உள்ளடக்கத்துக்குச் செல்

கிறித்தவத் தேவாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தேவாலயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வத்திக்கான் நகரின் புனித பேதுரு பேராலயம்

கிறித்தவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் வழிபாடு நடத்துவதற்காகக் கூடும் இடம் தேவாலயம் அல்லது கோவில் (சர்ச்) என்று அழைக்கப்படுகிறது. கத்தோலிக்க கிறித்தவர்களின் கோவில் "மாதா கோவில்" என்றும் மக்கள் வழக்கில் கூறப்படுவதுண்டு. பெரும் எண்ணிக்கையிலான கத்தோலிக்க கோவில்கள் இயேசுவின் அன்னையாகிய மரியாவின் பெயரால் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதும் இதற்கு ஒரு காரணம் ஆகும். இத்தேவாலயத்தில் தனித்தனி கிறித்தவ சபைக்குத் தலைமைதாங்கும் குரு அல்லது சபைத் தலைவர் திருப்பலி, நற்கருணைக் கொண்டாட்டம், விவிலியக் கொண்டாட்டம் போன்ற சமயச் சடங்குகளை முன்னின்று நடத்துவார். அவரைத் தொடர்ந்து அவரின் ஆலோசனைப்படி, கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் வழிபாடுகளைச் செய்கின்றனர். பல தேவாலயங்கள் சிலுவை உருவில் வடிவமைக்கப்படுகின்றன. கோபுரம் அல்லது கும்மட்டம் உடையதாக இருக்கின்றன. கிறித்தவ சமயத்தின் முன்னோடி போல் அமைந்த யூத மதத்தில் "தொழுகைக் கூடம்" (synagogue) உண்டு. யூத வழக்கத்தைப் பின்பற்றி கிறித்தவர்களும் வழிபாட்டுக்கென தனியே தேவாலயங்கள் கட்டத் தொடங்கினர். ஐரோப்பாவில் கிறித்தவம் முதன்மையான மதமான பின்னர் பெரும் எண்ணிக்கையிலும் அளவிலும் தேவாலயங்களை அமைப்பது வழக்கமானது.

தேவாலய கட்டிடங்களின் வரலாறு

[தொகு]
புனித சீமோன் சிடைலைட்டு, அலெப்போ, சிரியா. உலகிலேயே மிகப்பழைய கிறுத்தவ ஆலயம்

ஆதிகிறித்தவர்கள் இயேசு கிறிஸ்து போலவே எருசலேம் கோவிலில் வழிபாடும், தொழுகைக்கூடங்களில் இறைவேண்டலும் செய்துவந்தனர். கோவிலில் வழிபாட்டில் யாவே கடவுளுக்கு பலிசெலுத்துவதும், பாவப்பரிகாரம் செய்வதும் வழக்கமானதாகும். புதிய ஏற்பாட்டில் இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் முதலாக பல இடங்களில் இயேசு கோவிலுக்கு செல்வதாக அமைந்துள்ளது. இவ்வாலயமானது உரோமையர்களால் இடிக்கப்பட்டபின்னர் வீடுகளிலும் கல்லரைகளிலும் கிறித்தவர்கள் வழிபாடு நடத்தினர். உரோமை பேரரசால் கிறித்தவம் அங்கிகரிக்கப்பட்ட பின்பு, பேகன் கோயில்கள் பல கிறித்தவ ஆலயங்களாக்கப்பட்டன. கி.பி 235 முதல் திருமுழுக்கு வழங்க தனி இடங்கள் தேவாலயங்களில் அமைக்கப்பட்டன.

மத்தியகாலத்தில் மிகப்பெரும் கோவில்கள் கட்டுவது அரசனுடைய வெற்றியையும் அவனின் செல்வத்தையும் குறிப்பதாக இருந்தது. பல்வேறு காலகட்டத்தின் சூழ்நிலைக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்ப கோவில்களின் வடிவமைப்பு மாற்றமடைந்துள்ளது. துவக்க காலத்தில் சிலுவை வடிவிலும், கிழக்கை நோக்கியுமே கோவில்கள் அமைந்தன. இயேசுவின் இரண்டாம் வருகையின்போது அவர் கிழக்கில் வருவார் என்னும் நம்பிக்கைக்காகவே இது நிகழ்ந்தது. கோவில்கள் மிக அழகானதாகவும், ஒரு ஊரின் மிக உயரியக்கட்டிடமாகவும் இருந்து வந்தது. அரசனின் மாளிகை கூட கோவிலை விடத் தாழ்ந்தே இருக்கும். அரசர்களும் மக்கள் பலரும் கோவில்களைக்கட்ட நற்கருணையின்மீது அவர்களுக்கு இருந்த நம்பிக்கையே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. கிறித்தவச் சீர்திருத்த இயக்த்திற்கு பின் கோவில்கள் விசுவாசிகள் கூடும் இடமாக மட்டும் பார்க்கப்பட்டதால், அதன் கலை மற்றும் அழகு தேவையற்றதாக அமைந்தது.

தேவாலய வகைகள்

[தொகு]

சிற்றாலயம்

[தொகு]

சிற்றாலயம் (Chapel) எனப்படுவது, ஒரு தனிபட்ட நபரோ (எ.கா.: அரசர்கள், ஆயர்கள்...) அல்லது குழுமமோ (துறவற சபைகள், மடங்கள், பள்ளிகள்..) வழிபட, பயன்படுத்தும் ஆலயம். பெரியதொரு கோவிலின் உள்ளே அமைக்கப்படுகின்ற சிறுகோவில்களும் இப்பெயரால் அழைக்கப்படுவதுண்டு. உதாரணமாக, உலகப் புகழ் பெற்ற மைக்கலாஞ்சலோவின் சுவர் ஓவியங்களைக் கொண்டுள்ள வத்திக்கான் கோவில் "சிஸ்டைன் சிற்றாலயம்" (Sistine Chapel) ஆகும்.

