கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்
இது தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும் |
கிறித்தவம் |
---|
கிறித்தவம் வலைவாசல் |
கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் (Protestant Reformation) 1517 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் தொடங்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ சமய சீர்த்திருத்த இயக்கமாகும். இதற்கான ஏதுநிலை 1517 ஆண்டுக்கு முன்னரே ஏற்பட்டிருந்தன. இது மார்டின் லூதருடன் தொடங்கி 1648 ஆம் ஆண்டின் வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தத்துடன் முடிவுற்றதாகக் கொள்ளப்படுகிறது[1][2]. இவ்வியக்கம், கத்தோலிக்கத் திருச்சபையை சீர்திருத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது. மேற்குலக கத்தோலிக்கர்கள், சிலவேளைகளில் திருத்தந்தை வரை சென்ற, கத்தோலிக்க மேலிடத்தில் நிலவிய ஒழுக்கக் கேடுகளாலும், சமயக் கோட்பாடுகளில் திரிபுகள், திணிப்புகள் செய்யப்பட்டன என்று கருதியதாலும் விரக்தியுற்றிருந்தனர். முக்கியமாக, பலன்கள் வழங்குவதில் நடந்த முறைகேடுகளினாலும், சபையின் முக்கிய பதவிகளைப் பணம் கொடுத்துப் பெறலாம் என்னும் பழக்கமும்(சீமோனி) மார்டின் லூதர் சீர்திருத்த இயக்கம் தொடங்க உடனடிக் காரணங்களாக அமைந்தன.
சீர்திருத்தத் திருச்சபையினை துவக்கத்தில் ஜான் விக்கிலிஃப், ஜேன் ஹஸ், மார்ட்டின் லூதர், ஜான் கால்வின் முதலியவர்கள் முன் நின்று நடத்தினர். கறுப்புச் சாவு, மேற்கு சமயப்பிளவு முதலியவற்றால் கிறித்தவத்தின் மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறையத்துடங்கிய நேரத்தில் இது நிகழ்ந்ததால் பலரின் ஆதரவு கிடைக்க வழிவகுத்தது. ஐரோப்பிய மறுமலர்ச்சி சிந்தனைகள் பரவ அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு பெரிதும் உதவியதும், பைசாந்தியப் பேரரசின் வீழ்ச்சியும் பிறகாரணிகளாம்.
கத்தோலிக்க மறுமலர்ச்சி என்பது இவ்வியகத்துக்கான கத்தோலிக்க திருச்சபையின் பதில் ஆகும்.[2] முதல் சீர்திருத்த திருச்சபைகள் 15ஆம் நூற்றாண்டில் தோன்றத்துவங்கின. இவற்றுள் பெரியது லூதரனியம் ஆகும். இது பெருவாரியாக செருனனியின் பால்டிக் சுகாண்டினேவியன் மக்களிடம் புகழ்பெற்றிருந்தது.
சூழல்
[தொகு]முதன் முதலில் கத்தோலிக்க திருச்சபையின் சில குருக்கள், திருச்சபையின் சில அதிகாரிகள் செய்த செயல்களை கண்டிக்கத் துவங்கப்பட்டது சீர்திருத்த இயக்கம் ஆகும்.[3] முதன் முதலில் பலன்களைக் குறித்து மார்ட்டின் லூதர் கேள்வி எழுப்பினார். ஆதலால் அவர் 3 ஜனவரி 1521 திருச்சபையிலிருந்து விலக்கப்பட்டார். இதுவே கிறித்தவச் சீர்திருத்த இயக்கம் துவங்கப்பட முக்கிய காரணமாகும்.[4] லூதருக்கு முன்பே ஜான் விக்லிஃப் மற்றும் ஜேன் கஸ் என்பவர்கள் திருச்சபையினை சீர்திருத்த முயன்றனர் என்பது குறிக்கத்தக்கது.
31 அக்டோபர் 1517இல் விடென்பெர்க், சேக்சோனியில் துவங்கியது இவ்வியக்கம். சகல ஆன்மாக்களின் ஆலயத்தின் கதவில் மார்டின் லூதர் தனது 95 கோரிக்கைகளை ஆணி கொண்டு அடித்தார்.[5] இவற்றில் திருச்சபையையும், அதன் மேல் திருத்தந்தைக்கு உள்ள அதிகாரத்தையும் பலன்கள் விற்பனையையும், உத்தரிப்பு நிலைக்குறித்த திருச்சபையுன் போதனைகளையும் அவர் கண்டித்து இருந்தார். 1517-1521க்கு இடைப்பட்ட காலத்தில் இவர் மரியாள் குறித்த கத்தோலிக்க நம்பிக்கை, புனிதர்களின் பரிந்துரை மன்றாட்டுகள், அருட்சாதனங்களின் நிலை, துறவு நிலை, கற்பு நிலை, சமயம் சார்ந்தவற்றில் அரசியல் குறுக்கீடுகள் போன்றவற்றை எதிர்க்கத் தொடங்கினார். இவர் அகுஸ்தீன் சபை குருவாக இருந்ததால் ஹிப்போவின் அகஸ்டீனுடைய படிப்பினைகள் பலவற்றிற்கு புது விளக்கம் அளித்தார்.
