நன்னெறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நன்னெறி, நெறிமுறை அல்லது அறமுறைமை என்பது மெய்யியலின் முக்கியமான ஒரு பிரிவு. இது நடத்தை தொடர்பில் சரி பிழை ஆகிய கருத்துருக்களை முறைப்படுத்தி, பேணி, அவற்றைக் கைக்கொள்ளும்படி மக்களுக்குப் பரிந்துரை செய்வது.[1] நன்னெறியின் முக்கியமான அம்சம் "நல்ல வாழ்வு" ஆகும். பயனுள்ளதும், திருப்தி அளிப்பதுமான வாழ்வே முக்கியமானது எனபதே பல மெய்யியலாளரது கருத்தாகும். மெய்யியலில், நெறிமுறை அழகியலின் நிரப்புக்கூறாகக் கருதப்படுகிறது. நெறிமுறை, மனிதர்களது நன்னடத்தை தொடர்பாகவும், ஒருவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு செய்கிறது. நெறிமுறை தொடர்பான ஆய்வுப் பரப்பை நான்காக வகுப்பது உண்டு.[1] இவை பின்வருமாறு:

நெறிமுறை மனித ஒழுக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண முயல்கிறது. நல்லது - கெட்டது, சரி - பிழை, நல்லொழுக்கம் - தீயொழுக்கம், நீதி - குற்றம் ஆகிய கருத்துருக்களுக்கான விளக்கங்களைக் காண்பது இதன் நோக்கம்.

வரைவிலக்கணம்[தொகு]

பலர், சமூக வழக்கு, சமய நம்பிக்கை, சட்டம் ஆகியவற்றுக்கு ஏற்ப நடந்து கொள்வதையே நெறிமுறை எனக் கருதுகின்றனர் என்றும், இதை ஒரு தனியான கருத்துருவாகக் கொள்வது இல்லை என்றும் நுண்ணாய்வுச் சிந்தனைக்கான நிறுவனத்தைச் சேர்ந்த தாமசு பால், லின்டா எல்டர் ஆகியோர் கூறுகின்றனர்.[2] பகுத்தறிவு கொண்ட மனிதர்களுக்கு எத்தகைய நடத்தைகள் உதவுகின்றன எத்தகைய நடத்தைகள் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன என்பதைத் தீர்மானிப்பதற்கு வழிகாட்டும் ஒரு தொகுதி கருத்துருக்களும், கொள்கைகளுமே நெறிமுறைகள் என பாலும், எல்டரும் வரைவிலக்கணம் தருகின்றனர்.[2] பொதுவாக நெறிமுறை என்னும் சொல் ஒழுக்கம் என்பதற்கு இணையாகப் பயன்பட்டு வருகிறது என்றும், சில வேளைகளில், குறிப்பிட்ட ஒரு மரபு, குழு அல்லது தனியாள் சார்ந்த ஒழுக்கக் கொள்கைகளைக் குறிக்கும் குறுகிய பொருளில் இது பயன்படுவதாகவும் மெய்யியலுக்கான கேம்பிரிட்ச்சு அகரமுதலி கூறுகின்றது.[3]

"இயல்பறிவின் அடிப்படையில் எட்டப்படும் பகுத்தறிவுக்கு ஒத்த, அளவோடமைந்த, பொருத்தமான முடிவு" என்பதே "நெறிமுறை" என்பதற்கான பொதுவான பொருள். இதன்படி, வேண்டுமென்றே கெட்ட நோக்கத்துடன் செய்யாமல், தேவையின் பொருட்டு அழிவு ஏற்படுத்தும் நிலையும் நெறிமுறையின் பாற்பட்டதாகவே கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உடல்ரீதியான பாதிப்பு ஏற்படக்கூடிய பயமுறுத்தல் இருக்கும் நிலையில், அதைத் தடுப்பதற்கு வேறு வழிகள் இல்லாதபோது, தற்காப்புக்காக எதிராளிக்குத் தேவையான அளவு பாதிப்பை ஏற்படுத்தல் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக உள்ளது. நெறிமுறை, ஒழுக்கத்தைப் போல் விதிமுறைகளை முன்வைப்பதில்லை. ஆனால், ஒழுக்க விழுமியங்களைத் தீர்மானிப்பதற்கான ஒரு வழிமுறையாக இதனைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 http://www.iep.utm.edu/ethics/
  2. 2.0 2.1 Paul, Richard; Elder, Linda (2006). The Miniature Guide to Understanding the Foundations of Ethical Reasoning. United States: Foundation for Critical Thinking Free Press. p. np. ISBN 0-944583-17-2. 
  3. John Deigh in Robert Audi (ed), The Cambridge Dictionary of Philosophy, 1995.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்னெறி&oldid=1464965" இருந்து மீள்விக்கப்பட்டது