ஆலயம்

[தொகு]

ஆலயம் (Church) என்னும் பொதுப்பெயரால், ஒரு பங்கிலோ கிளைப்பங்கிலோ வாழ்கின்ற கிறித்தவ மக்கள் வழிபாட்டுக்காகக் கூடிவருகின்ற தொழுகை இடம், குறிக்கப்படுகிறது.

பேராலயம்

[தொகு]

பேராலயம் அல்லது பெருங்கோவில் (Basilica (பசிலிக்கா)) எனப்படுவது முற்கால உரோமை நகரில் கட்டப்பட்ட பொது கட்டிடங்களைக் குறிக்கப் பயன்பட்டது. கிரேக்க மொழியில் அதன் பொருள், "அரச உறைவிடம்" ஆகும். ஆனால் காலப்போக்கில் "பசிலிக்கா" என்னும் சொல் முக்கிய கிறித்தவ கோவில்களைக் குறிக்கப் பயன்பட்டது. திருத்தந்தை என்று அழைக்கப்படுகின்ற பாப்பரசர் ஆலயங்களை பேராலயங்களாக உயர்த்த முடியும். இது உயர் பேராலயம் (Major Basilica) மற்றும் இளம் பேராலயம் (Minor Basilica) என இரு வகைப்படும். உலகிலேயே நான்கு உயர் பேராலயங்களே உள்ளன. அந்த நான்கு பேராலயங்களும் உரோமை நகரில் உள்ளன. ஆகவே இளம் பேராலயங்களை, "பேராலயம்" என்று கூறும் வழக்கம் எழுந்தது.

உரோமையில் அமைந்துள்ள உயர் பேராலயங்கள் இவை:

திருத்தலம்

[தொகு]

திருத்தலம் (Shrine) எனப்படுவது அதிக அளவில் அற்புதங்கள் நடைபெறுவதாக மக்களால் சுட்டிக்காட்டப்பட்டு, மக்கள் அதிக அளவில் கூடும் கிறித்தவ ஆலயம் ஆகும். கத்தோலிக்கத் திருச்சபையின் 'ஆயர்' எவரும், தனது மறைமாவட்டத்திற்கு உட்பட்ட ஓர் ஆலயத்தைத் திருத்தலமாக உயர்த்த முடியும்.

மறைமாவட்டப் பேராலயம் (கதீட்ரல்)

[தொகு]
திருத்தந்தையின் கதீட்ரலான இலாத்தரன் பேராலயத்தில் உள்ள திருத்தந்தையின் அரியணை (Cathedra)

கத்தோலிக்கத் திருச்சபையின் ஆளுகைப் பகுதியான மறைமாவட்டத்திற்கு தலைவராக விளங்கும் ஆயரின் ஆட்சிப் பீடமாக இருக்கும் தலைமை ஆலயமே பீடாலயம் அல்லது கதீட்ரல் என்று அழைக்கப்படுகிறது. பழைய வழக்கில் இதனை மேற்றிராசனம் (மேற்றிராணியார்+ஆசனம்) என அழைப்பர். இதை மறைமாவட்டப் பேராலயம் என்று அதிகாரப்பூர்வ ஏடுகளில் அழைகின்றனர்.[1] இவ்வாலயம் மறைமாவட்டத்தின் தாய்க்கோவிலும் ஆகும். ஒரு மறைமாவட்டத்தில் பேராலயங்கள் (Basilica) வேறு இருந்தால், கதீட்ரலை முதன்மைப் பேராலயம் என அழைப்பர். ஆலயத்தகுதி வரிசையில் பேராலயமும், கதீட்ரலும் சம இடத்தைப் பெறுகின்றன. ஆயினும் கதீட்ரலுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இக்காரணத்துக்காக, பொதுவாக மறைமாவட்டப் பேராலயங்களுக்கு, தனியாக பசிலிக்கா தகுதி வழங்குவது முக்காலத்தில் இருந்தாலும், இப்போது மிக அரிதானதாகும். ஒரு மறைமாவட்டத்தில் ஒரே ஒரு முதன்மைக் கோவில் மட்டுமே இருக்கும். ஆனாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட இணை-முதன்மைக் கோவிகள் (co-cathedrals) இருக்கலாம். Cathedral என்னும் சொல் "இருக்கை" அல்லது "அரியணை" என்னும் பொருள்படும் cathedra என்னும் கிரேக்க சொல்லிலிருந்தும், அதோடு தொடர்புடைய இலத்தீன் சொல்லிலிருந்தும் வந்ததாகும். எல்லா கதீடிரல்களிலும் ஆயரின் அரியணை இருக்கும். ஆயர் கதீட்ரலிலிருந்து ஆட்சி செய்வதாகவும் கொள்ளப்படும். அக்கோவிலின் பொறுப்பாளர் மறைமாவட்ட ஆயரே ஆவர். வழக்கமாக, அப்பங்கை நேரடியாக நிர்வகிக்க ஒரு மேல்நர் (Rector) நியமிக்கப்படுவார். மேலும், ஆயரின் உறைவிடமும், மறைமாவட்டச் செயலகங்களும் மறைமாவட்ட முதன்மைக் கோவிலின் அருகே அமைந்திருப்பது வழக்கம்.

படத்தொகுப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. திருச்சபை சட்டம் 508
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறித்தவத்_தேவாலயம்&oldid=4041132" இலிருந்து மீள்விக்கப்பட்டது