ஜானி பெக்
ஜானி பெக் என்பவர் தங்க நாடோடிக் கூட்டத்தின் கானாக 1342 ஆம் ஆண்டு முதல் 1357 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் ஆவார். இவர் தனது தந்தை உஸ்பெக் கானின் மகன்களாகிய தின் முகம்மத், வளி முகம்மத், பகி முகம்மத் மற்றும் தின் முகம்மதின் மகனாகிய இமாம் குலி கான் ஆகியவர்களுக்கு பின்னர் பதவிக்கு வந்தார்.
ஆட்சி
[தொகு]தனது இரு சகோதரர்களை கொன்ற பிறகு ஜானி பெக் தனக்குத்தானே சராய்-ஜுக் நகரத்தில் முடிசூட்டிக் கொண்டார். ருஸ் சமஸ்தானங்கள் மற்றும் லித்துவேனியா ஆகிய அரசுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஜானி பெக் வழக்கமாக வைத்திருந்தார். மாஸ்கோவின் பெரும் இளவரசர்களான சிமியோன் கோர்டி மற்றும் இரண்டாம் இவான் ஆகியோர் தொடர்ந்து அரசியல் மற்றும் ராணுவ அழுத்தங்களுக்கு ஜானி பெக்கால் உட்படுத்தப்பட்டனர்.
கிரிமிய தாதர்களைக் கொண்ட ஒரு பெரிய படையைக் கொண்டு ஜானி பெக் 1343 ஆம் ஆண்டு கிரிமிய துறைமுக நகரமான காபாவை தாக்கினார். இந்த முற்றுகையானது உதவிக்கு வந்த ஒரு இத்தாலிய படையால் பிப்ரவரி மாதம் முறியடிக்கப்பட்டது. 1345 ஆம் ஆண்டு மீண்டும் காபாவை ஜானி பெக் முற்றுகையிட்டார். எனினும் அவரது நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. இதற்கு காரணம் அவரின் துருப்புகளுக்கு மத்தியில் கறுப்புச் சாவு பரவியது ஆகும். தற்காப்பு படையினரை பலவீனமாக்குவதற்காக கறுப்புச் சாவை பயன்படுத்த எண்ணிய ஜானி பெக்கின் ராணுவம் தொற்றுக்கு உள்ளானவர்களின் பிணங்களை பெரிய கவண்களை கொண்டு காபா நகரத்துக்குள் எறிந்தது. பாதிக்கப்பட்ட செனோவா மாலுமிகள் படிப்படியாக காபாவில் இருந்து செனோவா, மெசினா மற்றும் கான்ஸ்டாண்டிநோபிள் ஆகிய நகரங்களுக்கு சென்றனர். ஐரோப்பாவில் கறுப்புச் சாவை அறிமுகப்படுத்தினர்.[1]
1356 ஆம் ஆண்டு ஜானி பெக் அசர்பைஜானில் ஒரு ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டார். தப்ரிசை கைப்பற்றினார். தனது சொந்த ஆளுநரை அங்கு பதவியில் அமர்த்தினார். சூச்சி வழித்தோன்றல்களின் ஆதிக்கத்தை சகதயி கானரசு மீது செலுத்த முயற்சித்தார். மங்கோலியப் பேரரசின் 3 கானரசுகளையும் இணைக்க முயற்சித்தார். சேக் உவைசின் சரணடைவை ஏற்றுக்கொண்ட பிறகு மங்கோலியப் பேரரசின் 3 அரசுகளும் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக ஜானி பெக் பெருமைப்பட்டுக் கொண்டார். இந்நிகழ்வுகள் நடந்த உடனேயே தப்ரிசு நகரத்தில் கிளர்ச்சி ஏற்பட்டது. இல்கானரசின் ஒரு கிளையான ஜலயிர் அரசமரபு சக்தி வாய்ந்ததாக உருவாகத் தொடங்கியது. இறுதியாக ஜானி பெக் கொல்லப்பட்டார்.
ஜானி பெக் வீழ்ந்த நேரத்தில் அலெக்சி மற்றும் ரடோனெசின் செர்ஜி ஆகியோர் மாஸ்கோவின் சுடோவ் மடாலயத்தை நிறுவினர். ஜானி பெக்கின் தாய் தைடுலாவை குணப்படுத்தியதற்காக ஜானி பெக், அலெக்சிக்கு வழங்கிய நிலத்தில் இந்த மடாலயம் கட்டப்பட்டதாக கதைகள் கூறுகின்றன.
ஜானி பெக்கின் ஆட்சியில் பிற்காலத்தில் முதல்முறையாக நிலப்பிரபுத்துவ சண்டைகள் ஏற்பட்ட அறிகுறிகள் தோன்றின. இவை இறுதியாக தங்க நாடோடிக் கூட்டத்தின் வீழ்ச்சிக்கு காரணம் ஆயின. 1357ஆம் ஆண்டு ஜானி பெக்கின் கொலையானது ஒரு கால் நூற்றாண்டு கால அரசியல் நிலையற்ற தன்மையை தங்க நாடோடிக் கூட்டத்தில் உருவாக்கியது. 1357 ஆம் ஆண்டு முதல் 1378 ஆம் ஆண்டு வரை 25 கான்கள் பதவிக்கு வந்தனர்.
பரம்பரை
[தொகு]- செங்கிஸ் கான்
- சூச்சி
- படு கான்
- தோகோகன்
- மெங்கு-தைமூர்
- தோக்கிரில்சா
- உஸ்பெக் கான்
- ஜானி பெக்
- உஸ்பெக் கான்
- தோக்கிரில்சா
- மெங்கு-தைமூர்
- தோகோகன்
- படு கான்
- சூச்சி
உசாத்துணை
[தொகு]- ↑ "How the Plague Spread to Italy". Brown University. March 12, 2010.
But then, in 1347, to the Italians' delight, their opponents began to die off at an alarming rate - Janibeg's army was overcome by the Plague. Janibeg had no choice but to call off his siege, but not until he performed one last act of warfare against Genoa. Using the catapults designed to throw boulders and fireballs over the walls of fortified cities like Kaffa, Janibeg launched the Plague infested corpses of his dead men into the city. The Italians quickly dumped these bodies back into the sea, but the damage was done. Due to the squalid conditions forced upon Kaffa by the siege, it was ripe for the quick desolation of the Plague.
நூல்கள்
[தொகு]- Kołodziejczyk, Dariusz (2011). The Crimean Khanate and Poland-Lithuania: International Diplomacy on the European Periphery (15th-18th Century). A Study of Peace Treaties Followed by Annotated Documents. Leiden: Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004191907. Archived from the original on 2017-06-30. பார்க்கப்பட்ட நாள் 2021-05-20.
- David Morgan, The Mongols
- Rosemary Horrox, The Black Death