துவாரகாதீசர் கோயில்
துவாரகாதீசர் கோயில் | |
---|---|
![]() நுழைவாயில் மற்றும் கோபுரங்களுடன் கூடிய துவாரகாநாதர் கோயில் | |
பெயர் | |
பெயர்: | Dwarkadheesh Mandir |
தேவநாகரி: | द्वारकाधीश मंदिर |
வங்காளம்: | দ্বারকাধীশ মন্দির |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | குசராத்து |
அமைவு: | துவாரகை |
ஏற்றம்: | 34 m (112 அடி) |
ஆள்கூறுகள்: | 22°14′15.9″N 68°58′02.4″E / 22.237750°N 68.967333°E |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கிருட்டிணன் |
சிறப்பு திருவிழாக்கள்: | கிருஷ்ண ஜெயந்தி |
துவாரகாதீசர் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அமைந்த இத்தலம் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகிய 5 ஆழ்வார்களால் 13 பாக்களால் பாடல் பெற்றதாகும். இந்தத்தலம் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிராக் கடலோரம், துவாரகை நகரில் அமைந்துள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகில் ஓடக்கூடிய கோமதி என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது.
தல வரலாறு[தொகு]
தற்போதுள்ள ஆலயம் 1500 ஆண்டுகட்குமுன் கட்டப்பட்டதாகும். உண்மையான துவாரகை கடலுள் மூழ்கிவிட்டது. கிருஷ்ணனின் பேரனான வஜ்ரநாபி என்பவனால் பொ.ஊ.மு. 400 இல் கட்டப்பட்டதாகக் கூறும் இந்தக்கோவிலை இங்குள்ள மக்கள் துவாரகா நாத்ஜி ஆலயம் என்றே அழைக்கிறார்கள். இப்போதுள்ள கோவிலும் நான்காவது முறையாக பொ.ஊ. 16 ஆம் நூற்றாண்டில் மேலைச் சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டதாகும். கடந்த 5000 ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் கோளாலும் பிற இன்னல்களாலும் இத்தலம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.[2][3] தற்போதுள்ள அமைப்பு சுமார் 1500 ஆண்டுகட்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட அமைப்பாகும்.[4] இந்துத் தொன்மங்களின்படி கண்ணனின் வரலாற்றோடு தொடர்புடைய இந்நகரம் கண்னனால் நிர்மாணிக்கப்பட்டு இருந்து இறுதி வரை அரசாண்ட இடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறைவன், இறைவி[தொகு]
இத்தலத்தின் இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் துவாரகா நாதன், துவாராகாதீசன், கல்யாண நாராயணன் என்ற பெயர்களுடன் காட்சியளிக்கிறார். இறைவி கல்யாண நாச்சியார் (இலக்குமி) ருக்மணி, அஷ்டமகிசிகள் (எட்டு பட்டத்தரசிகள்). இத்தலத் தீர்த்தம் கோமதி நதி.விமானம் ஹேம கூட விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது.
சிறப்புகள்[தொகு]
இத்தலம் உலகப்பாரம்பரிய களமாக அறிவிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜகத் மந்திர் எனப்படும் துவாரகைக் கண்ணன் கோவில் மிகப்பெரிய அரண்மனை போன்று அமைந்துள்ளது. இங்கு அவரது பட்டத்தரசிகளுக்கும் அண்ணன் பலராமனுக்கும் குரு துர்வாசருக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு. கண்ணனுக்கு உணவும் உடையும் ஓயாமல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 17 முறை உணவு கொடுத்து மணிக்கொருதரம் உடைமாற்றுகிறார்கள்.
காலையில் இங்கு நடைபெறும் திருப்பள்ளியெழுச்சியை உடாபன் என்றழைக்கிறார்கள். அப்போது தங்கப்பல்குச்சியால் பல்விளக்கி லட்டும், ஜிலேபியும் தருகிறார்கள். 7 1/2 மணிக்குள் தீர்த்தமும் பிரசாதமும் படைக்கப்படுகிறது. உண்ட களைப்பு மாறுவதற்குள் மீண்டும் 8 மணிக்கெல்லாம் சக்கரை, பால், தயிர் போன்றன பரிமாறுகிறார்கள். பிறகு அப்பமும், அக்காரம் பாலிற் கலந்து அமுதும் சிற்றுண்டியும் தரப்படுகிறது. அதன்பிறகு கனி வர்க்கங்கள் தரப்படுகின்றன. பிறகு செரித்தலுக்கான லேகியம் தருகிறார்கள். இதன்பின் கண்ணன் உறக்கம் கொள்கிறான். இவ்விதம் கண்ணனுக்கு உணவு கொடுக்கும் இந்த முறைக்கு போக் என்று பெயர். துர்வாசரின் கோபத்திற்கு ஆளாகி அரண்மனையிலிருந்து வெளியேறி ருக்மணி சில காலம் இந்த இடத்தில் தனித்து வாழ்ந்ததால் ருக்மணி தேவிக்கு ஊருக்கு வெளியே தனியாக கோவில் உள்ளது. பக்த மீரா மேவாரிலிருந்து பாலைவனத்தில் நடந்துவந்து கண்ணனுடன் இரண்டறக் கலந்தது இந்த தலத்திலேயே ஆகும்.[4] சூரியன், சந்திரன் பொறிக்கப்பட்ட இக்கோவிலின் கொடி ஒருநாளில் ஐந்து முறை ஏற்றப்படுகிறது.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ M. S., Ramesh (2000). 108 Vaishnavite Divya Desams: Divya desams in Malai Nadu and Vada Nadu. Tirumalai-Tirupati Devasthanam. பக். 188.
- ↑ Subramanian, T.S. (February 23, 2007). "Significant finds at Dwaraka". The Hindu. Archived from the original on 24 பிப்ரவரி 2007. https://web.archive.org/web/20070224105526/http://www.hindu.com/2007/02/23/stories/2007022301242200.htm. பார்த்த நாள்: 26 December 2012.
- ↑ "Dwarka Nagari - Submerged Dwarka". dwarkadhish.org. 10 மார்ச் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 December 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 4.0 4.1 ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.
- UNESCO World Cultural Heritage Site status, report on Indian Express newspaper website
- Underwater remains near Dwarakadheesh temple, on website of National Institute of Oceanography பரணிடப்பட்டது 2009-01-12 at the வந்தவழி இயந்திரம்
குறிப்புகள்[தொகு]
- Brockman, Norbert C. (2011), Encyclopedia of Sacred Places, California: ABC-CLIO, LLC, ISBN 978-1-59884-655-3
- Gwynne, Paul (2009), World Religions in Practice: A Comparative Introduction, Oxford: Blackwell Publication, ISBN 978-1-4051-6702-4.
வெளியிணைப்புகள்[தொகு]
- Dwarakadhish temple, Official website
- துவாரகை கோயில் வரலாறு http://www.dwarkadhish.org/jagad-mandir.aspx பரணிடப்பட்டது 2014-03-04 at the வந்தவழி இயந்திரம்
- துவாரகை கோயில் திருவிழாக்கள் http://www.dwarkadhish.org/festival-calender.aspx பரணிடப்பட்டது 2014-03-04 at the வந்தவழி இயந்திரம்
- துவாரகை நகர வரலாறு http://www.dwarkadhish.org/the-surverna-nagari.aspx பரணிடப்பட்டது 2014-03-04 at the வந்தவழி இயந்திரம்
- சுற்றுலா பயணிகளுக்கான குறிப்புகள் http://www.dwarkadhish.org/tour-guide.aspx பரணிடப்பட்டது 2014-03-04 at the வந்தவழி இயந்திரம்