கிறித்தவக் குறியீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலுவை

கிறித்தவக் குறியீடு (Christian symbolism) என்பது கிறித்தவ சமயத்தில் உள்ள தொல் உருவகம், செயல், கலைப் பொருள், நிகழ்வு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுகின்ற அடையாளங்களின் பயன்பாடு ஆகும். பொருள்கள், செயல்கள் போன்றவற்றிற்கு கிறித்தவ கருத்துகளின் அடிப்படையிலான உட்பொருளை கிறித்தவக் குறியீடு இணைத்துக் காட்டுகிறது.

தொடக்க காலக் கிறித்தவத்தில் பயன்பட்ட குறியீடுகள் உட்குழுவினருக்கும், தீட்சை பெற்றவர்களுக்குமே புரியும் வகையில் இருந்தன.[1] நான்காம் நூற்றாண்டில் கிறித்தவம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமயமாக மாறியதிலிருந்து, பொதுவாக எல்லாராலும் புரிந்துகொள்ளும் விதத்தில் கிறித்தவக் குறியீடுகள் அமைந்தன. கிறித்தவத்தில் வழங்கும் பல குறியீடுகள் சூழமை கலாச்சாரங்களிலிருந்தும், பிற சமயங்களிலிருந்தும் பெறப்பட்டவை ஆகும்.[2]

பொதுவாக, கிறித்தவம் சமயக் கருத்துகளையும் உண்மைகளையும் கலை வடிவில் வெளிப்படுத்துவதற்குத் தயங்கியதில்லை. மாறாக, யூத சமயத்தில் சிலை வழிபாடு கூடாது என்னும் விவிலியக் கட்டளையைப் பின்பற்றி, கடவுளையோ சமயக் கருத்துகளையோ எவ்வகையிலும் கலை முறையில் வெளிப்படுத்துவது தவறு எனக் கருதப்பட்டது. பிசான்சியப் பகுதியிலும் நடுக் காலத்தில் கிறித்தவக் கலை வடிவத்திற்கு எதிர்ப்பு இருந்தது. புரட்டஸ்தாந்து சபைகள் சிலவும் இவ்வாறே கருதிவந்துள்ளன.

தொடக்க காலக் கிறித்தவத்தின் குறியீடுகள்[தொகு]

சிலுவையும், பாடுபட்ட சுருபமும்[தொகு]

சிலுவையில் தொங்குகின்ற இயேசு - "பாடுபட்ட சுருபம்". இயேசுவின் உடலைத் தாங்குகின்ற சிலுவை என்னும் குறியீடு கத்தோலிக்கம், கீழை மரபுவழி திருச்சபை, லூதரன் சபை, ஆங்கிலிக்கம் போன்ற கிறித்தவ சபைகளில் பயன்பாட்டில் உள்ளது. சில புரட்டஸ்தாந்து சபைகள் இயேசுவின் உருவம் இல்லாத வெறும் சிலுவையைப் பயன்படுத்துகின்றன.

சிலுவை என்னும் குறியீடு இன்று உலகெங்கும் பரவலாக அறியப்பட்ட சமயக் குறியீடாக, கிறித்தவத்தின் அடையாளமாக உள்ளது. இவ்வாறே திருச்சபையின் தொடக்க காலத்திலிருந்து இருந்தும் வந்துள்ளது.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் மினூசியுசு ஃபேலிக்சு (Minucius Felix) எழுதிய ஒரு நூலில் ஒரு கிறித்தவர் தமது சமய நம்பிக்கை குறித்து தன்விளக்கம் அளிக்கும் போது சிலுவை என்னும் குறியீடு கிறித்தவர்களுக்குப் பொருள்வாய்ந்ததாக உளதை எடுத்துக் கூறுகிறார்.[3][4]

கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிலுவை என்னும் அடையாளம் கிறித்தவ நம்பிக்கையோடு எவ்வளவு நெருக்கமாக இணைந்துவிட்டிருந்தது என்றால், புனித அலெக்சாந்திரியா கிளமெந்து என்னும் கிறித்தவ எழுத்தாளர் சிலுவையை "ஆண்டவரின் சின்னம்" (the Lord's sign - τὸ κυριακὸν σημεῖον) என்றே குறிப்பிடுகின்றார்.

