ஸ்ரீமந்நாராயணீயம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீமந்நாராயணீயம்
ஸ்ரீமந்நாராயணீயம் (தமிழ் மொழிபெயர்ப்பு)
நூலாசிரியர்ஸ்ரீ மேல்புத்தூர் நாராயணபட்டதிரி
மொழிபெயர்ப்பாளர்சுலோகங்கள் தமிழிலும் உரையும்: ஸ்ரீ அண்ணா
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி (மூலம்: சமசுகிருதம்)
பொருண்மைதோத்திரப் பாடல்கள்
வெளியீட்டாளர்தமிழ் மொழிபெயர்ப்பு-இராமகிருஷ்ண மடம், சென்னை
பக்கங்கள்548
ISBNISBN 9788171203406

ஸ்ரீமந்நாராயணீயம் வடமொழியான சமஸ்கிருத்தில் மேல்புத்தூர் நாராயணபட்டதிரியால் எழுதப்பட்டது. குருவாயூர் குருவாயூரப்பன் மகிமையைக் கூறும் நூல்களாகப் பெரிதும் கருதப்படுபவை ஸ்ரீமந்நாராயணீயம் மற்றும் ஞானப்பான என்னும் இரு முக்கிய நூல்கள். ஞானப்பானு நூலை எளிய பக்தரான பூந்தானம், துறவு நிலையில் மலையாளத்தில் எழுதினார்.

நூல் அமைப்பு[தொகு]

ஸ்ரீமந்நாராயணீயம் எங்கும் பரந்து எல்லாமாய் பரம்பொருள் இறைவன் என்று ஆரம்பித்து கண்முன் கிருஷ்ணனாக காட்சியளித்தார் என்று முற்றுப் பெறுகிறது. இது ஸ்ரீமத்பாகவதத்தை 1036 சுலோகங்களில் பற்பல விருத்தங்களில் சுருக்கி வர்ணிக்கிறது. ஸ்ரீமந் நாராயணீயத்தின் மந்திரபூர்வமான அனைத்து ஸ்லோகங்களையும் குருவாயூரப்பனின் சந்நிதியில் அமர்ந்து படித்து, குழந்தை குருவாயூரப்பன் தலையாட்டி ஆமோதித்த பின்னரே பரம பக்தரான ஸ்ரீ நாராயணபட்டதிரி அருளியுள்ளாரென குருவாயூர் தல மகாத்மியம் கூறுகிறது. ஸ்ரீமத் பாகவத்திலிருந்தும் பிற நூல்களில் இருந்தும் உவமைகளும் மேற்கோள்களும் இந்நூலின் தமிழ் உரையில் தரப்பட்டுள்ளன.

நூல் பாடப்பட்ட இடம்[தொகு]

இந்நூல் பாடப்பட்ட இடம் கேரளத்தில் பிரசித்தமான குருவாயூர் கோவில். குருவாயூரப்பனிடம் நேரில் பேசுவது போல இந்நூலிலுள்ள சுலோகங்கள் அமைகின்றன. இன்றும் குருவாயூர் குருவாயூரப்பன் கோவிலில், குருவாயூரப்பன் சந்நிதியின் உள்செல்லும் வழியில் குருவாயூரப்பனுக்கு வலது புறத்தில் (உள்ளே செல்லும் பக்தர்களுக்கு இடது புறத்தில்) மேல்புத்தூர் நாராயணபட்டதிரி அமர்ந்து ஸ்ரீமந்நாராயணீயம் ஸ்லோகங்களை எழுதிய இடம் பித்தளை சாசனத்தில் குறிப்பிட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

நூல் பெயர்க் காரணம்[தொகு]

இந்த நூலின் கடைசி சுலோகத்தில் கூறியுள்ளபடி இது வேதங்களில் பிறந்து இதிகாச புராணங்களில் லீலாவதார துதிகளால் வளர்ந்து நாராயணனைப் பற்றிக் கூறுவதாலும் நாராயண பட்டத்திரி என்ற கவி எழுதியதாலும் ’நாராயணீயம்’ எனப் பெயருடையதாகியது

பாகவதமும் நாராயணீயமும்[தொகு]

பாகவதம் நூலின் சுருக்கமாக இந்நூல் அமைந்துள்ளது. வியாசமுனி தம் பாகவதம் முதல் காண்டத்திலே பாகவதக்கதையை சொல்பவராக ஸ்ரீசுகப்ரம்ம ரிஷியையும், முன்னிருந்து கேட்பவராக பரீஷித்து சக்ரவர்த்தியையும் அமைத்தார். ஆனால் நாராயணீயத்தில் குருவாயூரப்பன் முன் நின்று கொண்டு அவனை வணங்கி வேண்டி அருள் பாலித்திடவும், நோய் நீக்கவும் ஆசிரியரே பாடுவது போல் பாடல்கள் அமைந்துள்ளன.

நூல் ஆசிரி்யர்[தொகு]

இதை எழுதிய மேல்புத்தூர் நாராயண பட்டதிரி பிறந்தது கி.பி.1560 வது ஆண்டு. இவர் 106 வயது வரை வாழ்ந்ததாக சிலர் கூறுகின்றனர். பாரதப்புழை என்ற ஆற்றின் வடகரையில் திருநாவா என்ற திருத்தலத்திற்கு அருகில் மேல்புத்தூர் இல்லம் உள்ளது. இவரது தந்தை மாத்ருதத்தர் என்ற மகாபண்டிதர். பட்டதிரி சிறுவயதில் தந்தையிடமே கல்வி பயின்றார். ரிக் வேதத்தை மாதவாசாரியார் என்பவரிடம் அத்யயனம் செய்தார்.தர்க்க சாஸ்திரத்தை தாமோதராசாரியார் என்பவரிடம் கற்றார். வியாகரணத்தை அச்யுதபிஷாரடி என்பவரிடம் கற்றுப் பதினாறுவயதிலேயே சிறந்த பண்டிதராக விளங்கினார்.