இவ்வியக்கத்தை துவங்கியவர்கள் பலர் தங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாட்டால் பிரிந்து போகத்துவங்கினர். முதலில் லூதரும் சுங்லியும், பின்னர் லூதரும் கால்வினும் என ஒருவர் மற்றவருக்கு எதிராக பல திருச்சபைகளை நிறுவினர்.[6] ஆங்கிலிக்கம் இங்கிலாந்தில் எட்டாம் ஹென்றி மறுமணம் புரிய திருத்தந்தை அனுமதிக்காததால் தனது தலைமையில் புதிய சபையொன்றை துவங்கினார். இவையனைத்தும் கத்தோலிக்க மறுமலர்ச்சி விரைவாக நடைபெற தூண்டுகோலாய் இருந்தன.
கிறித்தவச் சீர்திருத்த இயக்கமும் அச்சு இயந்திரமும் மக்களுக்கு அளிக்கப்பட்ட கல்வியின் பயனாக பலர் கருதுகின்றனர்.[2]. 1534இல் லூதர் வெளியிட்ட செருமனிய விவிலியம் பாமர செருமானியரும் புரிந்துகொள்ளும் வகையில் இருந்ததது அவரின் இயக்கத்திற்கு பெரிதும் உதவியது.[7]
சமய சீர்திருத்தத்திற்கான காரணங்கள்
[தொகு]போப்பாண்டவரின் தலைமையின்கீழ் செயல்பட்டுவந்த கிறிஸ்துவ திருச்சபையானது தொடக்கத்தில் மக்களின் நம்பிக்கையையும் மதிப்பையும் பெற்று விளங்கியது. இடைக்காலத்தில் உருவாக்கப்பட்ட நிலமானிய முறையில் திருச்சபையானது ஒரு நிலமானிய நிறுவனமாக வளர்ந்து, எண்ணற்ற நிலத்தையும் வளத்தையும் கொண்டு காணப்பட்டது. அதேவேளையில், போப்பாண்டவர்கள் அரசியல் செல்வாக்குகள் அதிகம் பெற்று, அரசியல் நடவடிக்கைகளில் தலையீடு செய்தனர். மேலும், தங்களது ஆன்மீகப் பணியையும் புறக்கணித்து வந்தனர். குருமார்களுடன் சேர்ந்து ஆடம்பர வாழ்க்கையில் தம் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினர். கி. பி. பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஆறாம் அலெக்சாண்டர், இரண்டாம் ஜூலியஸ், பத்தாம் லியோ முதலான போப்பாண்டவர்கள் திருச்சபையின் மதிப்பு, கண்ணியம் ஆகியவற்றைச் சீர்குலைக்கும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மறுமலர்ச்சி இயக்கம் மக்களிடையே பெரிய அளவில் விழிப்புணர்ச்சியைத் தோற்றுவித்திருந்தது. விவிலியத்தை அவர்கள் வாசிக்கத் தொடங்கியிருந்தனர். அதன் காரணமாக, திருச்சபை மற்றும் குருமார்களின் செயற்பாடுகள் புனித நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கொள்கைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுவதை மக்கள் உணரத் தொடங்கினர். சீர்திருத்த இயக்கம் உருவாவதற்கு முன்னரே, பல்வேறு இலக்கியச் சிந்தனையாளர்கள் திருச்சபையில் காணப்பட்ட ஆடம்பர வாழ்க்கை மற்றும் மூட நம்பிக்கைகள் போன்றவற்றை எதிர்க்கத் தொடங்கியிருந்தனர்.[8]
சீர்திருத்தவாதிகளின் நிலை
[தொகு]ஆங்கிலேயரான ஜான் வைகிளிப் (1330 - 1384) என்னும் சிந்தனையாளர் போப்பாண்டவரின் அதிகாரத்தையும் பிற குறைபாடுகளையும் விமர்சனம் செய்தார். மேலும், விவிலியத்தை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதனால், இவர் சமய சீர்திருத்த இயக்கத்தின் விடிவெள்ளி எனப் போற்றப்பட்டார்.