அதற்கு முன்னரே, "பர்னபாசின் திருமுகம்" என்னும் நூலில் ஒரு குறிப்பு வருகிறது. அதாவது, பழைய ஏற்பாட்டு தொடக்க நூல் 14:4இல் ஆபிராம் 318 ஆள்களைச் சேர்த்து ஒரு படையை உருவாக்கினார் என்று வருகிறது. அதில் குறிக்கப்படுகின்ற 318 என்னும் எண் இயேசு பிற்காலத்தில் உயிர்துறந்த சிலுவையை அடையாளமாகக் குறித்தது என்னும் கருத்து கூறப்படுகிறது. கிரேக்க எண்வரிசையில் 318 என்னும் எண் "ΤΙΗ" என வரும். அதில் முதல் எழுத்தாகிய "T" என்பது சிலுவையின் நேர்த்துண்டைக் குறிக்கிறது. அந்த எண் "300"; "IH" என்னும் இரு எழுத்துக்களும் "இயேசு" என்னும் பெயரின் முதல் இரு எழுத்துகளாக கிரேக்கத்தில் வரும் (ΙΗΣΟΥΣ). அவை "18" என்னும் எண்ணைக் குறிக்கும். இவ்வாறு, பழைய ஏற்பாட்டிலேயே "இயேசு சிலுவையில் அறையப்படுவார்" என்னும் முன்னறிவிப்பு குறிப்பாக உள்ளது என்னும் கருத்து இவண் தெரிவிக்கப்படுகிறது.[5]

பண்டைய கிறித்தவ ஆசிரியரான தெர்த்தூல்லியன் (கி.பி. 160-225) என்பவரும் கிறித்தவ மறைக்கும் சிலுவைக்கும் உள்ள தொடர்பை விவரிக்கிறார். அவர் கிறித்தவர்களை "சிலுவை பக்தர்கள்" என்று அடையாளம் காட்டுகிறார். இலத்தீனில் அவர் குறிப்பிடுகின்ற "crucis religiosi" என்னும் சொல்லாக்கத்திற்கு அதுவே பொருள் ("devotees of the Cross").[6]

மேலும், தெர்த்தூல்லியன், கிறித்தவர்கள் தம் நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்துகொண்டதைக் குறிப்பிடுகிறார்.[7]

சிலுவை என்னும் குறியீடு மிகப் பழங்காலத்திலிருந்தே கிறித்தவத்தோடு தொடர்புபடுத்தப்பட்டது. ஆனால் இயேசு தொங்கி இறந்ததாகக் காட்டப்படுகின்ற "பாடுபட்ட சுருபம்" (Crucifix) ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே கிறித்தவ குறியீடாகப் பயன்படத் தொடங்கியதாகத் தெரிகிறது.[8]

மீன் அடையாளம்[தொகு]

பண்டைய கிறித்தவர்கள் பயன்படுத்திய சமயக் குறியீடுகளுள் "மீன்" குறியீடு முதன்மையான சிறப்பிடம் வகித்ததாகத் தெரிகிறது. "மீன்" குறியீடு கிறித்தவர் நடுவே சிறப்பிடம் பெற்ற வரலாறு சுவையானது. கிரேக்க மொழியில் "மீன்" என்பதற்கு இணையான சொல் "இக்துஸ்" என்பதாகும். அது உரோமை எழுத்தில் "ichthys" எனவும் கிரேக்க பெரிய எழுத்தில் "ἸΧΘΥΣ" எனவும் தோற்றம் தரும். இச்சொல்லானது இயேசு கிறித்துவின் இயல்பைக் குறிப்பிடுகின்ற ஐந்து சொற்களின் முதல் எழுத்துகளைச் சேர்த்துக் கூட்டும்போது உருவாகும். அது கீழ்வருமாறு:

= Ἰησοῦς = Iēsous = இயேசு
Χ = Χριστός = Christos = கிறிஸ்து
Θ = Θεοῦ = Theou = கடவுளின்
Υ = Υἱός = Huios = மகன்
Σ = Σωτήρ = Sōtēr = மீட்பர்
எனவே, "மீன்" குறியீட்டு (ichthys) சொல்லின் ஐந்து கிரேக்க எழுத்துகளை முறையே முதலெழுத்தாகக் கொண்டு உருவாக்கப்படுகின்ற ஐந்து சொற்களும் இவ்வாறு பொருள்தரும்: இயேசு கிறித்து கடவுளின் மகன், மீட்பர்.[9]

