மங்கோலியாவின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இன்றைய மங்கோலியாவின் பகுதி சியோங்னு, சியான்பே அரசு, ரூரன் ககானேடு, துருக்கிக் ககானேடு மற்றும் பிறர் உட்பட பல்வேறு நாடோடி சாம்ராச்சியங்களால் ஆளப்பட்டது. மத்திய ஆசியாவில் லியாவோ வம்சம் (907-1125) என்று அழைக்கப்படும் ஒரு அரசை கிதான் மக்கள் அமைத்தனர்.[1] இவர்கள் மங்கோலியா மற்றும் தூரக் கிழக்கு உருசியா, வட கொரியா, மற்றும் வட சீனாவின் பகுதிகள் ஆகியவற்றை ஆட்சி செய்தனர். 

1206 ஆம் ஆண்டில், செங்கிஸ் கானால் மங்கோலியர்களை ஒன்றிணைக்க முடிந்தது. அவர்களை ஒரு யுத்த சக்தியாக உருவாக்கினார். அந்த சக்தி உலக வரலாற்றில் மிகப்பெரிய தொடர்ச்சியான நிலப் பேரரசான மங்கோலியப் பேரரசை அமைத்தது. மங்கோலியாவில் பௌத்த மதம், யுவான் பேரரசர்கள் திபெத்திய பௌத்த மதத்திற்கு மாறியதிலிருந்து தொடங்கியது.

1368 இல் மங்கோலியர்கள் தலைமையிலான யுவான் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், மங்கோலியர்கள் முந்தைய வடிவங்களான உள்நாட்டு மோதல்களுக்குத் திரும்பினர். மங்கோலியர்கள் தங்கள் சாம்ராச்சியத்தின் சரிவைத் தொடர்ந்து தங்கள் பழைய சாமனிச வழிகளுக்கு திரும்பினர். பௌத்த மதம் மறுபடியும் மீண்டும் வளர்ச்சியடைந்த 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டு வரை இது தொடர்ந்தது.

17 ஆம் நூற்றாண்டின் இறுதியில், தற்போதைய மங்கோலியா மஞ்சூ தலைமையிலான சிங் வம்சத்தின் ஆட்சியின் கீழ் பகுதியாக இணைக்கப்பட்டிருந்தது. 1911 இல் சிங் சரிவின் போது, மங்கோலியா சுதந்திரத்தை அறிவித்தது. ஆனால் உண்மையான சுதந்திரத்தை உறுதிப்படுத்த 1921 வரையும்,  சர்வதேச அங்கீகாரம் பெற 1945 வரையும் போராட வேண்டியிருந்தது. இதன் விளைவாக, இது வலுவான சோவியத்தின் செல்வாக்கின் கீழ் வந்தது: 1924 இல், மங்கோலிய மக்கள் குடியரசு அறிவிக்கப்பட்டது. மங்கோலிய அரசியலானது அக்கால சோவியத் அரசியல் வடிவங்களைப் பின்பற்ற ஆரம்பித்தது. 1989ன் உலகப் புரட்சிகளுக்குப் பின்னர், 1990ம் ஆண்டின் மங்கோலிய புரட்சி பல கட்சி அமைப்புக்கு வழிவகுத்தது. 1992ல் ஒரு புதிய அரசியலமைப்பு, மற்றும் சந்தை பொருளாதாரத்திற்கு மங்கோலியா மாறியது.

நடுக் காலம்[தொகு]

மங்கோலியப் பேரரசு மற்றும் பாக்ஸ் மங்கோலிகா[தொகு]

நவீன அரசியல் வரைபடத்தின் மீது குறிக்கப்பட்ட மங்கோலியப் பேரரசின் எல்லைகள் மற்றும் மங்கோலியர்கள் தற்போது வாழும் பகுதிகள்

1228 ஆம் ஆண்டு மங்கோலிய உயர்குடியினரின் காங்கிரஸான குறுல்த்தாய் செங்கிஸ்கானால் பரிந்துரைக்கப்பட்ட ஒக்தாயி கானை அரியணையில் அமர வைத்தது. ஒக்தாயி கான் ஒர்கோன் ஆற்றின் கரையில் மங்கோலியப் பேரரசின் தலைநகராக கரகோரத்தை அமைத்தார். கரகோரமானது 1220 ஆம் ஆண்டிலிருந்தே செங்கிஸ்கானின் ராணுவ இடமாக இருந்து வந்தது. கரகோரம் நகரத்தில் 12 புத்த மதக் கோயில்கள், இரண்டு இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மற்றும் ஒரு கிறித்தவ தேவாலயம் இருந்தது, மங்கோலியர்கள் அனைத்து சமயங்களுடனும் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டனர் என்பதை நமக்கு காட்டுகிறது. நகரத்தின் கட்டுமானம் செங்கிஸ்கானின் கடைசி தம்பியான தெமுகேவின் மேற்பார்வையில் நடைபெற்றது. ஒக்தாயி கான் யாம் என்று அழைக்கப்பட்ட திறமையான தபால் அமைப்பை நன்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களுடன் ஏற்படுத்தினார். இந்த அமைப்பானது முழு பேரரசின் பல்வேறு பகுதிகளையும் இணைத்தது. ஒக்தாயி கான் தனது தந்தையின் காலத்தில் வெல்லப்பட்ட நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். கொரியாவில் ஏற்பட்ட ஒரு கிளர்ச்சியை கட்டுக்குள் கொண்டுவர தானே ஒரு ராணுவத்தை அணிவகுத்துச் சென்றார்.

