உள்ளடக்கத்துக்குச் செல்

கிருஷ்ண ஜெயந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோகுலாஷ்டமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கிருட்டிண சென்மாட்டமி
கிருட்டிணனின் படம்
பிற பெயர்(கள்)சென்மாட்டமி. சிரீ கிருட்டிண செயந்தி
கடைபிடிப்போர்இந்து
வகைசமயம்
அனுசரிப்புகள்பூசை, வேண்டுதல் மற்றும் விரதம்
நாள்சிரவணம், கிருட்டிண பட்சம், அட்டமி

சிரீ கிருட்டிண செயந்தி (சமசுகிருதத்தில் கிருட்டிண சென்மாட்டமி (कृष्ण जन्माष्टमी)), ஆண்டுதோறும் கிருட்டிணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழாவாகும். ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி திதி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இவ்விழா நிகழ்கிறது. கிரெகொரியின் நாட்காட்டியின் ஆகத்து அல்லது செப்டம்பர் மாதத்தில் கிருட்டிண செயந்தி கொண்டாடுகிறார்கள். கோகுலாட்டமி என்று தென்னிந்தியாவில் இவ்விழா குறிக்கப்படுகிறது.

கிருட்டிண செயந்தி விழா சமயத்தில் விற்கப்படும் கிருட்டிணர் சிலைகள்
மும்பையில் கோவிந்தாக்கள் தயிர்க்கலசத்தை எட்ட மனித நாற்கூம்பு அமைத்தல்

இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. 1982 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு பொது விடுமுறை அளித்துள்ளது.

வட இந்தியாவில் கிருட்டிண செயந்தி

[தொகு]

ராச லீலா மற்றும் தகி அண்டி (தயிர்க் கலசம்) என வட இந்தியாவில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ராசலீலா என்பது கிருட்டிணனின் இளமைக்கால வாழ்வை, கோகுலத்தில் கோபியர்கள் எனப்படும் இளம்பெண்களுடன் விளையாடிய காதல் விளையாட்டுக்களை நடிப்பதாகும். மகாராட்டிரத்தில் பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணைத்தாழியை சிறுவர்கள் (கோவிந்தாக்கள்) நாற்கூம்பு (பிரமிடு) அமைத்து மேலேறி அதனை உடைப்பதாகும். அரசியல்கட்சிகளும், வணிக நிறுவனங்களும் புரவல் நல்கும் இவ்விழாக்களில் வெண்ணைத்தாழியை அடைந்தவர்களுக்கு பெரும் நிதிப் பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும் போது, தண்ணீர் பீய்ச்சி அடித்து, அவர்களை ஏறவிடாது தடுப்பதும் விளையாட்டை ஆர்வமிக்கதாக ஆக்குகிறது.[1]

தென்னிந்தியாவில் கிருட்டிண செயந்தி

[தொகு]
தென்னிந்திய வீடு ஒன்றில் சிரீ செயந்தி கொண்டாடப் படுகிறது.
  • தென்னிந்தியாவில் சிரீசெயந்தி, சென்மாட்டமி, கோகுலாட்டமி என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து பகுதியிலும் மாலை நேரத்தில் சிறப்பாக வழிபாடு நடைபெறுகிறது.
  • அனைத்து சமுதாய பண்டிகையாக நடைபெறுகிறது.

கேரளாவில் குருவாயூர் கோவிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை கிருட்டிண செயந்தி. கிருட்டிண செயந்தி அன்று குருவாயூர் கோவிலுக்கு ஒரு லட்சம் அளவிலான பக்தர்கள் உலகெங்கும் இருந்து வருகின்றனர்.

கிருட்டிணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால், பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு, குழந்தைகளுக்குரிய சீடை, முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Janmashtami celebrated with zeal, enthusiasm". Mid Day. August 24, 2008. http://www.mid-day.com/news/2008/aug/240808-janmashtami-celebrated.htm. பார்த்த நாள்: 2009-08-12. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ண_ஜெயந்தி&oldid=4058742" இலிருந்து மீள்விக்கப்பட்டது