டொலுய் உள்நாட்டுப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டொலுய் உள்நாட்டுப் போர்
மங்கோலியப் பேரரசின் பிரித்தலின் ஒரு
தேதி 1260–1264
இடம் மங்கோலியப் பேரரசுக்குக் கீழிருந்த மங்கோலியா, வட மற்றும் மேற்கு சீனா, மற்றும் நடு ஆசியா
முடிவு
நாடுகள்
குப்லாய் கான் மற்றும் அவரது கூட்டாளிகள் அரிக் போகே மற்றும் அவரது கூட்டாளிகள்
மன்னர் மற்றும் தளபதிகள்

டொலுய் உள்நாட்டுப் போர் என்பது குப்லாய் கான் மற்றும் அவரது தம்பி அரிக் போகேவிற்கு இடையே நடைபெற்ற வாரிசுரிமைச் சண்டையாகும். இப்போர் 1260 முதல் 1264 வரை நடைபெற்றது.[1] மோங்கே கான் 1259ல் இறந்தார். தனக்கு அடுத்த கானாக யாரையும் அவர் அறிவிக்கவில்லை. பிறகு டொலுய் குடும்ப உறுப்பினர்களிடையே ககான் பட்டத்துக்கான போட்டியானது உள்நாட்டுப் போராக மாறியது.[1] இப்போர் மற்றும் இதற்குப் பிந்தைய போர்களான பெர்கே-குலாகு போர் மற்றும் கய்டு-குப்லாய் போர் ஆகியவை மங்கோலியப் பேரரசு மீதான ககானின் ஆளுமையைக் குறைத்தன. பேரரசைத் தன்னாட்சியுடைய கானரசுகளாகப் பிரித்தன.[2]

பின்புலம்[தொகு]

டொலுய் குடும்பமானது ககான் பதவிக்கான தங்கள் தேர்வாளரான மோங்கேயை வெற்றிகரமாக அரியணையில் அமர்த்தியது. 1250 மற்றும் 1251ஆம் ஆண்டின் குறுல்த்தாய்களில் இது நடைபெற்றது.[3] ககான் பதவிக்கு ஒக்தாயி தேர்ந்தெடுத்திருந்த அவரது பேரன் சிரேமுன் மற்றும் உறவினர் நகு ஆகியோர் தங்களது தோல்வியால் கசப்புணர்வு கொண்டிருந்தனர். அவர்கள் மோங்கேயை அரசியல் படுகொலை செய்யத் திட்டம் தீட்டினர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.[4] அரச குடும்பத்தில் உள்ள தன்னுடைய எதிரிகளை ஒழித்துக் கட்டியதன் மூலம் மோங்கே பழி தீர்த்தார். சகதாயி மற்றும் ஒக்தாயி குடும்ப உறுப்பினர்கள் இவ்வாறு ஒழித்துக் கட்டப்பட்டனர்.[5]

1252ஆம் ஆண்டு காக்கேசியப் பகுதி மீதான கட்டுப்பாட்டைத் தங்க நாடோடிக் கூட்டத்திற்கு மோங்கே வழங்கினார். மோங்கேயின் அனுமதியுடன் படுவின் தம்பியான பெர்கே 1255ஆம் ஆண்டு உருசியாவின் தங்க நாடோடிக் கூட்டத்தின் கானாகப் பதவிக்கு வந்தார். தங்க நாடோடிக் கூட்டத்திடமிருந்த காக்கேசியாவின் கட்டுப்பாட்டை ஈல்கானரசின் குலாகு கைப்பற்றினார்.[6] 1258ஆம் ஆண்டு குலாகு பகுதாதுவைச் சூறையாடியது, இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறியிருந்த பெர்கேயைக் கோபப்படுத்தியது.[7] 1259ஆம் ஆண்டு மோங்கே கான் இறந்தார். அவர் தனக்குப் பிந்தைய ககானாக யாரையும் நியமிக்கவில்லை. அவர் அரிக் போகேயைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அரிக் போகேயை 1258ஆம் ஆண்டு மங்கோலியப் பேரரசின் தலைநகரான கரகோரத்தின் தளபதியாக மோங்கே நியமித்தார். ஆனால் இது தவிர அரியணைக்கு அரிக் போகேயின் உரிமையைப் பாதுகாக்க அவர் மிகக் குறைவான பணிகளையே செய்தார்.[1]