இந்த விளக்கத்தைப் புனித அகுஸ்தீனார் எழுதிய "கடவுளின் நகரம்" (The City of God) என்னும் நூலிலும் காணலாம்.[10]அகுஸ்தீன் மேலதிகமாக ஒரு விளக்கத்தையும் தருகிறார். அதாவது, "இயேசு கிறித்து கடவுளின் மகன், மீட்பர்" என்னும் பொருள்தருகின்ற கிரேக்கச் சொற்றொடராகிய Ίησοῦς Χρειστός Θεοῦ Υἱός Σωτήρ 27 எழுத்துகள் வருகின்றன. அவை மூன்றை மூன்றால் பெருக்கி, மீண்டும் மூன்றால் பெருக்கும்போது கிடைக்கும் மொத்தம். மூன்று என்னும் எண் முழுமையைக் குறிக்கும். மூன்றை மூன்றால் பெருக்கி, மீண்டும் மூன்றால் பெருக்குவது கடவுளின் வல்லமையைக் குறிக்கும். இவ்வாறு எனத் தோன்றும் மீன் அடையாளம் கிறித்தவக் குறியீடாக, இயேசு கிறித்துவின் இயல்பை விளக்குவதாயிற்று.

ஆல்ஃபா - ஓமெகா அடையாளம்[தொகு]

விவிலியத்தின் இறுதி நூலான "திருவெளிப்பாடு" என்னும் ஏட்டில் இயேசு தம்மைத் தாமே கடவுள் நிலையில் நிறுத்தி, "முதலும் இறுதியும்" என அறிமுகம் செய்கிறார்.

"அகரமும் னகரமும், முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே" (திருவெளிப்பாடு 22:13

திருவெளிப்பாடு நூலில் 1:8 மற்றும் 21:6 பகுதிகளும் இதோடு தொடர்புடையன.

கிரேக்க எழுத்து வரிசையில் முதல் எழுத்து "ஆல்ஃபா" (Alpha), இறுதி எழுத்து "ஓமெகா" (omega) என்பன. அந்த முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் முறையே α அல்லது Α, ω or Ω என்று தோற்றமளிக்கும். இந்த இரு எழுத்துகளையும் என்று குறிப்பிட்டு இயேசுவைச் சுட்டும் குறியீடாக கிறித்தவர்கள் பயன்படுத்தினர்.

சிலுவைக் குறியீடு[தொகு]

சிலுவைக் குறியீடு கிரேக்கத்தில் ஸ்தவுரோகிராம் (Staurogram) என்று அழைக்கப்படுகிறது. அதன் பொருள்: "சிலுவை (என்னும்) அடையாளம்". Stauros "(ΣTAΥPOΣ) என்னும் சொல் "சிலுவை" என்று பொருள்தரும்.

இக்குறியீட்டில் இரண்டு கிரேக்க எழுத்துகள் இணைத்துக் காட்டப்படுகின்றன. அவை Tau-Rho என்பவை. இதிலிருந்து இக்குறியீட்டை "டாவு-ரோ" (Tau-Rho) என்றும் குறிப்பிடுவதுண்டு. ஏனென்றால் Rho (Ρ அல்லது ρ)என்னும் எழுத்தின் மீது Tau (Τ அல்லது τ)என்னும் எழுத்து பதிந்தால் அக்குறியீடு தோன்றும்.

இயேசு கிறித்துவைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட இச்சுருக்கக் குறியீடு கிறித்தவத்தின் தொடக்கத்திலேயே காணக்கிடக்கிறது. பழைய கிரேக்க ஏட்டுச் சுவடித் துண்டுகளான பைப்பரசு 66 (P66), பைப்பரசு 45 (P45), பைப்பரசு 75 (P75) ஆகியவற்றைச் சான்றாகக் காட்டலாம். அங்கே இக்குறியீடு "திருப்பெயர்" என்னும் நிலை பெறுகிறது.[11]

