ஆன்மா (இந்து சமயம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆத்மா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்துத் தத்துவத்தில் தன்னைத்தவிர தனதெல்லாவற்றையும் நீக்கிய பிறகு மிஞ்சுவதெதுவோ அதுவே ஆன்மா அல்லது ஆத்மா எனப்படுகிறது. ஆன்மா என்ற சமசுகிருத மொழி சொல்லின் வேர்ச்சொல்லான ‘ஆத்மன்’ ‘அன்’ (மூச்சுவிடு) என்ற வினைச்சொல்லிலிருந்து உருவானது. அத்வைத நூல்களோ ஆதி சங்கரர் வழித்தோன்றல்களோ ஆன்மாவைப் பற்றித் தரும் விளக்கங்கள் இங்கே கொடுக்கப் படுகின்றன.

நான் யார்[தொகு]

இக்கேள்விக்கு விடை கூற முயலும் யாரும் முடிவில் ஆத்ம விசாரணையில் இறங்கித்தான் ஆகவேண்டும். இந்த உடம்பு ‘நான்’ ஆக முடியாது. முதல் காரணம் இது ‘என்’ உடம்பு என்கிறோம். ‘என்’ உடம்பு, ‘என்’ கண், ‘என்’ காது, ‘என்’ ருசி, ‘என்’ வாசனை – என்றெல்லாம் சொல்லப்படுவதின் உட்பொருளே, நம் உடம்போ, கண், காது, கை, கால் முதலிய புலனுறுப்புகளோ, ஓசை, பார்வை முதலிய உட்புலன்களோ, ஏன், எண்ணங்கள் தோன்றி மறைவதற்கு இருப்பிடமான மனதோ ‘நாம்’ இல்லை என்பதுதான். மனது தூங்கும்போதும் ‘நாம்’ இருக்கிறோம். அதனால் மனதோ புத்தியோ ‘நாம்’ இல்லை. ‘நான், நான்’ என்று மனது உள்ளபோதுதான் நாம் இருப்பதை நம்மால் தெரிந்து சொல்லிக் கொள்ள முடிகின்றதென்றாலும், மனது இல்லாத போதுங் கூட நாம் இருந்துகொண்டு தானிருக்கிறோம். மனதை வைத்துத்தான் எல்லா எண்ணங்களும் உணர்வும் உண்டாகின்றன. மனது இல்லாதபோது நாம் செயலியலற்ற ஜடமாகக் கருதப்படுகிறோம். அதனால்தான் மனதையே ‘நாம்’ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் மனது இல்லாமலும் நம்மை ஜடமாகவோ எப்படியோ உயிரோடு இருக்கச்செய்யும் உயிர்த்தத்துவம் தான் அந்த ஆன்மா. மனது இல்லாமலும் அது இருக்கும். ஆனால் அது இல்லாமல் மனது இருக்காது. அது தான் உண்மையான ‘ஆத்மா'

அது நீ[தொகு]

தத் த்வம் அஸி என்னும் உபநிடத மகாவாக்கியம் ‘அது நீ’ என்று பொருள் தருகிறது. உள்முகமாக மனம் திரும்பி இதயத்தில் ஆழ்ந்து அகந்தை முதலிய எல்லாம் ஒழிந்தபின் எந்த சொரூபம் ஆன்மாவாக மிஞ்சுமோ, அது பிரம்மம் என்பதே. மனப்பக்குவம் அடையாத மானிடர்களைக் குறித்து சொல்லப்படும் ‘அது நீ’ என்ற உபதேசம், என்றும் அதுவே தானாய் அமர்ந்திருக்கும் பிரம்மநிலையை நோக்கி மனிதன் முன்னேறவேண்டும் என்ற நோக்குடன் சொல்லப்பட்டது. இம்மகாவாக்கியம் சாந்தோக்கிய உபநிடதத்தில் 6.8.7 இல் சுவேதகேது என்ற வாலிபனுக்கும் அவன் தந்தை உத்தாலக ஆருணிக்கும் நடக்கும் உரையாடலில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது.

