கிறித்தவத் திருச்சபை
கிறித்தவத் திருச்சபை (Christian Church) என்பது கிறித்துவ மதத்தில் கிறித்துவ விசுவாசிகளின் கூட்டமைப்பு என பொருள்படும். புதிய ஏற்பாட்டில் இச்சொல் (ἐκκλησία) தல விசுவாசிகளையும், அகில உலக விசுவாசிகளையும் குறிக்க பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
சொல் பிறப்பு
[தொகு]திருச்சபை எனும் வார்த்தை தொன்தமிழ் வார்த்தையான ’ஓலக்கம்’ என்பதின் பொருளாகவும், கிரேக்க வார்த்தை (கிரேக்கம்: kyriakon (κυριακόν)) என்பதின் மொழிபெயர்ப்புப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது. "கடவுளுக்கு உரியது" எனும் பொருள்படும் வார்த்தை.[1] திரு என்பது 'புனிதத்தை'யும் சபை என்பது 'மக்கள் குழுவை'யும் குறித்து நின்று 'திரு+சபை=திருச்சபை' என்ற சொல் உருவாகி உள்ளது. இதற்கு 'புனித மக்கள் கூட்டம்' அல்லது 'இறை மக்கள் சமூகம்' என்றும் பொருள் கொள்ளலாம்.
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவருகின்ற (அப்போஸ்தலிக்க வழிமரபு) சபை மட்டுமே திருச்சபையாகும் என நைசின் விசுவாச அறிக்கை கூறுகின்றது. இவை நான்கையும் திருச்சபையின் நான்கு அடையாளங்கள் என அது கூறுகின்றது. ஆகவே அப்போஸ்தலிக்க வழிமரபு கொண்டுள்ள சபைகள் பிற சபைகளை திருச்சபைகளாக ஏற்பதில்லை.[2] என்றாலும் அப்போஸ்தலிக்க வழிமரபு என்பது யாது என்பதிலும் அதன் அவசியத்திலும் கிறித்தவ பிரிவுகளிடையே ஒத்த கருத்தில்லை.
கிரேக்க பதமான ἐκκλησία (ஒலிப்பு:எக்லீசியா), என்பது ஏதேனும் ஒரு அவையினைக்குறிக்கும் சொல் ஆகும்,[3] ஆயினும் பெரும்பான்மையான விவிலிய மொழிபெயர்ப்புகளில் இப்பதம் திருச்சபை எனவே பெயர்க்கப்பட்டுள்ளது. இப்பதம் 2 முறை மத்தேயு நற்செய்தியிலும், 24 முறை திருத்தூதர் பணிகள் நூலிலும், 58 முறை பவுலின் திருமுகங்களிலும், 2 முறை எபிரேயருக்கு எழுதிய நிருபத்திலும், ஒரு முறை யாக்கோபு திருமுகத்திலும், 3 முறை யோவானின் திருமுகங்களிலும், 19 முறை திருவெளிப்பாட்டிலும் இடம்பெறுகின்றது. ஆகமொத்தம் புதிய ஏற்பாட்டில் 114 முறை இப்பதம் இடம் பெருகின்றது.[2]
வரலாறு
[தொகு]கத்தோலிக்க பார்வை
[தொகு]இயேசு கிறிஸ்து தனது திருச்சபையை, தனது முதன்மை திருத்தூதரான பேதுருவின் தலைமையில் உருவாக்கினார்[4] என கத்தோலிக்கர் நம்புகின்றனர். இயேசு திருத்தூதர்களுக்கு அதிகாரம் அளித்தார் எனவும் திருத்தூதர்கள் திருச்சபையின் முதல் ஆயர்களாகவும் கருதப்படுகின்றனர். தலைமைத் திருத்தூதர் பேதுருவின் அதிகாரம் அவரது வழித்தோன்றலான திருத்தந்தைக்கும், மற்றத் திருத்தூதர்களின் அதிகாரம் அவர்களது வழித்தோன்றல்களான திருச்சபையின் ஆயர்களுக்கும் வழிவழியாக வழங்கப்பட்டு வருகின்றன என்பது கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கை. இதனை அப்போஸ்தலிக்க வழிமரபு என்பர்.
இவ்வகையான வழிமரபை கொண்டிராத சபைகளை திருச்சபையாக ஏற்காமல் திருச்சபை சமூகம் (Ecclesial Community) என கத்தோலிக்க திருச்சபை அழைக்கின்றது. தன்னோடு ஒன்றிப்பில் இல்லாத ஆனால் அப்போஸ்தலிக்க வழிமரபு உடைய கிழக்கு மரபுவழி திருச்சபைகைளை திருச்சபைகளாக கத்தோலிக்க திருச்சபை ஏற்கின்றது.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=5743
- ↑ 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-09-03. பார்க்கப்பட்ட நாள் 2013-05-11.
- ↑ Liddell and Scott:ἐκκλησία
- ↑ மத்தேயு 16:18 "உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."