இக்குறியீட்டுக்கு இன்னும் ஆழமாக விளக்கங்களைத் தொடக்க காலத் திருச்சபையில் காண முடிகிறது. எடுத்துக்காட்டாக, கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த புனித எபிரேம் (Ephrem the Syrian) இக்குறியீட்டுக்கு "சிலுவை மீட்பளிக்கிறது" என்னும் விளக்கத்தைத் தருகிறார். அவ்விளக்கத்தின்படி, tau என்னும் கிரேக்க எழுத்து சிலுவைக்கு அடையாளம். Rho என்னும் எழுத்து "துணை, உதவி" எனப் பொருள்படுகின்ற "போஏதியா" (Βoηθια) என்னும் சொல்லுக்கு அடையாளம். அச்சொல்லில் வரும் எழுத்துகளின் எண்ணிக்கைப் பொருள் "100" என்னும் எண்ணைத் தரும். Rho என்னும் எழுத்தும் அதுபோலவே "100" என்னும் எண்ணைக் குறிக்கும். இவ்வாறு சிலுவைக் குறியீடு "சிலுவை மீட்பளிக்கிறது" என்னும் பொருளைத் தரும்.[11]

மேலும், tau மற்றும் rho என்னும் எழுத்துகள் தனித்தனியாகவும் கிறித்தவக் குறியீடாக பண்டைய கிறித்தவ மீபொருள் பெட்டகங்களில் பொறிக்கப்பட்டிருக்கக் காணலாம்.[12]

கிரேக்க எழுத்தாகிய Tau மீட்பின், விடுதலையின் சின்னமாகப் பழைய ஏற்பாட்டுக் காலத்திலேயே கருதப்பட்டது. எடுத்துக்காட்டாக எசேக்கியேல் 9:4 பகுதியைக் காட்டலாம்:

"பின் ஆண்டவர் அவரை நோக்கி, 'நீ எருசலேம் நகரெங்கும் சுற்றிவந்து அதனுள் செய்யப்படும் எல்லா அருவருக்கத்தக்க செயல்களுக்காகவும் பெருமூச்சு விட்டுப் புலம்பும் மனிதர்களுக்கு நெற்றியில் அடையாளம் இடு' என்றார்."

[11]

Tau என்னும் எழுத்து மற்றொரு விவிலிய பாடத்தை நினைவூட்டுகிறது. இசுரயேல் மக்களை வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு வழிநடத்திச் சென்ற மோசே ஓரிடத்தில் மக்கள் போரில் வெற்றிபெறும் பொருட்டு கடவுளிடம் வேண்டுதல் நிகழ்த்துகிறார். அப்போது அவர் எபிரேய முறைப்படி, தம் கைகளை சிலுவை வடிவில் உயர்த்தி விரித்து இறைவனை வேண்டினார்:

"மோசே தம் கையை உயர்த்தி இருக்கும்போதெல்லாம் இசுரயேலர் வெற்றியடைந்தனர்; அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர்."

[11]

மேலும் Rho என்னும் எழுத்தும் இயேசு கிறித்துவைச் சுட்டுகின்ற குறியீடு ஆனது. அதன் விளக்கம் இதோ: இயேசுவை மெசியாவாகக் கிறித்தவர்கள் கருதுகின்றனர். அந்த மெசியாவுக்கு அடையாளமாகப் பழைய ஏற்பாட்டில் இருந்தவர் ஆபிரகாம். ஆபிரகாமுக்கு 100 வயது ஆனபோது கடவுள் அவருக்கு ஈசாக்கு என்னும் மகன் பிறக்கப்போவதாக வாக்களித்தார். Rho என்னும் கிரேக்க எழுத்தின் எண்மதிப்பும் 100 தான்.[12]:158

காலப்போக்கில் இச்சிலுவைக் குறியீடு Chi Rho என்னும் குறியீட்டின் ஒரு சிறப்பு வடிவமாகக் கொள்ளப்பட்டது. அவ்வாறே ஐரோப்பாவில் கி.பி. 5-6 நூற்றாண்டுகளில் மக்களிடையே பரவியது.[13]

"கிறி" அடையாளம்[தொகு]

இக்குறியீடு கிரேக்க மொழியின் இரு பெரிய எழுத்துகளை இணைத்து, ஒன்றின்மேல் மற்றதை எழுதி உருவாகிறது. அவ்வெழுத்துக்களின் பெயர் Chi (= Χ), Rho (Ρ) ஆகும். இவ்விரு எழுத்துகளும் "கிறிஸ்து" என்னும் பெயரின் தொடக்க எழுத்துகள் ஆகும். கிரேக்கத்தில் "கிறிஸ்தோஸ்" என்பது ΧΡΙΣΤΟΣ (= Christos) "திருப்பொழிவு பெற்றவர்" என்னும் பொருளைத் தந்து, இயேசுவைக் கடவுள் திருப்பொழிவு செய்து உலக மீட்பராக அனுப்பினார் என்னும் பொருளைத் தருகிறது.

