கித்புகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கித்புகா என்பவர் ஒரு மங்கோலியத் தளபதி ஆவார். இவர் நைமர் பழங்குடியினத்தை[1] சேர்ந்த ஒரு நெசுத்தோரியக் கிறித்தவர் ஆவார். இவர் மங்கோலிய ஈல்கான் குலாகுவின் படைத் துணைத் தலைவராகவும் நம்பிக்கைகுரியவராகவும் இருந்தார். மத்திய கிழக்குப் படையெடுப்பில் குலாகுவிற்கு உதவி புரிந்தார். மங்கோலியாவில் அடுத்த ககானைத் தேர்ந்தெடுக்கும் குறுல்த்தாய்க்குக் குலாகு தன் பெரும்பாலான வீரர்களைக் கூட்டிச் சென்றபோது, சிரியாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொறுப்புக் கித்புகாவிடம் கொடுக்கப்பட்டது. தெற்கே எகிப்தை நோக்கிய மங்கோலிய ஊடுருவல் தாக்குதல்களுக்கு இவர் காரணமாக இருந்தார். இவர் 1260ஆம் ஆண்டு ஐன் ஜலுட் யுத்தத்தில் கொல்லப்பட்டார்.

வாழ்க்கை[தொகு]

கித்புகாவின் சிதோன் முற்றுகை 1260.

1252ஆம் ஆண்டு நிசாரி இசுமாயிலிகளின் கோட்டைகளுக்கு எதிரான குலாகுவின் இராணுவத்தின் முன்வரிசைப் படைக்குத் தலைமை தாங்குமாறு கித்புகாவிற்கு மோங்கே கான் ஆணையிட்டார். குலாகுவுடன் மேற்குப் பாரசீகத்திற்குள் இவர் முன்னேறினார். தொடர்ச்சியான முற்றுகைகளில் பங்கெடுத்தார். பகுதாதுவைச் சூறையாடிய மங்கோலியப் படையின் ஒரு பிரிவுக்குத் தலைமை தாங்கினார். 1260ல் திமிசுகு படையெடுப்பில் உதவி புரிந்தார்.[2][3][a] நடுக்கால வரலாற்றாளர், தயரின் தேவாலயப் புனித வீரர், எழுதிய நூலைக் குறிப்பிட்டுக் காட்டும் வரலாற்றுக் குறிப்புகள், அடிக்கடி மூன்று கிறித்தவ ஆட்சியாளர்களான ஆர்மீனியாவின் முதலாம் கெதோம், அண்டியோச்சின் நான்காம் பொகேமந்து மற்றும் கித்புகா ஆகியோர் வெற்றிக்குப் பின் ஒன்றாக திமிசுகு நகரத்திற்குள் நுழைந்தனர் என்று குறிப்பிடுகின்றன.[4][5] எனினும் நவீன வரலாற்றாளர்கள் இக்கதையை ஐயத்துக்கிடமானது என்கின்றனர்.[6][7][8]

மோங்கே கானின் இறப்பிற்குப் பிறகு அடுத்த குறுல்த்தாய்க்குக் குலாகு தன் படைகளில் பெரும்பாலானவற்றை கூட்டிச் சென்றபோது, மத்திய கிழக்கில் எஞ்சியிருந்த மங்கோலிய இராணிவத்தின் பொறுப்புக் கித்புகாவிடம் வழங்கப்பட்டது:

"சிரியா மற்றும் பாலத்தீனத்துக்காகக் கிதுபுகாவைக் குலாகு விட்டுச் சென்றபோது, அவர் அந்நிலத்தை அமைதி மற்றும் ஓய்வான நிலையில் வைத்திருந்தார். அவர் கிறித்தவர்கள் மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தார். ஏனெனில் அவர் கிழக்கின் மூன்று மன்னர்களின் வழிவந்தவர் ஆவார். நமது பிரபுவின் பிறப்பிடம் மீது கொண்ட விருப்பம் காரணமாக அவர் பெதுலகேமுக்கு வந்திருந்தார். புனித நிலத்தை மீட்டெடுக்க அவர் பணியாற்றினார்"

— எய்தன் துறவி, (1307).[9]

ஐன் ஜலுட் யுத்தம்[தொகு]

10,000 மங்கோலியத் துருப்புக்கள் உள்ளிட்டோரைக் கொண்ட ஒரு படைக்குக் கித்புகா தலைமை தாங்கினார். எகிப்தை நோக்கிய மங்கோலிய முன்னேற்றத்தைத் தொடர முயற்சித்தார். எனினும், சிலுவைப்போர் வீரர்களுடன் எகிப்திய அடிமை வம்சத்தவர்கள் உணர்வற்ற ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்டனர். இதன் காரணமாக சிலுவைப்போர் வீரர்களின் நிலப்பகுதி வழியே, வடக்காக எகிப்திய அடிமை வம்சத்தவர்கள் செல்ல அனுமதியளிக்கப்பட்டது. எகிப்திய அடிமை வம்சத்தவர்களின் இராணுவத்திற்கு சிலுவைப்போர் வீரர்களின் ஆதரவுப் பகுதியான ஏக்கரில் இராணுவப் பொருட்களை நிரப்பிக் கொள்வதற்காக முகாமிட அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறாக, எகிப்திய அடிமை வம்சத்தவர்கள், வெகுவாகக் குறைந்த வீரர்களைக் கொண்டிருந்த மங்கோலிய இராணுவத்தைக் கலிலேயாவுக்கு அருகில், கோலியாத் ஊற்று என்றழைக்கப்பட்ட ஐன் ஜலுட்டின் முக்கியமான யுத்தத்தில் எதிர்கொள்ள முடிந்தது. இந்த யுத்தத்தில் மங்கோலியர்கள் தோற்கடிக்கப்பட்டனர். கித்புகா பிடிக்கப்பட்டார். அடிமை வம்சச் சுல்தான் பைபர்சு முன் விலங்கிடப்பட்ட கித்புகா கொண்டுவரப்பட்டார். சுல்தானை எதிர்த்து நின்றார். வெற்றி பெற்ற அவர்களுக்கு நிகழப்போகும் மங்கோலியப் பழிவாங்கல் பற்றிக் கூறினார். தன் தலைவனுக்குத் தான் என்றுமே எவ்வாறு விசுவாசமாக இருந்தார் என்பதையும், அதேநேரத்தில் அடிமை வம்சத்தவர்கள் தங்களது சுல்தான் குதூசை எவ்வாறு பைபர்சின் தலைமையில் கூட்டுச் சதி செய்து கொன்றார்கள் என்பதையும் கூறி அடிமை வம்ச அமீர்களை இகழ்ந்தார்.[10] முதிய அடிமை வம்சத்தவரான ஜமாலல்தீன் அகோசு அல் சம்சியின் கைகளால் கித்புகா படுகொலை செய்யப்பட்டார்.

