நப்பின்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஷ்ணு , ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி(நப்பின்னை)

நப்பின்னை என்பவள், பழந்தமிழ் வைணவப் பாசுரங்களும் சைவத் திருமுறைகளும் குறிப்பிடும், கண்ணனின் மனைவியாவாள். நப்பின்னை, கண்ணனின் வளர்ப்புத் தாய் யசோதையின் தமையனான கும்பக்கோன் மகள். அவளுடன் கண்ணனும், பலராமனும் இணைந்து சிறுவயதில் ஆடும் குரவைக்கூத்தையே சிலப்பதிகாரம் சித்தரிக்கின்றது.[1] மிதிலை அரசனான கும்பக்கோன்[2], தன் காளைகளை அடக்குபவனுக்கு நப்பின்னை கிடைப்பாள் என்று அறிவித்து வைக்கும் போட்டியில் கண்ணன் கலந்துகொண்டு, ஏறுதழுவி வென்று, நப்பின்னையை மணம் புரிகின்றான்.

காலத்தாற் பிந்திய திருவள்ளுவமாலையின் பாடலொன்றில், இவள் "உபகேசி" என்ற பெயரில் சுட்டப்படுகின்றாள்.[3]கண்ணனின் திருவிளையாடல்களையும், தேவியரையும் பற்றிக் கூறும் பாகவதம், மகாபாரதம், விஷ்ணு புராணம் முதலிய நூல்களிலோ, வடநாட்டு இலக்கியங்களிலோ இவள் பற்றிய குறிப்புகளைக் காணக்கிடைக்கவில்லை. எனினும், குறைந்தபட்சச் சான்றுகளின் அடிப்படையில், இவளை, கண்ணனின் எண்மனையாட்டியரில் ஒருத்தியான நக்னசித்தியாக இனங்காண்பதுண்டு.[4]

தமிழிலக்கியங்களில் நப்பின்னை[தொகு]

பழந்தமிழ் இலக்கியங்கள்

சிலப்பதிகாரத்திலும், சீவகசிந்தாமணியிலும் நப்பின்னை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கலித்தொகை முதலான சங்க இலக்கியங்கள் அவளை மணக்கக் கண்ணன் ஏறுதழுவிய செய்தியைச் சொல்கின்றன.[5]

வைணவ இலக்கியங்கள்

ஆண்டாள் தன் திருப்பாவையிலும்[6], நம்மாழ்வார்[7] "பின்னைமணாளன்" (நம்மாழ்வார் பிர.162) என்றும், திருமழிசையாழ்வார் "பின்னைகேள்வ" (மழிசையாழ்வார் பிர.850) என்றும், இன்னும் பலவிதமாகவும், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பலவாறாகக் கண்ணனையும் நப்பின்னையையும் போற்றிப் புகழ்கின்றது.[8]

சைவ இலக்கியங்கள்

மாணிக்கவாசகர், திருமாலை, "ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன்"[9] என்றும், சுந்தரர் "பின்னை நம்பும் புயத்தான்"[10] என்றும் பாடுகின்றனர்.

குழப்பங்கள்[தொகு]

தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் நப்பின்னை பற்றிய குறிப்புகள், வேறெந்த வடமொழி இலக்கியங்களி்லும் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை.[11] எனவே யாரிந்த நப்பின்னை என்பதில் இன்றளவும் குழப்பம் நீடிக்கின்றது. பொதுவாக நப்பின்னையை, சுபத்திரை, நீளாதேவி, ராதை, நக்னசித்தி, ஆகியோருடன் இணைத்தே ஆய்வாளர்கள் தத்தம் வாதங்களை முன்வைக்கின்றனர்.

சுபத்திரை[தொகு]

"நப்பின்னை" என்ற பெயரை மாத்திரம் கருத்திற்கொண்டு, அதை "நல்+பின்னை" என்று பிரித்து, கண்ணனுக்குப் பின் பிறந்தவளான சுபத்திரையாக சில ஆய்வாளர் குறிப்பிடுவர்.[12] குரவைக்கூத்தில் கண்ணன், பலராமர், நப்பின்னை ஆகியோர் நிற்கும் முறைமை, இன்றைய பூரி செகநாதர் கோயிலில் பலராமன், சுபத்திரை, கண்ணன் ஆகியோர் நிற்பதை ஒத்ததாக இருப்பதும், இவர்களின் வாதத்துக்கு வலுச் சேர்க்கின்றது.[13] ஆனால், நப்பின்னையை கண்ணன் தேவி என்று தெளிவாகவே தமிழிலக்கியங்கள் சொல்வதால், பின்னை என்பவள், கண்ணனின் காதலியே அன்றித் தங்கை அல்ல என்று முடிவுகொள்ள முடிகின்றது.

