுவில் சகதாயி கானரசு, தென்மேற்கில் ஈல்கானரசு மற்றும் தற்காலப் பெய்ஜிங்கை அடிப்படையாகக் கொண்டிருந்த கிழக்கில் இருந்த யுவான் அரசமரபு[a] ஆகியவையாகும். பேரரசில் யுவான் பேரரசர்கள் பெயரளவுப் பட்டமான ககானைப் பயன்படுத்திய போதும் இந்நிலையே தொடர்ந்தது.
ஆரம்ப மங்கோலியப் பேரரசின் அரசியல் பிரிவுகள்
[தொகு]ஆரம்பகால மங்கோலியப் பேரரசின் அரசியல் பிரிவுகளானவை ஒட்டுநிலக் கானரசுகளுடன் ஐந்து முதன்மையான பகுதிகளைக்[5] கொண்டிருந்தன. அவை:
- கரகோரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட மங்கோலியா, தெற்கு சைபீரியா மற்றும் மஞ்சூரியா:
- எஞ்சிங் துறையின் கீழ் இருந்த வடக்கு சீனா மற்றும் திபெத்து;
- பெஷ்பலிக் துறையின் கீழ் இருந்த குவாரசம், மவரன்னர் மற்றும் அமி பாலைவனச் சோலைகள்
- ஆமூ தாரியா துறையின் கீழ் இருந்த பாரசீகம், சியார்சியா, ஆர்மீனியா, சிலிசியா மற்றும் துருக்கி (முந்தைய செல்யூக் ஆட்சி செய்த பகுதிகள்)
- தங்க நாடோடிக் கூட்டம். குறிப்பிடத்தக்க உருசிய அறிஞர்கள் ஏ. பி. கிரிகோரேவ் மற்றும் ஓ. பி. புரோலோவா ஆகியோரது கூற்றுப்படி, சூச்சி வழித்தோன்றல்களின் உளூஸானது 10 மாகாணங்களைக் கொண்டிருந்தது: 1. கிவா அல்லது குவாரசம், 2. தேஷ்த்-இ-கிப்சாக், 3. கசரியா, 4. கிரிமியா, 5. அசோவ் கரைகள், 6. சிர்காசியர்களின் நாடு, 7. பல்கர், 8. வலாச்சியா, 9. ஆலனியா, 10. உருசிய நிலங்கள்.[6]
செங்கிஸ் கான் நடு ஆசியாவில் போர்ப் பயணத்தில் ஈடுபட்டிருந்த பொழுது, அவரது நம்பிக்கைக்குரிய தளபதியான முகாலி மாகாணங்கள் உருவாக்க முயற்சித்தார். அரசு விவகாரங்களுக்கான கிளைத் துறையை நிறுவினார். ஆனால் ஒக்தாயி அவற்றை நீக்கினார். கிதான் இனத்தைச் சேர்ந்த முக்கியமான கன்பூசிய அரசியல் மேதை எலு சுகையின் பரிந்துரைப்படி வட சீனாவின் பகுதிகளை 10 பாதைகளாகப் பிரித்தார். மேலும் அவர் பேரரசை பெஷ்பலிக் நிர்வாகம், எஞ்சிங் நிர்வாகம், கரகோரத்தை தலைமையிடமாகக் கொண்ட மஞ்சூரியா, மங்கோலியா மற்றும் தெற்கு சைபீரியா என்ற பிரிவுகளாகப் பிரித்தார். அவரது ஆட்சியின் கடைசிக்காலத்தில் ஆமூ தாரியா நிர்வாகமும் நிறுவப்பட்டது. மோங்கே கானின் ஆட்சியின்போது இந்த நிர்வாகங்கள் கிளைத் துறைகள் என்று பெயர் மாற்றப்பட்டன.
