சித்தோர்கார் முற்றுகை (1303)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தோர்கார் முற்றுகை
நாள் சனவரி - ஆகத்து, 1303
இடம் சித்தோர்கார் கோட்டை
கில்ஜி வெற்றி
பிரிவினர்
தில்லி சுல்தானகம் மெடபடாவின் குகிலாக்கள்
தளபதிகள், தலைவர்கள்
அலாவுதீன் கில்சி இரத்னசிம்கா

1303 ஆம் ஆண்டில், தில்லி சுல்தானக ஆட்சியாளர் அலாவுதீன் கில்சி, குகிலா மன்னர் ரத்னசிம்காவிடமிருந்து சித்தோர்கார் கோட்டையை எட்டு மாத கால முற்றுகைக்குப் பிறகு கைப்பற்றினார். தில்லி சுல்தானகத்தின் ஏகாதிபத்திய காலம் என்று பின்னர் அறியப்பட்ட காலத்தை அலாவுதீன் தொடங்கினார்.[1] அலாவுதீனின் நோக்கம் இரத்னசிம்காவின் அழகான மனைவியான பத்மாவதியை அடைவதே என்று கூறும் வரலாற்றுக் காவியமான பத்மாவத் உட்பட பல காவியங்களில் இந்த மோதல் விவரிக்கப்பட்டுள்ளது; இந்த காவியக் கதைகளை பெரும்பாலான வரலாற்றாசிரியர்களால் வரலாற்று ரீதியாக தவறானதாக கருதப்படுகிறது.

பின்னணி[தொகு]

வடமேற்கு இந்தியாவில் உள்ள மேவார் பகுதி குகிலா வம்சத்தால் ஆளப்பட்டது. அதன் தலைமை இடமாக சித்தோர்கார் கோட்டை ( சித்ரதுர்கா ) அமைந்திருந்தது. 1299 இல், அலாவுதீனின் தளபதி உலுக் கான் , குஜராத் செல்லும் வழியில் மேவார் பகுதியில் தாக்குதல் நடத்தினார். இருப்பினும், இது ஒரு தீவிரமான படையெடுப்பாக இல்லாமல் ஒரு லேசான தாக்குதலாகத் தோன்றுகிறது. மேலும் குகிலா மன்னர் சமரசிம்கா தனது நாட்டை சூறையாடலிருந்து பாதுகாத்தார். [2] ஒருவேளை திறை செலுத்தி இருக்கலாம் . [3]

கி.பி. 1296 இல் தன் மாமா ஜலாலுதீன் கில்ஜியிடமிருந்து அரியணையைக் கைப்பற்றிய பிறகு, அலாவுதீன் பல்வேறு இந்து ஆட்சியாளர்கள் மற்றும் இடைநிலை அதிகாரிகளின் பல்வேறு கிளர்ச்சிகளையும், எதிர்ப்புகளையும் முறையாக அடக்கி, மங்கோலியர்களின் தாக்குதல்களைத் தடுக்கத் தொடங்கினார்.[1] இது கி.பி. 1299 இல் குசராத்து அடிபணிய வழிவகுத்தது. 1301 இல், அலாவுதீன் தில்லிக்கும் சித்தூருக்கும் இடையில் அமைந்துள்ள இரன்தம்போரைக் கைப்பற்றி, பின்னர் தில்லிக்குத் திரும்பினார். அதே ஆண்டு, இரத்னசிம்மர் சித்தூரின் அரியணை ஏறினார். [4] மேவார் படையெடுப்பு மற்றும் சித்தூர் கோட்டை முற்றுகைக்கு இரண்டு முக்கிய காரணங்களை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, அலாவுதீன் முன்பு குஜராத்தை அடிபணியவைத்து, அதை அடைவதற்காக மேவார் வழியாக தன்படைகளுடன் செல்ல எதிர்த்த இரத்தன் சிங் (இரதன்சிம்ஹா) மீது கோபமடைந்தார்.[1] மாலிக் முகமது ஜாயசியின் பத்மாவத் காவியத்தை அடிப்படையாகக் கொண்ட பிற்கால வாய்மொழிக்கதைகள், இரத்னசிம்ஹாவின் அரசி பத்மினியை (இந்தக் கதைகளில் இரத்தன் சென் அல்லது இரத்தன் சிங் என்று அழைக்கப்படுகின்றார்) அடைய அலாவுதீன் சித்தூர் மீது படையெடுத்ததாகக் கூறுகிறது. இந்த கதைகளின்படி, இராகவா என்ற மனிதர் பத்மினியின் பேரழகைப் பற்றி அலாவுதீனிடம் கூறியதாக உள்ளது. [5] இருப்பினும் அலாவுதீன் சித்தூரை கைப்பற்றியதற்கான ஆரம்ப கால வரலாற்றுப் பதிவுகளான அமீர் குஸ்ராவ், பரணி, இசாமி ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகள் பத்மினியைக் குறிப்பிடவில்லை. பெரும்பாலான நவீன வரலாற்றாசிரியர்கள் பத்மினி கதையில் உள்ள நம்பகத்தன்மையை நிராகரித்துள்ளனர். [6]

