படு கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
படு மினியேன்
கான்
ஷாஹின்சா
ஜார்[1]
Цар Батий на престолі.jpg
தங்க நாடோடிக் கூட்டத்தின் அரியணையில் படு கான்
ஆட்சி 1227–1255
முடிசூட்டு விழா 1224/1225 or 1227
முன்னிருந்தவர் சூச்சி
பின்வந்தவர் சர்தக்
அரசி போரோக்சின் கதுன்
மரபு போர்சிசின்
அரச குலம் தங்க நாடோடிக் கூட்டம்
தந்தை சூச்சி
தாய் கொங்கிராத்தின் உகா உஜின்
பிறப்பு 1207 (1207)
மங்கோலியா
இறப்பு 1255 (அகவை 47–48)
சரை படு

படு கான் (மொங்கோலியம்: Бат хаан, பட் ஹான், உருசியம்: хан Баты́й, கான் படி, சீனம்: 拔都 ப டு, தாதர்:Бату хан, இலத்தீன்:Baty xan, அரபு மொழி: باتو خان; c. 1207–1255), மற்றொரு பெயர் சைன் கான் (மொங்கோலியம்: நல்ல கான், Сайн хаан, சைன் ஹான்) மற்றும் திசார் படு,[2] ஒரு மங்கோலிய ஆட்சியாளர் மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின் (மங்கோலியப் பேரரசின் ஒரு பகுதி) தோற்றுவிப்பாளரும் ஆவார். இவர் சூச்சியின் மகனும், செங்கிஸ் கானின் பேரனும் ஆவார். கீவிய ருஸ், வோல்கா பல்கேரியா, குமனியா மற்றும் காக்கேசியாவை சுமார் 250 ஆண்டுகளுக்கு ஆண்ட இவரது உளூஸ் தங்க நாடோடிக் கூட்டத்தின் தலைமைப் பகுதியாகும்.செங்கிஸ் கானின் மகன்களின் இறப்பிற்குப் பிறகு இவர் மங்கோலியப் பேரரசில் பெரிதும் மதிக்கப்பட்டார். இவர் அகா (அண்ணன்) என்று மங்கோலியப் பேரரசில் அழைக்கப்பட்டார்.

படு கானின் ஆரம்ப காலங்கள்[தொகு]

தனது மகன் சூச்சியின் இறப்பிற்குப் பிறகு செங்கிஸ் கான் சூச்சியின் நிலப்பரப்புகளை அவரது மகன்களுக்குக் கொடுத்தார். ஆனால் படுவைத் தங்க நாடோடிக் கூட்டத்தின் (இது சூச்சியின் உளூஸ் அல்லது கிப்சாக் கானேடு என்று அறியப்படுகிறது) கானாக நியமித்தார். சூச்சியின் மூத்த மகனான ஓர்டா கானும் படு தான் தன் தந்தைக்குப் பிறகு ஆட்சி செய்ய வேண்டும் என்று ஒத்துக்கொண்டார். செங்கிஸ் கானின் கடைசித் தம்பி தெமுகே முடிசூட்டு விழாவில் செங்கிஸ் கானின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார்.[3] 1227 இல் செங்கிஸ்கான் இறந்த போது அவர் 4000 மங்கோலிய வீரர்களை சூச்சியின் குடும்பத்திற்குக் கொடுத்தார். சூச்சியின் நிலப்பரப்புகள் படுவிற்கும் அவரது அண்ணன் ஓர்டாவிற்கும் இடையே பிரித்துக் கொள்ளப்பட்டன. ஓர்டாவின் அரசு வெள்ளை நாடோடிக் கூட்டம் என்று அழைக்கப்பட்டது. அவரது ஆளும் பகுதியானது தோராயமாக வோல்கா ஆறு மற்றும் பல்காஷ் ஏரிக்கு இடையே அமைந்திருந்தது. அதே நேரத்தில் படுவின் நாடோடிக் கூட்டமானது வோல்காவுக்கு மேற்கில் இருந்த பகுதிகளை ஆண்டது.

1229 இல் ஒகோடி 3 தியுமன் வீரர்களை குக்டே மற்றும் சன்டேயின் தலைமையின் கீழ் உரல் ஆற்றின் கீழ் பகுதிகபகுதிகளில் இருந்த பழங்குடியினரை வெல்ல அனுப்பினார். அபுல்கசி என்பவரது கூற்றுப்படி படு கான் ஒகோடியின் தலைமையில் வடக்கு சீனாவில் நடைபெற்ற சின் வம்ச படையெடுப்பில் கலந்து கொண்டார். அதே நேரத்தில் அவரது தம்பி பஷ்கிர்கள், கியுமன்கள் மற்றும் ஆலன்கள் ஆகியவர்களுடன் மேற்கில் போரிட்டுக் கொண்டிருந்தார். எதிரிகள் எதிர்ப்பைக் காட்டிய போதும் மங்கோலியர்கள் சுரசன்களின் முக்கிய நகரங்களை வென்றனர். பஷ்கிர்களைத் தங்களது கூட்டாளிகளாக ஆக்கினர். 1230களில் ஒகோடி சீனாவின் ஷான்க்ஷியில் உள்ள நிலப்பகுதிகளை படு மற்றும் சூச்சியின் குடும்பத்தினருக்கு பிரித்துக் கொடுத்தார். ஆனால் பாரசீகத்தின் குராசான் பகுதியைப் போலவே தனது அதிகாரிகளை ஒரு ஏகாதிபத்திய ஆளுநரின் கீழ் நியமித்தார்.[4]

