உள்ளடக்கத்துக்குச் செல்

தத்துவமசி என்ற மகாவாக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்து சமய வேத நூல்களில் வேதாந்தப்பொருள்களை விளக்குவதற்காகவே தொகுக்கப்பட்டிருக்கும் பிரிவுகள் உபநிடதங்கள் எனப்படும். அவைகளில் வேதத்திற்கொன்றாக நான்கு மகாவாக்கியங்கள் போற்றப்படுகின்றன. சாம வேதத்தின் மகாவாக்கியம் தத்-துவம்-அஸி.(तत् त्वम् असि அல்லது तत्त्वमसि) தத் : அது (அப்பரம் பொருள்), துவம் : நீ(யாக), அஸி : இருக்கின்றாய், அல்லது 'நீ அதுவாக இருக்கின்றாய்' என்றும் சொல்லலாம். இம்மகாவாக்கியத்திலுள்ள சொற்களின் பொருள் இவ்வளவு எளிதாக இருப்பினும், வாக்கியத்தின் உட்கருத்தைப்பற்றி வெவ்வேறு வேதாந்தப்பிரிவினரின் கொள்கைகள் கணிசமாக மாறுபடுகின்றன.

தறுவாய்

[தொகு]

சாந்தோக்ய உபநிடதத்தில் ஆறாவது அத்தியாயத்தில் உத்தாலக ஆருணி என்ற மகரிஷி பன்னிரண்டு வயதுள்ள மகன் சுவேதகேதுவை குருகுலத்திற்கு அனுப்பி வேதசாத்திரங்களெல்லாம் கற்று வரும்படிச் சொல்கிறார். பன்னிரண்டாண்டுகள் குருகுலத்தில் படித்துவிட்டுத் திரும்பும் வாலிபனிடம் "எதனால் கேள்விக் கெட்டாதது கேட்கப் பட்டதாயும், நினைவுக் கெட்டாதது நினைக்கப் பட்டதாயும், அறிவுக் கெட்டாதது அறியப் பட்டதாயும் ஆகுமோ அவ்வுபதேசத்தை குருவிடம் தெரிந்துகொண்டாயா?"[1] என்று கேட்கிறார். இதைத்தொடர்ந்து தானே அவனுக்கு அந்த பரம்பொருளை ஒன்பது எடுத்துக் காட்டுகளால் விளக்கி, முடிந்தமுடிவாக இதே மகாவாக்கியத்தை ஒன்பது முறையும் சொல்கிறார்.

ஒன்பது எடுத்துக்காட்டுகளில் சில

[தொகு]
  • "எப்படி எல்லா ஆறுகளும் எல்லாத் திசையிலிருந்தும் கடலையே அடைந்து, கடலாகவே ஆகிவிடுகின்றனவோ, மற்றும் அவை அந்நிலையில் 'நான் இது'என்று எங்ஙனம் அறியமாட்டாவோ அங்ஙனமே பிராணிகளெல்லாம் பரம்பொருளிலிருந்து தோன்றினோம் என உணரவில்லை. எது அணுமாத்திரமான சூட்சுமப்பொருளோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆத்மா. அதுவே நீயாக உளாய்"[2]
  • "ஆலம்பழம் ஒன்றைப்பிளந்தால் அணுவடிவான விதைகள் காணப்படுகின்றன. அவ்விதைகளில் ஒன்றைப் பிளந்தால் ஒன்றும் காணப்படுவதில்லை. ஆனால் காணப்படாத அந்த சூட்சுமப் பொருளிலிருந்தே பெரிய ஆலமரம் உண்டாகி நிற்கிறது. எது அணுமாத்திரமான சூட்சுமப்பொருளோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆத்மா. அதுவே நீயாக உளாய்"[3]
  • "உப்பை நீரில் போட்டு வைத்து அது கரைந்தபின், நீரில் போட்ட உப்பைக்கொண்டு வருவது எளிதல்ல. ஆனால் நீரில் மேல்பாகத்தையோ நடுப்பாகத்தையோ அடிப்பாகத்தையோ உண்டுபார்த்தால் அது உப்பாகவேயிருப்பது தெரியும். அதேபோல் முக்காலமும் சத்தான பொருளை நீ காணவில்லை எனினும் அது எங்கும் இருக்கவே இருக்கிறது. அணுமாத்திரமான அந்த சூட்சுமப்பொருள் எதுவோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்"[4]
  • "ஒருவனை கண்ணைக்கட்டி காந்தாரதேசத்தில் ஒரு காட்டில் கொண்டுபோய்விட்டு பிறகு அவன் கண்ணைத் திறந்து நீ வீட்டுக்குப்போ என்று சொன்னால் அவனால் எப்படிப் போகமுடியும்? அச்சமயம் ஒரு அயல் மனிதன் வந்து அவனுக்கு பாதை காட்டி அவனுடைய வீட்டுக்குப்போக வழி சொல்லிக் கொடுத்தால் எப்படியோ அப்படித்தான் ஒரு குரு நமக்கெல்லாம் இச்சம்சாரக் காட்டிலிருந்து மீள வழி காட்டுகிறார். அந்தப்பாதையில் சென்று ஆத்ம ஞானம் பெற்று அப்பரம்பொருளுடன் ஒன்றுபடலாம். அணுமாத்திரமான் அந்த சூட்சுமப்பொருள் எதுவோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்"[5]

