உள்ளடக்கத்துக்குச் செல்

விஷ்ணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஷ்ணு
விஷ்ணு-நான்கு கரங்களுடன்
அதிபதிகாத்தல், வைணவ, யாவற்றுக்கும்
தேவநாகரிविष्णु
சமசுகிருதம்viṣṇu
வகைமுழுமுதல்,மும்மூர்த்திகள்
இடம்வைகுந்தம்
ஆயுதம்சங்கு, சக்கரம், வில், கதாயுதம், மற்றும் நந்தகம்
துணைஇலக்குமி, பூமாதேவி, நீளாதேவி
குழந்தைகள்பிரம்மா, காமதேவன், செவ்வாய்
பூதேவி மற்றும் சிரீதேவியுடன், நாபிக் கமலத்தில் பிரம்மனுடன் கூடிய மகாவிட்டுணுவின் பஞ்சலோக சிலை
சிறீதேவி, பூதேவி உடனுறை மகாவிஷ்ணு
தியான நிலையில் நான்கு கைகளுடன் கூடிய விட்டுணுவின் சிற்பம், அரசு அருங்காட்சியகம், மதுரா

விஷ்ணு, அல்லது விட்டுணு (ஆங்கில மொழி: Vishnu), என்பவர் இந்து சமயத்தின் முக்கியமான கடவுள்களில் ஒருவரும் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளும் ஆவார். மும்மூர்த்திகளில் ஒருவரான விட்டுணு மூவுலகையும் காப்பவராக இருக்கிறார். இவர் பிறப்பும், இறப்பும் இல்லா பரம்பொருளாக இருப்பதால் பரப்பிரம்மன், பரமாத்மா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

விட்டுணு என்ற சொல்லுக்கு எங்கும் நிறைந்திருப்பவர் என்று பொருள். வைணவ சமயத்தின் படி, பரப்பிரம்மனான விட்டுணு, உலகில் அதர்மம் தலைதூக்கும் போது தர்மத்தை நிலைநாட்ட பல்வேறு அவதாரங்கள் எடுப்பார் என்று கூறப்படுகிறது. அதன்படி அவர் எடுத்த தசாவதாரங்களில் இராம மற்றும் கிருட்டிண அவதாரங்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.

நாராயணன், வாசுதேவன், செகன்நாதர், விதோபர், அரி, திருமால் என்று பல பெயர்களால் விட்டுணு அறியப்படுகிறார். இவர் நீல நிற தோற்றத்தில் கீழ் வலது கையில் கௌமேதகியும் கீழ் இடது கையில் பத்மாவும் மேல் வலது கையில் சுதர்சனமும் மேல் இடது கையில் பாஞ்சசன்யமும் , தாங்கிய தோற்றத்துடன் காணப்படுகிறார். மேலும் இவர் பாற்கடலில் லட்சுமி தேவியுடன் ஆதிசேசன் என்ற நாக படுக்கையில் படுத்திருப்பதாக நம்பப்படுகிறது.[1]

விட்டுணுவின் வாகனமாக கருடனும், அருவ வடிவமாகக் சாளக்கிராமமும் கருதப்படுகிறது.

இந்துக்கோவில்களில் சயனக் கோலத்தில் மூலவராக இருக்கும் ஒரே இறைவன் இவரே. திருவரங்கம் போன்ற வைணவத்தலங்களில் இந்தத் திருக் கோலமுள்ளது.[2]

இதிகாசங்களான மகாபாரதம் இவருடைய கிருட்டிண அவதாரத்தினையும், இராமாயணம் இராம அவதாரத்தினையும் விளக்குகிறது. பாகவத புராணம், அரி வம்சம், விட்டுணு புராணம், மச்சபுராணம், வாமன புராணம் உள்ளிட்ட பன்னிரு புராண நூல்கள் விட்டுணுவின் பெருமைகளை விவரிக்கின்றன.[3]

குணநலன்கள்

விட்டுணுவின் குணங்களாக நான்கு குணங்கள் கூறப்பெறுகின்றன. அவையாவன,

  1. வாத்சல்யம் – தாய்ப்பசுவின் கன்று கொள்கின்ற அன்பு.
  2. சுவாமித்துவம் – கடவுள்களுக்கெல்லாம் தலைமையேற்கும் சிறப்பு.
  3. சௌசீல்யம் – ஏற்றத்தாழ்வின்றி நட்பு பாராட்டுவது.
  4. சௌலப்யம் – கடவுளின் எளிமையை குறிப்பது.

