உத்தவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உத்தவர், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பரம பக்தரும், மதியமைச்சரும், சிற்றப்பா மகனும் ஆவார். பகவான் தான் எடுத்த கிருஷ்ண அவதாரத்தின் நோக்கம் முடிந்து விட்ட காராணத்தினால், வைகுண்டத்திற்கு எழுந்தருள நினைக்கையில் உத்தவர், பகவானிடம் தன்னையும் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டினார். அதற்கு கிருஷ்ணர், உத்தவரிடம், மீதி உள்ள யதுகுலத்தவரை நீ வழி நடத்தச் செல்ல வேண்டி இருப்பதால், உன் ஆயுட்காலம் முடிந்த பின் வைகுண்டத்திற்கு வரலாம் என்றும், அதுவரை ”பத்ரிகாசிரமம்” சென்று தங்கி தவ வாழ்ககை மேற்கொள்ள உத்தவருக்கு ஆணையிட்டார். அப்போது உத்தவர், அருச்சுனனுக்கு, (பகவத் கீதை) உபதேசம் செய்தது போன்று தனக்கும் ஆத்ம உபதேசம் செய்ய பகவானிடம் வேண்டுகிறார். பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் (31 அத்தியாயங்கள் கொண்ட 1367 சுலோகங்கள்) ஆத்ம உபதேசத்தை உத்தவருக்கு அருளினார்.

உத்தவருக்கு ஸ்ரீகிருஷ்ணர் அருளிய அருள் மொழிகள்[தொகு]

  • உத்தவரின் வேண்டுகோளின்படி, பகவான் உத்தவருக்கு கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம், வர்ணாசிரம தர்மம், முக்குணங்களின் செயல்பாடுகள், மூன்று அவஸ்தைகளில் (விழிப்புநிலை, உறக்கநிலை மற்றும் கனவுநிலை) மனிதனின் நிலை, சாங்கிய யோகம், புலனடக்கம், மனவடக்கம், தவம், தியாகம், பொறுமை, அகிம்சை, விவேகம், வைராக்கியம், முமுச்சுத்துவம், நிதித்யாசனம், அட்டாங்க யோகம், யோக ஸித்திகள், வேள்வி, யக்ஞம், தானம், சரணாகதி மற்றும் பிரம்மக்ஞானம் ஆகியவற்றை உபதேசித்து அருளினார். பின் ஹம்ச கீதை, அவதூத கீதை மற்றும் பிட்சு கீதை போன்ற கதைகள் மூலம் நன்னெறிகளை பகவான், உத்தவருக்கு உபதேசித்து அருளினார்.
  • அதிக முயற்சி இல்லாமல் பரமபதத்தை அடையும் எளிய வழியை கூறுங்கள் என்று உத்தவர், ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்டார். அதற்கு பகவான் உபதேசிதார்: எந்த செயல் செய்தாலும் அது என்னை மகிழ்விக்க செய்யவேண்டும்: மனதை என்னிடமே செலுத்தி, என் தர்மத்திலே இலயித்து என்னிடம் தொடர்ந்து பக்தி செலுத்த வேண்டும்.
  • எல்லா மனிதர்களிடத்திலும் நானே இருப்பதாகப் பாவனை செய்து கொண்டு இருப்பவனுக்கு, விரோதம்-பொறாமை-பொருட்படுத்தாமை, அகங்காரம் முதலியன விலகிப் போகிறது. எல்லாவற்றையும் ஈசுவர வடிவாக பார்ப்பவனுக்கு, அனைத்தும் பிரம்மம் என்ற ஞானம் ஏற்பட்டவுடன், எல்லா சம்சயங்களில் (துயரங்கள்) விலகி, என்னை சாட்சாத்தாகப் (நேரில் பார்த்தல்) பார்த்து, பிரபஞ்சப் பார்வையை நீக்கி, மேலான அமைதியை அடைகிறான். மனம்-மொழி-மெய்களால் என்னைப் பார்ப்பதே, என்னை அடைவதற்கான சாதனங்களுக்குள் மேலானது.
  • மனிதன் எல்லாக் கர்மங்களையும் எனக்கே அர்ப்பணம் செய்து விட்டு, என்னையே சரண் அடைந்து , எல்லாச் செயல்களையும் என் பொருட்டாக எவன் செய்கிறானோ, அவனுக்கு உதவ வேண்டும் என்ற பலமான ஆசை என்னுள் எழுகிறது. இப்படிப்பட்ட பக்தன் அமரத்தன்மை அடைந்து, என் வடிவமாகவே ஆகிவிடுகிறான்.
  • உத்தவரே! எனது ஆசிரமம் பத்ரியில் அருகில் உள்ளது. அங்கு செல்ல ஆணை இடுகிறேன். பகவானால் உபசேசிக்கப்பட்டபடி உத்தவர், பதரிகாசிரமத்தில் தவ வாழ்க்கையை மேற்கொண்டு, காலக்கிரமத்தில் பகவானை அடைந்தார்.

உத்தவ கீதை[தொகு]

உத்தவருக்கு பகவான் கிருஷ்ணர் அருளிய உத்தவ கீதை, பாகவத புராணத்தில், இறுதி ஸ்கந்தமான, பதினோராவது ஸ்கந்தத்தில் (நூல்) உத்தவ கீதை அமைந்துள்ளது. உத்தவருக்கு அருளிய கீதை, முப்பத்தொரு அத்தியாயங்களில் 1367 சுலோகங்களைக் கொண்டுள்ளது.

இவற்றையும் பார்க்க[தொகு]

ஆதார நூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தவர்&oldid=3640375" இருந்து மீள்விக்கப்பட்டது