முற்றுகை[தொகு]

2011 இல் சித்தூர் கோட்டை

1303 சனவரி மாதம், அலாவுதீன் ஒரு பெரிய படையுடன் சித்தூருக்கு அணிவகுத்துச் செல்லத் தொடங்கினார். கோட்டைக்கு அருகில் வந்த பிறகு, பெராச் மற்றும் கம்பீரி ஆறுகளுக்கு இடையே முகாம் அமைத்தார். அப்போது அவருடைய படைகள் கோட்டையை எல்லாப் பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைத்தது. கோட்டையின் வடக்கே அமைந்துள்ள சிட்டோரி மலைப்பகுதியில் அலாவுதீன் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.[7]

இந்த முற்றுகை ஏறக்குறைய 8 மாதங்கள் நீடித்தது, இது கோட்டைக் காவலர்களின் வலுவான எதிர்ப்பைக் காட்டுவதாக உள்ளது. அலாவுதீனுடன் சித்தூருக்குச் சென்ற அமீர் குஸ்ராவ் இந்த முற்றுகையைப் பற்றி சுருக்கமாக தனது கஜாயின் உல்-புதுவில் விவரித்துள்ளார். என்றாலும், முற்றுகை நடவடிக்கைகள் பற்றிய விரிவான செய்திகள் அதில் எதுவும் கிடைக்கவில்லை.[8] படையெடுப்பாளர்களின் முன்புறத் தாக்குதல்கள் இரண்டு முறை தோல்வியடைந்ததாக குஸ்ரூ குறிப்பிடுகிறார். மழைக்காலத்தின் இரண்டு மாதங்களில், படையெடுப்பாளர்கள் மலையின் "இடை"ப் பகுதியை அடைய முடிந்தது, ஆனால் மேலும் முன்னேற முடியவில்லை என்று அவர் கூறுகிறார். அலாவுதீன் கோட்டையை முற்றுகையிடும் சாதனங்களில் இருந்து கற்களை எறியுமாறு கட்டளையிட்டார். அதே நேரத்தில் அவரது கவச வீரர்கள் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அதைத் தாக்கினர். [7]

கோட்டைக் காவற்படையினர் உணவுப் பஞ்சம் அல்லது தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். 1303 ஆகத்து 26 அன்று, அலாவுதீன் கோட்டைக்குள் நுழைந்தார்.[7] அலாவுதீன் தன் வெற்றிக்குப் பிறகு, சித்தோரின் மக்களைப் படுகொலை செய்ய உத்தரவிட்டார். அமீர் குஸ்ருவின் கூற்றுப்படி, இந்த உத்தரவின் விளைவாக 30,000 இந்துக்கள் "காய்ந்த புல் போல வெட்டப்பட்டனர்".[9]