உள்நாட்டுப் போர்[தொகு]

குப்லாய் கான் (இடது) மற்றும் அரிக் போகே (வலது) ஆகியோர் ககான் பட்டத்துக்காக ஓர் உள்நாட்டுப் போரில் சண்டையிட்டனர்.

1260ஆம் ஆண்டு குப்லாய் கான் தெற்கு சாங் அரசமரபுக்கு எதிராகப் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் அரியணைக்கு அடுத்த ஆட்சியாளராகத் தனக்குப் போட்டியாக அரிக் போகே சவால் விடுக்கிறார் என்ற செய்தி அவருக்கு வந்தது.[8] தன்னைக் ககான் பதவிக்கு முன்மொழிய சக்தி வாய்ந்த மங்கோலிய உயர்குடியின உறுப்பினர்களுடன் அரிக் போகே கூட்டணி வைத்திருந்தார்.[9] அரிக் போகேவுக்குப் பெரும்பாலான மோங்கேயின் குடும்பம், ஒக்தாயி, சகதாயி மற்றும் சூச்சி குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.[7] குப்லாய் சாங் பகுதியில் இருந்து பின்வாங்கினார். அரிக் போகேயை எதிர்த்துச் சண்டையிடத் தனது துருப்புக்களைத் திரட்டினர்.[10] சீனாவில் கைபிங்கில் ஒரு குறுல்த்தாய்க்குக் குப்லாய் அழைப்பு விடுத்தார். அங்கு அவர் ககானகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11] மங்கோலியத் தாயகம் அல்லது நடு ஆசியாவுக்கு வெளியே ககானை அறிவிக்க நடந்த முதல் குறுல்த்தாய் இது தான்.[12] கரகோரத்தில் ஒரு மாதத்திற்குப் பிறகு தன்னைக் ககானாக அறிவிக்கத் தனது சொந்தக் குறுல்த்தாயை அரிக் போகே கூட்டினார். இவ்வாறாக அரியணைக்கு இரண்டு எதிரெதிர் உரிமை கோரியவர்கள் உருவாயினர்.[13] குறுல்த்தாயில் கலந்துகொள்ள மங்கோலியாவிற்குக் குலாகு பயணம் மேற்கொண்டார். ஆனால் மத்திய கிழக்கில் ஐன் ஜலுட் யுத்தத்தில் மங்கோலியர்கள் எகிப்திய அடிமை வம்சத்தவர்களுக்கு எதிராக அடைந்த தோல்வியானது, அவரைத் திரும்பி வரவைத்தது.[10] அடிமை வம்ச வெற்றியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டத பெர்கே ஈல்கானரசு மீது படையெடுத்தார். இவ்வாறாகப் பெர்கே-குலாகு போர் தொடங்கியது.[6]

அரிக் போகே தங்க நாடோடிக் கூட்டத்தின் பெர்கே கான் மற்றும் சகதாயி கானரசின் அல்கு ஆகியோருடன் கூட்டணி வைத்தார். குப்லாய் கானின் ஒரே கூட்டாளி அவரது தம்பியான ஈல்கானரசின் குலாகு மட்டுமே.[10] குலாகு மீதான தனக்கிருந்த வெறுப்பு காரணமாக குப்லாயுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்த குலாகுவுக்கு எதிராக அரிக் போகேவுக்குப் பெர்கே ஆதரவளித்தார்.[7] இருந்தும் குலாகு மற்றும் பெர்கே தங்களுக்கிடையிலான சொந்தப் போரில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. அவர்களால் டொலுய் உள்நாட்டுப் போரில் தலையிட இயலவில்லை.[14]