ருஸ் படையெடுப்பு[தொகு]

மங்கோலிய ஜின் போரின் முடிவில் மங்கோலியாவில் நடந்த குறுல்த்தாயில் பெரிய கானான ஒகோடி மேற்கு நாடுகளின் மீது படையெடுக்குமாறு படுவிற்கு ஆணையிட்டார். 1235ல் இதற்கு முன்னர் கிரிமிய தீபகற்ப படையெடுப்பை நடத்திய படுவிடம் சாத்தியக்கூறாக 1,30,000 படைவீரர்களைக் கொண்ட ராணுவத்தைக் கொண்டு ஐரோப்பா மீது படையெடுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இவரது உறவினர்களான குயுக், புரி, மோங்கே, குல்கேன், கதான், பைதர் மற்றும் குறிப்பிடத்தக்க மங்கோலியத் தளபதிகளான சுபுதை, போரோல்டை மற்றும் மெங்குசர் ஆகியோர் இவரது சித்தப்பா ஒகோடியின் ஆணைப்படி இவருடன் இணைந்தனர். உண்மையில் சுபுதை இந்த ராணுவத்தை வழிநடத்தினார். இந்த இராணுவமானது வோல்கா ஆற்றைக் கடந்து 1236ல் வோல்கா பல்கேரியா மீது படையெடுத்தது. வோல்கா பல்கேரியர்கள், கிப்சாக்குகள் மற்றும் ஆலன்கள் ஆகியவர்களது எதிர்ப்பை முறியடிக்க மங்கோலியர்களுக்கு ஒரு வருடம் தேவைப்பட்டது.

மங்கோலிய ராணுவத்தால் விளாடிமிர்-சுஸ்டாலின் தலைநகரம் அழிக்கப்படுதல் - நடுக்கால உருசிய நூல்களிலிருந்து

நவம்பர் 1237ல் படு கான் தனது தூதர்களை விளாடிமிர்-சுஸ்டாலின் இரண்டாம் யூரியின் அவைக்கு அனுப்பி அவர்களது ஆதரவைக் கேட்டார். யூரி சரணடைய மறுத்த போது மங்கோலியர்கள் ரியாசானை முற்றுகையிட்டனர். ஆறு நாட்கள் நடந்த ரத்தம் தோய்ந்த போருக்குப்பிறகு நகரம் முழுவதுமாக அழிக்கப்பட்டது. இத்தாக்குதலுக்குப் பிறகு நகரத்தால் அதன் முந்தைய நிலையை எப்போதும் அடைய முடியவில்லை. இந்த செய்தியை அறிந்த இரண்டாம் யூரி நாடோடிக்கு கூட்டத்தை பிடிப்பதற்காகத் தனது மகன்களை அனுப்பினார். ஆனால் அவர்கள் தீர்க்கமாக தோற்கடிக்கப்பட்டனர். கோலோம்னா மற்றும் மாஸ்கோவை எரித்த பிறகு நாடோடிக் கூட்டமானது பிப்ரவரி 4, 1238ல் விளாடிமிர்-சுஸ்டாலின் தலைநகரத்தை முற்றுகையிட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு அந்நகர் கைப்பற்றப்பட்டு எரித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. மன்னர் குடும்பம் நெருப்பில் அழிந்து போனது. இளவரசர் வடக்கு நோக்கிப் பின்வாங்கி ஓடினார். வோல்கா ஆற்றைக் கடந்து அவர் ஒரு புது ராணுவத்தைச் சேர்த்துக்கொண்டு மீண்டும் போரிட வந்தார். ஆனால் மார்ச் 4-ஆம் தேதி சிட் ஆற்றின் கரையில் நடந்த போரில் அவர்கள் மங்கோலியர்களால் மொத்தமாக அழிக்கப்பட்டனர்.