அறிவதுமில்லை, அறியப்படுவதுமில்லை[தொகு]

இருத்தலே ஆன்மாவின் உண்மை. ‘நான் ஆன்மாவை அறியேன்’ என்றோ ‘நான் ஆன்மாவை அறிந்தேன்’ என்றோ சொல்வது பொருந்தாது. ஏனென்றால் தன்னைத் தனக்கு அறிபடு பொருளாக்குவதனால் இரண்டு பொருள் இருப்பதாக ஆகிவிடும். இது அத்வைதத்திற்கு ஒவ்வாது.

அத்வைத-விசிஷ்டாத்வைத வேறுபாடு[தொகு]

ஆன்மாவைப்பற்றிய விசிஷ்டாத்வைத வேதாந்தக் கூற்று அத்வைதத்தில் சொல்லப் படுவதிலிருந்து சிறிது வித்தியாசப் படுகிறது. ஆன்மா என்பது பிரும்மத்தினுடைய ஒரு அம்சம்தான். எப்படி ஆன்மாவுக்கும் அது குடியிருக்கும் இந்த உடம்பிற்கும் ஒரு தனிப்பட்ட உறவு உள்ளதோ அதே மாதிரி உறவு பிரம்மத்திற்கும் ஆன்மாவுக்கும் உள்ளது என்பது விசிஷ்டாத்வைத சித்தாந்தம்.

ஆன்மாவை விளக்கும் சில பொன்மொழிகள்[தொகு]

அத்ருஷ்டோ த்ரஷ்டா அச்ருத: ச்ரோதா அமதோ மந்தா அவிஞ்ஞாதோ விஞ்ஞாதா நான்ய: அதோ’ஸ்தி த்ரஷ்டா நான்ய: அதோ’ஸ்தி ச்ரோதா நான்ய: அதோ’ஸ்தி மந்தா நான்ய: அதோ’ஸ்தி விஞ்ஞாதா ஏஷ தே ஆன்மா அந்தர்யாமி அம்ருத: அத: அன்யத் ஆர்த்தம். பிரகதாரண்யக உபநிடதம் 3 – 7 – 23. பார்க்கப்படாமல் பார்க்கும்; கேட்கப்படாமல் கேட்கும்; நினைக்கப்படாமல் நினைக்கும்; அறியப்படாமல் அறியும். அதைத்தவிர வேறு பார்ப்பவரில்லை; வேறு கேட்பவரில்லை; வேறு நினைப்பவரில்லை; வேறு அறிபவரில்லை. அது தான் உனது ஆன்மா, உள்ளுறைபவன், அழியாதவன். மற்றதெல்லாம் கேடு.

ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய: ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்ய: பிரகதாரண்யக உபநிடதம் 2 – 4- 5. ஆன்மா தான் (அகக் கண்ணால்) பார்க்கப்பட வேண்டியது, (அகக் காதால்) கேட்கப்பட வேண்டியது, (உள்)மனதால் நினைக்கப்பட வேண்டியது, (இதய ஐக்கியத்துடன்) தியானிக்கப்பட வேண்டியது.

ஸர்வேந்த்ரிய குணாபாஸம் ஸர்வேந்த்ரிய-விவர்ஜிதம் அஸக்தம் ஸர்வபிருச்சைவ நிர்க்குணம் குணபோக்த்ரு ச. பகவத் கீதை 13-14. எல்லாப் புலன்களுடைய செய்கையினால் விளங்குவது. (ஆனால்) ஒரு புலனும் இல்லாதது. (ஒன்றையும்) பற்றாதது. ஆனால் எல்லாவற்றையும் தாங்குவது. குணங்களில்லாதது ஆனால் குணங்களை அனுபவிப்பது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  • M. Hiriyanna. Essentials of Hindu Philosophy, George Allen and Unwin, 3rd impression. 1956
  • S. Radhakrishnan. The Principal Upanishads, George Allen and Unwin, 1936.
  • M.K. Venkatrama Iyer. Advaita Vedanta, Asia Publishing House, Bombay, 1964.
  • V. Krishnamurthy. The Ten Commandments of Hinduism. New Age International, Wiley Eastern Limited. 1994.
  • உள்ளது நாற்பது. ஸ்ரீ ரமண மகரிஷி. ஸ்ரீ ரமணாசிரமம், திருவண்ணாமலை. 1950.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்மா_(இந்து_சமயம்)&oldid=3877930" இலிருந்து மீள்விக்கப்பட்டது