குபேரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குபேரன்
SAMA Kubera 1.jpg
சான் அண்டொனியோ கலை
அருங்காட்சியகத்தில் குபேரன் சிலை
அதிபதி செல்வத்தின் அதிபதி,
வடதிசையின் கடவுள்
தேவநாகரி कुबेर
சமசுகிருதம் Kubera
வகை தேவன், லோகபாலன் (திக்பாலன்)
இடம் அலாகா
மந்திரம் ஓம் ஷம் குபேராய நமஹ
ஆயுதம் கதை
துணை யட்சி

இந்து தொன்மவியலின் அடிப்படையில் குபேரன் செல்வத்தின் அதிபதியாவார். விச்வரஸ் மற்றும் இலவித யின் மகனான இவருக்கு ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்ற சகோதர்களும், சூர்ப்பனகை என்ற சகோதரியும் இருந்தனர். இவருக்கு சித்திரலேகா என்ற மனைவியும், இத்தம்பதிகளுக்கு நளகூபன், மணிக்ரீவன் என்று இரண்டு மகன்களும் உள்ளனர்.

சிவபக்தனான குபேரன் தன்னுடைய சிவவழிபாட்டால் வடதிசைக்கு அதிபதியானார். அதன்காரணமாக எண்திசை பாலகர்களில் ஒருவர் என்று அழைக்கப்படுகிறார். சிவபக்தியின் காரணமாக சிவபெருமான் சுவர்ண பைரவராக குபேரனுக்கு செல்வதினை நிர்வகிக்கும் பொறுப்பினை தந்தார். [1]

திருப்பதி ஏழுமலையானுக்கு குபேரன் கடன் கொடுத்ததாக கதையுண்டு. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கை. மேலும் குபேர இயந்திரம், குபேர யாகம் போன்றவையும் செல்வத்தினை பெருக்கும் என மக்கள் நம்புகின்றார்கள்.

புத்த மதத்திலும் குபேரன் உண்டு. அங்கு இவரை வைஸ்ரவணா என்று வழிபடுகிறார்கள். ஜைன மதத்தில் குபேரனை சர்வானுபூதி என்று வழிபடுகின்றனர்.

குபேர தோற்றம்[தொகு]

பிரம்மாவின் பேரனான விச்வரஸ் என்பவருக்கும் பாரத்துவாசர் சப்தரிஷிகளுள் ஒருவர் மகளான இலவித என்பவருக்கும் பிறந்தவர் குபேரன். விச்வரஸ் கைகேசி தம்பதியர்களுக்கு இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை மற்றும் விபீஷணன் ஆகிய பிள்ளைகளும் இருந்தனர்.

அரசாட்சி[தொகு]

தேவர்களின் சிற்பியான விஸ்கர்மா குபேரனுக்காக அழகாபுரி எனும் பட்டிணத்தினை படைத்துத்தந்தார். இந்தநகரம் குபேரபட்டினம் என்றும் அழைக்கப்படுகிறது. தற்போதைய இலங்கையே பண்டைய நாளில் அழகாபுரியாக இருந்ததாக கருத்துண்டு.

குபேரபட்டினமான அழகாபுரியில் அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் மெத்தை, மீனாசனம் ஆகியவைகளின் மீது அமர்ந்து ஒரு கை அபயமுத்திரை, கிரீடம் முதலிய தங்க ஆபரணங்களுடன் முத்துக் குடையின் கீழ் சிம்மாசனத்தில் தனது தர்ம பத்தினியான யட்சியுடன் சேவை சாதிக்கிறார் குபேரன். சிவந்த மேனியும் குள்ளமான உருவமும், பெரிய வயிறும் உடையவராக குபேரன் சித்தரிக்கப்படுகிறார்.

சிவபக்தன்[தொகு]

சிறந்த சிவபக்தரெனவும், சிவனுடைய இனிய நண்பரெனவும் கதைகளில் கூறப்படுகின்றன. வடக்கு திசை அதிபதியாகவும் அஷ்டதிக் பாலகர்களில் ஒருவராகவும் வணங்கப்படுகிறார். குபேரன் சிவனின் தோழர் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு சிவனின் நண்பர் என்றும் பொருள் கொள்ளும் படியாக சிவசகா என்ற பெயரும் குபேரனுக்கு உண்டு.

சிவபெருமானைக் குறித்து 800 வருடங்கள் தவமியற்றி அவரது நட்பினை பெற்றார் எனவும், பிரம்மனை நோக்கித் தவமிருந்து வடக்கு திக்கின் பாலனாக, செல்வங்களின் அதிபதியாகவும் வரம் பெற்றார். [2]

அவதாரம்[தொகு]

படைப்பின் கடவுளான பிரம்மாவின் மகனாக புலஸ்தியார் என்பருக்கும் திருவணவிந்து என்பவரது மகளுக்கும் பிறந்தவர் விஸ்வாரா. இவருடைய மகனே குபேரனாவார். குபேரன் சிவனிடம் அதிக பக்தி கொண்டவர். குபேரன் கடுந்தவம் புரிந்து சிவனை வழிபட்டார். அவரது பக்திக்கு மெச்சிய சிவனும், பார்வதி சமேதராகக் காட்சி தந்தார். குபேரனின் தவத்தையும், பூஜையையும் மெச்சி எட்டு திக்கு காவலர்களில் ஒருவராக குபேரனை சிவன் நியமித்தார். ராவணனுக்கு முன்பு குபேரனே இலங்கையின் அதிபதியாக இருந்ததார். அவரிடமிருந்து இலங்கையை ராவணன் கைப்பற்றி ஆட்சி செய்தான் [3]