ரத்னசிம்மனின் முடிவு[தொகு]

சித்தூரின் மன்னரான இரத்னசிம்மனுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் வேறுபடுகின்றன. அமீர் குஸ்ராவ், ஜியாவுதீன் பரனி, இசாமி போன்ற ஆரம்பகால முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள், சித்தூரின் பெயர் சொல்லப்படாத ஆட்சியாளர் ("இராய்") அலாவுதீனிடம் சரணடைந்ததாகவும், மன்னிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். [10] [11] சமண எழுத்தாளர் காக்கா சூரி (1336) அலாவுதீன் அங்கு கைப்பற்றபட்ட செல்வத்தை எடுத்துக்கொண்டு, "ஒரு குரங்கு ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு சென்றதுபோல சென்றார்" என்று கூறுகிறார். [12]

முற்றுகையின் துவக்கக்கால இந்து பதிவான கி.பி. 1460 ஐச் சேர்ந்த கும்பல்கர் பிரஷஸ்தி (புகழ்ச்சிக் கல்வெட்டு), இரத்னசிம்கா போர்க்களத்திலிருந்து "புறப்பட்டுச் சென்றார்" என்று கூறுகிறது. அதன் பிறகு இலட்சுமசிம்கா கோட்டையைப் பாதுகாத்து இறந்தார், ஏனெனில் கோழைகள் மட்டுமே "குடும்பத்தின் மேன்மையான மரபுகளைக் கைவிடுகிறார்கள்." " அதேசமயம்" வீரமும் உறுதியும் கொண்டவர்கள் தங்கள் நாட்டத்தைக் கைவிட மாட்டார்கள்."[13] [14] நவீன வரலாற்றாசிரியர்கள் "புறப்பட்ட" ( சமஸ்கிருதத்தில் தஸ்மின் வாசல்) என்ற சொல்லுக்குப் பலவிதமாக விளக்கம் அளித்துள்ளனர், ஒன்று இரத்னசிம்கா போர்க்களத்தில் போரிட்டு இறந்தார் அல்லது அவர் பாதுகாவலர்களைக் விட்டு வெளியேறி சரணடைந்தார் என்று பொருள்.[15]

அலாவுதீன் கோட்டையைக் கைப்பற்றுவதற்கு முன் கும்பல்கர்க் மன்னருடனான போரில் இரத்னசிம்கா ("இரதன் சென்") இறந்ததாக பத்மாவதி காவியம் கூறுகிறது. [16] 17 ஆம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியர் முஹ்னோத் நைன்சி, இரத்னசிம்கா போர்க்களத்தில் இறந்ததாகக் கூறுகிறார். [5]

கூட்டுத் தீக்குளிப்பு[தொகு]

16 ஆம் நூற்றாண்டில் பழம்பெரும் கவிதையான பத்மாவதி காவியத்தில் இரத்னசிம்காவின் மனைவி இராணி பத்மினியும் மற்ற பெண்களும் அலாவுதீனிடம் பிடிபடாமல் தப்ப ஜவுஹர் (கூட்டுத் தீக்குளிப்பு) மூலம் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறுகிறது. இந்த நூல்களின்படி, கில்ஜியின் மிகப் பெரிய படையை எதிர்த்து இராஜபுத்திரர்களால் வெல்ல முடியாது என்பதை அறிந்த இராணி பத்மினி, மற்ற பெண்களுடன் சேர்ந்து ஜௌஹர் என்ற சடங்கு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.[1] ஒரு பெரிய சிதை எரியூட்டப்பட்டு அதில் அரசி மற்ற பெண்களுடன் மரியாதையுடன் இறந்தார். இக் கூற்று பல பிற்கால நூல்களிலும் மீண்டும் மீண்டும் வருகிறது. வரலாற்றாசிரியர் கிஷோரி சரண் இலால் பத்மாவத் ஒரு வரலாற்று நூல் என்பதை நிராகரிக்கிறார். ஆனால் அலாவுதீனின் வெற்றியைத் தொடர்ந்து சித்தூரில் ஒரு ஜவுஹர் (கூட்டுத் தீக்குளிப்பு) நடந்ததாக நம்புகிறார். [9] மறுபுறம், பனார்சி பிரசாத் சக்சேனா குறிப்பிடுகையில், சமகால எழுத்தாளர் அமீர் குஸ்ரூ சித்தூரில் கூட்டுத் தீக்குளிப்பு பற்றி குறிப்பிடவில்லை, இருப்பினும் அவர் அலாவுதீனின் முந்தைய இரணதம்போர் வெற்றியின் போது கூட்டுத் தீக்குளிப்பபைக் குறிப்பிட்டுள்ளார். எனவே, சக்சேனா சித்தூரின் ஜௌஹரின் கதை பிற்கால எழுத்தாளர்களின் புனைவு என்று நம்புகிறார்.[17]