இந்த நான்கு குணங்களும் விட்டுணுவுடைய கிருட்டிண அவதாரத்தில் வெளிப்பட்டதாகவும் கருதப்பெறுகிறது. அருச்சுனனின் தவறை நோக்காது, பாரத போரினை நிகழ்த்தியமை வாத்சல்யமாகவும், அருச்சுனனுக்கு தன்னுடைய பரத்துவத்தை விளக்கியமை சுவாமித்தரமாகவும், குசேலனிடம் நட்பு பாராட்டியமை சௌசீல்யமாகவும், இறைவனாகிய விட்டுணு மனிதனாக அவதரித்தது சௌலப்யமாகவும் சொல்லப்பெறுகிறது.[4]

விட்டுணுவின் அவதாரங்கள்

உலகில் அதர்மம் தலையெடுக்கும்போது விட்டுணு உலகில் அவதரித்து உலகைக் காப்பதாக வைணவர்கள் கருதுகின்றனர். இதற்காக விட்டுணு எடுத்த அவதாரங்களை சப்தாவதாரம், தசாவதாரம் என எண்ணிக்கை அடிப்படையில் குறித்துவைக்கின்றனர். பாகவத புராணத்தில் விட்டுணு இருபத்தைந்து அவதாரங்களை எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.[5]

விட்டுணுவின் அவதாரங்களை அவதாரம், ஆவேசம், அம்சம் என பிரிக்கின்றார்கள்.[6]

  1. அவதாரம் – முழு சக்தியை கொண்டது.
  2. ஆவேசம் – தேவையின் போது மட்டும் சக்தி கொண்டவனாகுதல்.
  3. அம்சம் – விட்டுணு சக்தியின் ஒரு பகுதி ஓர் உருக்கொண்டு வெளிப்படுவது.

வாயு புராணம்

அசுரகுருவான சுக்கிராச்சாரியாரின் மனைவியை விட்டுணு கொன்றதால், அவரை ஏழுமுறை மனிதனாக பூமியில் பிறக்கும் படி சுக்கிராச்சாரியார் சபித்தார். இதனால் தத்தாத்ரேயர், பரசுராமர், இராமர், வியாசர், கிருட்டிணன், உபேந்திரன், கல்கி முதலிய சப்த அவதாரங்களை விட்டுணு எடுத்ததாக இதில் கூறப்படுகிறது.

அக்கினி புராணம்

விட்டுணுவும் இலட்சுமியும் பாற்கடலில் தனித்திருக்கும் வேளையில் சனகாதி முனிவர்கள் விட்டுணுவைக் காண வந்தார்கள். அவர்களை செயன், விசயன் எனும் இரு வாயிற்காவலர்களும் தடுத்தனர். இறைவனின் தரிசனத்திற்கு வந்த தங்களைத் தடுத்தமையால் கோபம் கொண்ட முனிவர்கள் வாயிற்காவலர்களைக் கொடூர அசுரர்களாகப் பிறக்கும்படி சாபமிட்டனர். இதையறிந்த விட்டுணு தன்னுடைய வாயிற்காவலர்கள் அரக்கர்களாகப் பிறக்கும் போது, அவர்களை ஆட்கொள்ள தசாவதாரம் எடுத்ததாகக் காரணம் சொல்லப்படுகிறது.

