லித்துவேனியா மீதான மங்கோலியப் படையெடுப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லித்துவேனியா மீதான மங்கோலியப் படையெடுப்புகள் (Mongol invasions of Lithuania) என்பது ஆரம்பத்தில் லித்துவேனிய இராச்சியம் மற்றும் பிறகு லித்துவேனியாவின் மாட்சிமிக்க வேள் பகுதி ஆகியவற்றின் நிலப்பகுதிகளின் மீது மங்கோலிய இராணுவங்கள் படையெடுத்த நிகழ்வைக் குறிப்பதாகும். இப்படையெடுப்புகள் 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 14ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்றன. இந்த நிகழ்வைப் பற்றி ஏராளமான பதிவுகள் இல்லை. சில நேரங்களில் பின்னடைவை சந்தித்த, லித்துவேனிய அரசு மற்றும் அதன் அண்டை நாடுகளான உயோத்விங்கியர்கள் மங்கோலியர்களின் துணை அரசுகளாக மாறக் கட்டாயப்படுத்தப்பட்ட போதும், சில காலத்திற்குப் பிறகு முந்தைய மங்கோலிய நிலப் பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவற்றை லித்துவேனியர்கள் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் ஆண்டுகள் செல்லச் செல்லக் கொண்டு வந்தனர்.

லித்துவேனிய-மங்கோலியச் சண்டை[தொகு]

1237-40 ஆகிய ஆண்டுகளில் லித்துவேனியர்கள் முதன் முதலாக மங்கோலியர்களுடன் தொடர்பை ஏற்படுத்தினர். எனினும் இதற்குப் பிந்தைய ஒன்று அல்லது இரு தசாப்தங்களுக்கு லித்துவேனியர்களால் ஆளப்பட்ட நிலப் பகுதிகளைத் தங்கள் இலக்காக மங்கோலியர்கள் கருதவில்லை.

லித்துவேனிய நிலப் பகுதிகள் மீது மங்கோலியர்களின் முதல் முக்கிய ஊடுருவலானது போரோல்டை தலைமையிலான தங்க நாடோடிக் கூட்டத்தால் 1258ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் நடத்தப்பட்டது.[1][2] மங்கோலியர்களால் ஆளப்பட்ட நிலப் பகுதிகள் மீது லித்துவேனியர்களின் ஊடுருவல்களுக்கு எதிர்விளைவாக இந்த ஊடுருவல் நடந்திருக்க வேண்டும். லித்துவேனியர்கள் மற்றும் உயோத்விங்கியர்கள்[2] மீது ஊடுருவல்களை நடத்திய பிறகு அடுத்த ஆண்டு பெர்கே தலைமையிலான இரண்டு தியூமன்கள் போலந்தைத் தாக்கின.[3]

உசாத்துணை[தொகு]