பின்விளைவு[தொகு]

அலாவுதீன் அந்த நேரத்தில் 7 அல்லது 8 வயதாக இருந்த தனது மகன் கிசார் கானுக்கு (அல்லது கிதர் கான்) சித்தோரை அளித்தார். சித்தூர் கோட்டையின் பெயரானது இளவரசரின் நினைவாக "கிசாராபாத்" என மாற்றபட்டது. [17] கிசர் கானுக்கு தங்க-சரிகை வேலைப்பாடு செய்யப்பட்ட அங்கி மற்றும் சிவப்பு விதானம் வழங்கப்பட்டது. இது பொதுவாக அடுத்த வாரிசுக்கு வழங்கப்படுவது. அலாவுதீன் 7 நாட்கள் சித்தூரில் தங்கியிருந்தார். பின்னர் மங்கோலிய படையெடுப்பு பற்றி அறிந்த பிறகு தில்லி சென்றார். [9] 1310 மே 13 தேதியிலான சித்தூரில் உள்ள ஒரு முக்கியமான கல்வெட்டு, அலாவுதீனை மன்னராகப் பதிவுசெய்துள்ள. அந்தக் காலம் வரை அந்த இடம் கில்ஜிகளின் வசமே இருந்தது என்பதைக் குறிக்கிறது.[18]

கிஜ்ர் கான் சிறுவனாக இருந்ததால், உண்மையான நிர்வாகம் மாலிக் ஷாஹின் என்ற அடிமையிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் நைப் இ பார்பெக் (அரசவையின் துணைப் பொறுப்பாளர்) பதவியை வகித்தார்.[19] மேலும் அலாவுதீன் அவரைத் தனது மகன் என்று அழைத்தார் . [17] 14 ஆம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியர் இசாமியின் கூற்றுப்படி, அலாவுதீனின் 1299 படையெடுப்பிற்குப் பிறகு அண்டை நாடான குஜராத் பகுதியை மீண்டும் கைப்பற்றிய வகேலா மன்னன் கர்ணனுக்கு பயந்து மாலிக் ஷாஹின் சிறிது காலத்திற்குப் பிறகு கோட்டையை விட்டு ஓடிவிட்டார். [17]

பின்னர், ஒரு இந்து ஆட்சியாளர் மூலம் மறைமுகமாகச் சித்தூரை ஆள்வதே சிறந்தது என்று அலாவுதீன் முடிவு செய்ததாகத் தெரிகிறது. அவர் சித்தோரின் ஆட்சியை கிஸ்ர் கானிடம் இருந்து சகமானா தலைவர் மலதேவாவிடம் (மால்டியோ) ஒப்படைத்தார். அவருக்கு உள்ளூர்வாசிகளின் ஆதரவு இருந்தது. [20] மலதேவா கன்ஹாததேவாவின் சகோதரர் ஆவார். மேலும் ஜலோர் கோட்டையை அலாவுதீனின் முற்றுகையிட்ட போது ஒரு விபத்தில் இருந்து அலாவுதீனின் உயிரைக் காப்பாற்றினார். [21] அவர் 5,000 குதிரை வீரர்களையும் 10,000 காலாட்படை வீரர்களையும் அலாவுதீனின் தொடர் படையெடுப்புகளுக்கு உதவியாக பங்களித்தார். ஏகாதிபத்திய அரசவைக்குத் தனது வருடாந்திர வருகையின் போது அலாவுதீனுக்கு அவர் பரிசுகளைக் கொண்டு வந்தார், அதற்குப் பதிலாக அவர் கௌரவிக்கப்பட்டார். [20] அலாவுதீன் சித்தூரில் ஒரு ஏகாதிபத்திய காவற்படையைப் பராமரித்து வந்தார். மேலும் அவரது கல்வெட்டு ஒன்று (மே 1310 தேதியிட்டது) அங்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [20]