இந்தக் குறியீடு பண்டைய கிறித்தவத்தில் மிகப் பரவலாக வழக்கத்தில் இருந்தது. இக்குறியீட்டைத்தான் உரோமைப் பேரரசன் கான்ஸ்டன்டைன் தமது கொடியில் சின்னமாகப் பொறித்திருந்தார்.

"இயே" அடையாளம்[தொகு]

கிரேக்கத்தில் இயேசு என்னும் பெயரின் முதல் இரு எழுத்துகளும் அவற்றின் பெரிய வடிவில் "IH" என்று இருக்கும். சில வேளைகளில் அந்த இரு எழுத்துகளையும் ஒன்றின்மேல் ஒன்றாக அமைப்பதும் உண்டு. முதல் எழுத்தின் பெயர் "அயோட்டா", இரண்டாம் எழுத்தின் பெயர் "ஏட்டா". இந்த இரு எழுத்துகளையும் இணைத்து உருவாக்கக்படும் குறியீடு இயேசுவைக் குறித்தது. இதுவும் பண்டைக் காலத்திலிருந்தே பரவலான ஒரு குறியீடு ஆகும்.[14]இக்குறியீட்டினை புனித அலெக்சாந்திரியா கிளமெந்தும் பர்னபாசின் திருமுகமும் ஏற்கனவே விளக்கியிருந்தன.[5]

இயேசுவைக் குறிக்கும் பிற குறியீடுகளுக்கு: காண்க: கிறிஸ்து பெயராக்கம்

"இகி" அடையாளம்[தொகு]

பண்டைய கிறித்தவக் குறியீடுகளுள் இயேசு கிறித்துவின் பெயரைக் குறிக்க பயன்பட்ட ஓர் அடையாளம் கிரேக்கத்தில் இயேசு என்னும் பெயரின் முதல் எழுத்தையும், கிறித்து என்னும் பெயரின் முதல் எழுத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டது. கிரேக்க "அயோட்டா" எழுத்தின் பெரிய வடிவமும், "கி" எழுத்தின் பெரிய வடிவமும் இந்த எழுத்துகள் ஆகும். அவை "IX" என்று அமையும். இந்தக் குறியீடு "இயேசு கிறித்து" எனப் பொருள்படும்.[12]:166

இக்குறியீட்டுக்கு சற்றே விரிவான விளக்கத்தை புனித இரனேயு (St. Ireneaus) அளித்துள்ளார். கிரேக்க மொழியில் "அயோட்டா" ("I") எழுத்தின் எண் மதிப்பு 10 ஆகும். "கி" என்னும் எழுத்து XPEIΣTOΣ ("கிறிஸ்து") என்னும் எண்ணெழுத்துப் பெயரின் முதல் எழுத்தாகும். இந்த இரு எண் மதிப்புகளையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி 888 என்னும் எண் பெறப்படுகிறது. அதாவது, ((10x8)x10)+((10x8)+8) என்று கூட்டி அந்த மொத்தம் 888 என வருகிறது. அதே நேரத்தில் "இயேசு" என்னும் ஆறெழுத்து கொண்ட கிரேக்க பெயரின் வடிவம் எண் மதிப்புப்படி 888 என்னும் எண்ணைத் தரும். அந்த எண் (10+8+200+70+400+200) ஆகும்.

இவ்வாறு "இயேசு கிறித்து" என்னும் பொருள் மேற்கூறிய குறியீட்டில் இருப்பது விளக்கப்படுகிறது.[15][12]

பிற கிறித்தவ குறியீடுகள்[தொகு]

நல்ல ஆயன்[தொகு]

உரோமை, கலிஸ்து சுரங்கக் கல்லறையில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வரையப்பட்ட சுவர் ஓவியம். "இயேசு நல்ல ஆயனாக சித்தரிக்கப்பட்டுள்ளார்."