யுவான் அரசமரபு
[தொகு]யுவான் அரச மரபைத் தோற்றுவித்த குப்லாய் (பேரரசர் சிசு) ஏற்கனவே இருந்த கல்வி நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க அளவில் சீரமைப்புகளைச் செய்தார். 1271ஆம் ஆண்டு இவர் யுவான் அரச மரபைத் தோற்றுவித்தார். மூன்று மன்னர்கள் மற்றும் ஐந்து மாமன்னர்கள் முதல் தாங் அரசமரபு வரையிலான பாரம்பரிய அரசியல் வழித்தோன்றலாகத் தன்னைக் கோரினார். தெற்கு சாங் அரச மரபைத் தோற்கடித்ததன் மூலம் தென் சீனாவை யுவான் படைகள் கைப்பற்றின. தன் ஆட்சியில் அனைத்து சீன முதன்மைப் பகுதிகளையும் யுவான் அரசமரபானது ஒன்றிணைத்தது. மற்றொரு புறம், மேற்குக் கானரசுகள் மீதிருந்த உண்மையான கட்டுப்பாட்டை குப்லாய் இழந்தார். யுவான் அரசமரபின் பகுதிகளானவை நடுச் செயலகத்தால் நிர்வாகம் செய்யப்பட்ட நடுப்பகுதி, பல கிளை செயலகங்கள் அல்லது பௌத்த மற்றும் திபெத்திய விவகாரங்களுக்கான துறையின் கீழ் வந்த பகுதிகள் எனப் பிரிக்கப்பட்டன.
தங்க நாடோடிக் கூட்டம்
[தொகு]தங்க நாடோடிக் கூட்டத்தின் (சூச்சி வழித்தோன்றல்களின் உளூஸ்) இரண்டு முதன்மையான பிரிவுகள் வெள்ளை நாடோடிக் கூட்டம் மற்றும் நீல நாடோடிக் கூட்டம் என்று அறியப்பட்டன. இவை முறையே படுவின் உளூஸ் (மாவட்டம்) மற்றும் ஓர்டாவின் உளூஸ் என்றும் அழைக்கப்பட்டன.
அடிபணிந்தவர்களும் காணிக்கை செலுத்திய அரசுகளும்
[தொகு]மங்கோலியப் பேரரசு அதன் உச்ச பட்ச பரப்பளவைவின்போது தற்போதைய மங்கோலியா, சீனா, பெரும்பான்மையான அல்லது முழுவதுமான உருசியா, உக்ரைன், சிலிசியா, அனத்தோலியா, சியார்சியா, ஆர்மீனியா, பாரசீகம், ஈராக்கு, கொரியா மற்றும் நடு ஆசியா, மற்றும் பர்மா, உருமேனியா மற்றும் பாகிஸ்தானின் பகுதிகள் ஆகிய அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தது. அதே நேரத்தில் பல நாடுகள் மங்கோலியப் பேரரசிடம் அடிபணிந்த அல்லது திறை செலுத்தும் அரசுகளாக மாறின.
ஐரோப்பாவில் அடிபணிந்தவர்கள்
[தொகு]- லித்துவேனியாவின் மாட்சிமிக்க வேள் பகுதி, பெயரளவுக்கு திறை செலுத்தியவர்கள். எனினும், ஓர்டா மற்றும் போரோல்டை தலைமையிலான மங்கோலியர்கள் லித்துவேனியாவின் தெற்குப் பகுதிகள் மீது 1241 மற்றும் 1259 (பிறகு நோகை) ஆகிய ஆண்டுகளில் படையெடுத்தனர். 1382ஆம் ஆண்டு லித்துவேனியாவின் மாட்சி மிக்க இளவரசனும், போலந்தின் மன்னனுமான ஜோகைலா, 1368ஆம் ஆண்டு யுவானின் வீழ்ச்சிக்குப் பிறகு தோக்தமிசை அதிகாரப்பூர்வமாகத் தன் ஆளும் பிரபுவாக ஏற்றுக்கொண்டார். தங்க நாடோடிக் கூட்டத்தின் மங்கோலியர்கள் எப்போதுமே லித்துவேனியர்களைத் தங்களது குடிமக்களில் ஒருவராகவே கருதினர். தைமூரியப் பேரரசுக்கு எதிரான தனது படையெடுப்பிற்காக கீவிலிருந்து வரி வசூலிக்குமாறு லித்துவேனிய மன்னனை (பிறகு ஜோகைலா மற்றும் அவருக்குப் பின் வந்தவர்களிடமும்) தோக்தமிசு கோரினார்.[7]
- நோவ்கோரோட் குடியரசு, பிஸ்கோ மற்றும் ஸ்மோலன்ஸ்க்,[8] உள்ளிட்ட குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான உருசிய அரசுகள். 1239ஆம் ஆண்டு படு கானால் உருசியாவின் வடக்குப் பகுதியை அடைய முடியவில்லை. ஏனெனில் நோவ்கோரோடு மற்றும் பிஸ்கோ போன்ற நகர அரசுகளைச் சுற்றி சதுப்பு நிலங்கள் இருந்தன. அலெக்சாந்தர் நெவ்ஸ்கியின் தூதரகப் பேச்சுவார்த்தைகள், மங்கோலிய அச்சுறுத்தல்கள் மற்றும் டியூடோனிக் வரிசையின் படையெடுப்பு ஆகியவற்றின் ஒன்றிணைந்த தாக்கமானது ஆரம்பத்தில் நோவ்கோரோடையும் பிறகு பிஸ்கோவையும் திறை செலுத்தும் நிலையை ஏற்றுக்கொள்ள வைத்தன. 1274ஆம் ஆண்டு கடைசி உருசிய வேள் பகுதிகள் மோங்கே தெமூரின் நாடோடிக் கூட்டத்தின் குடிமக்களாயின.