ராதை[தொகு]

மாமல்லபுரம் கோவர்த்தனச் சிற்பத்தில் கண்ணன் அருகே நிற்கும் ஆயர் மடமகள் நப்பின்னை என்று கருதப்படுகின்றாள்.[14]

நப்பின்னை ஆயர்மகள் என்பதால், அதேபோல் ஆயர்குலத்தவளான வடநாட்டுக் கண்ணன் காதலி ராதையே அவள் என்று சொல்லப்படுகின்றது.[15] ராதை, பாகவதத்திலோ விஷ்ணு புராணத்திலோ கூட இல்லாத தொன்மம்.[16] எனவே, ராதை என்ற பாத்திரத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பாகவதத்தின் காலமாகக் கருதப்படும் பொ.பி 10ஆம் நூற்றாண்டுக்குப்[17][18] பின்பேயே இடம்பெற்றிருக்கவேண்டும். ஆனால், நப்பின்னை பற்றிய குறிப்புகள் அதற்கு முன்பிருந்தே தமிழகத்தில் கிடைக்கின்றன. மேலும், ராதையுடன் கண்ணன் களவொழுக்கதில் காதல் புரிவதாகச் சித்தரிப்பதே வழக்கமாக உள்ளபோது, நப்பின்னை, அவனது மனைவியாகக் காட்டப்படுவது, இருவருக்குமுள்ள முக்கியமான வேற்றுமையாகும். தென்னகத்து நப்பின்னை, வடநாட்டுக்கு அறிமுகமானபோது அவள் ராதையாக வளர்ச்சி பெற்றிருக்கலாம். அல்லது, வாய்வழி மரபுகளில் நிலவிவந்த ஆயர்குலக் கண்ணன் காதலி என்ற படிமம், தென்னகத்தில் நப்பின்னையாகவும், சற்றுப் பிந்தி வடநாட்டில் ராதையாகவும் வளர்ச்சி கண்டிருக்கலாம்.[19] எனினும் இவற்றை உறுதிப்படுத்த போதுமான சான்றுகளில்லை.[20][21]

நீளாதேவி[தொகு]

நிலமகள், அலைமகள், நீள்மகள் ஆகிய மூவரையும் திருமால் துணைவியராகக் கொள்வது வைணவ மரபு.[22] பூமாதேவி, இலட்சுமி ஆகியோர் பற்றிய தரவுகள், பாசுரங்களில் அடிக்கடி குறிக்கப்பட்டாலும், மிக அரிதாக நீளாதேவியின் இடத்தில் நப்பின்னை இணைக்கப்பட்டு, இத்தேவியர் மூவரும் பாடப்படும் பாசுரங்களும் இல்லாமலில்லை!

பின்னைகொல் நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்,

என்ன மாயங்கொ லோ?இ வள்நெடு மாலென் றேநின்று கூவுமால்,

முன்னி வந்தவன் நின்றி ருந்துறை யும்தொ லைவில்லி மங்கலம்

சென்னி யால்வணங் கும்அவ்வூர்த்திரு நாமம் கேட்பது சிந்தையே.

நம்மாழ்வார், திருவாய்மொழி ஆறாம்பத்து - ஐந்தாம் திருமொழி 10ம் பாசுரம்

கூந்தல்மலர் மங்கைக்கும் மண்மடந் தைக்கும்

குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை

வாய்ந்த வழுதி நாடன் மன்னு

குருகூர்ச் சடகோபன் குற்றே வல்செய்து,

ஆய்ந்த தமிழ்மாலை ஆயி ரத்துள்

இவையுமோர் பத்தும்வல் லார்,உலகில்

ஏந்து பெருஞ்செல்வந் தாராய்த் திருமால்

அடியார் களைப்பூ சிக்கநோற் றார்களே.

திருவாய்மொழி ஐந்தாம்பத்து - ஆறாம் திருமொழி 11ம் பாசுரம்

ஆகிய வரிகளில், நீளா தேவியின் இடத்தில், ஆயர் குலத்தவளான நப்பின்னை குறிப்பிடப்படுவதைக் காணலாம். அவதாரக் கண்ணோட்டத்தில், ருக்மணி, ச‌‌த்‌தியபாமா‌ ஆகியோரை முறையே திருமகள், பூமாதேவி ஆகியோருடன் இணைப்பது போல், நப்பின்னையை நீளாதேவியுடன் இணைத்துப் பார்க்கமுடிகின்றது.[23][24][25]

நக்னசித்தி[தொகு]

பாகவதத்திலும் மகாபாரதம் முதலான நூல்களிலும், கண்ணனின் எண்மனையாட்டிகளில் ஒருத்தியாகச் சொல்லப்படுபவள், நக்னசித்தி. இவளுக்கும் நப்பின்னைக்கும் உள்ள மிக முக்கியமான ஒற்றுமை, இருவரையுமே ஏறு தழுவல் மூலமே கண்ணன் கைப்பிடிக்கின்றான்.மிதிலைநகர் நப்பின்னை போலன்றி, நக்னசித்தி அயோத்தியின் இளவரசியாகவே சித்தரிக்கப்படுகின்றாள்.[26][27] ஆனால், கிடைக்கின்ற சான்றுகளின் அடிப்படையில் நப்பின்னையை, கொஞ்சமாகவேனும் வடநாட்டுக் கண்ணன் தேவியரில் இணைக்க முடிகின்ற ஒரேயொருத்தி, நக்னசித்தியே என்பதால், இருவரும் ஒருவரே[28][29] எனக் கொள்வதில் தவறில்லை.