சீனாவின் செழிப்பான நிலங்களில் இருந்து வந்த பொருட்கள் குப்லாய்க்குக் கிடைத்தன. அதே நேரத்தில் அரிக் போகே பகுதியளவு வறண்ட புல்வெளிகளிலிருந்து தனக்கான பொருட்களைக் கரகோரத்திற்கு வரவழைக்க வேண்டியிருந்தது.[15] குப்லாய் கான் சீனாவிலிருந்து வந்த இந்தப் பொருட்களை சார்ந்து இருந்தார். எனவே இந்த உள்நாட்டுப் போருக்காகச் சீன மக்களின் ஆதரவை வெல்ல வேண்டிய தேவை அவருக்கு இருந்தது.[10] தன்னுடைய சீன ஆலோசகர்களின் உதவியுடன் சீனக் குடிமக்களின் விருப்பத்திற்கு ஏற்பக் குப்லாய் நடந்து கொண்டார். சீன, கொரிய மற்றும் தன் சொந்த மங்கோலியர்களை ஒன்றிணைக்கும் இயல்புடைய ஒரு முனிவர் பேரரசராகத் தன்னைக் காட்டிக் கொண்டார். அதே நேரத்தில் அரிக் போகேய ஓர் அழிவை ஏற்படுத்தக்கூடிய, அரியணையைத் தவறான முறையில் கைப்பற்ற முயல்பவராகக் காட்டினார்.[14] வரிகளைக் குறைக்கவும், சீன அரசு மரபுகளின் அரசு நிறுவனங்களைப் பிரதிபலிக்கக்கூடிய வகையில் தன்னுடைய அரசு நிறுவனங்கள் அமைக்கப்படும் எனவும் குப்லாய் உறுதி அளித்தார். தன்னுடைய ஆட்சியின் சகாப்தப் பெயராகச் சோங்டோங் என்பதனை வைத்தார். இதன் பொருள் "மிதவாத ஆட்சி" என்பதாகும்.[16] குப்லாயின் கொள்கைகள் வடக்கு சீனாவில் பிரபலமானவையாக இருந்தன. ஆனால் தெற்கு சாங் அரசமரபுடனான இவரது உறவு முறைகளில் இந்தக் கொள்கைகள் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. குப்லாய் உள்நாட்டுப் போரில் பங்கேற்றிருந்த போது சாங் படையெடுத்தனர். முன்னர் மங்கோலியரிடம் தாங்கள் இழந்த பகுதிகளை மீட்டுக் கொண்டனர்.[17] காவோ சிங் என்றழைக்கப்பட்ட ஒரு தூதுவனைக் குப்லாய் தெற்கு சாங்குடன் போரின் ஓர் அமைதியான முடிவை விவாதிப்பதற்காக அனுப்பினார். ஆனால் சாங் அரசமரபினர் குப்லாயின் இம்முயற்சிகளைத் தவிர்த்தனர். அடுத்த ஒரு தசாப்தத்திற்குக் காவோவைச் சிறையில் அடைத்தனர்.[15]