- இரண்டாவது பல்கேரியப் பேரரசு[9]. மங்கோலியர்களின் ஐரோப்பியப் படையெடுப்பின் போது பல்கேரியர்கள் இரண்டாம் இவான் அசனின் தலைமையில் மங்கோலியத் தியூமனை அழிக்க முயற்சித்தனர். ஆனால் நடு ஐரோப்பாவிலிருந்து பின்வாங்கியபோது பல்கேரியா வழியான கதானின் ஊடுருவல்கள் பல்கேரியாவின் இளம் முதலாம் கலிமனைக் காணிக்கை செலுத்தவும் மங்கோலிய ஆளுமையை ஏற்றுக்கொள்ளவும் இணங்கச் செய்தன. 1254ஆம் ஆண்டு திருத்தந்தைக்கு நான்காம் பெலா எழுதிய மடலின்படி, அந்நேரத்தில் பல்கேரியர்கள் தொடர்ந்து மங்கோலியர்களுக்குக் காணிக்கை செலுத்திக் கொண்டிருந்தனர்.
- செர்பியா இராச்சியம். 1288ஆம் ஆண்டு வாக்கில் தற்போதைய வடகிழக்குச் செர்பியாவில் உள்ள இரண்டு பல்கேரிய உயர்குடியினரை அமைதிப்படுத்துவதற்காக மிலுடின் ஒரு படையெடுப்பைப் பிரனிசேவோ பகுதியில் தொடங்கினார். ஆனால் அந்த உயர் குடியினர் பல்கேரிய இளவரசன் விடின் ஷிஷ்மனுக்குத் திறை செலுத்தியவர்கள் ஆவர். ஷிஷ்மன் மிலுடினைத் தாக்கினர். ஆனால் தோற்கடிக்கப்பட்டார். பதிலுக்கு மிலுடின் ஷிஷ்மனின் தலைநகரான விடினைச் சூறையாடினார். ஆனால் ஷிஷ்மன் தங்க நாடோடிக் கூட்டத்தின் உண்மையான ஆட்சியாளராகிய நோகை கானுக்குத் திறை செலுத்தியவர் ஆவார். மிலுடினின் மரியாதையற்ற செயலுக்கு அவரை தண்டனைக்குள்ளாக்கப் போவதாக நோகை கான் அச்சுறுத்தினார். ஆனால் செர்பிய மன்னன் பரிசுகள் மற்றும் பிணையக் கைதிகளை அனுப்பியபோது நோகை தனது மனதை மாற்றிக் கொண்டார். இந்தப் பிணையக் கைதிகளில் செர்பிய மன்னனின் மகனான ஸ்டீபன் தெகன்ஸ்கியும் ஒருவர் ஆவார். 1299ஆம் ஆண்டு நோகை கானின் இறப்புக்குப் பிறகு ஸ்டீபன் தெகன்ஸ்கி செர்பியாவுக்குத் தப்பி வந்தார்.