பத்து அவதாரங்கள் அல்லது தசாவதாரங்கள் என்று கூறப்படுவன:

  1. மச்ச அவதாரம்
  2. கூர்ம அவதாரம்
  3. வராக அவதாரம்
  4. நரசிம்ம அவதாரம்
  5. வாமண அவதாரம்
  6. பரசுராம அவதாரம்
  7. இராம அவதாரம்
  8. பலராம அவதாரம்
  9. கிருட்டிண அவதாரம்
  10. கல்கி அவதாரம்

பௌத்த மதத்தினை தோற்றுவித்தவரான கௌதம புத்தரும் விட்டிணுவின் தசாவதாரங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் திருபாற்கடலை கடையும் போது அசுரர்களை மயக்கிய தேவி மோகினியும் மகாவிட்டுணுவின் அவதாரங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. இதுகுறித்து புராணங்களிலும் செய்திகளுள்ளது. அத்துடன் மகாபலிபுரத்தில் அரியரன் சிற்பத்தின் மேல் உள்ள கல்வெட்டொன்றில் தசாவதாரம் குறித்து கீழ்க்கண்ட வடமொழி சுலோகம் எழுதப்பெற்றுள்ளது. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளிலும் உள்ளன. கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை

மத்சய கூர்ம வராஹஸ்ச நாரசிம்மஸ்ச வாமணஹ
ராமோ ராமஸ்ச ராமாஸ்ச புத்தக் கல்கீ தசாஸ்மிருதா:[7]

(ஆனால் வைணவ நூல்களில் புத்தர் குறித்த குறிப்புகள் இல்லை.)

சிரீ மத் பாகவதம்

இதில் பகவான் விட்டுணு மொத்தம் 24 அவதாரங்கள் எடுத்ததாக கூறப்படுகிறது. அவை: 1.சனகாதி முனிவர்கள் 2.ஆதிபுருட அவதாரம் 3.வராக அவதாரம் 4.நாரத அவதாரம் 5.நரநாரயண அவதாரம் 6.கபில அவதாரம் 7.யக்ஞ அவதாரம் 8.ரிசபதேவ அவதாரம் 9.பிருது அவதாரம் 10.அயக்கிரீவ அவதாரம் 11.அம்ச அவதாரம் 12.வியாச அவதாரம் 13.மச்ச அவதாரம் 14.கூர்ம அவதாரம் 15.தன்வந்திரி அவதாரம் 16.மோகினி அவதாரம் 17.நரசிம்ம அவதாரம் 18.வாமன அவதாரம் 19.பரசுராம அவதாரம் 20.ராம அவதாரம் 21.தத்தாத்ரேய அவதாரம் 22.பலராம கிருட்டிண அவதாரம் 23.புத்த அவதாரம் 24.கல்கி அவதாரம்

கடவுளுடனான உறவு

இந்துக் கடவுளும் சிவனின் மனைவியுமான பார்வதி தேவியின் சகோதரனாக விட்டுணு கூறப்படுகிறார். விட்டுணுவின் கண்ணீரில் இருந்து தோன்றிய வள்ளி மற்றும் தெய்வானையை சிவன்-பார்வதி மைந்தனான முருகப்பெருமான் மணந்து விட்டுணுவின் மருமகன் ஆனார். மேலும் பிரம்ம தேவனை தன் நாபியிலிந்து படைத்து அவருக்கு தந்தையானவர். மேலும் பிரம்மனால் சிவன் படைக்கப்பட்டதால் சிவனுக்கு தாத்தா ஆகிறார் விட்டுணு.[சான்று தேவை]

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்றப் பின்பு, அமுதத்தினை அசுரர்கள் அருந்தினால் சாகாவரம் பெற்றவர்களாக ஆகிவிடுவார்கள் எனப் பயந்த தேவர்கள், விட்டுணுவிடம் வேண்டினர். விட்டுணு மோகினி என்னும் பெண் அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு மட்டும் அமுதம் கிடைக்கப்பெறச் செய்தார்.

விட்டுணு நாமாவளி

விட்டுணு நாமாவளி என்பது திருமாலின் வேறுபட்ட பெயர்களின் தொகுப்பாகும். நாம ஆவளி என்பதற்கு பெயர்களின் வரிசை என்று பொருளாகும். கோவிந்த நாமாவளி, சத்யநாராயண அட்டோத்திர சதநாமாவளி, விட்டுணு சகசுரநாமம் அவற்றில் குறிப்பிடத்தக்கன. இதில் விட்டுணு சகசுரநாமம் வைணவத்தலங்களில் மந்திரமாக மூலவரின் முன் மட்டுமல்லாது பெரும்பான்மையானோரால் தினமும் இல்லத்திலும் ஓதப்படுவதாக உள்ளது.

