இராமகிருஷ்ண மடம், சென்னை

ஆள்கூறுகள்: 13°1′51″N 80°16′2″E / 13.03083°N 80.26722°E / 13.03083; 80.26722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமகிருஷ்ண மடம், சென்னை.
இராமகிருஷ்ண மடம், சென்னை
இராமகிருஷ்ண மடம், சென்னை
ஆள்கூறுகள்:13°1′51″N 80°16′2″E / 13.03083°N 80.26722°E / 13.03083; 80.26722
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவு:மைலாப்பூர், சென்னை
கோயில் தகவல்கள்
மூலவர்:இராமகிருஷ்ண பரமஹம்சர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:இந்து, இசுலாம், பௌத்தம், கிறித்தவம், ஆகிய சமயங்களின் கட்டிடக்கலையின் கலவையாகும்.
வரலாறு
கட்டப்பட்ட நாள்:1994
அமைத்தவர்:ஸ்ரீஇராமகிருஷ்ண இயக்கம்
இணையதளம்:www.chennaimath.org

இராமகிருஷ்ண மடம், சென்னை பத்தொன்பதாம் நூற்றாண்டில் வங்காளத்தில் வாழ்ந்த மகான் இராமகிருஷ்ண பரமஹம்சர் [1836-1886] நினைவாக சென்னை, மைலாப்பூரில் கட்டப்பட்டது இராமகிருஷ்ண மடம். இம்மடம், கொல்கத்தாவில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகமான பேலூர் மடத்தின், தென்னிந்தியாவில் அமைந்துள்ள முதல் கிளை மடம் ஆகும். இம்மடம், ஸ்ரீஇராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி இராமகிருஷ்ணானந்தரால் தொடங்கப்பட்டது.[1]

வரலாறு[தொகு]

துவக்கம்[தொகு]

பிப்பிரவரி மாதம், 1897ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தர் மேற்குலக நாடுகளில் ஆன்மீகப் பயணம் முடித்து கொல்கத்தாவிற்கு திரும்புகையில் சென்னையில் சில நாட்கள் தங்கினார். அவ்வமயம் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் பக்தர்கள், சென்னையில் இராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவாக ஒரு நிலையான மடம் கட்ட கோரிக்கை வைத்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற சுவாமி விவேகானந்தர், மார்சு மாதம், 1897-இல் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி இராமகிருஷ்ணானந்தரை தென்நாட்டு தூதராக ஸ்ரீஇராமகிருஷ்ண மடத்தை கட்டுவதற்கு சென்னைக்கு அனுப்பி வைத்தார்.[2]

ஐஸ் ஹவுசில் முதல் மடம்[தொகு]

சென்னை கடற்கரை ஓரத்தில், திருவல்லிக்கேணியில் உள்ள ஐஸ் ஹவுஸ் எனும் (தற்பொழுது விவேகானந்தர் இல்லம்) மூன்று மாடி கட்டிடத்தில் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் மடம் உருவாகியது. இக்கட்டிடத்தின் உரிமையாளர் பிலிகிரி அய்யங்கார், இராமகிருஷ்ணரின் தீவிர பக்தர். தனது மூன்று மாடி கட்டிடத்தை ஸ்ரீஇராமகிருஷ்ண மடத்தின் கிளை மடமாக பயன்படுத்திக் கொள்ள தர முன்வந்தார். அக்கட்டிடத்தில் சுவாமி இராமகிருஷ்ணானந்தரின் முயற்சியால் துவக்கப்பட்ட ஆதரவற்ற மாணவர்களுக்காக மாணவர் இல்லம், இன்று ஸ்ரீஇராமகிருஷ்ண மிஷின் மாணவர் இல்லம், மைலாப்பூர் என்ற பெயரில் விவேகானந்தர் இல்லத்தில் இயங்கி வருகிறது.[3][4]