அடிமை வம்ச வரலாறுகள் கித்புகாவைப் பற்றி மரியாதையுடன் பேசுகின்றன. ஐன் ஜலுட் யுத்தத்தில், மங்கோலியர்கள் எண்ணிக்கையில் சொற்பமாக இருந்தபோதும், பின்வாங்கக் கித்புகா மறுத்தார். பின்வாங்கி அவமானப்படுவதற்குப் பதிலாக யுத்தத்தில் மடியத் தீர்மானித்தார். இதனால் வரலாறுகள் இவரை மாவீரனாகக் கருதுகின்றன. கித்புகாவின் மரணத்திற்குக் குலாகு பழிவாங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மங்கோலியத் தங்க நாடோடிக் கூட்டத்தின் பெர்கேவுடனான உட்புறச் சண்டை பழி வாங்க விடாமல் குலாகுவைத் தடுத்தது. கித்புகாவின் மரணம் மற்றும் ஐன் ஜலுட் யுத்தத்தில் மங்கோலியர்களின் தோல்வி ஆகியவை மங்கோலியப் பேரரசின் மேற்கு நோக்கிய விரிவின் முடிவின் தொடக்கமாக அமைந்தன. மங்கோலியர்கள் அறுதியாகத் தோற்கடிக்கப்பட்டு, அத்தோல்விக்குப் பழிவாங்காத முதல் நிகழ்வு இது தான். எனினும், மங்கோலியர்கள் தொடர்ந்து சிரியா, சப்பான், அங்கேரி, போலந்து மற்றும் தென்கிழக்காசியா மீது அடுத்த பல தசாப்தங்களுங்குத் தொடர்ந்து படையெடுத்தனர்.[11]

குறிப்புகள்[தொகு]

 1. "On 1 March Kitbuqa entered Damascus at the head of a Mongol army. With him were the King of Armenia and the Prince of Antioch. The citizens of the ancient capital of the Caliphate saw for the first time for six centuries three Christian potentates ride in triumph through their streets".[4]

உசாத்துணை[தொகு]

 1. René Grousset (1970). The Empire of the Steppes: A History of Central Asia. Rutgers University Press. pp. 361 & 363. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8135-1304-9.
 2. "Saudi Aramco World "The Battle of Ain Jalut"". Saudiaramcoworld.com. Archived from the original on 12 February 2012. பார்க்கப்பட்ட நாள் 26 January 2013.
 3. "Histoire des Croisades III", Grousset, p. 581
 4. 4.0 4.1 Runciman 1987, ப. 307.
 5. "Histoire des Croisades III", Grousset, p. 588
 6. David Morgan, The Mongols (2nd ed.)
 7. Peter Jackson, "Crisis in the Holy Land in 1260," English Historical Review 376 (1980) 486
 8. "While this report cannot be taken literally, it may contain a grain of truth. Armenian troops were part of Ketbuqa's force, while some time during the Mongol occupation Bohemond visited Baalbek and even intended to ask Hulegu for possession of the town. (...) If this prince reached as far as Baalbek, it is most probable that he also passed through Damascus." De Reuven Amitai-Preiss, "Mongols and Mamluks", p.31
 9. in Charles Kohler (ed.), Recueil des historiens des croisades, Document Arméniens, tome II, Paris, 1906; quoted in Ugo Monneret de Villard, Le leggende orientali sui Magi evangelici, Città del Vaticano, Biblioteca Apostolica Vaticana, 1952, p.162. Quoted in "Histoire des Croisades III", René Grousset, p.593; Nam ipse fuerat de progenie trium regum, qui uenerunt natiuitatem domini adorare (For he was a descendant of the Three Kings who came to the Nativity to adore the Lord). Simon Grynaeus Johannes Huttichius, Novus orbis regionum ac insularum veteribus incognitarum, Basel, 1532, caput XXX, De Cobila Can quinto Imperatore Tartarorum, p.445.
 10. Runciman 1987, ப. 313.
 11. Amitai-Preiss, Reuven. Mongols and Mamluks: The Mamluk-Ilkhanid War, 1260–1281 (first edition). Cambridge: Cambridge University Press, 1998.

நூல்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கித்புகா&oldid=3478879" இலிருந்து மீள்விக்கப்பட்டது