கரகோரத்தின் வெள்ளி மரம் (நவீன கால மாதிரி)

1231–1234 ஆம் ஆண்டுகளில் ஒக்தாயி கான் ஜின் அரசமரபின் மீதான மங்கோலிய படையெடுப்பை முடித்தார். இவர் சூச்சியின் மகனான படுவின் தலைமையில் இளவரசர்களை மேற்கு நோக்கி அனுப்பினார். அவர்கள் வோல்கா ஆற்றின் கரையில் இருந்த பல்கேரிய ராஜ்யம் மற்றும் ருஸ்ஸின் 14 சமஸ்தானங்களை 1236–1240 ஆம் ஆண்டுகளில் வென்றனர். 1241–1242 ஆம் ஆண்டுகளில் அவர்கள் போலந்து சமஸ்தானங்கள், ஹங்கேரி ராஜ்ஜியம், மோராவியா (புனித உரோமைப் பேரரசின் பகுதி) மற்றும் மோல்டாவியா ஆகிய பகுதிகளின் மீது படையெடுத்தனர். ஏட்ரியாட்டிக் கடலை நோக்கி முன்னேறினர்.

16 வருட ஆட்சிக்குப் பிறகு 1241 இல் ஒக்தாயி சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்தார். சூச்சி மற்றும் டொலுயின் வழித்தோன்றல்கள் ஒரு பக்கமும் சகடை மற்றும் ஒக்தாயியின் வழித்தோன்றல்கள் மறுபக்கமும் இருந்து அரியணைக்காக போட்டியிட்டனர். 1246 இல் நடைபெற்ற குறுல்த்தாய் ஒக்தாயி கானின் மகனான குயுக்கை பெரிய கானாக தேர்ந்தெடுத்தது. குயுக் 1248 ஆம் ஆண்டு இறந்தார்.

இத்தாலிய பயணியான ஜியோவானி டா பியன் டெல் கார்பைன் 1246 ஆம் ஆண்டு மங்கோலியாவிற்கு வந்தார். பிற்காலத்தில் அவர் நாம் டார்டர்கள் என்று அழைக்கும் மங்கோலியர்களின் வரலாறு என்ற நூலை எழுதினார். 1251 ஆம் ஆண்டில் நடைபெற்ற குறுல்த்தாயை சூச்சி-டொலுய் வழித்தோன்றல்களின் அணியானது வென்றது‌. டொலுயின் மகனாகிய மோங்கே பெரிய கானாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மோங்கே கான் தனது தம்பியான ஹுலாகுவை ஈரானை வெல்வதற்காக அனுப்பினார். ஹுலாகு 1256 இல் ஈரானை வென்றார். 1257–1259 ஆம் ஆண்டுகளில் பாக்தாத், காக்கேசியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளை வென்றார். பிளாண்டர்சு பகுதியைச் சேர்ந்த ரூப்ரக்கின் வில்லியம் 1254 ஆம் ஆண்டு மங்கோலியாவை அடைந்தார். அவர் தனது பயணத்தை ஒரு நூலாக எழுதினார்.

மோங்கே கான் 1259 ஆம் ஆண்டு இறந்தார். அவருக்கு மகன்கள் இல்லை. 1260 ஆம் ஆண்டில் நடைபெற்ற குறுல்த்தாய் மோங்கேவின் தம்பியான அரிக் போகேவை பெரிய கானாக தேர்ந்தெடுத்தது. அதே வருடத்தில் சாங் அரசமரபை வெல்வதற்காக சீனாவில் போரிட்டுக் கொண்டிருந்த மோங்கேவின் மூத்த தம்பியான குப்லாய் சங்டு (அல்லது கைபிங்) நகரில் தான்தான் பெரிய கான் என்று அறிவித்துக் கொண்டார். 1261 ஆம் ஆண்டு முதல் 1264 ஆம் ஆண்டு வரை இரண்டு சகோதரர்களுக்கு இடையில் டொலுய் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. இறுதியாக அரிக் போகே சரணடைந்தார்.

உசாத்துணை[தொகு]

  1. Janhunen, Juha (2014). Mongolian. Amsterdam: John Benjamins. பக். 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789027238252. 

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
History of Mongolia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கோலியாவின்_வரலாறு&oldid=3517442" இலிருந்து மீள்விக்கப்பட்டது