அத்வைதத்தின் தீர்மானம்

[தொகு]

ஆதி சங்கரரால் விரிவாக விளக்கப்பட்டு பற்பல நூற்றாண்டுகளாக பல்வேறு அறிவாளிகளால் பெரிதும் போற்றப்பட்டுக்கொண்டிருக்கும் அத்வைத வேதாந்தம் 'அதுவே நீயாக உளாய்' என்பதை 'அது'வும் 'நீ'யும் ஒன்றே என்று பொருள் கொள்கிறது. இங்கு 'அது' என்பது பரம்பொருள். 'நீ' என்பது ஒவ்வொரு பிராணிகளிலுமுள்ள ஆன்மா. நாம் ஓரிடத்தில் ஒருகாலத்தில் பார்த்த ஒரு நபரை, மற்றோரிடத்தில், மற்றொருகாலத்தில் வேறு பெயரிலும், வேறு வேடத்திலும் சந்தித்தாலும், 'அவர் தான் இவர்' என்று சொல்லும்போது எப்படி 'அவர்', 'இவர்' இருவருடைய நடை, உடை, பாவனைகளில் 'அன்று', 'இன்று' என்ற இருகாலகட்டங்களில் உள்ள வேற்றுமைகளைத் தள்ளுபடி செய்துவிட்டு, இருவருக்குள்ளும் உள்ள ஏதோ ஓர் ஒற்றுமையை 'இது தான் நிரந்தரம்; மற்றவையெல்லாம் கால தேசங்களால் ஏற்பட்ட வெளி வேற்றுமைகள்' என்று தீர்மானித்து, இருவரும் ஒருவரே என்று தீர்மானிக்கிறோமோ, அதே முறையில் 'அதுவே நீயாக உளாய்' என்ற வாக்கியத்தில், 'அது' என்ற பரம்பொருளினிடத்திலுள்ள படைப்பாற்றல், மாயா ஆற்றல் முதலிய மானிடமல்லாத குணங்களைத் தள்ளிவிட்டு, அவ்விதமே 'நீ' என்ற பிராணியினிடத்தில் குடிகொண்டிருக்கும் அஞ்ஞானத்தையும், உடல், மனது, புத்தி இவைகளையும் தள்ளிவிட்டால், 'அது'வும், 'நீ'யும் ஒன்றே என்பது விளங்கும் என்பது அத்வைத சித்தாந்தம்.

விசிஷ்டாத்வைதத்தின் கருத்து

[தொகு]

ஸ்ரீராமானுஜரால் விரிவாக விளக்கப்பட்டு, பற்பல நூற்றாண்டுகளாக வைணவம் என்ற பெயரில் பெரிதும் போற்றப்பட்டுக்கொண்டிருக்கும் விசிட்டாத்துவைத வேதாந்தம் மேற்சொன்ன அத்வைத சித்தாந்தத்தை மறுக்கிறது. மகாவாக்கியத்திலுள்ள 'நீ' என்ற சொல், பிராணிகளிலுள்ள ஆன்மாவைக் குறிக்கிறது என்பது உண்மைதான்; ஆனால் இவ்வான்மாவையும் அப்பரம்பொருளையும் ஒன்றாக்கி ஒரு முற்றொருமையாகக் கூறமுடியாது. ஏனென்றால், இவ்வான்மா அப்பரம்பொருளின் ஒர் அம்சமே. 'இது' வும் 'அது' வும் ஒன்றாகாது. இரண்டன்மை என்னும் பொருள் படும் அத்வைதம் என்னும் கருத்தில் இருந்து நுட்பமாய் வேறுபாடு கொண்டது என்று குறிக்கவே விசிட்டா என்னும் முன்னொட்டு உள்ளது.