குப்லாய் தற்போது கரகோரத்திற்குப் பொருட்களை அளித்த 4 சாத்தியமான வழிகளில் 3ஐத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். குப்லாயின் ஒக்தாயி குடும்பக் கூட்டாளியான கதான் அரிக் போகேயிடமிருந்து முந்தைய மேற்கு சியாவின் பகுதிகளைத் தற்காத்தார். கான்சுவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படைகளுக்குத் தலைமை தாங்கினார். யான் என்று அழைக்கப்பட்ட தற்போதைய பெய்ஜிங்கைச் சுற்றியிருந்த பகுதிகளைக் குப்லாயின் துருப்புகள் பாதுகாத்தன. அரிக் போகேவுக்குப் பொருட்கள் வழங்குவதற்குத் திறந்திருந்த கடைசி ஒரு வழியானது வடமேற்கில் இருந்த ஏநிசை ஆற்றுப் பள்ளத்தாக்கு ஆகும்.[18] 1260ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கரகோரத்தை நோக்கி குப்லாயின் இராணுவம் முன்னேறியது. அரிக் போகே கரகோரத்தில் இருந்து பின்வாங்கினார். ஏநிசை ஆற்றின் ஒரு துணை ஆற்றை நோக்கிச் சென்றார். பிறகு ஆரம்பமாகிக் கொண்டிருந்த குளிர்காலமானது குப்லாய் மற்றும் அரிக் போகே ஆகியோர் தங்களது இராணுவங்களை முகாமிடும் நிலைக்குத் தள்ளியது. இளவேனிற்காலம் வரை அவர்களைக் காத்திருக்க வைத்தது.[18]

அல்குவுக்கு எதிரான அரிக் போகேயின் வெற்றி

இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஏராளமான பொருட்கள் மற்றும் வீரர்களைக் குப்லாய் பெற்றார். யான் நகரத்தைச் சுற்றிலும், வடக்கு சீனாவின் எல்லைப்பாதுகாப்புகளுக்கும் அரண்களை அமைத்தார்.[19] அரிக் போகேவுக்காக நடு ஆசியாவின் இன்றியமையாத வணிகப் பாதைகளைப் பாதுகாப்பதற்குச் சென்ற ஒரு தளபதியான அலந்தரைக் கதான் தோற்கடித்து மரண தண்டனைக்கு உட்படுத்தினார். மேற்கு சீனாவில் குப்லாயின் கன்பூசிய ஆலோசகர்களில் ஒருவரான லியான் சிசியான் கானுக்காக வீரர்களுக்குத் தலைமை தாங்கினர். வடமேற்கு சீனாவில் அரிக் போகேயின் கூட்டாளியான லியு தைபிங்கிற்கு எதிராக அவர் வெற்றி பெற்றார். அரிக் போகேயின் இராணுவத்திற்காக அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களைக் கைப்பற்றினார். லியாங்சோவு மற்றும் கன்சோவு ஆகிய பட்டணங்களிலிருந்து அரிக் போகேயின் ஆதரவாளர்களை லியான் விரட்டியடித்தார். தென்மேற்கு சீனாவில் அத்துமீறி நிலப்பகுதிகளை ஆக்கிரமித்த அரிக் போகேயின் ஆதரவாளர்களிடமிருந்து சிச்சுவானை இவரது படைகள் பாதுகாத்தன. கதான் மற்றும் லியான் சிசியானின் இராணுவ சேவைக்காக அவர்களுக்குப் பரிசு பொருட்கள் மற்றும் பதவி உயர்வுகளைத் தாராளமாகக் குப்லாய் வழங்கினார். கதானிற்கு 300 கட்டு பட்டு மற்றும் 15 கிலோ வெள்ளியை வழங்கினார். லியான் சிசியானைத் தனது தலைமைச் செயலகத்தின் வலது பக்கப் பிரதம மந்திரி பதவிக்கு நியமித்தார்.[20]