தென்கிழக்கு ஆசியாவில் அடிபணிந்தவர்கள்
[தொகு]- தாய் வியட் (வியட்நாம்).[10] தெற்கு சீனாவைத் தாக்குவதற்காக ஒரு வழியைக் கேட்பதற்காகச் சென்ற மங்கோலியத் தூதுவர்களை வியட்நாமியர்கள் பிடித்து வைத்துக் கொண்டனர். இதன் பிறகு 1257ஆம் ஆண்டு மங்கோலியப் படைகள் திரான் அரசமரபு மீது படையெடுத்தனர். தலை நகரம் தங் லோங்கின் (ஹனோய்) நகரத் தற்காப்பாளர்களை மங்கோலியர்கள் தோற்றோடச் செய்தனர். நகரக் குடிமக்களைப் படுகொலை செய்தனர். தன்னுடைய நாட்டை விட்டு விடுவதற்காக மோங்கே கானிடம் காணிக்கை செலுத்த மன்னன் தன் தோங் ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில் வெப்ப மண்டலத்தின் வெம்மை, கொசுக்கள் மற்றும் மலேரியாவை மங்கோலியர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வியட்நாமின் மன்னரிடமிருந்து காணிக்கை செலுத்துவதற்கான உறுதிமொழியைப் பெற்ற பிறகு மங்கோலியர்கள் பின்வாங்கினர். மங்கோலியத் தருகச்சிகள் முன்னர் அனுமதிக்கப்பட்டதைப் போல்[11] திரான் அரச மரபானது முழுவதுமாக மங்கோலிய ஆளுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் குப்லாய் கான் கோரியபோது இரண்டு அரசுகளுக்கும் இடையிலான உறவானது 1264ஆம் ஆண்டு மோசமானது. 1285 மற்றும் 1288 ஆகிய ஆண்டுகளில் மங்கோலியர்கள் இரண்டு பெருமளவிலான படையெடுப்புகளைத் தொடங்கினர். எனினும் இரு படையெடுப்புகளும் முறியடிக்கப்பட்டன. மேற்கொண்ட சண்டைகளைத் தவிர்ப்பதற்காக தாய் வியட் அல்லது திரான் அரசமரபின் மன்னன் இறுதியாக மங்கோலிய ஆளுமையை ஏற்றுக்கொண்டார்.
- சம்பா. 1288ஆம் ஆண்டு யுவான் ஆட்சியை ஏற்றுக்கொள்ளும் தனது விருப்பத்தைச் சம்பாவின் மன்னனான வே இந்திரவர்மன் தெரிவித்த போதும் அவரது மகன் மற்றும் குடிமக்கள் யுவான் ஆளுமையை ஏற்றுக் கொள்வதைத் தவிர்த்தனர். மங்கோலியப் படைகள் இந்த நாட்டில் தொலைந்து போயின. அவர்களது தளபதி கொல்லப்பட்டார். எனினும் 1283ஆம் ஆண்டு நடந்த வெட்டவெளி யுத்தங்களில் சம்பாவின் அனைத்துப் படைகளும் தோற்கடிக்கப்பட்டன. எனினும் படையெடுத்து வந்தவர்களுக்கு எதிராகக் கொரில்லா யுத்தத்தை நடத்தியதன் மூலம் சம்பவமானது மங்கோலியர்களைப் பலவீனப்படுத்தியது. மங்கோலியர்கள் இறுதியாகப் பின்வாங்கினர். 1288ஆம் ஆண்டு மங்கோலியப் படையெடுப்பானது தோல்வியில் முடிந்ததற்குப் பிறகு, சம்பா மன்னனும் மேற்கொண்ட இரத்தம் சிந்துதலைத் தவிர்ப்பதற்காகக் காணிக்கைகளை அனுப்பி வைப்பதைத் தொடங்கினார்.