பிற்காலத் தமிழ் மரபு[தொகு]

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த மதுரகவி ஸ்ரீநிவாச ஐயங்காரின் "நப்பின்னைப் பிராட்டியார் திருமணம்" எனும் நூல், தமிழில் வெளிவந்துள்ள நப்பின்னை பற்றிய இறுதியான - முழுமையான நூலாக இனங்காணப்படுகின்றது.[30]

மேலும் பார்க்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. E.A.Edholm and C.Sunesan, (1972) "The seven bulls and Krsna's marriage to Nila/Nappinnai" pp.43-47"
 2. Journal of the Institute of Asian Studies, Volume 16 (1996) p.126
 3. நல்கூர் வேள்வியார் பாடல்
 4. R. K. Das (1964) "Temples of Tamilnad" p.51
 5. Charlotte Vaudeville (1996) "Myths, Saints and Legends in Medieval India" p.44
 6. திருப்பாவை 19,20
 7. பெரிய திருவந்தாதி 48
 8. நப்பின்னைப் பிராட்டியார் பரமான அருளிச்செயல்கள்
 9. திருக்கோவையார் 18:8
 10. திருமுறை 7:63:7
 11. T. Padmaja (2002) "Temples of Kr̥ṣṇa in South India: History, Art, and Traditions in Tamilnāḍu" pp.86
 12. J. J. Bhabha "Mārg̲, Volume 23" (1969) p.85
 13. Congress and Sundeep Prakashan (2001) "Proceedings of the 9th Session of Indian Art History Congress, Hyderabad, November 2000 p.152
 14. கம்பன் (1991) "நப்பின்னைப் பிராட்டியார் திருமணம்" ப.XX
 15. Ramesh Chandra Dwivedi (1982) "Summaries of Papers, XXXI All-India Oriental Conference" p.494
 16. Barbara Stoler Miller (2003) "Gītagovinda of Jayadeva: love song of the dark lord" P. 28
 17. "The Advaitic Theism of the Bhāgavata Purāṇa", p. 6, by Daniel P. Sheridan
 18. van Buitenen, J. A. B (1966). "The Archaism of the Bhagavata Purana". in Milton Singer. Krishna: Myths, Rites, and Attitudes. பக். 23–40. . Reprinted in van Buitenen 1996, ப. 28–45
 19. T. Padmaja (2002) "Temples of Kr̥ṣṇa in South India: History, Art, and Traditions in Tamilnāḍu" pp.36,126
 20. Edwin F. Bryant (2007)"Krishna : A Sourcebook" ப.190
 21. John Stratton Hawley (2014) "Krishna, The Butter Thief" pp.36-37
 22. [https://books.google.lk/books?isbn=0226467546 Donald Frederick Lach, ‎Edwin J. Van Kley (1993) "South Asia - Volume 3" p.1005]
 23. "Journal of the Institute of Asian Studies - Volume 16" (1998) P.135
 24. "Indian Antiquary - Volume 40" (1985) p.59
 25. Kūranārāyaṇa (1994) "Praise-poems to Viṣṇu and Śrī: The Stotras of Rāmānuja's Immediate Disciples : a Translation from the Sanskrit with Introduction and Notes" pp.57,130,168
 26. Horace Hayman Wilson (1870). The Vishńu Puráńa: a system of Hindu mythology and tradition. Trübner. பக். 79–82, 107. http://books.google.com/books?id=RO8oAAAAYAAJ&pg=PA82. பார்த்த நாள்: 22 February 2013. 
 27. Prabhupada. "Bhagavata Purana 10.58". Bhaktivedanta Book Trust. Archived from the original on 2013-08-26. பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.
 28. Sekharipuram Vaidyanatha Viswanatha (20009 "Hindu Culture in Ancient India" p.161
 29. Journal of the Institute of Asian Studies, Volume 16 (1996) p.126
 30. மதுரகவி ஸ்ரீநிவாச ஐயங்காரின் "நப்பின்னைப் பிராட்டியார் திருமணம்" மின்னூல்

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நப்பின்னை&oldid=3867192" இலிருந்து மீள்விக்கப்பட்டது