ஆயர் (கிறித்துவ பட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆயர் (Bishop) என்பவர், கிறிஸ்தவ திருச்சபை ஒன்றின் அருட்பொழிவு பெற்ற தலைவராக விளங்குபவர் ஆவார்.[1][2][3]

சொல் தோற்றம்[தொகு]

"ஆயர்" (About this soundஒலிப்பு ) என்னும் தமிழ்ச்சொல்லுக்கு இணையான "Bishop" என்னும் ஆங்கிலச் சொல் ἐπίσκοπος (epískopos) என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து பிறக்கிறது. அதற்கு "மேற்பார்வையாளர்", "கண்காணிப்பாளர்" (supervisor, overseer) என்பது நேரடிப் பொருளாகும். கிறித்தவ சபைகளில் மேற்பார்வைப் பொறுப்புக் கொண்டவர்களுக்குப் பொதுவாக "ஆயர்" என்னும் பெயர் பொருந்தும்.

"ஆயர்" என்றால் "(ஆடுகளை) மேய்ப்பவர்" என்பது நேரடிப் பொருள். அது கிறித்தவ சபையின் மக்களை வழிநடத்துபவர் என்று பொருள்தரும். "ஆயர்" என்னும் சொல்லுக்கு நேரிணையான ஆங்கிலச் சொல் "pastor" (shepherd) என்பதும் விவிலியத்தில் வேரூன்றியதாகும். இயேசு தம்மை "நல்ல ஆயர்" (Good Shepherd) என்று அறிமுகப்படுத்துகிறார். அவரிடத்தில் நம்பிக்கை கொண்டு அவரால் வழிநடத்தப்படும் "ஆடுகளை" அவர் கண்காணித்துக் காக்கிறார். யோவான் நற்செய்தியில் இயேசு இவ்வாறு கூறுகிறார்:

கத்தோலிக்க திருச்சபையில்[தொகு]

கத்தோலிக்க திருச்சபையைப் பொறுத்தவரை, ஒரு மறைமாவட்டத்தின் தலைவர் ஆயர் என்று அழைக்கப்படுகிறார். சிறப்பாக உலகத் திருச்சபையின் தலைவரும், புனித பேதுருவின் வழித்தோன்றலுமான உரோமை உயர்மறைமாவட்டத்தின் ஆயர் திருத்தந்தை என்று அழைக்கப்படுகிறார். கத்தோலிக்க திருச்சபையின் வழக்கப்படி, உரோமை ஆயர் மட்டும் கர்தினால் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்; மற்ற மறைமாவட்டங்களில், "ஆயர்" என்னும் பொறுப்பைப் பெறுபவர் சட்டத்தில் உள்ளபடி முன்மொழியப்பட்டு, திருச்சபையின் உயர்முதல் தலைவராகிய திருத்தந்தையால் உறுதிசெய்யப்பட்டால் அவர் ஆயராக நியமிக்கப்படுகிறார்.

ஒரு ஆயர் அவருடைய அதிகாரத்தின்படி ஆயர்நிலை அருட்பொழிவு பெறுவார். முன்னாள்களில் "ஆயர்" என்னும் சொல்லுக்குப் பதிலாக "மேற்றிராணியார்" என்னும் சொல் வழக்கத்தில் இருந்தது. அச்சொல் "மேல்+திராணி" என்னும் மூலத்திலிருந்து பிறந்து "மேல் பொறுப்பு" கொண்டவர் என்னும் பொருள் தந்தது. கிரேக்க மூலத்துக்கு ஏற்ப "கண்காணிப்பாளர்" என்னும் பொருளும் அதில் அடங்கியிருந்தது.

ஆயர் நிலைக்குத் வேட்பாளராகத் தகுதிகள்[தொகு]

ஆயர் நிலைக்குத் தகுதியான வேட்பாளராக ஒருவர் இருக்கத் தேவையானவை;

  • உறுதியான விசுவாசம், நல்லொழுக்கம், பக்தி, அருள்வாழ்வு சார்ந்த தாகம், அறிவுநுட்பம், விவேகம் மற்றும் மனிதப்பண்புகள் ஆகியவற்றில் தலைசிறந்தவராக விளங்கி, தொடர்புடைய பணியை நிறைவேற்ற அவரைத் தகுதியுள்ளவராக்கும் மற்றத் திறமைகளையும் அவர் கொண்டிருக்க வேண்டும்;
  • நன்மதிப்பைப் பெற்றிருக்க வேண்டும்
  • குறைந்த அளவு முப்பத்தைந்து வயது நிறைவுபெற்றவராக இருக்க வேண்டும்.
  • குருப்பட்டம் பெற்று குறைந்த அளவு ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும்.
  • திருத்தூதரக ஆட்சிப்பீடத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஓர் உயர்நிலைக் கல்வி நிறுவனத்தில் திருமறைநூல், இறையியல், அல்லது திருச்சபைச் சட்டம் ஆகியவற்றில் முனைவர் பட்டம் அல்லது குறைந்த அளவு முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்; அல்லது குறைந்த அளவு இப்பாடங்களில் உண்மையில் வல்லுநராய் இருக்க வேண்டும்.

உயர்த்தப்பட வேண்டியவரின் தகுதியைப் பற்றிய இறுதி முடிவு திருத்தூதரக ஆட்சிப்பீடத்தைச் சார்ந்தது.

ஆயர் நிலைகள்[தொகு]

கத்தோலிக்க திருச்சபையில் பேராயர், ஆயர், இணை ஆயர், துணை ஆயர் என்ற நான்கு நிலைகளில் ஆயர்கள் பணி செய்கின்றனர்.

பேராயர்: ஒரு கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்தின் தலைவர் "பேராயர்" (Arch-Bishop) என்று அழைக்கப்படுகிறார்.
ஆயர்: ஒரு கத்தோலிக்க மறைமாவட்டத்தின் தலைவர் "ஆயர்" (Bishop) என்று அழைக்கப்படுகிறார்.
இணை ஆயர்: ஒரு ஆயருக்கு வாரிசாகவும், துணையாகவும் நியமிக்கப்படும் ஆயர் "இணை ஆயர்" (Co-adjutor Bishop) என்று அழைக்கப்படுகிறார்.
துணை ஆயர்: ஒரு ஆயரின் மேய்ப்பு பணியில் உதவுவதற்கு மட்டும் நியமிக்கப்படும் ஆயர் "துணை ஆயர்" (Auxilary Bishop) என்று அழைக்கப்படுகிறார்.

ஆயர் அணிகள்[தொகு]

ஆயர் அணிகளான கணையாழி, ஆயர் மகுடம் மற்றும் செங்கோலோடு காட்சியளிக்கும் ஒரு கத்தோலிக்க ஆயர்
பொதுவானவை: ஆயர் பட்டம் (உச்சந்தலையில் அணியும் தொப்பி), கணையாழி (மோதிரம்), ஆயர் மகுடம் (கூம்பு வடிவ தொப்பி).
பணியில் இருப்பவருக்கு மட்டும் உரியது: செங்கோல் (அதிகாரத்தைக் குறிக்கும் ஆள் உயரக் கோல்).
பேராயருக்கு மட்டும் உரியது: பாலியம் (செம்மறி ஆட்டின் உரோமத்தால் செய்யப்பட்ட கழுத்தணிப் பட்டை).

தென்னிந்திய திருச்சபையில்[தொகு]

சீர்திருத்த சபைகளில், குறிப்பாகத் தென்னிந்திய திருச்சபையில் bishop என்னும் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக "பேராயர்" என்பது பயன்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]