1907-இல் மைலாப்பூரில் ஸ்ரீ இராமகிருஷ்ண மடம்[தொகு]

இராமகிருஷ்ண பரமஹம்சரின் திருவுருவச் சிலை

ஐஸ் ஹவுஸ் கட்டிடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த இராமகிருஷ்ண மடம், கட்டிட உரிமையாளரான பிலிகிரி அய்யங்கார் 1902-இல் இறந்து போன பிறகு, அக்கட்டிட உரிமையாளர்களுக்கு நிதித்தட்டுப்பாடு ஏற்பட்டதின் காரணமாக, அக்கட்டிடம் 1906 ஏலத்திற்கு வந்தது. எனவே, அக்கட்டிடத்தின் வெளிப்புற அறையில் (அவுட் ஹவுஸ்) மடத்தின் பணிகளை தொடர்ந்து செய்து கொண்டு வந்தார். பின் மைலாப்பூரில் பக்தர் ஏ.கொண்டைய செட்டியார்[5] கொடையாக வழங்கிய நிலத்தில் கட்டிடம் கட்டி இராமகிருஷ்ண மடத்தை 17-11-1907-இல் , சென்னை மைலாப்பூருக்கு மாற்றினார். இரண்டு ஆண்டுகளுள் காண்டிராக்டரின் ஏமாற்று வேலை காரணமாக மைலாப்பூர் மடத்தின் கட்டிடம் பல இடங்களில் விரிசல் கண்டது.1912-இல் சுவாமி இராமகிருஷ்ணானந்தாவிற்கு பின் இந்த மடத்தை கவணிக்க வந்த சுவாமி சர்வானந்தா, கட்டிடத்தை முழுமையாக இடித்துவிட்டு, இரண்டு மாடிகள் கொண்ட விசாலமான புதிய கட்டிடத்தை நிர்மாணித்தார்.[6]

1907 முதல் 2000 வரை ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தின் வளர்ச்சி[தொகு]

ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடரும், ஸ்ரீஇராமகிருஷ்ண பரம்பரையின் தலைவரும், ஸ்ரீஇராமகிருஷ்ணரின் தலைமை மடத்தின் தலைவருமான சுவாமி பிரம்மானந்தா, இரண்டாம் முறையாக சென்னைக்கு வந்து மைலாப்பூர் இராமகிருஷ்ண மடத்தை விரிவாக்கம் செய்ய 04-08-1916-இல் அடிக்கல் நாட்டினார். 27-04-1917-இல் விரிவாக்கப்பட்ட கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சரின் நினைவாக அக்கட்டிடத்திற்கு ஸ்ரீஇராமகிருஷ்ண மடம் என பெயர் சூட்டப்பட்டது. 2000-ஆம் ஆண்டு முதல் ஸ்ரீஇராமகிருஷ்ணருக்கு ஒரு புதிய பிரபஞ்சக் கோயில் கட்ட முடிவு எடுத்து கட்டிடப்பணி துவக்க 01-12-1977-இல் அடிக்கல் நாட்டப்பட்டது. 07-02-2000-ஆம் ஆண்டில் பிரபஞ்சக் கோயில் திறப்பு விழா நடைபெற்றது.[7]

மடத்தின் நடவடிக்கைகள்[தொகு]

பிறந்தநாள் விழாக்கள்[தொகு]

பிற முக்கிய சமய விழாக்கள்[தொகு]

மேற்படி பிறந்தநாள் விழாக்களும், சிறப்பு பூஜைகளும் வேள்விகளுடனும், தோத்திரங்கள் பாடியும், இசை நிகழ்ச்சிகளுடனும், சொற்பொழிவுகளுடனும் சிறப்பாக நடைபெறுகிறது.[9]

நூல் வெளியீடுகள் & ஆன்மீக சொற்பொழிவுகள்[தொகு]

ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சரின் பரம்பரையில் அமைந்த மடங்களில் சென்னை மடம் அதிக அளவில் அனைத்து ஆன்மீக நூல்கள், குழந்தைகளுக்கான் நன்னெறி கதை நூல்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமசுகிருதம் மற்றும் ஆங்கில மொழிகளில் குறைந்த விலையில் வெளியிட்டு வருகிறது. மேலும் ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளை நூல் வடிவில் வெளியிட்டும் வருகின்றனர்.[10] சென்னை இராமகிருஷ்ண மடம், வேதாந்த கேசரி எனும் ஆங்கில மாத இதழும், இராமகிருஷ்ண விஜயம் எனும் மாத இதழும் முறையே 1914 மற்றும் 1921 ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. மடத்தில் வாரந்திர ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்துகின்றனர்.

1944-2006க்கு இடைபட்ட காலத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பிரபா என்ற தெலுங்கு மாத இதழும் அனைத்துத் தெலுங்கு நூல்களும் சென்னை மடமே வெளியிட்டது குறிப்பிடதக்கதாகும். 2006 டிசம்பரில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தெலுங்கு பதிப்பகம் சென்னையில் இருந்து ஹைதராபாதுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது.

கல்வித்துறையில் இராமகிருஷ்ண மடம்[தொகு]

பழைய மடத்தில் அமைந்த கோயிலினுள் தியான மண்டத்தில் அன்னை சாரதா தேவியின் உருவப் படம்

ஆதரவற்ற அனாதை குழந்தைகள் தங்கிப் படிக்கும் உறைவிடப் பள்ளிக்கூடம் திருவல்லிக்கேனியில் 16-05-1917-இல் இராமகிருஷ்ண மடம் சார்பில் இன்று வரை நன்கு செயல்படுகிறது.

சென்னை, ஜார்ஜ் டவுனில் இருந்த சென்னை நேசனல் பெண்கள் பள்ளியின் நிர்வாகம் 1921-ஆம் ஆண்டு முதல் சென்னை இராமகிருஷ்ண மடத்தின் கீழ் வந்த்து. 1932-இல் ஆண்கள் பள்ளிக்கூடம் ஒன்று தியாகராய நகரில் துவக்கப்பட்டது. சென்னை தியாகராயநகரில் செயல்பட்டு கொண்டிருந்த ஸ்ரீசாரதா பெண்கள் பள்ளிக்கூடம் 1938-இல் சென்னை இராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. சூன் மாதம், 1946-ஆம் ஆண்டில் மைலாப்பூரில் துவக்கப்பட்ட இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி மடத்தின் நிர்வாகத்தின் கீழ் துவக்கப்பட்டது. மடத்தின் கல்வி நடவடிக்கைகள் அதிகரிக்கவே, அந்நிறுவனங்களை வழிநடத்திச் செல்ல பல குழுக்கள் அமைக்கப்பட்டது. சென்னை இராமகிருஷ்ண மட்த்தின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் இதர கல்வி நிறுவனங்கள்:

 • ஸ்ரீஇராமகிருஷ்ண மடம், விவேகானந்தர் நூற்றாண்டு விழா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சென்னை [11]
 • ஸ்ரீஇராமகிருஷ்ண மடம், தேசியப் பள்ளி, சென்னை.[12]
 • 32,000 நூல்கள் மற்றும் 300 இதழ்களுடன் கூடிய பொது நூலகம்.
 • பொறியியல் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலான ஒரு நூல் வங்கி

இலவச மருத்துவ சேவையில் ஸ்ரீஇராமகிருஷ்ண மடம்[தொகு]

சென்னை, இராமகிருஷ்ண மடத்தில் அமைந்துள்ள பிரபஞ்சக் கோயில்
 • பொதுமக்கள் நலனுக்காக ஆங்கில முறை மருத்துவமனை மற்றும் ஹோமியோபதி மருத்துவமனைகள், ஸ்ரீஇராமகிருஷ்ண மடம், சென்னை சார்பில் இயங்கிவருகிறது.
 • மடத்தின் சார்பில் இயக்கப்படும் வாராந்திர நடமாடும் மருத்துவக் குழு, ஆண்டிற்கு 10,000 நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குகிறது.[13]
 • தொழு நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவம் அளிக்கிறது.[14]
 • அருகில் உள்ள கிராமங்களில் இலவச கண் நோய் மருத்துவ முகாம்கள் நடத்திவருகிறது.

