உள்ளடக்கத்துக்குச் செல்

சுக ரஹஸ்ய உபநிடதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுக ரஹஸ்ய உபநிடதம் என்பது கிருஷ்ணயஜுர் வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 37வது உபநிஷத்து. சாமானிய வேதாந்த உபநிடதங்கள் பகுப்பைச் சேர்ந்தது. வியாசருடைய புத்திரரான சுகருக்கு பரமசிவனே உபதேசித்ததும் அதன் பயனாக சுகர் சுகபிரம்மமாகவே ஆனதும் இதனில் சொல்லப்படுகிறது. இதன் இன்னொரு சிறப்பு, நான்கு வேதங்களின் மகாவாக்கியங்களின் பொருள்களும் சுருக்கமாகவும் தெளிவாகவும் இங்கே காணப்படுகிறது.

மகாவாக்கியங்களிலுள்ள சொற்களின் பொருள்

[தொகு]

பிரக்ஞானம் பிரம்ம (ரிக் வேதம்: ஐதரேய உபநிடதம், 5-3)

[தொகு]
  • பிரக்ஞானம்: எதனால் ஒருவன் பார்க்கிறானோ, கேட்கிறானோ, முகர்கிறானோ, பேசுகிறானோ, ருசியையும் ருசியற்றதையும் உணர்கிறானோ அவ்வறிவு.
  • பிரம்மம்: தேவர்கள், மனிதர்கள், மிருகங்கள், பட்சிகள் ஆகிய எல்லாவற்றிலும் உள்ள ஒரே சைதன்யம் அல்லது அறிவு.
  • 'அஹம்' அல்லது 'நான்' : அறிவின் இடமாகிய இந்த தேகத்தில் புத்திக்கு சாட்சியாக இருந்து விளங்கிக் கொண்டிருக்கும் பரிபூர்ணமான பரமாத்மா.
  • எங்கும் நிரைந்த பரம்பொருள் பிரம்மம் என்ற சொல்லால் வர்ணிக்கப்படுகிறது. அது 'நான் இருக்கிறேன் (அஸ்மி)' என்று விளங்குகிறது. அதனால் நானே பிரம்மமாகிறேன்.
  • 'தத்': பெயரோ உருவமோ இல்லாமல் இரண்டற்ற ஒன்றாக படைப்புக்கு முன்பே இருந்த அது இப்பொழுதும் அப்படியே உள்ளது. அது தான் 'அது' என்று பொருள் படைத்த 'தத்'.
  • 'த்வம்': கேட்பவனின் தேகத்திற்கும் புலன்களுக்கும் அப்பாற்பட்டதாய் உள்ளே விளங்கும் உண்மைப்பொருள்.
  • 'அஸி' : 'தத்' எனும் சொல்லால் குறிக்கப்படுவதும் 'த்வம்' என்னும் சொல்லால் குறிக்கப்படுவதும் ஒன்றே என்று பொருள்படும் வினைச்சொல்.

அயம் ஆத்மா பிரம்ம (அதர்வ வேதம்: மாண்டூக்ய உபநிடதம், 2)

[தொகு]
  • 'அயம்' : அகராதியிலுள்ள பொருள் 'இவன்'.
  • 'அயம் ஆத்மா': இங்கு, தனக்குத்தானே, யாரும் சொல்லவேண்டியிராமலே, உள்ளுறைபவனாக விளங்கும் ஆத்மா. அதனாலேயே 'இந்த ஆன்மா' என்று குறிக்கப்படுகிறது. 'நான்' என்ற அகந்தைக்கு அடித்தளமாக வியாபித்துள்ளவன்.
  • 'பிரம்ம': பார்க்கப்படும் உலகனைத்தும் வியாபித்துள்ள தத்துவம்.
  • 'அயம் ஆத்மா பிரம்ம': 'அந்த' பிரம்மமும் 'இந்த' ஆன்மாவும் ஒன்றே.

சொற்பொருளும் உட்பொருளும்

[தொகு]

மஹாவாக்கியத்தின் பொருளை உணர சொற்களின் 'சொற்பொருள்' (வாச்சியார்த்தம்), 'உட்பொருள்' (லக்ஷ்யார்த்தம்) ஆகிய இரண்டு வகையான பொருளையும் கவனிக்கவேண்டும். த்வம் என்ற சொல்லின் சொற்பொருள் ஐம்பூதங்களாலான உடலும் அதன் புலன் முதலியவைகளும். உட்பொருளோவெனின், உடல், மனது, புலன்கள் இவைகளுக்கபாற்பட்ட ஜீவன். தத் என்ற சொல்லின் சொற்பொருள் உலகை ஆளும் கடவுள்; உட்பொருளோ ஸச்சிதானந்த பிரம்மம். அஸி எனும் சொல், உட்பொருளில் இவையிரண்டும் ஒன்றே என்பதாகும்.

சுக பிரம்மம்

[தொகு]

பரமசிவனாலேயே பிரம்மோபதேசம் செய்யப்பட்ட சுகர் தன்னுடையது, தான், என்ற எதுவுமில்லாது, துறந்தெழுந்து, கடவுளை வணங்கி உலகுடன் இரண்டறக்கலந்து மனதளவில் ஐக்கியமாகிவிட்டார். பிரம்மம் என்ற அமுதக்கடலில் மிதப்பவர்போல் துறவியாகச்செல்லும் அவரைப்பார்த்து அவர் தந்தை வியாசர் அவரைப்பின்தொடர்ந்து, பிள்ளையின் பிரிவாற்றாமையினால் 'மகனே' என்று கூவினார். அப்பொழுது அசைவது அசையாதது யாவும், உலகனைத்தும், 'ஏன், ஏன்' என்று எதிரொலி செய்தது. அவ்வொலியைக் கேட்டு வியாசர் தன் புத்திரனின் பிரம்ம அனுபவத்தை உணர்ந்து அதிசயித்தார்.

பொன்மொழி

[தொகு]
வேதத்தின் ஆதியில் விளங்கும் ஒலி என எது கூறப்படுகிறதோ, வேதாந்தத்தில் நிலைபெற்றது எதுவோ, பிரகிருதி ஒடுங்குமிடம் எதுவோ அந்தப் பரம்பொருள் மகேசுவரன் [1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. யோ வேதாதௌ ஸ்வர: ப்ரோக்தோ வேதாந்தே ச ப்ரதிஷ்டித: | தஸ்ய ப்ரகிருதிலீனஸ்ய ய: பரஸ்ஸ மஹேஶ்வர: (சுக் ரஹஸ்ய உபநிடதம், 18)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக_ரஹஸ்ய_உபநிடதம்&oldid=4054397" இலிருந்து மீள்விக்கப்பட்டது