16 ஆம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியர் பிரிஷ்தாவின் கூற்றுப்படி, அலாவுதீன் மரணப்படுக்கையில் இருந்தபோது, சித்தூர் ஆட்சியாளர் கிளர்ச்சி செய்து, கோட்டையில் நிறுத்தப்பட்டிருந்த ஏகாதிபத்திய வீரர்களைக் கொன்றனர். 1321 இல் மலதேவா இறந்த பிறகு, கோட்டை குஹிலாக்களின் சிசோடியா கிளையின் ஆட்சியாளரான ஹம்மிர் சிங்கின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. [20] இருப்பினும், வரலாற்றாசிரியர் பீட்டர் ஜாக்சன், கல்வெட்டுச் சான்றுகளின்படி, முதல் இரண்டு துக்ளக் ஆட்சியாளர்களின் (1321–1350) ஆட்சிக் காலத்திலும், தில்லியில் இருந்து அனுப்பப்பட்ட ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் கோட்டை இருந்தது என்று நம்புகிறார். ஜாக்சனின் கூற்றுப்படி, மலதேவா மற்றும் சிசோடியாஸ் பற்றிய செய்திகள் ஒரு சமஸ்கிருத காவியத்திலிருந்து வந்தவை. மேலும் அவை தவறானவை என்று தெரிகிறது. [22]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 "26th August 1303: Alauddin Khilji of the Khilji Dynasty captures Chittorgarh -". What Happened on This Day in History – Maps of India. 2013-08-26. பார்க்கப்பட்ட நாள் 2021-10-02.
 2. Kishori Saran Lal 1950, ப. 84.
 3. Peter Jackson 2003, ப. 197.
 4. Kishori Saran Lal 1950, ப. 117.
 5. 5.0 5.1 Kishori Saran Lal 1950, ப. 120.
 6. Satish Chandra 2004, ப. 89.
 7. 7.0 7.1 7.2 Banarsi Prasad Saksena 1992, ப. 367.
 8. Kishori Saran Lal 1950, ப. 118.
 9. 9.0 9.1 9.2 Kishori Saran Lal 1950.
 10. Banarsi Prasad Saksena 1992, ப. 368.
 11. Aditya Behl 2012, ப. 177.
 12. Shyam Singh Ratnawat & Krishna Gopal Sharma 1999, ப. 124.
 13. Rajendra Singh Kushwaha 2003, ப. 273.
 14. Manjit Singh Ahluwalia 1978, ப. 96.
 15. Akshaya Keerty Vyas 1937.
 16. Ramya Sreenivasan 2007, ப. 209.
 17. 17.0 17.1 17.2 17.3 Banarsi Prasad Saksena 1992.
 18. Proceedings, Volume 28. இந்திய வரலாற்றுப் பேராயம். 1966. பக். 147. https://books.google.com/books?id=4HlCAAAAYAAJ. 
 19. "indo-pak-administrative-agrarian-terms".
 20. 20.0 20.1 20.2 20.3 Banarsi Prasad Saksena 1992, ப. 371.
 21. Kishori Saran Lal 1950, ப. 130.
 22. Peter Jackson 2003, ப. 198.

வெளி இணைப்புகள்[தொகு]