திருவழிபாட்டு ஆண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவழிபாட்டு ஆண்டு அல்லது கிறித்தவ பஞ்சாங்கம் அல்லது கிறித்தவ திருவழிபாட்டுக் கால அட்டவணை என்பது ஓராண்டுக் காலச் சுழற்சியில் கிறித்தவ வழிபாடுகள் நிகழ்கின்ற முக்கிய நாள்கள், விழாக்கள், திருப்பலி உடை நிறம் மற்றும் வாசகக் குறிப்புகள் அடங்கிய அட்டவணை ஆகும்.

இவ்வட்டவணையைக் கணக்கிடும் முறையில் மேற்குத் திருச்சபைக்கும் கிழக்குத் திருச்சபைக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. இயேசுவின் உயிர்ப்பு ஞாயிறை கணக்கிடும் முறைகளில் ஏற்படும் மாற்றத்தாலேயே இவ்வேற்றுமை காணப்படுகின்றது.

கத்தோலிக்க திருச்சபையின் அட்டவணை[தொகு]

திருவழிபாட்டு ஆண்டு காலங்களின் முறைமை

இலத்தீன் வழிபாட்டு முறைக் கத்தோலிக்கத் திருச்சபையின் அட்டவணையில் திருவழிபாட்டுக் காலம் பின்வரும் வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது:

* பாஸ்கா முந்நாட்கள்

இக்காலங்களின் இயல்புக்கு ஏற்ற வகையில், இவற்றைப் பொதுக் காலம், சிறப்புக் காலங்கள் என இரண்டு வகைகளில் உள்ளடக்கலாம்.

பொதுக் காலம்[தொகு]

13-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த திருவழிபாட்டு அட்டவணை

கத்தோலிக்க திருச்சபையின் திருவழிபாட்டு ஆண்டில், பொதுக் காலம் 34 வாரங்களைக் கொண்டது. இது இயேசுவின் பணி வாழ்வையும், பொதுவான கிறிஸ்தவ மறையுண்மைகளையும் சிந்திக்கத் தூண்டும் காலமாக அமைந்துள்ளது. இதன் முதல் பகுதி தவக் காலத்திற்கு முன்னும், இரண்டாம் பகுதி பாஸ்கா காலத்திற்கு பின்னும் சிறப்பிக்கப்படுகிறது,

பொதுக் காலம் - முதல் பகுதி என்பது திருவழிபாட்டு ஆண்டின் மூன்றாவது காலம் ஆகும். இது ஆண்டவரின் திருமுழுக்கு விழாவுடன் தொடங்கி, சாம்பல் புதனுக்கு முன்தினம் முடிவடைகிறது.

பொதுக் காலம் - இரண்டாம் பகுதி என்பது பொதுக் காலம் - முதல் பகுதியின் தொடர்ச்சியும், திருவழிபாட்டு ஆண்டின் இறுதிக் காலமும் ஆகும். இது தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு அடுத்த நாள் தொடங்கி, கிறிஸ்து அரசர் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமை அன்று முடிவடைகிறது.

சிறப்புக் காலங்கள்[தொகு]

திருவழிபாட்டு ஆண்டின் பொதுக் காலம் தவிர்த்த, திருவருகைக் காலம், கிறிஸ்து பிறப்புக் காலம், தவக் காலம், பாஸ்கா காலம் ஆகியவை சிறப்புக் காலங்கள் ஆகும். இவற்றில் முதல் இரண்டு காலங்களையும் இணைத்து அமைதியின் காலம் என்றும், அடுத்த இரண்டு காலங்களையும் இணைத்து ஒப்புரவின் காலம் என்றும் அழைக்கலாம்.

அமைதியின் காலம்[தொகு]

திருவருகை காலத்தில் ஆண்டவரின் வருகையை எதிர்பார்க்கும் கிறிஸ்தவர்கள், கிறிஸ்து பிறப்புக் காலத்தில் இயேசுவின் வருகையில் மகிழ்ச்சியையும், அவர் உலகிற்கு கொண்டு வந்த அமைதியையும் பெறுகின்றனர். எனவே, இது அமைதியின் காலம் ஆகும்.

திருவருகைக் காலம் என்பது திருவழிபாட்டு ஆண்டின் முதல் காலம் ஆகும். இயேசுவின் முதலாம் வருகையைக் கொண்டாடுவதற்கும், அவரது இரண்டாம் வருகையை எதிர்நோக்குவதற்கும் உரிய தயாரிப்பு காலமாக இது அமைந்துள்ளது. இது கிறிஸ்து அரசர் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் ஞாயிறன்று தொடங்கி, கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்கு முன்தினம் அன்று முடிவடைகிறது.

கிறிஸ்து பிறப்புக் காலம் என்பது திருவழிபாட்டு ஆண்டின் இரண்டாவது காலம் ஆகும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் தோன்றிய மறைபொருளைக் கொண்டாடும் காலமாக இது அமைந்துள்ளது. இது கிறிஸ்து பிறப்பு பெருவிழா அன்று தொடங்கி, ஆண்டவரின் திருமுழுக்கு விழாவுக்கு முன்தினம் முடிவடைகிறது.

ஒப்புரவின் காலம்[தொகு]

தவக் காலத்தில் மனமாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் கிறிஸ்தவர்கள், பாஸ்கா காலத்தில் இயேசுவின் உயிர்ப்பின் மாட்சியைக் கொண்டாடி, கடவுளோடு ஒப்புரவாகின்றனர். எனவே, இது ஒப்புரவின் காலம் ஆகும்.

தவக் காலம் என்பது திருவழிபாட்டு ஆண்டின் நான்காவது காலம் ஆகும். நமது மீட்பின் மையமாக விளங்கும் கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைத்து, மனந்திருந்தும் காலமாக இது அமைந்துள்ளது. இது திருநீற்றுப் புதன் அன்று தொடங்கி, ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழாவுக்கு முன்தினம் முடிவடைகிறது. இக்காலத்தின் புனித வாரத்தில் வரும் பெரிய வியாழன், புனித வெள்ளி, புனித சனி ஆகிய மூன்று நாட்களும் பாஸ்கா முந்நாட்கள் (Paschal Triduum) என்று அழைக்கப்படுகின்றன.

பாஸ்கா காலம் என்பது திருவழிபாட்டு ஆண்டின் ஐந்தாவது காலம் ஆகும். இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் மறைபொருளைக் கொண்டாடும் காலமாக இது அமைந்துள்ளது. இது ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா அன்று தொடங்கி, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா அன்று முடிவடைகிறது.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Liturgical year
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவழிபாட்டு_ஆண்டு&oldid=3308878" இலிருந்து மீள்விக்கப்பட்டது