புனித சனி
புனித சனி | |
---|---|
திருக்கல்லறையில் இயேசுவின் உடல் அடக்கம் பெய்யப்படுவதை சித்தரிக்கும் சிலை | |
அதிகாரப்பூர்வ பெயர் | ஆண்டவருடைய திருப்பாடுகளின் பெரிய சனி |
பிற பெயர்(கள்) | கருப்பு சனி |
கடைபிடிப்போர் | கிறித்தவர்கள் |
வகை | சமயம் |
நாள் | உயிர்ப்பு ஞாயிறுக்கு முன் வரும் சனி |
2023 இல் நாள் | ஏப்பிரல் 8 (மேற்கு) ஏப்பிரல் 15 (கிழக்கு) |
2024 இல் நாள் | மார்ச்சு 30 (மேற்கு) மே 4 (கிழக்கு) |
2025 இல் நாள் | ஏப்பிரல் 19 (மேற்கு) ஏப்பிரல் 19 (கிழக்கு) |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
தொடர்புடையன | உயிர்ப்பு ஞாயிறு |
புனித சனி (Holy Saturday) என்பது கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் பெரிய வெள்ளிக் கிழமைக்கு அடுத்த நாள் ஆகும். இது புனித வாரத்தின் கடைசி நாளாகவும், தவக் காலத்தின் கடைசி நாளாகவும் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குத் தயாரிப்பு நாளாகவும் கருதப்படுகிறது[1].
கத்தோலிக்க திருச்சபையில் புனித சனிக் கொண்டாட்டம்
[தொகு]பெரிய வியாழக் கிழமை வழிபாடு முடிந்ததிலிருந்து கோவிலின் மைய இடமாகிய திருப்பீடத்தின் மேல் விரிக்கப்படும் துணிகள் எல்லாம் அகற்றப்பட்டு, பீடம் வெறுமையாய் இருக்கும். மக்களுக்கு அருளடையாளங்கள் இந்த நாளில் வழங்கப்படுவதில்லை. பெரிய வெள்ளி வழிபாடு முடிந்ததிலிருந்து நோயாளருக்கு வழியுணவாக நற்கருணை வழங்க அனுமதி உண்டு. அதுபோலவே இறக்கும் தறுவாயில் இருப்போருக்குத் திருமுழுக்கு, பாவ மன்னிப்பு, நோயில் பூசுதல் போன்ற அருளடையாளங்களை வழங்கலாம். திருப்பலியும் வழக்கமாக நிறைவேற்றப்படுவதில்லை.
பெரிய சனிக் கிழமையின் பொருள்
[தொகு]திருச்சபையின் பழங்கால மரபுக்கு ஏற்ப, பெரிய சனி என்பது கிறித்தவ மக்கள் தம் தலைவரும் ஆண்டவருமாகிய இயேசுவின் கல்லறையின் அருகே நின்று, அவருடைய துன்பம் சாவு ஆகியவற்றைப் பற்றித் தியானிக்கின்ற நாள் ஆகும். கல்லறையில் வைக்கப்பட்ட இயேசுவின் உடல் அமைதியில் துயில் கொள்ளும் வேளையில் திருச்சபையும் அமைதியோடு காத்திருக்கும். இயேசுவின் இறப்பு துயர நிகழ்வாக இருந்தாலும் அத்துயரமானது மகிழ்ச்சியாக மாறப்போகிறது என்னும் நம்பிக்கையோடு திருச்சபை காத்திருப்பது பெரிய சனியின் பண்பு.
திருவழிபாட்டு முறைக்கு ஏற்ப, பெரிய சனி பொழுது சாயும் வேளை வரை நீடிக்கும். அதன் பிறகு பாஸ்கா திருவிழிப்பு (Easter Vigil) தொடங்கும். அதுவே இயேசு சாவினின்று எழுந்த நிகழ்ச்சிக்கு முன்னோடி போல அமைகிறது.
பிற கிறித்தவ சபைகளில் புனித சனி
[தொகு]சில ஆங்கிலிக்க சபைகளில் விவிலியம் அறிக்கையிடப்படும். ஆனால் நற்கருணை கொண்டாடப்படுவதில்லை. ஆங்கிலிக்கன், லூதரன், மெதடிஸ்டு போன்ற சபைக் கோவில்களில் திருப்பீடம் வெறுமையாக்கப்படாமல், கருப்புத் துணியால் மூடப்படுவதும் உண்டு.
மரபு வழிக் கீழைச் சபைகள் புனித சனியைப் "பெரிய சனி" என்றும் அழைக்கின்றன. இயேசுவின் திருவுடல் கல்லறையில் வைக்கப்பட்டதை நினைவுகூர்வதோடு, இயேசு பாதாளங்களில் இறங்கி அங்கிருந்த ஆன்மாக்களுக்கு விடுதலை வழங்கிய நிகழ்வையும் அச்சபைகள் நினைவுகூர்கின்றன. சில கீழைச் சபைகள் புனித சனியை "மகிழ்ச்சியின் சனி" எனவும் அழைக்கின்றன.
போலந்து மற்றும் கிழக்கு ஐரோப்பிய பழக்கம்
[தொகு]அமெரிக்காவில் குடியேறிய போலந்து கிறித்தவர்களும் செக் போன்ற பிற கிழக்கு ஐரோப்பிய நாட்டவர் சிலரும் புனித சனிக்கிழமையன்று உயிர்த்தெழுதல் முட்டைகள், பழங்கள், அப்ப வகைகள், நாட்டுப் பலகாரங்கள் போன்றவற்றை ஒரு கூடையில் ஒழுங்குற அமைத்து, அக்கூடையைக் கோவிலுக்குக் கொண்டு வருவார்கள். கூடையின் உட்புறத்தில் பூவேலை செய்யப்பட்ட மெல்லிய துணி விரிக்கப்பட்டிருக்கும். சில தழைகளும் செருகப்பட்டிருக்கும்.
சிலுவைப் பாதை வழிபாட்டின் பதினான்காம் நிலையில் இயேசு கல்லறையில் அடக்கப்பட்ட நிகழ்வு முடிந்ததும் அங்கே அப்பொருள்கள் புனிதப்படுத்தப்படும். பின்னர் கூடையைப் பொருள்களோடு வீட்டுக்கு எடுத்துச் செல்வார்கள். இக்கூடைக்குப் போலந்து மொழியில் "ஸ்வென்சோன்க்கா" (Święconka) என்று பெயர்[2].