- கெமர் பேரரசு. 1278ஆம் ஆண்டு ஒரு மங்கோலியத் தூதுவன் கெமர் மன்னனால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டான். சம்பாவில் கோட்டையை யுவான் இராணுவமானது முற்றுகையிட்டுக் கொண்டிருந்த போது கெமரை அடிபணிய வைப்பதற்காக ஒரு தூதுவன் மீண்டும் அனுப்பப்பட்டான். இரண்டாவது தூதுவனும் கைது செய்யப்பட்ட பிறகு 100 மங்கோலியக் குதிரைப் படையினர் கெமருக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்கள் பதுங்கி இருந்து திடீர்த் தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டனர். எனினும் கெமர் பேரரசின் மன்னன் மன்னிப்புக் கோரினார். தனது போர்க் குணம் கொண்ட அண்டையவர் மற்றும் குப்லாய் கானின் சினம் காரணமாக 1285ஆம் ஆண்டு காணிக்கை செலுத்தக் கெமர் மன்னன் ஒப்புக்கொண்டார்.
- சுகோத்தாய் இராச்சியம் மற்றும் சியாங்மை அல்லது தையோ. பர்மாவில் இருந்த தனக்குத் திறை செலுத்தியவர்களைப் பாதுகாப்பதற்காக மங்கோலியப் படைகளைக் குப்லாய் கான் அனுப்பியபோது சுகோத்தாய் மற்றும் தையோ உள்ளிட்ட தாய் அரசுகள் மங்கோலிய ஆளுமையை ஏற்றுக்கொண்டன. தங்களது விசுவாசத்தைக் காட்டுவதற்காக யுவான் அரசவைக்கு ரம்கமயேங் மன்னன் மற்றும் பிற தாய் மற்றும் கெமர் தலைவர்கள் அடிக்கடி வருகை புரிந்தனர்.[12]
கிழக்கு மற்றும் நடு ஆசியாவில் அடிபணிந்தவர்கள்
[தொகு]- கொர்யியோ இராச்சியம். மங்கோலியர்களின் கொரியப் படையெடுப்பானது கொரியாவுக்கு எதிராக மங்கோலியப் பேரரசின் ஒரு தொடர்ச்சியான படையெடுப்புகளை உள்ளடக்கியிருந்தது. அக்காலத்தில் கொர்யியோ என்று அழைக்கப்பட்ட கொரியாவானது 1231 முதல் 1270ஆம் ஆண்டு வரை படையெடுப்புக்கு உள்ளாக்கப்பட்டது. கொரியத் தீபகற்பம் முழுவதும் குடிமக்களின் உயிருக்கு ஏராளமான பாதிப்பை ஏற்படுத்திய ஐந்து முக்கியப் படையெடுப்புகள் நடத்தப்பட்டன. இறுதியாக மங்கோலிய யுவான் அரசமரபின் பகுதியளவுத் தன்னாட்சியுடைய திறை செலுத்திய அரசாக கொரியா மாறியது. இந்நிலை சுமார் 80 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.[13] மங்கோலியப் பேரரசு மற்றும் கொரிய இராச்சியத்திற்கு இடையில் திருமண பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. மங்கோலிய இளவரசிகள் கொரிய மன்னர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டனர். அதே நேரத்தில் மங்கோலியப் பேரரசர்கள் பல கொரியப் பெண்களைத் துணைவியர்களாகப் பெற்றுக்கொண்டனர். பேரரசி கி என்று அழைக்கப்பட்ட ஒரு கொரியப் பெண்மணி உகான்டு கானுடன் நடந்த தனது திருமணத்தின் காரணமாகப் பேரரசியாக உருவானார். அவரது மகன் பிலிகுது கான் ஆயுசிறீதரா வடக்கு யுவான் அரசமரபின் மங்கோலியக் கானானார். கொர்யியோவின் மன்னனான சங்னியோல் குப்லாய் கானின் ஒரு மகளைத் திருமணம் செய்து கொண்டார். மங்கோலியர் மற்றும் கொரியர்களுக்கு இடையிலான திருமணங்களானவை 80 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தன. 1350களில் யுவானின் மங்கோலியக் கோட்டைக் காவல் படையினரைக் கோங்மின் மன்னன் வெளியேற்ற ஆரம்பித்தது வரை கொர்யியோ அரசமரபு மீதான மங்கோலியத் தாக்கமானது தொடர்ந்தது. மங்கோலியர்களின் தரநிலையில் கீழ் இருந்த திறை செலுத்திய நாடாகக் கொர்யியோ திகழ்ந்தது. கர்லுக்குகள் மற்றும் உய்குர்களுக்குக் கீழ் கொரியர்கள் இருந்தனர். ஏனெனில் கொரியர்கள் கடைசியாகச் சரணடைந்திருந்தனர்.