உரோமை நகரில் பண்டைய கிறித்தவ கல்லறைச் சுரங்கங்களில் காணப்படுகின்ற குறியீடுகளுள் இயேசுவைக் குறிக்கும் ஒரு பரவலான அடையாளம் "நல்ல ஆயன்" ஆகும். ஓர் ஆயன் தம் தோளின்மீது ஓர் ஆட்டினைச் சுமப்பதுபோல் அமைந்த அந்த அடையாளம் நற்செய்தியில் வருகின்ற நல்ல ஆயன் உவமையை நினைவூட்டுகிறது. காணாமற்போன ஆட்டினைத் தேடிச் சென்று கண்டுபிடிக்கும் நல்ல ஆயன் உருவகம், தவறிப்போன மனிதரைத் தேடிக் கண்டுபிடிக்கின்ற இயேசுவுக்கு உருவகமாயிற்று.

தொடக்கத்தில் ஒரு சமயக் குறியீடாக இருந்த இந்த சித்தரிப்பு, கால கட்டத்தில் இயேசுவைச் சித்தரிக்கும் தரமாக்கப்பட்ட படிமம் ஆகி, ஆயனின் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டமும், உடலைப் போர்த்துகின்ற ஆடம்பர உடையும் பெற்றது.

புறா[தொகு]

புறா என்னும் குறியீடு பண்டைக் காலத்திலிருந்தே ஒரு கிறித்தவக் குறியீடாக இருந்துவந்துள்ளது.[16]நற்செய்திக் குறிப்பின்படி, இயேசு திருமுழுக்குப் பெற்றபோது அவர்மீது புறா வடிவில் தூய ஆவி இறங்கி வந்தார் (காண்க: மத்தேயு 3:16):

"இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை வெட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார்."

இவ்வாறு தூய ஆவியின் குறியீடாக "புறா" என்னும் அடையாளம் வழக்கத்தில் வந்தது. மேலும் திருமுழுக்கைக் குறிக்கவும் புறா குறியீடானது. இன்னொரு பொருள், தூய ஆவியின் உறைவிடமான ஆன்மா இவ்வுலக வாழ்வை நீத்து விண்ணுலகு ஏகுவது புறா வடிவில் சித்தரிக்கப்பட்டது.[2]புறா வடிவில் நற்கருணைப் பேழையை அமைப்பதும் உண்டு. இது குறிப்பாக கீழைத் திருச்சபையில் வழக்கம்.

புறா குறியீட்டுக்குப் பழமையான விளக்கம் அது கிறித்துவைக் குறிக்கிறது என்பதாகும். இப்பொருளில் விளக்குவோரில் ஒருவர் புனித இரனேயு (St. Irenaeus) ஆவார். அவர் கிரேக்க எழுத்துகளின் எண் மதிப்பின் அடிப்படையில் இந்த விளக்கத்தைத் தருகிறார். அதன்படி, புறா என்பது கிரேக்கத்தில் "பெரிஸ்தேரா" (περιστερα) என்பதாகும். அச்சொல்லில் வருகின்ற எழுத்துகளின் எண்மதிப்பைக் கூட்டினால் அது 801 என வரும். அதே எண் மதிப்பு "ஆல்ஃபா", "ஓமெகா" என்னும் இரு எழுத்துகளின் எண் மதிப்பும் ஆகும். இயேசுவைக் குறிக்கின்ற குறியீடுகளுள் ஒன்று ஆல்ஃபா - ஓமெகா அடையாளம் என்பதால் "புறா" என்னும் குறியீடு இயேசுவைக் குறிப்பதாக விளக்கம் தரப்பட்டது.[17]

மேலும், பழைய ஏற்பாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது கடவுள் நோவாவையும் அவருடைய குடும்பத்தாரையும் காப்பாற்றிய போது, வெள்ளம் வற்றியதைக் குறிக்கும் வகையில் புறாவொன்று தன் அலகில் ஓர் ஒலிவக் கிளையைக் கொணர்ந்த வரலாறு உள்ளது (காண்க: தொடக்க நூல் 8:1-12). பண்டைய கிறித்தவ ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சியை இயேசுவின் வரலாற்றோடு இணைத்துப் பொருள் கூறினர். அதன்படி, புறாவொன்று ஒலிவக் கிளையைக் கொண்டுவந்து வெள்ளப் பெருக்கு முடிந்ததை அறிவித்ததுபோல, இயேசு தம் சிலுவைச் சாவின் வழியாக மனிதரை அழிவிலிருந்து காத்து மீட்பளித்தார். எனவே புறா என்னும் குறியீடு இயேசுவுக்குப் பொருத்தி உரைக்கப்பட்டது.