விட்டுணுவிற்கு அனுட்டிக்கும் விரதங்கள்

உலகத்தில் உள்ள வைணவர்கள் பொதுவாக இருபத்து நான்கு ஏகாதசி விரதங்களை கடைபிடிக்கின்றனர். இவ்விரதங்களைப் கடைபிடித்து திருமாலின் அருளை பெற்று நீங்காத செல்வம் பெறலாம்.

பக்‌ஷம். மாதம் விரதத்தின் பெயர் பலன்
சுக்ல சித்திரை காமதா நினைத்த காரியம் நடக்கும்
கிருட்டிண சித்திரை பாப மோசனிகா பாபங்கள் அகலும்
சுக்ல வைகாசி மோகினி பாவம் நீங்கும்
கிருட்டிண வைகாசி வருதிந் பிரம்மகத்தி தோசம் நீங்கும் (சிவன், பிரம்மன் தலையை அறுத்த தோசம் நீங்கிய நாள்)
சுக்ல ஆனி நிர்சலா (பீம) எல்லா ஏகாதசி பலனும் உண்டு (நீர் அருந்தக் கூடாது - பூமியில் நீர் குறைந்து இருக்கும் நாள்)
கிருட்டிண ஆனி அபார குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்
சுக்ல ஆடி சயிநீ தெய்வ சிந்தனை அதிகமாகும் - திரிவிக்கிரமனாய்த் தோன்றி, பின் பாற்கடலில் சயனித்த நாள் (பெயர்க் காரணம்)
கிருட்டிண ஆடி யோகினீ நோய் நீங்கும் (குபேரன் பணியாளன் ஏமநாதன் விரதம் இருந்து குட்ட நோய் நீங்கிய நாள்)
சுக்ல ஆவணி புத்ரசா புத்ர பாக்கியம் கிடைக்கும்
கிருட்டிண ஆவணி சாமிகா விருப்பங்கள் நிறைவேறும்
சுக்ல புரட்டாசி பத்மநாபா பஞ்சம் நீங்கும்
கிருட்டிண புரட்டாசி அசா இழந்ததைப் பெறலாம் - அரிச்சந்திரன் விரதம் இருந்த நாள்
சுக்ல ஐப்பசி பாபாங்குசா கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும், பாபங்கள் அகலும்
கிருட்டிண ஐப்பசி இந்திரா பித்ருக்கள் நற்கதி பெறுவர்
சுக்ல கார்த்திகை ப்ரபோதின் பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும்
கிருட்டிண கார்த்திகை ரமா உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும்
சுக்ல மார்கழி மோட்ச வைகுண்டம் கிடைக்கும்
கிருட்டிண மார்கழி உற்பத்தி சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
சுக்ல தை புத்ரதா புத்ர பாக்கியம் கிடைக்கும் (சுகேதுமான் விரதம் இருந்து பிள்ளைகள் பெற்றான்)
கிருட்டிண தை சபலா பாப நிவர்த்தி (உலும்பகன் மோட்சம்)
சுக்ல மாசி செயா பேய்க்கும் மோட்சம் உண்டு (மால்யவான் பேயான சாபத்தில் இருந்து விடுதலை பெற்றான்).
கிருட்டிண மாசி செட்திலா அன்ன தானத்திற்கு ஏற்றது.
சுக்ல பங்குனி ஆமலதீ கோதானம் செய்ய ஏற்றது.
கிருட்டிண பங்குனி விசயா இராமர் சீதையை மீட்க, பகதாப்யர் எனும் முனிவரின் உபதேசப்படி, விரடம் இருந்த நாள்.
சுக்ல / கிருட்டிண (சில வருடங்களில் மட்டும்) கமலா மகாலட்சுமித் தாயாரின் அருள் கிடைக்கும்.

விட்டுணுவின் மற்ற விரதங்கள்

ஏகாதசி விரதத்தை தவிர்த்து மற்றபடி வைணவர்கள் ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் சத்ய நாராயண விரதம் மேற்கொள்வர். இதை தவிர்த்து நரசிம்ம விரதம், இராம நவமி விரதம் போன்ற விரதங்களை விட்டுணுவின் அந்தந்த அவதார செயந்தி அன்று மேற்கொள்வர் .