- கர்லுக்குகள்.
- யுன்னானின் மகாராஜா. யுவான் பேரரசர் குப்லாய் கான் தலி மன்னனான துவான் சிங்சிக்கு மகாராஜா என்ற பட்டத்தைக் கொடுத்தார். மங்கோலியர்களுக்குத் திறை செலுத்தியவர்களாக மகாராஜா என்ற பட்டத்தைத் தலி இராச்சியத்தின் துவான் அரசகுடும்பமானது தொடர்ந்து பயன்படுத்தியது. யுவானிடமிருந்து யுன்னானை மிங் அரசமரபு கைப்பற்றிய பிறகு கோங்வு பேரரசர் துவான் அரச குடும்பத்தை மிங் தலைநகரான நாஞ்சிங்குக்கு அனுப்பி வைத்தார்.
மத்திய கிழக்கில் அடிபணிந்தவர்கள்
[தொகு]- அண்டியோச் வேள் பகுதி மற்றும் திரிப்பொலி மாவட்டம்.[14] இந்தச் சிறிய சிலுவைப் போர் அரசுகள் மங்கோலியர்களுக்கு ஆண்டுதோறும் காணிக்கையைப் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து செலுத்தின. மங்கோலிய இராணுவ நடவடிக்கைகளுடன் பிராங்குகளின் ஒத்துழைப்புக்குச் சமமாக நடந்த நிகழ்வானது, மங்கோலியர்கள் மற்றும் அண்டியோச்சின் பிராங்குகள் மற்றும் பிறருக்கு இடையேயான பிரபு-குடிமகன் உறவு முறை ஆகும். எகிப்திய அடிமை வம்சத்தவர்களிடம் 1268ல் அந்தியோக்கியா மற்றும் 1289ல் திரிப்பொலியின் வீழ்ச்சிக்குப் பிறகு மங்கோலியர்கள் தங்களுக்கு அடிபணிந்திருந்த மற்றும் கூட்டாளிகளான பிராங்குகளை இழந்தனர்.
- திரெபிசோந்து பேரரசு. 1243ஆம் ஆண்டு செல்யூக் அரசமரபு மற்றும் திரெபிசோந்தின் இராணுவப் படைகள் மங்கோலியர்களால் தோற்கடிக்கப்பட்டன. இதற்குப் பிறகு கொன்யாவின் சுல்தானாகிய இரண்டாம் கய்குஸ்ராவ் காணிக்கை செலுத்துவதற்கும் ஆண்டுதோறும் குதிரைகள், வேட்டை நாய்கள் மற்றும் ஆபரணங்களை அனுப்புவதற்கும் கட்டாயப்படுத்தப்பட்டார். திரெபிசோந்து பேரரசரான முதலாம் மானுவல் மங்கோலியர்களை எதிர்த்துச் சண்டையிடுவது இயலாத காரியம் என்பதை உணர்ந்த பிறகு அவர்களுடன் வேகமான ஒரு அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டார். இந்த உடன்படிக்கையின் ஒரு கட்டுப்பாடானது ஆண்டுதோறும் காணிக்கை செலுத்துவதாகும். மங்கோலியர்களுக்கு அடிபணிந்தவர்களாக மாறுவதும் ஆகும். இந்தப் பேரரசானது அதன் உச்சபட்ச செழிப்பை அடைந்தது. ஈல்கான்களின் சகாப்தத்தின் போது இதன் சொந்த வளமான உள்நாட்டுப் பகுதிகளின் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இப்பேரரசுக்குக் கிடைத்தது. ஆனால் 1335ஆம் ஆண்டு மங்கோலிய சக்தியின் வீழ்ச்சிக்குப் பிறகு துருக்கியத் தாக்குதல்கள், உள்நாட்டுப் போர்கள் மற்றும் சூழ்ச்சிகளால் திரெபிசோந்தானது இடர்ப்பாடுகளுக்கு உள்ளானது.[15]
காணிக்கை செலுத்திய அரசுகள்
[தொகு]- சக்கலின் பூர்வகுடிகள். சக்கலின் தீவின் மீது மங்கோலியப் படைகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதல்கள் 1264 முதல் 1308 வரை நீடித்தன.[16] பொருளாதார ரீதியாக, புதிய மக்களை வென்ற நடவடிக்கையானது, காணிக்கையை அடிப்படையாகக் கொண்ட யுவான் அரசமரபுக்கு மேலும் செல்வத்தைக் கொடுத்தது. நிவுக்குகள் மற்றும் ஓரோக்குகள் ஆகியோர் மங்கோலியர்களால் அடிபணிய வைக்கப்பட்டனர். எனினும் மங்கோலியக் காவலிடங்கள் மீது ஆண்டுதோறும் ஐனு இனக்குழு ஊடுருவல் தாக்குதல்களை நடத்தியது.[17] இறுதியாக 1308ஆம் ஆண்டு ஐனுக்கள் மங்கோலியர்களின் ஆளுமையை ஏற்றுக்கொண்டனர்.