இதன்பிறகு படு கான் தனது ராணுவத்தை சிறு குழுக்களாகப் பிரித்தார். அக்குழுக்கள் 14 ருஸ் நகரங்களைச் சூறையாடின. அந்நகரங்கள்: ரோஸ்டோவ், உக்லிச், யரோஸ்லாவ், கோஸ்ட்ரோமா, கஷின், கிசின்யடின், கோரோடெட்ஸ், ஹலிச், பெரெஸ்லவ்ல்-சலெஸ்கி, யுரியேவ்-போல்ஸ்கி, டிமிட்ரோவ், வோலோகோலம்ஸ்க், ட்வெர், மற்றும் டோர்ஜோக். இதில் மங்கோலியர்களுக்குக் கடினமாக இருந்தது சிறு பட்டணமான கோசெல்ஸ்க் ஆகும். இளவரசச் சிறுவன் டைடஸ் மற்றும் வாசிகள் 7 வாரங்களுக்கு மங்கோலியர்களின் தாக்குதலைத் தாக்குப் பிடித்தனர். கதையின்படி மங்கோலியர்கள் வருகிற செய்தி அறிந்த உடனே கிடெஸ் நகரம் அனைத்து வாசிகளுடன் ஏரியில் மூழ்கியது. அதை நாம் இன்றும் காண முடியும். படு உடன் இணைந்த கதன் மற்றும் புரி மூன்றே நாட்களில் நகருக்குள் புகுந்தனர். அழிவில் இருந்து தப்பிய முக்கியமான நகரங்கள் ஸ்மோலென்ஸ்க், நோவ்கோரோட் மற்றும் பிஸ்கோ ஆகும். இதில் ஸ்மோலென்ஸ்க் மங்கோலியர்களுக்கு அடிபணிந்து கப்பம் கட்ட ஒப்புக்கொண்டது. மங்கோலியர்களால் பிஸ்கோ நகரத்தை அடைய முடியவில்லை. ஏனெனில் அது வெகு தொலைவில் இருந்தது மற்றும் இடையில் சதுப்பு நிலங்களும் இருந்தன.

தங்க நாடோடிக் கூட்டத்தின் வீரர்கள் சுஸ்டாலை முற்றுகையிடுகின்றனர்.

வெற்றி விருந்தில் படு ஒரு கிண்ண ஒயினை மற்றவர்களுக்கு முன்னதாகவே குடிக்கிறார். படு பரந்த மற்றும் வளமான புல்வெளியை பெற்றுக் கொண்டதாக புரி குற்றம் சாட்டுகிறார். குயுக் மற்றும் பிறர் சேர்ந்த மங்கோலிய ராணுவம் படுவை "தாடி உடைய வயதான பெண்மணி" என்று கூறுகின்றனர். பின்னர் விருந்தில் இருந்து வெளியேறுகின்றனர். படு தனது சித்தப்பா ஒகோடிக்குத் தூதுவர்களை அனுப்பி தன் உறவினர்களின் முரட்டுத்தனமான நடத்தையை தெரிவிக்கின்றார். இச்செய்தியைக் கேட்ட ஒகோடி கோபம் அடைகிறார். புரி மற்றும் குயுக்கைத் திரும்ப அழைக்கின்றார். சில ஆதாரங்களின்படி புரி தன் தாத்தா ஜகாடேயிடம் அனுப்பப்படுகிறார். மங்கோலியர்களின் ஐரோப்பியப் படையெடுப்பில் அவர் மீண்டும் கலந்து கொள்ளவே இல்லை. தந்தை ஒகோடி கடுமையாகக் கண்டித்த பிறகு குயுக் உருசியப் புல்வெளிக்குத் திரும்புகிறார்.

1238 ஆம் ஆண்டின் கோடை காலத்தில் படு கான் கிரிமியத் தீபகற்பத்தைத் தாக்கிக் கடும் சேதம் விளைவித்தார். மோர்டோவியா மற்றும் கிப்சாக்குகளின் கட்டுப்பாட்டில் இருந்த புல்வெளியை வென்றார். 1239 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் செர்னிகோவ் மற்றும் பெரெயஸ்லாவ் ஆகிய பகுதிகளை முற்றுகையிட்டார். பலநாள் முற்றுகைக்குப் பிறகு மங்கோலியர்கள் டிசம்பர் 1240ல் கீவுக்குள் நுழைகின்றனர். ஹலிச்சின் டானிலோ கடுமையான எதிர்ப்பைக் கொடுத்தபோதும் படு அந்த நிலப்பரப்பின் 2 முதன்மைத் தலைநகரங்களான ஹலிச் மற்றும் வோலோடிமிர்-வோலின்ஸ் கியி ஆகியவற்றை வென்றார். ருதேனிய குறுநில மன்னர்கள் மங்கோலியப் பேரரசின் கப்பம் கட்டுபவர்களாக ஆகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

படு கான்
இறப்பு: 1255
அரச பட்டங்கள்
முன்னர்
சூச்சி
தங்க நாடோடிக் கூட்டத்தின் கான்
1227–1255
பின்னர்
சர்தக்
முன்னர்
சூச்சி
நீல நாடோடிக் கூட்டத்தின் கான்
1240–1255
பின்னர்
சர்தக்
"https://ta.wikipedia.org/w/index.php?title=படு_கான்&oldid=2604503" இருந்து மீள்விக்கப்பட்டது