அதுபோல், எராஸ்மஸ் (1466 - 1536) என்பவர், தன்னுடைய முட்டாள்களின் கப்பல் என்னும் புத்தகத்தில் மத குருமார்கள் கடைப்பிடித்துவந்த மூடப்பழக்கவழக்கங்களைக் கண்டித்து எழுதியிருந்தார். இந்த நூல் கி. பி. 1509 இல் பதிப்பிக்கப்பட்டது.
போஹிமியாவைச் சேர்ந்த ஜான் ஹஸ் (1369 - 1415) என்பார் திருச்சபை சீர்திருத்தத்திற்காக அரும்பாடுபட்டார். ஹஸ்சின் எழுத்துகள் திருச்சபையினரால் கடும் கண்டனத்திற்கு ஆளாகின. மேலும், அவர் திருச்சபைக்கு எதிரான குற்றங்களுக்காக உயிருடன் தீவைத்து எரிக்கப்பட்டார். இத்தகைய முன் முயற்சிகள் பதினாறாம் நூற்றாண்டு பிற்பட்ட சமய சீர்திருத்த இயக்கத்திற்கு முன்னோடியாக விளங்கின.[9]
இங்கிலாந்தில் சமய சீர்திருத்தம்
[தொகு]இங்கிலாந்து மன்னர் எட்டாம் ஹென்றி தொடக்கத்தில் மார்டின் லூதர்கிங்கிற்கு எதிரான போப்பாண்டவரை ஆதரித்து வந்தார். இதன்காரணமாக, அவர் சமயக் காவலர் எனப் போப் பத்தாம் லியோவால் போற்றப்பட்டார். இருவருக்குமான இந்த நல்லுறவு அதிக காலம் நீடிக்காமல் முறிந்துபோனது. எட்டாம் ஹென்றி அரசியை மணவிலக்கு செய்துவிட்டு, ஆன்பொலின் என்பவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். இத்திருமணத்திற்கு போப் அனுமதி அளிக்கவில்லை. இதுகுறித்து, பாராளுமன்றத்தின் உதவியை நாடினார் ஹென்றி. இவரது இந்த நடவடிக்கைக் காரணமாக, இங்கிலாந்து பாராளுமன்றம் ஆதிக்கச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. இதன்படி, மன்னர் இங்கிலாந்துத் திருச்சபைக்கும் தலைவர் என்று அறிவிக்கப்பட்டார். போப்பாண்டவரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்ட இந்த புதிய திருச்சபை ஆங்கிலிக்கத் திருச்சபை என்றழைக்கப்பட்டது. எட்டாம் ஹென்றி கத்தோலிக்கக் கோட்பாடுகளில் எந்தவித முக்கியமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆறாம் எட்வர்டு ஆட்சிக் காலத்தில்தான், இத்திருச்சபை புரோட்டஸ்டன்ட் சமயத்தைப் பின்பற்றத் தொடங்கியது. மேலும், வழிபாட்டு விதிமுறைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டன.[10]
விளைவுகள்
[தொகு]சீர்திருத்த இயக்கத்தின் விளைவாக கிறிஸ்துவ சமயத்தில் கத்தோலிக்கர்கள், புரோட்டஸ்டண்டுகள் என்று இரு பிரிவினர் உருவாயினர். இந்த வேறுபாட்டால் சமயப் பாகுபாடுகளும், ஜெர்மனி மற்றும் ஐரோப்பாவில் சமயம் சார்ந்த போர்களும் ஏற்பட்டன. விவிலியம் நூலைப் படித்து சமயக் கருத்துகளின் பயன்பாடுகளை மக்கள் உணர்ந்து கொண்டனர். புரொட்டசஸ்டண்டுகள் விவிலிய விளக்கங்களைத் தம் விருப்பம்போல் புரிந்துகொண்டனர். இதனால் சுய சிந்தனை பெருகியது. இதன்காரணமாக, கலை, இலக்கியம், அறிவியல் போன்ற துறைகள் வளரத் தொடங்கின. திருச்சபையில் மேற்கொள்ளப்பட்ட மக்களாட்சி நடைமுறைகளால் தேசிய, குடியரசு கருத்துகள் பெருகின. அதேசமயம், தங்களுக்கான திருச்சபைகளைப் பல்வேறு நாடுகள் ஏற்படுத்திக்கொண்டன. தேசியத் திருச்சபைகள் போப்பாண்டவரின் இடத்தைப் பிடித்துக் கொண்டன. புரோட்டஸ்டன்ட் மற்றும் எதிர்சமய சீர்திருத்த இயக்கம் ஆகியவற்றின் விரைவான வளர்ச்சியின் காரணமாக, திருச்சபை தூய்மைப்பட்டது. உயரிய ஒழுக்க நெறிகள் பின்பற்றப்பட்டுப் போதிக்கப்பட்டன.[11]
முடிவும் தாக்கமும்
[தொகு]முப்பதாண்டுப் போரில் (1618–1648) முடிவுற்ற ஐரோப்பிய சமயப்போர்களுக்கு இவ்வியக்கம் வழிவகுத்தது. இதனால் செருமனி தனது மக்கள் தொகையில் 25% முதல் 40% வரை இழந்திருக்கக்கூடும்.[12]