சிறிது காலத்திற்குப் பின் அவருடைய வியாகரண குருவான அச்யுத பிஷாரடி வாத நோயால் பீடிக்கப்பட்டு வருந்திய பொழுது பட்டதிரி அவருக்குச் சேவை புரிந்தது மட்டுமல்லாமல் அந்த நோயையும் யோக பலத்தால் தானே ஏற்றுக் கொண்டு அங்கங்கள் முடங்கியவரானார். குருவாயூரில் போய்த் தவம் புரிய நிச்சயித்துத் தன்னை அங்கு எடுத்துப்போகச் செய்து நாள்தோறும் பத்துசுலோகம் பாடலானார். நூறு நாட்களில் பாடி முடித்தபொழுது (1587 வது வருஷம் விருச்சிகம் 28, 27.11.1587 ) நோயிலிருந்து விடுபட்டார். அப்போது அவர் வயது 27. அவர் பூர்வ மீமாம்ஸம், உத்தர மீமாம்ஸம், வியாகரணம் முதலிய சாஸ்திரங்களில் புகழ் மிக்க விற்பன்னராக விளங்கி நீண்டகாலம் வாழ்ந்தார்.

நூல் பயன்[தொகு]

உடல் நோயைப் போக்கி, மனமாற்றமும் வருவித்து நாத்திகனையும் பக்தனாக்கும் அருள் சக்தி குருவாயூருக்குண்டு என்னும் கருத்து மேல்புத்தூர் நாராயணீயத்துடன் பிறந்து வளரத் தொடங்கியது. நாராயணத்தைப் படித்தால், பாராயணம் செய்தால் படிப்பவர்களும் கேட்பவர்களும் உடலாலும் உள்ளத்தாலும் சிறந்த ஒரு நிலையினை அடைவர் என்ற ஒரு கருத்து உண்டு. பக்திச் சுவை நிரம்பிக் காணப்படும் நாராயணீயத்தை தினந்தோறும் படித்தால் நல்ல ஆயுள் ஆரோக்கிய நிலையினை அடைவர் என்று நம்பப்படுகின்றது.

அஸ்மின் எனத் துவங்கும் ஸ்லோக பலன்[தொகு]

குறிப்பாக அஸ்மின் எனத்தொடங்கும் 13 வது சுலோகம் (எட்டாவது தசகம் - பிரளயமும் சிருஷ்டியும் 13வது சுலோகம் (பக்கம் : 47) ) நோய்கள் தீர்வதற்கு பரிகார சுலோகமாகக் கருதப்படுகிறது.

சுலோகம்:

அஸ்மின் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த-முத்தாபித-பத்மயோனி:|
அனந்த பூமா மம ரோகராசிம்
நிருந்த்தி வாதாலயவாஸ விஷ்ணோ ||

பொருள்:

"பரமாத்மாவாக எங்கும் வியாபித்திருக்கும் குருவாயூரப்பா! இந்த பாத்ம கல்பத்தில் பிரம்ம தேவனை இங்ஙனம் தோற்றுவித்தவரும் அளவற்ற மகிமையுடையவருமான நீர் என்னுடைய வியாதிக் கூட்டத்தை யடக்கியருள வேண்டும்"

பூர்வஜென்ம கர்மத்தினாலும், விதியினாலும் நோய்வாய்ப்படும் பக்தர்கள் இந்த ஸ்லோகத்தைத் தினமும் சொல்லி வந்தால் எத்தகைய கொடிய நோயாக இருப்பினும் அதிலிருந்து விடுபட்டு ஆரோக்கியம் பெறமுடியும். ஏராளமான பக்தர்களின் அனுபவம் இதனை உறுதி செய்துள்ளது.[1]

முன்னோர்களின் மறைவிற்குப் பின்னர் கடைபிடிக்கப்படும் அடைப்புக் கால ஆறு மாத காலத்திற்கு பாராயணம் செய்யக் கூடாத நூல்களில் ஸ்ரீமந்நாராயணீயமும் ஒன்று. காரணம் காயத்ரி மகா மந்திரத்தின் சக்தி இதில் அடங்கியுள்ளதே ஆகும்.[2]

மொழிபெயர்ப்பு[தொகு]

கேரள மாநில கவர்னராக பணிபுரிந்த டாக்டர். பி.ராமகிருஷ்ணராவ் நாராயணீயம் பாராயணம் செய்வதை கேட்க நேர்ந்தபோது அதனால் ஈர்க்கப்பட்டு ஈடுபாடு கொண்டார். தெலுங்கு மொழியில் நாராயணீயத்தை மொழி பெயர்த்து ஆந்திர மாநிலத்தில் வெளிட்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. குமுதம் ஜோதிடம் 18.11.2011 ; பக்கம் 5
  2. குமுதம் ஜோதிடம் 7.12.2007 ; பக்கம் 21
  3. குருவாயூர் பூலோகவைகுண்டம் ; குருவாயூர் தேவஸ்தான வெளியீடு;2003

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீமந்நாராயணீயம்_(நூல்)&oldid=3229804" இலிருந்து மீள்விக்கப்பட்டது