உள்ளடக்கத்துக்குச் செல்

இயேசுவின் கன்னிப்பிறப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு, - குயிலோ ரேயினி

மரியாள் கன்னியாக இருக்கும் போதே, ஆண் துணை எதுவுமின்றி, தூய ஆவியின் வல்லமையால் இயேசுவை கருத்தரித்து, ஈன்றளித்தார் என்னும் சமய நம்பிக்கை இயேசுவின் கன்னிப்பிறப்பு என்று அழைக்கப்படுகிறது.[1] கிறித்தவ சமயத்துக்கு அடிப்படையான இக்கொள்கையை இசுலாம் சமயமும் ஏற்கிறது. முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட மத்தேயு, லூக்கா நற்செய்திகள் இயேசுவின் கன்னிப்பிறப்பைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்கின்றன. தொடக்க காலம் முதலே கிறிஸ்தவர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயேசுவின் கன்னிப்பிறப்பு[2] கிறிஸ்தவத்தில் பொதுவாக பயன்படுத்தப்படும் இரண்டு நம்பிக்கை அறிக்கைகளிலும் இணைக்கப்பட்டுள்ளது.

லூக்கா நற்செய்தி

[தொகு]

லூக்கா நற்செய்தியில் இயேசுவின் கன்னிப்பிறப்பைக் குறித்த முன்னறிவிப்பு[3] பின்வருமாறு விவரிக்கப்படுகிறது:

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரை, கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார். வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார். பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார். (லூக்கா 1:26-38)

மத்தேயு நற்செய்தி

[தொகு]

மத்தேயு நற்செய்தியில் இயேசுவின் கன்னிப்பிறப்பை பற்றிய விளக்கம்[4] பின்வருமாறு வழங்கப்படுகிறது:

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார். "இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்"[5] என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். (மத்தேயு 1:18-24)

நம்பிக்கையில்

[தொகு]

மேலே தரப்பட்டுள்ள நற்செய்தி குறிப்புகளின்படியும், தொடக்க காலம் முதல் மரபு வழியாக வந்த கிறிஸ்தவ விசுவாசத்தின்படியும், "தந்தையாகிய கடவுளின் ஒரே மகன், கன்னி மரியாவின் வயிற்றில் தூய ஆவியின் வல்லமையால் கருவாகி மனிதரானார்" என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை ஆகும். இது நம்பிக்கை அறிக்கைகளிலும் விசுவாசத்தின் மையமாக இடம்பெற்றுள்ளது.

நிசேயா நம்பிக்கை அறிக்கை இயேசுவின் கன்னிப்பிறப்பை பின்வருமாறு அறிக்கையிடுகிறது:

"தந்தையிடமிருந்து கடவுளின் ஒரே மகனாக தோன்றிய ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறோம். இவர் காலங்களுக்கு முன்பே தந்தையிடமிருந்து தோன்றினார். இவர் வழியாகவே அனைத்தும் படைக்கப்பட்டன; மானிடரான நமக்காகவும், நமது மீட்புக்காகவும் இறங்கி வந்து, உடல் எடுத்து மனிதரானார். மானிடரான நமக்காகவும், நமது மீட்புக்காகவும் விண்ணகத்திலிருந்து இறங்கினார்; தூய ஆவியினால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்."

திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பை பின்வருமாறு அறிக்கையிடுகிறது:

"விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறேன். இவர் தூய ஆவியாரால் கருவாகி தூய கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்."

கடவுளும் மனிதருமான இயேசு

[தொகு]

இயேசு உண்மையிலேயே மனிதர் என்னும் உண்மை அவர் மரியா என்னும் பெண்ணின் வயிற்றில் கருவாகிப் பிறந்தார் என்பதிலிருந்து தெரிகிறது. அதே நேரத்தில், இயேசு உண்மையாகவே கடவுள் என்னும் உண்மை அவர் தூய ஆவியின் வல்லமையால், கடவுளின் நேரடியான செயல்பாட்டின் பயனாக மரியாவின் உதரத்தில் கருவாகி இவ்வுலகில் பிறந்தார் என்பதிலிருந்து தெரிகிறது. எனவே இயேசு உண்மையிலேயே "இம்மானுவேல்" ஆவார்:


ஆதாரங்கள்

[தொகு]
  1. "Virgin Birth of Christ" New Advent
  2. "Virgin Birth" britannica.com Retrieved October 22, 2007.
  3. லூக்கா 1:26-38
  4. மத்தேயு 1:18-24
  5. எசாயா 7:14 "இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்."