பிற்காலத்தில் புறா குறியீடு அமைதியைக் குறிக்கும் அடையாளமாக விளக்கப்பட்டது. ஒலிவக் கிளையை அலகில் ஏந்திவருகின்ற புறா, நோவா கதையில் வருவது போல, இன்று அமைதியைக் குறிக்கும் அடையாளமாயிற்று.

மயில்[தொகு]

பண்டைக்கால மக்கள் நம்பிக்கையின்படி, மயிலின் உடல் சாவுக்குப் பின்னும் அழிவதில்லை. எனவே அது சாகாமைக்கு குறியீடு ஆயிற்று. இந்தக் குறியீட்டைக் கிறித்தவம் தனதாக்கி, சாகாமையைக் குறிக்க பயன்படுத்தியது. பண்டைய கிறித்தவ படிமங்களில் மயில் சித்தரிக்கப்பட்டு சாகாமையைக் குறிக்கிறது.

இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்து உலகத்தாருக்கு நிலைவாழ்வு அளித்தார் என்னும் கிறித்தவ நம்பிக்கை அடிப்படையில் மயில் என்னும் குறியீடு குறிப்பாக இயேசுவின் உயிர்த்தெழுதலோடு இணைத்துப் பொருள் உரைக்கப்படுகிறது. இது குறிப்பாக கீழைத் திருச்சபையில் இன்றளவும் நிலவும் வழக்கமாகும்.[18]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. Jenner, Henry (1910). Christian Symbolism. Plymouth. p. xiv.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
 2. 2.0 2.1  Herbert Thurston (1913). "Symbolism". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
 3. ANF04. Fathers of the Third Century: Tertullian, Part Fourth; Minucius Felix; Commodian; Origen, Parts First and Second | Christian Classics Ethereal Library
 4. Minucius Felix speaks of the cross of Jesus in its familiar form, likening it to objects with a crossbeam or to a man with arms outstretched in prayer (Octavius of Minucius Felix, chapter XXIX).
 5. 5.0 5.1 Stromata, book VI, chapter XI
 6. Apology., chapter xvi. In this chapter and elsewhere in the same book, Tertullian clearly distinguishes between a cross and a stake.
 7. "At every forward step and movement, at every going in and out, when we put on our clothes and shoes, when we bathe, when we sit at table, when we light the lamps, on couch, on seat, in all the ordinary actions of daily life, we trace upon the forehead the sign" (De Corona, chapter 3)
 8. M.-M. Davy, Initiation à la Symbolique Romane. New edition. Paris: Flammarion, 1977.
 9.  Maurice Hassett (1913). "Symbolism of the Fish". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
 10. Augustine. Wikisource link to The City of God. Wikisource. XVIII, 23. 
 11. 11.0 11.1 11.2 11.3 Hutado, Larry (2006). "The staurogram in early Christian manuscripts: the earliest visual reference to the crucified Jesus?". In Kraus, Thomas (ed.). New Testament Manuscripts. Leiden: Brill. pp. 207–26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-14945-8.
 12. 12.0 12.1 12.2 12.3 Bagatti, Bellarmino (1984). The church from the circumcision: history and archaeology of the Judaeo-Christians. Studium Biblicum Franciscanum, Collectio Minor, n.2. Jerusalem.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
 13. Redknap, FirstName (1991). The Christian Celts : treasures of late Celtic Wales. Cardiff: National Museum of Wales. p. 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7200-0354-3.
 14. Hurtado, Larry (2006). The earliest Christian artifacts : manuscripts and Christian origins. William B. Eerdmans Pub. Co. pp. 114–115. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8028-2895-8.
 15. Ireneaus, Adv Haer, 1.15.2
 16.  Arthur Barnes (1913). "Dove". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
 17. Ireneaus, Adv Haer, 1.15.6
 18. "Birds, symbolic." Peter and Linda Murray, Oxford Dictionary of Christian Art (2004).

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Christian symbols
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறித்தவக்_குறியீடு&oldid=3849853" இலிருந்து மீள்விக்கப்பட்டது