துவைத மதத்தின் கருத்து

[தொகு]

மத்வாச்சாரியாரால் விரிவாக விளக்கப்பட்டு, பற்பல நூற்றாண்டுகளாக பெரிதும் போற்றப்படும் துவைதம் வேதாந்தம் மேற்சொன்ன இரு சித்தாந்தங்களையும் மறுக்கிறது. 'தத்துவமஸி' என்றுள்ள உபநிடதவாக்கியத்திற்கு முன்னால் வரும் 'ஸ ஆத்மா' என்ற சொற்களைச் சேர்த்து இலக்கண வழிப்படி பார்க்கும்போது, 'ஸ ஆத்மாதத்துவமஸி' என்பதை 'ஸ ஆத்மா + அதத்துவமஸி' என்று பிரிக்கவேண்டும் என்றும், அதனால் அதன் பொருள் 'நீ 'அதத்', அதாவது, பரம்பொருள் அல்லாததாக, உளாய்' என்று ஏற்படுகிறது. ஆக, அத்வைதம் சொல்கிறபடி ஆன்மாவும் பரம்பொருளும் முற்றொருமையாகவோ, விசிஷ்டாத்வைதக் கூற்றின்படி ஆன்மா பரம்பொருளின் ஓர் அம்சமாகவோ இருக்கமுடியாது. ஆன்மாக்கள் வேறு. பரம்பொருள் வேறு, என்பது துவைத சித்தாந்தம். மேலும் இவ்விதம் 'அதத்துவமஸி' என்று சொல்வதுதான் சுவேதகேதுவின் கேள்விகள் ஏற்பட்ட சூழ்நிலைக்குப் பொருந்துகிறது. ஏனென்றால் அவன் வரும்போதே தான் 12 ஆண்டுகள் படித்துவிட்ட செறுக்குடன் வந்தான். அவன் உண்மையில் பரம்பொருள் என்று சொல்லப்பட்டுவிட்டால் அவனது கர்வம் இன்னும் அதிகமாகிவிடும். (அத்வைதப்பிரிவினர் இவ்வாதத்தை மறுக்கின்றனர்.[6])

சுத்தாத்வைதம்

[தொகு]

இது பொ.ஊ. 15ம் நூற்றாண்டில் ஸ்ரீவல்லபரால் விரிவாக விளக்கப்பட்ட வேதாந்தப்பிரிவு. இதன்படி ஆன்மாவும் பரம்பொருளும் சாராம்சத்தில் ஒன்றே; ஆனால் ஆன்மாவுக்கு பரம்பொருளின் ஆனந்த அம்சம் கிடையாது. அதனால் 'தத்துவமஸி' என்ற மகாவாக்கியத்திற்கு சங்கரரின் முற்றொருமையில் ஒரு சிறிய மாற்றத்துடன் பொருள் கொள்ளவேண்டும். அதாவது, 'தத்' என்பது பரம்பொருள். 'துவம்' என்ற சீவன் அதனுடைய ஒரு பாகம்.[சான்று தேவை]

துவைதாத்வைதம்

[தொகு]

இது நிம்பர்க்கரால் 11ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட சித்தாந்தம். இதன்படி, பரம்பொருளுக்கும் தனிப்பட்ட சீவன்களுக்கும் உள்ள 'பேதத்தில் அபேதம்', ஆதவனுக்கும் அதன் கிரணங்களுக்கும் உள்ள உறவு, அல்லது நெருப்புக்கும் நெருப்புத்துளிகளுக்கும் உள்ள உறவு, இவைகளைப் போன்றது. இதற்குகந்தபடி மகாவாக்கியத்திற்குப் பொருள் கொள்ளவேண்டும்.[சான்று தேவை]

அசிந்த்ய-பேதாபேதம்

[தொகு]

இது 16ம் நூற்றாண்டில் சைதன்யரால் விரிவாக விளக்கப்பட்டது. பரம்பொருளுக்கும் சீவனுக்கும் உள்ள பேதா அபேதம் (ஒற்றுமை வேற்றுமைகள்) நம் அறிவுக்கெட்டாதது. ஒரே சமயத்தில் 'அது'வும் 'நீ'யும் ஒன்றாகவும் வேறாகவும் உள்ளது. குணங்களில் ஒன்றாகவும், அளவில் வேறாகவும் உள்ளது. ஒன்று முடிவுள்ளது, மற்றொன்று முடிவில்லாதது. இதற்கு தகுந்தபடி மகாவாக்கியத்திற்குப் பொருள் கொள்ளவேண்டும்.[சான்று தேவை]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. சாந்தோக்ய உபநிடதம் 6.1.3.
  2. சாந்தோக்ய உபநிடதம்6.10.1,2,3.
  3. சாந்தோக்ய உபநிடதம்6.12.1,2,3.
  4. சாந்தோக்ய உபநிடதம்6.13.1,2.
  5. சாந்தோக்ய உபநிடதம்6.14.1,2.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2021-06-08. பார்க்கப்பட்ட நாள் 2009-04-18.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • தத்துவமசி மகாவாக்கிய விளக்க சொற்பொழிவு தமிழில் [1]