குப்லாயின் வெற்றிகள் அரிக் போகேயின் எஞ்சியிருந்த ஒரே கூட்டாளியாக அல்குவை ஆக்கின. நடு ஆசியாவிலிருந்த சகதாயி கானரசின் கட்டுப்பாட்டைப் பெறுமாறு அல்குவை அரிக் போகே இணங்க வைத்தார். சகதாயி கானான காரா குலாகு அப்போதுதான் இறந்திருந்தார். சகதாயி கானரசின் ஆட்சியாளராக அரியணைக்குக் குப்லாய் பரிந்துரைத்த தனது எதிரி உரிமை கோருபவரான அபிஷ்கா என்பவரை அல்கு சண்டையிட்டுக் கொன்றார்.[20] அரிக் போகோயின் வலிமையான ஆதரவாளர்களில் அல்குவும் ஒருவர் ஆவார். அரிக் போகே சகதாயி கானரசின் கானாக அல்குவை நியமித்தார். அரிக் போகேயின் இராணுவப் பொருட்களுக்கு ஒரு முக்கியமான ஆதாரமாகச் சகதாயி கானரசு திகழ்ந்தது.[15] அப்பகுதியில் வரி வருவாய் மீதான ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் அல்குவிற்கு அரிக் போகே வழங்கினார்.[21]

1261இல் சிமுல்தை என்ற இடத்தில் குப்லாய் மற்றும் அரிக் போகே யுத்தம் செய்தனர். இந்த யுத்தத்தில் அரிக் போகே தோல்வியடைந்து பின் வாங்கினார். 10 நாட்களுக்குப் பிறகு அப்பகுதிக்கு மீண்டும் வந்த அரிக் போகே கிழக்கு மங்கோலியாவின் கிங்கான் மலைகளுக்கு அருகில் குப்லாயின் படைகளுக்குச் சவால் விடுத்தார். அரிக் போகேயால் தாக்கப்பட்ட துருப்புகள் குப்லாயால் நபராகத் தலைமை தாங்கப்படவில்லை. அவை குப்லாயின் இராணுவத்தில் ஒரு சிறிய பகுதியாக மட்டுமே இருந்தன. இருந்தபோதும் இந்த யுத்தமானது யாருக்கும் வெற்றி தோல்வியின்றி முடிந்தது. அதே நேரத்தில் பெரும்பாலான மங்கோலியாவானது தற்போது குப்லாயின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. ஏநிசை பள்ளத்தாக்குப் பொருட்கள் மீதான அரிக் போகேயின் கட்டுப்பாட்டிற்கு இது அச்சுறுத்தலாக விளங்கியது.[21] பலவீனமான அரிக் போகே, அல்குவிடம் உதவி கோரினார். அல்கு மறுத்தார். அரிக் போகேயால் அனுப்பப்பட்ட அல்குவின் வரி வருவாயின் ஒரு பகுதியைக் கோரினர். அத்தூதுவர்களுக்கு அல்கு மரண தண்டனை கொடுத்தார்.[22]

இந்த நேரத்தில் சீனாவில் நடந்த ஒரு கிளர்ச்சியானது உள்நாட்டுப் போரில் இருந்து குப்லாயின் கவனத்தைச் சிதறச் செய்தது. அரிக் போகேயைத் தொடர்ந்து துரத்துவதற்குப் பதிலாக கைபிங் நகரத்திற்குக் குப்லாய் புறப்பட்டார். குப்லாய் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தலானது குறைந்த பிறகு அல்குவுடன் போர் புரிய அரிக் போகே சென்றார். சிஞ்சியாங்கின் இலி ஆற்றுக்கு அருகே அரிக் போகேயின் தளபதியான காரா புகாவை அல்கு தோற்கடித்தார். ஆனால் தனது தலைமைப் பகுதியான அல்மலிக்கை அரிக் போகேயிடம் அவர் இழந்தார். தாரிம் வடிநிலத்தில் இருந்த பாலைவனச்சோலை நகரங்களுக்கு அல்கு பின்வாங்கினர்.[22]