நிவாரணப் பணிகள் மற்றும் புனர்வாழ்வு மையங்கள்[தொகு]

1928 மற்றும் 1948-ஆம் ஆண்டுகளில் மைலாப்பூரில் குடிசைபகுதிகள் எரிந்த பொழுது, இராமகிருஷ்ண மடம், சென்னை சார்பில் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு, அரசிடமிருந்து நிலம் பெற்று இராமகிருஷ்ணபுரம் எனும் குடியிருப்பை இலவசமாக கட்டி வழங்கியது.[15] சென்னை, இராமகிருஷ்ண மடத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நிவாரணப்பணிகள்;

மாதம்/ஆண்டு பாதிக்கப்பட்ட கிராமங்கள்/மாவட்டம் நிவாரண வகை
1924 கோயமுத்தூர், பவானி, சத்தியமங்கலம் மற்றும் இதர மாவட்டங்கள் உணவுப் பொருட்கள் வழங்கல்
1927 நெல்லூர் மாவட்டம் புயல் நிவாரணப் பணி
1932 செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூர் புயல் நிவாரணப் பணி
1941 தஞ்சாவூர் மாவட்டம் புயல் நிவாரணப் பணி
1955 தஞ்சாவூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் புயல் நிவாரணப் பணி
1957 இராமநாதபுரம் மாவட்டம் கலவர நிவாரணப் பணி
நவம்பர் 1957 சூலூர் பேட்டை, நெல்லூர் மாவட்டம் மழை வெள்ள நிவாரணப் பணி
1961 திருக்காட்டுப்பள்ளி மற்றும் திருவையாறு, தஞ்சை மாவட்டம் மழை வெள்ள நிவாரணப் பணி
1962 லால்குடி, திருச்சி மாவட்டம் தீ பரவல் தொடர்பான நிவாரணப்பணி
1965 இராமேசுவரம் & தனுஷ்கோடி புயல் நிவாரணப் பணி
1972–73 பவானி, கோயம்புத்தூர் மாவட்டம் புயல் நிவாரணப் பணி
நவம்பர் 1977 தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள் புயல் நிவாரணப்பணி
நவம்பர், 1985 வியாசர்பாடி, திருவல்லிக்கேணி, வேளச்சேரி, கோட்டூர்புரம் மற்றும் பெரம்பூர் மழை வெள்ள நிவாரணப் பணி
சனவரி 1993 கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 கிராமங்கள் வெள்ள நிவாரணப் பணி
செப்டம்பர் 1993 கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுவீட்டுவிளை, கீழ்மடிச்சல் & கஞ்சிநகர் புயல் நிவாரணப் பணி
டிசம்பர் 1993 தமிழ்நாட்டில் 47 கிராமங்கள் புயல் நிவாரணப் பணிகள்
திசம்பர் 2004 – மே மாதம் 2005 செங்கல்பட்டு, சென்னை, நாகப்பட்டினம், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் சுனாமி நிவாரணப் பணிகள்[16]
2008 தஞ்சாவூர் & திருவாரூர் மாவட்டங்கள் வெள்ள நிவாரணப் பணிகள் [17]
2010 திருவாரூர் & நாகப்பட்டினம் மாவட்டங்கள் வெள்ள நிவாரணப் பணிகள்

கிராமப்புற வளர்ச்சியில் இராமகிருஷ்ணமடம், சென்னை[தொகு]

 • 2004-ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி எனும் ஆழிப்பேரலையால் ஏற்பட்ட அழிவுகளுக்குப் பின் ஒரு வருட மருத்துவ செவிலியர் உதவியாளர் பயிற்சி பள்ளி 2004ஆம் ஆண்டு முதல் மடம் நடத்தி வருகிறது. இதுவரை 1200 பயிற்சி பெற்ற மருத்துவ செவிலிய உதவியாளர்களை உருவாக்கியுள்ளது.[18]
 • திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமபுறப் பெண்களின் முன்னேற்றத்திற்காக இலவச கணிப்பொறி பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.