- பைசாந்தியப் பேரரசு.[18] ஒரு எகிப்தியத் தூதுவன் பேரரசர் மைக்கேல் எட்டாம் பலையலோகோசால் கைது செய்யப்பட்டபோது சுல்தான் பைபர்சு தனது கூட்டாளி பெர்கே கானைக் கிரேக்கப் பேரரசைத் தாக்குமாறு வற்புறுத்தினார். 1265ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் தன்னிடம் அடிபணிந்த அரசான பல்கேரியாவுடன் நோகை கான் பைசாந்தியத் திரேசு மீது ஒரு மங்கோலிய ஊடுருவல் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார். 1265ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் அவர் மைக்கேலின் இராணுவங்களைத் தோற்கடித்தார். தூதுவனை விடுவித்தார். முந்தைய செல்யூக் சுல்தானான இரண்டாம் கய்கவுசும் விடுவிக்கப்பட்டார். சண்டையிடுவதற்குப் பதிலாக பெரும்பாலான பைசாந்தியர்கள் தப்பித்து ஓடினர். இத்தாலிய வணிகர்களின் உதவியுடன் மைக்கேல் தப்பித்து ஓடினார். பின்னர் நோகையின் இராணுவத்தால் திரேசானது சூறையாடப்பட்ட பிறகு தங்க நாடோடிக் கூட்டத்தின் பெர்கேயுடன் ஒரு உடன்பாட்டில் பைசாந்தியப் பேரரசர் கையொப்பமிட்டார். நோகைக்குத் தனது மகள் யூப்ரோசைனியை மணம் முடித்துக் கொடுத்தார். இதற்குப் பிறகு தங்க நாடோடிக் கூட்டத்திற்குக் காணிக்கையாக மிகுந்த மதிப்புடைய துணிகளை மைக்கேல் அனுப்பினர். ஆனால் இந்த நிகழ்வுக்குப் பிறகு பைசாந்தியத்தின் ஏகாதிபத்திய அவையானது தங்க நாடோடிக் கூட்டம் மற்றும் ஈல்கானரசு ஆகிய இரண்டுடனும் நல்ல உறவு முறைகளைப் பேணும் கொள்கையை உருவாக்கிப் பின்பற்றியது. எகிப்தின் அடிமை வம்சத்தவர்கள் மற்றும் அனத்தோலியாவின் காசி அமீர்கள் ஆகியோரின் ஊடுருவலுக்கு எதிராக இந்த இரண்டு மங்கோலியக் கானரசுகளும் பைசாந்தியத்திற்குக் கூட்டாளிகளாக உருவாகினர்.
