உள்ளடக்கத்துக்குச் செல்

எறும்பியப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எறும்பியப்பா
பிறப்புதேவராஜன்

சுவாமி மணவாளமாமுனிகளின் புகழ்பெற்ற சீடர்களில் ஒருவரான எறும்பியப்பா சோழசிம்மபுரம் (தற்போதைய சோளிங்கர்) அருகில் உள்ள எறும்பி எனும் சிற்றூரில் ஐப்பசி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் தேவராஜன் எனும் இயற்பெயரோடு பிறந்தார். மணவாளமாமுனிகள் வைணவ நெறிகளை கற்பிக்கவும், பாதுகாக்கவும் ஏற்படுத்திய "அஷ்டதிக் கஜங்கள்" எனும் எட்டு பெயர் அடங்கிய குழுவில் இவரும் ஒருவர்.

குருவை அடைதல்

[தொகு]

வைணவத்தின் இரண்டாம் பொற்காலம் எனப்போற்றப்படும் மணவாள மாமுனிகள் காலத்தில், மாமுனிகளின் புகழைக் கேள்வியுற்று அவரைக் காண எறும்பியப்பா திருவரங்கம் வந்தடைந்தார். அங்கே மடத்தில் நுழைகையில் மாமுனிகள் திருவாய்மொழியின் முதல் பாடலான "உயர்வற உயர்நலம்..." எனும் பாடலுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார். வேதம் மற்றும் வேதாந்தத்தின் உட்பொருளை இப்பாடலுடன் இணைத்து மாமுனிகள் கூறிய பொருட்செறிவு மிகுந்த விளக்கம் கேட்டு மெய்மறந்தார் எறும்பியப்பா. ஆயினும் தன்னுடன் உண்ணுமாறு மாமுனிகள் விடுத்த விண்ணப்பத்தை நிராகரித்து ஊருக்கு திரும்பினார். மறுநாள் வழக்கம்போல் தன் நித்யகடமைகளை முடித்து கோயிலாழ்வாரை (வழிபாட்டறை என்பதின் வைணவச் சொல்)திறக்க பலவாறு முயன்றும் முடியாது போக, பெருத்த வருத்தமுற்று அன்றுமுழுதும் உண்ணாது பொழுதைக் கழித்தார். அன்றைய இரவுக் கனவில் அவரின் கோயிலாழ்வாரில் குடிகொண்டுள்ள, அவரால் தினமும் வணங்கப்படும் இராமன் தோன்றி கோயிலாழ்வார் திறவாததற்கு காரணமும், இளையாழ்வாரின்(ஆதிசேடன், இராமனுசன்) மறுஅவதாரமே மணவாள மாமுனிகள் என்றும் அவரை குருவாக ஏற்கும்படியும் ஆணையிட்டு மறைந்தார். மறுநாள் திருவரங்கம் மீண்டும் வந்து கோயில்கந்தாடையண்ணன் மூலமாக மாமுனிகளுக்கு மாணவனாகியதோடு அஷ்டதிக் கஜங்களிலும் ஒருவரானார்.

இயற்றிய நூல்கள்

[தொகு]
  • பூர்வ தினசார்யை
  • உத்தர தினசார்யை
  • வரவரமுனி சதகம்
  • விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம்
  • உபதேச ரத்தின மாலையின் கடைசி பாடல் (மண்ணுயிர்காள்...)

சீடர்கள்

[தொகு]

இவரின் புதல்வரான பெரியவப்பா என்பவரே இவரின் முதல் சீடர்.சேனாபதி ஆழ்வான் இவரின் இரண்டாம் சீடராவர்.

தனியன்

[தொகு]

கீழ்க்கண்ட வடமொழி தனியன் இவரின் மேன்மையை பறைசாற்றுகிறது.

ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம்
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எறும்பியப்பா&oldid=3529293" இலிருந்து மீள்விக்கப்பட்டது