அரிக் போகே தற்போது எஞ்சிய வெகு சில கூட்டாளிகளை[15] மட்டுமே கொண்டிருந்தார். சகதாயி கானரசுக்கு எதிரான இவரது செயல்கள் மற்றும் அட்டூழியங்களைத் தொடர்ந்து இவரது பக்கம் இருந்து பெரும்பாலானா அவரது ஆதரவாளர்கள் விலகிச் சென்றனர்.[22] மோங்கேயின் மகனாகிய உருங் தசு தனது தந்தையின் முத்திரையை அரிக் போகேயிடமிருந்து எடுத்துக்கொண்டு தன் விசுவாசத்தின் அடையாளமாக அதைக் குப்லாயிடம் கொடுத்தார். அல்கு பிறகு இலி ஆற்றுக்குத் திரும்பி வந்தார். சிஞ்சியாங்கில் இருந்து அரிக் போகேயை நீக்கினார். அரிக் போகேயிடம் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக ஆதாரங்களோ அல்லது கூட்டாளிகளே இல்லை. அவர் சங்குடுவுக்குத் தனியாகப் பயணித்தார். 1264ஆம் ஆண்டு குப்லாயிடம் சரணடைந்தார்.  உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்.[23]

பிறகு[தொகு]

குப்லாய் அரிக் போகேயைச் சிறையில் அடைத்தார்.[15] ஆனால் அவருக்கு உடனே தண்டனையைக் கொடுக்கவில்லை. அரிக் போகேயின் குற்றங்களுக்கு ஒரு தண்டனை கொடுக்க வேண்டும் என்று குப்லாயின் ஆதரவாளர்கள் விரும்பினர். எனவே ஓர் ஆண்டுக்கு அரிக் போகேவுக்குத் தண்டனையாக அவரைக் குப்லாய் தவித்தார். அரிக் போகேவுக்கு ஆதரவளித்த மங்கோலிய அரசு அதிகாரிகளை நீக்குவதற்காக ஓர் ஒழித்துக் கட்டலை குப்லாய் நடத்தினார். மோங்கே கானிடம் பணியாற்றிய முக்கியமான மங்கோலிய அதிகாரியான போல்கை என்பவரை அரிக் போகேயுடன் இணைந்து துரோகம் செய்ததாகக் குப்லாய் குற்றம் சாட்டினார். போல்கை மற்றும் பிற அரிக் போகேயின் ஆதரவாளர்களின் மரண தண்டனைக்கு அதிகாரப்பூர்வ அனுமதியைக் குப்லாய் வழங்கினார். அரிக் போகேவுக்கு ஒரு தண்டனை வழங்கவும், அரியணைக்குத் தன்னுடைய உரிமையை வலுவாக்கவும் ஒரு குறுல்த்தாய்க்குக் குப்லாய் அழைப்பு விடுத்தார்.[23] மங்கோலிய உயர்குடியினரிடமிருந்து வெளிப்படையான ஆதரவைப் பெறாமல் தனது தம்பிக்குத் தண்டனை கொடுக்கக் குப்லாய் விரும்பவில்லை.[23] சிறையில் இருந்தபோதே 1266ஆம் ஆண்டு அரிக் போகே மர்மமான முறையில் இறந்தார்.[24] இது குப்லாய் அரிக் போகேவுக்கு இரகசியமாக விடம் கொடுத்தார் என்ற ஊகத்திற்கு இட்டுச் சென்றது.[15]