திருப்பதி ஏழுமலையானுக்கு கடனுதவி[தொகு]

பத்மாவதி தாயாரை காதலித்த ஏழுமலையான் அவரை திருமணம் செய்து கொள்ள குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை இன்னும் அடைக்காமல் இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

திருப்பாற்கடல் வந்த பிருகு முனிவர், தன்னை கண்டுகொள்ளாமல் அவமதித்ததாக மஹாவிஷ்ணு மார்பில் எட்டி உதைத்தார். அடி வாங்கியும் அமைதியான விஷ்ணுவோ, முனிவரின் காலை அழுத்தி பிடித்து விட்டார். இதை கண்டதும் முனிவர் தன் செயலுக்காக வெட்கப்பட்டார். மகாலட்சுமிக்கு கோபம் வந்தது. எட்டி உதைத்த முனிவரை சக்ராயுதத்தால் வெட்டி வீழ்த்தாமல், ஒத்தடம் கொடுக்கிறாரே என்று கோபத்துடன் வெளியேறி பூலோகத்தில் ஒரு அரண்மனை தோட்டத்தில் குழந்தையாய் கிடந்தாள்.

மன்னன் ஆகாச ராஜன் இந்த குழந்தையை தன் மகளாக வளர்த்தார். மகாலட்சுமி இல்லாமல் வருந்திய விஷ்ணு, உடனே ஸ்ரீநிவாசன் என்ற பெயரில் வேடனாக பூலோகம் வந்தார். ஆகாசராஜனின் மகளாக, பத்மாவதி என்ற பெயருடன் மகாலட்சுமி வளர்வது கண்டு அவள் மீது காதல் கொண்டார். பத்மாவதிக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் முடிக்க சம்மதித்த ஆகாசராஜன், பல கோடிக்கு சீதனம் தரவேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்.

உடனே ஸ்ரீநிவாசனான மஹாவிஷ்ணு குபேரனை அணுகி ஆயிரம் கோடி வராகன் (பன்றி முத்திரையுடன் கூடிய பொற்காசு) கடனாக பெற்றார். இதற்காக ஒரு கடன் பத்திரமும் எழுதப்பட்டது. கலியுகம் முடியும்வரை வட்டி மட்டுமே செலுத்தினால் போதும்; அடுத்த யுகத்தில் அசலை அடைத்து விட வேண்டும் என்பதே நிபந்தனை.

அதர்மமான வகையில் கோடியை போடுவோர் காணிக்கையை வட்டியாகவும், தர்ம வழியில் சம்பாதிப்போர் காணிக்கையை அசலின் ஒரு பகுதியாகவும் பெறுவது என்று ஏழுமலையான் முடிவு செய்தார்.

குபேர காணிக்கை[தொகு]

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குபேர காணிக்கை எனும் பெயரில் குபேரனுக்கு காணிக்கை தரப்படுகிறது. இதற்கென தனி அதிகாரி கோவில் நிர்வாகத்தினரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

குபேர வழிபாடு[தொகு]

ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை[தொகு]

செல்வம் விரைவாக கிடைக்க லட்சுமி குபேர பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜையான தீபஒளி திருநாளான தீபாவளி நாளன்று கொண்டாடப்படுகிறது.

குபேர இயந்திரம்[தொகு]

குறுக்கும் நெடுக்குமான எண்களைக் கூட்டும் போது 72 வரக்கூடிய மாய சதுரத்தினை குபேர எந்திரத்துடன் இணைத்து வைக்கின்றார்கள்.

நவநிதிகளுக்கும் அதிபன்[தொகு]

 1. பத்மம்
 2. மஹாபத்மம்
 3. மகரம்
 4. கச்சபம்
 5. குமுதம்
 6. நந்தம்
 7. சங்கம்
 8. நீலம்
 9. பத்மினி

ஆகிய நவநிதிகளுக்கும் அதிபதி குபேரன். இவற்றுள் சங்க நிதி மற்றும் பத்ம நிதி இரண்டும் கூடிக்கொண்டே இருக்கும் நிதிகள் என்று நம்பப்படுகிறது. இந்த சங்க நிதி மற்றும் பதும நிதிகளின் அதிபதியான தெய்வ மகளீரை சங்க லட்சுமி, பதும லட்சுமி என்று அழைக்கின்றார்கள். இவர்கள் இருவரும் குபேரனின் மனைவிமார்கள் என்றும், இவர்களிடம் குபேரன் செல்வத்தினை கொடுத்து வைத்திருப்பதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.

இலங்கையர் நம்பிக்கை[தொகு]

இலங்கையில் குறிப்பாக சிங்களவர் குபேரன் இலங்கையை ஆண்ட ஒரு அரசன் எனும் நம்பிக்கையை கொண்டுள்ளனர். இலங்கையில் இராவணனின் ஆட்சிக்கு முன்பு இலங்கையை ஆண்டதாகவும் இலங்கை சிங்களவரிடையே நம்பிக்கைகள் உள்ளன.[4]


ஆதாரங்கள்[தொகு]

 1. தினமலர் ஆன்மீக மலர் பக்கம் 20- அக்டோபர் 29 2013
 2. http://www.maalaimalar.com/2012/11/06142453/kuberan-resume.html குபேரன் பயோடேட்டா
 3. அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில்
 4. சிங்கள விக்கிப்பீடியா

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குபேரன் (பௌத்தம்) இந்து சமயம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குபேரன்&oldid=2140500" இருந்து மீள்விக்கப்பட்டது