புகாரா கானரசு
புகாரா கானரசு என்பது ஒரு கானரசு ஆகும். இது 16ஆம் நூற்றாண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து பிந்தைய 18 ஆம் நூற்றாண்டு வரை நடு ஆசியாவில் இருந்து ஒரு உஸ்பெக்[1] அரசு ஆகும். சிறிது காலமே நீடித்த சய்பனிட் பேரரசின் உபைதுல்லா கானின் ஆட்சியின்போது (1533–1540) புகாரா அந்த பேரரசின் தலைநகரானது. இந்த கானரசானது அதன் அதிகபட்ச பரப்பளவை சய்பனிட் ஆட்சியாளரான இரண்டாம் அப்துல்லா கானின் ஆட்சியின்போது (1577–1598) அடைந்தது.
17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் இந்த கானரசானது ஜனித் அரசமரபால் (ஆஸ்ட்ரகானிட்கள் அல்லது ஹஸ்டர்கானிட்கள்) ஆளப்பட்டது. அவர்களே புகாராவை ஆண்ட செங்கிஸ் கானின் வழிவந்த கடைசி வழித்தோன்றல்கள் ஆவர். 1740இல் இக்கானரசு ஈரானின் ஷாவான நதிர் ஷாவால் வெல்லப்பட்டது. 1747இல் நதிர் ஷாவின் இறப்பிற்குப் பிறகு இந்த கானரசு செங்கிஸ் கானின் வழித்தோன்றல்கள் அல்லாத உஸ்பெக் அமீர் குடயர் பியின் வழித்தோன்றல்களால் ஆளப்பட்டது. அவர்கள் அடலிக் என்ற பிரதம மந்திரி பதவியின் மூலம் இந்த கானரசை கட்டுப்படுத்தினர். 1785இல் அவரது வழித்தோன்றலான ஷா முராத், குடும்பத்தின் அரசமரபு ஆட்சியை (மங்கித் அரசமரபு) வழிப்படுத்தினார். இந்த கானரசானது புகாரா அமீரகம் ஆனது.[2] அந்த மங்கித்கள் செங்கிஸ் கானின் வழித்தோன்றல்கள் அல்ல. எனவே அவர்கள் இஸ்லாமிய பட்டமான அமீரை பயன்படுத்தினர். கான் என்ற பட்டத்தை பயன்படுத்தவில்லை.
சய்பனிட் அரசமரபு
[தொகு]சய்பனிட் அரசமரபானது 1506 இல் இருந்து 1598 வரை இந்த கானரசை ஆண்டது. அவர்களது ஆட்சியின் கீழ் புகாராவானது கலை மற்றும் இலக்கிய மையமாக உருவானது. கல்விச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்தக் காலகட்டத்தில் வரலாறு மற்றும் புவியியல் பற்றிய புதிய நூல்கள் எழுதப்பட்டன. உதாரணமாக ஈரானை தாயகமாகக் கொண்ட அமீன் அஹமத் ராசியின் ஹஃப்ட் இக்லிம் (ஏழு காலநிலைகள்) புத்தகத்தை கூறலாம். பதினாறாம் நூற்றாண்டு புகாரா அழகிய கையெழுத்துக்கள் மற்றும் சிறு ஓவியத்தில் திறமைவாய்ந்த கலைஞர்களை ஈர்த்தது. சுல்தான் ஆஹ் மஸ்கடி, அழகிய எழுத்துக்களை எழுதக்கூடிய தத்துவ ஆசிரியர் மஹ்முத் இபின் ஈஷாக் ஷகிப்பி, மற்றும் முஸ்லிம் துறவி போன்ற மஹ்முத் பக்லியான், மொலானா மஹ்முத் முசஹேப் மற்றும் ஜலாலுதீன் யூசுப் ஆகிய கலைஞர்களை அவர்களுள் முக்கியமானவர்களாகக் குறிப்பிடலாம். புகாராவில் அந்த சகாப்தத்தில் பணியாற்றிய புகழ்பெற்ற கவிஞர்கள் மற்றும் தத்துவ அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் முஷ்ஃபிகி, நிசாமி முவமயா, மற்றும் மொகம்மத் அமீன் சஹேத் ஆகியவர்களை குறிப்பிடலாம். 16ஆம் நூற்றாண்டில் புகாரா கானரசில் பணிசெய்த பல மருத்துவர்களின் மிக புகழ் பெற்றவராக மொலானா அப்த்-அல் ஹக்கீமை குறிப்பிடலாம்.
அப்துல் அல்-அசிஸ் கான் (1540–1550) உலகம் முழுவதிலுமே அதற்குச் சமமான நூலகம் ஒன்று இல்லை என கூறக்கூடிய அளவுக்கு ஒரு நூலகத்தை நிறுவினார். முக்கிய அறிஞரான சுல்தான் மிராக் முன்ஷி 1540 லிருந்து அங்கு பணியாற்றினார். திறமையான அழகிய கையெழுத்தை எழுதக்கூடிய மிர் அபித் குசைனி நஸ்தலிக் மற்றும் ரெய்ஹானி எழுத்து முறைகளில் தலைசிறந்த படைப்புகளை உருவாக்கினார். அவர் ஒரு தலை சிறந்த சிறு ஓவியரும், தகடமைப்பதில் கைதேர்ந்தவரும் மற்றும் புகாரா நூலகத்தின் நூலகருமாக இருந்தார்.[3]
உசாத்துணை
[தொகு]- ↑ Peter B.Golden (2011) Central Asia in World History, p.115
- ↑ Soucek, Svat. A History of Inner Asia (2000), p. 180.
- ↑ Khasan Nisari. Muzahir al-Ahbab