குப்லாய் அரிக் போகேயைத் தோற்கடித்தது பேரரசு சிதறுவதைத் தடுக்கவில்லை.[25] ககானாகத் தன்னுடைய நிலையை உறுதிசெய்ய தன்னுடைய குறுல்த்தாயைக் குப்லாய் கூட்டியபோது, மற்ற மூன்று கான்களில் ஒருவர் கூட வரவில்லை. 1265ஆம் ஆண்டு குலாகு இறக்கும் வரை, பெர்கே மற்றும் குலாகு தங்களது சண்டையைத் தொடர்ந்தனர்.[24] இந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தித் தங்களது சொந்தக் குடும்பத்தின் நிலையை முன்னேற்ற ஒக்தாயி குடும்பத்தினர் முயன்றனர். 1251ஆம் ஆண்டு குறுல்த்தாய்க்கு மற்றும் அரசியல் படுகொலைத் திட்டத்திற்குப் பிறகு இறுதியாக ஒக்தாயி குடும்பத்தினர் ஒழித்துக்கட்டப்பட்டது ஆகியவற்றின் காரணமாக டொலுய் குடும்பத்திற்கு எதிராக அவர்கள் வெறுப்பு கொண்டிருந்தனர். ககான் பட்டத்திற்குத் தகுதியானவர்கள் ஒக்தாயி குடும்ப உறுப்பினர்கள் என ஒக்தாயி குடும்பத்தைச் சேர்ந்த கய்டு நம்பினார். குப்லாய்க்கு எதிராக 1269ஆம் ஆண்டு கிளர்ச்சியைக் கய்டு தொடங்கினார். இச்சண்டை தசாப்தங்களுக்குத் தொடர்ந்தது.[6]

பெரும்பாலான மேற்குக் கானரசுகள் குப்லாயைக் ககானாக அங்கீகரிக்கவில்லை. எனினும் தங்களது புதிய பிராந்தியக் கான்கள் அரியணையேறும்போது அவர்களது பதவியை உறுதிப்படுத்த அவற்றில் சில குப்லாயை அணுகின.[24] உண்மையில் நான்கு கானரசுகளும் சுதந்திரமாக இயங்கிய அரசுகளாகச் செயல்பட்டன.[26] பாரசீகத்தில் இருந்த ஈல்கானரசு மற்றும் சீனாவில் இருந்த யுவான் அரசமரபு ஆகியவை நெருங்கிய தூதரக உறவுகளைக் கொண்டிருந்தன. அறிவியல் மற்றும் கலாச்சாரத் அறிவைப் பரிமாறிக் கொண்டன. ஆனால் அனைத்து நான்கு மங்கோலியக் கானரசுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பானது மீண்டும் நிகழவேயில்லை. ஒன்றுபட்டிருந்த மங்கோலியப் பேரரசானது சிதறுண்டது.[26]

மேலும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

 1. 1.0 1.1 1.2 Allsen 1994, ப. 411.
 2. Allsen 2001, ப. 24.
 3. Allsen 1994, ப. 392.
 4. Allsen 1994, ப. 393.
 5. Allsen 1994, ப. 393–394.
 6. 6.0 6.1 6.2 Allsen 1994, ப. 412.
 7. 7.0 7.1 7.2 Rossabi 1988, ப. 54.
 8. Rossabi 1994, ப. 422.
 9. Rossabi 1988, ப. 50.
 10. 10.0 10.1 10.2 10.3 Rossabi 1994, ப. 423.
 11. Rossabi 1988, ப. 51.
 12. Rossabi 1988, ப. 51–52.
 13. Rossabi 1988, ப. 53.
 14. 14.0 14.1 Rossabi 1988, ப. 55.
 15. 15.0 15.1 15.2 15.3 15.4 15.5 Rossabi 1994, ப. 424.
 16. Rossabi 1994, ப. 423–424.
 17. Rossabi 1988, ப. 56.
 18. 18.0 18.1 Rossabi 1988, ப. 57.
 19. Rossabi 1988, ப. 57–58.
 20. 20.0 20.1 Rossabi 1988, ப. 58.
 21. 21.0 21.1 Rossabi 1988, ப. 59.
 22. 22.0 22.1 22.2 Rossabi 1988, ப. 60.
 23. 23.0 23.1 23.2 Rossabi 1988, ப. 61.
 24. 24.0 24.1 24.2 Rossabi 1988, ப. 62.
 25. Allsen 1994, ப. 412–413.
 26. 26.0 26.1 Allsen 1994, ப. 413.

மேற்கோள்கள்[தொகு]

நூல்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டொலுய்_உள்நாட்டுப்_போர்&oldid=3937436" இலிருந்து மீள்விக்கப்பட்டது