1618 முதல் 1648 வரை கத்தோலிக்க ஹாப்ஸ்பர்க் குடி செருமானிய சீர்திருத்த வாதிகளுக்கெதிராக போரில் ஈடுபட்டது. இக்குடிக்கு டென்மார்க், சுவீடன் மற்றும் பிரான்சு ஆதரவளித்தது. எசுப்பானியா, ஆசுதிரியா, செருமனியின் பெரும்பகுதி மற்றும் இத்தாலியில் ஆட்சிசெய்த இக்குடி, கத்தோலிக்கத்தின் பெரும் ஆதரவு ஆகும். பிரான்சு இவர்களுக்கு அளித்த ஆதரவை சிறிது சிறிதாக நிறுத்தியபோதும், இவர்களுக்கு எதிராக வெளிப்படையாகவே போராடியபோதும் சீர்திருத்த இயக்கத்தின் முடிவு நெருங்கிவிட்டதாக பலர் நம்பினர்.[5] இதுவே முதன் முதலாக அதன் மகளின் நம்பிக்கைக்கு எதிராக பிரான்சு அரசு செயல்பட்டது.
வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் முப்பதாண்டுப் போரினை முடிவுக்கு கொணர்ந்தது. இவ்வொப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:
- ஒவ்வொரு அரசும் தத்தம் நாட்டின் சமயத்தினை முடிவு செய்யவும்[13]
- தங்களின் சமயம் நாட்டின் சமயத்தோடு ஒத்திராதவர்கள் அந்த நாட்டில் எவ்வகை இடையூறும் இன்றி வாழவும் இது வழிவகுத்தது[13]
இது திருத்தந்தைக்கு ஐரோப்பிய அரசியலில் இருந்த செல்வாக்கை மிகவும் குறைத்தது. இதனாலேயே திருத்தந்தை பத்தாம் இன்னசெண்ட் இதனை ஏற்க மறுத்தார். ஆனாலும் கத்தோலிக்கரும், சீர்திருத்த இயக்கத்தினரும் இவ்வொப்பந்தத்தை ஏற்றனர்.[1] ஆயினும் சீர்திருத்த இயக்கம் இதனோடு முடியவில்லை, இன்னும் ஒரு நூற்றாண்டு (சுமார் 1750கள்) வரை அது நீடித்தது. இதனிடையில் சீர்திருத்த இயக்கத்தை சீர்திருத்த மேலும் பல இயக்கங்கள் உருவாகின. இவற்றுள் மொராவியம் மற்றும் மெதடிசம் குறிக்கத்தக்கன. மக்ஸ் வெபர் சீர்திருத்த இயக்கம் உலகப்போக்கில் மனிதன் வாழ வழிவகுத்ததாகக் கூறியுள்ளார்.[14] இவ்வியக்கதின் தாக்கம் அறிவொளிக் காலத்திலும் பகுத்தறிவியத்திலும் காணப்பட்டது. இது சமுதாயத்தில் சமயத்தின் பங்கினை பின்னுக்குத்தள்ளியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Simon, Edith (1966). Great Ages of Man: The Reformation. Time-Life Books. pp. pp. 120-121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0662278208.
{{cite book}}
:|pages=
has extra text (help) - ↑ 2.0 2.1 2.2 Cameron 2012.
- ↑ Thomsett 2011, ப. 156.
- ↑ Spalding 2010.
- ↑ 5.0 5.1 Simon 1966, ப. 120-121.
- ↑ Brakke & Weaver 2009, ப. 92-93.
- ↑ Mark U. Edwards, Jr., Printing, Propaganda, and Martin Luther (1994)
- ↑ வரலாறு பன்னிரண்டாம் வகுப்பு. தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - 6. 2016. pp. ப. 174.
- ↑ வரலாறு பன்னிரண்டாம் வகுப்பு. தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - 6. 2016. pp. பக். 174 - 175.
- ↑ வரலாறு பன்னிரண்டாம் வகுப்பு. தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - 6. 2016. pp. ப. 177.
- ↑ வரலாறு பன்னிரண்டாம் வகுப்பு. தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - 6. 2016. pp. ப. 179.
- ↑ "History of Europe – Demographics". Encyclopædia Britannica.
- ↑ 13.0 13.1 "The Avalon Project: Treaty of Westphalia". Archived from the original on 2006-08-13. பார்க்கப்பட்ட நாள் 2013-09-03.
- ↑ "Capitalism". Encyclopædia Britannica.