விட்டுணுவிற்கு கொண்டாடும் பண்டிகைகள்

கிருட்டிணரும் சத்யபாமாவும் நரகாசுரனை அழித்ததால் தீபாவளிப் பண்டிகையையும், வராக செயந்தி, மத்சய செயந்தி, சுதர்சன செயந்தி, கூர்ம செயந்தி, வாமன செயந்தி, கிருட்டிண செயந்தி (சிரீ செயந்தி), சிரீ ராம நவமி, அயக்ரீவ செயந்தி, நரசிம்ம செயந்தி, போன்ற தினங்களில் விட்டுணுவை வழிபட்டு பக்தர்கள் மகிழ்வர்.

விட்டுணுவின் சிறப்புத் தலங்கள்

ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த நூற்றெட்டு வைணவ திவ்விய தேசங்கள், அபிமான தலங்கள், பத்ராச்சலம், பூரி செகந்நாதர் திருக்கோவில், திருவயோதி, மதுரா , துவாரகை, திருவரங்கபட்டணம் , போன்ற தலங்கள் மிகவும் சிறப்பிடம் பெற்ற விட்டுணுவின் ஆலயங்கள் ஆகும்.

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

பன்னிரு ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் உலகெங்கும், தமிழ் பேசாத ஊர்கள் , நாடுகளிலும் கூட விட்டுணுவிற்கு விண்ணப்பிக்கப் படுகிறது.

விட்டுணுவின் ஆயிரம் பெயர்கள்

விட்டுணுவின் ஆயிரம் பெயர்களை கோர்வையாக ஒருங்கினைத்து விட்டுணு சகசுரநாமம் என்ற தொகுப்பாக விசாயர் அருளியுள்ளார். இது விட்டுணு சகசுர நாமாவளி என்ற பெயரிலும் அழைக்கப்பெறுகிறது. மகாபாரதத்தில் பீசுமர் யுதிட்டிரனுக்கு போர்க்களத்தில் விட்டுணுவின் பெயர்களைக் கூறுவதாக அப்பகுதி அமைந்துள்ளது. ச.கேசவன் என்பவர் அப்பகுதியை தமிழில் எழுதியுள்ளார்.[8] இவ்வாறான நாமாவளிகளுக்கு உரை எழுதுவது பாசியம் என்று அழைக்கப்பெறுகிறது. விட்டுணு சகசுரநாமத்திற்கு ஆதிசங்கரரால் உரையெழுதப்பெற்றது என்ற நம்பிக்கையுள்ளது.[9][10]

இந்த விட்டுணு சகசுரநாமத்தினை நூறு பேர் ஒரே சமயத்தில் வாசிப்பதை விட்டுணு சகசுரநாம லட்சார்ச்சனை என்கிறார்கள். இது வைணவத் தலங்களில் விட்டுணு சகசுரநாம பாராயணம் லட்சார்ச்சனை விழா என்ற பெயரில் நடைபெறுகிறது.

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், இந்தியாவின் மிகப்பெரிய இந்துக் கோவில்.[11]

காண்க

மேற்கோள்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
விஷ்ணு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd1.jsp?bookid=120&part=II&pno=1146
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2018-07-09. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
  3. http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=19
  4. http://temple.dinamalar.com/news_detail.php?id=4744
  5. http://temple.dinamalar.com/StoryDetail.php?id=36211
  6. புவியினர் போற்றும் பூவராகன் - எஸ். வெங்கட்ராமன் - ஏப்ரல் 17, 2009
  7. http://www.tamilartsacademy.com/journals/volume12/articles/article5.xml
  8. http://www.indusladies.com/forums/pujas-prayers-and-slokas/118104-vishnu-sahasranamam-in-tamil.html
  9. http://www.visvacomplex.com/SriGanEsa_Sahasranamam1.html
  10. http://www.tamilhindu.com/2011/04/tamils-and-vedanta-3/
  11. Mittal & Thursby 2005, ப. 456.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணு&oldid=4168550" இலிருந்து மீள்விக்கப்பட்டது