- மலாய் தீபகற்பத்தின் சிறிய அரசுகள். 1270 முதல் 1280 வரை தன்னைச் சுற்றியிருந்த நாடுகளுக்கு அவற்றை அடி பணியுமாறு கோருவதற்காகக் குப்லாய் தன்னுடைய தூதுவர்களை அனுப்பினார். இந்தோசீனா மற்றும் மலாயில் இருந்த பெரும்பாலான அரசுகள் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டன. மார்க்கோ போலோவின் கூற்றுப்படி, இந்தக் குடிமக்கள் மங்கோலிய அவைக்கு யானைகள், மூக்குக்கொம்பன்கள், ஆபரணங்கள் மற்றும் கௌதம புத்தரின் ஒரு பல் ஆகிய காணிக்கைகளைச் செலுத்தினர். 1293ஆம் ஆண்டு ஜாவா மீதான மங்கோலியப் படையெடுப்பின் போது, மலாய் மற்றும் சுமாத்திராவில் இருந்த சிறிய அரசுகள் அடிபணிந்தன. தூதுவர்கள் அல்லது பிணையக் கைதிகளை அனுப்பி வைத்தன. தற்போதைய தைவான் மற்றும் பிலிப்பீன்சு ஆகிய நாடுகளின் பூர்வ குடிமக்கள் மங்கோலியக் கப்பற்படைக்கு உதவினர். ஆனால் அந்த நாடுகள் என்றுமே வெல்லப்படவில்லை.
- அய்யூப்பிய வம்சம். சுல்தானகத்தின் அனத்தோலியப் பகுதிகளை 1244ஆம் ஆண்டு மங்கோலியர்கள் இணைத்ததிலிருந்து அய்யூப்பிய வம்சம் 1260ஆம் ஆண்டு வீழ்ச்சி அடைந்தது வரையில் மங்கோலியர்களின் பெயரளவிலான ஆளுமைத் தன்மையை அய்யூப்பிய வம்சத்தினர் ஏற்றுக்கொண்டனர்.
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ As per modern historiographical norm, the "Yuan dynasty" in this article refers exclusively to the realm based in Dadu (present-day Beijing). However, the Han-style dynastic name "Great Yuan" (大元) as proclaimed by Kublai, as well as the claim to Chinese political orthodoxy were meant to be applied to the entire Mongol Empire.[1][2][3][4] In spite of this, "Yuan dynasty" is rarely used in the broad sense of the definition by modern scholars due to the de facto disintegrated nature of the Mongol Empire.
உசாத்துணை
[தொகு]- ↑ Kublai (18 December 1271), 《建國號詔》 [Edict to Establish the Name of the State], 《元典章》[Statutes of Yuan] (in Classical Chinese)
- ↑ Robinson, David (2019). In the Shadow of the Mongol Empire: Ming China and Eurasia. p. 50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781108482448.
- ↑ Robinson, David (2009). Empire's Twilight: Northeast Asia Under the Mongols. p. 293. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674036086.
- ↑ Brook, Timothy; Walt van Praag, Michael van; Boltjes, Miek (2018). Sacred Mandates: Asian International Relations since Chinggis Khan. p. 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226562933.
- ↑ A COMPENDIUM OF CHRONICLES: Rashid al-Din's Illustrated History of the World (The Nasser D. Khalili Collection of Islamic Art, VOL XXVII) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-727627-X, the reign of Möngke
- ↑ A. P. Grigorev and O. B. Frolova "Geographicheskoy opisaniye Zolotoy Ordi" in Encyclopedia al-Kashkandi-Tyurkologicheskyh sbornik,2001-p. 262-302
- ↑ René Grousset The Empire of the Steppes, Ж.Бор Еварзийн дипломат шашстир II боть
- ↑ Л.Н.Гумилев - Древняя Русь и великая степь
- ↑ Ринчен Хара Даван - Чингис хан гений
- ↑ René Grousset - The Empire of the Steppes, Ж.Бор Евразийн дипломат шашстир II боть
- ↑ "The History of Yuan Dynasty", J.Bor, p.313, Encyclopedia of Mongolia and the Mongol empire, p.581
- ↑ The Empire of the Steppes by René Grousset, trans. N. Walford, p.291
- ↑ "Expanding the Realm". Koreanhistoryproject.org. Archived from the original on 2015-03-17. பார்க்கப்பட்ட நாள் 2015-02-20.
- ↑ Reuven Amitei Press Mamluk Ilkhanid war 1260-1280
- ↑ A History of the Byzantine Empire by Al. Vasilief, © 2007
- ↑ Mark Hudson Ruins of Identity, p.226
- ↑ Brett L. Walker The Conquest of Ainu Lands, p.133
- ↑ Ринчен Хара-Даван: Чингис хан гений, Ж.Бор: Евразийн дипломат шашстир II боть