பதிப்பகம்[தொகு]

 • ஞானதீபம் [19]

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. The Headquarters of Ramakrishna Math and Ramakrishna Mission, India பரணிடப்பட்டது 2008-12-05 at the வந்தவழி இயந்திரம். Belur Math.
 2. Swami Ramakrishnananda A Portrait in Pictures, 2006, p.25
 3. Vivekanandar Illam The Storyline 60 facts about Vivekanandar Illam, p.14,15
 4. Vivekanandar Illam The Storyline 60 facts about Vivekanandar Illam, p.18
 5. சுவாமி ராமகிருஷ்ணானந்தர் விரிவான வாழ்க்கை வரலாறு; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 242
 6. Swami Tapasyananda, Swami Ramakrishnananda The Apostle of Sri Ramakrishna To the South, 2008, p.57,58
 7. Universal Temple, Its Need, Significance and Unique Features, 2001, p.1,2
 8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-08. பார்க்கப்பட்ட நாள் 2014-10-10.
 9. Celebrations பரணிடப்பட்டது 2014-01-05 at the வந்தவழி இயந்திரம். Chennaimath.Org (4 August 2013).
 10. Publications of Ramakrishna Math and Ramakrishna Mission பரணிடப்பட்டது 2014-01-27 at the வந்தவழி இயந்திரம். Belurmath.org.
 11. Higher Secondary School பரணிடப்பட்டது 2014-01-26 at the வந்தவழி இயந்திரம். Chennaimath.Org (6 June 2008).
 12. Primary School பரணிடப்பட்டது 2013-12-29 at the வந்தவழி இயந்திரம். Chennaimath.Org (14 September 2012).
 13. Mobile Dispensary பரணிடப்பட்டது 2013-12-29 at the வந்தவழி இயந்திரம். Chennaimath.Org (4 August 2013).
 14. [1]
 15. The Vedanta Kesari December 1997, Sri Ramakrishna Math, Chennai: A Brief History, p.480, 481 & 482
 16. Tsunai Relief And Tsunami Rehabilitation By Ramakrishna Mission பரணிடப்பட்டது 2015-11-06 at the வந்தவழி இயந்திரம். Belurmath.org.
 17. December : 2008 – RELIEF WORK BY RAMAKRISHNA MISSION, BELUR MATH, INDIA பரணிடப்பட்டது 2015-11-06 at the வந்தவழி இயந்திரம். Belurmath.org.
 18. Nursing Assistant Training பரணிடப்பட்டது 2013-12-31 at the வந்தவழி இயந்திரம். Chennaimath.Org (4 August 2013).
 19. பதிப்பகம்,2004,ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்

வெளி இணைப்புகள்[தொகு]

 • இராமகிருஷ்ண மடம், சென்னையின் இணையதளம் [2]
 • [இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இயங்கும் இராமகிருஷ்ண மடங்கள், மிஷின்கள், ஆஸ்ரமங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ மனைகள் மற்றும் சமூகப் பணி அமைப்புகளின் பட்டியல்: http://belurmath.org/centres/branchcentres.htm பரணிடப்பட்டது 2014-02-01 at the வந்தவழி இயந்திரம்]

இதனையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமகிருஷ்ண_மடம்,_சென்னை&oldid=3544131" இலிருந்து மீள்விக்கப்பட்டது